இதுவரை….
வைஷு இயக்கிய விளம்பர படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க, அதன் பாராட்டும் அவளையே சென்றடைந்தது. வீர் வைஷூயுடன் நெருங்கி பழகுவதை கண்காணித்தான் விஷ்ணு.
இனி.…
ஹாஸ்டலுக்கு செல்வதற்கு நேரம் இல்லை என்பதால் நேரடியாக ரிசார்ட் வந்து விடுவேன் என பதில் உரைத்தாள் வைஷு.
பதிலுக்கு வீர் அவளை தான் செல்லும் ஒரு முக்கிய இடத்திற்கு உடன் அழைத்துச் செல்வதாக கூறினான்.
“சார் நான் கூட ஆபீஸ்ல இருந்து நேரா ரிசார்ட் வந்துருவேன். நான் வேணும்னா வைஷ்ணவியை பிக்கப் செஞ்சுகிறேன்..” என விஷ்ணு உரைக்க
“பரவால்ல விஷ்ணு நானே அழைச்சிட்டு போறேன். அந்த முக்கியமான இடத்துக்கு வைஷூ கண்டிப்பா வரணும்..”
பிறகு வீர் தன்னுடைய கேபினுக்கு திரும்ப செல்ல, விஷ்ணு வைஷூவிடம் பேசினான்.
“பலே வைஷு, வேலைக்கு சேர்ந்த மூன்றே நாளில் ஓனரை உன் பக்கம் இழுத்துட்ட.. இந்த டேலண்ட் எல்லாம் பொண்ணுங்களுக்கு தான் இருக்குப்பா..”
அவன் கூறியது கேட்டு அவள் வியந்து பார்த்தாள் .
‘ஏன் இப்படி கூறுகிறான்..’
“ஹேய் நான் தப்பா எதுவும் சொல்லலை உன்னுடைய திறமையினால் அவர் மனதில் இடம் பிடிச்சிருக்கேன்னு சொன்னேன்..”
“நீ எது பேசறதா இருந்தாலும் முழுசா பேச மாட்டியா விஷ்ணு, பயந்தே போயிட்டேன்…” என்றாள்.
அவளிடம் பாசாங்காய் சிரித்து தன் வேசத்தை காட்டினான் விஷ்ணு.
அதன் பிறகு சற்று நேரத்தில் மீண்டும் வந்து வைஷூவை வெளியே அழைத்துச் சென்றான் வீர்.
வீர் காரை ஓட்ட, அருகில் இருந்த சீட்டில் அமர்ந்திருந்தாள் வைஷூ.
“நல்ல வேலை வைஷு நீ ஹாஸ்டலுக்கு போகலை. இப்பவே எவ்வளவு டிராபிக் இருக்கு பாரு.. ”
வீர் உரைத்தது கேட்டு சாலையை நிமிர்ந்து பார்த்தாள் வைஷூ.
“ஆமா சார், நம்ம ஊர்ல நடந்து போறவங்களை விட வண்டியில் போறவங்க தான் அதிகம். டிராபிக் இருக்கத்தான் செய்யும். அதுவும் இல்லாம அங்க பாருங்க, இந்த மாதிரி அநாகரீகமா ரோட்டில் நின்னு சத்தம் போட்டு கூட்டத்தை வேற கூட்டுறாங்க..”
வைஷூ கை காட்டிய திசையில் வீர் கவனிக்க, அங்கே நீலாவதி தான் சில ஆண்மகன்களுடன் சத்தமிட்டு பேசிக் கொண்டிருந்தார்.
உடனே காரை ஓரம் கட்டினான் வீர்.
“என்ன ஆச்சு சார் ”
“அவங்க என்னோட அத்தை, நான் போய் என்னன்னு பார்க்கிறேன் நீ இங்கேயே இரு..”
‘அவளும் இறங்கலாம்..’ என நினைக்க மாறாக இங்கேயே அமர்ந்திருக்குமாறு கூறி சென்றதால் வேடிக்கை பார்த்தாள்.
“டேய் என்கிட்ட வாய் பேசுற வேலை எல்லாம் வேண்டாம். அப்புறம் என் கை தான் பேசும்..”
நீலாவதி எதிரே தன் தலைக்கு மேல் உயரமாக இருந்த ஆண்மகனைப் பார்த்து கையை ஓங்கினார். சரியான வேளையில் வந்து தடுத்து பிடித்தான் வீர்.
“அத்தை என்ன பண்றீங்க எதுக்கு அடிக்க போறீங்க, முதல்ல அவங்க சட்டையை விடுங்க..”
“ வா வீர் இந்த அநியாயத்தை நீயே கேளு, தப்பான ரூட்டில் வந்து என்னோட ஸ்கூட்டியை இடிச்சு தள்ளிட்டான். நானும் ரம்யாவும் கீழே விழுந்துட்டோம். வண்டி கூட டேமேஜ் ஆகிருச்சு.. ஏண்டா இப்படி பண்ணினனு கேட்டா நீ ஓரமா போடி குண்டுன்னு சொல்றான்..”
தன் அத்தை கூறியது கேட்டு கோவத்தோடு எதிரில் இருந்தவனை பார்த்தான். அவனோ போதையில் நின்று கொண்டிருந்தான்.
அந்த போதை ஆசாமியின் அருகில் இருந்த அவனின் நண்பர்கள் வீர்-இடமும் நீலாவதியிடமும் மன்னிப்பு கேட்டனர்.
“சார் எதோ போதையில் தெரியாம இடிச்சிட்டான் இனிமே இப்படி நடக்காது. இந்த பொம்பளை கிட்ட நீங்களாவது சொல்லுங்க..”
“இங்க பாருங்க அவங்க உங்களை விட வயசுல மூத்தவங்க மரியாதையா பேசுங்க…” என்றான் வீர்
“அட என்ன வீர் பொறுக்கி பசங்க கிட்ட மரியாதையை எதிர்பார்க்கிற, நான் முன்னேயே போலீஸ்க்கு கால் பண்ணிட்டேன். இந்நேரம் வந்துருவாங்க அப்புறம் இருக்கு இவனுங்களுக்கு..”
“போலீஸ்க்கா..! அத்தை எதுக்கு போலீஸ்க்குலாம் கால் பண்ணீங்க.. ”
“பின்ன இவனுங்களை சும்மா விட சொல்றியா.. இப்படியே விட்டா ரோட்டில் யாரையாவது ஆக்சிடென்ட் பண்ணி அல்பாய்ஸ்ல போக வச்சிருவானுங்க..”
நீலாவதி பேசிக் கொண்டிருந்த சமயமே போலீஸ் ஜீப் கூட்டமாக இருந்த அந்த இடத்திற்கு வந்து நின்றது.
“இங்க யாரும்மா எங்களுக்கு போன் பண்ணது..”
“நான் தான் சார் கூப்பிட்டேன். இதோ இவனுங்க தான்…”
நீலாவதி கை காட்டியதும் காவலர்கள் எதிரில் இருந்த மது பிரியர்களை கைது செய்தனர்.
சென்ற அந்த மது பிரியர்கள் நீலாவதியை முறைத்துக் கொண்டே சென்றனர்.
“என்னடா லுக்கு கண்ணை நோண்டிருவேன்..”
“அத்தை போதும் விடுங்க, அதான் போலீஸ்ல பிடிச்சு கொடுத்தாச்சுல்ல..”
நீலாவதியை அமைதி கொள்ள வைத்த வீர், கீழே விழுந்திருந்த ஸ்கூட்டியை எடுத்து நிறுத்தினான்.
வலது புற கண்ணாடி உடைந்து வண்டியும் ஆங்காங்கே கீறல் பட்டிருந்தது.
“உங்க இரண்டு பேருக்கும் ஏதாவது அடிபட்டுருச்சா..”
“இல்ல மாமா கீழே விழுந்த சமயம் வலிச்சது. இப்போ வலி இல்லை. அம்மா தான் ரொம்ப ஓவரா கத்திட்டாங்க.. “என்றால் ரம்யா.
“அமைதியா இருடி, அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறியா.. விட்டா நம்ம இரண்டு பேரையும் பரலோகம் அனுப்பி இருப்பானுங்க…”
“அத்தை ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க …”
“சரி வீர், நீ என்ன இந்த பக்கம் உன்னுடைய பிளாட்டுக்கு அந்த ரோட்டில் தானே போகணும்…”
“என்னுடைய ஆபீஸ் பார்ட்டி ஒரு ரிசார்ட்டில் நடக்குது அங்க தான் போறேன்..”
“ஓ… ஆபீஸ் பார்ட்டியா, அப்போ ரம்யாவையும் அழைச்சிட்டு போயேன்..”
“அம்மா நான் இப்ப என்ன டிரஸ் போட்டு இருக்கேன்னு பார்த்தல்ல, இந்த டிரஸ்ஸோட பார்ட்டிக்கு போவாங்களா .. அது மட்டும் இல்ல எனக்கு நாளைக்கு எக்ஸாம் இருக்கு படிக்கணும், வீட்டுக்கே போகலாம்..”
“இவள் ஒருத்தி விவரம் தெரியாம..”
“அதான் ரம்யா படிக்கணும்னு சொல்றாள்ல அவள் வீட்டுக்கு போகட்டும். வேணும்னா வர சண்டே அன்னைக்கு நாம மூணு பேரும் வெளியே போய் சாப்பிடலாம் சரியா… ”
“ ஓகே மாமா.. சண்டே – னா தான் ஜாலியா இருக்கும். அன்னைக்கு எக்ஸாமும் கிடையாது நிம்மதியா சாப்பிடலாம்…”
“திங்கிறதிலேயே இரு..”
தன் மகள் ரம்யாவின் தலையில் கொட்டினார் நீலாவதி.
“சரி நாங்க வீட்டுக்கு போறோம்..” என ஸ்கூட்டியை பிடித்தார் நீலாவதி.
“அத்தை ஸ்கூட்டியை சர்வீஸூக்கு விடுங்க, என்ன மாத்தணும்னு கேட்டு எல்லாத்தையும் சரி செய்ய சொல்லுங்க பில்லை ஆபீஸ்க்கு அனுப்ப சொல்லிருங்க..”
“ஆ.. சரி வீர் நாங்க போயிட்டு வரோம். நீயும் பார்த்து போ, குடிகார பசங்களா இருக்கானுங்க… ”
“சரி அத்தை நீங்க பார்த்து போங்க…”
வீர் அவர்களை பேசி அனுப்பிவிட்டு காரில் வந்து அமர்ந்தான்.
“என்ன நடந்துச்சு சார்..” என வைஷூ கேட்க
“ஒன்னும் இல்லை குடிச்சிட்டு வண்டியை ஏத்திட்டாங்க, அதான் அத்தை சத்தம் போட்டிருக்காங்க..”
“உங்க அத்தை ரொம்ப கோவக்காரங்களா..”
“கொஞ்சம் கோவக்காரங்க, ஆனா குழந்தை மனசு ..”
“ஆனால், பார்க்க அழகா கொலு பொம்மை மாதிரி இருக்காங்க…” என்றாள்.
வீர்- ன் காரில் இவள் அமர்ந்திருப்பதை மட்டும் நீலாவதி பார்த்திருந்தால், யார் இந்த பெண் என கேட்டு தனது புதிய ரூபத்தையே காட்டியிருப்பார்.
அதன் பிறகு வீர் வைஷுவை அந்த முக்கியமான இடத்திற்கு அழைத்துச் சென்றான். அது ஒரு தனிமையான வீடு காம்பவுண்டுகுள் காரை நுழைத்தவன் அவளை அங்கேயே அமரச் சொன்னான்.
“வைஷு நான் உள்ள போயிட்டு வரேன் அதுவரைக்கும் இங்கேயே இரு..”
“ஓகே சார்…”
கையில் ஒரு கேரி பேக்கை எடுத்துக்கொண்டு காரில் இருந்து இறங்கியவன், அந்த வீட்டின் காலிங் பெல்லை அடிக்க, கதவை திறந்தார் ஜான் அங்கிள்.
“நீ எதுக்கு இங்க வந்த..?”
“உங்களுடைய பிரஷர் டேப்லெட் எல்லாம் தீர்ந்து போயிருக்கும் அதான் வாங்கிட்டு வந்தேன்…”
“ம்ஹூ.. ”
முகத்தை திருப்பிக் கொண்டு ‘வா’ என உள்ளே அழைக்காமல் ஹாலுக்குள் நடந்தார் ஜான்.
திறந்திருந்த கதவை தாண்டி வீர் உள்ளே நுழைந்தான்.
“நீ எனக்கு பிரஷர் டேப்லெட் வாங்கிட்டு வரணும்னு நான் கேட்கவே இல்லையே..”
“நீங்க கேட்கணும்னு எந்த அவசியமும் இல்லை . மாசா மாசம் நான் தானே வாங்கிட்டு வரேன். மாத்திரை தீர்ந்து போயிருக்கும்னு எனக்கு நல்லா தெரியும்..”
மாத்திரையை அங்கிருந்த டேபிள் மீது வைத்து விட்டு மூக்கில் மோப்பம் பிடித்தான். இன்று நிச்சயம் வீர் மாத்திரைகளை கொண்டு வருவான் என ஏற்கனவே கணித்திருந்தார் ஜான். அவனுக்கு பிடித்த உணவையும் சமைத்து வைத்திருந்தார்.
“ம்… ”
மூக்கின் துவாரத்தின் வழியே வாசனை பிடித்தவன் கிச்சனை நோக்கி நடந்தான்.
“என் மேல் எவ்வளவு கோபம் இருந்தாலும் எனக்காக சமைச்சு வைக்கிற பழக்கம் மட்டும் விட்டுப் போகலை..”
மூடி வைத்திருந்த உணவை திறந்து ஸ்பூன் வைத்து சுவைத்துப் பார்த்தான்.
“ரொம்ப ஓவரா மோப்பம் பிடிச்சு சாப்பாட்டோட டேஸ்ட்டை கெடுத்திடாத ஒரு தட்டில் போட்டு சாப்பிடு..” என்றார் ஜான்.
“தராளமா சாப்பிடலாம் ஆனா இப்போ ரிசார்ட் போறேனே…”
“என்ன திடீர்னு…”
அவனிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளையும் ஏதோ வெறுப்போடு பேசுவது போல் இறுக்கமான முகத்தில் பேசினார்.
“அங்கிள் என்கிட்ட கோவமா இருக்குற மாதிரி நடிக்காதீங்க, உங்க முகத்துக்கு அது செட் ஆகலை..”
இவர்கள் பேசிக் கொண்டிருந்த சமயம் மீண்டும் வீட்டு காலிங் பெல் அடித்தது.
ஜான் சத்தம் கேட்டதும் சென்று கதவை திறந்தார். உணவை சுவைத்து கொண்டிருந்தவனுக்கு வெளியே காரில் வைஷூ காத்துக் கொண்டிருந்தது அப்போது தான் நினைவிற்கு வந்தது. ‘ஒரு வேலை காலிங் பெல் அடித்தது வைஷூவாக இருக்குமோ..’
வீர் விரைந்து கதவை நோக்கி ஓட, அதற்குள் ஜான் தன் வீட்டு வாயிலில் நின்றிருந்த வைஷூவை பார்த்து விட்டார்.
வீர்-ன் மொபைலை கையில் ஏந்தியவாறு நின்றிருந்த வைஷூ ஜான் அங்கிளை பார்த்து பீதியில் கண் விரித்தாள்.
😉
