காதல் இதுதானா ? – காதல் 10
காதல் 10:
அந்த வார இறுதியில் விஸ்வேஷ்வரன் கூறியதைப் போலவே கிளம்பி வந்து விட்டான்.அந்த பிரபலமான ஜவுளி கடைக்கு முன் காரை நிறுத்தியவன் யாழ்விக்கு அழைத்தான்.
எடுத்த உடனே,” வந்துட்டீங்களா…?” என்றுதான் கேட்டாள்.
“ம்ம்…”,என்றவன் காரை பார்க் செய்வதற்காக அங்கு நின்றிருந்த கடை ஊழியரிடம் கார் சாவியை ஒப்படைத்து விட்டு நிமிர்ந்து கடையை பார்த்தான்.
‘’நான் முன்னாடி வாசலிலேயேதான் நிற்கிறேன்…”,
“ம்..பார்த்துட்டேன்… ‘’,இவன் கூற அவள் பரபரவென்று அந்தக் கூட்டத்தில் இவனைத் தேடுவது இவனுக்குத் தெரிந்தது.
ஏனோ மனதுக்குள் சில்லென்ற சாரல். பிறந்ததில் இருந்து தனியாகவே வளர்ந்தவன்.அவனைத் தேடுவதற்கு என்று இதுநாள் வரை யாரும் இருந்ததில்லை.முதன் முறையாக ஒரு பெண் அவனைத் தேடுகிறாள்..அவனுக்காக காத்திருக்கிறாள்..அனைத்துமே அவனுக்குப் புதிதுதான்.
முகம் இளக்கத்தை தத்தெடுத்துக் கொள்ள அவளை நோக்கி நடந்தான்.அருகில் வந்தவனை அவளும் கண்டு கொண்டாள்.
எப்பொழுதும் அவனை காக்கி உடையில் தான் பார்த்திருக்கிறாள். இன்றுதான் டீ ஷர்ட்..ஜீன்ஸ் பேன்ட்டில் பார்க்கிறாள்.அவளது பார்வை நரம்புகள் முறுக்கேறிய அவனது புஜத்தில்தான் முதலில் விழுந்தது.அவனது புஜங்களை கவ்விப் பிடித்திருந்த டீ ஷர்ட் அவனுக்கு வெகு பாந்தமாய் பொருந்தியிருந்தது.கண்களில் வேறு கூலிங் கிளாஸ் அணிந்திருந்தான்.
“வாங்க..வாங்க…!”,அவள் அழைக்க,கூலிங் கிளாஸை கழட்டியவன் கலைந்திருந்த முன்னுச்சி முடியை கோதி சரிசெய்து கொள்ள..அவளது பார்வை அவனது முன்னுச்சி முடியில் விழுந்து தடுமாறி அவனது கண்களை நோக்கியது.
இன்று ஏனோ அவனது விழிகள் காந்தம் போல் அவளை ஈர்ப்பதாய் அவளுக்குள் ஓர் எண்ணம்.
“உள்ளே போகலாமா…?”, வினவியவனின் குரலில் தன்னை மீட்டெடுத்தவள் ‘சரி’ என்பதாய் தலையாட்டியபடி கடைக்குள் நுழைந்தாள்.
பின் தொடர்ந்தவனின் பார்வை இப்பொழுது அவள் மேல் படிந்தது.எப்பொழுதும் போல் ஜீன்ஸ்..குர்தி அணிந்திருந்தாள்.அதே வழக்கமான ஒப்பனை.. அதே வழக்கமான லூஸ் ஹேர்…!
‘இவ எப்போ பாரு ஜீன்ஸ்..குர்தி தான் போடறாள்…’,அவன் மனம் எப்பொழுதும் போல் நினைத்துக் கொண்டது.
‘அவ எதைப் போட்டால் உனக்கு என்ன..மூடிட்டு வா…’,அவன் மனசாட்சி பின்னணியில் குரல் கொடுக்க..அவன் தன் பார்வையிடுதலை நிறுத்தி விட்டான்.
முகூர்த்த புடவைக்கென தனிப் பிரிவு இருந்தது. அதற்குள் நுழைந்தவர்களை, “வாங்க..வாங்க மாப்பிள்ளை…!”,என்ற பல குரல்கள் வரவேற்றது.
அன்று போல் இன்றும் ஒரு கிராமமே அங்கு குழுமியிருந்தது. வழக்கம் போல் அவன் மலைத்து நின்று விட்டான். யாழ்வி மட்டும்தான் வருவாள் என்று அவன் எண்ணியிருந்தான். இப்படி ஒரு ஊரே திரண்டு வந்திருக்கும் என்று அவன் எண்ணியிருக்கவில்லை.
அப்படியே நின்று விட்டவனைப் பார்த்தவள், “வாங்க..உள்ளே போகலாம்…”என்று அழைத்தாள்.
“எங்கே போனாலும் இப்படி கும்பலாதான் வருவீங்களா..தனியா எங்கேயும் போக மாட்டிங்களா…?”,என்று கேட்டே விட்டான்.
“பின்ன..கல்யாணத்துக்கு முஹூர்த்தப் புடவை எடுக்கறதுன்னா சும்மாவா என்ன…?ஒவ்வொரு விசேஷத்துக்கும் எல்லோரையும் கட்டாயம் கூப்பிடணும்…!இல்லைன்னா..மாமா மச்சான் பங்காளிகளுக்குள்ள சண்டை வந்திடும்…!”அவள் விளக்கமளித்தாள்.
“இவங்க எல்லாம் இல்லாம நாம எதுவும் பண்ண முடியாது..எல்லா சடங்குக்கும் நாம இவங்களை கூப்பிட்டாகணும்…”,பெருமையோடு தன் உறவினர்களை பார்த்தவாறு அவள் மேலும் கூற,
“அது சரி…”,என்றவனின் வாய்க்குள் மேலும் ஏதோ வார்த்தைகள் வந்து முட்டி மோத..இதை கேட்டால் நிச்சயம் அடித்து விடுவாள் என்பது உரைக்க..கஷ்டப்பட்டு அந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டான்.
“என்ன..ஏதோ கேட்க வந்தீங்க…?”,அவனது நினைவை அறியாதவளாய் அப்பாவியாய் அவன் முகம் நோக்க,
“ஒண்ணுமில்ல..வா போகலாம்…”, என்றபடி முன்னே நடந்தான்.
”மாப்பிள்ளை..சௌக்கியமா…?”.
“எப்படி இருக்கீங்க மச்சான்…?”,வித விதமான பாசமான விசாரிப்புகள்,அனைத்திற்கும் பதில் அளித்தவனுக்கு அந்த உணர்வும் சூழ்நிலையும் மெல்ல மெல்ல பிடிக்க ஆரம்பித்தது.
‘எப்படி இருக்கிறாய்…?’ என்று கேட்க கூட யாரும் இல்லாமல் வளர்ந்தவனுக்கு இத்தனை பாசமான உறவுகள் கிடைத்திருக்கிறது.அவன் மனதின் ஓரத்தில் சிறு நெகிழ்ச்சி தோன்றியது உண்மைதான்.
பெண்கள் குழு புடவையில் மூழ்கி விட..ஆண்கள் அணி சற்றுத் தள்ளி பேச்சில் மையம் கொண்டிருந்தது.
போனும் கையுமாக அமர்ந்து விட்டவனின் அருகில் வந்தமர்ந்தார் ரகுவரன்.
“அப்புறம் மாப்பிள்ளை. வேலையெல்லாம் பரவாயில்லையா…?”,அவனது வேலையில் பேச்சை ஆரம்பித்தவர்.. திருமணம் பத்திரிக்கை என சுற்றி வந்து தோப்பு துரவு..வெள்ளாமை என பேச ஆரம்பிக்க..அவனும் ‘உம்’ கொட்ட ஆரம்பித்தான்.
நேரமாக ஆக அவனும் அவரது பேச்சில் ஐக்கியமாகி விட..இருவருக்கும் இடையே ஒரு அழகான உறவு மலர ஆரம்பித்தது.
“நீங்க சொல்றதும் சரிதாங்க…”அவர் எதையோ கூறியதற்கு அவன் கூற,
“இன்னும் என்னங்க மாப்பிள்ளை…’மாமா’ன்னு கூப்பிடுங்க…!”,என்றார் ரகுவரன் உரிமையோடு.
“சரிங்க மாமா…!”,அவரை உறவு முறை சொல்லி அழைக்கும் அளவிற்கு அவருடன் அவனுக்கு நெருக்கம் உண்டானது.
“மச்சான்…!அக்கா புடவை செலெக்ட் பண்ணிட்டாங்க… நீங்க வந்து பார்க்கலையா…?”,தாவணி பாவாடை அணிந்திருந்த ஒரு இளம் வயது பெண் வந்து அவனை அழைக்க,
“மச்சானா…?” என்றபடியே நிமிர்ந்து பார்த்தான் அவன்.
அவனை அனைவரும் ‘சார்..சார்’ என்றுதான் அழைப்பார்கள்.இந்த ‘மச்சான்’ உறவு முறையெல்லாம் அவனுக்குப் புதிது.சொல்லப் போனால் திரைப்படங்களில் பார்த்ததோடு சரி.. நேரில் யாரும் யாரையும் ‘மச்சான்’ என்று அழைத்தெல்லாம் அவன் கண்டதில்லை.
“இவ என்னுடைய தம்பி பொண்ணு சுவாதி.எங்க முறைப்படி அக்கா வீட்டுக்காரரை ‘மச்சான்’ன்னுதான் அழைப்போம்…!”, ரகுவரன் விளக்கம் கூறினார்.
“வாங்க மச்சான்…!”,அந்தப் பெண் மீண்டும் அழைக்க,
“இதுல நான் பார்க்க என்ன இருக்குது ம்மா… உன் அக்காவுக்கு எது பிடிச்சிருக்கோ அதை எடுக்க சொல்லு…!”,அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே யாழ்வி திரும்பி அவனைப் பார்த்தாள்.
அவள் ஏதோ அவனிடம் கேட்க விளைவதை அவன் புரிந்து கொண்டான்.எனவே,”சரி.. வா போகலாம்…!”,என்றபடி அந்தப் பெண்ணுடன் இணைந்து நடந்தான்.
அவன் யாழ்வியை நெருங்கவும் சுற்றியிருந்த பெண்கள் கூட்டம் வெட்கப்பட்டுக்கொண்டு அங்கிருந்து அகன்றனர்.
அவளருகே அமர்ந்தவன்,”என்ன…?”,என்று வினவ,
“அது வந்து..உங்க பட்ஜெட் என்னன்னு நான் கேட்கவே இல்லை…!அதுக்குத்தான் கூப்பிட்டேன்…என்ன விலைல புடவை எடுக்கட்டும்…?”,தயங்கித் தயங்கி கேட்டவளை ஏனோ அவனுக்கு அவ்வளவு பிடித்துப் போனது.
”உனக்குப் பிடிச்சதை எடு…!விலையெல்லாம் ஒரு மேட்டரே இல்லை…என்னால செலவு பண்ண முடியும்.. டோன்ட் வொர்ரி…”,அவன் கூறி விட,
“தேங்க்ஸ்…”என்றபடியே புடவை எடுப்பதில் மும்முரமானாள் அவள்.அவனுக்கு ஒரு போன் கால் வந்துவிட, போனை காதுக்கு கொடுத்தபடி அங்கிருந்து அகன்றான் அவன்.
பச்சை வண்ண புடவை..ஆரஞ்சு நிற பார்டர் என அட்டகாசமாய் காஞ்சிபுரம் பட்டு ஒன்றை தேர்ந்தெடுத்தாள் அவள்.தூய பட்டு ஜரிகைகளால் நெய்யப்பட்ட அந்தப் புடவை அழகாக கண்ணைப் பறித்தது.யாழ்வி எப்பொழுதுமே அடர்ந்த வண்ணங்களைத்தான் ரசிப்பாள்.எனவே,முகூர்த்த புடவையும் அவளுக்குப் பிடித்ததைப் போல் அடர்ந்த நிறத்திலேயே எடுத்துக் கொண்டாள்.
“இது ஓகே…!”,அவள் முடிவாக கூற,
“மாப்பிள்ளையை ஒரு வார்த்தை கேட்டுட்டு முடிவு எடும்மா…!”,அவளது அன்னைதான் கூறினார்.
அவளுக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை போலும்.அவர்கள் ஒன்றும் கனவுகளிலும்.. எதிர்பார்ப்புகளிலும் மூழ்கி கல்யாணம் செய்து கொள்ளவில்லையே… எனவே,அவனிடம் காட்டிப் புடவை எடுக்க வேண்டும் என்று அவளும் நினைக்கவில்லை.உடன் இருந்து தங்களுக்கான கல்யாணப் புடவையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவனும் எண்ணவில்லை.
சுற்றியிருந்தவர்களும் அதையே கூற அவர்களுக்காகவாவது அவனிடம் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
சற்றுத் தள்ளி போனில் பேசிக் கொண்டிருந்தவன் இவள் திரும்பிப் பார்க்கவும் ‘என்ன’ என்பதாய் புருவம் உயர்த்தினான்.
‘ஒரு நிமிஷம்…’அவள் கண்களால் அழைக்க..போன் பேசியபடியே அவளருகில் வந்தான்.
‘இது ஓகேவா…?’, புடவையை சுட்டிக்காட்டி அவள் சைகையால் வினவ,
என்ன நினைத்தானோ.. ஒரு நொடி அவளை ஆழ்ந்து பார்த்தவன்,’ம்..’,என தலையசைத்தான்.
புடவையை பில் போட அனுப்பி விட்டு நகைப்பிரிவிற்கு சென்றனர்.
பெண் வீட்டு முறைப்படியே மாங்கல்யம் வாங்கப்பட்டது.தாலிக்கொடி தெரிவு செய்யும் போது மட்டும் விஸ்வேஷ்வரன் குறுக்கிட்டான்.
யாழ்வி..கழுத்தை உறுத்தாத வகையில் மூன்று பவுனில் ஒரு கொடியைத் தேர்வு செய்ய..அவனோ பதின்மூன்று பவுனில் கனமான தாலிக்கொடியை தேர்வு செய்தான்.
“இவ்வளவு கனமா எதுக்கு…? ஜீன்ஸ் குர்தி போட்டுக்கிட்டு இவ்வளவு பெரிய தாலிக்கொடி போட்டுட்டு போனால்.. ஒரு மாதிரி வியர்டா இருக்கும்…!எனக்கு இதுவே போதும்…!”,அந்த மெல்லிய மூன்று பவுன் சங்கிலியை கையில் வைத்துக் கொண்டு அவள் கூற,
ஏனோ கண்டிப்புடன் மறுத்தான் அவன்.
“எல்லோருக்கும் தெரியணும்ங்கிறதுக்காக போடறதுதான் தாலிக்கொடி…!எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு…!”,அவன் அந்த பதின்மூன்று பவுன் தங்கச்சங்கிலியை விடுவதாக இல்லை.
“யாழ்வி…!மாப்பிள்ளை விருப்பப்படியே எடு…!” அவளது அன்னையும் சித்தியும் காதைக் கடிக்க,சுற்றி இத்தனை பேர் இருக்கும் போது அவளால் அவனை மறுக்க முடியுமா என்ன…?
“சரி…”,என்று தலையாட்டி விட்டாள் வேறு வழியின்றி.
“தாலிக்கொடி பொண்ணுங்க நாங்க போடறது.. நீங்க எதுக்கு அதுல தலையிடறீங்க…?”,பில்லை கட்டிக் கொண்டிருந்தவனின் அருகே வந்தவள் யாரும் அறியாமல் அடிக்குரலில் முணுமுணுக்க,
“புடவையும்தான் நீ கட்டறது… அதை மட்டும் ‘ஓகே வா..’ன்னு எதுக்கு என்கிட்ட கேட்ட..?”,திருப்பிக் கேட்டு அவள் வாயை அடைத்து விட்டான்.
கிளம்பும் போது ஒரு பையை ரகுவரனிடம் கொடுத்தான் விஸ்வேஷ்வரன்.
”இது என்னங்க மாப்பிள்ளை…?”,
“பணம் மாமா…கல்யாண செலவுக்கு வைத்துக்கோங்க…!”,
“அய்யோ..அதெல்லாம் வேண்டாம் மாப்பிள்ளை…கல்யாண செலவு பெண் வீட்டினுடையதுதான்…”, பதறிப் போய் மறுத்தார் அவர்.
“இருந்துட்டுப் போகட்டும்…! இது எனக்கும் கல்யாணம்தான்…என்னுடைய கல்யாணத்துல என் பங்கும் இருக்கணும்ன்னு நான் விரும்பறேன்..!தயவு செய்து வாங்கிக்கோங்க…!”,
அப்பொழுதும் அவர் தயங்க, “இப்போ மட்டும் நீங்க வாங்கல..நான் கல்யாண ஏற்பாட்டை இங்கே சென்னையிலேயே பார்க்க ஆரம்பிச்சிடுவேன்…!”,போலியாக மிரட்டினான்.
மறுக்க முடியாமல் பணத்தை வாங்கிக் கொண்டவருக்குள் ஒரு நெகிழ்ச்சி.
”அப்புறம் மாமா… எதுவா இருந்தாலும் என்கிட்டே தயங்காம சொல்லுங்க…!” புடவை..தாலி வாங்குவது மாப்பிள்ளை வீட்டு முறை என கூற அவர் தயங்கியதை சுட்டிக்காட்டி அவன் கூற,அவருக்கும் அது புரிந்தது.
“சரிங்க மாப்பிள்ளை…!”,தலையாட்டி வைத்தார் அவர்.
அனைவரிடமும் விடைபெற்று அவன் கிளம்பி விட, நெகிழ்ச்சியுடன் மகளின் தலையை நீவி விட்டார் ரகுவரன்.
”நாங்களா தேடியிருந்தால் கூட இப்படியொரு மாப்பிள்ளை கிடைத்திருக்குமான்னு தெரியலை ம்மா…!அந்தக் கடவுளா பார்த்து உனக்கு அமைச்சுக் கொடுத்த வாழ்க்கை இது… ரொம்ப சந்தோசம்..!”, ஒரு தகப்பனாய் அவர் மனம் நிம்மதி கொண்டது.
அவன் பணம் கொடுத்தது அவளுக்குள்ளும் சிறு நெகிழ்ச்சியைத் தோற்றுவித்திருந்தது.எந்தப் பெண்ணுக்குமே தன் கணவன் தன் பிறந்த வீட்டையும் நேசிக்கிறான் என்பது மகிழ்ச்சியைத்தானே கொடுக்கும்…!
அடுத்தடுத்து நாட்கள் விரைய..விஸ்வேஸ்வரனும் தனது அலுவலில் மூழ்கினான்.திவ்யாவின் கொலை சம்மந்தமாக அவனுக்கு சிறு துரும்பு கூட கிடைக்கவில்லை.சிட்டியில் இருக்கும் அனைத்து அடியாட்களையும் சல்லடை போட்டு சலித்து விட்டான்..அன்று யாழ்வியைத் தாக்க வந்த ரௌடிகளை மட்டும் கண்டறிய முடியவில்லை.எப்படி கண்டுபிடிக்க முடியும்.. வேத வர்ஷன் தான் அனைவரையும் மும்பைக்கு அனுப்பி விட்டானே..எட்டு மாதங்கள் யாரும் இந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டாம் என்ற கட்டளையோடு.
அவனுக்கு சக்ரவர்த்தியின் மேல்தான் சந்தேகம் இருந்தது.அவரும் இப்பொழுது சிறையில் இருப்பதால் அந்த சந்தேகத்தையும் அவனால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. வேத வர்ஷன் இந்தளவிற்கு இறங்குவான் என்று அவன் எண்ணியிருக்கவில்லை.
‘வேதா பாட சாலைகளை’ அவன் திறம்பட நடத்தியது கூட அதற்கு காரணமாக இருக்கலாம். எனவே,விஸ்வேஷ்வரனின் கவனம் வேத வர்ஷனின் மீது விழவில்லை.ஆக மொத்தம்.. திவ்யாவின் கொலை சம்பவம் கிணற்றில் போட்ட கல்லாகத்தான் இருந்தது
தொடரும்…
