ஆரெழில் – 4

அவன் பற்றி பிடித்திருந்த இடம் அதற்குள் கன்றிச் சிவந்து விட்டிருந்தது. அவன் பேசிய வார்த்தைகள் திரும்பத் திரும்ப காதுக்குள் ஒலிக்க, தன்னைத்தானே மீட்டெடுக்க முயற்சித்தாள். ‘சீன் கிரியேட் பண்ணாத’ என்று கூறிவிட்டான் இல்லையா? அதற்காகவாவது தன் முழு திறமையை காட்டியே ஆக வேண்டும் என்ற முடிவோடு வெளியே வந்தாள். அவளுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தார் கருணாகரன்.

அவள் முகம் களைத்திருந்தாலும், அகம் தெளிந்திருப்பது கருணாகரனுக்கும் புரிந்தது. குமார் எதற்காக இந்த பெண் மேல் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டான் என்பதும் விளங்கிற்று. மதிய நேரத்து பிரசன்டேஷன் அனல் பறக்க நிகழ்ந்தேற, ஆறு மணிக்குள் தொன்னூறு சதவீத வேலைகள் முடிந்து விட்டது. நாளைய வேலைக்கு அரைநாளே அதிகம் என்ற நிலை‌.

உடல் முழுக்க அசதியோடு அப்பார்ட்மெண்டிற்கு திரும்பி வந்தவள், முதல் வேலையாய் அப்பாவுக்கு போன் போட்டாள். அட்டென்ட் செய்யவில்லை… ‘வேலை முடிஞ்சது பா, அடுத்த வாரத்துல டிக்கெட் போட்ருவேன்’ என்று அனுப்பிய மெசேஜிற்கு, அடுத்த இரு வினாடிகளில் ப்ளூடிக் விழுந்தது. ஆனால் பதில் வரவில்லை…

பெருமூச்சோடு படுக்கையில் விழுந்தாள். கண்ணை மூடும் முன்பாக அவன் முகம் கண் முன் வந்து நின்றது. சாதாரண நாட்களில் வரும் கனவுகளே அத்தனை கொடூரமாய் இருக்கும். இன்று வரப்போகும் கனவுகளை நினைத்து உறங்கவே பயமாய் இருந்தது. உடல் உறக்கத்தை கெஞ்ச, மனம் நிம்மதியை கெஞ்ச, இரண்டுக்கும் நடுவே சிக்கி சின்னாபின்னமானது ஜீவன்.

அடுத்த நாள் ஆதவனின் கதிர்கள் அவள் ஆடை தீண்ட, மொட்டவிழும் மலராய் இமை திறந்தாள் ஹம்சினி. பல நாட்களுக்கு பிறகு, இல்லை… இல்லை… பல வருடங்களுக்கு பிறகு இரவெல்லாம் நிம்மதியான நித்திரை கொண்டிருக்கிறாள். இந்த மாற்றம் அவளுக்கே ஆச்சரியமாய் இருந்தது.

அலைபேசி வழி அழைத்த கருணாகரன், “சாரிம்மா, இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. இப்பதான் குளிச்சிட்டு வந்தேன், இன்னும் பத்து நிமிஷத்துல கிளம்பிடுவேன். நீ எனக்காக வெயிட் பண்ண வேணாம், முன்னால போய் ட்ரைனிங் ஆரம்பிச்சிடு. நான் பத்தரைக்குள்ள வர பாக்குறேன்” என்றுரைத்தார்.

யோசனையோடு கடிகாரத்தை பார்த்தாள். மணி எட்டு முப்பது… ஒன்பது மணிக்கெல்லாம் அந்த சாலையில் ட்ராபிக் அதிகமாகிவிடும் எனும் ஞாபகம் வந்தது. துரித கதியில் தயாரானாலும் அவன் கம்பெனிக்கு போய் சேர்வதற்குள் பத்தரையை தாண்டிவிடும். கடுவன் பூனையிடம் திரும்பத் திரும்ப அவமானப்பட விருப்பம் இல்லாமல், குமாருக்கு ஃபோன் போட்டாள். 

“சொல்லுங்க மேம்…”

“இன்னிக்கி கொஞ்சம் லேட் ஆயிடுச்சுங்க. வீட்டுல இருந்து புறப்படவே ஒன்பது மணி ஆகிடும். அவங்க கம்பெனிக்கு வேகமா போய் சேர வேற ஏதாவது வழி இருக்கா?”

“மெட்ரோ ட்ரை பண்ணுங்க, ஒரு மணி நேரத்துக்குள்ள போயிடலாம். நான் ரூட் சொல்றேன். கிளம்பும்போது வாட்ஸ் அப்ல எனக்கு லைவ் லொகேஷன் ஷேர் பண்ணிடுங்க. தப்பான வழியா இருந்தா உடனே உங்களுக்கு தகவல் சொல்றதுக்கு வசதியா இருக்கும் ‌”

“ரொம்ப நன்றிங்க… ரெடியாகிட்டு பத்து நிமிஷத்துல கால் பண்றேன்” காக்கை குளியல் குளித்து பறந்தோடினாள்.

அவள் அனுப்பிய லைவ் லொகேஷன் பற்றிய தகவல்கள் அவ்வப்போது குமாரிடமிருந்து நிரனுக்கு கை மாறியது. மெட்ரோவின் தயவால், எதிர்பார்த்ததை விட விரைவாகவே நிறுவனத்தைச் சென்றடைந்தாள். நேற்று கவனிக்காமல் விட்ட விஷயங்களையும் இன்று அவள் கண்கள் நோட்டமெடுத்தது. அதில் ஒன்றுதான், நிறுவனத்தின் மூலையில் இடம் பிடித்திருந்த சிறு கோவில். 

அவளுக்கு மிகவும் பிடித்த திருமலை திருப்பதி அங்கே தெய்வ கடாட்சத்தோடு வீற்றிருக்க, அகம் மகிழ்ந்து போனாள் பெண்ணவள். அச்சு அசல் திருப்பதியின் சாயலில் சின்னஞ்சிறு கோவிலை கட்டி வைத்திருந்தார்கள். தினம்தோறும் ஆதவனின் கதிரொளி அவ்விடத்தில் விழ வசதியாய் அமைக்கப்பட்டிருந்தது கூடுதல் சிறப்பு. அனுதினமும் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது, என்பதை ஒற்றைப் பார்வையில் புரிந்துக் கொண்டாள். ‌

ஆசையோடு பெருமாளை நெருங்கிய கோதை, “நான் உன்னை மறந்தாலும், நீ என்னை மறக்கல” செவ்விதழ் மலர்ந்த புன்னகையோடு கரம் குவித்து கும்பிட்டாள்.

அவ்விதழின் மலர்ச்சி அவனையும் தொற்றிக் கொண்டதோ? கார் கண்ணாடி வழியே காரிகையவளை கண்டு ரசித்தான். எதற்காக அந்த கோவிலை அங்கே நிறுவினானோ அதன் பலன் கிடைத்துவிட்ட திருப்தி அவனுள்.

மனிதன் எங்கு தேடினும் கிடைக்காததொரு பொக்கிஷம் மன நிம்மதி. வாழ்நாள் முடிந்த பின்பும் இந்த தேடலுக்கு ஏனோ முடிவு இருப்பதில்லை. இங்கு நிரனுக்கும் ஹம்சினிக்கும் தேடாமல் கிடைத்திருந்தது சில நிமிட நிம்மதி. அதை பரிபூரணமாய் அவள் அனுபவிக்கட்டும் என்று அமைதியாய் காருக்குள்ளேயே அமர்ந்திருந்தான்.

நேற்றைப் போல் தயக்கம் இன்றி ரிசப்ஷனிஸ்ட் பெண்ணிடம் சகஜமாய் பேசிவிட்டு, கான்ஃபரன்ஸ் ஹாலை நோக்கி விரைந்தாள். இன்று அவள் தான் முதல் வருகை. பிரசன்டேஷன் செய்வதற்கு வசதியாக கணினியை தயார் செய்துவிட்டு, அதே அறையின் மூலையிலிருந்த வீட்டு உபயோக பொருட்களை பார்த்துக் கொண்டிருந்தாள். என்னதான் பக்கம் பக்கமாக பாடம் எடுத்தாலும், செயல்முறை விளக்கம் தரும் தெளிவு முந்தையதில் கிடைக்காது இல்லையா?

பொருட்கள் ஒவ்வொன்றிலும் எது முக்கியமாக சொல்ல வேண்டியது என்று தனக்குத்தானே நினைவு கூர்ந்துக் கொண்டிருந்த நேரம், “லேட்டா வருவனு நெனச்சேன். நாட் பேட்…” அவள் முதுகுக்கு பின்னால் மெதுவாய், அதே சமயம் அழுத்தமாய் ஒலித்தது அந்த குரல்.  

அடுத்த நொடியே உண்மையில் அவளுக்கு உயிர் பயம் வந்துவிட்டது. தனிமையும் அமைதியும் தன்னிச்சையாய் கன்னியவள் மனதிற்குள் அதீத நடுக்கத்தை உருவாக்கியது. தப்பி ஓடக்கூட வலுவில்லாது தவித்தது தேகம். அவன் வாசத்தின் காரணமாய், அவள் சுவாசமும் தன் பங்குக்கு தகராறு செய்தது. திரும்பி பார்க்கவும் திராணி இல்லாத பறவையாய் சிறகொடிந்து நின்றாள். 

“எப்படியும் சாப்பிட்டிருக்க மாட்ட. இந்தா, இத சாப்பிடு.” 

“எனக்கு வேண்டாம்…” 

“என்னனு பார்க்காமலேயே வேண்டாம்னு சொல்ற? மயங்கி விழுறதுல அவ்வளவு ஆசையா, இல்ல இங்கேயே பெர்மனென்ட்டா வொர்க்ல சேர்ந்திடுற எண்ணமா?”

“…..”

“கீழ இருக்கிற திருப்பதி சாமிக்கு சனிக்கு சனி ஏதாவது படையல் வைக்கிறாரு நம்ம பூசாரி. இன்னிக்கி முப்பழ அபிஷேகமும் புளியோதரையும். அதுல கொஞ்சம் என் டேபிளுக்கும் வந்துச்சு. பிரசாதமாச்சே, வராத விருந்தாளி வந்திருக்கிறாங்க, சாப்பிடட்டும்னு நினைச்சு எடுத்துட்டு வந்தேன். பெருமாள் பிரசாதம் சாப்பிட உனக்கு கொடுத்து வைக்கல. தள்ளு, இந்த டேபிள்ல வச்சுட்டு போறேன். ட்ரைனிங்க்கு வர்றவங்க யாராவது எடுத்து சாப்பிட்டுக்கட்டும்.”

அடர் பிரவுன் வர்ண புளியோதரையைப் பார்த்ததும் அவள் கண்கள் அழகாய் விரிந்தது. நீள வாக்கில் நறுக்கப்பட்ட முப்பழங்கள் சாறு வழிய ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கிடந்தது. பாவம் பாவை! நேற்று இரவும் சாப்பிடவில்லை, இன்று காலையிலும் சாப்பிடவில்லை. இதுவரை இல்லாத பசி உணர்வு, இப்போது பூதாகரமாய் தோன்ற, அறிவுக்கும் மனதிற்கும் நடுவில் ஒரு யுத்தம் நடத்திக் கொண்டிருந்தாள்.

அவனுக்கென ஒதுக்கப்பட்ட அழகிய நாற்காலியில் அமர்ந்தவன், “குமார்ட்ட சொல்லி, நாளைக்கே உனக்கு டிக்கெட் புக் பண்ணி தர்றேன். கிளம்பி போயிட்டா அதுக்கப்புறம் நீ யாரோ நான் யாரோ. ஒரு வாய் பிரசாதம் சாப்பிடுறதால நான் ஒன்னும் ஒட்டி உறவாட போறதில்ல. கோவில் பொருளாச்சேனு கேட்டேன். விருப்பம் இருந்தா சாப்பிட்டுக்க, விருப்பமில்லனா விடு” இவள் பக்கம் திரும்பாமலே கூறி முடித்தான்.

அதற்கு மேலும் யோசிக்காமல் புளியோதரையை கையில் எடுத்தாள். மணக்க மணக்க நல்லெண்ணெய் ஊற்றி, அசல் கோவில் சுவையில் அருமையாக தயாரித்திருந்தார்கள். ஒரு வாய் உள்ளே போனதும், சொர்க்கம் என்றால் இதுதான் என்று சொல்ல தோன்றியது அவளுக்கு. 

அலங்காரத்திற்கு வைக்கப்பட்டிருந்த கண்ணாடி வழியே அவள் சாப்பிடுவதைப் பார்த்தவன், ‘இவ இன்னும் அப்படியே இருக்கா…’ தனக்குள்ளாக சொல்லிக் கொண்டான் தலைவன்.

அவள் சாப்பிட்டு முடிப்பதற்கும், அவனது பணியாளர்கள் உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது. ‘வேணும்னே எல்லாரையும் வெளியே நிக்க வச்சிருந்தானோ? மொது மொதுனு மொத்தமா உள்ள வர்றானுங்க?!’ எண்ணங்களை உறுதியாக்கிக் கொள்ளும் ஆராய்ச்சியோடு அனைவரையும் பார்த்தாள். அவள் எண்ணம் பொய்க்கவில்லை…

‘சரியான ஹிட்லர்…’ திட்டிவிட்டு முழு மூச்சில் வேலையை ஆரம்பித்தாள். மூன்று மணி நேரம் நொடியில் ஓடிப்போனது. கேள்வி நேரம் ஆரம்பமாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சந்தேகங்களோடு முன்னால் வந்தனர். அத்தனையும் புரியும்படி விளக்கி முடிக்கையில், நேரம் இரண்டு மணியை நெருங்கிவிட்டது‌. 

அன்று அனைவருக்கும் அலுவலகத்தில் மதிய உணவு ஏற்பாடாகி இருந்தது. மற்றவர்களோடு ஹம்சினி சகஜமாக பேச ஆரம்பித்து விட்டதால் கருணாகரன், தன் வயிற்றை நிரப்புவதில் கவனமாக இருந்தார். நிரன் சாப்பிடுவது போல பாவனை செய்தாலும், அவன் விழிகள் அவ்வப்போது அவளில் படிந்து மீண்டது. அது அவளுக்கும் தெரியாமல் இல்லை. தங்கள் உறவை பகிரங்கப்படுத்த விரும்பாமல் ஒதுங்கினாள். 

இறுதியாய் அவள் புறப்படும் நேரம் வந்தது. முறையாய் ஹம்சினிக்கும் கருணாகரனுக்கும் பரிசு தந்து ட்ரைனிங்கை நிறைவு செய்தார்கள். புகைப்படங்களுக்காக அனைவரும் ஒரே இடத்தில் குவிந்து நிற்க, அவனின் தோளோடு தோள் உரசிக்கொண்டு நிற்க வேண்டிய சூழ்நிலை. மனம் நெருப்பாய் எரிய, வராத சிரிப்பை வரவழைத்துக் கொண்டாள்.

“தேங்க்யூ, நாங்க கிளம்புறோம்” கூண்டிலிருந்து விடுபட்ட கிளியைப் போல் அவள் குரலில் குதூகலம் கூடி இருந்தது.

என்ன பதில் சொல்வதென்ற யோசனையோடு அவள் முகம் பார்த்தான் நிரன்‌. அதே நேரம் அவனின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. தொடுதிரையில் கீதா எனும் பெயர் ஜொலிக்க, கணப்பொழுதும் வீணாக்காமல் விரைந்து அட்டென்ட் செய்தான். முகம் தெரியாத அந்த கீதாவின் மேல் கோபம் தோன்றி மறைந்தது ஹம்சினிக்கு.

‘பேசி முடிக்கட்டும், அவள் யாரென கேட்டு தெரிந்துக் கொண்டு தான் இங்கிருந்து புறப்பட வேண்டும்’ என்று காத்திருந்தாள். அந்தப் பக்கம் என்ன சொன்னார்களோ, அடுத்த நொடி நான்கு கால் பாய்ச்சலில் வெளியே ஓடினான் நிரன். அவனைப் பின் தொடர்ந்து இன்னொரு இளைஞனும் ஓடிட, மற்றவர்கள் உத்தரவின்றி அவரவர் வேலையை பார்க்க புறப்பட்டனர்.

வழியனுப்புவதற்காக வந்த நபரிடம், “என்ன ஆச்சு? ஏன் அவங்க ரெண்டு பேரும் ஓடுறாங்க?” என்றாள் ஹம்சினி.

“தெரியல மேம். பிஏ அறிவழகன் எப்படியும் கொஞ்ச நேரத்துல எங்களுக்கு இன்பார்ம் பண்ணுவாரு. வேணும்னா கேட்டு சொல்றேன்.”

தன் செல்போன் நம்பரை தந்துவிட்டு புறப்பட்டுப் போனாள். ஆனால் அவள் எதிர்பார்த்தபடி எந்த அழைப்பும் வரவில்லை. எந்த வேலையிலும் மனம் ஒன்றாமல் போக, வெறுமனே விட்டத்தை பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். வேண்டாத விரோதியை எதற்காக தன் மனம் திரும்பத் திரும்ப தேடுகிறது என்று அவளுக்கே விளங்கவில்லை. முழங்கால் மேல் முகத்தை அழுந்த புதைத்துக் கொண்டாள். வெண் வண்ண கண்களுக்குள் பாய்ந்த அந்த வெம்மை இதமாய் இருந்தது. 

திடீரென யாரோ படபடவென கதவை தட்டும் சத்தம் கேட்டிற்று…

“யாரு?”

“நான்தான், சீக்கிரம் கதவை திற ஹம்சினி.”

“நீங்களா? எதுக்கு வந்தீங்க?”

“நீ கதவை திற முதல்ல…”

ஐந்து இன்ச் இடைவெளிக்கு திறந்து அவன்‌ முகம் பார்த்தாள். அடுத்த கணம் தன் கையை உள்ளே விட்டு, வலுக்கட்டாயமாய் அவளை பிடித்து இழுத்தான். 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
247 40 0
இராவணின் வீணையவள்
47 0 0
ஆரெழில் தூரிகை
310 15 1
வேண்டினேன் நானுன்னை
541 6 0
நீ எந்தன் நிஜமா?
379 8 1
என்துணை நீயல்லவா?
463 12 0
கற்றது காதல்
216 1 0
நிழலென தொடர்கிறேன்
214 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page