நிலா – 2
என் கனவில் வரும் அத்தனையும் நிஜத்திலும் நடக்கும்….
வரமென்று வரவேற்க வேண்டிய ஒன்று, எப்படி சாபமாகும் என்கிறீர்களா? எனக்கு பத்து வயது இருக்கும் பொழுது, எங்களின் பக்கத்து வீட்டில் வசித்த அத்தைக்கு குழந்தை பிறந்தது. அக்கம் பக்கத்தினர் எனும் நட்பு ரீதியில் குழந்தைக்கான அத்தியாவசிய பொருட்களோடு, அதைப் பார்க்க நானும் என் அம்மாவும் அவர்கள் வீட்டிற்கு சென்றோம்.
பால் வண்ணத்தில் சின்னஞ் சிறு குழந்தை ஒன்று, பனி படர்ந்த ரோஜாவைப் போன்று பளபளக்கும் ஈர இதழ்களுடன், பொக்கை வாய் திறந்து என்னைப் பார்த்து சிரிக்க, அதன் அழகில் சொக்கிப் போனேன் நான். அழுது அடம்பிடித்து அம்மாவிடம் சிறப்பு அனுமதி வாங்கி அன்று முழுவதும் அக்குழந்தையோடே களித்தேன்.
அன்று இரவு என் கனவில் அந்தக் குழந்தைக்கு காய்ச்சல் வருவதைப் போலவும், அந்த காய்ச்சலின் வீரியம் தாங்காத குழந்தை வலிப்பு கண்டு இறந்து விடுவது போல கனவு வந்தது. அந்த வயதில் எனக்கு மகப்பேறின் மகிழ்ச்சி பற்றியும், மரணத்தின் வலிகள் பற்றியும் எந்த விவரமும் தெரியாது.
பின் விளைவுகளைப் பற்றி சிறிதும் உணராமல் மறு நாள் அதிகாலையே நான் பக்கத்து வீட்டு அத்தையிடம் ஓடிப்போய், “அத்த… உங்க குட்டித்தம்பி உங்க கூட ரொம்ப நாள் இருக்காது, அது சீக்கிரமே சாவப்போவுது…” என்று வெள்ளந்தியாய் சொல்லிவிட்டு வந்து விட்டேன்.
அடுத்த இரண்டு வாரங்களில் நான் சொன்னது போலவே அந்த குழந்தை காய்ச்சல் கண்டு இறந்து விட்டது. ஆனால் அந்த மரணத்திற்கான பழியும் பாவமும் என்மீது திரும்பிவிட்டது!…
நான் சொன்ன வாய் முகூர்த்தம் பலித்துப் போனதாலேயே அந்த குழந்தை இறந்து போனதாகச் சொல்லி, பக்கத்து வீட்டு அத்தையின் உறவுக்காரர்கள் அத்தனை பேரும் எங்கள் வீட்டு வாசலில் ஒன்று கூடி சண்டையிட தொடங்கினார்கள். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கும் மேல், காதால் கேட்க முடியாத வார்த்தைகளால் நடு ரோட்டில் நின்று வசை பாடினார்கள்.
ஆண் துணை இல்லாத வீடு, சிறு குழந்தைகள் இருக்கும் வீடு என்றெல்லாம் அந்த அறிவாளிகளுக்கு ஏனோ அன்று தெரியாமல் போனது. அன்றைய சம்பவத்தில் என் காதில் வந்து விழுந்த வார்த்தைகளால், விவரம் தெரியாத சிறுமியாகிய எனக்குள் பல கேள்விகள் தோன்றின.
அன்று இரவு அச்சத்தில் நான் என் அன்னையை இறுக அணைத்துக் கொண்டு, “ஏம்மா… அவங்க சொல்லுற மாதிரி நான் பேயாம்மா? நான்தான் நம்ம அப்பாவ முழுங்கிட்டேன்னு அவங்க சொன்னாங்களே, என்னாலதான் நம்ம அப்பாவும் செத்து போனாரா? நான் எல்லாரோட உயிரையும் குடிக்கத் தான் பொறந்து இருக்கேனாம்மா?” என்று நான் கேட்ட கேள்விகளில் என் அம்மா மொத்தமாய் நொறுங்கிப் போனார்.
பதில் வார்த்தை சொல்ல முடியாமல், வாயை பொத்திக் கொண்டு விம்மி அழுத என் அம்மாவின் முகம் என்னை நொறுக்கிப் போட்டது. பகலில் அவர்கள் சொன்னதெல்லாம் உண்மைதான் என்று என் இள நெஞ்சில் பதிந்து விட்டது.
நான் அம்மாவின் முகம் பார்த்து, “அப்டின்னா என்ன காட்டுக்குள்ள, இல்ல வேற எங்கேயாவது கொண்டு போய் விட்டுருங்க அம்மா. இல்லன்னா என்னைக்காவது நான் உங்களையும் அண்ணனையும் முழிங்கிடுவேன்.”
அம்மா விம்மலோடு, “அப்டியெல்லாம் இல்ல நிலா… நீ.. நீ என் குல சாமி தந்த வரம்டி…” என்று என்னை தேற்ற முயன்றார்.
“இல்லம்மா, நான் சாமி தந்த பாப்பா இல்ல. அந்த அத்தை சொன்ன மாதிரி பேய், என்னாலதான் அத்தையோட குட்டி தம்பி செத்துப் போச்சு.”
“இல்லடா நிலா… அது உன்னோட தப்பு இல்லடி கண்ணு, அது சாமியோட தப்பு. அந்த குட்டித் தம்பி உண்மையிலேயே உடம்பு சரி இல்லாம தான் செத்துப்போச்சு…”
“அப்புறம் ஏம்மா எனக்கு குட்டி தம்பி சாவும்னு முன்னாலேயே கனவுல வந்தது?… அப்போ வேற யாராவது என் கனவுல வந்தா அவங்களும் செத்துப் போயிடுவாங்களாம்மா? அப்பாவும் அப்டித்தான் செத்தாராம்மா? என் கனவுல நீங்க, அண்ணன் வந்தா நீங்களும் செத்து போயிடுவீங்களாம்மா? நீங்க இல்லனா என்ன யாரு பாத்துப்பா? சினிமால வந்த மாதிரி என்ன பேய்னு சொல்லி இந்த ஊரவிட்டே அடிச்சி விரட்டிடுவாங்களா அம்மா? எனக்கு ரொம்ப பயமா இருக்குதுமா…”
அதற்கு மேல் தாங்க மாட்டாமல் உடைந்து நொறுங்கிய என் அம்மா, “ஐயோ… நீ பேயெல்லாம் இல்லடி… என் தங்கம், என் தேவதை, என் உசுருடி நீ…”
“அப்புறம் ஏன்மா பக்கத்து வீட்டு அத்தை என்ன பேய்னு சொல்லி திட்டுனாங்க?”
“அவங்களோட குட்டித்தம்பிய சாமி திரும்ப வாங்கிடுச்சு, அந்த வருத்தத்தில் என்ன சொல்றதுன்னு தெரியாம உன்னப்பத்தி தப்பு தப்பா சொல்லிட்டாங்க. நீ அதை எல்லாம் மனசுல வச்சுக்காதடி தங்கம்…”
“அப்புறம் நான் என்ன செய்யனும்?”
“பேசாம இதுதான் கடவுள் உனக்கு கொடுத்த வாழ்க்கைனு நெனச்சுக்கோ. இனிமே நீ எந்தக் கனவையும் யாருக்கும் சொல்ல மாட்டேன்னு அம்மாவுக்கு சத்தியம் பண்ணுடா தங்கம்…” என்று நிலாவிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார்.
தந்தை இல்லாத வீடு என்று யாராவது மூக்கு காது வைத்து பேசக்கூடும், அது பெண் பிள்ளையாகிய என் எதிர் காலத்தையே பாதித்து விடும் என்று நினைத்தே என் அம்மா அன்று அப்படி ஒரு முடிவிற்கு வந்து இருந்தார்.
சிறுமியாகிய நான் ஏற்கனவே வாசலில் நின்று சத்தம் போடுபவர்களைக் கண்டு மிரண்டு இருந்ததாலும், என் அம்மாவின் கலங்கிய விழிகளை காணப் பொறுக்காததாலும் ‘நீ அழுவாதம்மா… நான் இனிமே என்னோட கனவ பத்தி எப்பவும் யாருகிட்டவும் சொல்ல மாட்டேன்ம்மா!…’ என்று என் அன்னையிடம் அன்று சத்தியம் செய்து கொடுத்து விட்டேன்.
நாட்கள் நகர்ந்தது… கனவுகள் பலித்தது… நான் உண்மைகள் தெரிந்தும் ஊமையாகிப் போனேன்…
நிகழப்போவது முன்கூட்டியே தெரிந்திருந்தும் சில துஷ்ட சம்பவங்களை தவிர்க்க முடியாத நிலையில் என்னை நிற்க வைத்த ஒன்றை, என்னால் வரமென்று கருத இயலுமா? எனில் எனக்கு இறைவன் அளித்தது சாபம் தானே? இவ்வளவு பெரிய புவியினில் இத்தனை மனிதர்கள் வாழும் தேசத்தில் எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு சாபம்?
எனக்கு வரும் கனவுகள் உங்கள் கனவுகளை விட விசித்திரமானவை. அவை தினமும் வருவது கிடையாது… இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில் மட்டுமே வரும்.
என் கனவுகள் மற்றவர்களைப் போல காலையில் துயில் எழுந்ததும் மறந்து போகும் கனவுகளாகவோ, ஒன்றுக் கொன்று தொடர்பில்லாத சம்பவங்களாகவோ தோன்றிடாது. ஒரு முழு நீள படம் பார்த்தது போல, நினைவிலேயே இருக்கும்படியாக, அக்கனவுகள் தெள்ளத் தெளிவான தொடர்கதையாய் தோன்றிடும்.
கடந்த இருபது வருடங்களாய் என்னைச் சுற்றி வாழும் மனிதர்களைப் பற்றி நிறைய கனவுகள் வந்து சென்றிருக்கின்றது. எனக்கு மிக மிக நெருங்கிய உறவுகளுக்கு மட்டும், அதுவும் நல்ல கனவுகளாய் வந்தால் மட்டுமே நான் சம்பந்தப்பட்டவர்களுக்கு சூசகமாய் தெரிவிப்பேன்.
அதுவும் என் கனவு பலிக்கும் என்பதை சொல்லாமல், ‘இன்று அதிகாலையில் வந்த கனவு, நல்ல செய்திக்காக காத்திருங்கள்…’ என்று மட்டும் சுருக்கமாக தெரிவித்து விட்டு நகர்ந்து விடுவேன்.
அப்படிப்பட்ட நல்ல கனவுகள் வருடத்திற்கு ஒரு முறையோ, இரு முறையோ வருவதால் பெரும்பாலும் எவரும் இதுவரை என் மீதும் என் கனவின் மீதும் கவனம் செலுத்தவில்லை.
தீய கனவுகள் வந்தால், அக்கனவில் சம்பந்தப்பட்டவர்களின் பெயரில் கோவிலில் ஒரு அர்ச்சனை செய்துவிட்டு அவர்களுக்காக அனுதாபப்படுவதோடு என் எல்லை முடிந்துவிடும். கொடும் கனவுகளை தாங்கும் வல்லமையை, காலம் எனக்குள் எப்போதோ புகுத்திவிட்டது. நானும் இந்த சூழ்நிலையில் வாழ பழகி விட்டேன்….
‘ஆனால் இன்றைய கனவு?! உண்மையிலேயே அது சூர்யாவா?! அவன் மீண்டும் என் வாழ்வில் வரப் போகின்றானா?’ என்று தான் கண்ட கனவு மீண்டும் மீண்டும் அவளுக்கு ஞாபகம் வர, நிலாவின் சப்த நாடியும் அடங்கிப் போனது. அருகில் இருந்த தலையணையை ஆதரவாய் இறுக்கி அணைத்தபடி, காக்கும் கடவுள் அந்த கந்தனின் சஷ்டி கவசத்தினை பாடிக் கொண்டே உறங்கிப் போனாள் நிலா.
“அம்மாடி நிலா…..” என்று விஷ்வா அழைக்கும் குரல் கேட்டு கண்விழித்தவள், வெளியே விரவி இருந்த வெளிச்சத்தைப் பார்த்ததும், அரக்கப் பரக்க எழுந்து தனது அறைக் கதவைத் திறந்தாள்.
“எழுந்திரிக்கலையாடா? மணி ஏழாகப் போகுது பாரு…. இந்தா நிலா காஃபி… குடிச்சுட்டு சீக்கிரமா குளிச்சுட்டு வாடா, நான் தக்காளி சாதம் செஞ்சு வைக்கிறேன்” என்றபடி அவன் அடுப்பங்கரைக்குள் சென்று விட்டான் விஷ்வா.
அவர்களின் அம்மா கற்றுத் தந்த நல்ல விஷயங்களில் ஒன்று ஆண் பெண் இருவரையும் சமமாக பாவித்து வளர்த்தது. ஆதலாலேயே நிலாவின் அண்ணன் விஷ்வாவும் சிறு வயதிலிருந்து வீட்டு வேலைகளை நன்கு செய்யப் பழகி இருந்தான்.
பொதுவாக நான் அதிகாலை ஆறு மணிக்கே எழுந்து, நல்ல பிள்ளையாய் அண்ணனோடு சேர்ந்து பாதி சமையல் வேலைகளை செய்து தருபவள் தான். ஆனால் இன்று வந்த கனவின் பரிசாய் சரியாக உறங்காது உளன்று, நேரம் தெரியாமல் ஏழு மணி வரை உறங்கி விட்டேன். இனி நான் அதைப் பற்றி யோசித்து எந்த பயனும் இல்லை, அண்ணனது உத்தரவிற்கு இணங்கி அடுத்த பத்து நிமிடத்திலேயே கடகடவென தயாராகி டைனிங் டேபிளுக்கு வந்து நின்றேன்.
என்னுடைய சிவந்த விழிகளை பார்த்தே விஷயத்தை ஓரளவு யூகித்திருந்த விஷ்வா, “என்னம்மா மறுபடியும் ஏதாவது கெட்ட கனவு வந்துச்சா?” என்றான்.
பதில் பேசாது வெறுமனே ‘ஆம்…’ என்று தலையை ஆட்டினேன் நான்.
விஷ்வா, “சரி நீ கவலப்படாதடா… வழக்கம் போல ஆபீசுக்கு போக முன்னால நீ கோவிலுக்கு போய் நல்ல சாமி கும்பிடு, எல்லாம் சரியா போயிடும்…” என்றான்.
நிலா குரலில் வலுவில்லாமல், “சரிண்ணா….” என்றாள்.
விஷ்வாவிற்கு சந்தேகம் வராதபடி பேருக்கு எதையோ கொறித்து விட்டு, அண்ணன் தந்த லஞ்ச் பேக்குடன் ஆபீஸுக்கு கிளம்பிவிட்டாள்.
இல்லாத தெய்வங்களை எல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு இரண்டு தெரு தள்ளி இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்றாள் நிலா. எப்போதும் சுவாமியின் பெயருக்கே அர்ச்சனை செய்பவள் இன்று பய மிகுதியால் தன் பெயருக்கு தானே அர்ச்சனை செய்து கொண்டாள். தன்னை அவனிடமிருந்து எப்படியாவது காப்பாற்றும்படி ஒரு நீண்ட கோரிக்கை பத்திரத்தை சந்நிதி சந்நிதியாய் நின்று வாசித்து விட்டு, மனம் ஆறியதும் அலுவலகம் கிளம்பிச் சென்றாள்.
எல்லாம் சரியாக போய்க்கொண்டு இருக்கிறது எனும் தன்னிலை சமாதானத்தோடு பணியில் மூழ்கி இருந்தவளுக்கு பதினோரு மணியளவில் அண்ணனிடம் இருந்து அழைப்பு வந்தது.
விஷ்வா, “நிலா….”
“சொல்லுண்ணா…..”
“இன்னிக்கி மதியத்துக்கு மேலே உன்னால லீவு எடுக்க முடியுமா நிலா?”
“எதுக்குண்ணா?”
“ஒண்ணுமில்லம்மா… நம்ம சூர்யா ஃபாரின்ல இருந்து வந்துட்டானாம், நம்மள பாக்குறதுக்கு ஈவ்னிங் நம்ம வீட்டுக்கு வர்றேன்னு சொன்னான்.”
“…. “
“நிலா……”
“……….”
“ஹலோ…. நிலா…. நிலா….”
