நிலா – 10

       நேரம் காலை ஆறு முப்பதினை நெருங்கிக் கொண்டிருந்தது. சென்னையின் முக்கிய நகர வீதி ஆதலால், கொஞ்சம் கொஞ்சமாக போக்குவரத்து வாகனங்கள் அதிகரிக்கத் தொடங்கியது.

 

      சூர்யா ஒரு நான்கு முனை சந்திப்பின் நடுவில் நின்று, “எல்லாரும் இந்த இடத்த விட்டு போயிடுங்க, இன்னும் கொஞ்ச நேரத்துல சுனாமி வரப்போகுது..” என்று தன் அடிவயிற்றிலிருந்து குரலெடுத்துக் கத்தினான்.

 

      ஆனால் அவனை சுற்றி வருவோரும் போவோரும், அவனை வெறும் காட்சிப் பொருளாக பார்த்தனரே தவிர ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை.  மற்றவர்களோ அவன் கதறலை தங்களுடைய செல்போன்களில் வீடியோ எடுத்துக் கொண்டு சென்றனர். 

 

      இவர்களே பரவாயில்லை என்பதைப் போல இன்னும் சிலர், “எந்த டிவி சேனலுகாக இப்படி மத்தவங்க உயிரோட விளையாடிட்டு இருக்க?” என்று திட்டி விட்டு சென்றனர்.

 

      ஆனால் சூர்யா அது எதையும் பொருட்படுத்தாமல் அரை மணி நேரம் தன் தொண்டை கிழியும் படியாக கத்தினான். அதற்கு மேலும் அவனை தவிக்க விட நிலாவிற்கு மனம் வரவில்லை.

 

       நிலா, “போதும் வா சூர்யா..” என்று அழைத்ததும் அதற்கெனவே காத்திருந்தவன் போல அவள் அருகில் சென்றான்.

 

       “என்ன நிலா? நான் சொன்ன மாதிரியே நடந்ததா? ஒரு ஈ காக்கா கூட நம்மள நம்பல பாரு. இப்பவாவது என் கூட வா நிலா..”

 

      நிலா, “ஒரு தடவ அடுத்த சிக்னலுக்கு போய் ட்ரை பண்ணிப் பார்ப்போமா?” 

 

      சூர்யா, “ஷ்…….” என்று நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு, “சரி வா..” என்றான்.

 

      அடுத்த சிக்னலிலும் அவர்களுக்கு அதே நிலைதான். அவ்வழியில் செல்லும் ஒருவர் கூட அவர்கள் கூறுவதை உண்மை என்று நம்பவில்லை. 

 

      நேரம் ஏழினை நெருங்கும்போது நிலா, “போதும் சூர்யா, இதுக்கு மேல நீ கத்த வேணாம், இங்கிருந்து கிளம்பு” என்றாள்.

 

      “போகணும்னு நினைச்சிருந்தா நான் எப்பவோ போயிருப்பேன்.” என்றுதும் நிலா தன் மான்விழி நிமிர்த்தி அவன் முகம் பார்த்தாள்.

 

      சூர்யா குறும்புப் புன்னகையோடு, “ஐ மீன் அஞ்சு மணிக்கே போய் இருப்பேன்னு சொல்ல வந்தேன் மேடம்” என்று சொல்லி கண்ணடித்தான்.

 

      அந்தப் பார்வையின் பலம் தாங்காமல் தன் விழிக் குடைகளை தரை நோக்கி தாழ்த்திய நிலா, “நீ இங்க இருந்தா சுனாமி வந்துடும் சூர்யா..” என்றாள்.

 

      “ஐயயோ.. எனக்கு தெரியாதே..” என்றான் அப்பட்டமான அப்பாவி போல.

 

      “சீரியஸ்லி, நீ கிளம்பு..” என்று உறுதியான குரலில் சொன்னாள் நிலா.

 

      “நான்தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே நிலா, என் ஆயுசு முழுக்க உன்ன நல்லா வச்சு பார்த்துப்பேன்னு.”

 

      “நீ இங்கேயே நின்னா உன் ஆயிசுக்கு காலம் வெறும் அரை மணி நேரம்தான். வெளிநாட்ல உன்னோட அப்பா அம்மா நீ வருவேன்னு உனக்காக காத்துகிட்டு இருப்பாங்க, அவங்களுக்காக நீ போயிடு சூர்யா.”

 

      “அவங்களுக்காக நான் போகனும்னு தான், ஆனா அவங்க அளவுக்கு நீயும் எனக்கு முக்கியம் நிலா. என் ஆயிசு அம்பது வருஷமா, அஞ்சு நிமிஷமான்னு எனக்கு தெரியாது. ஆனா அது முழுக்க உங்கூடத்தான்னு மட்டும் எனக்கு தெரியும்..” என்றதும் அவள் கண்கள் கண்ணீர் எனும் விழித்திரை கொண்டு தன்னை மூடிக் கொண்டது.

 

      சூர்யா, “ஹேய் நிலா, எதுக்கு அழுற? ரொம்ப மோசமா ரொமான்ஸ் பண்றேனா? டச் விட்ருச்சுல, அதான்”

 

       அவனது சீண்டல் வார்த்தையில் சட்டென சிரித்தவள், “சீ, பொறுக்கி..” என்றாள்.

 

      அவளின் வெட்கப் புன்னகை கண்டதும் அவன் உள்ளம் கூத்தாடத் தொடங்கிற்று. நிலாவின் நிலவு வண்ண முகத்தினை தன் உறுதியான கரங்களில் ஏந்தி, “நிலா.. எனக்கு ஒரு கிஸ் குடுக்கனும் போல இருக்கு, குடுக்கவா?” என்றான் தாபம் நிறைந்த குரலில்.

 

      தன் பார்வையை தன்னைச் சுற்றி நடப்பவர்களின் மீது சுழலவிட்ட நிலா, “வேணாம் சூர்யா, நாம நடு ரோட்டுல நிக்கிறோம், எல்லாரும் நம்மள பாத்துட்டு இருக்காங்க..” என்றாள். 

 

     “சோ வாட்? இந்த ரோடு, நாம, நம்மள சுத்தி இருக்கிற மனுஷங்க எல்லாருக்கும் வேலிடிட்டி அரைமணி நேரம் தான். அதுக்குள்ள நான் என்னோட காதல உனக்கு காட்டனும்னு நினைக்கிறேன்.”

 

      “அத வார்த்தையால காட்ட முடியாதா?”

 

      “வார்த்தையா? அது எத்தன கிலோமீட்டருக்கு அங்கிட்டு விழுந்து கெடக்கோ! காதல் போதையில முழுசா மூழ்கிப் போய் இருக்கிற என் இதயத்த பாத்தா உனக்கு பாவமா இல்லையா? ஒரே ஒரு முத்தம் கொடுத்து அத நீ காப்பாத்தக்கூடாதா?”

 

      “அடடா கவித! கவித!..”

 

       அவளின் கிண்டல் மொழிகளும் அவனுக்குள் உற்சாக பெருக்கினை ஊற்றெடுக்க வைக்க, “உனக்காக காடு, மலை, கடல் எல்லாத்தையும் தாண்டி வந்து இருக்குற என் கண்ணைப் பாரு, நான் உன்ன எவ்ளோ கண்மூடித்தனமாக காதலிக்கிறேன்னு உனக்கு அது சொல்லும். எங்கிட்ட இருக்குற எல்லாத்தையும் உனக்கு கொடுத்துட்டேன், நீ எனக்காக ஒரு முத்தம் தரமாட்டேன்றியேடி? நமக்கு டைம் வேற ரொம்ப கம்மியா இருக்குடி..”

 

     “டேய்.. பிளாக்மெயில் பண்ணாதடா..”

 

     “ப்ளீஸ்.. ப்ளீஸ்.. என் செல்ல நிலால்ல, பக்கத்துல வாடி..”

 

      “வேணான்டா.. பயம்மா இருக்கு..”

 

      “உனக்காக நான் சுனாமிலயே ஸ்விம்மிங் அடிக்கப்போறேன், நீ என்னடான்னா ஒரு உம்மா கொடுக்க இப்டி பயப்படுறியே..”

 

      “இங்க ஏன் சுனாமி வருதுதுன்னு இப்போத்தான்டா தெரிக்குது எனக்கு..”

 

      “ஏன்டி செல்லம்?”

 

      “நீயெல்லம் ரொமான்ஸ் பண்ணினா கடல் தாங்குமா? அதான் பொங்கப்போகுது..”

 

      “அடி மவளே.. நான் உசுர குடுத்து ரொமான்ஸ் பண்றேன், நீ நோகாம நக்கல் பண்றியா?” என்று இரண்டு எட்டு வேகமாக வைக்க, அவன் வேகம் கண்டு மிரண்டு ஓடத் தொடங்கினாள் நிலா.

 

       அதிகாலை வேளையில், ஆள்நடமாட்டம் நிறைந்திருக்கும் சாலையில், போக்குவரத்து விதிகளைப் பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாமல், புதிதாய் பிறந்த கன்று குட்டிகள் போல துள்ளித் தாவி ஓடி விளையாடும் இருவரையும் கண்டு, அவ்வழியில் வருவோரும் போவோரும் தலையில் அடித்துக் கொண்டு சென்றனர்.

 

     ஆனால் அவ்விரு ஜீவன்களும், இந்த உலகைப் பற்றி கவலையே இன்றி ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. அவர்களின் கால்கள் இறுதியாய் சென்று நின்ற இடம் ஒரு ஷாப்பிங் மாலின் நுழைவு வாயில். 

 

     சூர்யா, “மாட்டுனியா..” என்று நிலாவின் கரம் பற்ற கையில் அவள் முகம் வேறு எதோ சிந்தனையில் இருப்பதை கவனித்தான்.

 

      “என்ன நிலா? என்ன ஆச்சு?”

 

      “சூர்யா இந்த ஷாப்பிங் மால் சுனாமிக்கு அப்புறமும் அப்படியே இருந்தது.” 

 

      “சுனாமியே தாங்குதா? பில்டிங் கான்ட்ராக்டர் ரொம்ப நல்லா பில்டிங் கட்டி இருக்கான் போல..”

 

      “டேய், விளையாடாதடா. இங்க இருக்குறவங்க எல்லாரையும் எப்டியாவது இந்த ஷாப்பிங் மால்க்குள்ள போக வச்சா, நம்மால அவங்கள காப்பாத்த முடியும்.”

 

      “அவ்ளோதான, சூர்யா இருக்க பயமேன்? இப்போ பாரு..” என்றவன் சத்தமாய் கத்த ஆரம்பித்தான்.

 

      “உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு வந்திருக்கு மக்களே. இன்னும் அஞ்சு நிமிஷத்துல இந்த ஷாப்பிங் மால் ஃபர்ஸ்ட் என்ட்ரன்ஸ் பக்கத்துல  ஸ்பெஷல் கூப்பன்ஸ் குடுக்க போறோம். அந்த கூப்பன வச்சு, வர்ற ஞாயித்துக்கிழமை நீங்க இந்த மால்ல எல்லா பொருளையும் பாதி விலைக்கு வாங்கலாம். சீக்கிரமா வாங்க, முதல்ல வர்ற ஐநூறு பேருக்கு மட்டும்தான் கூப்பன்..” என்று கூவத் தொடங்கினான்.

 

      இலவசம் என்றதும் முண்டியடித்துக் கொண்டு வருவதில் நம் மக்களை அடித்துக் கொள்ள முடியாதே.. வாக்கிங் செல்வோரும், அலுவலகம் செல்வோரும் சூர்யா சொல்வதை ஒரு நிமிடம் நின்று கேட்க ஆரம்பித்தனர். இருவரும் எதிர்பார்த்தபடியே அடுத்த சில நிமிடங்களில் அவர்களை சுற்றி கூட்டம் கூடத் தொடங்கியது.

      

      அதிகாலை நேரம் என்பதால் ஷாப்பிங் மாலில் பாதுகாப்பு பணியாளர்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை. நம் நல்லுள்ளங்களின் நல்ல நேரத்திற்கு அப்போது வரை அங்கிருந்த வாயில் காவலரும் இப்போது அங்கே இருக்கவில்லை.

 

     தங்களை நோக்கி வருபவர்களை எல்லாம் நிலா, “உள்ள போங்க சார், பர்ஸ்ட் என்ட்ரன்ஸ் பக்கத்துல வெயிட் பண்ணுங்க, இன்னும் அஞ்சு நிமிஷத்துல கூப்பன் கொடுக்க ஆரம்பிக்க போறோம்” என்று வழிநடத்தினாள்.

 

      சில நிமிடங்களிலேயே ஐநூறு பேர் வரையில் உள்ளே அனுப்பி விட்டனர் இருவரும். ஆனால் அதற்குள் ஷாப்பிங் மாலின் பணியாளர்களுக்கு விஷயம் தெரிந்து விட்டது.

 

      “யாருய்யா நீங்கள்லாம்? எவனோ என்னவோ சொல்றான்னு இந்த நேரத்துல இங்க வரீங்க? வெளியில போங்கய்யா..” என்று சண்டையிட ஆரம்பித்த நேரத்தில் திடீரென்று பலமான குளிர் காற்று வீசத் தொடங்கியது.

 

      சென்னையின் சீதோஷண நிலைக்கு, பழக்கப்பட்ட சென்னைவாசிகளுக்கு திடீரென்று வீசும் அந்த குளிர்காற்று குழப்பத்தை ஏற்படுத்தியது. பாதுகாப்பு பணியாளர்களும் பொது மக்களும் பெரு மழை பெய்யப் போவதை நினைத்து அங்கிருந்து கலைய நினைத்த நொடிகளில் சூர்யா அனைவருக்கும் முன்னால் வந்து நின்றான்.

 

       சூர்யா, “இங்க பாருங்க, இன்னும் அஞ்சு நிமிஷத்துல இங்க ரொம்ப பெரிய சுனாமி வரப்போகுது. அதுல இருந்து உங்களை காப்பாத்தத்தான் கூப்பன் கொடுக்கிறதா நாங்க பொய் சொல்லி உங்களை இங்க வர வச்சோம். தயவுசெஞ்சு எல்லாரும் இந்த ஷாப்பிங் மால் உள்ள போங்க..” என்று கத்தினான்.

 

     ஷாப்பிங் மாலின் காவலர்கள், “என்னது? சுனாமியா? யார்ரா நீ? திருட்டுப் பயலே.. இப்படியெல்லாம் கூட திருட ஆரம்பிச்சிட்டீங்களா? எல்லாரும் வெளியில போங்க, இல்ல இவனோடு சேர்ந்து நீங்களும் கம்பி எண்ண வேண்டியிருக்கும்” என்று கத்தினான்.

 

       தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக நினைத்து பொது மக்கள் அனைவரும் சூர்யாவை அடிக்க நினைத்து நெருங்கத் தொடங்கினர். அப்போது வாக்கிங் வந்திருந்த ஒரு வயதான மனிதரின் நாய், அவரின் கட்டுப்பாட்டை விட்டுத் தப்பிச் செல்ல நினைத்து முரண்டு செய்ய தொடங்கியது.

 

      அதன் வெறி கண்டு அனைவரின் கவனமும் சூர்யாவிடம் இருந்து அதன் புறம் திரும்பியது. நாய் தன் மொத்த பலத்தையும் திரட்டி, அவர் கைகளில் இருந்த தன் கயற்றினை அறுத்துக்கொண்டு தெறித்து ஓடியது. அடுத்த நிமிடமே வானத்தில் திரைச்சீலை விரித்தது போல பறவைகள் கூட்டம் சடசடவென்று கிழக்கிலிருந்து மேற்கு திசை நோக்கி பறந்து சென்றன.

 

      நம்மைச்சுற்றி விசித்திரமாய் என்னவோ நடக்கின்றது என்பதை மற்றவர்கள் உணரத் தொடங்கிய நேரம் சூர்யா, “இப்பவாவது நான் சொல்றத நம்புங்க, இங்க சுனாமி வரப்போகுது. இந்த ஷாப்பிங் மால் உள்ள போறதத் தவிர, நாம தப்பிக்க வேற வழியே கிடையாது. தயவு செஞ்சு நான் சொல்றதை நம்புங்க..” என்றான்.

 

      காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கியதும், கூட்டத்தினருக்கு இப்போதைக்கு இந்த ஏழு அடுக்கு கட்டிடம் தான் நமக்கு பாதுகாப்பானது என்று உள்ளுணர்வு சொல்லத் தொடங்கியது. எனவே அனைவரும் யோசனையைக் கைவிட்டு பாதுகாப்பு காவலர்களிடம், அந்த நுழைவாயிலை திறக்கச் சொன்னார்கள்.

 

     அவர்கள் உள்ளே செல்வதைக் கண்டு ஷாப்பிங் மாலுக்கு வெளியே இருந்த ஒரு சிலரும் ஓடி வந்து உள்ளே நுழைந்தனர். அவர்களைப் பார்த்து அந்த வீதியில் அச்சத்தில் ஆங்காங்கே சிதறி ஓடிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும், ஷாப்பிங் மாலின் உள்ளே ஓடி வர தொடங்கினார்கள்.

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
243 40 0
இராவணின் வீணையவள்
45 0 0
ஆரெழில் தூரிகை
308 15 1
வேண்டினேன் நானுன்னை
538 6 0
நீ எந்தன் நிஜமா?
377 8 1
என்துணை நீயல்லவா?
457 12 0
கற்றது காதல்
216 1 0
நிழலென தொடர்கிறேன்
210 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page