Epi – 12 – கொள்ளை கொண்ட மனமே

இதுவரை…

   விஷ்ணு அவன் திட்டப்படி வைஷூவை போதையாக்கி நிலை தடுமாற வைத்தான். போதையில் இருந்த வைஷூவை வீர் தன்னுடைய பிளாட்டிற்கு அழைத்துச் சென்றான் . அச்சமயம் அவனின் அத்தை நீலாவதி அங்கு வந்து சேர்ந்தார். 

இனி… 

  மழை பெய்த நேரம், மேகம் கருக்காதா பெண்ணே என பாடலுடன் இனிமையான நினைவுகளை வைஷூவுடன் நடனமாடி சேகரித்துக் கொண்டிருந்தான் வீர். 

  அவ்வேளையில் வீட்டின் காலிங் பெல் அடிக்க, தாங்கிப் பிடித்திருந்த வைஷூவை நிற்க வைத்தான். 

அவளை முத்தமிட நினைத்து நெருங்கியதை எண்ணி அவன் மீதே கோபம் கொண்டான். 

  தலையில் அடித்துக் கொண்டவன், யார் வந்திருக்கிறார் என பார்ப்பதற்காக கதவின் லென்ஸ் வழியே நோட்டமிட, வெளியே அத்தை நீலாவதி இருந்தார். 

    தான் ஒரு பெண்ணுடன் பேசி பழகுவது, அதுவும் வீடு வரை அழைத்து வந்திருப்பது எல்லாம் அத்தைக்கு தெரிந்தால் நிச்சயம் கோபம் கொள்வார் . தன்னிடம் அல்ல அந்தப் பெண்ணிடம் தான்.. 

  வீட்டின் காலிங் பெல் தொடர்ந்து அடிக்கப்பட்டது. 

  ‘என்ன செய்வது..’ என திரும்பிப் பார்க்க வைஷு சோஃபாவில் மயக்கத்தில் அமர்ந்திருந்தாள்.

  அவளின் அருகே சென்றவன் கன்னம் தட்டி அழைத்தான். 

  “வைஷூ… வைஷூ…? ”

  “போச்சு மயங்கிட்டாள் போலயே, இப்போ என்ன பண்றது..”

   உடனே அவளை தூக்கி தன் அறைக்குள் அழைத்துச் சென்றான். 

   தன்னுடைய கப்போர்டில் இருந்த சில ஆடைகளை எடுத்து வெளியே வைத்தான். அந்த இடைவெளியில் அவளை அமர வைத்தான். 

  “கடவுளே ஏதோ தப்பு பண்ற மாதிரியே இருக்கு.. sorry வைஷு, அத்தை உன்னை பார்த்தா திட்டிடுவாங்க, அதனால் தான் இங்கே உட்கார வைக்கிறேன் கோச்சுக்காத..”

  மயக்கத்தில் இருந்தவளின் தலை கோதி அன்பாக பேசி, பிறகு கப்போர்டின் கதவை மூடினான். 

  பிறகு பக்கத்து அறையில் அவள் அணிந்திருந்த புடவை இருந்தது.  அதையும் எடுத்து கபோர்டினுள் மறைத்து வைத்தான். 

  தன் முகபாவனையை சரி செய்து கொண்டு நிம்மதியாய் மூச்சு விட்டு எதார்த்தமாய் கதவை திறப்பது போல் நாடகம் ஆடினான். 

  “அத்தை, நீங்க என்ன இந்த நேரத்தில்..?”

  “நான் வர்றது இருக்கட்டும். நீ ஏன் கதவை திறக்க இவ்வளவு நேரம் பண்ண..?” 

  “நான் இப்பதான் பார்ட்டியிலிருந்து வீட்டுக்கு வந்தேன். மழை வந்த சத்தத்தில் காலிங் பெல் அடிச்சதே கேக்கலை.. ”

  “சரி நீ வந்து எவ்வளவு நேரம் ஆச்சு..”

   “ஒரு அரை மணி நேரம் இருக்கும்..”

    “இல்லையே அதுக்கு மேலேயே ஆச்சுன்னு கேள்விப்பட்டேன்..”

   “கேள்விப்பட்டீங்களா அது எப்படி கேள்விப்படுவீங்க,  யார் சொன்னா உங்களுக்கு..”

  வீர் கேட்ட கேள்விக்கு நீலாவதியிடம் எந்த பதிலும் இல்லை. மாறாக அந்த வீட்டில் இருந்த அறைகளை திறந்து நோட்டமிட்டார். 

  விஷயம் தெரிந்து தான் வந்திருக்கிறார் போல அதனால் தான் ஒவ்வொரு அறைகளாக திறந்து பார்க்கிறார் என வீர்-க்கு புரிந்தது.

  “அத்தை என்ன பண்றீங்க… ” 

  “ஒன்னும் இல்ல அன்னைக்கு நானும் ரம்யாவும் இங்க வந்தப்ப, என்னுடைய பர்ஸை மறந்து வச்சுட்டேன்.  அதான் இருக்கான்னு பார்க்க வந்தேன்..”

  பேச்சுவார்த்தையில் பாத்ரூம் கதவை திறந்து பார்த்தார். கட்டிலுக்கு அடியிலும் நோட்டம் விட்டார். 

  “உங்க பர்சா அதைத் தேடியா இந்த நேரத்தில் வந்தீங்க, கண்டிப்பா இங்க இருக்காது, இருந்தா என் கண்ணில் பட்டிருக்குமே..” என்றான்.

  அடுத்ததாய் வீர்-ன் அறைக்குள் நுழைந்தார் நீலாவதி. 

  படுக்கை, மெத்தை விரிப்புடன் சுத்தமாக இருந்தது. ஆனால் ஆங்காங்கே கப்போர்டில் இருக்க வேண்டிய ஆடைகள் சிதறி கிடந்தது. 

  “ஆமா  உன்னுடைய டிரஸ் எல்லாம் ஏன் இப்படி சிதறி கிடக்கு..”

  “அது நான் நாளானிக்கு பிசினஸ் விஷயமா வெளியே போக வேண்டியது இருக்கு, அதனால தான் டிரஸ் எல்லாம் பேக் பண்றதுக்காக எடுத்து போட்டிருக்கேன்..”

  “அப்படியா வேற யாராவது இங்க வந்தாங்களா..”

  “இந்த நேரத்தில் என்னை பார்க்க யார் வரப் போறாங்க நீங்க வந்ததே பெரிய அதிசயம்..”

   அத்தையை  சமாளித்தவாறு வார்த்தை பேசியவனுக்கு வைஷூவை அமர வைத்திருந்த கப்போர்டின் மீது கண் உறுத்தியது. 

    “சரி நீ ஊருக்கு போயிட்டு எப்ப வருவ.. வர சண்டே தானே நாம எல்லாரும் சாப்பிட வெளியே போறதா இருந்தோம்..”  

  “அது தெரியலையே அத்தை சண்டே இங்க இருப்பேனா, இல்லை வெளியூரான்னு தெரியலை… ”

  “சரி நான் வீட்டுக்கு போறேன். நீ பத்திரமா இரு..”

  அத்தை விஷயத்தை கூறிவிட்டு திரும்பிக் கொள்ள, வீர் நிம்மதி மூச்சு விட்ட சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தார். 

  “என்ன ஆச்சு.. ”

  “ஒன்னும் இல்லை அத்தை, நீங்க எப்படி வந்தீங்க..” 

  “வாடகை காரில் தான் வந்தேன்…”

  “சரி நீங்க கீழ போன பிறகு காரை எனக்கு போட்டோ எடுத்து அனுப்புங்க அப்புறமா இங்க இருந்து கிளம்புங்க,  இனிமே ஏதாவது முக்கியமான விஷயம்னா மட்டும் வாங்க ..”

  “ஏன் என்னை வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்ற..”

  “அச்சோ அத்தை நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை. இந்த ராத்திரி நேரத்தில் அதுவும் மழை பெய்யும் போது நீங்க வரணுமா, சிரமம் வேண்டாம்னு தான் சொன்னேன்..”

  வீர் கூறும் ஒவ்வொரு பதிலும் நியாயமானதாகவும் இருக்க , அதே சமயம் சந்தேகம் கொள்ளும் வகையிலும் இருந்தது. 

  ஒரு வழியாய் அத்தை வெளியே செல்ல மெயின் டோர் கதவை சாத்தினான் வீர்.

  விரைந்து சென்று தன் அறையின் கப்போர்டு கதவை திறந்தான். அப்போது வைஷ்ணவி மூச்சு திணறியவாரே வீர்-ன் காலருகே தரையில் கை ஊன்றி விழுந்தாள்.

  யாரோ தன்னை தாங்கி பிடிப்பதை உணர்ந்தவள், முகத்தை காணாது அடிக்க துவங்கினாள்.

  “பொறுக்கி யாருடா நீ… எதுக்கு என்னை கடத்திட்டு வந்த…”

  “வைஷு அடிக்காத நான் தான்…  ”

  பரிச்சயமான குரலை கேட்டதும் அடிப்பதை நிறுத்திவிட்டு கண்களை இறுக்கி மூடி திறந்து பார்வையை சீர்படுத்தினாள்.

  “சார் நீங்களா..”

    அவள் எழுந்து நிற்பதற்கு கை கொடுத்து உதவினான். தான் இருந்த இடத்தை அப்போது தான் சுற்றிப் பார்த்தாள். 

  “ஒன்னும் இல்லை வைஷு இப்போ நீ என் வீட்டில் தான் இருக்க, பார்ட்டியில் நீ கொஞ்சம் அதிகமா குடிச்சிட்ட, உன் ஹாஸ்டலில் டிராப் பண்ண வழியை கேட்டேன் நீ என்னென்னமோ உளறின வேற வழி இல்லாம தான் இங்க அழைச்சிட்டு வந்தேன்…”

  “நான் குடிச்சேனா …. இல்ல சார் எனக்கு குடிப்பழக்கம் கிடையாது. அந்த வாசனையே எனக்கு பிடிக்காது. என் அப்பா குடிச்சாளே அவர் கூட பேச மாட்டேன்..”

  “ஓகே.. நான் உன்னை நம்புறேன் ஆனா உனக்கே தெரியாம எதையோ மாத்தி குடிச்சிருக்க..”

  ‘அவ்வாறு நடக்க வாய்ப்பில்லையே..’ என யோசனையில் மூழ்கினாள். அப்போது தன் ஆடைகளை கவனிக்க இது எங்கிருந்து வந்தது என வியந்தாள்.

  “சார் நான் போட்டுருக்க டிரஸ் யாருடையது என்னுடைய புடவை எங்கே..”

  “பயப்படாத, நாம ரிசார்ட்டில் இருந்து வரும் போது மழை பிடிச்சிருச்சு, டிரஸ் எல்லாம் ஈரமா இருந்ததினால் நான் தான் மாத்தி விட்டேன்..”

  “என்ன நீங்க மாத்தி விட்டீங்களா…!”

  அவன் கூறியதைக் கேட்டு வியப்போடு தன் கைகளை மார்பின் குறுக்கே வைத்து அணை கட்டினாள். 

  “ஆமா நான் தான் மாத்தி விட்டேன்…😉” 

  “ஏன் சார் இப்படி பண்றீங்க என்கிட்டே கொடுத்திருந்தா நானே போய் மாற்றி இருப்பேன்ல, உங்க மேல எவ்வளவு மரியாதை வச்சிருந்தேன்…” 

  ‘அய்யய்யோ விளையாட்டாய் ஆரம்பித்தால் தன்னை பற்றிய பெயரே கெட்டுவிடும் போலயே..’

  “வைஷு calm down, நான் பொய் சொன்னேன் துணியை நான் மாற்றி விடலை நீ தான் மாத்திக்கிட்ட, ஞாபகப்படுத்தி பாரு… ”

  அவள் யோசித்துப் பார்க்க எதுவும் நினைவிற்கு வரவில்லை. 

 “ என்ன..? எதுவும் ஞாபகத்துக்கு வரலையா..”

  “ஆமா, எதுவும் நினைவில் இல்லை இந்த வீட்டுக்கு எப்படி வந்தேன்னும் தெரியலை..”

   “என்னை நம்பு வைஷூ, நான் நல்ல பையன் தான்..” 

  அவனின் கண்களை கவனித்தாள்.  அப்படியே உடை மாற்றி விட்டது உண்மையாக இருந்தால் கூட கோபம் கொள்ள தோணாது. ஏன் தான் கண்களில் இத்தனை ஈர்ப்போ..

  அவனின் கண்களில் இருந்த உண்மையை கண்டவள் மெல்ல புன்னகைத்தாள்.

  “சரி என் புடவை எங்கன்னு சொல்லுங்க நான் மாத்திக்கிறேன்..”

  “பக்கத்து அறையில் கப்போர்ட்டில் இருக்கு..”

  உடைமாற்றிக் கொள்ள அவள் விரைய அப்போது தான் அடுத்த கேள்வி நினைவிற்கு வந்தது. 

  “ஆமா எதுக்காக நீங்க என்னை இந்த கப்போர்டில் மறைச்சு வச்சீங்க..? ”

  “திடீர்னு என் அத்தை வந்திருந்தாங்க..  வீட்டில் ஒரு பொண்ணு இருக்கிறதை பார்த்தால் ரொம்ப டென்ஷன் ஆவாங்க..”

  “யாரு அந்த கொளு பொம்மையா..? ”

  ‘கொலு பொம்மை யா உன்னை மட்டும் நேரில் பார்த்திருந்தால், கொலைகாரியா மாறி இருப்பாங்க.. ’

  அவன் வாய்க்குள்ளயே முனைவியதால் இவளுக்கு கேட்கவில்லை. 

  “என்ன சொன்னீங்க..”

  “ஒன்னும் இல்லை நீ போய் ரெடியாகிட்டு வா உன்னை டிராப் பண்றேன்..”

   அவள் தயாராகி வந்த பிறகு, ஹாஸ்டலுக்கு சென்று டிராப் செய்தான். 

இதன் வாயிலாக அவள் தங்கியிருக்கும் விடுதியின் விலாசத்தையும் அவன் தெரிந்து கொண்டான். 

  “இங்க பாரு… முதல் முறையா குடிச்சிருக்க டயர்டா இருக்கத் தான் செய்யும். அமைதியா போய் தூங்கு…”

  “சார் நான் குடிக்கலை..” 

  “சரி சாமி, நீ குடிக்கலை இருந்தாலும் அமைதியாய் போய் தூங்கு…”

  அவள் ஹாஸ்டலினுள் நுழையும் வரை பார்த்து விட்டு பிறகு இல்லம் திரும்பினான். 

  மறுநாள் காலை : 

  அலுவலக மீட்டிங் ஹாலில் எடுக்கப்பட்ட விளம்பரத்தை மார்க்கெட்டிங் செய்வதை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். 

  “அதனால தான் நான் சொல்றேன் டிவி, அப்றம் பேனர் தான் ஒரு விஷயத்தை மார்க்கெட்டிங் பண்றதுக்கு சரியான ஆப்ஷன்… ” என்றான் விஷ்ணு. 

  “விஷ்ணு, நீ இன்னும் ஓல்டு ஃபேஷனிலேயே இருக்க, இப்போ எல்லாம் மொபைலில் யூஸ் பண்ற அப்ளிகேஷனில் எத்தனையோ விளம்பர படம் வெளிய வருது, பொது மக்கள் மொபைல் யூஸ் பண்ற கேப்ல  நம்ம மார்க்கெட்டிங் வொர்க் ஈசியா முடிஞ்சிடும்.. ” என்றாள் வைஷு.

 ” ஆமா, வைஷூ சொல்றதும் கரெக்ட் ,டிவி பேனர் இதுல எல்லாம் 50% கான்சன்ட்ரேஷன் மட்டும் கொடுக்கலாம்.  மத்தபடி மொபைலில் எந்த ஆப் அதிகமா மக்கள் பயன்படுத்துறாங்கன்னு பார்த்து மீதி விளம்பரத்தை அதில் கொடுக்கலாம் அப்போ தான் சீக்கிரம் ரீச் ஆகும்.. ” என்றார் ஜான் அங்கிள். 

   இப்போது கூட தனக்கு வரவேண்டிய பாராட்டுகளை சாதாரணமாக அவள் வாங்கிக் கொண்டதை வெறுத்தான் விஷ்ணு. 

  மீட்டிங் முடிந்து அனைவரும் அறையிலிருந்து கிளம்ப விஷ்ணு மட்டும் தன்னுடைய மடிக்கணினியை பார்த்தவாறு வெறுப்போடு அமர்ந்திருந்தான். 

  “என்ன விஷ்ணு அடுத்ததாய் வைஷ்ணவியை எப்படி பழிவாங்கலாம்னு யோசிக்கிறியா..?”

  குரல் கேட்டு விஷ்ணு தலைநிமிர எதிரே வீர் அமர்ந்திருந்தான். 

                                      😉

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page