வேண்டினேன் – 7

யோசிக்காதீங்க, உங்க அம்மாவோட ஸ்கேன் செலவுக்கு அது ரொம்ப உதவியா இருக்கும்.”

“உங்களுக்கு எப்படி…” என்று இழுத்தாள்.

“சரியா போச்சு போங்க. நான் இவ்வளவு நேரமும் நீங்க சாஞ்சு உக்காந்திருந்த அதே தூண்ல, அந்த பக்கமா சாஞ்சு உட்கார்ந்திருந்தேன். நீங்க சாமிட்ட புலம்பினது எல்லாமே எனக்கு கேட்டுடுச்சு…” என்று சொல்ல,

‘அவ்வளவு மோசமாக புலம்பினேனா?’ என எண்ணி அவள் அழுகையோடு தலை கவிழ்ந்தாள்.

“கவலைப்படாதீங்க… உங்க அம்மாவுக்கு எதுவும் ஆகாது. நெனச்சபடியே அவங்களுக்கு ஆபரேஷன் செஞ்சு முடிச்சுடுவீங்க. அவங்க சீக்கிரமே பழையபடி நடமாட ஆரம்பிச்சிடுவாங்க.”

அவள் அம்மாவைப் பற்றிய உண்மை தெரிந்த ரவியும் ப்ரியாவும் கூட, இந்த அளவுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை பேசவில்லை. அவ்வளவு ஏன் இப்போது உன் அம்மாவிற்கு எப்படி இருக்கிறது என்று கூட கேட்கவே இல்லை…

ஆனால் நகுல், அவள் மனதை ஆறுதல் படுத்தும் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசினான். பாலைவனத்தில் பொழியும் மழை போல அவனது அன்பு மொழி, பயத்திலும் வருத்தத்திலும் ஏங்கிக் கிடந்த மீராவுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது.

மாலை நேரம் மெல்ல மெல்ல இருள் சூழும் தருவாயில், மீரா கோவிலில் இருந்து கிளம்பினாள். இருள் சூழ்ந்த நேரம் அவள் வீட்டுக்குள் நுழைந்தபோது, வீடே நிசப்தமாய் இருந்தது. கருமை நிறச் சுவர்களின் பலனாய் வெளிச்சம் கூட குறைவாகவே இருந்தது.

வீட்டில் நீண்ட நேரமாக நடந்து கொண்டிருந்த வீடியோ ஷூட்டிங்கின் பரபரப்பு, இப்போது மொத்தமாக அடங்கிப் போயிருந்தது. ரவி ஹாலில் ஒரு சோபாவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவனது உடல் அசதியால் மொத்தமாகச் சுருண்டிருந்தது.

படுக்கை அறைக்குள் சென்று பார்த்தாள். ப்ரியா, தன் ஆடைகளைக்கூட மாற்றாமல், குப்புறப் படுத்து அசந்து போய்த் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளது கூந்தல் கலைந்து தலையணை முழுவதும் பரவிக்கிடந்தது.

“ப்ரியா, எழுந்திரி… சாயங்காலம் ஆறு மணிக்குத் தூங்கக் கூடாது. வீட்டுக்குள்ள லட்சுமி வரமாட்டா” என்று தன் கிராமத்து நம்பிக்கைகளைச் சொல்லி அவளை எழுப்ப முயன்றாள் மீரா.

ப்ரியா தூக்கத்திலேயே, “இது ஒண்ணும் என் வீடு கிடையாதுல? லட்சுமி வந்தா எனக்கென்ன? போனா எனக்கு என்ன?” என்று முணுமுணுத்தாள்.

மீரா அவளைப் பார்த்துப் புன்னகையோடு, “பொம்பள பிள்ளை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது ப்ரியா. எழுந்திரி…” என்று இன்னும் மென்மையாகக் கூப்பிட்டாள்.

ப்ரியா எரிச்சலுடன் தலையைத் தூக்கினாள்.

“ஏன் மீரா உசுர வாங்குற? நேத்து நைட்டு ஃபுல்லா ஒத்த கண்ணு தூங்கல நான். இப்பதான் அசதியா படுத்தேன். ப்ளீஸ் என்னை தூங்க விடு” என்று கெஞ்சியபடி, திரும்பவும் படுத்துக் கொண்டாள்.

அவள் முகத்தில் இருந்த சோர்வினை‌ பார்த்த பிறகு, மீரா அதற்கு மேல் அவளைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

மதியம் சாப்பிடாததால், மீராவுக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. எதையாவது சாப்பிடலாம் என்று நினைத்து கிச்சனுக்குப் போனாள். ஒரு நாள் முழுக்க விதவிதமான ரெசிபிகள் சமைக்கப்பட்டதால், கிச்சன் குப்பை கோலமாக காட்சி தந்தது. பாத்திரங்கள் சிங்க் நிறைய குவிந்து கிடந்தன. மசாலா வாசனையும், எண்ணெய்ப் பிசுபிசுப்பும் அடுப்பங்கரையில் நிரம்பியிருந்தன.

அவள் ஓசை எழுப்பாமல் கிச்சனைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். பிறகு தரையையும், கவுண்டர்டாப்பையும் துடைத்துவிட்டு, தன்னுடைய உணவைச் சாப்பிட உட்கார்ந்தாள்.

மீரா சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, ஹாலில் இருந்த ரவியின் அலைபேசி சிணுங்கும் சத்தம் கேட்டது. ரவி அரைகுறை தூக்கத்தில், தடுமாறியபடி அழைப்பை எடுத்தான். எதிர்ப்புறம் கண்ணனின் கரகரப்பான குரல் கேட்டது.

ரவி, “ஓகே மச்சான், ஓகே மச்சான்” என்று சிலமுறை கூறிவிட்டு, தொடர்பைத் துண்டித்தான்.

கண்ணனின் குரலை லேசாய் கேட்டதற்கே மீராவுக்குள் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது. அப்போதுதான், ரவி மீரா டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்தான்.

“மீரா, வந்துட்டியா? ஒரு உதவி பண்ணு. கண்ணனுக்குச் சாப்பாடு எடுத்து வச்சுட்டு, கிச்சனை கொஞ்சம் கிளீன் பண்ணிடுமா. அவன் அரை மணி நேரத்துல வந்துடுவான். என்னால சுத்தமா முடியல, நான் தூங்குறேன்…” என்று சோம்பலுடன் கூறிவிட்டு, பதிலுக்குக் கூடக் காத்திராமல், திரும்பவும் அதே சோபாவில் சுருண்டு தூங்கிவிட்டான்.

ரவி சொன்னதைக் கேட்ட மீராவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அவர்கள் சமையல் செய்த உணவு பதார்த்தங்கள் எதுவுமே கிச்சனில் இல்லை. ஏதோ கொஞ்சம் போல ஒரு பாத்திரத்தில் மீதம் வைத்திருந்தனர். மற்றதெல்லாம் சுத்தமாக வழித்து எடுக்கப்பட்டு கழுவக்கிடந்தன!

அதில் இருந்ததை வயிற்றுக்குள் போட்டு முடித்திருந்தவள், அதிர்ச்சியோடு கிச்சனைப் பார்த்தாள். கெட்டுப் போனதை குப்பையில் போட்டு பாத்திரங்களையும் கழுவி, கிச்சனையே துடைத்து பளபளவென மாற்றி வைத்திருந்தாள்.

அரை மணி நேரத்தில் கண்ணன் வருவான், திடீரெனச் சாப்பாடு வேண்டுமென கேட்டால் என்ன செய்வாள்? புதிதாக சமைக்கத்தான் வேண்டும். சமைக்காமல் போனால், கண்ணனின் கோபத்திற்கு மீண்டும் ஆளாக நேரிடும் என்ற பயம் வேறு அவள் மனதை ஆட்கொண்டது.

சாப்பிட்ட வரை போதும் என்று எழுந்து ஓடிப்போய் கைகளைக் கழுவிவிட்டு, வேக வேகமாகச் சமையலைக் கையில் எடுத்தாள். பதினைந்து நிமிடங்களில், சமையலறையில் மணக்க மணக்க உணவு தயார் ஆனது.

சமைத்த உணவை ஹாட்பாக்ஸில் போட்டு டைனிங் டேபிளில் வைத்துவிட்டு, தான் சாப்பிட்ட தடையங்களையும் அழித்துவிட்டாள். அவள் பார்வைக்கு அனைத்தும் நேர்த்தியாக இருந்தன.

சரியாக அரை மணி நேரத்திற்குப் பிறகு, கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் கண்ணன். வெளிச்சம் இல்லாததால் வீடு இருட்டாக இருந்தது. அவனும் லைட்டை ஆன் செய்யாமல், நேராகக் கிச்சனுக்கு போனான். கிச்சனின் வாசலில் நின்று ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்தான். சுத்தமாக இருந்த கிச்சன் அவனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

“பரவாயில்லையே, இவன் பேசின அழகுக்கு கண்டிப்பா வேலை நடந்திருக்காதுன்னு நினைச்சேன். கிச்சனை க்ளீன் பண்ணித்தான் வச்சிருக்கான்” என்று சோபாவில் உறங்கிக்கொண்டிருந்த ரவியை ஒரு மெச்சுதலான பார்வை பார்த்தான்.

மீரா, படுக்கை அறை கதவின் பின்னால் மறைந்து இருந்தபடி, கண்ணனின் நடவடிக்கைகள் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

‘தான் செய்தது எதுவும் அவனுக்குத் தெரியவில்லை!’ என நினைத்து நிம்மதியோடு, தன் வளைக்குள் போய் பதுங்கிவிட்டாள்.

சற்று நேரத்தில், கண்ணன் குளித்து முடித்துவிட்டு வெளியே வந்தான். ஓய்வெடுக்க கூட நேரமில்லாதபடி, ஆளைக் கொல்லும் அளவு வேலை செய்துவிட்டு வந்திருக்கிறான். நல்ல பசி! எனவே அவன் தலையை துவட்டியபடியே வந்து, டைனிங் டேபிளில் உட்கார்ந்தான்.

ஹாட்பாக்ஸைத் திறந்தவுடனேயே, ஒரு அற்புதமான வாசனைக் கலவை அவனை மொத்தமாகச் சூழ்ந்தது. ஹாட்பாக்ஸில் பிரியாணி போல ஏதோ ஒரு வித்தியாசமான சாப்பாடு இருந்தது. கண்ணனுக்கு உணவின் வாசனையை வைத்து மீராதான் இதை செய்தது என்று தெரிந்துவிட்டது. அந்த நொடியில் அவனுக்கு அவள் மேல் இருந்த கோபம் துளி கூட மிச்சம் இல்லாமல் வடிந்துவிட்டது.

அது வெறும் பிரியாணியின் வாசனையோ, அல்லது வழக்கமான கறிச்சோறு வாசனையோ அல்ல. இதுவரை அவன் சுவாசித்திராத ஒரு புதுவித நறுமணம்.

அந்த வாசனையே அவனை ‘வா, வா!’ என்று அழைப்பது போலிருந்தது.

ஆசையோடு ஒரு வாய் எடுத்துச் சாப்பிட்டான். அவ்வளவு அற்புதமாக இருந்தது அதன் சுவை. கண்ணன் தன் வாழ்வில் இப்படி ஒரு உணவினை சுவைத்ததே இல்லை.

“ஃபர்ஸ்ட் கிளாஸ்!” என்று தன்னையும் அறியாமல் முணுமுணுத்தான்.

அந்தக் கறியை சமைக்க அவள் பயன்படுத்தியிருந்த பொருட்கள் அவனது கண்முன்னால் ஒரு கற்பனையாக விரியத் தொடங்கின.

வெறும் மிளகாய்த்தூளைப் பயன்படுத்தாமல், காய்ந்த மிளகாய், தனியா போன்றவற்றை மெல்லிய சூட்டில் வறுத்து, பக்குவமாக அரைத்து, அவள் செய்திருந்த கிராமத்து மசாலா அவன் நாவில் நர்த்தனம் ஆடியது. தேங்காய்ப் பாலின் மெல்லிய இனிப்பும், புதினா இலைகளின் மணமும் அவன் நாசியை தன் வசப்படுத்தியது.

அடுப்பேற்றி, மண் சட்டியை வைத்து, அதன் சூட்டில் கறியை நன்கு வேகவிட்டு சாதத்தை கலந்திருந்தாள். அவன் கண்களை மூடி அந்த வாசனையை மீண்டும் நுகர்ந்தான். லேசாக அடுப்புக்கரியின் மெல்லிய வாசனையும் அதனோடு கலந்திருப்பது போல தெரிந்தது. அந்த வாசத்திற்கு என்ன செய்தாள் என்று தெரியவில்லை. ஆனால் அற்புதமாக இருந்தது!

ரவியும் ப்ரியாவும், “மாடர்ன் ரெசிபிலயே போனா வேலைக்கு ஆகாது. நாம கொஞ்சம் ட்ரெண்ட மாத்தணும்!” என்று அடம் பிடித்ததற்கான அர்த்தம் இப்போது புரிந்தது.

கண்ணன் பூரண திருப்தியோடு உணவை எடுத்து உண்டான். அவன் இதழுக்குள் சென்ற ஒவ்வொரு கவளமும், அவனது முரட்டுத்தனத்தை மெல்ல மெல்லக் குறைத்து, மனதிற்குள் ஒரு அமைதியைப் பரப்பியது. நெடு நாட்களுக்கு பின் மனதும் வயிறும் நிரம்பும் படி சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றான்.

மறுநாள் காலை எழுந்ததுமே, முந்தைய நாள் சாப்பாட்டு நியாபகம் வந்தது.

“மீரா!” என்று அழைத்துக் கொண்டுதான், தன் அறையில் இருந்தே வெளியே வந்தான்.

கணினியில் வேலை செய்து கொண்டிருந்த ப்ரியா, “அவ கோவிலுக்கு போய் இருக்கா. நீ பத்து மணிக்கு ரெஸ்டாரன்ட் கிளம்பினதும்தான் வீட்டுக்கு வருவேன்னு சொல்லிட்டு போயிருக்கா!” என்றாள்.

“ஏன்?”

“ஏன்னா? நீ திட்டுன திட்டுக்கு, அவ அப்படி பயந்து ஓடுறா.”

“அவள போன் பண்ணி வரச்சொல்லு…”

“அவ எந்த காலம் போனை போற இடத்துக்கு எடுத்துட்டு போய் இருக்கா?”

“சரி, நீ போய் கூட்டிட்டு வா.”

“சாரி பாஸ், நான் முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு. நீங்க சும்மா நின்னு எனக்கு ஆர்டர் போடுறதுக்கு பதிலா, பொடி நடையா கிளம்பி போயிடலாம். அந்தக் கோவில் ஒன்னும் வேற கிரகத்துல இல்லை!”

இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவளை முறைத்தான் கண்ணன்.

‘இதெல்லாம் பாத்தாச்சு, பாத்தாச்சு!’ எனும் தோரணையோடு, தன் வேலையை தொடர்ந்தாள் அவள்.

ரவியும் பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருக்க, கண்ணன் மீராவைத் தேடி சென்றான்.

அன்று வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் வெயில் அவ்வளவாக இல்லை. கோவிலுக்கு இடது பக்கமாக, துளசிச் செடிகளின் அருகில் மீரா அமைதியாக அமர்ந்திருந்தாள். சோகமே உருவமாய், லேசாகத் தலை சாய்த்து, எதையோ ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

அவள் அணிந்திருந்த தாவணியும், அவள் தலை சாய்ந்திருந்த விதமும், கண்ணனுக்கு சாட்சாத் அந்த மீராவையே நினைவு படுத்தியது. அந்த அமைதியான சூழலில், அவளது எளிய அழகு மேலும் மெருகேறி தெரிந்தது. கருமை நிறக் கூந்தலும், சாந்தமான கண்களும், துளசியின் பசுமைக்கு நடுவே அவள் அமர்ந்திருந்த காட்சியும், கண்ணனின் இதயத்தை மயிலிறகால் வருடியது போல் இருந்தது.

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
245 40 0
இராவணின் வீணையவள்
45 0 0
ஆரெழில் தூரிகை
309 15 1
வேண்டினேன் நானுன்னை
540 6 0
நீ எந்தன் நிஜமா?
377 8 1
என்துணை நீயல்லவா?
460 12 0
கற்றது காதல்
216 1 0
நிழலென தொடர்கிறேன்
210 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page