Epi – 14 – உன் பார்வையால் விழி மயங்கினேன்

இதுவரை… 

   ரம்யாவை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக வீர்க்கு அழைப்பு விடுத்தாள் வைஷ்ணவி. ரம்யாவின் நிலையை கண்டு கோபத்தில் அவர்களை ஒரு வழி செய்வேன் என கிளம்பிய வீர்- ஐ தடுத்து நிறுத்தினாள் வைஷு. 

இனி…  

  குழப்பத்தோடு ரம்யாவின் மருத்துவ அறைக்கு வெளியே அமர்ந்திருந்தான் வீர். 

  வீர்-ன் அருகில் வந்து அமர்ந்த வைஷ்ணவி அவனிடம் பேசினாள்.

   ” சார் இப்பவும் அவங்களை போய் அடிச்சு தான் ஆகணுமா..? ” 

   தன் அருகே அமர்ந்திருந்தவளை திரும்பிப் பார்த்தான்.

  “ இதுக்கு மேல எங்க போய் அடிக்கிறது நீதான் ரெண்டும் கட்டானா ஒரு முடிவில் உட்கார வச்சிட்டியே..”

  “சார் குழம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. நமக்கு ரம்யாவோட பாதுகாப்பு தான் முக்கியம்.  முடிஞ்ச வரைக்கும் ரம்யா ஸ்கூலுக்கு போகும் போதும் வரும் போதும் யாராவது ஒருத்தர் கூட போய் பார்த்துக்கனும். கொஞ்ச நாளைக்கு கவனமாய் இருக்கலாம்.

     அதே மாதிரியே உங்களால முடிஞ்சா அந்த ரவுடி பசங்க என்ன பண்றாங்கன்னு கொஞ்சம் கண்காணிங்க, ரம்யா பக்கம் மறுபடியும் எட்டிப் பார்க்கிற மாதிரி தெரிஞ்சா அப்போ வேணும்னா நீங்க போய் நியாயம் கேளுங்க..” என்றாள் 

   பேசி முடித்தவள் வீர்-ன் பதில் என்னவாக இருக்கும் என எதிர்பார்த்து நோக்கினாள்.

  அவளின் கண் பார்வை தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியுமா என்ன..? சிக்கிக் கொண்டவன் அவள் கேட்ட கேள்வியை மறந்து ரசனையில் இருந்தான். 

  “சார்..? 

சார் உங்களைத் தான் கூப்பிடுறேன்..”

  அவனின் பார்வை கோட்டிற்கு இடையில் கை வைத்து ஆட்டி ரசனையை தடுத்தாள்.

  “இப்ப கோவத்தோட எங்கேயும் போக வேண்டாம்னு சொன்னேன் நீங்க எதுவும் சொல்லாம அமைதியா இருக்கீங்க..”

  ‘டேய் வீர்,  இப்படி நேரடியாவா வலுக்கி விழுகுறது. இவளால உன் கௌரவமே போகுது..’

   இவளின் கண் பார்வைக்குள் என்ன தான் இருக்கிறதோ, தன் கண்ணை சிமிட்டி நினைவிற்கு வந்தவன் மீண்டும் அவளை மேற்கொள்ள தடுமாறினான். 

  “அது நான் இப்ப எங்கேயும் போகலை அத்தை கிட்ட போன் பேசிட்டு வரேன்..”

  அவள் விழி பார்க்காது விஷயத்தை உரைத்தவன் கையில் போனை எடுத்துக் கொண்டு நடந்து சென்றான். 

 “ ம்… என்ன சொல்லிட்டு போறாரு அப்படினா அவங்களை அடிக்க மாட்டேன்னு சொல்றாரா..”

  

வைஷ்ணவி  வீர்-ன் பதிலை ஆராய்ந்தாள்.

   வீர் அவனின் எண்ணில் இருந்து அத்தைக்கு அழைப்பு விடுத்தான். தன் மகளுக்கு என்ன ஆனதோ என்ற தவிப்போடு பூஜை அறையில் அமர்ந்திருந்த நீலாவதி மொபைல் ரிங் சத்தம் கேட்டதும் எழுந்து வந்தார். 

  “ஹலோ வீர், என்னப்பா ஆச்சு ரம்யா கிடைச்சிட்டாளா..”

   “அத்தை பதட்டப்படாதீங்க, ரம்யா இப்போ பாதுகாப்பா இருக்காள். நாளைக்கு நானே அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்..”

  “நான் இப்பவே கிளம்பி வரேன் உன் வீட்டில் தானே இருக்க…”

     “அத்தை வேண்டாம் வீட்டுக்கு போகாதீங்க நான் இப்போ ஹாஸ்பிட்டலில் இருக்கேன். ரம்யாவை அட்மிட் செஞ்சிருக்கோம் அவள் இப்போ மயக்கத்தில் இருக்காள்..”

  “அச்சச்சோ..!  என் பொண்ணுக்கு என்ன ஆச்சு படுபாவிங்க என்ன பண்ணாங்க.. ” 

  “பயப்படாதீங்க அத்தை, ரம்யா நல்லா தான் இருக்காள். அவனுடைய உடம்புக்குள்ள ஆல்கஹால் கன்டண்ட் கலந்திருக்கு, அதனால மயக்கத்தில் இருக்காள். டாக்டர் ஒன்னும் பிரச்சனை இல்லன்னு சொல்லிட்டாரு, நாளைக்கு மார்னிங் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க..”

  ” கடவுளே ரம்யாவுக்கு இப்படியா நடக்கணும். எனக்கு அவளை உடனே பார்க்கணும் நான் வரேன்..” 

  “அத்தை ப்ளீஸ் என் பேச்சைக் கேளுங்க இப்போ ராத்திரி 10 மணிக்கு மேல் ஆச்சு இந்த டைம்ல நீங்க கிளம்புனீங்கன்னா இங்க வந்து சேர ரொம்ப லேட் ஆகும்.  வழியில் டிராபிக்கும் அதிகம். எவன் எப்படி வந்து இடிப்பான்னே தெரியாது, ஏற்கனவே நான் ரம்யாவை பத்தின கவலையில் இருக்கேன் இதில் நீங்களும் பாதுகாப்பு இல்லாமல் வெளியே வராதீங்க..”

  வீர் கூறியதை கேட்டு மேலும் அவனுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம் என அடங்கிப் போனார் நீலாவதி.  ஆனால் அந்த ரவுடிகள் மீது கோபம் வந்தது. 

  “சரி வீர், உன் பேச்சை கேட்கிறேன் ஆனால் அந்த ரவுடி பசங்களை மட்டும் சும்மா விடக்கூடாது..”

  இந்த சமயத்தில் வைஷூ கூறிய விஷயத்தை அத்தையிடம் கூறினால் எந்த மனநிலையில் ஏற்றுக்கொள்வார் என தெரியவில்லை. அதனால் மாற்றி உரைத்தான் வீர். 

 “ இதெல்லாம் நீங்க எனக்கு சொல்லனுமா அத்தை. நான் பார்த்துக்கிறேன் நீங்க காலையில் வாங்க..”

   வீர் அத்தையிடம் பேசிவிட்டு அழைப்பை துண்டிக்க, மீண்டும் அவனின் மொபைல் ஒலித்தது. திரையில் அழைப்பு எண்ணை கவனிக்க ஜான் அங்கிள் அழைத்திருந்தார் .பேசியவாறு ரிசப்ஷன் ஏரியாவில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் வீர். 

  வீர்-ன் அருகில் ஒரு பெரியவர் அமர்ந்திருக்க காய்ச்சலில் நடுங்கிக் கொண்டிருந்தார். 

 “ ஹலோ சொல்லுங்க அங்கிள்..”

  “வீர் இவ்வளவு நேரம் ஆச்சு நீ எனக்கு கூப்பிடவே இல்லை. ரம்யா கிடைச்சிட்டாளா..?”

   “ சொல்ல மறந்துட்டேன். ரம்யா கிடைச்சுட்டாள். ஹாஸ்பிட்டலில் அட்மிட் செஞ்சிருக்கோம்..”

    மேற்கொண்டு அங்கிளுக்கு, நடந்த விபரீதத்தையும் உரைத்தான் வீர். 

  “இவனுங்க மாதிரி ஆட்கள் எல்லாம் பூமியில் வாழவே கூடாது. கடவுள்தான் இவனுங்களுக்கு தண்டனை கொடுக்கணும்.  வைஷ்ணவி சொல்றதும் சரிதான்.  நீ பதிலுக்கு அடிக்கப் போயிருந்தால் பிரச்சனை தான் பெருசாகும்.  நமக்கு நம்ம பொண்ணுடைய பாதுகாப்பு தான் முக்கியம்.  அதை முதலில் பார்க்கணும் வீர். 

      வைஷ்ணவி உன் வாழ்க்கையில் வந்தது உன்னுடைய அதிர்ஷ்டம்னு தோணுது. எப்பவும் உனக்கு துணையா அவள் பக்கத்திலேயே இருப்பாள்.  சீக்கிரம் உன் மனதில் இருக்கிறதை அவள் கிட்ட சொல்லு..” 

   “ஓகே அங்கிள் சரியான சமயத்தில் சொல்றேன்..”

  வீர் பேசிக் கொண்டிருந்த சமயம் அருகில் அமர்ந்திருந்த பெரியவர் உடல்நல குறைவால் அதிகம் இரும்பினார்.  அந்த சத்தம் கேட்ட ஜான் அங்கிள் விசாரித்தார். 

  “வீர் யார் இவ்வளவு மோசமாக இரும்புறது ..” 

  “அது என் பக்கத்தில் உட்கார்ந்திருக்க பெரியவருக்கு உடம்பு சரியில்லை..” 

  “முதல்ல நீ அங்கிருந்து எழுந்து தள்ளிப் போ, இப்போலாம் காய்ச்சல் யாருக்கு எப்போ வரும்னு சொல்ல முடியாது..”

  மேற்கொண்டு அங்கிளுடன் பேசி விட்டு அழைப்பை துண்டித்தான்.  அதன் பிறகு  வீர் மருத்துவ அறையில் ரம்யாவின் அருகில் இருந்த வைஷ்ணவியை சந்திக்க சென்றான்.

  வீர் உள்ளே சென்ற சமயம் ரம்யா மயக்கத்தில் இருந்து கண் விழித்திருந்தாள்.

“மாமா…🫂” 

  வீர்-ஐ கண்டதும் அவள் எழுந்து அமர, வீர்-ம் அருகில் சென்றான். அன்போடு அவளை அரவணைத்து தலை கோதி விட்டான். 

  “ஒன்னும் இல்ல ரம்யா,  நீ நல்லா இருக்க பயப்படாதே..”

 “ மாமா அவங்க ரொம்ப மோசம் நான் அவ்வளவு கெஞ்சினேன். என் கையை கட்டிப்போட்டு வாயில் எதையோ ஊத்தினாங்க நாத்தம் தாங்கலை.  அப்படியே கண்ணெல்லாம் மயக்கமா வந்துச்சு.. ”

  ‘தான் இன்னும் அவர்களை எதுவும் செய்யவில்லை என தெரிந்தால் ரம்யா கோபித்துக் கொள்வாளோ..’ என நினைத்தான் வீர். 

  ஆனால் மாறாக வீர்-ஐ அணைத்த்திருந்த ரம்யா அவளின் தாயை திட்டினாள். 

  “எல்லாத்துக்கும் காரணம் அம்மா தான் அவங்களை மட்டும் போலீஷில் பிடித்துக் கொடுக்காம இருந்திருந்தா என்னை கடத்தியிருக்க மாட்டாங்க.. சின்ன விஷயத்துக்கு போய் அவ்வளவு பெரிய டிராமா போட்டு இப்போ எல்லார் முன்னாடியும் எனக்கு தான் அசிங்கமா போச்சு..”

  ரம்யாவிற்கு கூட அத்தையின் மீது தான் தவறு என தோன்றுகிறது. அந்நொடி வைஷ்ணவியை நிமிர்ந்து பார்த்தான்  வீர். இவள் தடுக்கவில்லை என்றால் மேற்கொண்டு என்ன பிரச்சனை ஆகி இருக்குமோ என தன் தவறை  யோசித்தான்.

   “சரி நீ அழுகாத, இப்போ தான் உனக்கு ட்ரீட்மென்ட் முடிஞ்சிருக்கு ரெஸ்ட் எடு காலையில் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்னு டாக்டர் சொன்னாங்க , உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரட்டா..”

  “இல்ல மாமா, எனக்கு பசிக்கலை. என் மேல இருந்து நாற்றம் அடிக்குது மாத்திக்க துணி மட்டும் வேணும்..”

  “சார் இங்க ஹாஸ்பிட்டலுக்கு பக்கத்து பில்டிங் துணிக்கடை தான், நான் போய் வாங்கிட்டு வரேன்..” 

  “வைஷு இரு, இந்த கார்டை யூஸ் பண்ணு..”

 “ பரவால்ல சார், என்கிட்ட காசு இருக்கு..”

  “இருக்கட்டும் வைஷூ, இதை கொண்டு போ..” என்றான்.

   அவள் மறுத்தும் கிரெடிட் கார்டை அவளிடம் ஒப்படைத்தவன்,  பின் நம்பரையும் கூறி அனுப்பினான். 

   சில நிமிடங்களில் வைஷ்ணவி வந்து சேர ரம்யா குளிக்கச் சென்றாள்.

  “வைஷு உனக்கு சாப்பிட என்ன ஆர்டர் பண்ணட்டும்..”

  “இல்ல சார் பரவால்ல எனக்கு பசிக்கலை ..”

  “பொய் சொல்லாத உன் முகத்தை பார்த்தாலே தெரியுது. நீ நல்ல பசியில் இருக்கன்னு… ரம்யாவை விட்டுட்டு வெளியே போய் சாப்பிட முடியாது நான் ஆர்டர் போடுறேன் இங்கேயே சாப்பிடலாம்..” 

  குளித்துவிட்டு வெளியே வந்த ரம்யா நன்கு உறங்கி விட்டாள்.  அதே அறையில் பார்வையாளர்கள் அமர்வதற்காக போடப்பட்டிருந்த நாற்காலியில் வீர்-ம் வைஷ்ணவியும் இருந்தனர்.  ஆர்டர் செய்யப்பட்ட உணவு வந்து சேர்ந்திருக்க உண்ண துவங்கினர். 

  உணவை பிரித்து பார்க்க, முன்னால் மணமணக்கும் தோசை இருந்தது. 

 வைஷு இருந்த பசிக்கு முதல் ஆளாக உணவை வாயில் வைத்து மென்றாள்.

   “இப்போ நான் ஒரு விஷயம் சொல்வேன் ஏன் எதுக்குன்னு கேட்காம இப்பவே நீ அதை செய்யணும் ..”  என்றான்.

  உணவில் இருந்தவளுக்கு திடீரென ஏன் வீர் இவ்வாறு உரைக்கிறார் என்ற பார்வை எழுந்தது. 

  “சொல்லுங்க சார், என்ன விசயம்..?” 

  “எனக்கு ஊட்டி விடு..” என்றான். 

  ஒரு நொடி யோசித்தாள்.  இதுவரை தன்னிடம் யாரும் இது போன்ற ஒரு வேலையை கூறியதில்லை.  ஆனால் அவனின் பார்வையில் இருந்த அர்த்தம் ஏனோ யோசனையை நீள விடவில்லை. 

  அவனுக்கான உணவை கையில் எடுத்து ஊட்டி விட்டாள். முதல் வாயை அமைதியாக உண்டான். இரண்டாம் வாய் உணவை ஊட்டுகையில் கண்ணீர் தரை சிந்தியது. 

  “சார் என்ன ஆச்சு எதுக்கு அழுகுறீங்க.. ”

  ” எனக்கு என் அம்மா ஞாபகம் வந்திருச்சு,  தோஸை னா எனக்கு ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல நான் வேண்டாம்னு சொன்னாலும் எனக்கு ஊட்டி விட்டுகிட்டே இருப்பாங்க..” 

  

 “ உங்க அம்மா எங்க இருக்காங்க..”

  “இதே ஊரில் தான்.  என் கண்ணில் எட்டும் தூரத்தில் தான் இருக்காங்க ஆனா வேற ஒரு குடும்பத்தோடு சந்தோஷமா இருக்காங்க..”

  “உங்களுக்கு தான் உங்க அம்மாவை பிடிக்காதே அப்புறம் ஏன் அவங்களை நினைத்து கண்ணீர் விடுறீங்க..” 

   “என் அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.  ஆனா அதெல்லாம் அவங்களுடைய விவாகரத்துக்கு முன்னாடி வரைக்கும். நான்  அவங்களுக்கு ஒரே பையன். அப்பா அம்மா இரண்டு  பேரும் எனக்கு அவ்வளவு செல்லம் குடுப்பாங்க.

     என்ன ஆச்சுன்னே தெரியலை. கொஞ்ச நாளா அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டையா இருந்தது அப்புறம் தான் தெரிய வந்துச்சு அம்மாவுக்கு வேற ஒருத்தர் கூட  தொடர்புனு.. 

     அவங்க செஞ்ச தப்புக்கு பாசம் கிடைக்காமல் ஏங்கி போய் தண்டனை அனுபவிச்சது என்னமோ நான் தான்.  இப்ப கூட என்னை பார்க்க முயற்சி பண்ணுவாங்க,  அடிக்கடி போன் பண்ணுவாங்க , ஆனா அவங்க செஞ்ச துரோகம் தான் எனக்கு முன்னாடி வரும் அந்த கோவத்திலேயே திட்டி போனை வச்சிடுவேன்..” 

  “சார், ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே.. இப்போ உங்களுடைய அப்பாவும் உயிரோடு இல்லை.  நீங்க ஏன் உங்க அம்மாவை மன்னிக்க கூடாது.  உறவென சொல்லிக்க ரத்த சம்பந்தம் கூட இருக்கிறது நல்லது தானே..” 

  அவள் கூறியது கேட்டு உடனே அவளைப் பார்த்தான். 

  பார்வையில் அஞ்சி விட்டாள் அவள். 

  “Sorry சார் கோச்சுக்காதீங்க… மனசுல பட்டதை சொன்னேன்..”

                                  😉

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page