இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா – 7

அத்தியாயம் – 7

 

ரிதன்யாவும் சரண்யாவும் திருமண மண்டபத்தினுள் நுழைய, சரண்யாவின் தோழி கவிதா ஓடி வந்து இருவரையும் உற்சாகமாக வரவேற்றாள். தன் தாய் தந்தையிடம் அறிமுகம் செய்து வைத்தாள். மணப்பெண்ணான தன் அக்காவிடமும் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தாள்…

​சரண்யா இப்போது கல்லூரி இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறாள். அவளோடு படிக்கும் சில மாணவிகளும் அங்கு வந்திருக்க, அவர்களோடு இணைந்துகொண்டவள், தன் அக்காவையும் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தாள்…

​சரண்யா தோழிகளுடன் உரையாடியபடி இருக்க, ரிதன்யாவோ அங்கே க்ரூப் க்ரூப்பாக நின்றிருந்த ஆடவர்களைத் தான் தயங்கித் தயங்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள். இவர்களில் தனது அபி இருப்பானோ என்ற எண்ணம் அவளுக்குள் வேரூன்றியது. இங்கு மட்டும் அல்ல, வேறு எங்கு சென்றாலும் இதே எண்ணம் தான் அவளுக்குத் தோன்றும். ஒவ்வொரு முறை ஒரு புதிய கூட்டம் அல்லது தெருவைக் கடக்கும்போதும், ஏதாவது ஒரு மூலையில் அபி இருப்பானா? என்று தேடுவது அவளது ஆழ்மனதின் பழக்கமாகிவிட்டது…

அவள் பார்ப்பதை அந்தக் கூட்டத்தில் ஒருவன் பார்த்துவிட்டு, “டேய்! அங்கே பாருங்கடா. அந்தப் பொண்ணு ரொம்ப நேரமா என்னைத்தான் சைட் அடிக்குது,” என்றான். ரிதன்யா குறிப்பிட்டு அவனை மட்டும் பார்க்கவில்லை அங்கிருந்த அனைத்து ஆடவர்களையும் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்…

​அவனருகில் நின்ற நண்பனோ ரிதன்யாவைப் பார்த்துவிட்டு, “பார்க்கிறாத்தான், ஆனா உன்னைப் பார்க்கிற மாதிரி தெரியல. நம்ம எல்லாரையும் தான் பார்க்கிறா! ஆனாலும் ரொம்ப தைரியம் தான் அவளுக்கு. இவ்வளவு தைரியமா நம்மள பார்க்கிறாளே!” என்றான்…

​”அதானே! ஆம்பளக் கூட்டங்க இருந்தா பொண்ணுங்க பார்க்கவே சங்கடப்படுவாங்க. ஆனா இவ இவ்ளோ சர்வ சாதாரணமா கூச்சமே இல்லாம நம்மள பார்க்கிறா, இவ ஒரு வினோதமான ஆள்தான்,” என்று மற்றொரு நண்பன் முணுமுணுத்தான்…

​அவர்கள் ரிதன்யாவின் தைரியத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, ரிதன்யாவோ, அவர்களைக் கவனிப்பதாகவே தெரியவில்லை. அவள் மனம், இத்தனை வருடத் தேடலின் ஏமாற்றத்தில் சுழன்று கொண்டிருந்தது. அவள் கண்களுக்கு அவர்கள் வெறும் பின்னணி நிழல்கள் மட்டுமே….

அந்த நேரம், சரண்யா உட்பட அவளது தோழிகள் எல்லாம் க்ரூப் போட்டோ எடுப்பதற்காகச் செல்ல, சரண்யா “நீயும் வாக்கா,” என்று அழைத்தாள்.

​”இல்லடி, நீ போயிட்டு வா, நான் இங்கேயே இருக்கேன்,” என்று சொல்ல, சரண்யாவும் தோழிகளுடன் சென்றுவிட, ரிதன்யா மட்டுமே தனியாக அங்கு நின்றிருந்தாள். அவளது மனம் முழுக்க, அபியின் எண்ணங்கள் மட்டுமே நிறைந்து போயிருந்தது…

​அந்த நேரத்தில்… “எஸ்கியூஸ்மீ,” என்று குரல் வர, திரும்பியவள், தன் முன்னே நின்ற ஆடவனைக் கேள்வியாய் பார்த்தாள். அவன் தான் அவ்வளவு நேரமும் தன் நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தவன். ரிதன்யா அழகாக வேறு இருக்க, அவளிடம் பேசிப் பார்க்கலாம் என்று வந்திருந்தான்…

​”ஹாய்,” அவன் புன்னகைக்க… “யார் நீங்க?” என்றாள் ரிதன்யா.
​”நான் மாப்பிளையோட சொந்தக்காரன், ஐம் அபி,” என்று அவன் கரத்தை அவளிடம் நீட்ட, அவள் முகத்திலோ அதிர்ச்சியும் ஆச்சரியமும்!

​அந்தப் பெயரைக் கேட்ட கணம், அவள் முகம் சட்டென்று மலர்ந்து போனது, துரதிர்ஷ்டவசமாக அவளை ஃபிளார்ட் செய்ய வந்த அந்த ஆடவனின் பெயரும் அபியாக இருந்தது…

​”அ… அபியா?” ஆச்சரியமாகக் கேட்டவளோ, “உ… உங்களுக்கு ஜானுவைத் தெரியுமா?” என்று கேட்டுவிட்டாள் சட்டென்று.

​அந்த ஆடவனோ, அவள் முகத்தில் தெரிந்த மலர்ச்சியைக் கண்டு விழிகளைச் சுருக்கியவன், ‘தெரியாது’ என்று சொல்லாமல், “யா, தெரியுமே,” என்று பொய் கூற… ரிதன்யாவின் இதழ்களில் மேலும் விரிந்த புன்னகை…

​”நிஜமா தெரியுமா? அ…,” என்று ஏதோ சொல்ல வந்தவள், ஒரு கணம் தயங்கி, “எப்படித் தெரியும்?” என்றாள் கூர்மையான பார்வையுடன். அவன் பெயரைச் சொன்ன கணம் திடீரென்று எழுந்த உற்சாகத்தில், தன்னையும் மீறி ஜானுவைப் பற்றிக் கேட்டிருந்தவளுக்கு, நிஜமாகவே இவனுக்குத் தெரியுமா? என்ற சந்தேகம் பின்புதான் முளைத்தது…

​”தெரியும்,” என்று மட்டும் அவன் சொல்ல… ​”அதான், எப்படி தெரியும்?” என்றாள் ரிதன்யா…

​”அதை விடு… நீ அழகா இருக்க? நாம லவ் பண்ணலாமா?” என்று அவன் கேட்க, ரிதன்யா அதிர்ச்சியில் உறைந்தாள்…

இத்தனை நேரமும் தேடல், ஏக்கம் என இருந்தவளுக்கு அவன் பேச்சு எரிச்சலைத் தந்தது…

​”பொறுக்கி!” என்று திட்டியவளோ, பின்னால் திரும்பிச் செல்ல முயல… அவளது முன்னிலையில் தடுப்பாக வந்து நின்றவனோ, “ஹேய், வொய் டென்ஷன்? சரி, ஜானுவைப் பற்றிப் பேசலாமா?” என்றான். அந்தப் பெயரில் ஏதோ ரகசியம் இருப்பதாக அவதானித்து விட்டான் அவன். அந்தப் பெயரை வைத்து அவளை நெருங்க நினைத்தான்…

​அவன் ஜானுவைப் பற்றிப் பேசலாம் எனவும், போக முடியாமல் தடுமாறி நின்றவள், “என்ன பேசணும்?” என்றாள். அவளது கால்கள் பின்வாங்கினாலும், ஜானு என்ற பெயர் அவளை அங்கே பிடித்து நிறுத்தியது…

​”எனக்கு ஜானுன்னா ரொம்ப பிடிக்கும்,” அவள் முகத்தைக் கூர்மையாக அளவிட்டுக் கொண்டே கூறினான் அவன். அவள் முகத்தில் இருந்த ஆவல், ஆர்வம், மீண்டும் ஒரு புன்னகையாக மாறியது…

​அந்த நேரம் புகைப்படம் எடுத்து முடித்துவிட்டு ரிதன்யாவைத் தேடி வந்த சரண்யா, அவள் யாரோ ஒரு ஆடவனிடம் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அவள் நெற்றி சுருங்கியது. அவளருகில் நின்ற அவளது தோழி ஒருத்தி வேறு… “ரிது அக்கா ஏன்டி அவன் கிட்ட பேசிட்டு இருக்காங்க? அவன் சரியான பொறுக்கி,” என்று கூறிட தூக்கி வாரிப்போட்டது சரண்யாவிற்கு…

​வேகமாகத் தமக்கையின் அருகில் வந்தவள், “அக்கா! என்னாச்சு?” என்று பதட்டமாக வினவினாள் அவன் எதுவும் தன் அக்காவிடம் பிரச்னை செய்கிறானோ எனும் பயத்தில்…

​”சரண்யா, இவரோட பேர் அபியாம். அப்புறம் ஜானுவைப் பத்தித் தெரியும் சொல்றாரு,” என்று ரிதன்யா சரண்யாவிடம் கூற…
​சரண்யாவோ அந்த ஆடவனை அளவிடத் தொடங்கி இருந்தாள்…

அவன் பார்வையும் புன்னகையும் அவளுக்குச் சரியாகவே படவில்லை, அவன் ரிதன்யாவை ஏதோ குழப்பி இருக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது…

தமக்கையின் கண்களில் தெரிந்த ஏமாற்றமும், பிறகு அந்தப் பெயரைக் கேட்டதும் எழுந்த நம்பிக்கையும், அவள் இவனால் ஏமாற்றப்படுகிறாள் என்பதை உணர்த்தியது…

​அவனை நேர்கொண்டு பார்த்தவள், “ஓஹோ… உங்களுக்கு ஜானுவைத் தெரியுமா?” என்று சரண்யா கேட்க… “எஸ் தெரியும்,” என்றான் அவன் இன்னும் அதே இறுமாப்புடன்…

​”சரி, உங்களுக்கு எந்த ஊர்?” சரண்யா வினவ… ​என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறியவன், “இ… இந்த ஊர்தான்,” என்றான். ஜானுவின் சொந்த ஊர் தெரியாததால், அவன் சுற்றிவளைக்க முயன்றான்…

​சரண்யா அவனைவிடவில்லை. “இந்த ஊர்ல எந்தப் பக்கம்? ஜானுவை கடைசியாக எப்போ பார்த்தீங்க? அவங்க வீட்டு அட்ரஸ் தெரியுமா?” என்று சரமாரியாகக் கேள்விகளை அடுக்கி, அவனது பொய்களை வெளிக்கொணர முயன்றாள்…

​அவன், ‘ஆ… இ… அ… அது’ என்று ஏதோ உளற, வாய் திறந்தால் மேலும் மாட்டிக்கொள்வோம் என்பது போல, நிலைகுத்திப் போய் திணறி நின்றான். அவனது முகத்தில் தெரிந்த அசட்டுச் சிரிப்பும், வியர்வையும் அவன் பொய்தான் சொல்கிறான் என்பதைக் காட்டிக் கொடுத்தன.

​சரண்யா தனது அக்காவிடம் திரும்பி, மெல்லிய குரலில் ஆனால் உறுதியாக, “அக்கா! இவன் ஒரு பொறுக்கி. ஜானுவோட பெயரைச் சொல்லி உன்னை ஏமாத்தப் பார்த்திருக்கான். இவனுக்கு ஜானுவைப் பற்றி எதுவுமே தெரியாது. வா போகலாம்,” என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றவள்,..

“என்னக்கா பண்ணிக்கிட்டு இருக்க நீ? அவன் பார்வையிலேயே அவன் சரியானவன் இல்லைனு தெரியுது. அவன்கிட்டப் போய்ப் பேசிக்கிட்டு இருக்க. ‘ஜானு’ன்னு வேற உளறி வச்சி இருக்க!” என்று கோபம் கொண்டாள் சரண்யா. அவளது அக்காவின் அப்பாவித்தனத்தை எண்ணி அவள் பயந்தாள்…

​ரிதன்யாவிற்கும் நிதானம் வந்து, தான் செய்த தவறு புரிந்தது. “சாரி சரண்யா,” என்றவள் “அவன் பெயர் ‘அபி’ன்னு சொல்லவும் எனக்கு ஒரு நிமிஷம் பழைய நினைவு வந்துடுச்சு, இத்தனை வருஷம் கழிச்சு அதுவும் அந்தப் பேரை அவன் சொல்லிக் கேட்கும்போது… ஒரு நம்பிக்கையில கேட்டுட்டேன். இனிமேல் இந்த மாதிரிப் பண்ண மாட்டேன்,” என்று வருத்தத்துடன் கூறினாள்….

தமக்கையின் மனம் புரிந்தாலும் அவளால் என்ன செய்து விட முடியும், சிறு வயதில் சந்தித்தவனை இப்போது எங்கே போய் தேடிவிட முடியும் விரக்தியாய் நினைத்துக் கொண்டவள், கொஞ்ச நேரத்தில் தமக்கையுடன் அங்கிருந்து புறப்பட்டு விட்டாள்…

காரில் ஏறிக் கொண்டனர் இருவரும். வாடிய மலராய் அமர்ந்திருந்த தமக்கையை வருத்தத்துடன் பார்த்த சரண்யா அவள் கரத்தைப் பற்றியபடி,.. “இன்னும் எவ்வளவு நாளைக்குத் தான் அக்கா ‘அபி’ ‘அபி’ன்னே புலம்பிக்கிட்டு இருக்கப் போற? அந்த அபி இப்போ எந்த ஊர்ல இருக்காருன்னு கூடத் தெரியல. உன்னை மாதிரி அவரும் உன்னை நினைச்சுக்கிட்டா இருக்கப் போறாரு? நீ மட்டும் ஏன் இப்படி இருக்க? அதை விட்டுத் தள்ளேன்,” என்றாள்…

​”நிச்சயம் என் அபி என்னைத்தான் நினைச்சுட்டு இருப்பான், அவன் ஊர் எதுன்னு நான் அப்போவே கேட்டு இருக்கணும், ப்ச்,” என்று வருந்தியவள், “நான் பிறந்த அந்த ஊர்தான் எங்களைப் பிணைத்த இடம், நாம மறுபடியும் ஒரு தடவை அங்கே போய்ப் பார்க்கலாமா?” என்றாள் ஏக்கமாய்..

​”மூணு மாசம் முன்னாடி தானே அக்கா போயிட்டு வந்தோம்? அந்த இடமே அடையாளம் தெரியாம மாறிப் போச்சு, பழைய வீடுகள் எல்லாம் புதுசா மாறி நிக்குது, பழைய மனிதர்கள் யாரும் இல்லை, எல்லாரும் புதுசா குடி வந்து இருக்காங்கனு நீ தானே சொன்னே,” என்றாள் சரண்யா விரக்தியுடன்.

​”ஆமா. ஆனா.. ஒரு தடவை மட்டும் போயிட்டு வருவோமே,” என்றாள் ரிதன்யா தன் ஏக்கத்தை விட முடியாமல்…

​”இப்போ அம்மா அப்பா கிட்ட என்ன பொய் சொல்லிட்டுப் போறது?” என்றாள் சரண்யா.

​”அம்மா அப்பா கிட்ட பொய் சொல்ல வேண்டாம், நிஜத்தை சொல்லிட்டுப் போகலாம், அம்மா கிட்ட ஏற்கனவே நான் அபியை பத்தி சொல்லி இருக்கேன்” ரிதன்யா சொல்ல… ​”என்னமோ போக்கா, வர வர நீ சரியே இல்ல, சின்ன வயசுல பார்த்தவனை இப்போ கண்டுபிடிகிறதுலாம் முடியாத காரியம், அது உனக்கு புரியவே மாட்டேங்கிது” என்றாள் அழுப்போடு…

​ரிதன்யா அவளது ஆலோசனையில் இருந்த நியாயத்தை உணர்ந்தாள். அவள் மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தாள். ஆனால், அபி  எந்தத் தடயமும் இல்லாமல் மறைந்து போனது அவளுக்குள் பெரும் வலியை ஏற்படுத்தியது,..

அவனைச் சந்திக்க முடியாமலே போய்விடுமோ என்று அவளது இதயம் வலித்தது. தனது வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு பகுதி, ஒரு முழுமை பெறாத கனவாகவே முற்றுப்பெற்றுவிடுமோ என்ற அச்சம் அவளைச் சூழ்ந்தது. காரின் கண்ணாடி வழியே வெளியே ஓடும் மரங்களைப் பார்த்தபடி வந்தவளுக்கு கண்கள் கலங்கின…

இப்போது அவன் முகம் எப்படி இருக்கும் என்று கூட அவளுக்குத் தெரியாது. அவனுக்கு இப்போது என்ன வயது இருக்கும்? பார்க்க எப்படி இருப்பான்? சிறு வயதில் பிரிந்தவன், இப்போது தன் முன் வந்து நின்றாலும் அவளால் அவனை அடையாளம் காண முடியுமா? என்று கூடத் தெரியாததுதான் அவளுக்குள் பெரும் வலியை ஏற்படுத்தியது…

‘ஒருவேளை அவனை பார்க்க முடியாமலேயே போய்விடுமோ’ என்று மனம் பயம் கொண்ட அடுத்த கணம்,.. ​’இல்லை! கண்டிப்பா நான் என் அபியை பார்ப்பேன், நிச்சயம் நான் அவனை சீக்கிரமே சந்திப்பேன்,’ என்று தனது தோல்வியை ஏற்க மறுத்து, அவள் மனதில் ஓர் உறுதியைப் பற்றிக்கொண்டாள்….

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page