இறுதி அத்தியாயம்

      சுனாமி வரப்போவது உறுதியானதுமே நம் இளைஞர்கள் படை சுறுசுறுப்பாய் வேலை செய்யத்துவங்கியது. மாடி ஏற முடியாமல் தவித்த வயதானவர்களையும், குழந்தைகளையும் இளைஞர்கள் தூக்கிக்கொண்டு மூன்றாம் தளத்திற்கு போய் விட்டுவிட்டு வந்தனர். 

 

      அவர்களோடு தான் சூர்யாவும் அதிகாலை நேரம் வாக்கிங் வந்திருந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணை, அவள் கணவனது உதவியோடு மற்றவர்களிடம் இடிபடாமல், நான்காம் தளம் வரையில் அழைத்துச் செல்ல சென்றிருந்தான்.

 

      நிலா, “எல்லாரும் மேல ஏழாவது மாடிக்கு போயிடுங்க..” என்று ஷாப்பிங் மாலின் முன் வாயில் பகுதியில் நின்று, தாமதமாக வருபவர்களிடம் கத்திக் கொண்டிருந்தாள்.

 

      பதற்றத்தில் அவள் சொல்லும் வார்த்தைகளை சிரமப்பட்டு புரிந்தது கொண்ட மக்கள் அனைவரும் மேலே ஏறத் தொடங்கிட, அங்கே வந்த சூர்யா அவளையே தூக்கிக் கொண்டு படி ஏறத் தொடங்கினான். 

 

      நிலா, “ஏய்.. என்ன விடு சூர்யா..” என கத்தினாள்.

 

      சூர்யா, “கத்துன கடிச்சு வச்சிருவேன்டி. உன்னோட ஆசை ஒரு உயிரை காப்பாத்தனுங்கிறதுதான? நான் உனக்காக ஆயிரம் பேருக்கு மேல காப்பாத்தி தந்துட்டேன். இன்னும் மத்தவங்கள காப்பாத்தனும்னு சொல்லிட்டு இருந்தேனா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. தப்பிக்கனும்னு விதி இருக்கிறவங்க கண்டிப்பாகத் தப்பிச்சிவிடுவாங்க, நீ உதவி செஞ்ச வரைக்கும் போதும். கொஞ்சம் என்னையும் கவனிடி..” எனக்கு உண்மையாகவே அடி மனதில் இருந்து புலம்பினான்.

 

      அவன் மனம் புரிந்த நிலாவும், “சரி, சரி, இறக்கி விடுடா, நானே நடந்து வர்றேன்..” என்றாள்.

 

      “முடியவே முடியாது. உன்ன நம்புறதுக்கு நான் என்ன முட்டாளா? கம்முனு வா..” என்றவன் மூன்று மாடி ஏறிய பிறகு, தாங்க முடியாத அளவிற்கு மூச்சு வாங்கியதும்தான் அவளைக் கீழே இறக்கி விட்டான்.

 

     அப்போதும் தன் கைகளை விடாமல் பற்றிக் கொண்டு, மேல் மூச்சு வாங்குபவனை நிலா மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். தன் மூச்சு சற்றே சமநிலை பட்டதும், சூர்யா மீண்டும் அவளை தூக்கிக்கொண்டு ஏறத் தொடங்கிட, நிலாவின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர் அரும்பத் தொடங்கியது.

 

       இருவரும் ஆறாவது மாடியினை நெருங்கும் நேரம் வெளியே ‘டமால்.. டமால்..’ என்று பேரிரைச்சல் ஒலிக்கத் தொடங்கியது. அடுத்த நிமிடமே அவர்கள் இருந்த ஷாப்பிங் மாலில் கீழ் தளங்கள், தாறுமாறாக அடிபடுவது போன்று சத்தம் கேட்டது. 

 

      ‘சுனாமி வந்துவிட்டது, அதனால்தான் கீழ்தளத்தில் இருக்கும் கண்ணாடி சுவர்கள் எல்லாம் உடைந்து நொறுங்குகின்றன!..’ என்று புரிந்ததும் நிலா சூர்யாவின் கைகளில் இருந்து வலுக்கட்டாயமாய் இறங்கி, ஏழாவது மாடியை நோக்கி விரைந்து ஓடினாள். 

 

      இவ்வளவு நேரமாய் அவளை சுமந்து வந்ததனால், சூர்யாவிற்கு அவளை பின் தொடர முடியாத அளவிற்கு மூச்சு வாங்கிற்று. இருந்தபோதும் சிறு இடைவெளி விட்டு அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.

 

      நிலா மொட்டை மாடிக்கு வந்து நின்ற அடுத்த நொடியே காற்றின் வேகத்தால் நின்ற இடத்திலேயே குப்புற விழுந்தாள். உணவின்மை, உறக்கமின்மை, உடல் அசதி, புயல்காற்று அனைத்தும் சேர்ந்து நிலாவின் உடலினை அரை மயக்க நிலைக்கு அழைத்துச் சென்றது. நிலாவின் பின்னாலேயே வந்த சூர்யா அவளுக்கு எந்த ஆபத்தும் நேராதபடி, அவளை இழுத்து தன் மார்போடு அணைத்து, ஒளித்துக் கொண்டான். 

 

      சுனாமியின் காரணமாய் அங்கே ஆளையே தூக்கிச் சென்று விடுவது போல, பலமான குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. அதனால் மொட்டை மாடி முழுவதிலும் வளர்க்கப்பட்டிருந்த வெள்ளை நிற ரோஜாப் பூச்செடிகள் அனைத்தும் தரையில் சாய்ந்து கிடந்தன.

 

     ஏற்கனவே வந்தவர்கள் அனைவரும் ஆங்காங்கே பாதுகாப்பான இடங்களில் கூட்டம் கூட்டமாய் முடங்கி அமர்ந்திருந்தனர். புயலா? மழையா? என்று புரியாத அளவிற்கு காற்றும் நீரும் கலந்து தெறிக்க, அடுத்த சில நிமிடங்களுக்கு அங்கு நிகழ்வது எதுவுமே யாருக்கும் புரியவில்லை.

 

       உயிர் பயத்தில் அங்கிருந்தவர்கள் அனைவருமே ஒருவரை ஒருவர் இறுக்கிப் பிடித்தபடி அமரந்திருந்தனர். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் வரையில் தொடர்ந்த அந்த புயல் காற்று, அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறையத் தொடங்கியது.

 

       காற்றின் வேகம் மட்டுப்பட்டதும் ஒரு சிலர் உயிர் பிழைத்து விட்ட மகிழ்ச்சியில், தங்கள் அருகில் இருப்பவர்களை ஆரத் தழுவிக் கொண்டனர். ஒரு சிலர் தங்களின் இஷ்ட தெய்வத்தை நினைத்து வேண்டுதல்களை அடுக்க தொடங்கினர். இன்னும் சிலரோ இறந்துபோன தனது குடும்பத்தினரை நினைத்து கதறி அழத்தொடங்கினர்.

 

       சூர்யா, “நிலா.. எல்லாம் முடிஞ்சதுடி, நாம தப்பிச்சுட்டோம் பாரு. நீ ஆசைப்பட்ட மாதிரியே நிறைய பேரோட உயிர காப்பாத்திட்ட. நிலா.. நிலா.. எழுந்திரிடி..” என்று நிலாவின் கன்னத்தில் தட்டி எழுப்பினான்.

 

       மெது மெதுவாய் தன் அஞ்சனம் தீட்டிய விழிகளைத் திறந்தாள் அவள். வெளிச்சத்திற்கு அவள் கண்கள் பழக்கப்பட்டதும் சுற்றி இருப்பவர்களை பார்த்தாள். அப்பாவோடு ஆசையாய் வெளியே சுற்ற நினைத்து வந்த குழந்தைகள் அம்மாவைத்தேடி அழுது கொண்டிருந்தன. உடல் நலத்தில் கவனம் வைத்து வாக்கிங் வந்திருந்தவர்கள் உறவுகளை தொலைத்து விட்டு கதறிக் கொண்டிருந்தனர். குடும்பமாய் தப்பித்த சிலரோ தங்களின் குழந்தைகளை பயத்திலிருந்து மீட்டு எடுக்க முயன்று கொண்டிருந்தனர்.

 

      ‘தப்பித்தவர்களே இந்த நிலையை இருந்தால், மற்றவர்களின் நிலை என்னவாகி இருக்கும்?’ என்று நினைத்த நிலா, சூர்யாவின் அணைப்பிலிருந்து விடுபட்டு, தத்தித்தத்தி அந்த மொட்டை மாடியின் ஓரத்திற்கு வந்தாள். 

 

      சற்று நிமிடங்கள் முன்பு வரை பொதுமக்கள் உலவிய சாலை வீதி, இப்பொழுது சர்வ நாசம் அடைந்து போயிருந்தது. வருவோருக்கும் போவோருக்கும் நிழல் தருவதால், கர்வமாய் தலைநிமிர்ந்து நின்றிருந்த மரங்கள் அனைத்தும், வேரோடு வெட்டிச் சாய்க்கப் பட்டிருந்தன. கண்ணிற்குத் தெரியும் தூரம் வரையில் நெடுங்காலமாய் வானுயற நின்றிருந்த கட்டடங்கள் பலவும் சல்லி சல்லியாய் நொறுங்கிப் போயிருந்தன.

 

      ஷாப்பிங் மாலின் உயரத்தில் கிட்டத்தட்ட நான்கு மாடி உயரத்திற்கு தண்ணீர் வந்து சென்றிருந்தது. இந்த அளவிற்கு நீர் வந்திருந்தால் நிச்சயமாக குடியிருப்பு வீடுகள் அனைத்தும் நீரில் மூழ்கி போயிருக்கும், என்று அவளின் கண்களிரண்டும், அதிர்ச்சியில் கலங்கியிருந்த சித்தத்திற்கு உணர்த்தியது.

 

       பார்வை ஓரளவிற்கு புது இடத்திற்கு பழக்கப்பட்டதும், பேதைப் பெண்ணவள் பாதையைத் தெளிவாய் காண முயன்றாள். தொலை தூரத்தில் முக்கால் பாகத்திற்கு இடிந்து நிற்கும் வீடுகளும், மரங்களிலும் இடிபாடுகளிலும் சிக்கிக் கிடக்கும் வாகனங்களும் ஏதோ ஒரு உயிர் பலியினை அவளுக்கு தெரிவித்தது.

 

      ‘பலிகளின் எண்ணிக்கை நிச்சயம் லட்சங்களைத் தாண்டி சென்றிருக்கும், இங்கேயே இப்படி என்றால் மற்ற ஊர்களில் எவ்வளவு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்? பாவி நான், முன்பே எல்லாம் தெரிந்தும் எதுவும் செய்யாமல் போய் விட்டேனே..’ என்று விம்மி அழத் தொடங்கிய நொடிதனில் மெல்லிய சிரிப்பொலி அவள் செவிகளில் ஒலித்தது.

 

       இரண்டு வயது குழந்தையின் அருகிலிருந்த சூர்யா, “புஜ்ஜிம்மா.. உன்ன இப்போ இந்த பூனக்குட்டி கிச்சு கிச்சு காட்ட போகுதாம். மியாவ்.. மியாவ்.. மியா மியா மியாவ்..” என்று சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான்.

 

      அக்குழந்தையின் அருகினில் அதன் தந்தை வரண்ட விழிகளோடு, ‘மீரா.. மீரா..’ எனப் புலம்பி அழுது கொண்டிருந்தார்.

 

      அவர்களை பார்த்ததுமே நிலாவிற்கு புரிந்து விட்டது, ‘அப்பாவோடு வீதி உலா வர அடம் பிடித்துக் கொண்டு வந்திருக்கும் குழந்தை இது, இப்பொழுது வீட்டில் இருக்கும் தன் அன்னை இறந்தது தெரியாமல் சிரித்துக் கொண்டு இருக்கின்றது’ என்று.

 

        நிலாவிற்கு யதார்த்தம் புரிந்தது, இழப்புகளும் வலிகளும் நம் வாழ்வில் நிரந்தரமானவை. ஆனால் அந்த நிரந்தரத்தை, நிதானம் எனும் அறிவுக் கண்ணால் காணும் பொழுது மட்டுமே, அதன் இடையில் ஒளிந்திருக்கும் புன்னகை எனும் பூக்கள் நம் கண்களுக்குத் தெரியும். நிரந்தரத்தை மீறிச் செல்லும் வழி தெரியாத வலிமிகு நேரங்களில், நிதானம் ஒன்றே நம் வாழ்விற்கு உறுதுணையாய் நிற்கின்றது.

 

       நிகழும் நிரந்தரத் ஏற்றுக்கொள்ள முடியாமல் குழந்தையின் தந்தை தன்னிலை மறந்து அழுது கொண்டிருக்க, சூர்யா லாவகமாக அவரிடமிருந்து குழந்தையை வாங்கித் தன் தோளில் தூக்கிக் கொண்டான். புயல் காற்றினால் விழுந்து கிடந்த ரோஜாச் செடிகளில் இருந்து, ஒரு சில பூக்களை பறித்து குழந்தையின் கையில் கொடுத்து ஏமாற்றினான். 

 

      அந்த விளையாட்டு அச்சிறு குழந்தைக்கு மிகவும் பிடித்திருந்தது போலும். அடுத்தடுத்து விழுந்து கிடந்த பூச்செடிகளிலிருந்து தனக்கு விருப்பமான பூக்களை பறிக்க நினைத்து, அவன் கைகளில் இருந்து இறங்கி ஓடியது.

 

      அந்த நொடியில் சூர்யா நின்றிருந்த தோரணை, நிலாவிற்கு எங்கேயோ பார்த்ததைப் போன்று தோன்றியது. ஏனோ அவளின் உள்ளுணர்வு, அவனருகில் செல்லச் சொல்லி அவள் கால்களை உந்தித் தள்ளியது. 

 

      சற்று முன்புவரை சுனாமியால் மேகம் மூட்டத்தோடு இருள் சூழ்ந்திருந்த வானிலை, மெதுமெதுவாய் சூரிய ஒளியின் வருகையால் வெளிச்சமாக மாறத் தொடங்கியது. வானிலை மாற்றத்தால் காற்று திசை மாறி வீசத் தொடங்கியது. அந்த நொடியில் எதேச்சையாய் அவளைத் திரும்பிப் பார்த்த சூர்யா, காரணமே இல்லாமல் ஒரு மோகனப் புன்னகை உதிர்த்தான்.

 

       அந்தப் புன்னகையின் காரணம் புரிந்த அவள் மனம், அங்கிருந்து ஓடச் சொல்லி அவளது அறிவிற்கு தகவல் அனுப்பியது. அவளது தடுமாற்றம் கண்டவனது இதழில், ஏகத்திற்கும் ஏளனப் புன்னகை வளைந்து நின்றது. 

 

என் உள்ளுணர்வின் பேச்சைக் கேட்டு அவ்விடம் விட்டு நான் நகர முயல்வது புரிந்ததும், அவன் கால்கள் என்னை நோக்கி வரத் தொடங்கின. அவனது வருகை அறிந்து அஞ்சி நடுங்கிய என் கால்கள் இரண்டும், தட்டு தடுமாறி இரண்டடி தாண்டும் முன் அவன் என்னை பிடித்திருந்தான்.

 

      என் அருகில் வந்து நின்ற சூர்யா ஆளுமை நிறைந்த குரலில், “உனக்கத்தான் நான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன், நீ என்னடான்னா என் முகத்தக்கூட பார்க்காம அந்த பக்கம் திரும்பி நின்னா என்ன அர்த்தம் நிலா?” என்றான்.

 

       இந்த வார்த்தைகள்.. இந்த தீண்டல்.. இந்த நொடி.. என் கனவினில் வந்தவை, அடுத்ததாய் அவன் எனக்கு முத்தமிட முனைவான் என்று என் சிந்தைக்கு கால தாமதமாய் ஞாபகம் வந்து தொலைத்தது.

 

      அச்சமும் நாணமும் ஒரு சேர போட்டி போட, விழிகளை இறுக மூடிக்கொண்டு, “வேணாம் சூர்யா.. எல்லாரும் பாக்குறாங்க.. என்ன விட்டுரு.. நான் போகணும்..” என்றேன் நடுங்கும் குரலில்.

 

       “என்ன விட்டு நீ எங்கயும் போக முடியாது நிலா.. இந்த ஜென்மம் முழுக்க என் இம்சையை நீ சகிச்சுக்கிட்டே ஆகணும் செல்லம்..” என சொல்லிக் கொண்டே, என் இதழ் நோக்கி குனிந்து வந்தான். மீண்டும் ஒரு முறை என் உடலும் மனமும் அரை மயக்க நிலைக்கு பயணிக்க தொடங்கியது.

 

      கனவு மெய்ப்பட, 

      காரிருள் முடிவுற,

      கதிரொளி – தன்

      கனவு நிலவோடு,

      கலந்தது பாராயோ!!!……

❤️ Loading reactions...
முந்தைய பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
248 40 0
இராவணின் வீணையவள்
47 0 0
ஆரெழில் தூரிகை
310 15 1
வேண்டினேன் நானுன்னை
541 6 0
நீ எந்தன் நிஜமா?
379 8 1
என்துணை நீயல்லவா?
463 12 0
கற்றது காதல்
219 1 0
நிழலென தொடர்கிறேன்
214 2 0
1 Comment
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page