நள்ளிரவு மணி இரண்டு என்பதற்குச் சாட்சியாய், கடிகாரம் இரண்டு முறை அதன் டிங் என்ற சத்தத்தை எழுப்ப, இருள் சூழ்ந்த அந்த அறையின் முன்கூடத்தில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தாள் அவள்.
கைவிரல்கள் எதையோ தீவிரமாக, அதே நேரம் அவசரமாக, அந்தத் தொலைபேசியில் வேலைச் செய்து கொண்டிருக்க, அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
“நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் தொடர்pசுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.” என்ற பதிலே திரும்பத் திரும்ப வர, வெறுப்பின் உச்சத்தில் இருந்தவளின் விழிகள், கண்ணீரைச் சிந்திய வண்ணம் இருந்தன.
கடைசியாக என்று அவள் முயற்சித்த ஒவ்வொரு முறையும், அவளுக்கு அதே பதிலே வர, அவள் கடக்கும் அந்த ஒவ்வொரு நொடியும், அவளுக்கு ஒரு யுகமாய்க் கழிந்தது.
“எடு… போனை (phone) எடு யாழா!” என்றவளின் பொறுமை காற்றில் பறக்க, அதீத கோபத்தில், தொலைபேசியை எதிரில் இருந்த சுவரில் தூக்கி அடித்தாள் அவள்.
வெறுப்பின் உச்சத்தில், கோபத்தில் கண்கள் சிவக்க, தலைமுடியைத் தன் இரு கைகளால் இறுகப் பற்றியவாறு அமர்ந்திருந்தவள், ஒரு நிமிடத்திற்கு மேல் தாள முடியாமல் கதறி அழ ஆரம்பித்தாள்.
இரண்டு மணி நேரமாக, அடக்கி வைத்த அழுகை பீறிட்டு எழ, கதறி அழ ஆரம்பித்தவளின் அழுகை, அந்த வீட்டின் எல்லாத் திசையிலும் எதிரொலிக்க, அங்கே அவளைத் தடுக்கவோ அரவணைக்கவோ யாருமில்லை.
ஆம், அவளின் பெற்றோர் உறவினர் ஒருவரின் திருமணத்திற்குச் சென்றுவிட, இவளுக்கு இங்கே அவள் அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காததால், அவளை மட்டும் தனியே விட்டுச் செல்லும் கட்டாயத்தில், ஆயிரம் பாதுகாப்பு அறிவுரைகளைச் சொல்லிவிட்டே சென்றவர்கள், மனதில் ஒரு பிள்ளை போதும் என்று, தாம் எடுத்த முடிவை நினைத்து வருந்திவிட்டே சென்றனர்.
சத்தமிட்டு கதறி அழுது கொண்டிருந்தவளின் அழுகை, நேரம் ஆக ஆக அதிகரித்ததே இன்றிக் குறையவில்லை.
அதுவும், அந்தக் கனவு வேறு அவளுக்கு அடிக்கடி நினைவுக்கு வந்து, அவள் பயத்தை அதிகரிக்கச் செய்யவே, பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக அழுது கொண்டிருந்தாள் அவள்.
அவள் பெயர் மகிழினி. ஆம், நம் கதையின் நாயகி இவளே. இவளைப் பற்றிச் சொல்வதை விட, கதையின் போக்கில் நீங்களே புரிந்துகொள்வதே நல்லது.
காலைக் குறுக்கி, சோபாவில் தலையைச் சாய்த்து அழுதுக் கொண்டிருந்தவள், தீடீரெனக் கேட்ட காலிங் பெல் சத்தத்தில் வேகமாக எழுந்தாள்.
எதையும் யோசிக்காமல் ஓடிச்சென்று கதவைத் திறந்தவள், எதிரில் நின்றவனைத் தாவி அணைத்துக் கொண்டாள். அவனும், அதை எதிர்பார்த்தவன் போல, பதிலுக்கு அணைத்துக் கொண்டவன், கண்களும் கலங்கி இருந்தன. ஆனால், அதற்கான காரணத்தை அவன் மட்டுமே அறிவான்.
அவள் உடல் நடுங்கிக் கொண்டிருக்க, அவனை அணைத்துக் கொண்டிருந்தவள், மேலும் மேலும் அவனைத் தன்னுள் புதைத்து விடும் முயற்சியில் செயல்பட்டுக் கொண்டிருக்க, “என்னம்மா!, என்னாச்சுடா?” என்றவன் அதற்கான பதிலை அறியாமல் இல்லை.
தலையைத் தடவிக் கொடுத்து, அவளைச் சமன்படுத்த முயன்றுக் கொண்டிருந்தவனின் மனதுக்குள், பெரும் பிரளயமே நடந்து கொண்டிருப்பதை அவன் மட்டுமே அறிவான்.
நேரம் ஆக ஆக, அவளின் அழுகைச் சத்தம் மெல்ல மெல்ல குறைந்து, வெறும் விசும்பல் ஒலி மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது அங்கே. அதுவும் சிறிது நேரத்தில் நின்றுவிட, புயலென அவனை விட்டு பிரிந்தவள், தீ பார்வை ஒன்றை வீசிவிட்டு விருட்டென உள் நுழைந்தாள்.
அவளின் செய்கை, அவனுள் சிறு புன்னகையைத் தோற்றுவிக்க, மெலிதான புன்னகையோடு, அவளின் பின்னால் செல்லப் போனவனின் நடை தடைப்பட்டது, அந்த வீட்டின் வாசல்படியைப் பார்த்து…
ஆம், இதற்கு முன்னர் அவன் இங்கு எந்த எண்ணத்தோடு வர நினைத்தான், என்ற சிந்தனையே அவன் நடையைத் தடுத்து நிறுத்த, மனதில் குறுகுறுப்போடு நின்று கொண்டிருந்தான் அவன்.
“கிரட்ச்”.
குழப்பத்தோடு நின்றிருந்தவன், தீடீரெனக் கேட்ட சத்தத்தில், திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்த்தான்.
டீ பாய் மேலே இருந்த பீங்கான் பூந்தொட்டி கீழே விழுந்து நொறுங்கி இருக்க, அதை உடைத்தவளோ, அடுத்து உடைக்கப் பொருளை தேடிக் கொண்டிருந்தாள்.
இன்னும் சிறிது நேரம் தாமதித்தாலும், நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்தவன், வேகமாக அவளை நோக்கிச் சென்றான்.
“மகிழ், என்ன பண்ற?” என்றவன் அவளின் கையைப் பிடிக்க, தீச்சுட்டத்தைப் போல வேகமாக அவனின் கையை உதறியவள், அங்கிருந்த அனைத்து பொருளையும் கீழே தள்ளிவிட ஆரம்பித்தாள்.
அவளின் செய்கை அவனுக்கு அதிர்ச்சியைத் தந்தாலும், வேகமாக அவளை நெருங்கியவன், அவளின் கையை இறுக்கப் பிடித்து அவனை நோக்கி இழுத்தான்.
“மகிழ், என்ன பண்ற? உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சுருக்கா?” என்றவனின் கண்கள் கோவத்தில் சிவந்திருந்தன.
“ஆமா, எனக்குப் பைத்தியம்தான் புடிச்சிருக்கு. இந்த ரெண்டு மணி நேரமா உனக்கு என்ன ஆச்சுன்னு யோசிச்சு யோசிச்சு எனக்குப் பைத்தியம்தான் பிடிச்சிருக்கு யாழா” என்றவளின் கண்கள் தண்ணீரை சொரிய ஆரம்பித்தன.
“மகிழ்!” என்றவன் பேச ஆரம்பிக்க, கையை முகத்துக்கு நேராக நீட்டி, தலையை மறுப்பாக அசைத்து தடுத்தவள்.
பெருமூச்சொன்றை வெளியிட்டு, “நம்ப ரெண்டு பேரும் பிரிஞ்சறலாம் யாழா.” என்றவளின் கூற்றில் அதிர்ச்சிக்கு பதிலாக, அவன் முகம் புன்னகையைத் தத்தெடுத்திருந்தது.
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
“அஹ்ஹ்…”.
“ஆஆஆஆ…”.என்று ஒருவனின் வித விதமான கதறல் சத்தம் தான், அந்த அறை எங்கிலும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
அது கதறல் சத்தம் என்று சொல்வதை விட, மரண ஓலம் என்று சொல்வதே சரியாக இருக்கும். ஆம், மரண ஓலம்தான்.
இறக்கப் போகும் தருவாயில் இருக்கும் ஒருவனின் அழுகையையும், கதறலையும், மரண ஓலம் என்றுதானே சொல்வார்கள். அப்படிப் பார்த்தால் அது நிச்சயம் மரண ஓலம்தான்.
உடலில் உள்ள ரத்தம் அனைத்தும், அவன் உடலில் இல்லாமல் அந்தத் தரையில்தான் இருக்கிறதோ என்று, சந்தேகம் கொள்ள வைக்கும் வகையில், ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான் அவன்.
அவன் உடம்பில் இன்னும் உயிர் ஒட்டிக்கொண்டு இருப்பதே, பெரிய அதிசயம் என்பதுபோல, இருந்த அவனது நிலையைப் பார்த்த பின்பும், எதிரில் இருந்த ஒருவனுக்குக் கோவம் அடங்கிய பாடில்லை.
வெறிகொண்ட வேங்கையாக, தன் எதிரில் இருந்தவனை வதம் செய்து கொண்டிருந்தவன், டிப்டி கமிஷனர் என்று அழைக்கப்படும், மாவட்டத்தின் துணைத்தலைமை காவல் அதிகாரியான, ஆதித்த கரிகாலன். நம் கதையின் நாயகன்.
ஆதித்த கரிகாலன்… பெயருக்கு ஏற்றாற்போலக் கம்பீரமும் அழகும் ஒருங்கே இணையப் பெற்றவன்.
நாவல்களின் தீவிர ரசிகரான அவனின் தந்தை, பொன்னியின் செல்வன் நாவலில், அவர் அதிகம் ரசித்த கதாபாத்திரமான, ஆதித்த கரிகாலன் என்ற பெயரை அவனுக்கு வைத்து அழகு பார்த்தார்.
இந்தப் பெயரை வைத்ததாலோ என்னவோ, அவனுக்கு அந்தக் கதாபாத்திரங்களின் குணங்கள் அதிகம் ஒத்துப் போயின.
அழகும் கம்பீரமும் அவனைப் பார்த்து பிரமிக்க வைத்தால், அவனின் கோவம் அவனைப் பார்ப்பவர்களைச் சற்றே எட்டித் தள்ளி நிறுத்தும்.
இப்போது கூட, உயிர் போகும் அளவுக்கு ஒருவனை அவன் வதைத்துக் கொண்டிருக்க, அதைத் தடுக்கும் தைரியம் தான் யாருக்கும் வரவில்லை.
தாடை இறுக, பற்களை நர நரவெனக் கடித்து, அவன் ஆடும் ருத்ரதாண்டவத்தைப் பார்த்து, எமனும் கூட அவன் அருகில் வர பயப்படுவார் என்றே தோன்றியது.
அப்படி இருக்க, அந்தக் காவல் நிலையத்தில் இருக்கும், அவனுக்குக் கீழ் வேலை பார்க்கும், அவர்களுக்கு மட்டும் அவனை எதிர்க்கும் தைரியம் வந்துவிடுமா என்ன?.
அவன் இறந்து விடக் கூடாது என்ற வேண்டுதலோடு தள்ளி நிற்பதை தவிர, அவர்களுக்கு வேறு வழியும் தெரியவில்லை, அவனைத் தடுக்கும் தைரியமும் வரவில்லை.
வலியின் வீரியம் தாங்காமல் அவன் ஆழ்ந்த மயக்கத்திற்குச் சென்று விட, அப்போதும் கூட அவனை அடிப்பதை நிறுத்தவில்லை அவன்.
நொடிக்கு நொடி மாறும், அவன் முகப் பாவனையிலே தெரிந்தது, அவன் எதையோ நினைத்து, நினைத்து, அந்த நினைவின் வீரியம் தாங்காமல், இவனைச் சிதைத்துக் கொண்டிருக்கிறான் என்று.
இதற்கு மேல் ஒரு நொடி தாமதித்தாலும், அவன் இறந்து விடும் அபாயம் உள்ள சூழ்நிலையில், எங்கிருந்தோ ஒருவன் புயல் போல் உள் நுழைந்து அவனைத் தடுத்தான்.
“சார், சார், சார், சார்!” என்றவன் அவனைக் கட்டுப்படுத்த முயல,
“ஏய்!” என்ற ஒரே கர்ஜனையில், ஐம்புலன்களும் ஆட்டம் கண்டதைப் போல உணர்ந்தவனுக்கு, வார்த்தைகள் வர மறுத்து உதடுகள் இரண்டும் தந்தியடித்தன.
இருந்தாலும் கண்களை இருக்க மூடியவன், இதயம் படபடக்கத் திக்கிக்கொண்டே சத்தமாகச் சொல்லி முடித்தான்,” இ…சை மே…ம்தான் உங்கள தடு..க்க சொன்னா… ங்க சார்!. அவங்…கதான் லைன்ல இருக்…காங்க.” என்றவன் தொலைபேசியை அவனின் முகத்திற்கு நேராக நீட்டினான்.
“ஆதி!” என்ற கடுமை கலந்த ஒரு பெண்ணின் குரலில், அவன் கையில் இருந்து தடி தானாகக் கீழே நழுவி விழ, எதுவும் பேசாமல் அங்கிருந்து அமைதியாக வெளியேறினான் அவன்.
அவன் செல்லும் வரை உயிரை கையில் பிடித்துக் கொண்டு நின்றிருந்தவன், அவன் சென்றவுடன் கண்களை இறுக்க மூடி, நிம்மதி பெரும் மூச்சு ஒன்றை வெளியிட்டு, தன்னைச் சமன்படுத்த முயன்றான் அந்தப் புதியவன்.
ஆனால், கண்களைத் திறந்த மறுநொடி அவன் கண்ட காட்சி அவன் மூச்சை நிறுத்துவது போல இருந்தது.
” இங்கு நடக்க வேண்டிய ப்ரொசீஜர் எல்லாத்தையும் கரெக்டா முடிச்சிட்டு, என்னைத் தனியா வந்து பாருங்க மிஸ்டர். செல்வா!” சென்றுவிட்டான் என்று நினைத்தவன், முகத்திற்கு அருகில் வந்து இப்படி ஒரு வார்த்தையைச் சொல்ல, மூலை செயலிழந்தது போல் நின்றான் அவன்.
தொடரும்..…
அனைவருக்கும் தை திருநாள் நல்வாழ்த்துக்கள் பிரண்ட்ஸ். படிச்சுட்டு எப்படி இருக்குன்னு உங்க கருத்துகளை மறக்காமல் சொல்லிட்டு போங்க. எதாவது தப்பு இருந்தாலும் சொல்லுங்க, அது என் எழுத்தின் திருத்தத்துக்கும் இன்னும் என்னை மேம்படுத்துவதற்கும் உதவும். விரைவில் அடுத்தப் பாகம் வெளியாகும். நன்றி!
