அத்தியாயம் – 1
விடிந்தும் விடியாததுமான காலைப்பொழுது. மணி நான்கை நெருங்கியது எப்படி அவருக்கு தெரிந்ததோ வழக்கம் போல் எழுந்து கூடத்தில் இருந்த வாளியையும் துடப்பத்தையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு சென்றார் கீதா.
அந்த சத்தத்தில் கண் விழித்த பவித்ரா தெளியாத தூக்கத்தில் எழுந்து அன்னைக்கு உதவ சென்றாள். ஐந்து நிமிடம் தாமதமானால் போதும் அவள் பாட்டி காமாட்சி உரலில் வெத்தலைக்கு பதில் அவளை வைத்து இடித்து விடுவார்.
“அம்மா எதுக்கும்மா டெய்லி என்னை நாலு மணிக்கு முன்னாடியே எழுப்பி வேலை செய்ய சொல்லுறிங்க. எனக்கு தூக்கமா வருது” என்று கொட்டாவி விட்டக் கொண்டே வாசலை பெருக்க ஆரம்பித்தாள்.
அவளது கேள்விக்கு சிரிப்பை பதிலாக கொடுத்தவர் நீரைத் தெளித்து கோலமிட ஆரம்பித்தார். அவர் இட்ட கோலத்திற்கு வர்ணம் தீட்டியவள், “அம்மா இன்னைக்காவது பொங்கல் பண்ணி தாங்கம்மா” என்று அவரை சொரண்டினாள்.
“சரி டா பாட்டிக்கிட்ட கேட்டுட்டு பண்ணி தரேன்” என்று சொல்லிமுடிக்கும் முன்பே …
“கீதா காப்பி போட்டுட்டியா?” என்று காமாட்சி குரல் கொடுத்தார்.
அதில் கையில் இருந்த கோலப்பொடியை பவித்ராவின் கையில் கொடுத்து விறுவிறுவென சமையலறைக்குள் புகுந்தார்.
“தெனமும் இவக் கிட்ட ஒரு வாய் காப்பி தண்ணி வாங்கி குடிக்கிறதுக்குள்ள கத்தி கத்தி தொண்ட தண்ணி வத்தி போகுது” என்று வழக்கம்போல் கீதாவை வாயில் போட்டு அரைக்க ஆரம்பித்தார் காமாட்சி.
வேகவேகமாக காப்பியை போட்டவர் காமாட்சியிடம் கொடுக்க, “இதை போட்டு வர உனக்கு இம்புட்டு நேரமா? என்னத்த தான் அந்த சமையக்கட்டுல பண்ணுவியோ?” என்று திட்டியவர் அதை வாங்கி குடித்தார்.
தயங்கியப்படி அங்கேயே நின்றிருந்த கீதாவை பார்த்தவர், “எதுக்கு இப்படி பம்பிட்டு இருக்க. செலவுக்கு காசு எதும் வேணுமா?”
“இல்லங்க அத்தை. பவி பத்து நாளா பொங்கல் கேட்டுட்டு இருக்கா. அதுதான் இன்னைக்கு சமைக்கவானு கேட்க நின்னேன்” என்றவரிடம்,
“பொம்புள பிள்ளைக்கு இம்புட்டு செல்லம் கொடுக்காத சொல்லிட்டேன். அப்படி என்ன வாய்க்கு வக்கணை கேக்குது அவளுக்கு. செய்யுறத திங்கமாட்டளா அந்த மகாராணி. இது தான் கடைசி தடவை சும்மா அவ அதை கேட்டா இதை கேட்டானு வந்து நிக்காத. போய் பூரியும் கிழங்கும் செய். நாளைக்கு அவ கேட்ட பொங்கலை செய்.” என்றவர் கூடத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
காமாட்சியின் வசவை கேட்டு பழகிய கீதா எப்பொழுதும் போல அமைதியாக அவர் சொன்னதை செய்ய ஆரம்பித்தார். காமாட்சி தன் கணவர் சென்னியப்பன் இறந்த பிறகு மொத்தக் குடும்பத்தையும் தன் கையில் எடுத்தார். அன்று முதல் இன்று வரை அவரது பேச்சுக்கு மறுவார்த்தை இன்றி அனைத்தும் நடந்துக் கொண்டிருக்கிறது.
காமாட்சிக்கு மொத்தம் இரண்டு மகன் ஒரு மகள். மூத்தவள் செந்தாமாரையை பக்கத்து ஊர் பஞ்சாயத்து தலைவருக்கு கட்டி கொடுத்து அவருக்கு இருபத்தியேழு வயதில் ஒரு மகன் இருக்கின்றான். ஆறு மாதத்திற்கு முன் நெஞ்சுவலியில் செந்தில்நாதன் இறைவனடி சேர்த்திருக்க நொடிந்து போயிருந்தார் செந்தாமரை.
அவரது மகன் கரிகாலன் தான் செந்தில்நாதன் விட்டு சென்றதை பராமரித்து வருகின்றான். மேலும் இடைதேர்தலில் பஞ்சாயத்து தலைவர் இடத்திற்கு நின்றவன் அதில் வெற்றியடைந்து தற்போது சிறப்பாக நிர்வாகம் செய்து வருகின்றான்.
இரண்டாவதாக பிறந்தவர் தான் முத்துராமன். தாய் சொல்லை தட்டாத பிள்ளை ஐம்பது வயது கடந்திருந்தாலும் அனைத்திற்கும் அன்னையிடம் தான் ஒப்புதல் கேட்பார். அவருக்கு ஏற்றார் போல அவரது மனைவி கீதாவும் அமைந்து விட இன்று வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக குடும்பம் ஒடுக்கிறது.
முத்துராமன் கீதா தாம்பதிக்கு இரண்டு பிள்ளைகள். முத்தவள் பவித்ரா இளங்கலை மூன்றாவது ஆண்டு படித்துக் கொண்டு இருக்கின்றாள். படிப்பு முடித்ததும் உடனே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மொத்தக் குடும்பமும் காத்துக் கொண்டு இருக்கிறது.
இரண்டாவது கார்த்திக் இப்போது தான் பத்தாவது படித்துக் கொண்டு இருக்கின்றான். சரியான அருந்தவால் எல்லாம் அன்னை மற்றும் அக்காவிடம் தான். வாயை திறந்தால் படிப்பு மற்றும் குடும்ப தொழில் பற்றி மட்டுமே அந்த வீட்டில் பேச வேண்டும். கேலி கிண்டலாக எல்லாம் அந்த வீட்டில் பேசினால் அவ்வளவு தான் தோளை உரித்து விடுவார்கள்.
இயல்பில் கலகலப்பானவர்கள் தான் பவித்ராவும் கார்த்திக்கும். அவர்கள் வீட்டினருக்கு பயந்து அவர்களது சுட்டித்தனங்களை வீட்டிற்கு வெளியே மட்டுமே காட்டுவார்கள்.
காமாட்சியின் இரண்டாவது மகன் சேதுராமன். அவரின் மனைவி செல்வி அவர்களுக்கு ஒரே மகள் கார்த்திகா. இப்போது தான் ஆறாவது படிக்கிறாள். சிறுபிள்ளைக்கான எந்த அடையாளமும் அவளிடத்தில் இருக்காது. சேதுராமனின் ஒற்றை பார்வையிலேயே நின்ற இடத்தில் சிறுநீர் கழித்து விடுவாள் அந்த அளவுக்கு பயம்.
ஒரே பெண் பிள்ளை என்பதால் அவளை தான் கண்ணசைவில் வைத்திருந்தார் சேதுராமன். காமாட்சியின் மறுபதிப்பு தான் சேதுராமன். முத்துராமன் அழுத்தமானவராக இருந்தாலும் பெற்ற பிள்ளைகளிடம் பாசமாக தான் இருப்பார். தனது அறைக்குள் வந்துவிட்டால் கீதாவிடம் கூட மென்மையாக தான் பேசுவார்.
என்ன ஒன்று காமாட்சி கீதாவை பேசுவதை மட்டும் இதுவரை ஏன் என்று கேட்டது இல்லை. திருமணம் ஆன அன்றே கீதாவிடம் சொல்லிவிட்டார். உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் அம்மாவிடம் மட்டும் உனக்கு பரிந்து நான் எப்போதும் பேசமாட்டேன். அதே சமயம் தனிக்குடித்தனம் போக கேட்க கூடாது. மற்றும் காமாட்சியை அனுசரித்து அமைதியாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்.
இயல்பிலேயே மென்மையானவர் கீதா அதிர்ந்து கூட பேச தெரியாதவர். யாரேனும் திட்டினால் கூட பதில் பேசாதவர். மனதிற்கு வலித்தால் கூட தனிமையில் தான் வருந்துவாரே தவிர நேருக்கு நேர் யாரிடமும் சண்டையிட்டது இல்லை. ஆனால் அவருக்கு நேர்மாறாக அவருக்கு பிள்ளைகள் அமைத்திருக்கிறார்கள். பதில் பேச நினைக்கும் பிள்ளைகளை அடக்கி அறைக்குள் தள்ளுவது அவரின் தினசரி வேலையாக போனது.
அன்றும் ஒரு பொங்கலுக்கு காமாட்சி பேசிய பேச்சுக்கு கையில் இடிக்கல்லுடன் வந்த மகளை அப்படியே அடுப்பங்கரைக்கு இழுத்து சென்றார் கீதா.
அப்பொழுது உள்ளே வந்த செல்வியோ, “இடிக்கல் வைச்சு என்ன பண்ணிட்டு இருக்க பவி. காலுல போட்டுக்க போற இங்க கொடு” என்று வாங்கி வைத்தவர் கீதாவிடம் புலம்ப ஆரம்பித்து விட்டார்.
“பத்து நிமிசம் லேட்டா எழுந்திட்டேனு என் வீட்டுக்கார் பத்து நிமிசம் அத்தை பத்து நிமிசம்னு திட்டி இருபது நிமிசம் லேட் பண்ணிட்டாங்க. எப்படி தான் சரியா தினமும் எழுந்திரிங்களோ?” என்று அங்கலாய்த்தாள்.
“நாளைக்கு சீக்கரம் எழுந்திசிடுவ. இந்தா காபியை குடி.” என்று அவர் கையில் ஒரு டம்ப்ளரை கொடுத்தவர் பவித்ராவிடம் கண்களால் எதுவும் பேசாதே என்று எச்சரித்தார்.
“அம்மாவும் பொண்ணும் கண்ணால என்ன ரகசியம் பேசுறிங்க ?” என்று அவர்களை ஓரக்கண்ணால் பார்த்து கேட்டார் செல்வி.
இதனால் தான் செல்வி முன் எதுவும் பேசவேண்டாம் என்று கீதா கண்ஜாடை காட்டினார். அதை செல்வி சரியாக கேட்டுவிட அவரை பார்த்து சிரித்த கீதா, “காலையிலேயே ஆரம்பிச்சுட்டியா. சிக்கரம் காபியை குடிச்சுட்டு வா. வேலை நிறையா கிடக்கு. நான் காலையில என்ன சமைக்கணும்னு கேட்டுட்டேன் நீ போய் மதியம் என்ன ஆக்கணும்னு கேட்டுட்டு வந்து வேலையை ஆரம்பி” என்று செல்வியிடம் கூறியவர்.
“பவி நீ பூரிக்கு மாவு எடுத்துக் கொடுத்துட்டு கார்த்திக்கை எழுப்பி படிக்க வை” என்று பவித்ராவை அங்கிருந்து அனுப்பினார்.
ஒரு பொங்கலுக்கு இத்தனை நாள் ஏங்க வைக்கிறார் என்று காமாட்சியின் மேல் கடுப்பாக இருந்தது. என்ன செய்ய வாயைத் திறந்து கேட்க முடியாதே.
அவரை கடந்து சென்றவளை அழைத்த காமாட்சி, “நாளைக்கு பொங்கல் செய்ய சொல்லியிருக்கேன். முஞ்சியை இப்படி வைக்காம போய் வேலையை பாரு” என்று பாசத்தை கூட ஆதட்டலாக தான் காட்டினார்.
அதனாலோ என்னவோ அந்த இரும்பு பெண்மணியின் மனதில் இருக்கும் நேசத்தை அங்கிருப்பவர்களால் அறிய முடியாமல் போனது. கார்த்திக்கை எழுப்பியவள் அவனுக்கு சொல்லிக் கொடுத்து விட்டு குளித்து கிளம்பி வர மணி ஏழாகி இருந்தது.
வேகமாக வெளியே வந்தவள் சமைத்து வைத்திருந்த மதியவுணவை மூவரின் டிபன் பாக்ஸில் போட்டு பையில் வைத்துவிட்டு, அவசரகதியில் இரண்டு பூரியை பிய்த்து வாயில் போட்டப்படி எட்டிப் பார்க்க முத்துராமன் சாப்பிட்டு எழுந்திருந்தார்.
“அம்மா அப்பாவ ரெண்டு நிமிசம் வெயிட் பண்ண சொல்லுங்கம்மா?” என்று கையை கழுவியவள் ஓடி வர முன் பைக்கை எடுத்திருந்தார் முத்துராமன்.
கீதாவை பார்க்க அவரோ காமாட்சியை பார்த்தார்.
“டேய் முத்து” என்று அவர் கொடுத்த குரலில்,
“அம்மா…” என்று பைக்கை நிறுத்தியிருந்தார்.
“பவித்ராவை விட்டுட்டு போற” என்றதும் தாமதிக்காமல் ஓடிப்போய் அவர் பின் ஏறிக்கொண்டாள்.
“போயிட்டு வரேன்ம்மா” என்றவர் கீதாவிடம் கண்களால் விடைபெற்று சென்றார்.
அதே சமயம் வயலுக்கு போய்விட்டு வந்த சேதுராமன், “செல்வி” என்று கத்த சமையலறையில் இருந்து பதறியடித்து அறைக்கு சென்றார்.
இது வழமையான விசயம் என்பதால் அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்தார்கள். அடுத்தடுத்து கார்த்திக் மற்றும் கார்த்திகாவின் பள்ளி பேருந்து வந்திருக்க அவர்களை கிளப்பி அனுப்பிருந்தார் கீதா.
சேதுராமன் கிளம்பும் வரை செல்வியை போட்டு படுத்தி எடுத்துவிடுவார். அதனாலேயே கார்த்திகாவை கிளப்பும் வேலையை கீதா கையில் எடுத்துக் கொண்டார்.
அன்றும் சட்டை லேசாக கசங்கி இருந்தது என்று மீண்டும் தேய்க்க சொல்லியிருந்தார் சேதுராமன். அது மட்டுமா சட்டையில் வைக்கும் பேனா முதல் நெற்றியில் வைக்கும் திருநீர் வரை அனைத்தையும் எடுத்து அவருக்கு கொடுத்து அவரை கிளப்பி வெளியே வரவே ஒரு மணிநேரம் ஆகி விடும். அதை தொடர்ந்து அவருக்கு உணவை பரிமாறினார் செல்வி.
காலை சமையல் கீதாவுடையது என்பதால் எந்த குறையும் கூறாமல் சாப்பிட்டு எழுந்து சென்றார். இதே செல்வி சமைத்து இருந்தால் அது இது என்று ஆயிரத்தெட்டு குறை கூறியிருப்பார்.
அலைப்பேசியை எடுத்தவர், “ஹலோ அண்ணா. பேங்க் வர வேலை இருக்கு நான் போயிட்டு ஒரெட்டு அக்காவ பார்த்துட்டு மதியானமா மில்லுக்கு வரேன். பிரச்சனையில்லையே?” என்று முத்துராமனிடம் கேட்க அவரோ தான் பார்த்துக் கொள்வதாக கூறினார்.
அன்னையிடம் விடைபெற்றவர் மறந்தும் கூட செல்வி பக்கம் திரும்பவில்லை. பெருமூச்சுவிட்ட செல்வி பத்திரங்களை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்றார்.
“அடியே எனக்கு சோறு போடாம எங்க கொண்டு போற?” என்று காமாட்சி செல்வியை திட்ட, மன்னிப்பு கேட்டு அவருக்கு பரிமாற ஆரம்பித்தாள்.
“கூறுகெட்டவ இதுக்கு தான் அவங்கவங்க இடத்தில உங்களை வைச்சுருக்கேன். நான் மட்டும் கொஞ்சம் ஏமாந்தேன் என்னை மொத்தமா முடிச்சு விட்டுட்டு, கொத்து சாவிக்கு ரெண்டுபேரும் மயிரைப் பிடிச்சுட்டு நடுவீட்டுல உருண்டுட்டு கிடப்பிங்க” என்று ஏசியவர் சாப்பிட்டு முடித்தும் செல்வியை திட்டுவதை விடவில்லை.
எதையும் காதில் வாங்காமல் பாத்திரங்களை தேய்த்துக் கொண்டிருந்த கீதாவை பார்த்த செல்விக்கு பிரமிப்பாக இருந்தது. எப்படி இவ்வளவு பொறுமையாக ஒருத்தரால் இருக்க முடிகிறது என்று. அதே சமயம் அவர்மீது சற்று பொறாமையாகவும் இருந்தது.
என்னத்தான் நேரடியாக முத்துராமன் கீதாவிற்காக பேசவில்லை என்றாலும் அவரை எங்கேயும் விட்டுக் கொடுத்ததில்லை. அதே போல் தான் பெற்ற பிள்ளைகள் மீது அவர் உயிரே வைத்திருக்கிறார். ஆனால் சேதுராமனோ அவளையும் சரி கார்த்திகாவையும் சரி ஒரு பொருட்டாகவே மதிப்பது இல்லை.
திருமணம் முடிந்த நாளே அவளிடம் தெளிவாக சொல்லிவிட்டான். தனக்கு அடங்கி இருந்தால் சுமுகமாக வாழ்க்கை போகும் இல்லையென்றால் அவளை தூக்கி எறிய சற்றும் தயங்க மாட்டேன் என்று. என்னத்தான் துடுக்குத்தனமாக இருந்தாலும் ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டின் கீழ் தான் செல்வி வளர்க்கப்பட்டாள்.
அவளே வேண்டாம் என்று சென்றாலும் மீண்டும் இங்கயே கொண்டு வந்து விட்டு செல்வார்கள் அவளை பெற்றவர்கள். அதனாலே சேதுராமிடம் அடிபடிந்து வாழ முடிவெடுத்து அவனோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.
