இராவணன் 1

 

அந்த மாலை நேரத்தில் மழை வருவதற்கு அறிகுறியாக காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது. அந்த பலமான காற்றைக் கிழித்துக்கொண்டு ஒரு கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. சில நிமிட பயணத்திற்குப் பின் ஒரு குறுகலான தெருவின் முனையில் அந்த கார் நின்றது. காரோ, பெரிய வாகனமோ செல்ல இயலாத அளவிற்கு அந்த தெரு மிகவும் குறுகியதாக இருந்தது. 

காரில் இருந்து டிப் டாப்பாக இறங்கினான் ரித்திக் வர்மா. ஹிந்தி நடிகர் போன்ற அழகான முகத்தோற்றம். கன்னி பெண்கள் கண்டவுடன் மையல் கொள்ளும் அத்தனை அழகு. ஆனால் அத்தனை சுலபத்தில் நெருங்க முடியாத அரக்கன். அந்த ஆணவமும் திமிரும் அவனுடன் இயல்பாய் தொற்றிக் கொண்டிருந்தது. அது அவனது ஒவ்வொரு செயல்களிலும் வெளிப்படையாக தெரிந்தது.

‘போயும் போயும் இந்த தெருவுல எல்லாம் என்னை நடக்க வைக்கிறாளே. மொத்ததத்துக்கும் சேர்த்து வட்டியும் முதலுமா திருப்பி தர்றேன்டி!’ என்று மனதிற்குள் வைது தீர்த்தான் அவளை‌.

“ஐயா, நானும் கூட வரட்டுங்களா?”

 

“தேவையில்ல, நீ இங்கேயே இரு. நான் மட்டும் போயிட்டு வந்துடறேன்” என்று தன் டிரைவரிடம் கட்டளை இடுவது போல் சொல்லி விட்டு, மாஸ்க்கை அணிந்து கொண்ட ரித்திக், அந்த குறுகலான சாலையின் வழியே நடக்க தொடங்கினான் ரித்திக். 

பலமாக காற்று அடித்ததற்கே ஈபி அலுவலகம் கரெண்ட்டை கட் செய்துவிட்டிருந்தது. அந்த காரணத்தால் வீதியே இருட்டிக் கிடக்க, அவன் கைகளில் உரசிக்கொண்டு இருந்த தரம் உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச் மட்டும் பளபளவென பகட்டாய் மின்னியது. 

அவன் அணிந்திருந்த மேலாடையில் இருந்து கால் சட்டை முதல் அனைத்துமே பல லட்சங்களில் வாங்கிய முதல் தரம் வாய்ந்த பொருளாகவே இருந்தது. அவனின் நடை, உடை, பாவனைகள் அனைத்தும் அந்த இடத்திற்கும் அவனுக்கும் சம்பந்தமே கிடையாது என்பதை வெளி காட்டியது. 

எனவே அப்பகுதிவாசிகள் படக்கென்று அவனை புது ஆள் என அடையாளம் கண்டு கொண்டனர்.

‘யாருய்யா அது?’ என்று அவர்கள் தங்களுக்குள்ளாக புறணி பேசிக் கொண்டிருக்க, இவனோ எதையும் கவனிக்காமல் விறுவிறுவென்று நடந்து சென்றான். திடீரென்று அவன் கால்கள் ஓரிடத்தில் பசை போட்டது போல ஒட்டிக்கொண்டு நின்றது. 

தனது கைபேசியை எடுத்து அதிலுள்ள முகவரியையும் வீட்டு எண்ணையும் சரிபார்த்தான். விலாசம் மிகச் சரி! தனக்கு எதிரே இருந்த புறா கூண்டு போன்ற அந்த சிறிய வீட்டை ஏளனமாய் நோக்கியது அவன் விழிகள். அந்த வீடு தான் இவன் தேடி வந்த வீடு என ஒன்றுக்கு இரண்டு முறை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டவன் துணிந்து தன் வேலையில் இறங்கினான்.

சிறு தயக்கமும் இல்லாமல், ஏதோ பல வருடங்களாக பழகிய வீடு போல் உரிமையோடு நெஞ்சினை நிமிர்த்தியபடி விறு விறுவென்று அந்த வீட்டுக்குள் நுழைந்தான். அந்த வீட்டின் நடுக்கூடத்தில், மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு வயதான ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். 

அவர் பெயர் விஜயா. இளம் பிராயத்திலேயே திருமணம் செய்து, கைக்குழந்தையோடு விதவையாகி, ஊரார் ஏச்சு பேச்சுக்கு அஞ்சி ஒடுங்கி வாழ்ந்து ஓய்ந்த வயோதிக ஜீவன். திடீரென்று ஒரு மனிதன் உள்ளே வருவதை பார்த்து அதிர்ந்து போன விஜயா பாட்டி, அவனை திருடன் என எண்ணிக் கொண்டார்.

“யாருப்பா நீ? ஆள் இருக்கிறது கண்ணுக்கு தெரியலையா? கேட்டுட்டு உள்ள வரணும்னு இல்லாம, நீ பாட்டுக்கு உள்ள வர?”

பாட்டி கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் திமிர் கலந்த முகபாவனையோடு சுவற்றில் இருந்த ஒரு புகைப்படத்தை கோபத்தோடு வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் ரித்திக்.

“நான் பாட்டுக்கு கேட்டுகிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு நின்னுட்டே இருக்க! யார் நீ?” என சரமாரியாய் அவனிடம் கேள்வி எழுப்ப தொடங்கினாள்.

விஜயா பாட்டிக்கு கண் மங்கலாகத்தான் தெரியும். அதனால் அவன் சுவற்றில் இருக்கும் ஒரு புகைப்படத்தை பார்க்கிறான் என்பது மட்டுமே தெரிந்தது. ஆனால் அதை அவன் கோபத்தோடு பார்க்கிறான் என்பதை மங்கலான பார்வையால், பாட்டியால் உணர முடியவில்லை. 

ஆனால் சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் தனது பேத்தி வீணாவின் புகைப்படத்தை தான் பார்க்கிறான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டார். அப்பொழுதுதான் வீணாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டிலிருந்து இந்த வாரத்தில் வருவார்கள் என்று தரகர் சொன்னது ஞாபகம் வந்தது. 

“அடடே! தரகர் வீணாவுக்கு சொன்ன மாப்பிள நீங்கதானா? மன்னிச்சிடுங்க தம்பி, தெரியாம யாருன்னு கேட்டுட்டேன். நீங்க ரெண்டு நாள் கழிச்சு வருவீங்கனு சொன்னாரு. இன்னைக்கு வரிங்கன்னு அந்த தரகர் முட்டாள், எங்களுக்கு எந்த தகவலுமே சொல்லல. அதனாலதான் யாருன்னு அடையாளம் தெரியல. ஐயையோ நான் பாட்டுக்கு உங்களை நிக்க வச்சே பேசிட்டு இருக்கேன். வந்து உட்காருங்க…” என்று பரபரப்பாக சொல்லிக் கொண்டிருந்தார் விஜயா பாட்டி.

ஆனால் அவன் எதையும் பொருட்படுத்தாமல் அந்த புகைப்படத்தையே இன்னும் உற்று நோக்கிக் கொண்டிருந்தான். கண்களாலேயே அவளை கொல்லும் அளவு கோபத்தோடு உறுத்து விழித்தான் என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

“தம்பி, இங்க வாங்க. இந்த சோபால உக்காருங்க. ஏன் நின்னுகிட்டே இருக்கீங்க?” 

“வீணா இப்போ எங்க போயிருக்கா?”

“அவ பக்கத்துல இருக்குற கோவிலுக்கு போய் இருக்கா. தினமும் போய் பழக்கமாயிடுச்சு அவளுக்கு. அதான் மழையக்கூட பார்க்காம போயிட்டா. ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துருவா! நீங்க உட்காருங்க தம்பி” என்று விஜயா பாட்டி மீண்டும் மீண்டும் சொன்னதன் பொருட்டாக மட்டுமே சோபாவில் அமர்ந்தான் ரித்திக்.

“தரகர் எல்லா விஷயத்தையும் உங்க கிட்ட சொல்லிருப்பாருன்னு நினைக்கிறேன். அம்மா அப்பா இல்லாத பொண்ணு அவ. சின்ன வயசுல இருந்தே எதுமே தனக்காக ஆசைப்பட்டது கிடையாது. இந்த காலத்து பொண்ணுங்க மாதிரி இருக்க‌ மாட்டா. வீட்டுக்கு ஏத்த மாதிரி குணமான அடக்கமான பொண்ணு. இன்னும் சொல்லணும்னா, என் பேத்தி ஒரு வாயில்லா பூச்சி…” 

‘அந்த பூச்சிக்கு மருந்து அடிக்கத்தான நான் வந்திருக்கேன்!’ என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான் இவன்.

“என்னை பார்த்துக்க ஆள் இல்லையேனு கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டு இருந்தா. என்ன நினைச்சாளோ தெரியல, உங்க போட்டோவை பார்த்ததுக்கு அப்புறம் தான் சரின்னு கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா. அவ ஆசைய நிறைவேத்தி கொடுத்தா தான் என் கட்டை வேகும். 

முந்தா நாள் உங்க உறவுமுறையில இருந்து ஒருத்தர் வந்துட்டு போனாரு. அப்போ இருந்தே உங்கள தனியா பார்த்து நிறைய விஷயங்கள சொல்லணும்னு நினைச்சேன். நீங்களே தனியா வந்தது ரொம்ப சவுகரியமா போச்சு. தப்பா நினைக்கைலனா சொல்லட்டுமா தம்பி?”

அவ்வளவு நீளமாக பேசிய விஜயா பாட்டிக்கு, “ம்…” எனும் ஒற்றை எழுத்து மட்டுமே பதிலாக கிடைத்திருந்தது. வெளியே அடைமழை பொழிய ஆரம்பித்திருக்க அவன் பேசிய வார்த்தை சிலது தன் காதில் விழவில்லை என்று நினைத்துக் கொண்டார் விஜயா பாட்டி.

“எங்கக்கிட்ட பெருசா சொத்து பத்துனு எதுவும் இல்ல தம்பி. இந்த வீடு அவ பேருல தான் இருக்கு. அவங்க அம்மா அப்பா போய் சேர்றத்துக்கு முன்னாடி அவளுக்காக சேர்த்து வச்ச கொஞ்ச நக நட்டு இருக்கு! அதை வச்சு இப்ப கல்யாணத்தை என்னால சீரும் சிறப்புமா செஞ்சுட முடியும். 

அதுக்கு அப்புறம் வரப்போற செலவுக்கு என்னால என்ன செய்ய முடியும்னு தெரியல. உங்களுக்கு புள்ளை பொறந்து அதுக்கு நல்லது கெட்டது பார்க்குற வரை நான் இருப்பேனோ என்னவோ. குத்தம் குறை இருந்தாலும் நீங்க தான் என் பேத்திய கண் கலங்காம வச்சு காப்பாத்தணும்” என்று விஜயா பாட்டி அதீத உணர்ச்சி பெருக்கோடு பேசிக் கொண்டிருந்தார். 

ஆனால் ரித்திக் மௌனமாகவே அமர்ந்திருந்தான். எப்படி பதில் பேசுவான்? அவன் மனது தான் அவளை எப்படியெல்லாம் சித்ரவதை செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறதே!

 

 

❤️ Loading reactions...
அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
247 40 0
இராவணின் வீணையவள்
46 0 0
ஆரெழில் தூரிகை
309 15 1
வேண்டினேன் நானுன்னை
541 6 0
நீ எந்தன் நிஜமா?
379 8 1
என்துணை நீயல்லவா?
463 12 0
கற்றது காதல்
216 1 0
நிழலென தொடர்கிறேன்
212 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page