இதுவரை…
போதையில் இருந்த வைஷூவுடன் நடனமாடி தன் நீங்காத நினைவுகளை சேகரித்தான் வீர். வைஷூ வை மறைமுகமாய் மதுவை குடிக்க வைத்தது விஷ்ணு தான் என அறிந்தான் வீர்.
இனி….
காலை மீட்டிங்கில் விஷ்ணுவின் ஐடியாவை காட்டிலும், வைஷூ சாதூர்யமான திட்டம் கூறி அனைவரின் முன்னும் மின்னினாள்.
இப்போது கூட தனக்கு வரவேண்டிய பாராட்டுகளை சாதாரணமாக அவள் வாங்கிக் கொண்டதை வெறுத்தான் விஷ்ணு.
மீட்டிங் முடிந்து அனைவரும் அறையிலிருந்து கிளம்ப விஷ்ணு மட்டும் தன்னுடைய மடிக்கணினியை பார்த்தவாறு வெறுப்போடு அமர்ந்திருந்தான்.
“என்ன விஷ்ணு அடுத்ததாய் வைஷ்ணவியை எப்படி பழிவாங்கலாம்னு யோசிக்கிறியா..?”
குரல் கேட்டு விஷ்ணு தலைநிமிர எதிரே வீர் அமர்ந்திருந்தான்.
“ சார்… ”
” என்ன விஷ்ணு நான் என்ன கேட்கிறேன்னு உனக்கு புரிஞ்சிருக்காதே..
நேத்து வைஷூவுடைய கூல்ட்ரிங்ஸ்க்கு பதில் ஆல்கஹாலை மாத்தி வச்ச, இன்னைக்கு என்ன பண்ண போற..”
“சார் நான் அப்படி எதுவும் செய்யலை..”
“ எங்க என் கண்ணை பார்த்து சொல்லு ..”
வீர்-ன் கண்ணை நிமிர்ந்து பார்த்த விஷ்ணு தைரியமாக உரைத்தான்
“ நான் அப்படி எதுவும் செய்யலை சார்..”
மீண்டும் அவன் உரைத்த பொய்யில் வீர்-ன் கூறிய விழிகள் அவனைத் தாக்கியது. அந்தப் பார்வையை நேர்கொண்ட விஷ்ணுவிற்கு பயத்தில் உண்மையை ஒப்புக்கொள்ள தோன்றியது.
” ஆமா சார் நான் தான் அப்படி செஞ்சேன்..” என தலை குனிந்தான்.
” நான் ஒன்னும் நீ செஞ்ச இந்த தப்பை பெரிய டிடெக்டிவ் ஏஜென்சி வச்சு கண்டுபிடிக்கலை, நடந்த எல்லாத்தையும் யோசித்துப் பார்த்தப்பவே புரிஞ்சுருச்சு.. ஆனால் வைஷூ- வை பார்த்தியா நேத்து நடந்த விஷயத்தை ஒரு பொருட்டாவே எடுத்துக்கலை.. உன் மேல சந்தேகம் கூட அவளுக்கு இல்லை .
நீ வாழ்க்கையில் முன்னேறனும்னு நினைச்சா, உன் திறமை மேல நம்பிக்கை வை. அடுத்தவங்க காலை வாரி விடாத, அவளுக்கு உன் மேல உண்மையான நட்புணர்வு இருக்கு , அதுக்கு கொஞ்சமாவது மரியாதை கொடு..”
“மன்னிச்சிடுங்க சார், இனிமே இப்படி செய்ய மாட்டேன். தயவு செஞ்சு இந்த விஷயத்தை வைஷூ கிட்ட சொல்லிடாதீங்க , அப்புறம் என்னால் அவள் முகத்தில் முழிக்கவே முடியாது..”
“இந்த விஷயத்தை வைஷூ கிட்ட சொல்றதில் எனக்கு எந்த லாபமும் கிடையாது. அதே சமயம் உன்னை தொடர்ந்து இந்த ஆபீஸில் வேலை செய்ய வைக்கிறதில் எனக்கு விருப்பமில்லை. நேரா ரிசப்ஷன் போ அங்க உன்னுடைய ரெசிநேஷன் லெட்டர் கொடுப்பாங்க அதை வாங்கிட்டு கிளம்பிடு …”
விஷயம் கேட்டு விஷ்ணு நொடி கூட யோசிக்கவில்லை உடனே வீர்-ன் கால்களில் விழுந்தான்.
“ப்ளீஸ் சார், தயவு செஞ்சு என்னை வேலையை விட்டு மட்டும் தூக்கிடாதீங்க, இன்னும் இரண்டு மாசத்தில் எனக்கு கல்யாணம். நான் லவ் பண்ண பெண்ணுடைய அப்பா இப்போ தான் சம்மதிச்சிருக்காரு, இந்த சமயத்தில் எனக்கு வேலை இல்லைன்னு தெரிஞ்சா கல்யாணத்தை நிறுத்திடுவார். இது என் வாழ்க்கை சம்பந்தப்பட்டது இந்த ஒரு முறை மன்னிச்சிடுங்க சார்…”
“தெரியும் விஷ்ணு, உனக்கு இன்னும் இரண்டு மாசத்தில் கல்யாணம். அந்த கல்யாணம் எப்படி நடக்குதுனும் தெரியும்… முதலில் எழுந்திரு ..”
“உன் மேல நம்பிக்கை இருக்கும் வரை மட்டும் தான் உன் பெயர் மட்டும் எனக்கு தேவை. சந்தேகம் வந்துருச்சுன்னா உன்னோட மொத்த ஜாதகத்தையும் நான் கண்டுபிடிச்சிருவேன்..
இது உன்னுடைய எதிர்காலம். அந்த ஒரு காரணத்துக்காக உன்னை தொடர்ந்து வேலை செய்ய விடுறேன் மறுபடியும் இந்த நம்பிக்கை துரோகத்தை நீ செஞ்சா, அப்புறம் வேற வீர்-ஐ நீ சந்திக்க வேண்டி இருக்கும்..”
“இனி ஒழுங்கா இருப்பேன் சார்..”
மீட்டிங் ஹாலில் இருந்து வெளியே சென்ற விஷ்ணு ,வைஷூவின் டேபிள் அருகே சென்றான்.
“ஐ அம் சாரி வைஷு ..”
“எதுக்கு மன்னிப்பு கேக்குற ..” என அவள் கேட்க
“அதை என்னால சொல்ல முடியாது ஆனால் என்னை மன்னிச்சுடு..”
“அட லூசு விஷ்ணு, போய் வேலையை பாரு..”
நடந்ததை அலுவலக கண்ணாடி திரையின் மறுபுறம் அமர்ந்தவாறு கவனித்த வீர், அவளை ரசித்தவாறு அடுத்த வேலையை துவங்கினான்.
வேலையின் சமயத்தில் வீர் அழைத்ததால் அவனின் கேபினுக்கு சென்றாள் வைஷு..
” வைஷு கிளைண்ட்டை மீட் பண்ண நேரில் போயிட்டு வந்துடு, எனக்கு வேற ஒர்க் இருக்கு..”
“ சார் நானா..”
“ ஆமா நீ தான் போகணும். நீயே விவரிச்சா அவங்களுக்கு இன்னமும் ஈஸியா புரியும்..”
” ஓகே சார் போயிட்டு வரேன்…”
“இரு.. எப்படி போவ..”
“ ஆட்டோ-ல தான் சார்..”
“ஆட்டோலாம் வேண்டாம். டிரைவர் கிட்ட இன்ஃபார்ம் பண்றேன் ஆபீஸ் காரில் போயிட்டு வா..”
“பரவால்ல சார் எனக்கு எதுக்கு கார்..”
“ பின்ன நம்ம ஆபீஸோட மகாலட்சுமி ஆட்டோவில் போய் இறங்கினா மரியாதையாக இருக்குமா..?”
வீர் உரைத்த வார்த்தை கேட்டு உதட்டோரம் வெட்கம் குடி கொண்டது அவளுக்கு…
வைஷு ஆபீஸ் காரில் கிளம்ப, வேலை முடிவதற்கு மாலை ஆகிவிட்டது. மீண்டும் திரும்பி காரில் வந்து கொண்டிருந்த சமயம், வீர் அழைத்தான்.
“ஹலோ சார், வொர்க் முடிஞ்சிடுச்சு ஆபீஸ்க்கு தான் வந்துட்டு இருக்கேன்..”
“ ஓகே வைஷு, போய் ரொம்ப நேரம் ஆச்சு இன்னும் காணவில்லையேனு தான் கூப்பிட்டேன்..”
“ அவ்வளவு தான் சார் 15 நிமிஷத்தில் வந்துருவேன்..”
வைஷூ பேசி விட்டு அழைப்பை துண்டிக்க, நேரம் கடந்தது. அரை மணி நேரத்திற்கு மேல் தாண்டியிருக்க இன்னும் அவள் ஆபீஸ் வந்து சேரவில்லை.
வீர் அவளின் எண்ணிற்கு அழைப்பு விடுக்க மொபைல் சுவிட்ச் ஆப் என வந்தது.
‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே பேசினோம் , சுவிட்ச் ஆப்னு வருது..”
தற்போது என்ன செய்யலாம் என அவன் யோசித்துக் கொண்டிருந்த சமயம் வேறொரு அழைப்பு அவனின் மொபைலுக்கு வந்தது . அழைத்திருந்தது அத்தை நீலாவதி..
“சொல்லுங்க அத்தை…”
“வீர் அந்த குடிகார பசங்க நம்ம ரம்யா மேல கை வச்சுட்டாங்க, ரம்யாவை கிட்னாப் பண்ணிட்டாங்க..”
அத்தை உரைத்த விஷயம் கேட்டு அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து அதிர்ச்சியோடு எழுந்து நின்றான்.
“என்ன சொல்றீங்க ரம்யாவை கிட்னாப் செஞ்சிட்டாங்களா யாரு …”
“அதான் அன்னைக்கு குடிச்சிட்டு வந்து என் ஸ்கூட்டியை மோதி தள்ளினாங்களே நான் கூட போலீஷில் பிடித்துக் கொடுத்தேனே …”
“அவங்க தான் கடத்திட்டாங்கன்னு எதை வச்சு சொல்றீங்க..”
“கடத்தினவனே போன் செஞ்சு மிரட்டினான். எனக்கு ஒரு வீடியோவும் அனுப்பி இருக்கான். நான் உடனே உனக்கு அனுப்புறேன் சீக்கிரம் ரம்யாவை காப்பாத்து வீர் ..”
நீலாவதியின் எண்ணில் இருந்து வீர்-க்கு ஒரு வீடியோ வந்து சேர்ந்தது. அதை பார்த்தவன் வியந்து போனான்.
பள்ளி சீருடையில் இருந்த ரம்யாவின் கைகளை கட்டி போட்டிருந்தனர். சுயநினைவில் இருந்தவளுக்கு கட்டாயப்படுத்தி மதுபானத்தை வாயில் ஊத்தினர்.
வீடியோவில் ஒருவன் ரம்யாவின் வாயை திறக்க வைத்து, மதுபானத்தை ஊற்றியது தெளிவாக தெரிந்தது.
அதைப் பார்க்கையில் வீர் கைகளை கோவத்தில் இறுக்கிக் கொண்டான்.
பிறகு ரம்யாவின் கைக்கட்டை அவிழ்த்து அவளை நடுரோட்டில் இறக்கி விட்டனர்.
“ஏண்டி குண்டு, என்னவோ குடிக்குறவங்களை எல்லாம் போலீஸில் பிடித்துக் கொடுப்பேன்னு சொன்ன, உன் பொண்ணு குடிச்சுட்டு நடுரோட்டில் போதையில் நடிக்கிறாள் .போய் போலீஸில் பிடிச்சு கொடு, இல்ல எவனாவது வந்து கொத்திட்டு போயிருவான்..”
வீடியோவில் முகத்தை மறைத்தவாறு கண்களை மட்டும் காட்டி ஒருவன் சவால் விட்டிருந்தான்.
மேற்கொண்டு வீடியோவில் தன்னுடைய பள்ளி பேக்கை சுமந்து கொண்டே போதையில் தலையை பிடித்தவாறு மங்கலான பார்வையோடு ரம்யா தள்ளாடி நடப்பது தெரிந்தது.
ரோட்டில் வந்து கொண்டிருந்த கார் ,ஆட்டோ என அவள் மீது மோதுவது போல் அச்சுறுத்தி சென்றது.
“ஹேய் ரம்யா, பார்த்…”
வீர்-ன் மனம் ரம்யாவை பாதுகாக்க துடித்தது.
வீர் மீண்டும் அந்த வீடியோவை ஓடவிட்டு பார்த்தான். அதில் ரம்யா நடந்து வரும் ரோட்டின் அருகில் பிரபலமான கடை ஒன்று இருந்தது. அந்த கடை இருக்கும் இடம் மொத்தம் அந்த ஊரில் இரண்டு இடங்கள் தான். அதை வைத்து ரம்யாவை தேட முடிவு செய்தான். உடனே தன் அத்தைக்கும் அழைப்பு விடுத்தான்.
“ஹலோ அத்தை , நீங்க பயப்படாதீங்க ரம்யா இருக்க இடம் தெரிஞ்சுருச்சு நான் பத்திரமாக கூட்டிட்டு வரேன்..”
“சீக்கிரம் வீர், ரம்யாவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுனா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்..”
“அப்படியெல்லாம் பேசாதீங்க அத்தை நான் உடனே அழைச்சிட்டு வரேன்..”
வீர் அங்கிருந்து கிளம்பினான். இதற்கு இடையில் வைஷ்ணவி இன்னும் அலுவலகம் வந்து சேரவில்லை என்பதை மறந்து விட்டான்.
அந்தக் கடையின் அடையாளத்தைக் கொண்டு அந்த இடத்திற்கு விரைந்தான்.
காரை நிறுத்தியவன் அருகில் இருந்த கடைகளில் விசாரித்தான்.
“அக்கா ஒரு நிமிஷம் இந்த பொண்ணை இங்க பார்த்தீங்களா..”
“இல்லையே தம்பி..”
“நல்லா பார்த்து சொல்லுங்க அக்கா இதே ரோட்டில் தள்ளாடிட்டு நடந்து போன மாதிரி தெரிஞ்சதா..”
“காலையில் என்னுடைய கடை திறந்ததில் இருந்தே இங்கேதான் இருக்கிறேன் .இந்த பொண்ணை நான் இங்கே பார்க்கவே இல்லை..”
அருகில் இருந்த மற்றொரு கடையிலும் விசாரித்தான் .தெரு ஓரம் இருந்த பூக்கடைகள் என ஒன்றையும் விடவில்லை.அனைவருமே பார்த்ததில்லை என்றனர்.
அப்படி என்றால் இந்த தெருவாக இருக்க வாய்ப்பில்லை என அடுத்த தெருவிற்கு சென்றான்.
அங்கேயும் விசாரிக்க துவங்கினான்.
வீடியோவில் தெரிந்த ரம்யாவின் முகத்தை பார்த்த ஒரு கடைக்காரர் ஆம் என பதில் உரைத்தார்.
“ஆமாப்பா கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி இந்த பொண்ணு இந்த ரோட்டு வழியா தான் போனாங்க ஏதோ குடிச்ச மாதிரி போதையில் ஆட்டிக்கிட்டே போச்சு..”
“கூட வேற யாராவது இருந்தாங்களா .. இந்த பொண்ணு எந்த பக்கமா போனாங்கனு தெரியுமா..”
“இல்ல தம்பி இந்த பொண்ணு தனியா தான் நடந்து போச்சு, தெருவே நின்னு வேடிக்கை பார்த்துச்சு.. இந்த வழியா தான் போச்சு..”
கடைக்காரர் கை கட்டிய திசையில் வீர் விசாரித்துக் கொண்டே சென்றான். பரபரப்பாக ரோட்டில் அவன் நடந்து செல்கையில் வீர்-ன் மொபைல் ஒலித்தது அழைத்திருந்தது வைஷ்ணவி ஆவாள்.
அவள் என்ன கூறினாளோ என தெரியவில்லை அவளுக்கு என்ன பிரச்சனையோ உடனே வருகிறேன் என அழைப்பை துண்டித்தான்.
“நான் உடனே வரேன். இப்போ எங்க இருக்க….”
அவள் இடத்தை உரைக்க அடுத்த பத்து நிமிடத்திற்குள் அந்த முகவரியில் இருந்தான் வீர்.
வீர் சென்றிருந்தது ஒரு மருத்துவமனைக்கு. அங்கே மருத்துவ அறைக்கு வெளியே வைஷ்ணவி காத்துக் கொண்டிருக்க, அவளை கண்டதும் வீர் அருகில் வந்தான்.
“வைஷு உனக்கு நல்லா தெரியுமா அது ரம்யா தானா..”
“எனக்கு ஞாபகம் இருக்கு சார் அன்னைக்கு உங்க கூட ரிசார்ட் போகும் போது ரம்யாவை உங்க அத்தை கூட பார்த்தேனே..”
“ரம்யாவை பரிசோதித்த டாக்டர் வெளியே வந்தார்..”
“அந்த பொண்ணோட வீட்டில் இருந்து யாராவது வந்திருக்காங்களா? ..” என டாக்டர் கேட்க
“சார் நான் ரம்யாவோட மாமா ரம்யாவுக்கு இப்போ எப்படி இருக்கு..”
“பயப்படற அளவுக்கு ஒன்னும் இல்லை . ஆனால் இன்னும் போதை தெளியலை . நினைச்சு பார்க்கவே ரொம்ப வருத்தமா இருக்கு..
நம்ம சமுதாயம் இந்த அளவுக்கு கெட்டு போயிருச்சு, ஒரு பொண்ணை கடத்தி வலுக்கட்டாயமா மதுவை குடிக்க வைக்கிறாங்க.. இதெல்லாம் போதையில் அந்த பொண்ணு தான் சொன்னாள் . அவனுங்களைலாம் சும்மா விடக்கூடாது. போலிஷில் கம்ளைண்ட் பண்ணுங்க…
பேஷண்ட் இன்னைக்கு ராத்திரி மட்டும் இங்கே மருத்துவமனையில் இருக்கட்டும் நாளைக்கு காலையில் டிஸ்சார்ச் பண்ணிடலாம்.
“ தேங்க்யூ டாக்டர்.. ”
மருத்துவருக்கு நன்றி உரைத்த வீர் உள்ளே சென்று ரம்யாவை பார்த்தான்.
அவளுக்கு அப்போது தான் மருத்துவம் முடிந்திருந்தது. அவள் மீது மது வாடையும் வந்தது.
“வைஷு என் அத்தைக்கு கால் செஞ்சி சொல்றேன் . அவங்க வரவரைக்கும் ரம்யாவை பார்த்துக்கோ நான் வந்துடறேன்.’
கோவத்தோடு கிளம்பினான் வீர்.
“ சார் பொறுங்க எங்க போறீங்க..”
“ என்னை விடு, என் வீட்டு பொண்ணு மேலேயே கை வைச்சிருக்காங்க அவங்களை சும்மா விட்டா சரி வராது ..”
தன்னைப் பிடித்த வைஷ்ணவியின் கையை விலக்கிவிட்டு கதவை நோக்கி நடந்தான்.
“வேண்டாம் சார் ஒரு நிமிஷம் என் பேச்சை கேளுங்க..”
கதவின் குறுக்கே கைகளை நீட்டி தடுத்தவாரே அவனெதிரே வந்து நின்றாள்.
“உங்க அத்தை மாதிரியே நீங்களும் தப்பு செய்யாதீங்க, அவங்களை போலிஷில் பிடிச்சு கொடுத்ததினால் தான் ரம்யாவை இப்படி செஞ்சிட்டாங்க.. ஏதோ நம்ம நல்ல நேரம் பொண்ணோட உடம்பில் அவங்க கை வைக்கலை. அப்படி ஏதாவது நடந்திருந்தால் என்ன பண்றது..? ”
“இப்பவே எனக்கு அவங்களை கொலை பண்ற அளவுக்கு வெறி இருக்கு, நீ சொல்ற மாதிரி நடந்திருந்தால் ஒருத்தனும் உயிர் பிழைக்க மாட்டான். நகரு நான் போகணும்..”
“முடியாது சார் உங்களை போக விட மாட்டேன்..”
“விடு வைஷூ…”
கதவின் முன்னால் தடுப்பாய் நின்றிருந்தவள் , முந்திக் கொண்டு சென்ற வீர்-ன் நெஞ்சில் கை வைத்து தன் சக்தியால் தடுத்தாள்.
ஆனால் அவனின் சக்திக்கு ஈடு கொடுக்க முடியுமா..? கதவு வரை அவளை தள்ளிக் கொண்டே சென்று விட்டான். இருவரின் நெஞ்சும் ஒன்றோடு ஒன்று மோதி இருக்க, இடையில் அவளின் கரங்கள் இருந்தது. அந்த இடத்தில் கோபத்தை தடுக்கும் தடுப்பு சுவராக தான் அவள் இருந்தாள்.
“அவனுங்களை பொறுத்த வரைக்கும் உங்க அத்தையை பழிவாங்கி இருக்காங்க, அவங்க நினைச்சிருந்தா ரம்யா மேலே கை வச்சிருக்கலாம். ஆனா அதை பண்ணலை..
உங்க அத்தை செஞ்ச காரியத்துக்கு பதிலடி கொடுக்க தான் இப்படி செஞ்சிருக்காங்க.. இப்போ பதிலுக்கு நீங்க போய் அடிச்சா அடுத்து அவங்களுடைய நடவடிக்கை என்னவா இருக்கும்னு யோசிக்க முடியாது நீங்களும் உங்க அத்தையும் 24 மணி நேரமும் ரம்யா பக்கத்தில் பாதுகாப்பா இருக்க முடியாது.
அவளுடைய பாதுகாப்பை நாம தான் உருவாக்கி தரணும். இந்த பிரச்சனையை இத்தோட விட்டுடுங்க. உங்களை இவ்வளவு கோபத்தோடு பார்க்க எனக்கு பயமாயிருக்கு, அப்றம் இந்தப் பிரச்சினை பெருசாகும் ரம்யாவை மட்டுமில்லை, உங்களையும் ஏதாவது செய்வாங்க..”
“இப்படியே விட்டு பெரிய பிரச்சனையா கொடுத்தானுங்கனா..”
“அதுக்கு வாய்ப்பில்லை , இதுக்கு மேல பெரிய பிரச்சனை இருந்தால் இன்னைக்கே அதை செஞ்சு முடிச்சிருப்பாங்க, கண்டிப்பா இனி பிரச்சனை கொடுக்க மாட்டாங்க…
“ப்ளீஸ் சார்… “
கண்கள் சுருங்கிய அவளின் கெஞ்சலில் இளகியவன். யோசித்துப் பார்த்தான்.
😉
