‘ நான் சிறிதளவு கூட, நினைத்துப் பார்க்காத அந்தச் சம்பவம், என் வாழ்வில் நிகழ்ந்து விட்டது. வாழ்க்கை, சில நேரங்களில் சிலருக்கு மட்டும், ஏன் இவ்வளவு கொடூரமானதாக இருக்கிறது?.
இந்த உலகத்தில் மனிதனாய் பிறந்ததைத் தவிர, நான் ஒன்றும் அவ்வளவு பெரிய பாவம் செய்துவிடவில்லையே. பிறகு, ஏன் எனக்கு மட்டும் இந்தத் தண்டனை? ‘
மனம் வெம்பித் தவிக்க, உயிரை வெறுத்துக் கற்சிலையாக அமர்ந்திருந்தவளின், பார்வை வெறித்திருந்தது அந்த இடத்தை…
இல்லை, இல்லை அவனை. ஆம், அவனைத்தான் வெறித்துப் பார்த்திருந்தாள். இன்னும் தெளிவாகச் சொன்னால், அவனின் உயிரற்ற உடலை.
ஆம், உண்மைதான். அவனின் உயிரற்ற உடலை தான் வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள்.
மனதுக்குள் பூகம்பமே வெடித்துச் சிதறிக் கொண்டிருக்க, அசையாது சிலை போல் அமர்ந்திருந்தவளால், எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, கண் முன்னால் நடக்கும் நிகழ்வுகளின் நிதர்சனத்தை.
” நீ காண்பது அனைத்தும் கனவு; விரைந்து எழுந்து கொள்!” என்று யாராவது அவளை எழுப்பி விட மாட்டார்களா, என்ற ஏக்கம் தான் அவள் கண்களில் நிறைந்து வழிந்தது.
அதுவும், அவனை இந்த நிலைமையில் பார்க்க, அவளின் காதல் கொண்ட மனது, அவளுக்குச் சிறிதும் கூட இடம் தரவில்லை.
நினைக்க, நினைக்க, அழுகை முட்டிக் கொண்டு வர, அழத் துடிக்கும் உதடுகளோடு, உடல் நடுங்க அமர்ந்திருந்தவளின், கண்களில் கண்ணீர் மட்டும் துளி கூட வரவில்லை.
இருந்தால்தானே வருவதற்கு, கடந்த ஆறு மணி நேரமாக, அவள் கதறிய கதறலுக்கு, கண்ணீர் துளி வந்தால்தான் அதிசயம்.
ஆம், கண்ணீர் வற்றி விட்டதோ, என்று சந்தேகம் கொள்ளும் வைக்கும் வகையில், அவள் கண்கள் இரண்டும் வீங்கி சிவந்திருந்தன.
‘மனிதனை மரணிக்கச் செய்வது எது?, மனிதனை உண்மையில் மரணிக்கச் செய்வது எது?, உண்மையில் மரணம் என்றால் என்ன?, உண்மையான மரணம் என்றால் என்ன?.’ மரணத்தைப் பற்றிப் பல அடுகடுக்கான கேள்விகள் அவளுள் எழ, எதற்கும் அவளிடம் பதில் இல்லை என்பதே உண்மை.
‘அவன் இறந்துவிட்டதை மரணம் என்பதா? இல்லை இப்போது ஒவ்வொரு நொடியும் அவள் இறந்து கொண்டிருக்கிறாளே இதை மரணம் என்பதா?’ உண்மையில் அவளால் எதுவுமே முடியவில்லை.
அவனில்லாமல் அவளால் இருக்க முடியாது, என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அது இவ்வளவு கொடூரமானதாக இருக்கும் என்று, அவள் கனவிலும் நினைக்கவில்லை.
அவனில்லாத இந்த ஆறு மணி நேரம், அவளுக்கு ஆறுயுக நரகம் போலத் தோன்றியது.
இனி வாழ்நாள் முழுவதும், அவன் இல்லாமல் எப்படி வாழ்வது என்று யோசித்தவளுக்கு, அந்த யோசனையே மரண வலியைக் கொடுத்தது.
துக்கம் தொண்டையை அடைகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால், அதை இன்றுதான் அனுபவிப்பது போலத் தோன்றியது அவளுக்கு.
வேதனையின் உச்சம் என்றால் என்ன என்பதை, இன்றுதான் அவள் அவளின் ஒவ்வொரு அனுவிலும் உணர்ந்துக் கொண்டிருந்தாள். சுயநினைவற்று, எங்கோ வெறித்துக் கொண்டிருந்தவளை, உளுக்கினாள் ஒரு பெண்.
ஒரு பெண் என்ன, ஒரு பெண், அவளின் தோழிதான் அவள். அவளின் தோழி மட்டுமல்ல, அதோ இறந்து கிடக்கிறானே, அவனின் தமக்கையும் அவளே.
“மகிழ்!, மகிழ்!, இங்க பாருடி, என்ன பாருடி!.” என்று உளுக்கியவளுக்கு, உண்மையில் அவளின் அண்ணன் இறந்த கவலையை விட, இவளை நினைத்துத்தான் அதிகக் கவலையாக இருந்தது.
சிறு வயதில் இருந்து தன் தமயனின் மீது, தோழி கொண்ட நேசத்தைப் பற்றி நன்கு அறிந்தவள் ஆயிற்றே.
உயிர் வாழ்வதற்கு எப்படி ஆக்ஸிஜன் அவசியமோ, அது போலத்தான் அவனும், அவள் உயிர்ப்போடு வாழ்வதற்கு அவன் அவசியம் அவளுக்கு.
கேட்பதற்குச் சினிமாவில் வரும் வசனம் போலத் தோன்றினாலும், அது எந்த அளவிற்குச் சத்தியமான உண்மை என்பதை அவள் மட்டுமே அறிவாள்.
“மகிழ்!.” பலமுறை உளுக்கியும் எந்த எதிர்வினையும் ஆற்றாமல், இலக்கற்று, சுயநினைவற்று, எங்கோ வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தவளை, பார்த்தவளுக்கும் அழுகை பொங்கியது.
கீழ் உதட்டை அழுத்த கடித்து அழுகையை முழுங்கியவள், கண்களை இறுக்க மூடி திறந்து, பெருமூச்சை இழுத்துவிட்டு, அடுத்த கணம் தோழியை அரைந்திருந்தாள்.
அரைந்ததின் பலனாக, மெல்ல பார்வையை அவள் திசையில் திருப்பிப் பார்த்தவளை, பார்ப்பவர்கள் எவராயினும் நெஞ்சம் பதறித்தான் போவார்கள்.
ஆம், கண்களில் சோகம், சோகம் என்பதைவிட, வாழ்க்கையை வெறுத்துவிட்ட வேதனையின் உச்சம்தான், அவள் கண்களில் தெரிந்தது.
அழுகை வற்றிப்போய், அழ கூடத் திராணியின்றி, அமர்ந்திருந்தவளின் பார்வை அவளுக்கு உணர்த்திய செய்தி ஒன்றே ஒன்றுதான்.
“உன் அண்ணன் இல்லாம நான் எப்படிடி வாழ்வேன்?!.” அதையும் அவளே வாய்விட்டும் சொல்லிவிட, அவளைத் தேற்றும் வழி தெரியாது திணறியவள், அடுத்த வினாடி அவளை இழுத்து அணைத்துக் கொண்டு கதறியே விட்டாள்.
உண்மையில், அவளால் தோழியை இந்த நிலையில் பார்க்கவே முடியவில்லை. சிறுவயதில் இருந்து பார்க்கிறாள் அவளை. எந்தச் சூழ்நிலையிலும் அவள் இந்த அளவு உடைந்து பார்த்ததே இல்லை, ஒரே ஒரு நாளை தவிர.
ஆம், தன் அண்ணனிடம் அவள் காதலைத் தெரிவித்து, அதை அவன் நிராகரித்த நாளில்தான், இப்படி உடைந்து நின்றவளைப் பார்த்தாள். அப்பொழுது கூட, அவள் முகம் இவ்வளவு உயிரிலந்து போகவில்லை.
ஆனால், இன்று ஏனோ அவள் அண்ணனும் இவளும் ஒரே நிலையில் இருப்பதுபோலதான் பிரம்மை தோன்றியது அவளுக்கு.
என்ன இரண்டுக்கும் சிறிது அளவு வித்தியாசம்தான், இவளோ கண்களைத் திறந்தபடி இருக்க அவனோ மூடியிருந்தான்.
“நிலா!, அந்தப் பொண்ண கூப்பிட்டு வாம்மா!. சாங்கியம் பண்றதுக்கு நேரம் ஆயிடுச்சு.” என்று மூதாட்டி ஒருவர் சொல்லிவிட்டு போக, அணைத்து அழுது கொண்டிருந்தவள், மெல்ல விலகி கண்களை அழுத்த துடைத்துக் கொண்டாள்.
தோழியின் கண்களையும் அழுத்த துடைத்துவிட்டவள், அவள் தலை முடியையும் கைகளாலே ஒதுக்கிவிட்டு, அவளை அழைத்துச் சென்றாள்.
உயிரற்ற கூடாய் படுத்துக் கொண்டிருந்தவனின் முன்னால் அவளை நிறுத்த, விழி அகலாது அவனையே பார்த்திருந்தவளின் நினைவுகளில், சிரித்த முகத்துடன், மழலை மனம் மாறாத, அந்தச் சிறுவயது முகம்தான் வந்து போனது.
ஆம், முதன்முதலில் அவனை அவள் சந்தித்த அந்த முகம், எப்பொழுதும் அவளுள் ஒரு பரவசத்தை உண்டாக்கும் அந்த முகம், எப்பொழுதும் அவள் மனதில் ஒரு வசந்தத்தையும் அமைதியையும் எழுப்பும் அந்த முகம், இன்று வலியின் கீரலை விட்டுச் சென்றது.
“குட் கேர்ளா (good girl) சமத்தா ஸ்கூலுக்குப் போகணும், சரியா தங்கம்!.” கன்னத்தில் கில்லி சொல்லிவிட்டு போன அவனின் குரல், ஆம், அந்தக் குரல் ஒன்றே அவள் செவியை நிறைத்திருக்க, அங்கே அவளை வைத்து அவர்கள் செய்யும் சடங்கு, எதுவுமே அவள் கருத்தில் பதியவேயில்லை.
கைப்பாவையென அவர்கள் செய்யச் சொல்வதைச் செய்து முடித்தவளை, தோழி அழைத்துக் கொண்டுபோய் அமரவைக்க, அவளின் நினைவுகளோ மெல்ல பின்னோக்கி நடைப்போட தொடங்கின.
சில மணி நேரங்களுக்கு முன்பு,
“நாம ரெண்டு பேரும் பிரிஞ்சறலாம் யாழா.” என்றவளின் கூற்றில் அதிர்ச்சிக்கு பதிலாக, அவன் முகம் புன்னகையைத் தத்தெடுத்திருந்தது.
தொடரும்..…
கதை எப்படி இருக்குனு உங்க கருத்துக்கள சொல்லிட்டு போங்க பிரண்ட்ஸ். கமெண்ட் பண்ண முடியலனாலும் லைக்யாவது பண்ணிட்டு போங்க பிரண்ட்ஸ், நன்றி.
