நிலா – 1
விண்ணுலகமும் மண்ணுலகமும் இணைந்தார் போன்ற ஓர் இடம் அது. கருவண்ண பஞ்சுப் பொதிகளென ஊர்வலம் போன மழை மேகங்களுக்கு இடையில் எண்ணற்ற செஞ்சூரியனும் பூரண நிலவும் ஒரு சேர ஜொலித்துக் கொண்டிருந்தன. வான வில்லை அள்ளித் தெளித்தார் போல மலர்க் குவியல்கள், மழை விழுவதைப் போல மேலிருந்து கீழாய் பறந்து வந்து விழுந்து கொண்டே இருந்தன.
அவ்விடத்தில் குண்டு மல்லியினை குப்புறக் கவிழ்த்தது போன்ற பாவாடையும், ரோஜாவின் இதழ்களைப் போன்ற மேலாடையும் அணிந்திருந்த நான், ஈரப்பதம் நிறைந்த காற்றினில் கொலுசொலி சிணுங்கும் படியாக எதையோ தேடிய வண்ணம் வேக வேகமாக சென்று கொண்டிருந்தேன்.
அந்த வெண்ணிற மலர்க்காடு முழுவதும் பளிச்சென்று ஏதோ ஒரு வித்தியாசமான வெள்ளை ஒளியால் சூழ்ந்திருந்தது. அதன் இறுதி முனையில் வெள்ளை நிற ஆடையோடு ஒருவன் முதுகை காட்டியபடி நின்றிருந்தான். தொலைவிலிருந்து பார்க்கையில் அவனது சிகை அலங்காரமும், அவன் நிற்கும் தோரணையும், ஏனோ எனக்கு மிகவும் பழக்கமான ஒருவனுடையது என்று தோன்றிற்று. இன்னும் சற்று அருகில் செல்லலாம் என நினைத்து மெல்ல மெல்ல சில அடிகள் முன்னால் நகர்ந்தேன். எனக்கு உறுதியாகிவிட்டது, இது அவன் தான்… அவனே தான்… சூர்யா…..
இனி நான் இங்கிருக்க கூடாது, விரைந்து செல்ல வேண்டும் என்ற முடிவோடு வந்த வழியே நான் திரும்பி நடக்க முனைந்தேன். ஏனோ என்னோடு வர விருப்பம் இல்லாததைப் போல என் கால்கள் இரண்டும் அவ்விடத்தில் வேர் விட்டு நின்றிருந்தன. மண்ணோடு ஒன்றிய கால்களை எத்தனை முயன்றும் என்னால் பெயர்த்து எடுக்க முடியாது போனது.
அதுவரை என் பக்கமிருந்து அவன் பக்கமாய் வீசிக்கொண்டிருந்த தென்றல் காற்று, இப்போது எப்படியோ அவன் பக்கமிருந்து என் பக்கமாய் மாறி வீசத் தொடங்கியது. அவன் என்னைப் பார்க்கிறான் என்று என் உள்ளுணர்வு சொல்லிட, ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றிருந்தேன் நான். அவன் என்னை நெருங்கி வருவதற்கு அத்தாட்சியாக என்னை சுற்றி இருந்த காற்றிலிருந்து ஈரப்பதம் குறைந்து, வெப்பக் காற்றின் உணர்வு அதிகமாகத் தொடங்கியது.
என் அருகில் வந்து நின்ற சூர்யா ஆளுமை நிறைந்த குரலில், “உனக்கத்தான் நான் இவ்வளவு தூரம் வந்தேன், நீ என்னடான்னா என் முகத்தக்கூட பார்க்காம அந்த பக்கம் திரும்பி நின்னா என்ன அர்த்தம் நிலா?” என்றான்.
“………”
நான் பதில் கூற விரும்பாமல் அமைதியாய் இருக்கவில்லை, என்ன வார்த்தையை உச்சரிப்பது என்றே தெரியாமல், என் தாய் மொழியே மறந்த நிலையில் நாணி கோணி தலை கவிழ்ந்து அமைதியாய் நின்று இருந்தேன். பயத்தில் வெளிறிய என் முகத்தை பார்க்கையிலேயே, அவனுக்கு என் மனம் படும் பாடு நன்றாக புரிந்திருக்கும் என்று எனக்குத் தெரியும்.
சூர்யா காதல் நிறைந்து வழியும் குரலில், “ஒரு தடவ என் முகத்தப் பாரு நிலா…..” என்று அன்பொழுக அழைத்தான் அவன்.
“…….”
நான் திரும்பவில்லை, மாறாக என் விழிகள் இரண்டையும் இறுக்கமாக மூடிக் கொண்டேன். எங்கே அவன் விழிகளை நேருக்கு நேராய் நின்று நான் பார்த்தால் அந்த நொடியே என் உயிர், விழி வழி போய் விடுமோ என்று பயம் வரும். இப்போது என்றில்லை, அவன் விழிகளை பார்த்து பேசிடும் திராணி எனக்கு எப்போதுமே இருந்தது கிடையாது.
‘அவன் அடுத்து என்ன சொல்ல போகின்றானோ?!.’ எனும் திகைப்போடு நான் நிற்க, என்னிலை புரிந்தவனோ என்னை மிக மிக நெருங்கி நின்றான். என் உயிர் உருக்கும் திறன் பெற்ற அவன் வாசம், என் நாசி எல்லாம் நிறைந்து நின்றது.
அது நேரம் வரை என்னை நகர விடாமல் வேரூன்றி இருந்த எனது கால்கள் இரண்டும், என் மேல் இரக்கம் கொண்டு தன் வேர்களை தளர்த்தி இலகுவானது. அடுத்த நொடியே வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல நான் அவனிடமிருந்து பாய்ந்து ஓடிட எத்தனித்தேன்.
என்னுள் சிறு அசைவு உருவாகும் முன்பே என் மனம் போகும் போக்கினை அறிந்தவன் போல, அவனது இரு கரங்களும் என் இடையை வளைத்து பிடித்துக் கொண்டது. அவனின் அந்த திடீர் விரல் தீண்டலால் உயிர் உறைந்த சிலையென நான் நிற்க, என்னை இன்னும் சோதனைக்குள்ளாக்க நினைத்தான் என்னவன்.
என் இடது செவியினுக்கு அருகில் வந்து முள் போன்ற ரோமங்கள் நிறைந்த தனது தாடையினை மெதுவாய் என் மேல் உரசினான் சூர்யா. அத்தீண்டலுக்கே அங்கமெல்லாம் நடுநடுங்கி அசையவும் துணிவில்லாமல் நான் நிற்க, அந்த ராட்சஷனோ அனலென கனன்ற தன் மூச்சுக்காற்றை என் தோள் மேல் பாய விட்டான். அந்த ஓர் நொடியில் என்னுயிர் உண்மையில் என் உடலோடு ஒட்டிக் கொண்டுதான் இருக்கின்றதா? இல்லை உடனிருக்க அஞ்சி உடலை உதறிவிட்டு பறந்து சென்று விட்டதா என்று என் மனதினுள் விடையில்லா குழப்ப மேகங்கள்.
“நிலா….” என்றவனது போதைக் குரலின் பலனாய், எனது உயிரில்லா உடல் கொஞ்சம் கொஞ்சமாக நான் சொல்லும் பேச்சைக் கேளாமல் அவன் பால் சாயத் தொடங்கியது.
என் உடல் முழுதாய் அவன் பக்கம் சாயும் முன்பு, “என்ன விடு சூர்யா… நான் போகணும்…” என்றபடி அவன் கைகளில் இருந்து விடுபட்டு ஓடிவிட முயன்றேன்.
கரைகண்ட மீனாய் துள்ளினேன்… அனலிடை இட்ட புழுவாய் துடித்தேன்… அன்னையை இழந்த குழந்தையாய் தவித்தேன்… என் உடல் கொண்ட போராட்டத்திற்கு பதில் கிடைத்தது. அவன் மெதுவாய் என்னை விடுவிக்கத் தொடங்கினான்.
இடைவெளி கிடைத்த மகிழ்ச்சியில் விருட்டென அவன் வசம் இருந்த உடலை உருவிக் கொண்ட என்னால், என் வலது கரந்தனை அவன் பிடியிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. எதிர்பாரா நொடியினில் அவன் என்னை இழுக்க, இடறி விழுந்தேன் அவன் மார்பு தன்னில். விழுந்த கணத்தினை உடல் உணர்ந்திடும் முன்பே, எலும்புகள் நொறுங்கும் அளவிற்கு இறுக்கமான ஒரு அணைப்பு, என் உடலுக்கு இலவச இணைப்பாக கிடைத்தது.
உயிரும் உடலும் தனித்தனியாய் பிரிய இயலுமா என்று எவரேனும் கேட்டால், நான் இந்தத் தருணத்தில் முடியும் என்றுதான் விளக்கம் சொல்வேன். அப்படி ஒரு நிலை அது… என் உடலை விட்டு என் உயிர் தனியாக பிரிந்து நின்று எங்களின் இணைவினை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது.
இல்லாத குரலை அடிவயிற்றிலிருந்து இழுத்து வந்து, “நான் போகணும்… விடு சூர்யா…” என்று இறைஞ்சினேன்.
என் இறைஞ்சல் தந்த மகிழ்ச்சியில் குறுநகை கொண்ட சூர்யா, “என்ன விட்டு நீ எங்கயும் போகமுடியாது நிலா….” என்று சொல்லியபடி என் இதழினை நெருங்கத் தொடங்கினான். நான் விடுபட முயன்றதும் வேகமெடுத்தவன் அழுத்தி தந்த அந்த அதிரடி முத்தத்தில், சத்தமில்லாமல் மயங்கி விழுந்தேன் நான்.
கனவு முடிந்ததும் நான் பதறியடித்தபடி கண் விழித்து எழுந்து பார்த்தேன், பத்திரமாய் என் படுக்கை அறையினுள் தான் இருந்தேன். கண்ட கனவின் தாக்கத்தால் கழுத்தெல்லாம் வியர்த்து இருக்க, என் கண்களை மீண்டும் மூடவே பயமாய் இருந்தது.
‘மீதமிருக்கும் இந்த ராத்திரிப் பொழுதினை நான் எப்படி கடக்கப் போகின்றேன்?…’ என்று நினைக்கவே உள்ளுக்குள் அச்சமாக இருந்தது.
‘சூர்யா… நீ மீண்டும் என் வாழ்வில் வரப் போகிறாயா? இத்தனை வருடங்களாக உன் வாழ்க்கையில் எந்த இடையூறும் செய்யாமல், நான் உன்னை விட்டு விலகித்தானே இருந்தேன்?… பிறகு ஏனடா? நம் இருவருக்குமான முன்னாள் சம்பவங்கள் என் அண்ணனுக்கு தெரியவந்தால், அவன் என்னை பற்றி என்ன நினைப்பான்? இறைவா எனைக் காப்பாற்று…..’ என என் மனம் கிடந்து அடித்துக் கொண்டது.
தினந்தோறும் வரக்கூடிய ஒரு சாதாரண கற்பனை உலகமாகிய கனவிற்கு, நான் ஏன் இத்தனை களேபரம் செய்கிறேன் என்று யோசிக்கிறீர்களா? என்னைப் பற்றி தெரிந்து கொண்டால் நீங்களும் என் கவலையின் தீவிரத்தை புரிந்து கொள்ள முடியும்.
நான் நிலா… இளநிலை வணிகவியல் முடித்துவிட்டு தற்காலிகமாய் ஒரு அலுவலகத்தில் பணியாற்றுகின்றேன். சாதாரணமாகவே மனதில் பட்டதை வெளியில் சொல்லத் தயங்கும் அளவிற்கு பயந்த சுபாவம் நிறைந்த பெண் நான். நான் இரண்டு வயது ஆகும் வரையில், எங்களின் குடும்பம் டெல்லியில்தான் இருந்ததாய் அம்மா சொன்னார்.
நாங்கள் டெல்லியில் இருக்கும் பொழுதே எனது அப்பா இறந்துவிட்டார், அதன்பின் சொந்த ஊராகிய சென்னைக்கு திரும்பிய எங்களுக்கு அன்னையே தந்தையாகிப் போனார்.
அப்போதைக்கு அப்பா சேர்த்து வைத்திருந்த சேமிப்பு தொகையாலும், சிலபல பரம்பரைச் சொத்துக்களாலும், மற்ற சொந்த பந்தங்களின் உதவியாலும், நானும் என் அண்ணனும் பட்ட படிப்பை எந்த பிரச்சனையும் இன்றி படித்து முடித்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்தோம். கடமை முடிந்ததாலேயோ என்னவோ, கடந்த சில மாதங்கள் முன்பு எங்கள் அன்னையும் எங்களை விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்து விட்டார்.
அம்மாவின் இழப்பிலிருந்து என்னை மீட்டு வந்தது என் அண்ணன் விஷ்வாதான். அவன் எனக்கு அண்ணன் மட்டுமல்ல என் மனதை நன்றாக புரிந்து வைத்திருக்கும் ஒரு நண்பனும் கூட. அவசியமான நேரத்தில் அதிகாரம் செய்வானே அன்றி பெரும்பாலான நேரங்களில் அனுசரணையான அன்னையைப் போலவே நடந்து கொள்வான்.
எங்களுக்கு ஓரளவு சேமிப்பும், சென்னையின் மத்திய பகுதியில் பெரிய வீடும் இருப்பதால், நெருங்கிய சொந்தங்களில் முறைப் பெண்கள் வைத்திருக்கும் அனைவரும், திருமண வயதில் நிற்கும் விஷ்வாவை திருமணத்திற்காக நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் என் அண்ணனோ எனக்கான கடமைகளை முடித்த பிறகு தான் தன் வாழ்க்கையை துவங்குவதென்ற முடிவில் மிகவும் உறுதியாய் நிற்கின்றான்.
இந்த வருடம் முடிவதற்குள் எனக்கு திருமணமும் இன்னபிற செய் முறைகள் அனைத்தையும் செய்வித்துவிட்டு, அடுத்த வருடம் தனது திருமணத்தை நிகழ்த்திக் கொள்ளலாம் என்ற யோசனையில் அவன் இருப்பது எனக்கு ஓரளவு நன்றாகவே புரிகின்றது. அதற்காக மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை சென்ற மாதம் முதல் துவங்கி விட்டான்.
சோம்பல் நிறைந்த இடம் சாத்தானின் தொழிற்கூடம் என்பது என் தாய் எங்களுக்கு எப்போதும் சொல்லும் அறிவுரை. அந்த உள்ளுணர்வின் தாக்கத்தால் படித்த படிப்பிற்கு கிடைத்த வேலையை பார்த்துக்கொண்டு பொழுதை நகர்த்துகிறேன் நான்.
தினமும் காலை இருவரும் எங்களுடைய இருசக்கர வாகனத்தில் அலுவலகம் கிளம்பி விடுவோம். மாலையில் நான் வந்து சேர்ந்த சில நிமிடங்களில் அண்ணனும் வீட்டிற்கு வந்து விடுவான். வீட்டு வேலைகளை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொள்வோம். அண்ணனுடைய சம்பளப் பணம் சேமிப்பாகவும், என்னுடைய சம்பளப் பணம் குடும்ப செலவுகளுக்கும், இன்னபிற வெளிச் செலவுகளுக்கும் என திட்டம் போட்டு நகர்கிறது எங்கள் வாழ்க்கை.
இப்பொழுது எனது அண்ணன் விஷ்வாவும், என் அலுவலகமும் மட்டுமே என் உலகம். அன்பான அண்ணன், அளவான சேமிப்பு, ஆர்ப்பாட்டமில்லாத அழகு என்று வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நிறைவான வாழ்க்கை வாழும் எனக்கு, வெளியில் சொல்ல முடியாதபடி ஒரு சாபம் இருக்கின்றது….
அந்த சாபம் என்னவென்றால், என் கனவில் வரும் அத்தனையும் நிஜத்திலும் நடக்கும்….
