நிலா – 6

      பேருந்து ஊட்டியை அடைந்ததும், இதுவரை காணாத ஒரு உலகம் என் கண் முன்னால் விரிந்து கிடந்தது. சீராய் இல்லாமல் ஏற்ற இறக்கங்களோடு இருக்கும் இடத்தில், அடுக்கடுக்காய் வண்ண வீடுகள். முப்பொழுதும் வெளிநாட்டவர், வடநாட்டவர், தமிழ் நாட்டவர் என்று அனைவரும் புழங்கக்கூடிய வித்தியாசமான ஊர் அது.

 

      எங்களின் பேருந்து நேராக சென்று நின்ற இடம் ஊட்டியின் பெருமைக்கு சொந்தமான ரோஸ் கார்டன். வெளியில் லேசான தூறல் தூவவும் நான் என்னவன் தந்த லெதர் ஜாக்கெட்டினை எடுத்து அணிந்து கொண்டேன். அதில் நான் சோளக் கொல்லை பொம்மை போல தோன்றினாலும் நான் இந்த வாய்ப்பை விடுவதாயில்லை. 

 

     அடிக்கும் குளிருக்கு அந்த உடை தந்த கதகதப்பு, அவனே என்னை அணைத்திருப்பதுபோல் கிறக்கத்தை தந்தது. ஆடை என் உடலோடு உரசும் ஒவ்வொரு நொடியும், என் உடலில் உறங்கிக் கிடந்த நரம்புகள் ஒவ்வொன்றும் உயிர் கொள்வதாய் உணர்ந்தேன் நான்.

 

      இது என்ன நிலை என்று விவரம் தெரியா பிள்ளையாகிய எனக்கு அப்போது விரிவாக புரியவில்லை. ஆனால் அந்த கதகதப்பை இழக்க என் மனம் சிறிதும் ஒப்பாது என்று மட்டும் என் அறிவிற்கு தெளிவாகப் புரிந்தது. 

 

     இதற்குள் அனைவரும் வரிசையாக கார்டனுக்குள் இறங்க ஆரம்பித்து விட்டனர். கிட்டத்தட்ட பத்து ஏக்கர் பரப்பளவிற்கு ரோஜா செடிகள் மட்டுமே அங்கே பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு ரோஜாக்களும் இரண்டு கையால் அள்ளும் அளவிற்கு மிகப்பெரிதாய் பூத்திருந்தது.

      

      எவ்வளவு ரசித்தாலும் போதவில்லை என்பதை போலவே அவ்விடத்தில் அழகு கொட்டிக்கிடந்தது. எங்களுக்கு வசதியாய் ஆங்காங்கே போட்டோ எடுக்கும் ஆட்கள் உலவ நான், விஷ்வா, சூர்யா மூவரும் பூக்களின் பின்னணியில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அந்த புகைப்படம் இன்றுவரை என் பொக்கிஷப் பெட்டியினுள் புதையலாய்…

 

      அன்று மெல்லிய பனிப் புகையில், ரோஜா கூட்டங்களுக்கு நடுவில், என்னவனோடு நான் நடந்து கொண்டிருந்தேன். விஷ்வாவிற்கு எங்கள்  அளவிற்கு பொறுமையும் ரசனையும் இல்லாததால்  மற்ற நண்பர்களோடு  விளையாட ஆரம்பித்துவிட்டான். 

 

சூர்யா, “உனக்கு என்ன கலர் ரோஸ் ரொம்ப புடிக்கும் நிலா?”

 

“ஒயிட் கலர், உனக்கு?”

 

“எனக்கும் ஒயிட் ரோஸ்தான் புடிக்கும். யோசிச்சு பாரேன்,  இந்த இடத்துல செடி புல் எதுவும் இல்லாம தரை முழுக்க வெள்ளை கலர் ரோஜாவா இருந்தா எப்டி இருக்கும்?”

 

“சொர்க்கம் மாதிரி இருக்கும்” என்றேன் நான்…

 

ஏனோ என்னை ஆழமாக பார்த்தவன், “ஆமா, அப்டி ஒரு இடம் கிடைச்சா, நாம அங்கேயே இருந்துக்கனும்” என்றான் அவன்.

 

அவன் என்னையும் அவனையும் மட்டுமே குறிப்பிட்டதாய் பொருள் கொண்டேன் நான். அந்த நொடியே அவனது கற்பனைக்கு என் உள்ளம் உயிர் தர, வெள்ளையாய் ஓர் உலகம் என் மனமெங்கிலும் வியாபிக்க ஆரம்பித்தது. அந்த பிம்பம் எத்தனை யுகங்கள் ஆனாலும் என் மனதை விட்டு மறையாது. இப்போதுதான் எனக்கு ஒன்று தெளிவானது. அந்த நினைவுகளின் பாதிப்புதான் இன்று நிழலுருவில் என்னைப் பின் தொடர்கின்றது போலும்.

 

      ‘இனி அவை எனக்குச் சொந்தமில்லை எனும் உண்மையை, என் உள்ளத்திற்கு நான் விரைவில் உணர்த்தி விட வேண்டும். இல்லையெனில் கஷ்டம் எனக்குத்தான்…’ எனும் உறுதியோடு உறங்க தொடங்கினேன், என் உலகமே அவன் தான் என்பதை உணராமல்….

 

      பத்து மணி இருக்கையில் வீட்டு வாசலில் விஷ்வா பைக்கினை நிறுத்தும் சப்தம் கேட்டது. அவன்தான் என்பதை வாட்ஸ்அப் மெஸேஜ் மூலம் உறுதி செய்து விட்டு மீண்டும் என் சிந்தனை ஓட்டத்தை தொடர்ந்தேன். சூர்யாவின் விஷயத்தில் பல உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டிருந்த நான் எப்போது உறங்கினேனோ எனக்கே தெரியாது…

 

     நள்ளிரவில் நான், “அம்மா…..” என்று அலறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தேன். 

 

     என் கனவில் ஆழியெனும் அமைதித் தாய், மீண்டும் ஒருமுறை வெகுண்டெழுந்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி ஆளுமை செய்யும் சுனாமி பேரலை வந்து சென்றிருந்தது….

 

     கனவெங்கிலும் மரண ஓலங்கள், புவியே பிரளயப்பட்டது போன்ற கோலங்கள். ஆழி தன் அன்பான அலை நீர் வருடலை விடுத்து அரக்க குணத்தோடு வெகுண்டெழுந்து, தன் கோரப் பசி தீரக்க, அலையெனும் அகப்பை வாய்த் திறந்து கொண்டு பாய்ந்து வந்தாள். புவியின் சமநிலை மாற்றத்தால் சுனாமி அலை மேலெழ, நிமிட பொழுதுக்குள் சென்னையின் கால் பாகம் கடலால் சூழப்பட்டது. 

 

     கடற்கரையை ஒட்டியிருந்த மிகப்பெரிய கட்டடங்கள் எல்லாம் அலையின் வேகத்தில் இடிந்து நொறுங்கி நீரினுள் மறையத் தொடங்கின. அதனை அடுத்து அமைந்திருந்த பகுதிகளில் சிறுகச் சிறுக கட்டிடங்களும், கார்களும், தார் பூசிய சாலை பாதைகளும், பெரும் பாலங்களும் ஒன்றன் பின் ஒன்றாக கடல் அரக்கியின் வசம் சென்று கொண்டிருந்தது.

 

      வேர்த்து ஒழுகிய படி அரக்கப் பறக்க விழித்தெழுந்தேன் நான்….

 

      நேற்று கண்ட சூர்யாவின் கனவை விட இந்தக் கனவின் தாக்கம் என்னை மிகவும் பாதித்திருந்தது. எத்தனை உயிர்கள்? எப்படிக் காப்பது? நான் கனவில் வந்ததெனச் சொன்னால் யார் என்னை நம்புவார்கள்? முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுத்தாலுமே இப்படிப்பட்ட பேரழிவை எப்படி நம் மானுட சக்தியால் தடுக்க இயலும்? எனக்கு ஏன் இப்படி ஒரு கனவினை தோற்றுவித்தாய் இறைவா? இனி என்ன செய்வேன்? என்று தலையை இறுகப் பிடித்தபடி அமர்ந்து அழத் தொடங்கி விட்டேன்.

 

     என் அலறல் சத்தம் கேட்டு, பாதித் தூக்கத்திலிருந்து எழுந்து ஓடி வந்த விஷ்வா, “ஏய்… நிலா… என்ன ஆச்சு? கதவத்தெற…..” என்று என் அறை வாசலில் நின்று கத்தினான்.

 

      கைகள் நடுங்க கால்கள் துவள கதவைத் திறந்த என்னைக் கண்டு விஷ்வா, “என்னம்மா… என்ன ஆச்சு? ஏன் கத்தின? ஏன் இப்டி உக்காந்து அழுதுட்டு இருக்குற?” என்றான் ஆறுதலாய்.

 

      அவனது முகம் கண்டதும் நான் இன்னும் விம்மி அழ ஆரம்பித்திட, விஷ்வா ஆதரவாக என்னை தன் மார்பில் சாய்த்துக் கொண்டான்.

 

      “என்னம்மா… என்ன ஆச்சுன்னு சொல்லு? எதுவா இருந்தாலும் நான் இருக்கேன்டா….” என்று ஆதரவாக என் தலையை வருடி விட்டான்.

 

      நான் விம்மலோடு, “அண்ணா… என் கனவுல பெரிய சுனாமி வந்தது அண்ணா, சென்னையில பாதி ஊரே கடல்ல முங்கிடுச்சு. நெஜமாவே இங்க சுனாமி வரப் போகுது அண்ணா, எனக்கு ரொம்ப பயமா இருக்குது….” என்று அவனை பேச விடாமல் உளறிக் கொண்டே இருந்தேன்.

 

      என் பேச்சின் நடுவில் புகுந்தவன் “என்ன சொல்ற நிலா?….” என்றான் ஆச்சரியமாய்.

 

      “ஆமாண்ணா… இன்னிக்கி காலைல சரியா எட்டு மணிக்கு சுனாமி வரப்போகுது. அதுவும் போன தடவையை விட ரொம்ப பயங்கரமா இருக்க போகுது… நான் இப்போ என்ன செய்றது? எப்படி இத்தன லட்சம் மக்கள நாம காப்பாத்துறது? நியூஸ் சேனல்லையோ, ஃபேஸ்புக்கிலையோ என் கனவப் பத்தி சொன்னா ஏதாவது நல்லது நடக்குமா?”

 

      விஷ்வா, “திடீர்னு ஒருத்தர் இப்படி சொன்னா, முதல்ல யாரும் நம்ப மாட்டாங்கம்மா… அதுவும்போக இப்பவே மணி அஞ்சாக போகுது, இருக்கிற கொஞ்ச நேரத்தில அத்தனை பேரையும் இந்த ஊரவிட்டு எப்படிமா வெளியேத்த முடியும்? தப்பிக்க நினைச்சே ஒருத்தன ஒருத்தன் கொன்னுடுவாங்கடா..”

 

      அவன் சொன்ன பிறகுதான் நான் கடிகாரத்தை கவனித்தேன், நான் நினைத்தது போல் அது நள்ளிரவு அல்ல, அதிகாலை ஐந்து மணி.

 

     இருந்தும் மன ஆற்றாமையோடு நான் விஷ்வாவிடம், “ஆனா சொல்லாம விட்டுட்டா மொத்தமா செத்துப் போயிடுவாங்களே அண்ணா… இப்போ இருந்து முயற்சி செஞ்சாலும் ஏதோ கொஞ்சம் பேரையாவது நாம காப்பாத்தலாமே. இதுக்கு முன்னால ஒருத்தர் ரெண்டு பேருக்கு ஆபத்து வந்துச்சு, ஆனா இப்போ லட்ச கணக்கான மக்களுக்கு ஆபத்து வந்திருக்கு. எனக்கு உண்மை தெரிஞ்ச பிறகும், நான் என்னால முடிஞ்சத செய்யாம தப்பிச்சு போகலாமா அண்ணா?…”

 

      விஷ்வா உறுதியான குரலில், “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்,  சுனாமி வர்றதுக்குள்ள நாம மூணு பேரும் ஒரு பாதுகாப்பான இடத்துக்கு கிளம்பிடலாம்டா. இப்போ கிளம்பினாத்தான் எட்டு மணிக்குள்ள இந்த ஊர விட்டு வெளியில் போக முடியும்.”

 

“அப்போ மத்தவங்க?”

 

        “…..” 

 

அவன் எதுவும் சொல்லாமல் மௌனம் காப்பது அவளுக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது. தன் அண்ணன் இவ்வளவு சுயநலமாக இருப்பான் என்று முதல் முறையாக தெரிந்த நிலா பேச்சிழந்து போனாள். 

 

      அவள் பார்வை போகும் பாதை புரிந்த விஷ்வா, “என்னம்மா இப்படி பாக்கற? நானும் மத்தவங்கள மாதிரியே சுயநலவாதியா இருக்கேன்னு யோசிக்கிறியா? நீ நினைக்கிறது உண்மைதான்மா… எனக்கு இருக்கிற ஒரே ஒரு உறவு நீ மட்டும் தான். நம்ம அம்மா சாகும்போது என்ன விட உன்ன நெனச்சு தான் ரொம்ப கவலை பட்டாங்க, உன்னோட கனவுகள பத்தி எனக்கு விளக்கமா எடுத்து சொன்னாங்க. எந்த ஒரு சூழ்நிலையிலும் உன்னோட கனவு பத்தின இரகசியம் வெளியில தெரிஞ்சிட கூடாதுன்னு என்கிட்ட சத்தியம் வாங்கி இருக்காங்க. அதனால உலகத்த காப்பாத்தி ஊருக்கு உத்தமனாகுறதவிட, ஒரு அண்ணனா என் தங்கச்சிய ஒரு பாதுகாப்பான இடத்துக்கு அழைச்சிட்டு போறது தான் எனக்கு முக்கியம். நாம ரெண்டு பேரும் இங்க இருந்து கிளம்பின அடுத்த நிமிஷம், நாம நமக்கு தெரிஞ்சவங்களுக்கு தகவல் சொல்லிக்கலாம். அப்பவும் அவங்க நம்புவாங்கனு என்னால உறுதி சொல்ல முடியாது, கெட் ரெடி..”

 

      நான், “என்னண்ணா நீ இப்டியெல்லாம் பேசுற? மீடியாவுக்கு போய் வரப்போற ஆபத்தை பத்தி சொன்னா மட்டும்தான் மக்களுக்கு தகவல் ரீச் ஆகும். அப்டி செஞ்சா மட்டும்தான் அட்லீஸ்ட் கொஞ்சபேரையாவது நம்மால தப்பிக்க வைக்க முடியும். இவ்வளவு பெரிய சிட்டில, வெறும் ரெண்டு போன வச்சுக்கிட்டு நாம எத்தனை பேருக்கு தகவல் கொடுக்க முடியும்?”

 

      “வேற வழி இல்லம்மா.. நீ சொல்ற மாதிரி நியூஸ் சேனலுக்கும், சோசியல் மீடியாவுக்கும் நாம தகவல் சொன்னா உன் கனவு பத்தின ரகசியம் உலகம் முழுக்க பரவ ஆரம்பிச்சிடும். அது உன்னோட எதிர்கால வாழ்க்கையவே பாதிச்சிடும். என்னால அம்மாவுக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்தை மீற முடியாது நிலா. 

 

நீ சொல்ற மாதிரி நியூஸ் சேனல்ல சுனாமி தகவல நாம சொல்லப்போய், அந்த செய்தி பார்த்ததும் மத்த சேனல்காரங்களும் நம்ம ரெண்டு பேரையும் தேடி கேமராவும் கையுமாக வந்தா என்ன ஆகும் தெரியுமா? அவங்க கையில நாம சிக்கிட்டா நம்மால சரியான நேரத்துக்கு இந்த ஊர விட்டு வெளியில போக முடியாம போயிடும்டா. நாம மத்தவங்கள காப்பாத்த நினைச்சு, அதுவே நமக்கும் சேர்ந்து ஆபத்தாகிடக் கூடாது. அதனாலதான் நாம முதல்ல இங்கிருந்து கிளம்பிட்டு, அதுக்கப்புறமா அடுத்தவங்களுக்கு தகவல் சொல்லிக்கலாம்.”

 

      “அண்ணா.. ப்ளீஸ்.. நான் ஏதாவது செய்ய..” என்று நான் தொடங்கிய வார்த்தையை முடிப்பதற்கு முன்பே விஷ்வா தன் பதில் வாக்கியத்தை தொடங்கிவிட்டான்.

 

      “உன்னால எதுவும் செய்ய முடியாது நிலா.. நீயே யோசிச்சு பாரு, போன தடவை வந்த சுனாமியை விட இது ரொம்ப பெருசுன்னு நீதான் கொஞ்ச நேரம் முன்னால சொன்ன. அவ்வளவு பெரிய சுனாமி வர்றதா இருந்தா, அது சென்னைய மட்டும் தான் பாதிக்குமா? பக்கத்துல இருக்குற மத்த எல்லா மாநிலத்தையும், மாவட்டங்களையும் சேர்த்தே பாதிக்கும்ல? மீடியாக்கு தகவல் கொடுக்கிறது மூலமா உன்னால எத்தனை பேர காப்பாத்த முடியும்? இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில அத்தனை பேரையும் காப்பாத்த அந்த ஆண்டவனால கூட முடியாது. நாம சாதாரண மனுஷங்கம்மா, நம்மால என்ன முடியுமோ அதை மட்டும் செய்வோம் வா.”

 

     இவ்வளவு விளக்கிய பிறகும் நிலா அசையாமல் நிற்பதை கண்ட விஷ்வா தன் குரலை கடினமாய் மாற்றி, “நிலா.. நான் உன்னோட அண்ணன், உனக்காக எல்லாத்தையும் யோசிச்சுத்தான் செய்றேன். உனக்கும் என் மேல பாசம் இருந்தா நான் சொல்றதை கேளு. நான் போய் நமக்கு தேவையான சர்டிபிகேட்ஸ், டாகுமெண்ட்ஸ், ஜுவல்லரிஸ், கேஷ் எல்லாத்தையும் பேக் பண்றேன். நான் வர்றதுக்குள்ள நீ சீக்கிரமா டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு, உன் லக்கேஜோட ரெடியா இருக்குற..” என்றான் உத்தரவிடும் தோணியில்.

 

     தலை குனிந்தபடி நின்றிருந்த நிலா “சரிண்ணா..” என்றாள்.

 

அவளுடைய செல்போனை எடுத்துக் கொண்டு, “சீக்கிரமா ரெடி பண்ணு” என்று கூறிவிட்டு தன் அறை பக்கமாக சென்றுவிட்டான்.

 

அடுத்த பதினைந்து நிமிடத்திற்குள் விஷ்வா கடகடவென தயாராகிவிட்டு, தங்களுக்கு தேவையான பொருட்களோடு நிலாவின் அறைக்கு வந்தான். அவளும் அங்கே தயாராய் காத்திருந்தாள், ஆனால் உறுதியான வேறொரு முடிவோடு….

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
241 40 0
இராவணின் வீணையவள்
45 0 0
ஆரெழில் தூரிகை
308 15 1
வேண்டினேன் நானுன்னை
538 6 0
நீ எந்தன் நிஜமா?
377 8 1
என்துணை நீயல்லவா?
457 12 0
கற்றது காதல்
216 1 0
நிழலென தொடர்கிறேன்
210 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page