தோளில் சாயும் நேரம் 02

காலையில் தான் லேசாக மொட்டவிழ்ந்திருந்த அந்தச் சிகப்பு நிற ரோஜாச் செடியின் பூக்கள் மீது, மழையின் துளிகள் சாட்டமாக அமர்ந்திருந்தன.

நாடும் மக்களும் நான் இல்லாமல் எப்படி இருக்கிறார்கள் என்பதை எட்டிப் பார்க்க வந்த சூரிய பகவானது, இளங் கதிர்கள் மழையின் துளிகள் மேல் பட்டு விளையாடி ஊடுருவி வானவில் வண்ணங்களை ஜொலிக்க விட்டுக் கொண்டிருந்தன.

அந்த ரோஜாச் செடியில் கிடந்த பூக்களைப் பறித்து, அருந்தவச்செல்வி பூக் கூடைக்குள் போட்டுக் கொண்டிருக்க, பக்கத்தில் நின்றபடியே அந்தப் பூக்களை எடுத்து மாலை தொடுத்துக் கொண்டிருந்தார் அருந்தவராணி.

“அக்கா.. கிருஷ்ணா என்ன சொல்லுறான்.. ஏதாவது நல்ல பதில் வந்திச்சுதோ..”
எனச் சுற்றுமுற்றும் பார்த்து விட்டுக் கிசுகிசுப்பாக அருந்தவச்செல்வி கேட்க,
“அச்சோ அவன் வரப் போறான்டி செல்வி.. இதைப் பத்தி அவன் வெளியால போன பிறகு கதைப்பம்..”
எனத் தங்கையை மெல்ல அடக்கினார் அருந்தவராணி.

பெருமூச்சு விட்டுக் கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தார் எழுபதுகளின் தொடக்கத்தில் காலடியெடுத்து வைத்துக் கொண்டிருந்த அருந்தவச்செல்வி.

அதே நேரத்தில் 
“சமைச்சு வைச்ச சாப்பாடு அப்புடியே கிடக்குது.. இன்னும் சாப்பிடாமல் ரெண்டு பேரும் என்ன செய்து கொண்டு இருக்கிறீங்கள்..”
என்று கொண்டு வந்தான் இரண்டு பெண்மணிகளதும் பேச்சில் வந்து போன கிருஷ்ணா என்கிற பிரேமகிருஷ்ணா.

“எங்களுக்குப் பசிக்கேல்ல கிருஷ்ணா..”
எனத் தன் பெறாமகனைப் பாவமாகப் பார்த்தார் செல்வி.

“எப்புடிப் பசிக்கும் சித்தி.. கண்ட கண்ட தேவையில்லாத கதை கதைச்சுக் கொண்டு இருந்தால் எப்புடிப் பசிக்கும் எண்டு கேக்கிறன்..”

“செல்வி என்ன சத்தம் போடாமல் நிக்கிறாய்.. நாங்கள் ஒண்டும் தேவையில்லாத கதை கதைக்கேல எண்டு சொல்லு..”

“சித்தீ.. நான் உங்களோட தான் கதைக்கிறன்..”

“நானும் செல்வி உன்னோட தான்டி கதைக்கிறன்..”

“ஆனா நான் கேட்ட கேள்விக்குத் தானே அங்க இருந்து பதில் வருது சித்தி..”

“என்ன செய்யிறது என்னால சும்மா இருக்க முடியேல்லையே.. பெத்த மனசு பித்து பிள்ளை மனசு கல்லு எண்டு சொல்லுவினம்.. அதுவும் இங்க சும்மா கல்லு இல்ல கருங்கல்லு.. அசையவே மாட்டன் எண்டல்லோ அசராமக் கிடக்குது..”

“உந்தக் கதைக்கு ஒரு குறைச்சலும் இல்லை..”

“உன்னைப் பெத்தவடா நான்.. இந்தளவுக்குக் கூடக் கதைக்காட்டிக்கு எப்புடி..”

“காலங்காத்தாலயே ஆரம்பிக்காதேங்கோ அம்மா..”

“ஆரம்பிக்கிறதுக்குள்ள நீ தான் கதவை அடைச்சுப் போடுறியே பிறகென்ன..”

“ஆரம்பிக்கிற விசியம் அவ்வளவு உவப்பானதா இல்லையே..”

“அப்புடி எண்டு எவ்வளவு காலத்துக்குத் தான் இழுத்தடிக்கப் போறாய்.. என்ர சிவபெருமானே இதை எல்லாம் பாத்துக் கொண்டு தான இருக்கிறாய்..”

“இப்ப அந்த மனுஷனை ஏன் தேவையில்லாமல் இழுக்கிறீங்கள் அம்மா..”

“நீ போடா அங்கால.. பெத்த தாயிந்த மனசை நிம்மதியா வைச்சுக் கொள்ளத் துப்பில்ல உனக்கு.. வந்திட்டான் வியாக்கியானம் கதைக்க..”
எனத் தானும் முறுக்கிக் கொண்டார் அருந்தவராணி.

தாயும் மகனும் போடும் சண்டையை எப்படி சுமூகமான நிலைக்கு மாற்றுவது என்பது புரியாமல், அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் அருந்தவச்செல்வி.

தவறிக்கூட அவர் வாயைத் திறக்கவில்லை, பின்னர் 
‘நீ எனக்குத் தானேடி தங்கச்சி.. பிறகு நேத்து முளைச்ச காளானுக்கெல்லாம் வக்காலத்து வாங்கிறியோ..’
என அருந்தவராணியும்
‘சித்தீ.. நான் ஒண்டும் நேத்து முளைச்ச காளான் இல்ல.. முளைச்சு நாப்பத்தாறு வருசமாச்சுது எண்டு சொல்லுங்கோ..”
எனப் பிரேமகிருஷ்ணாவும் ஆளாளுக்கு அவரைப் பிடித்து ஆட்டுவார்கள்.

எதற்கு வம்பு என அவர் அமைதியாக நிற்க, அமைதியாக நின்றால் மட்டும் உன்னை விட்டுவிடுவோமா என்பது போல அவருடைய அக்காளும் பெறாமகனும் அவர் பக்கம் வேகமாகத் திரும்பியிருந்தார்கள்.

“என்ன செல்வி பாத்துக் கொண்டு நிக்கிறாய்.. இப்பவாச்சும் உன்ரை பெடியனிட்ட வாயைத் திறந்து ஒரு முடிவைக் கேளன்.. இவனுக்குப் பயந்து கொண்டு இவன் வெளியால போன பிறகு இனி என்னால ஒப்பாரி வைக்க ஏலாது..”
என்ற தன் தமக்கை அருந்தவராணியின் பக்கம் அவர் திரும்புவதற்குள்
“பயமாம்.. பாத்திங்களோ சித்தி கதையை.. எனக்குப் பயப்பிடுற ஆள் தானே இவா.. இவா என்னைப் போட்டு எனக்குப் பிடிக்காத விசியத்துக்குக் கட்டாயப் படுத்திறது சரியோ எண்டு ஒருக்கா நீங்களும் வாயைத் திறந்து சொல்லுங்கோ..”
என்று கொண்டு தன் பக்கத்தில் வந்த தன் பெறாமகனைப் பாவமாகப் பார்த்து வைத்தார் அருந்தவச்செல்வி.

இதைத் தான் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை என்று சொல்லுவார்களோ, பாவமாக இருந்தது செல்வியின் நிலை.

அவரும் தன் தமக்கை கட்சி தான் ஆனால், திரை மறைவில் தான் அவருடைய கட்சி.

திரைக்கு வெளியே அவர் பொதுவில் தான் நிற்பார், ஏனென்றால் இந்த வயதான காலத்தில் தன் பெறாமகன் கேட்கும் கேள்விகளுக்கு இடையில், வறுபட்ட உளுந்தக் கணக்காக நெரி பட அவரால் முடியாது.

அதோடு தான் தமக்கையின் பக்கம் என்பது கிருஷ்ணாவுக்குத் தெரிந்து போனால் அவ்வளவு தான், அவன் ஒரேயடியாக உச்சாணிக் கிளையில் போய்க் குந்திக் கொண்டு விடுவான்.

பிறகு அவனை மரமிறக்குவதற்குள் இவர் செத்துப் போய், சொர்க்கத்தில் இருக்கின்ற தன் கணவனையே பார்த்து விட்டு வர வேண்டிய நிலையாகப் போய் விடும்.

இருவரையும் சரியான முறையில் சமாதானம் செய்து, அக்காவும் தானும் நினைத்தது போலக் காரியம் சுபமாக முடிய வேண்டும் என்றால், இப்போது அக்காவை மெல்ல உள்ளே அனுப்புவது தான் நல்லது என்பதைத் தெரிந்து கொண்டவர் தமக்கையின் பக்கம் திரும்பினார்.

“அக்கா.. கிருஷ்ணாவுக்கு இப்ப வேலைக்குப் போற நேரம் எல்லோ.. பாவம் அவன் போட்டு வரட்டுக்கும் நாங்கள் ஆறுதலாக் கதைப்பம்..”

“என்ன விசியம் சித்தி.. திரும்பவும் பழைய பஞ்சாங்கம் தானே..”

“நீ கொஞ்சம் அமைதியா இரு கிருஷ்ணா.. இல்லாட்டிக்கு நீ போய் வேலைக்கு வெளுக்கிடு போ..”

“ஆனா உங்கடை அக்காந்த முகத்தைப் பாருங்கோ.. உர்ரெண்டு கொண்டு நிண்டால் மனுஷன் எப்புடி நிம்மதியா வேலைக்குப் போறது..”

“சரி சரி.. அவாவும் பாவம் தானே கிருஷ்ணா..”

“அது தானே பாத்தன்.. எங்கடா அக்காவுக்குப் பரிஞ்சு கொண்டு வரலியே எண்டு பாத்தன்.. வந்தாச்சுது..”
என்று கொண்டே உள்ளே செல்லத் திரும்பிய மகனது கையைப் பிடித்து அவனைப் போக விடாமல் நிறுத்தியிருந்தார் அருந்தவராணி.

“கிருஷ்ணா கடைசியும் முதலுமாக் கேக்கிறன்.. எனக்கு என்ன முடிவு சொல்லப் போறாய்..”

“அம்மா.. நீங்கள் எப்ப கேட்டாலும் எப்புடிக் கேட்டாலும் ஒரே பதில் தானம்மா.. எனக்கு விருப்பமில்ல..”

“சரி நீ போ.. ஆனாத் திரும்பி வந்து பாக்குற நேரம் என்ர உடம்பு தூக்குல தான் தொங்கும்..”
என ராணி முடிக்க, 
“அக்கா.. என்ன கதை இது..”
எனச் செல்வி பதறிக் கொண்டு அவரது கைகளைப் பிடித்துக் கொள்ள, அசையாமல் தாயைப் பார்த்தபடி நின்றிருந்தான் பிரேமகிருஷ்ணா.

அதே நேரத்தில் கலைந்த முடியோடு தூக்கத்தில் இருந்து எழுந்து கொண்ட அவளது பெறாமகள்
“பெய்யப்பா..”
என்று கொண்டு ஓடி வந்து அவனது கால்களைக் கட்டிக் கொள்ள, தன்னுடைய முழங்காலின் அளவுக்கு நின்றிருந்த தன் தம்பி மகளைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டான் அவன்.

கலைந்து போன குழந்தையின் தலையைச் சரி செய்து கொண்டு
“ஆருக்குட்டி.. பல்லுத் தீட்டணுமே..”
என்க, இழுவையாக
“ஆதுக்குட்டி.. பல்லுத் தீட்டணும்.. “
எனப் பெரியப்பன் சொன்னதை மீண்டும் சொன்னாள் குட்டிப்பெண்.

குட்டிப்பெண்ணின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்து விட்டு, தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மற்ற இரண்டு பெண்களிடமும் திரும்பினான்.

“சித்தி.. உங்கடை அக்காவுக்கு ஒண்டு சொல்லி வையுங்கோ.. தூக்குல நான் தொங்கினாலும் என்ர உடம்பும் தொங்கும் எண்டு சொல்லி.. வேணுமெண்டால் ரெண்டு பேரும் சேந்து தொங்குவமோ எண்டும் கேளுங்கோ.. “
என்றவன் பெறாமகளோடு உள்ளே போய் விட, கோபமாகத் தமக்கையிடம் திரும்பினார் செல்வி.

“உனக்கு விசரோ அக்கா.. என்ன கதைக்கிறது ஏது கதைக்கிறது எண்டு யோசிக்காமல் கதைக்கிறாய் நீ..”

“எனக்கு வேற வழி தெரியேல்லயே செல்வி..”

“அதுக்காக இப்புடித் தான் கதைப்பியோ.. பார் அவன் என்ன சொல்லிப் போட்டு உள்ள போறான் எண்டு..”

“நானும் அவன் இப்புடிச் சொல்லுவான் எண்டு எதிர்பாக்கேல்ல..”

“நானும் தான் நீ உப்புடிச் சொல்லுவாய் எண்டு எதிர்பாக்கேல்ல..”
எனத் தமக்கையோடு ஆதங்கப் பட்டபடி செல்வி அமர்ந்திருக்க, உள்ளே தூக்கிக் கொண்டு போன மகளுக்குப் பல் விளக்கி, உடை மாற்றி, சாப்பாடு ஊட்டி விட்டு அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான் பிரேமகிருஷ்ணா.

வரவேற்பறையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்மணிகளையும் கண்டு கொள்ளாமல், மகளோடு வெளியே சென்றவனை செல்வியின் அழைப்புத் தடுத்தது.

“கிருஷ்ணா ரெண்டு பேரும் எங்க போறீங்கள்..”

“அது தான் வீட்டுக்காரம்மா தூக்குல தொங்கப் போறாவாமே.. அதுக்குப் பிறகு நாங்கள் மட்டும் இருந்து என்னத்தக் கிழிக்கப் போறம்..”

“அதுக்கு..”

“இந்த வீட்டுல ஒரு கயிறு தான் கிடக்கு.. தொங்குறதுக்கும் ஒரு இடம் தான் இருக்கு..”

“அதுக்கு..”

“அது தான்.. வீட்டுக்காரம்மா கயிறையும் இடத்தையும் யூஸ் பண்ணிக் கொள்ளட்டுக்கும்.. நான் போய் நேராக் கடலுல குதிக்கிறன்..”

“அம்மாவுக்குத் தப்பாத மகன்.. சரி அதுக்கு என்னத்துக்குடா குழந்தையையும் கூட்டிக் கொண்டு போறாய்..”

“அவ மட்டும் தனியா இங்க இருந்து என்ன செய்யப் போறா.. அவளையும் கூட்டிட்டே போறன்.. உங்க அக்கா சொன்ன வார்த்தைக்கு இனி அவவோட கதையே இல்லை எண்டு சொல்லுங்கோ..”

“அப்போ வேலைக்குப் போகலியோடா..”

“இந்த மைன்டோட வேலைக்குப் போக ஏலாது சித்தி..”
என்றவன் மகளோடு தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கி விட்டிருந்தான்.

‘இந்தம்மா என்ன கதை கதைக்கிறா.. எல்லாச் சராசரி அம்மாக்கள் மாதிரியும் இப்புடிப் பிளாக்மெயில் செய்யிறா..’
நினைக்க நினைக்க அவனுக்கு உள்ளே கொதிக்கத் தொடங்கவே, மகளது கையை இறுக்கப் பிடித்துக் கொண்டு கால் போன போக்கில் நடக்கத் தொடங்கியிருந்தான் அவன்.

பிரேமகிருஷ்ணா காதல் தோல்வியால் பெண்களோடு சேர்த்து திருமணத்திலும் நம்பிக்கையில்லாத, நாற்பத்தாறு வயதில் நிற்கும் ஒரு பல் வைத்தியன்.

கிட்டத்தட்ட வாழ்வே வெறித்திருந்த அவனுக்கு, அவனுடைய வாழ்க்கைக்கு ஆதாரமாக இப்போது இருப்பது மூன்றே மூன்று ஜீவன்கள் தான்.

ஒன்று தன் கணவனை இழந்த அவனுடைய தாய் அருந்தவராணி, இரண்டாவது தன் கணவனையும் பெற்ற மகனையும் மருமகளையும் இழந்த அவனுடைய சித்தி அருந்தவச்செல்வி, மூன்றாவது தாய் தந்தையை இழந்த அவனுடைய பெறாமகள் ஆருதி.

அருந்தவச்செல்வி பெற்ற மகன் சேகர்கிருஷ்ணாவின் மகள் தான் ஆருதி, இப்போது அவள் தான் பிரேமகிருஷ்ணவின் வாரிசும் கூட.

அவனுடைய காதல் தோல்வி தான் அவனைப் புரட்டிப் போட்டு, இறுக்கமான மனிதனாக மாற்றி விட்டிருந்தது.

அவன் தாயும் சித்தியும் அவனுக்கொரு கல்யாணத்தைக் கட்டி வைத்து விட மாட்டோமா என்பது போலக் கடந்த பதினைந்து வருடங்களாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கான பலன் எபபோதும் போலப் பூஜ்ஜியத்தில் தான் வந்து நிற்கிறது.

மகளது கையைப் பிடித்துக் கொண்டு கால் போன போக்கில் நடந்தவனை, அவனுடைய கால்கள், நல்லூர்க் கந்தசுவாமிக் கோவிலில் கொண்டு வந்து விட்டிருந்தன.

அதனை அவன் உணருவதற்குள், அவனுடைய கைகளுக்குள் நின்றிருந்த ஆருதிகா
“விசுணுசீச்சர்..”
என்று கத்தவும் தான் அவன் சுயநினைவை அடைந்திருந்தான்.

குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிய ஆருதியின் அந்தப் புதிய ஆசிரியையை அவனுடைய விழிகள் வெறித்துப் பார்த்தன.

வயதுப் பெண்களைக் கண்டாலே அவனுடைய விழிகள் வெறுப்பைத் தான் தத்தெடுத்துக் கொள்ளுகின்றன.

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page