இதுவரை…
வீர் தன் கல்லூரி நண்பன் சித்துவிடம் அன்போடு பேச, ஆனால் சித்துவோ பகையை வளர்த்து வெறுப்பை கொடுத்தான். கல்லூரி காலத்தில் இவர்களுக்குள் நடந்த கசந்த சம்பவத்தை வைஷூவிடம் பகிர்ந்தான் வீர்.
இனி..
கல்லூரியில் இறுதி நாளான இன்று மாணவர்கள் அனைவரும் தங்களின் நட்பிற்கு காரணமான கல்லூரியை விட்டு பிரியும் வருத்தத்தில் இருந்தனர்.
ஆடலும் பாடலுமாய் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்க, சித்து தன் காதல் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாது குடித்துக் கொண்டிருந்தான்.
ஸ்வேதாவை கண்டதும் அவளின் காலில் விழுந்தாவது தன் காதலை ஏற்றுக் கொள்ள வைக்க நினைத்தான்.
” ஸ்வேதா… ”
சித்துவின் குரல் கேட்டு ஸ்வேதா திரும்பி பார்க்க, அவன் மீது இருந்து வந்த மது வாடையில் மூக்கை பிடித்தாள்.
“சித்து, நீ குடிச்சிருக்கியா..
“ sorry ஸ்வேதா… குடிக்க கூடாதுன்னு தான் நினைச்சேன் ஆனால் என்னோட கவலை குடிக்க வைக்குது. நம்மளோட காலேஜ் லைஃப் முடிய போகுது, இப்ப கூட என்னோட காதலை ஏத்துக்க மாட்டியா…”
“இங்க பாரு சித்து ,எப்பவுமே நீ எனக்கு ஒரு நண்பன் தான் .அதை தாண்டி உன்மேல காதல் வராது..”
“ என்னால நீ இல்லாத வாழ்க்கையை நினைச்சுப் பார்க்கவே முடியலை. இப்போ வேணாம் உனக்கு என் மேல காதல் இல்லாம இருக்கலாம், நாம இரண்டு பேரும் சேர்ந்து வாழ்வோம் கல்யாணம் செஞ்சுப்போம், கல்யாணத்துக்கு பிறகு என் மேல் உனக்கு காதல் வரும் …”
“சித்து ,உனக்கு போதை அதிகம் ஆகிடுச்சு, நீ வீட்டுக்கு கிளம்பு..”
“ முடியாது ஸ்வேதா , எனக்கு ஒரு வழி சொல்லு ..நீ இல்லாம என்னால இருக்க முடியாது. இல்லைனா நான் தற்கொலை செஞ்சுப்பேன் ..”
“முட்டாள் மாதிரி பேசாதடா , என் மனசுல உன்னை அப்படி ஒரு இடத்தில் வச்சு பார்க்க முடியாது..”
” அதான் ஏன் …”
அவள் இறுதி வரையிலும் ஒரே பதிலை திரும்ப கூற கோவத்தில் கத்தினான் சித்து.
“ஏன்னா நான் வீர்-ஐ காதலிக்கிறேன்..”
அவள் உரைத்த வார்த்தையில் நொறுங்கிப் போனான் சித்தார்த். இதுநாள் வரை அவள் தன் காதலை மறுப்பதற்கு தன்னை நண்பனாக பார்த்தது மட்டும் தான் காரணம் என நினைத்தான். ஆனால் வீர் இதற்கு ஒரு காரணம் எனத் தெரிந்ததும் நட்புக்குள் விரிசல் வந்தது.
“வீர், உன்னை காதலிக்கிறானா…?”
” இல்லை , அவன் கிட்ட என் காதலை சொன்னப்ப , என்னை ஒரு தோழியா மட்டும் தான் நினைக்கிறதா சொன்னான்…”
அவளின் பதிலில் நிம்மதி கொண்டான் சித்து.
“ அவன் தான் மறுத்துட்டானே என் கூட சேர்ந்து வாழு. என் காதல் உனக்கு எல்லாத்தையும் கொடுக்கும்..”
“இது தான் சித்து, உன்கிட்ட எனக்கு பிடிக்காதது. நான் வீர்-ஐ காதலிக்கிறேன்னு சொன்னப்ப வீர் மறுத்துட்டான் . இப்ப வரைக்கும் அவன் கூட நல்ல அன்போடு தான் நான் பழகுறேன். அந்த நாகரீகம் தான் காதலில் இருக்கணும். நான் மட்டும் இல்லை வீர்-க்கு எத்தனையோ பேர் நம்ம காலேஜ்ல லவ் ப்ரொபோஸ் செஞ்சிருக்காங்க.. எல்லார்கிட்டயும் நாகரீகமா தான் பேசி இருக்கான் வீர் உனக்கு ஏன் அது தெரிய மாட்டேங்குது …”
அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து பேசியதில் சித்து வெறுத்துப் போனான்.
“அதான் நானும் கேட்கிறேன் . அவன் ஒருத்தன் தான் ஆம்பளையா ..? என்னை பார்த்தா எப்படி தெரியுது . என்னால உன்னை சந்தோஷமா பார்த்துக்க முடியாதா..? அவனை விட எல்லா விதத்திலும் உன்னை சந்தோஷப்படுத்த முடியும்..”
“ஸ்டாப் இட் சித்து, நீ பேசுறது வேற அர்த்தம் வருது..”
“நான் எதிர்மறையா சொல்லலை நேரடியாகவே சொல்றேன் .ஒரு முறை என் கூட தங்கு…”
“ச்சீ … இவ்வளவு மோசமா இருப்பேன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கலை .இனிமே என் முகத்தில் முழிக்காத …”
ஸ்வேதா கோவத்தோடு பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் . ஆனால் இதை விட்டால் வேறு வழி கிடையாது என அவள் மீது உரிமையை எடுத்துக் கொண்டான் சித்து . பின்னிருந்து அவளை அணைத்து இறுக்கினான்.
“என்னை விடுடா என்ன பண்ற …”
“என்னை மன்னிச்சிடு ஸ்வேதா, நீ இல்லாம என்னால இருக்க முடியாது இதை தவிர எனக்கு வேறு வழியும் தெரியலை ..”
அவளிடம் மன்னிப்பு கேட்டவன் அவள் அணிந்திருந்த ஆடையை கிழித்தான்.
ஸ்வேதா பெரும் அதிர்ச்சி கொண்டாள் . சித்தார்த்தை தன் நண்பனாக நினைத்தாள் .அவன் இவ்வளவு அசிங்கமாக பேசிய பிறகுதான் வெறுத்தாள்.
அவனிடம் தன்னை விட்டு விடுமாறு மிரட்டினாள். கெஞ்சவும் செய்தாள். ஆனால் சித்து தன் புத்தியை இழந்தான்.
ச ரியாக வெகு நேரமாக சித்துவை தேடிக் கொண்டிருந்த வீர் ஸ்வேதாவின் குரல் கேட்டு விரைந்து வந்தான்.
யாரோ ஸ்வேதாவை வற்புறுத்துவதை பார்த்து , அவனை பிடித்திழுத்து கன்னத்தில் ஓங்கி அறைந்தான் வீர். அரைந்த பிறகு தான் அது தன்னுடைய உயிர் தோழன் சித்து என அவனுக்கு தெரிந்தது.
“சித்து நீயா …?”
அதிர்ச்சியில் இருந்த வீர் , ஸ்வேதாவின் அரைகுறை கோலத்தை கண்டு தன்னுடைய சட்டையை கழட்டி கொடுத்தான். ஸ்வேதாவும் அந்த சட்டையை அணிந்து கொண்டாள்.
“சித்து என்னடா இதெல்லாம் ,நீயா இப்படி பண்ற .. நம்ம ஸ்வேதா டா…”
“நம்ம ஸ்வேதா இல்ல என்னுடைய ஸ்வேதா ,எனக்கு மட்டும் தான் சொந்தம்..”
கண்களில் அவ்வளவு வெறியோடு வீர்-ஐ பார்த்து கத்தினான் சித்து
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சிரமத்தோடு எழுந்து நின்றாள் ஸ்வேதா.
“என் மேலேயே கை வச்சுட்டல்ல, இத்தனை வருஷமா நீ என்னை டார்ச்சர் பண்ணாலும் நண்பன்னு ஒரே காரணத்துக்காக பொறுத்து போனேன் . இந்த அளவுக்கு கீழ்த்தனமா நீ யோசிச்ச பிறகு என்னுடைய நட்புக்கு நீ தகுதியானவன் இல்லை. உன்னை என்ன பண்றேன் பாரு ….”
கல்லூரியில் நடந்த விஷயத்தை பற்றி நிகழ்காலத்தில் வைஷூவிடம் கூறிக் கொண்டிருந்தான் வீர்.
“சார் அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு… ” என வைஷூ கேட்க
“கதை கேட்க அவ்வளவு ஆர்வமா உங்களுக்கு.. மீட்டிங்க்கு டைம் ஆச்சு போலாம் வாங்க …”
“பரவால்ல சார், நீங்க என்னை வைஷுனு மட்டும் கூப்பிடுங்க , வாங்க போங்கன்னு இவ்வளவு மரியாதை தேவை இல்லை …” என்றாள்.
“அப்போ நீயும் என்னை வீர்-னு கூப்பிடு..”
அவன் சட்டென இயல்பாய் பேசினான்.
“நான் உங்களை பெயர் சொல்லிக் கூப்பிடுறதா , அப்படி அழைச்சா உங்க ஃபேன்ஸ் கிளப்ல இருந்து எனக்கு பெரிய எதிர்ப்பு வரும். நம்ம ஆபீஸ்ல இப்போ தான் நான் ஜாய்ன் செஞ்சிருக்கேன் அதுக்குள்ள எதிரிகளை சம்பாதிக்க விரும்பலை …” என்றாள்.
வீர்-ம் வைஷூவும் எதார்த்தமாய் பேசிக்கொண்டே மீட்டிங்கிற்கு சென்றனர் . மீட்டிங் துவங்கியது. வைஷு தன்னுடைய பாஸ்ஸை நிராகரித்து பேசிய சித்தார்த்தை முறைத்துப் பார்த்தாள்.
அந்த மீட்டிங் முடிந்த பிறகு தான் இருவரும் அலுவலகம் சென்றனர் .நேற்று எடுத்த விளம்பர படத்தை அந்த பொருளின் நிறுவனத்தாரர்களுக்கு போட்டு காண்பித்தனர். இது அவர்களுக்கு பிடிக்குமா என்ற எதிர்பார்ப்போடு அமர்ந்திருந்தாள் வைஷூ…
விளம்பரம் முழுதாக திரையில் ஓடி முடிக்க, பின்னர் வந்திருந்த வாடிக்கையாளர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
‘ அவர்களுக்கு பிடிக்கவில்லை போல ..’ என அஞ்சினாள் வைஷூ
“மிஸ்டர் வீர், நாங்க நினைச்சதை விட இந்த விளம்பரம் ரொம்ப அற்புதமா இருக்கு, இதுவரைக்கும் இந்த கண்ணோட்டத்தில் யாரும் எடுத்திருக்க மாட்டாங்க… உடனே இந்த விளம்பரத்துக்கு அப்ரூவல் வாங்கி திரையிடனும். எங்களுடைய தயாரிப்பு பொருள் இதன் மூலமா நல்லா பிரபலமாகும்.
அது மட்டும் இல்ல எங்க கம்பெனியுடைய அடுத்த தயாரிப்புக்கான விளம்பர படத்தையும் நீங்க தான் எடுத்துக் கொடுக்கணும்….”
“தேங்க்யூ …உங்க பாராட்டுக்கு நன்றி . ஆனா இந்த விளம்பர படத்தோட டைரக்டர் எங்களுடைய வைஷ்ணவி தான்..”
வீர் சற்றும் யோசிக்காமல் இந்த பாராட்டு அவளைத் தான் சேரும் என உரைத்ததை விஷ்ணு வியந்து பார்த்தான் .
‘இந்த விளம்பரத்திற்காக நாங்களும் தான் வேலை செய்திருக்கிறோம்.. ‘என அவனுக்குள் ஒரு எண்ணம் எட்டிப் பார்த்தது.
அந்த வாடிக்கையாளர்கள் உடனே வைஷுவுக்கு கை கொடுத்து வாழ்த்து கூறினர்.
அவர்கள் அங்கிருந்து சென்ற பிறகு வீர் தன்னுடைய டீமிடம் பேசினான்.
“கைஸ் ..👏🏻👏🏻வெல்டன் ரொம்ப தரமா வேலை செஞ்சு முடிச்சிருக்கோம் .. இதற்கான பாராட்டு உங்க எல்லாருக்குமே சேரும்…”
“சார் பாராட்டோட சேர்த்து ஒரு ட்ரீட்டும் கொடுத்தீங்கன்னா இன்னும் சந்தோஷமா இருப்போம்.. ”
எடிட்டிங் துறையில் இருந்த நபர் ஒருவன் வீர்-இடம் பவ்யமாக குரலை உயர்த்தினான்.
“அதுக்கென்ன இன்னைக்கு நைட்டு பார்ட்டி கன்ஃபார்ம் …” என ஆனந்தத்தோடு உரைத்தான் வீர்.
பார்ட்டி கிடைத்த சந்தோஷத்தில் அனைவரும் மகிழ்ச்சியோடு அறையில் இருந்து வெளியேறினர் . இறுதியாக விஷ்ணு அங்கிருந்து கிளம்ப , வைஷு வீர்- இடம் பேச காத்துக் கொண்டிருப்பதை கவனித்தான்.
வைஷு இன்னும் கிளம்பாமல் அங்கேயே நின்றதில் அவளிடம் சென்று பேசினான் வீர்.
“நல்வாழ்த்துக்கள் வைஷு .. உன்னுடைய திறமை என்னனு நிரூபிச்சிட்ட.. அந்த பெங்களூர் கம்பெனி ரொம்ப அன்லக்கி, உன்னை இழந்துட்டானுங்க..”
ஆனால் வைஷூவோ ஆனந்த கண்ணீரில் இருந்தாள். எப்படி நன்றி உரைப்பது என தெரியாமல் தடுமாறினாள்.
“ஹேய் என்ன இதுக்கெல்லாம் கண் கலங்குற.. “என அவன் கேட்க
“சார் ஒரு நிமிஷம் உங்க கையை குடுங்களேன் ..”
அவள் கேட்டதும் என்னவோ என நினைத்து எதார்த்தமாக கையை நீட்டினான் . கையை பற்றி நன்றி உரைத்தாள்.
“தேங்க்யூ சார்.. தேங்க்யூ வெரி மச் .. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியலை.. நாலு வருஷமா இந்த துறையில் வேலை செய்றேன். நான் செஞ்ச ஒவ்வொரு வேலைக்கும் யாரோ பாராட்டு வாங்கிட்டு போவாங்க .. அதை பார்க்கும் போதெல்லாம் என் மனசு ரொம்ப வலிக்கும் ஆனா இந்த கம்பெனில நான் சேர்ந்து செஞ்ச முதல் வேலைக்கு நான் தான் காரணம்னு இத்தனை பேர் மத்தியில் ஒத்துக்கிட்டீங்களே… அதுக்கெல்லாம் ரொம்ப பெரிய மனசு வேணும்..”
பாராட்டியவாறு அவனின் கையை விடுவித்தாள்.
“நீ இவ்வளவு எமோஷனல் ஆக வேண்டிய அவசியம் இல்லை வைஷு . உண்மையிலேயே இந்த விளம்பர படத்தோட வெற்றிக்கு நீயும் நம்மளுடைய டீமும் தான் காரணம். அதைத்தான் வெளிப்படையா சொன்னேன்..”
இருந்தும் வைஷு வீர்-க்கு நன்றி உரைத்துக் கொண்டே இருந்தாள்.
அதன் பிறகு தொடர்ந்து மற்ற வேலைகளை கவனித்தனர். இரவு 7 மணி நெருங்கியது.
வீர் தன்னுடைய லேப்டாப் பேக்கை எடுத்துக் கொண்டு கேபினில் இருந்து வெளியே வந்தான்.
“வைஷு இன்னும் ஹாஸ்டலுக்கு கிளம்பலையா, இன்னைக்கு சக்சஸ் பார்ட்டி இருக்குன்னு சொல்லி இருந்தேனே..” என வீர் கேட்க
மரியாதையோடு எழுந்து அவளும் பதில் கொடுத்தாள்.
“இப்பவே மணி ஏழு ஆச்சு சார் , நான் ஹாஸ்டலுக்கு போய் பிரஷ் ஆகிட்டு வரதுக்குள்ள ரொம்ப டிராபிக் ஆகிடும் . அதனால ஹாஸ்டல் போகலை. 8:00 மணிக்கு ஆபீஸ்ல இருந்து நேரா நான் ரிசார்ட் வந்துடுவேன்..” என்றாள் .
“ அப்படியா அப்போ ஒரு முக்கியமான இடத்துக்கு போகனும். என் கூட வா.. அங்கிருந்து அப்படியே நாம ரிசார்ட் போகலாம்..”
இவர்கள் பேசுவதை விஷ்ணு கவனித்தான்….
😉
