இதயம் 1

அந்த வீடு பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அமுதா நாளைய ஃபங்ஷனுக்காகத் துரிதமாக வேலை செய்து கொண்டிருந்தார்.

“ஏன்டி பியூட்டி பார்லர்க்கு போனியா?”

“நான் போகல”

“ஏன்டி?”

“இருக்கற அழகே போதும்னு தான்”

“என்னடிஇவ்ளோ சலிச்சிக்கிற?”

“பின்ன என்ன? வர்றவன் ஓகே சொன்னா போதும். என்னை எல்லாம் என்னன்னு கேட்கவா போறீங்க?”

“இதை அப்படியே உன் சித்தப்பா கிட்ட போய்ச் சொல்லு”

“ஏன்மா என்ன மாட்டி விடுற? ஏற்கனவே அவர் என்ன படிக்க வைச்சதால மேற்கொண்டு ஒண்ணும் அவர டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு இருக்கேன்”

“தெரியுது தானே. அப்போ அமைதியா இரு. இந்தக் கல்யாணம் கூட நடக்கறதுக்கு அவரு ஹெல்ப் வேணும். ஓகேவா? அதை மனசுல வச்சிட்டு நடந்துக்கோ”

“ம்ம்… சரிம்மா”

நேத்ரா வீட்டில் அமுதா, நேத்ரா மற்றும் பத்மாவதி ஆகிய மூவர் மட்டுமே. பத்மாவதி அவளது பாட்டி. அவரிடம் சின்ன வயதில் இருந்தே அவளுக்குச் செல்லம் அதிகம்.

சிறு வயதிலேயே அவளது அப்பா இறந்ததால் சித்தப்பாவின் மேற்பார்வையில் தான் அவள் படித்தாள். அதனாலேயே அவளுக்குப் பயம் கலந்த மரியாதை அவர் மேல் உண்டு.

இந்த வரன் கூட அவளது சித்தப்பா ஜாதகம் பார்த்து வர சொன்னது தான்.

தனது அறைக்குச் சென்றவள் அடுத்த நாள் கட்ட வேண்டிய சேலையை எடுத்து வைத்தாள்.

“நாளைக்கு எத்தனை மணிக்கு வராங்க நேத்ரா?” என்று பத்மா கேட்க

“சித்தப்பா பத்து மணிக்கு வராங்கன்னு சொன்னாங்க”

“நாளைக்கு அவன் வரான் தான?”

“தெரியல பாட்டிமா. அதைப் பத்தி கரெக்டா சொல்லல”

“அவங்க வந்தா கொடுக்கறதுக்கு ஜுஸ் வாங்கிட்டு வந்துட்டியா?”

“வாங்கிட்டேன் பாட்டி. ஸ்வீட் குமார் அண்ணா வாங்கிட்டு வந்தாங்க”

இருந்த அனைத்து வேலைகளையும் முடித்த அமுதா உள்ளூரில் இருக்கும் தனது இரு நாத்தனார்களுக்கும் போன் செய்து அழைத்தாள்.

அவர்களை நேரமாகவே வீட்டுக்கு வர சொன்னவர் நேத்ராவை போய்ப் பார்த்தாள்.

அங்கே அவள் எடுத்த வைத்த சேலையைப் பார்த்தவள்

“ஏன்டி உன்னை இந்தச் சேரியா கட்ட சொன்னேன்? சேரி அயர்ன் பண்ணி எடுத்து வைச்சேனே?” என்று அவளைத் திட்டியவர், பீரோவில் இருந்து இன்னொரு சேலையை எடுத்தார்.

“இந்தா. இது தான் உன் அத்தை கட்ட சொன்னாங்க” என்று எடுத்து கொடுத்தார்.

“ஏன்மா முன்னாடியே சொல்ல வேண்டியது தானே? அப்போ ஓகே சொல்லிட்டு இப்போ மாத்தறீங்க?”

“அதை விடக் கிரீன் கலர் சாரி உனக்கு நல்லாருக்கும்டி”

“சரி. என்னமோ பண்ணுங்க” என்றவள் படுத்து கொண்டாள்.

மனதிற்குள் எதிர்காலம் பற்றிய பயம் வர ஆரம்பித்தது.

‘இந்த இடம் ஃபிக்ஸ் ஆகிடுமா? ஏற்கனவே நிறைய இடம் பார்த்து ஒண்ணும் செட் ஆகவே இல்ல. இந்த அம்மா புலம்பிட்டே இருக்காங்க. கடவுளே நாளைக்கு நல்ல விதமா நடக்கணும்’ என்று வேண்டியவள் யோசித்தபடியே தூங்கினாள்.

அடுத்த நாள் காலையில் என்ன நடக்கப் போகிறதோ என்ற உணர்வுடனே நேரத்தை கடத்தினாள்.

மாப்பிள்ளை வீட்டில் இருந்து ஒன்பது நபர்கள் வந்திருந்தார்கள்.

எல்லாரும் இறங்கி செல்ல கடைசியில் வண்டியை பூட்டியபடி இறங்கினான் சந்திர பிரகாஷ்.

சந்திர பிரகாஷ் – ஐந்தே முக்கால் அடி உயரம். அதிகமாகப் பேச மாட்டான். அவனுண்டு அவன் வேலையுண்டு என்று இருப்பவன். குடும்பத்தின் மீது பற்று அதிகம். அம்மா பேச்சுக்கு மறு பேச்சுக் கிடையாது.

அவனுக்கு ஒரு தங்கை. பேர் சசிகலா. தங்கையின் மீது மிகுந்த பாசம் உண்டு. வார இறுதிகளில் அவன் வீட்டுக்கு வந்து விடுவார்கள். தங்கைக்கு ஒரு பெண், ஒரு பையன். அவர்கள் கோவை வரும்போது தங்கையை விட இவன் அதிகமாக அவர்களைப் பார்த்து கொள்வான். அவர்கள் அவினாசியில் வசிக்கிறார்கள்.

மாப்பிள்ளை வீட்டார் வீட்டுக்குள் நுழையும் போது பெண் வீட்டார் வாசலில் நின்று வரவேற்றார்கள்.

அவர்களை ஒரு பார்வை பார்த்தபடி கடந்து சென்றவன் தனது அம்மாவின் அருகில் ஒரு சேரில் அமர்ந்தான்.

சுற்றி இருந்த சொந்தங்கள் பேசி கொண்டிருக்கச் சந்திர பிரகாஷ் வீட்டினை அளந்து கொண்டிருந்தான்.

அது பழைய காலத்திய வீடு. பெரிய ஹால். பழமையான ஜன்னல்கள் என விஸ்தாரமாக அமைந்திருந்தது.

சந்திர பிரகாஷிற்கு எதிர் திசையில் அமர்ந்திருந்த நேத்ராவின் உறவினர் வாசவன் அவனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

“தம்பி பேர் என்ன?”

“சந்திர பிரகாஷ்”

“நீங்க என்ன செய்றீங்க?”

“மேனேஜரா ஒர்க் பண்றேன்”

“ஆஃபிஸ் பக்கமா? தூரமா? தம்பி”

“கொஞ்சம் தூரம் தான். பைக்ல போய்ட்டு வந்துடுவேன்” என்று சொன்னவன் தனது அம்மாவிடம் திரும்பி,

“மீ என்ன இந்த ஆள் இப்படி கேள்வி கேட்டுட்டு இருக்கான்?” என்று எரிச்சல் குரலில் சொன்னான்.

“கொஞ்சம் அமைதியா இருடா” என்று மெதுவான குரலில் சொன்னவள்,

“பொண்ண வர சொல்றீங்களா?” என்று வாசவனிடம் சொல்ல

“அட தம்பி… இதிலென்ன வெட்கம்? என்கிட்டயே சொல்லி இருக்கலாம்ல” என்றவரை ஒன்றும் சொல்லாமல் பார்த்தான்.

“நேத்ராவை வர சொல்லுங்க” என்று சொன்னவர்,

“ஸ்வீட் சாப்பிடுங்க தம்பி” என்று உபசரித்து விட்டு வீட்டை பற்றிக் கூற தொடங்கும் போது நேத்ரா கையில் காபியுடன் வந்தாள்.

அனைவருக்கும் காபியை கொடுத்தவள் சந்திர பிரகாஷிடம் வரும் போது அவனிடம் நீட்ட எந்த உணர்வும் காட்டாது காபியை எடுத்தான்.

அதில் துணுக்குற்றவள் அமைதியாக உள்ளே சென்றாள்.

வாசவன் இப்போது அமைதியாகி விட்டார் எனச் சந்திர பிரகாஷ் நிம்மதி கொள்ள வழியில்லாமல் பார்த்திபன் இப்போது வீட்டை பற்றி ஆரம்பித்தார்.

“நேத்ராக்கு சின்ன வயசிலேயே அப்பா இறந்துட்டாங்க. எல்லாம் சித்தப்பா தான் பார்த்துக்கறங்க” என்றவர் சொத்துக்களைப் பற்றிச் சொன்னார்.

“இங்க அவங்களுக்கு 4 கடை இருக்கு. வாடகைக்கு விட்டிருக்காங்க. இந்த வீடும் அவங்களுக்குத் தான். அவங்க சித்தப்பா சென்னைல பிஸினஸ் பண்றாரு” என்றவரை கவனமாகக் கேட்டு கொண்டனர்.

“தம்பி பொண்ண பத்தி ஒண்ணுமே சொல்லல” என்றவரிடம்

“ஒரு நிமிஷம்” என்று அனுமதி கேட்டவன் தனது அம்மாவிடம் கிசுகிசுப்பாகப் பேசினான்.

ஐந்து நிமிடங்களில் அவன் அம்மா ஏதோ சொல்ல, இவன் தலையாட்ட அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

அடுத்த நிமிடம், “பொண்ணு பிடிச்சிருக்கு” என்று சொல்ல அவருக்கு ரொம்பவும் சந்தோஷம்.

“தம்பி நேத்ராகிட்ட எதுவும் தனியா பேசறீங்களா?” என்று கேட்க, இல்லை என்பது போல் தலையாட்டினான்.

மேற்கொண்டு அவர்கள் பேச ஆரம்பிக்கச் சசிகலாவும், மைதிலியும் உள்ளே சென்று கதை அளந்தார்கள்.

அவர்களுக்கு அமுதா வீட்டை சுற்றி காண்பித்தார்.

சசிகலாவின் பிள்ளைகள் இருவரும் அவளோடு வர அதில் ஒருவனிடம் நேத்ரா பேரை கேட்க ஆரம்பித்தாள்.

“தம்பி பேர் என்ன?” என்று அவள் கொஞ்சும் குரலில் கேட்க அது “ஆவிக்” என்றது.

பேச ஆரம்பித்தவள் சிறிது நேரத்தில் அவனுடன் விளையாட ஆரம்பித்தாள்.

பிறகு அவர்கள் சிறிது நேரத்தில் கிளம்ப, நேத்ராவும் வெளியே வந்தாள்.

நேத்ராவை பார்த்ததும், “சொல்லிட்டு வாடா” என்று மைதிலி சொல்ல, “போய்ட்டு வரேன்” என்று மெல்லிய குரலில் நேத்ராவிடம் கூறினான்.

நேத்ரா சரி என்பது போல் தலையாட்டினாள்.

சொந்தங்கள் அனைவருக்கும் இந்த இடம் அமைந்ததில் மிகுந்த திருப்தி. நேத்ராவுக்கும் மிகுந்த சந்தோஷமாக இருந்தது.

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் சாந்தமூர்த்திப் போன் செய்தார்.

“சொல்லுங்க சித்தப்பா”

“மாப்பிள்ளைய உனக்குப் பிடிச்சிருக்கா நேத்ரா?”

“பிடிச்சிருக்கு”

“எத்தனை பேர் வந்தாங்க?”

“9 பேர் சித்தப்பா”

“அவங்க கிட்ட நான் இங்க வர்ற வரையும் பேசிட்டு தான் இருந்தேன். அப்போ தான் இங்க இருப்பேன்னு நினைச்சுப்பாங்க”

அதில் சிறிது அதிர்ச்சியானவள் “ஏன்?” என்று கேட்க…

“பார்க்க யாரும் இல்லன்னு நினைச்சிட கூடாதுல்ல. இங்க வந்ததுக்கு அப்புறம் தான் வேலை இருக்குன்னு சொன்னேன்” என்றார்.

மேலும் சிறிது பேசியவர் பிறகு போன் செய்வதாகக் கட் செய்தார்.

ஏதோ யோசனையில் ஆழ்ந்தவள் பிறகு உறவினரிடம் பேச சென்றாள்.

“ஏன்டி மாப்பிள்ளைய பிடிச்சதுன்னு என்கிட்ட கூடச் சொல்லல. உங்க சித்தப்பா கிட்ட போன்ல சொன்னாங்கன்னு அத்தை செல்றாங்க”

“அம்மா கடுப்பேத்தாத. அவங்க பிடிச்சதான்னு கேட்டாங்க. நானும் சொன்னேன். அவ்ளோ தான். வேற ஒண்ணும் கேக்காத” என்று கடுப்பான குரலில் சொன்னாள்.

“என்னடி இப்படி சொல்ற?”

“நான் ஏதாவது புடிக்கலன்னு சொன்னா உனக்குத் திமிரான்னு கேட்பீங்க. அப்றமா பெரியப்பா, சித்தப்பானு லெட்சர் அடிப்ப. அதான் ஓகேனு சொல்லிட்டேன்”

“எப்படியோ புத்திசாலித்தனமா நடந்துகிட்டே” என்று சந்தோஷப்பட்டவரை விசித்திரமாகப் பார்த்தாள்.

அடுத்து வந்த பத்து நாட்களில் நிச்சயம் செய்வதற்காக நாள் குறிக்கப்பட்டது.

முதலில் காலையில் மாப்பிள்ளை வீட்டார் வந்து நலுங்கு வைத்து நேத்ராவிற்கு ஆரம் போட்டனர்.

நேத்ராவின் அண்ணன் தீக்ஷித், சந்திர பிரகாஷ்க்கு மோதிரம் அணிவித்தான்.

மாப்பிள்ளையின் சொந்தம் என்று அறிமுகம் ஆன ஒரு பெண்ணால் நேத்ராவின் செல் நம்பர் வாங்கப்பட்டது.

சந்திய பிரகாஷின் பெரியம்மா என்று ஒருவர் வந்து கிண்டலடித்துப் பேசி கொண்டிருக்க, அவள் போன் நம்பர் கேட்க, அவளும் இயல்பு போல் நம்பரை கொடுக்க அதனால் அவள் எதிர்பார்க்காத பல விளைவுகளைச் சந்திக்க நேர்த்தது.

பின்பு அவர்கள் மாப்பிள்ளை வீட்டுக்கு செல்ல அங்கு மோதிரம் மாற்றப்பட்டது.

அங்குக் கலந்து பேசியவர்கள் மூன்று மாதத்தில் திருமணத்தை வைக்க முடிவு செய்தனர்.

நிச்சய விழா முடிந்ததும் எப்போதும் போல வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள்.

அன்று வீடு வந்தவுடன் போன் செய்தவன் அதற்கு அடுத்து போன் செய்யவில்லை.

இரு நாட்கள் அவள் அதைப் பற்றிய யோசனையில் ஆழ்ந்தாள்.

அவளுடன் வேலை செய்யும் நிர்மலா அவளைக் கவனித்து என்னவென்று விசாரித்தாள்.

“நேத்ரா என்னடி யோசிச்சிட்டு இருக்க?”

“இல்லடி. ஃபங்ஷன் அன்னைக்குப் போன் பண்ணாங்க. அதுக்கு அப்புறம் போன் பண்ணல”

“ஓ… ஹப்பி நியாபகமா?” என்று அவள் ஆரம்பிக்க

“கடுப்படிக்காதடி. எல்லாம் மேரேஜ் ஃபிக்ஸ் ஆச்சுனா எப்படி பேசுவாங்கன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன். எங்க அஸ்வதி அக்காவே எவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தாங்க தெரியுமா?”

“ஆனா இவங்க 2 நாளா ஒரு போன் கூடப் பண்ணல. பிடிச்சிதா, பிடிக்கலையானு கூட டவுட் வருது. அவங்க அம்மா, தங்கச்சி தான் பேசறாங்க” என்று புலம்பினாள்.

“ஹேய் கூல்டி. அவங்க அம்மா தான் பேசறாங்கனு சொல்றல்ல. அவங்க கிட்ட கேட்டு பாரு”

“அவங்க அம்மாகிட்டயா?” என்று ஒரு நிமிடம் தயங்கியவள் சரி என்று தலையாட்டினாள்.

அன்று இரவு மைதிலி போன் செய்ய, அவர் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னவள் தயங்கி கொண்டே சந்திர பிரகாஷை பற்றிக் கேட்டாள்.

“அத்தை அவர் எதுவும் போன் பண்ணல” என்று தயங்கியபடியே மெல்லிய குரலில் கேட்க

“அவன் ஏதாவது வேலை செஞ்சிட்டு இருந்திருப்பான். அதான் போன் பண்ணிருக்க மாட்டான். நான் சொல்றேன்” என்றாள்.

நேத்ராவும் சரி என்று சொன்னவள் போனை கட் செய்தாள்.

அடுத்த நாள் மதியம் மூன்று மணிக்கு மேல் நேத்ராவுக்கு அவனிடம் இருந்து போன் வந்தது.

போன் அடிக்கவும் எடுத்து பார்த்தவள் அவன் நம்பரை பார்த்ததும் ஆச்சரியமானாள்.

“ஹலோ”

“ஹலோ நான் சந்திர பிரகாஷ் பேசறேன்”

“சொல்லுங்க”

“என்ன பண்ற”

“பேங்க்ல இருக்கேன்”

“பேங்க்லயா? என்ன எதுவும் பணம் போட வந்தியா?” என்ற அவன் கேள்வியில் அவள் அதிர்ச்சியானாள்.

“இல்ல. நான் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரா வொர்க் பண்றேன்”

“ஓ… நான் மறந்திட்டேன்” என்றவன்

“அம்மா சொன்னாங்க. நீ போன் பண்ணலன்னு சொன்னேன்னு. அதான் போன் பண்ணேன்”

“சரி. நான் வெச்சிடறேன். வேலையிருக்கு” என்று கட் செய்தான்.

நேத்ராவிற்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது.

‘என்ன உடனே வெச்சிட்டான்? முதல் முதல்ல பேசறதால இப்படியோ?’ என்று ஏதேதோ யோசித்தவள்

‘எப்படியும் அம்மா சொன்னேனு தான போன் பண்ணாங்க. அவங்க தங்கச்சி மேல கூடப் பாசம் அதிகம்னு தான சொல்றாங்க. பேமிலில அட்டாச்மெண்ட்டா இருந்தா நம்மளயும் நல்லா தான பார்த்துப்பாங்க. அப்புறம் ஏன் நேத்ரா குழம்பிட்டு இருக்கற. வேலைய பாரு’ என்று தன்னைத் தேற்றியவள் வேலையில் ஆழ்ந்தாள்.

 

❤️ Loading reactions...
அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
உன் கையில் என்னை கொடுத்தேன்
421 13 1
2 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page