நிலா – 3

      சூர்யா…. என் பதின்ம வயதில் எனக்கு பழக்கமானவன். என் அண்ணனின் ஆருயிர் தோழன். என் அம்மாவிற்கும் அண்ணனிற்கும் பிறகு என் மேல் அதீத அன்பு காட்டுபவன். நாங்கள் மூவருமே சிறு வயது முதலே ஓரே பள்ளிதான். பள்ளியில் பயிலும் காலங்களில் என் அண்ணனைப் பார்க்க அடிக்கடி எங்கள் வீட்டிற்கு சூர்யா வருவான். அப்போதெல்லாம் எனக்கு மட்டும் ஸ்பெஷலாக ஒரு சின்ன சாக்லேட் வாங்கிக் கொண்டுதான் வருவான். 

 

      நான் ஒரே ஒருமுறை எனக்கு சிக்கன் பிரியாணி பிடிக்கும் என்று சொல்லிய காரணத்தால், தன் வீட்டில் எப்பொழுது பிரியாணி செய்தாலும் எனக்கு மட்டும் தனியாக எடுத்து கொண்டு வந்து தருவான். ஆரம்பத்தில் அதை எல்லாம் சாதாரண அக்கறை, அண்ணனின் மீது இருக்கும் நட்பின் ஆழத்தால் நமக்குக் கிடைக்கும் கவனிப்பு என்று நினைத்த நான், பருவ வயதை அடைந்த பிறகு தடம் புரளத் தொடங்கினேன்.

 

      என் வயதிற்கு இது காதலா கானலா என்றெல்லாம் பாகுபாடு பார்க்கத் தெரியவில்லை. ஆனால் அவனைக் கண்டால் அத்தனையையும் மறந்து விடுகின்றேன் என்பது மட்டும் நன்றாக தெரிகின்றது. பொதுவாகவே அறிவு வேண்டாம் என்று சொல்வதைத்தான் மனம் வேண்டும் என்று வீம்பு செய்யும் இல்லையா… என் மனமும் அவன் விஷயத்தில் அவ்வழியே.

 

     சூர்யா தன் நடை, உடை, பாவனை என அனைத்திற்கும் எந்த ஒரு பெண் ஏங்கும் படியான வரம் பெற்று வந்தவன். அவன் வார்த்தைகளை உச்சரிக்கும் விதமே மிகமிக ஸ்டைலாக இருக்கும், பள்ளியில் அவன் கை வைக்காத போட்டிகளே கிடையாது, ஆதலாலேயே அவன் ஆசிரியர்கள் அனைவருக்கும் செல்லப் பிள்ளை.  அதேபோல் நண்பர்கள் வட்டத்தில் மிகவும் குறும்புக்காரனும் அவனே… 

 

      வகுப்பு நேரத்தில் முன் இருக்கை நண்பர்களின் முதுகினில் விரலால் கோலமிட்டு விளையாடுவான். சொல்லாமல் கொள்ளாமல் மற்றவர்களின் உணவுப் பைகளை களவாண்டு செல்வான். வகுப்புத் தேர்வுகளில் நண்பர்கள் பிட் அடித்து எழுதுவதற்கு உதவி செய்வான். ஒரு பெண் எழுதுவது போல மொட்டை கடுதாசி எழுதி, அதை நண்பர்களின் புத்தகத்தினுள் மறைத்து வைத்து  விளையாடுவான். 

 

       அப்படி ஒரு முறை அவன் என் அண்ணனுக்கும் காதல் கடிதம் எழுதி வைத்துவிட்டான். அந்தக்கடிதம் எவருக்கும் தெரியாமல் இப்பொழுது வரை என் பொக்கிஷ பெட்டியினுள் பத்திரமாய் உறங்கிக் கொண்டிருக்கின்றது.

 

      அவன் ஆடை அணிவதிலும், தலை வாரிக் கொள்வதிலும் எப்போதும் ஒரு நேர்த்தி இருக்கும், அந்த நேர்த்தியினை விரும்பியே பல பெண்கள் அவனை சுற்றி வருவதுண்டு. இருந்தும் அவன் எவளையும் திரும்பிக்கூட பார்ப்பதே கிடையாது. சூர்யாவை நெருங்கிப் பழகும் உரிமை, நிலா ஒருத்தியைத் தவிர வேறு எந்த பெண்ணிற்கும் கிடையாது என்பது அவனைத் தெரிந்தவர்கள் அத்தனை பேரும் அறிந்த செய்தி. 

 

      அந்தப் பெருமை ஒன்றிற்காகவே அவன் செய்யும் அத்தனை தகிடுதத்த வேலைகளுக்கும் நானும் ஒத்துழைப்பேன். பள்ளியில் கேட்டதாகச் சொல்லி அவன் தன் அம்மாவை ஏமாற்றி பணம் வாங்குவதற்கு அவன் பக்கத்து சாட்சியாவேன் நான். நண்பர்களின் பொருட்களை மறைத்து வைத்து போக்கு காட்டுவதற்கு புகலிடமாவேன். இதே போல பல நேரங்களில் சிறுமி என்ற காரணத்தாலேயே என்னை பகடைக் காயாக்கி, மற்றவர்களிடம் தன் காரியங்களை சாதித்து கொள்வான் அந்தக் கள்வன், தெரிந்தே அவனுக்கு பகடையாவேன் நான்…

     

     அத்தனை தூரம் நான் செயல்படக் காரணம், அவன் எனக்கு அளிக்கும் முன்னுரிமை. விளையாட்டு போட்டிகள் நிகழும் நாட்களில், மாணவிகள் கூட்டத்தில் எங்கோ ஓர் மூலையில் இருக்கும் என்னை பார்த்தவுடன் புருவம் உயர்த்தி, கையசைத்து அவன் சிரிக்கும் அழகு இருக்கின்றதே. அடடா!… அதைக் கண்டதும் என் உள்ளம் எத்தனை தூரம் பசலை கொள்ளும் என்பதை நான் மட்டுமே அறிவேன். 

 

     ‘அனைவருக்கும் இருப்பதைப் போன்ற அழகான விழிகள் தானடா உனக்கும்? அதைக்கொண்டு என் உயிர் அறுக்கும் வைக்கும் வித்தையை எங்கு போய் கற்று வந்தாயடா?…’ என்று அவன் செவிகளில் எட்டும்படியாக அப்பொழுதே கத்தி சொல்ல வேண்டும் போல உள்நாக்கு துடிக்கும். பெண் என்ற நாணமும், இருக்கும் இடமும் என் உணர்வுகளை கட்டிப் போட்டுவிடும்.

 

     விடுமுறை நாட்களில் அவர்களின் ஆஸ்தான அரட்டை அரங்கம் எங்கள் வீட்டு மாடிதான். என் அண்ணனும் அவனும் காரணமே இல்லாமல் விதண்டாவாதம் செய்யும் பொழுது, நியாயம் கேட்பதற்கு என்னிடம்தான் வருவார்கள் இருவரும். 

 

     அப்போது அவனின் கம்பீரமான குரலை குறும்பு தவழும்படி மென்மையாக்கி, என் காதருகில் வந்து ரகசியமாய் பேசும் நொடிதனில், எனக்கு இந்த உலகே மாய லோகமாய் மாறி விட்டதாய் தோன்றிடும். அந்த மயக்கத்திலேயே என் தீர்ப்பு அவன் பக்கம் சாய்ந்து விடும்.

 

    பள்ளி மைதானத்து மரத்தடியில், அவன் தனது நண்பர்களோடு பொய்ச் சண்டை போடும் நேரம், தன் வலது கையினை அதிகமாய் ஆட்டி பேசிடுவான். என்னிடம் எவரேனும் வம்பு செய்தால் அவர்களுக்கான பனிஷ்மெண்டு பகுதியும் அவ்விடம்தான்.

 

     அப்போதெல்லாம் அவன் வீராவேசத்தோடு வாதிட்டுக் கொண்டிருக்க நானோ, ‘அவன் வலது கையில் அசைந்தாடும் அந்த வெள்ளை நிற காப்பிற்கு பதிலாக, நான் அங்கே இருந்திருக்கக் கூடாதா? காலம் முழுவதும் அவன் கைகளிலேயே அடைக்கலமாய் இருந்திருக்கலாமே!!!…’ என்று ஏங்கிக் கொண்டிருப்பேன். 

 

      இப்படி இலை மறை காயாக பல வருடங்களுக்கு பொத்தி பொத்தி வளர்த்த என் காதலை, அவன் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்கின்ற செய்தி கேட்டு உடைத்து வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை நேர்ந்தது. என் மனதிலிருந்த காதலை எல்லாம் கவிதை வடிவில் எழுதி அவன் கையில் கொடுத்தேன்.

 

புதுப் பள்ளியின் முதல்நாள்;

புரியாத வார்த்தை பேசி, 

என்னை எவனோ சீண்டிட,

கை முறுக்கி நீ என்முன் நின்றதும்,

உனை காதல் கொண்டேனடா….

 

ரெட்டை ஜடை ரிப்பன் கட்டி ,

குட்டைப் பாவடையில் நான்வர,

நக்கலாய் சிரித்தபடி,

நகம் கடிக்கும் உனைக்கண்டு,

உனை காதல் கொண்டேனடா….

 

கொஞ்சும் சங்கத் தமிழ் பேசி,

பேச்சுப் போட்டியில் வென்றதும்,

கைகுலுக்கி நீ வாழ்த்த,

என் கை தீண்டிய நொடியதில்,

உனை காதல் கொண்டேனடா…..

 

ஓட்டப் பந்தயத்தில் ஓடிய நீ,

ஓரடிக்கு முன் வீழ்ந்துவிட்டு,

தோல்வி கவலை துளியின்றி,

நாக்கைத் துருத்தி சிரித்ததில்,

உனை காதல் கொண்டேனடா….

 

கணவனாய் எனக்கு நீ வரவே,

கணபதிக்கு வேண்டி வைத்து,

உள்ளங்கையில் உன் பேரெழுதி, 

உலகறியாது பொத்தி வைத்து,

உனை காதல் கொண்டேனடா….

 

எரியும் தணலென சூரியனே,

என்னருகில் நீ வந்தாலே,

நின் காதலு ரைக்கவென கருதி,

கோடி முறை கனா கண்டு ஏங்கி,

உனை காதல் கொண்டேனடா….

 

நீ சொல்லாததை நான் சொல்கிறேன்,

உனை காதல் கொண்டேனடா….

 

     பொருளில்லா கவிதை என்றாலும் என்னவனுக்காக நான் முதல் முதலாக எழுதியிருந்த கவிதை அது. அதைப் பார்த்ததும் அவனுக்கு என் மனம் புரியும் என்று நினைத்து ஆசையில் நான் இருக்க, அவனோ கொஞ்சம் கொஞ்சமாய் இறுக்கமானான்.

 

      சூர்யா, “என்னதிது நிலா?….” என்று கேட்ட கோபமான வார்த்தைகளிலேயே நான் கொண்டிருந்த நம்பிக்கை எல்லாம் தூள்தூளாகிப் போனது.

 

     இல்லாத உயிரினை இழுத்துப் பிடித்து, திக்கி திணறிய குரலில், “நான் உன்ன விரும்புறேன் சூர்யா….” என்றேன். என் விழிகளில் கோர்த்திருந்த கண்ணீரைக் கண்டதும், அவன் முகத்தில் இருந்த இறுக்கம் சற்று விலகியது.

 

      அவன் மிக மிகப் பொறுமையாய், “இங்க பாரு நிலா, நான் உன் அண்ணனோட பிரண்ட். உன் அண்ணன் உனக்கு எப்படியோ, அதே மாதிரி தான் நானும் உனக்குனு இத்தன நாளா நான் நெனச்சுகிட்டு இருந்தேன். அந்த எண்ணத்துதலான் நான் அவன மாதிரியே உன்கிட்ட உரிமை எடுத்துகிட்டேன்…”

 

     “…….. “

 

     “இதுவரைக்கும் உன் மேல எனக்கு விஷ்வாவோட தங்கச்சிங்கிறதத் தாண்டி வேற எந்த தனிப்பட்ட அபிப்பிராயமும் தோணவே இல்ல. அப்பா இல்லாம உங்கம்மா தனியாளா உன்னையும் உன் அண்ணனையும் வளர்க்கிறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு என்ன விட உனக்கு நல்லா தெரியும். அவங்க என் மேல காட்டின பாசத்துக்கு பதில் உபகாரமாத்தான் நானும் உன் மேல பாசம் காட்டினேன்.”

 

       ‘எனில் நீ காட்டிய பாசமும், உரிமையும் மற்றவர்களுக்காக செய்தது தானா? என் மேல் உனக்கு எந்த வித ஈடுபாடும் கிடையாதா?….’ என்று என் உள் மனம் குமுறி அழும் சத்தம், என் அருகிலேயே நிற்கும் அவனது செவிகளுக்கு கேட்டிருக்கவில்லை….

 

      “தயவு செஞ்சு இன்னொரு முறை, இதே நினைப்போட என் முன்னாடி வந்து நிக்காத நிலா… அது நம்ம ரெண்டு பேரோட உறவுக்குமே அசிங்கம்…” என்றவன் என்னைத் திரும்பியும் பாராமல் சென்றுவிட்டான்.

 

      அந்த ஒரு நொடிக்காக நான் என்னை பல வருடங்களாய் தயார் செய்து கொண்ட உண்மையை, முதுகை காட்டியபடி நடக்கும் அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இனி அதை விளக்கிச் சொல்லி, என் மனதை அவனுக்கு புரிய வைக்கும் மனோ திடமும் எனக்கு இல்லை. 

 

      ஆனால், ‘அவனுக்கு என் மேல் உண்மையான அன்பு இல்லை, மற்றவர்களுக்காக மட்டுமே அன்பு காட்டி இருக்கின்றான்…’ என்பது மட்டும் என் மனதில் பசுமரத்தாணியாய் பதிந்துவிட்டது. அவரவர் பாதையில் இருவரும் பிரிந்துவிட்டோம்….

 

     என் அனுமதியின்றி நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது. அவன் வெளிநாட்டு படிப்பினை வெற்றிகரமாக முடித்துவிட்டு அங்கேயே ஒரு வேலையிலும் சேர்ந்தான். அடுத்த சில நாட்களிலேயே தன் குடும்பத்தையும் தான் பணிபுரியும் நாட்டிற்கே கொண்டு சென்று விட்டான். அம்மா இறந்ததும், இங்கே அண்ணனும் நானும் எங்களுக்கென ஒரு வாழ்க்கை முறையினை உருவாக்கி வாழப் பழகிக் கொண்டோம். 

 

      எத்தனை வருடங்கள் கடந்தாலும், அவனால் உண்டாகிய காதலின் வீரியம் மட்டும் என்னுள் மாறவே இல்லை, வேறு எவரும் நுழைந்திடாதபடி என் இதயம் இறுக மூடிக்கொண்டது. அவனது நினைவு வரும் போதெல்லாம், ‘அவனுக்கும் எனக்கும் இடையே எதுவுமில்லை’ என்று நானே எனக்கு பலமுறை கூறிக்கொண்டேன். 

 

நான் என்னதான் என் அறிவெனும் அஸ்திரம் கொண்டு கடிவாளம் கட்டி போட்டாலும், இந்த பாவப்பட்ட மனது என்னையும் மீறி அவனை எண்ணிக் கொண்டு நிற்பதை என்னால் தடுக்க இயலவில்லை. 

 

      அதனால் தானோ என்னவோ என் அண்ணன் பார்த்து வைத்த மாப்பிள்ளைகளின் பட்டியலை இப்பொழுது வரை என்னால் எடுத்துக்கூட பார்க்க முடியவில்லை. நான் வாய் திறந்து சொல்லாமலேயே என் மனம் புரிந்தது போல, என் அண்ணன் அடிக்கடி ‘யாரையாவது விரும்புகிறாயா நிலா?’ என்று அடிக்கடி வினவ ஆரம்பித்து விட்டான்.

 

     “சே… சே… அப்டியெல்லாம் எதுவுமில்ல அண்ணா… நீ யார கை காட்டினாலும் எனக்கு சம்மதம்தான், திடீர்னு கல்யாணம்னதும் மனசுக்குள்ள கொஞ்சம் பயம் அவ்ளோதான். நீ பார்த்து முடிவு பண்ணு அண்ணா, எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே…” என்றொரு வார்த்தையில் மாப்பிள்ளை பிரச்சனைக்கு முழுக்கு போட்டு விட்டேன். 

 

     என்னை அறிந்த என் அண்ணனிடம், இன்னும் எத்தனை நாளைக்கு இதே பொய்யைச் சொல்லி மழுப்ப இயலும் என்று எனக்குத் தெரியவில்லை, இருந்தும் இன்று வரை இதே யுத்தியைத்தான் நான் தொடர்கின்றேன்.

 

     ‘இது முட்டாள் தனம், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நான் ஒருத்தி இருப்பதே சூர்யாவிற்கு நினைவில் இருக்காது. அப்படியே நினைவு இருந்தாலும் அவன் இந்தியாவிற்குத் திரும்பி வரப் போவது இல்லை. அவன் இந்தியாவிற்கு திரும்பி வந்தாலும் அவனைப் பார்த்து என் காதலை உணர்த்திடும் வலிமையும் என் இதயத்தினுக்கு வரப்போவது கிடையாது. அப்படியே நான் என் மனதில் அடைந்து கிடக்கும் எனது தூய்மையான காதலை உணர்த்த முயன்றாலும் அதனால் எனக்கு கிடைக்கப்போவது அவமானம் மட்டுமே…’ என பலவித மாயத்திரைகளை எனக்கு நானே போட்டுக்கொண்டு, என் வாழ்நாட்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கொண்டிருந்தேன்.

 

     இந்நிலையில் தான் இந்த திடீர் கனவும், கூடவே அவன் வருகையின் அறிவிப்பு.

 

     ‘அன்று போனவன் இன்று எங்களைத்தேடி வரக் காரணம் என்ன?’ எனும் என் சிந்தனையை கலைக்கும் விதமாய் அண்ணன் மீண்டும் தொடர்பு கொண்டான்.

 

      எனக்கு அப்போது அண்ணனிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை, ஆனால் இம்முறையும் காலை அட்டர்ன் செய்யாமல் தவிர்த்தால் அண்ணன் நிச்சயமாக என் அலுவலகத்திற்கு கிளம்பி வந்து விடுவான் என்று மட்டும் தெளிவாக தெரிந்தது.

 

     நிலா முடிந்த வரையில் தன் குரலை சரி செய்துக்கொண்டு, “ஹலோ….” என்றாள்.

 

      விஷ்வா, “என்னம்மா கால் கட் ஆயிடுச்சு, எதும் சிக்னல் ப்ராபளமா?”

 

      “ஆங்…. ஆமாண்ணா….”

 

      “சரி, நீ மதியத்துக்கு மேல வீட்டுக்கு வர்றியாம்மா, லைட்டா ஒரு ட்ரீட் ரெடி பண்ணுவோம்.”

 

      “ட்ரீட்டா? எதுக்குண்ணா?”

 

      “சூர்யாவுக்கு கல்யாணமாம்டா…”

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
250 40 0
இராவணின் வீணையவள்
47 0 0
ஆரெழில் தூரிகை
310 15 1
வேண்டினேன் நானுன்னை
542 6 0
நீ எந்தன் நிஜமா?
379 8 1
என்துணை நீயல்லவா?
464 12 0
கற்றது காதல்
220 1 0
நிழலென தொடர்கிறேன்
214 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page