நிஜம் – 4

சிறிது நேரத்திற்குப் பிறகு தொழிற்சாலையை பார்வையிட்டு முடித்த மகேந்திரன் அலுவலகத்திற்குள் நுழைந்தான். அவனை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டு இருந்த இருவரும் அவனைப் பார்த்ததும் சொல்லி வைத்தார் போல் ஒரே நேரத்தில் கோபமாக எழுந்து நின்றனர்.

“உன் மனசுல நீ என்னடா நினைச்சுட்டு இருக்க? வாசல்ல நாங்க ரெண்டு பேரும் குத்துக்கல் மாதிரி நிக்கிறோம். எங்கள கண்டுக்காம, யாரோ மாதிரி நீ பாட்டுக்கு உள்ள போய்கிட்டே இருக்க! இந்த ஃபேக்டரியோட ஓனரே நாங்க தான்! வேலை செய்ற வேலைக்கார நாய் நீ. எங்கள மதிக்காம, என்னமோ நீ தான் இந்த ஃபேக்டரிக்கு ஓனர் மாதிரி நீ பாட்டுக்கு வர போற. எல்லாரையும் அதிகாரம் பண்ற. இனிமே என் சின்ன பேரன் சந்திரன் தான் இந்த ஃபேக்டரிக்கு ஓனர். இந்த பொறுப்பு எல்லாத்தையும் இனி அவன் தான் கவனிச்சுக்க போறான். உனக்கும் இதுக்கும் இனிமே எந்த சம்பந்தமும் கிடையாது. இனிமே நீ ஆபீஸ்க்கு வர வேண்டிய அவசியமும் கிடையாது. ஏதோ அவசரத்துக்கு கொஞ்ச நாள் உன்னை கூட்டிட்டு வந்து இங்க விட்டேன், அதுக்குனு இது உன் இடம் ஆகிடுமாடா?” 

அவன் ஏதாவது மறுமொழி பேசுவான் என்று எதிர் பார்த்த இருவருக்கும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. எந்த விதமான சலனத்தையும் வெளிப்படுத்தாமல் மிகவும் அமைதியாக நின்று கொண்டு இருந்தான் மகேந்திரன். 

“ஹலோ உன்கிட்ட தான் தாத்தா பேசிட்டு இருக்காரு. காது கேட்கலையா என்ன?” என்று அவனின் மௌனத்தை கலைக்கும் வண்ணம் வேண்டும் கேள்வி எழுப்பினான் சந்திரன்.

ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் தன் கைகளில் வைத்திருந்த கணினியை சந்திரன் கையில் திணித்தான் மகேந்திரன்.

“இந்தாப்பா உங்க சொத்து! உங்க சவகாசமும் வேணாம்! உங்க பொறுப்பும் எனக்கு வேண்டாம்! இதெல்லாம் இனிமே நீயே கவனிச்சுக்கோ! தொல்ல விட்டதுடா சாமி!” 

“இவனுக்கு எவ்வளவு திமிரு பாத்தீங்களா தாத்தா! இந்த பிசினஸோட அருமை என்னன்னு அவனுக்கு புரில. ரோட்ல போற கண்டதையும் ஆஃபீஸ்குள்ள விட்டா இப்படித்தான் இருக்கும்” என்று மீண்டும் எகத்தாளமாக பேசினான் சந்திரன்.

“நானும் இவன் போக்கை எல்லாம் கவனிச்சிட்டு தான் இருக்கேன்! இந்த வேலையும் இல்லாம எங்கயாவது தெருவுல போய் பிச்சை எடுத்து சாப்பிடட்டும். பிச்சைக்கார நாயி!” என்று தன் பங்கிற்கு தானும் பொரிந்து தள்ளினார் சுந்தரலிங்கம். அவர்களது இருவரது பேச்சையும் புறக்கணித்த மகேந்திரன் மறு வார்த்தை எதுவும் பேசாமல் வெளியே செல்ல எத்தனித்தான்.

“என்ன ஆஃபீஸ் லேப்டாப் குடுத்துட்டு நீ பாட்டுக்கு போற? எங்கெங்க டீலிங் வச்சிருக்க? என்னென்ன வரவு செலவு கணக்கு போயிட்டு இருக்கு? எந்தெந்த இடத்தில் இன்னும் பெண்டிங் இருக்கு? எல்லாத்தையும் சொல்லிட்டு இங்கிருந்து கிளம்பு! நீ பாட்டுக்கு இப்படி குடுத்துட்டு போயிட்டு அதுல ஏதும் சிக்கல் வந்தா அத நான் தான் டேக் ஓவர் பண்ணனும்! அதனால எது எதுல என்னென்ன பிரச்சனை இருக்குன்னு சொல்லிட்டு கெளம்பு!” என்று  மகேந்திரனை இடை மறித்தான் சந்திரன். 

“அதை எல்லாம் நான் ஏன் உன்கிட்ட சொல்லணும்? தாத்தா என்னை இப்படி தான் வேலைக்கு சேர்த்தாரு. அதனால என்னாலயும் அப்படித் தான் விட்டுட்டு போக முடியும்! உக்காந்து பச்ச குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கிற மாதிரி எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்துட்டு இருக்க முடியாது! இந்த சாதாரண விஷயம் கூட உனக்கு தெரியல! நீ எல்லாம் எப்படி இந்த ஃபேக்டரிய ரன் பண்ண போற? ரெண்டு நாள் மேனேஜர் அண்ட் அக்கௌடன்ட் கிட்ட உட்கார்ந்து வரவு செலவு கணக்கு எல்லாம் கேட்டினா உனக்கே என்ன ஏதுன்னு தெரிஞ்சுரும். எனக்கு அதெல்லாம் எக்ஸ்பிளைன் பண்றதுக்கு நேரம் இல்ல. எக்ஸ்பிளைன் பண்றதுக்கு இப்ப நான் இங்க வேலையும் செய்யல!” என்று கூறி விட்டு அங்கிருந்து விறுவிறுவென வெளியேறினான் மகேந்திரன்.

அவனைப்போல சந்திரன் தானாக கற்றுக் கொள்ளக்கூடிய பக்குவம் கொண்டவன் இல்லை என்று தாத்தாவிற்கு தெரியும். எனவே வாசல் வரை போன மகேந்திரனை ஆள் வைத்து உள்ளே அழைத்து வர செய்தார்.

“அவன் இப்ப என்னடா கேட்டான்? என்னென்ன பெண்டிங்ல இருக்கு என்னென்ன வரவு செலவு கணக்கு இருக்குன்னு தான கேட்டான். அது கூட உன்னால சொல்ல முடியாதா? இவ்வளவு நாள் நீ தானே எல்லாத்தையும் பார்த்துகிட்ட? அப்ப நீ என்னமோ இதுல வில்லங்கம் பண்ணி வச்சிருக்கன்னு இதுல இருந்தே நல்லா தெரியுது! என் பேரன டார்ச்சர் பண்ணி பாக்கணும்னு நினைக்கிறியா?” 

“இந்த சாதாரண விஷயமே உங்களுக்கு டார்ச்சர் மாதிரி தெரியுதா? அப்போ நீங்க எனக்கு பண்றதெல்லாம் என்னா?” என்று கேட்க, இருவரும் முகத்தை வேறு திசையில் திருப்பிக் கொண்டனர்.

“ஒன்னு சொல்ரேன் கேட்டுக்கோங்க. இவன நான் பண்றதெல்லாம் டார்ச்சரே கிடையாது! இனிமே உங்க பேத்தி மதியழகிக்கு பண்ண போறது தான் உண்மையான டார்ச்சர்! அந்த வீட்ல தானே இருக்க போறீங்க! அப்புறம் ஏன் அவசரப்படுறீங்க? நாளையில இருந்து பாப்பிங்க! என் அம்மாவை நீங்க எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணீங்களோ, அதெல்லாம் இன்னும் என் கண்ணுக்குள்ள அப்படியே இருக்கு. அதுக்கெல்லாம் சேத்து வச்சு உங்க பேத்திக்கு செய்ய வேண்டாமா? எப்படிடா ஆபீஸ் ஒர்க் எல்லாம் பாத்துகிட்டு அவள பழி வாங்குறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். அந்த கவலையையும் நீங்களே தீர்த்து வச்சிட்டீங்க. வீட்ல வெட்டியா தான் இருக்க போறேன். இனிமே தான் என்னோட ஆட்டம் ஆரம்பமாக போகுது” என்று வில்லத்தனமாக ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்து மறைந்தான் மகேந்திரன்.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிவிட்டதோ?! என்ற மனக்கலக்கத்தோடு சிலையாக நின்றிருந்தார் பெரியவர் சுந்தரலிங்கம்.

“என்னாச்சு தாத்தா? அவன் பேசுறதுக்கு எல்லாம் பயப்படுறீங்களா? நம்ம வேலையை பிடுங்கினதால, வாய்க்கு வந்தபடி பேசிட்டு போறான். விடுங்க…”

“பைத்தியம் மாதிரி பேசாத சந்திரா! நம்ம புள்ள அவன் கண்ட்ரோல்ல இருக்கு! அவன் நிச்சயம் மதிக்கிட்ட ஏதாவது வம்பு பண்ணுவான். மதிய நான் ரொம்ப செல்லம் கொடுத்து வளத்துட்டேன். என் பேத்தி தான் என் உலகம். லட்சுமிக்கு நான் கொடுத்த தண்டனையை என் பேத்தி ஒரு நாள் கூட தாங்க மாட்டா” என்று மதியழகியை நினைத்து மிகவும் மனம் வருந்தினார் சுந்தரலிங்கம்.

“அவன் அம்மாவும் நம்ம மதியும் ஒண்ணா? மதி தனி ஆளாவே அவனை சமாளிக்கிற அளவுக்கு புத்திசாலி. நீங்க அதை நினைச்சு மனசை குழம்பிட்டு இருக்காதீங்க தாத்தா!” என்று அவரை தேற்றும் வகையில் ஆறுதலாக பேசினான் சந்திரன். பிறகு இருவரும் சேர்ந்து கம்பெனி வேலையை கவனிக்கப் போனார்கள்.

வீட்டிற்குள் நுழைந்த மகேந்திரன் நேராக தனது அறைக்குள் நுழைந்தான். அவன் திரும்பி வரும் வரை அவனுக்காக அறையை விட்டு வெளியேறாமல் அங்கேயே அமர்ந்து கொண்டு இருந்தாள் மதி. அவள் அறைக்குள்ளே அமர்ந்திருப்பது அவனுக்கு சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. உள்ளே நுழைந்தவனின் கையில் கவர் ஒன்று இருப்பதை பார்த்து சற்று அதிர்ந்து போனாள். 

“என்ன கையில ஏதோ பேப்பர் கவர் வச்சிருக்கான். ஒருவேளை டிவோர்ஸ் பேப்பரா இருக்குமோ? நம்மள டிவோர்ஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டானோ? இன்னும் கொஞ்ச நேரத்துல ஏதோ ஒரு குண்ட தூக்கி போட போறான். கடவுளே சத்தியமா அது டிவோர்ஸ் பேப்பரா மட்டும் இருக்கக் கூடாது!” என்று மனதிற்குள்ளேயே இஷ்ட தெய்வத்தை வணங்கியபடி அமர்ந்து இருந்தாள் மதி.

“என்ன அப்படி பாக்குற? என் ரூம குத்தகைக்கு எடுத்துட்டியா? எந்த நேரம் பார்த்தாலும் இங்கேயே இருக்க?”

“இதுதானே இனிமே என்னோட ரூம்?”

“யார் சொன்னா? இது எனக்கு மட்டுமே சொந்தமான இடம். தேவையில்லாததை பேசி பேச வந்ததை மறந்துட்டேன். இந்தா புடி” என்று தன் கையில் இருந்தை அவள் கைகளில் திணித்தான். அதை மிகுந்த தயக்கத்தோடு வாங்கி கைகளில் வைத்துக் கொண்டு இருந்தாள் மதி.

“வாங்கிட்டு ஓப்பன் பண்ணாம இருந்தா உள்ள என்ன இருக்குன்னு தெரிஞ்சுடுமா? அத பிரிச்சு சீக்கிரம் படி!” என்று குரோத பார்வையை அவள் மீது செலுத்திய படி கட்டளையிட்டான். 

கண்டிப்பாக இது விவாகரத்து பத்திரமாகத் தான் இருக்கும் என்ற நினைப்போடு மிகவும் சோகமாக அதை எடுத்து படிக்கத் தொடங்கினாள். படிக்க படிக்க அவளால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அவள் எதற்காக சிரிக்கிறாள் என்பது புரியாமல் ஒரு விதமான குழப்பத்தோடு அவளையே உற்று நோக்கியபடி அமர்ந்து இருந்தான் மகேந்திரன். ஏனென்றால் அவன் கொடுத்த அந்த காகிதத்தில் இருந்த விஷயங்கள் அவ்வாறானது. 

தினமும் அவள் என்னென்ன வேலைகள் என்னென்ன நேரத்தில் செய்ய வேண்டும் என்ற அட்டவணை அது. 

“அதுல இருக்க ஒவ்வொரு வேலையும் நீ செய்யும் போது இதே மாதிரி தான் நானும் உன்னை பார்த்து விழுந்த விழுந்து சிரிக்க போறேன்.” 

“சிரிச்சுக்கோ…”

இதை எல்லாம் அவள் ஒரு பெரிய விடயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பது போல பேசினாள். அவளின் இந்த பதில் மகேந்திரனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

“இதுல நாலு வேலை செய்யிறதுக்குள்ள உன்னோட முதுகெலும்பு ஒடஞ்சு கீழ விழுகப் போகுது” என்று மீண்டும் அவளை பயமுறுத்த நினைத்தவனுக்கு மீண்டும் அது தோல்வியிலேயே முடிந்தது.

“அது பரவாயில்லை, ஏன் நாளைக்கு காலையில இருந்து ஸ்டார்ட் பண்ணனும்? இப்பவே ஸ்டார்ட் பண்றேன்” என்று சொல்லி வேலை செய்ய ஆரம்பித்து விட்டாள். 

பாட்டு பாடிக் கொண்டே மகிழ்ச்சியாக அவள் வேலைகளைச் செய்ய, அவனுக்குத்தான் சப்பென்று ஆனது. ஆனாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், பெரிதாக ஏதோ சாதித்து விட்ட தோரணையில் தனக்கு விருப்பமான மரத்தடியில் அமர்ந்து இருந்தான். 

வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய சுந்தரலிங்கம், தனது பேத்தி மதியழகி இப்படி விழுந்து விழுந்து வேலைக் கண்டு அதிர்ந்து போய் நின்றார். 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page