ஆரெழில் – 3
கர்நாடக இசையும், துளசி வாசமும் கோவிலையும் அதைச் சுற்றி இருந்த பகுதிகளையும் தெய்வ கடாட்சமாக்கி இருந்தது.
பிரகாரம் சுற்றி முடித்து, பெருமாளை தரிசிக்க விரும்பி மூல ஸ்தானம் நோக்கி நடந்தாள் ஹம்சினி. பேரெழில் பொங்கும் முகத்தோடு, அவளைப் பார்த்து புன்னகைத்தார் பெருமாள். கையோடு கொண்டு வந்திருந்த துளசி மாலையை, காணிக்கையாய் தந்து விட்டு கரம் குவித்து நின்றாள்.
உலகின் அத்தனை இன்ப துன்பங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இறையருள் ததும்ப இன்முகமாய் பிரார்த்தனை செய்துக் கொண்டிருந்தாள். அது அந்த இறைவனுக்கும் பொறுக்கவில்லையோ?
அவள் திரும்ப கண்களை திறக்கும் பொழுது, அவளருகே இருந்தவன் வைத்த கண் வாங்காமல் அவள் முகத்தைப் பார்த்திருந்தான். இழுத்த மூச்சை வெளிவிட விரும்பாமல், நுரையீரல் தகராறு செய்ய, இதயமோ இருநூறு கிலோ மீட்டர் வேகத்தில் ஓட துவங்கியது.
உலகம் இருட்டிக் கொண்டு வர, மீண்டும் மயக்கம் வந்துவிடுமோ எனும் அச்சத்தில் விரைந்து வெளியேறினாள். அவள் முதுகினை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவன் கையில், அவள் தந்த துளசி மாலையையும் இன்னபிற பிரசாதங்களையும் தந்து விட்டுப் போனார் குருக்கள்.
விண்ணைத் தொடும்படி உயர்ந்து வளர்ந்திருந்தது அந்த அலுவலக கட்டிடம். அதன் முகப்பில் ஹோம்ஈசி எலெக்ட்ரானிக்ஸ் எனும் பெயர் தங்க நிற எழுத்துகளால் பொறிக்கப்பட்டிருந்தது. அருகிலேயே செயற்கை நீரூற்று, வண்ண மலர்களான பூச்செடிகள் என தனித்துவமாய் அலங்கரித்து இருந்தார்கள். அவள் வாகனம் அலுவலக கட்டிடத்திற்குள் நுழைந்த மறு நொடி, கருணாகரனும் தன் ஸ்கூட்டியில் வந்துவிட்டார்.
கொஞ்சமாய் வெளிறி போயிருந்த அவள் முகத்தைப் பார்த்ததும், “உள்ள போலாமா?” என்றார் யோசனையாய்.
‘ஓடினால் தப்பிக்க முடியுமா? எப்படி இருந்தாலும் சமாளித்துதானே ஆக வேண்டும்!’ எனும் உறுதியோடு சம்மதமாய் தலையை ஆட்டினாள்.
அகன்று நீண்டிருந்த லாபியை அடைந்தனர் இருவரும். அவனைப் போலவே திமிர் ததும்பும் செப்பு சிலைகளை அலங்காரப் பொருட்களாய் ஆங்காங்கே நிறுத்தி வைத்திருந்தான். அமைதிக்கு இலக்கணமாய் அவ்விடமே நிசப்தத்தால் நிறைந்திருந்தது. ரிசப்ஷனில் அமர்ந்திருந்த இளம் பெண், அவர்கள் இருவரையும் பார்த்து சினேகமாய் புன்னகைத்தாள்.
பட்டுத்துணியால் அலங்கரிக்கப்பட்ட மேஜையை, பக்கத்திலேயே பரந்து விரிந்து இருந்த ஜன்னல் வழி வந்த சூரிய வெளிச்சம் இன்னும் எடுப்பாக காட்டியது. பணியாளர்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்கு வசதியாய், அங்கு இருந்த கணினிகூட அதிநவீன வகையில் இருந்தது. அங்குலம் அங்குலமாய் அலுவலகத்தை செதுக்கி இருக்கிறார்கள் என்று பார்த்ததும் விளங்கியது ஹம்சினிக்கு.
தனிப்பட்ட முறையில் அவன் மேல் டன் கணக்கில் வெறுப்பு இருந்தாலும், அலுவலக நேர்த்தி பார்த்து ஒரு சபாஷ் போடத் தான் தோன்றியது. தன் மனது திசை மாறுவதை உணர்ந்த உடனே, ‘ச்சீ.. ச்சீ.. அவன பத்தி நல்ல விதமா நினைக்கிறதே பாவம்’ என்றுரைத்து தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டாள்.
கருணாகரன் ரிசப்ஷனிஸ்ட் பெண்ணிடம் வந்த காரணத்தை விளக்கிச் சொன்னதும், அவள் ஒரு திசை நோக்கி கை காட்டினாள். அவர் போக, அவரோடு சேர்ந்து ஹம்சினியும் நடந்தாள். லிஃப்ட் அவர்களை இரண்டாம் தளத்தில் இறக்கி விட்டது. அதைத்தொடர்ந்து சென்ற நீண்ட பாதை, கான்பரன்ஸ் ஹாலின் கதவினில் முடிவடைந்தது.
“என்ன, யாரையுமே காணோம்?”
“ஆளுங்க வர்ற வரைக்கும் இங்கேயே நின்னுட்டு இருக்க முடியாது. உள்ள போவோம், வாம்மா” அவள் கை பிடித்துக் கூட்டிச் சென்றார்.
கதவைத் திறந்தால், ஒரு அரைவட்ட மேஜையில் அத்தனை பேரும் அமைதியாய் உட்கார்ந்து இருந்தார்கள். அவர்களுக்கு நடுவேயான அழகிய இருக்கையில் அவன் இருந்தான். ஒரு தேர்வு அறை கூட இத்தனை நேர்த்தியாகவும் அமைதியாகவும் இருந்திருக்காது. அவன் பணியாட்கள், மூச்சு விடும் சத்தம் கூட கேட்காதபடி அங்கே இருந்தனர்.
‘சற்று முன்பு கோவிலில் நின்றவன், எனக்கு முன்னதாக இங்கே எப்படி வந்தான்?’ எனும் அதிர்ச்சியில் அவள்.
கருணாகரன், “சாரி சார், உள்ள யாரும் இல்லனு நினைச்சு வெளியில நின்னுட்டு இருந்தோம். ட்ரைனிங் ஸ்டார்ட் பண்ணலாங்களா?” எனக் கேட்க, அவளை விட்டு விழியை அகற்றாமலேயே தலையை அசைத்தான்.
மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டு வேலையை ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் இருந்த பயமும், சின்ன சின்ன தடுமாற்றங்களும் போகப் போக காற்றில் கரைந்து போனது. சிலை போலிருந்த பணியாளர்கள் தத்தமது நவீன வகையறா நோட்பேடில் குறிப்பு எடுத்துக் கொண்டே வந்தனர். நோட்பேடு ஒரே வடிவத்தில், ஒரே வண்ணத்தில் இருப்பதன் மூலம் அவை அலுவலகத்திற்கு சொந்தமானது என்பது சொல்லாமலே தெரிந்தது.
தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு தண்ணீர் கூட குடிக்காமல் பிரசன்டேஷன் மூலம் பாடம் எடுத்திருந்தாள். அலுவலக நேரப்படி அது மதிய உணவுக்கான இடைவேளை. நிரன் எழுந்து நடக்க, மற்றவர்களும் புறப்பட்டு போனார்கள். எந்திரம் போல செயல்பட்டவள், துவண்ட கொடியாய் ஒர் இருக்கையில் உட்கார்ந்தாள்.
தண்ணீர் பாட்டிலில் மூடியை திறந்து எடுத்து வந்தார் கருணாகரன். அதை அவள் வாயில் வைக்கும் முன், வாயில் கதவு திறந்துக் கொண்டது. அழகு பொம்மை போல் இருந்த பெண் ஒருத்தி அவர்களை நோக்கி விரைந்து வந்தாள். ஹை ஹீல்ஸ் அணிந்திருந்த போதும், அவளின் பாதுகைகள் ஒலி எழுப்பவே இல்லை.
“உங்க ரெண்டு பேரையும் சார் லஞ்சுக்கு இன்வைட் பண்றாரு” சிறு புன்னகையோடு அவர்களுக்கு மட்டும் கேட்கும் குரலில் பேசினாள்.
“எனக்கு வேணாம்…” உடனடியாக மறுத்தாள் ஹம்சினி.
“மறுபடியும் மயங்குறதுக்கா?” கருணாகரன் குரலில் கோபத்தை விட அக்கறை தான் அதிகம் இருந்தது.
“நம்ம வெளியில போய் சாப்பிட்டுக்கலாம் அங்கிள்.”
பாவமாய் கேட்கும் பாவையிடம், “மறுபடியும் எல்லாரும் நமக்கு முன்னால வந்து உக்காந்துட்டு இருப்பாங்க. இவங்க பழக்கவழக்கம் வேற மாதிரி இருக்கு, புரிஞ்சுக்கோமா. நான் தான் கூடவே இருக்கேன்ல, சாப்பிடுற நேரத்துல என்ன செஞ்சுட போறாங்க? என் கூடவே வா” என்றார் கறாராய்.
அன்பை விட அதட்டல் நன்றாகவே வேலை செய்தது. அரை மனதோடு அவரைப் பின் தொடர்ந்தாள் ஹம்சினி. பன்னிரெண்டு மாடிகள் கொண்டிருந்த அந்த கட்டிடத்தில் பத்தாவது மாடியை வந்தடைந்தனர். அந்த தளத்திற்கு மட்டும் முழுக்க முழுக்க கண்ணாடியால் செய்யப்பட்டிருந்தது சுவர். நத்தை போல் நகர்ந்து போகும் வாகனங்களில் தன் பார்வையை பதித்தபடியே நடந்தாள். குளிர் கூடியதோ? கைகள் தன்னிச்சையாய் தோள் வரை தேய்த்துக் கொண்டது.
அவர்களை கூட்டி வந்தவள், “திஸ் சைடு” அடர் கருப்பு வண்ணத்தில் உருவாக்கப்பட்ட கதவினை திறந்து விட்டாள்.
அங்கே வெறும் சோபாவும், டேபிளும் மட்டுமே இருந்தது. அறை மூலையில் ஆங்காங்கே அலங்கார பொருட்கள் ஆதிக்கம் செலுத்த, அவள் விழிகள் அங்கிருந்த ஓவியத்தில் நிலைத்து நின்றது. மூன்று வயது கிருஷ்ணன் நெய் திருடிவிட்டு ஓடுவதும், யசோதா குச்சியை கையில் பிடித்துக் கொண்டு விரட்டுவதுமான ஓவியம் அது. ஹம்சினியின் விழிகள் நீரால் நிரம்ப, அதே நேரம் படாரென கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் நிரன். அவனோடு சேர்த்து அவன் வாசமும் அந்த அறையை ஆக்கிரமித்தது.
‘அந்த அரக்கன் முன்னால் அழுவதா?’ விழியோரத்தில் துளிர்த்த நீரை துடைத்தெறிந்தாள்.
“வெஜ் ஆர் நான்வெஜ்?” கருணாகரனிடம் கேட்டான்.
“நான்வெஜ் ஓகே சார்…” அறையின் மூலையில் நின்றிருந்த ஹம்சினியைப் பார்த்தான்.
“வெஜ்…” என்றாள்.
இன்டர்காமில் தகவல் சொன்ன இரண்டு நிமிடங்களில் வகை வகையான உணவு பதார்த்தங்கள் வந்து குவிந்தது. இது அலுவலகமா? உணவகமா? என்ற குழப்பம் கருணாகரன் கண்ணில். அனைத்தையும் சுவை பார்த்து விட வேண்டும் எனும் அடிமன ஆசையை அவர் முகம் அப்படியே பிரதிபலித்தது. ஹம்சினியோ, பெயருக்கு கொஞ்சத்தை கொரித்தாள். அதற்குமேல் சத்தியமாக அவளால் சாதாரணமாக இருப்பது போல நடிக்க முடியவில்லை.
“எனஃப்…” என்பதோடு எழுந்து வெளியேச் சென்று விட்டாள்.
வாசலில் நின்றிருந்த பணிப்பெண், “மேம், ரெஸ்ட் ரூம்?” என்றாள் கேள்வியாய்.
தற்போதைக்கு தனிமை வேண்டும் என்பதனால் ஆம் என்றாள். அதே தளத்தின் இறுதியில் அமைக்கப்பட்டிருந்த பாத்ரூமுக்கு நடந்தனர் இருவரும். கதவினை கைகாட்டி விட்டு வந்த வழியே திரும்பி போய்விட்டாள் பணிப்பெண். அந்த தளத்தினை அவனுடைய சொந்த பயன்பாட்டுக்காக உபயோகிப்பதால், வேறு யாரும் அனாவசியமாக வந்து போகவில்லை.
கதறி அழத் துடித்த இதயத்தை திரும்பத் திரும்ப கட்டுப்படுத்தியதன் பலனாய், கண்ணீர் நிற்காமல் வழிந்தது. குளிர்ந்த நீரால் முகத்தை அடித்துக் கழுவினாள். அவள் மனப் புழுக்கத்தை அது தணிக்கவில்லை போலும். செய்வதறியாது கண்ணாடியில் தன் பிம்பத்தை தானே வெறித்துப் பார்த்தாள். கதவைத் திறந்து உள்ளே வந்தான் நிரன்.
“பேசணும்…”
“முடியாது…” விலகி ஓட நினைத்தவளின் வழியை மறித்தான். அவனின் பர்ஃப்யூம் வாசத்தை சுவாசிக்கப் பிடிக்காமல் நாசித் துளைகள் அடம்பிடிக்க, மூச்சு முட்டியது அவளுக்கு.
“இப்ப மட்டும் வழிய விடலனா, கத்தி ஆள கூட்டிடுவேன்.”
விரல் நீட்டி எச்சரித்தவளின் விரலோடு சேர்த்து கையையும் மடக்கிப்பிடித்தான். அதிர்ச்சியில் அலறப் போனவளுக்கு குரல் வெளியே வரவே இல்லை. காரணம் அதற்கு முன்பே இன்னொரு கையால் அவள் வாயை மூடி இருந்தான். நடந்து, ஓடி அவன் பிடியிலிருந்து தப்பிக்க நினைத்தாள். அந்த யோசனை அவளுக்கு வரும் போதே, நிரன் அவளை பக்கத்து சுவற்றோடு சேர்த்துப் பிடித்தான். பிணைக் கைதியாய் அவளின் ஐம்புலனும் அவனிடம் சிக்கிக் கொண்டது.
அனுமதி இன்றி அவள் கண்ணீர் வழிய, “இங்க பார், நீ அழுறதாலயோ, பட்டினியா கிடைக்குறதாலையோ பழசு எதுவும் மாறாது. நாளையோட ட்ரைனிங் முடிஞ்சிடும். அதுக்கப்புறம் நீ யாரோ, நான் யாரோ. சீன் கிரியேட் பண்ணாம வந்த வேலையை மட்டும் பாரு. இல்ல ஹெட் ஆபீஸ் வரை கேவலப்படுத்துவேன்…” கைப்பிடிக்குள் இருந்தவளை வீசியெறிந்தான். கண்ணாடியாய் பளபளத்த கருப்பு வண்ண டைல்ஸ் தரையில் குப்புற விழுந்தாள்.
