“என்ன ஓவரா துள்ளுற? அன்னைக்கு மட்டும் பிரஸ், மீடியான்னு நீ மாட்டியிருந்தா உன்னோட பேர் மட்டுமில்ல, சக்கரவர்த்தி வீட்டு மருமக னு இந்த வீட்டு மானமும் சேர்ந்தே போயிருக்கும். அப்படி ஏதாவது நடந்திருந்தா உன்னை அங்கேயே கொன்னு போட்டிருப்பேன்.
“உன் கூட இருந்தவன் என்னடான்னா நீதான் விருப்பப்பட்டு அங்க போனன்னு சொல்லுறான். நீ என்கிட்டேயே திமிரா பதில் சொல்றியா? உண்மை வெளில வராம போயிடுமா? எத்தனை நாளைக்கு இங்க உன்னோட ஆட்டம்னு நானும் பார்க்கிறேன்” அவள் மேல் இருந்த நம்பிக்கையை கண்முன் இருக்கும் ஆதாரங்கள் உடைத்துப் போட்டிருக்க, மிதுன் அவளை சந்தேகிக்க ஆரம்பித்தான்.
நதியா அவளுடைய நிலையை எண்ணி விரக்தியாய் சிரித்தாள். மிதுன் அவளுக்குத் தெரியாமல், ஸ்கிரீன் மிரரிங் ஆப் மூலம் அவளுடைய போன் திரையை, தன்னுடைய போனில் அப்படியே பார்க்குமாறு பதிவு செய்துகொண்டான். அன்றிலிருந்து அவள் போனில் போன் கால்கள் வந்தால், அவள் என்ன செய்தாலும் அதை மிதுன் அவனுடைய போனில் இருந்து கண்காணித்தான்.
அவ்வப்போது அவள் போன் கேலரியில் இருக்கும் அவளுடைய போட்டோக்கள், வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளிடம் இருந்து அவன் விலகியே இருந்தான். இப்படியே ஒருவாரம் கழிந்தது…
“மித்து அண்ணா.. இந்த தடவை ஃபேஷன் பெஸ்டிவ்ல பார்ட்டிஸிபேட் பண்ண எனக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. நான் இதுல வின் பண்ணினா எனக்கு நல்ல ஸ்கோப் கிடைக்கும்” அவனுடைய அறைக்கு சென்று மிதுனிடம் பேசினாள் வைஷாலி.
“ஹ்ம்ம்.. போயிட்டு வாடா. நல்ல விஷயம் தான”
“அண்ணா.. நான் அண்ணியை மைன்ட்ல வச்சுதான் ட்ரெஸ் டிசைன் பண்ணேன். அவங்களையும் கூப்பிட்டுப் போகணும்”
“தேவ் கிட்ட கேட்டுட்டு ரூபியை கூப்பிட்டுப் போ”
“அண்ணா.. நான் நதியா அண்ணியை பத்தி சொன்னேன். அவங்களை மாடலா கூப்பிட்டுப் போறேன். உங்களுக்கு ஓகே வா?”
“சரி ஓகே. ரெண்டு பேரும் பாடிகார்ட்ஸ் கூட நம்ம கார்ல போயிட்டு அவங்க கூடவே வந்திடுங்க”
“தேங்க்ஸ் அண்ணா.. தேங்க் யூ சோ மச்” என்றவள், அவன் கன்னத்தில் முத்தமிட்டபின் அறைக்குச் சென்றாள்.
ரெயின்போ தீமில் வானவில்லின் 7 வண்ணங்களும் கலந்த நிறத்தில், டூ இன் ஒன் மாடலில் ஒரு சேலையை டிசைன் செய்து ஒரு இடத்தில் நெய்து, அதன்பின் அதை மாற்றி டிசைன் செய்தாள் வைஷாலி.
அன்று ஃபேஷன் பெஸ்டிவ் நடக்கும் கல்லூரிக்கு நதியாவுடன், தேவையான எல்லா பொருட்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள். “அண்ணன் பர்மிஷன் தருவாருனு நான் நினைக்கவே இல்ல. அவர் அன்னைக்கு உங்களுக்கு நடந்ததை நினைச்சு பயந்து நமக்கு பாடிகார்ட் அனுப்பியிருக்கார்” என வைஷு சொல்லிட, “உன்னோட அண்ணன் நான் உன்னை ஏதாவது பண்ணிடுவேன்னு சந்தேகத்துல தான் பாடிகார்ட் அனுப்பியிருக்கார்” நதியா கண்ணீரோடு விரக்தியாய் சொன்னாள்.
வைஷாலி அதிர்ந்து போய் அவளைப் பார்க்க, “விடுடா வைஷு.. நாம தான் இன்னைக்கு வின் பண்றோம்” வலியை மறைத்துச் சிரித்தாள்.
நதியாவுக்கு காஸ்டியூம் போட்டு, மேக் ஓவர், ஹேர்ஸ்டைல் செய்து தயார் செய்தனர் வைஷுவும் அவள் தோழிகளும். போட்டியில் கலந்து கொண்டவர்கள், ஒவ்வொருவராக மேடையேற நதியாவும் மேடை ஏறினாள். அவள் அணிந்திருந்தது 7 வண்ணங்களின் கலவையில் சில்க் துணியில், ஸ்ட்ராப் லெஸ், ஆஃப் ஷோல்டர் ஃப்ராக் மாடல் ட்ரெஸ், தோளில் அதன் மேலே சேலை பள்ளுவைப் போல போட்டிருந்தாள்.
நதியா கொஞ்ச தூரம் மேடையில் நடந்ததும், தோளிலிருந்த அந்தப் பள்ளுவைத் தூக்கி பின்னால் கைகளின் குறுக்கே ஷால் போல மாற்றினாள். இதை வெஸ்டர்ன் மாடலில் ஃப்ராக் போலவும், டிரெடிஷனல் மாடலில் சேலை போலவும் விருப்பத்திற்கேற்ப ரெடிமேடாக அணிந்து கொள்ளலாம்.
வண்ணம், டிசைனிங், பிரசன்டேஷன் என எல்லா பிரிவுகளிலும் அந்த காஸ்டியூம் அதிக மார்க் பெற்றிட, முதல் பரிசை வாங்கினாள் வைஷாலி. அவள் வெற்றிக் கோப்பையை வாங்கியபின், இருவரும் மேடையில் ஒன்றாக நின்று போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தனர்.
அவர்கள் மேடையில் இருந்து இறங்கியதும், தேவ் வைஷாலிக்கு போன் செய்து, “உடனே வீட்டுக்கு வா..” என்று சொல்ல, ஏதோ பிரச்சனை போல என்ற பதற்றத்தில் நதியாவின் உடையைக் கூட மாற்றாமல் இருவரும் வீட்டிற்குத் திரும்பினர்.
ஹாலில் ராதா, தேவ், சூர்யா, ருக்மணி நால்வரும் இருக்க, நதியா வைஷாலி இருவரும் உள்ளே நுழைந்தனர். “தேவ் அண்ணா.. எதுக்கு உடனே கிளம்பி வர சொன்னீங்க ?” என்று வைஷாலி கேட்டுக் கொண்டிருக்க, நதியா மாடிக்குப் படி ஏறினாள்.
“நதியா..” ராதா கோபத்தில் கத்த, அப்படியே இறங்கி வந்தாள். “என்ன இது கோலம். எங்க வீட்டு மானத்தை வாங்க தான் இங்க மருமகளா வந்திருக்கியா?” அவர் கோபம் குறையாமல் சீற, அவள் பதிலேதும் பேசாமல் இருந்தாள். “அம்மா.. நான் தான் அண்ணன் கிட்ட பர்மிஷன் கேட்டு அவங்களை கூப்பிட்டுப் போனேன்” வைஷு அவளுக்காகப் பரிந்து பேசினாள்.
நதியா மேடையில் நடந்து வந்ததும், வைஷாலி அவளோடு சேர்ந்து விருது வாங்கியதும் நியூஸ் சேனலில்……. ‘இன்று ……. கல்லூரியில் நடந்த ஃபேஷன் பெஸ்டிவ் போட்டியில் முதல் பரிசை வென்று அனைவரின் கவனத்தை ஈர்த்த காஸ்டியூம்’ என்ற தலைப்பில் செய்தியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, அதை பார்த்த ரூபிணியின் அம்மா அவளுக்கு போன் செய்து சொல்ல, மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்துவிட்டது.
“என்ன.. வாயை திறந்து பேசு? என்ன ட்ரெஸ் இது? நீ எந்த வீட்டுக்கு மருமகளா வந்திருக்க தெரியுமா? அவ சொன்னா உனக்கு எங்க புத்தி போகுது? முறையா வந்திருந்தா குடும்பம், கௌரவம் பத்தி தெரிஞ்சிருக்கும்” வார்த்தைகளில் அமிலத்தை வீசினார் ராதா.
சூர்யாவுக்கும் பாட்டிக்கும், ஃபேஷன் ஷோ விஷயம் தவறாகத் தெரியவில்லை. ஆனால் ராதாவின் கோபத்திற்கு முன் யாரும் பேச முடியாது என்பதால் அமைதியாக நின்றிருந்தனர்.
“அம்மா.. அண்ணியை எதுக்கு இப்போ தேவையில்லாம திட்டுறீங்க?” வைஷாலி கேட்க,
“வைஷு.. உனக்கு ஒண்ணும் தெரியாது. யாரையும் நம்ப முடியாது. நீ நம்ம வீட்டாளுங்க இல்லாம யார் கூடவும் வெளில போகாத” சொன்னவன் தேவ்.
“அவங்க நம்ம மித்து அண்ணனோட பொண்டாட்டி. வேற யாரோ இல்ல” மனம் தாங்காமல் வைஷு சொல்லிட,
“அண்ணி.. உங்களுக்கு வேணும்னா இதெல்லாம் பழக்கமா இருக்கலாம். ஏற்கனவே அன்னைக்கு நீங்க பண்ண பிரச்சனைல இருந்து அண்ணன் இன்னும் வெளில வரல. இதுல ஏதாவது புது பிரச்சனை வந்தா என்ன பண்ணுவீங்க?” தேவ் இத்தனை நாளாக அவனுடைய மனதில் இருந்த சந்தேகத்தையும் சேர்த்தே சொல்லி விட்டான்.
“என்னடா இவ என்ன பிரச்சனை பண்ணா? சொல்லு தேவ்” ராதா கேட்க, அவன் அன்று நதியாவிற்கு ஹோட்டலில் நடந்ததைச் சொன்னான்.
“தேவ்..” என்று கர்ஜித்தவாறு மிதுன் உள்ளே நுழைய, அவன் அமைதியானான். “நதியா.. நீ ரூமுக்கு போ” மிதுன் சொல்ல, அவள் நகர்ந்தாள்.
“ஏய் நில்லு.. என்ன நடக்குது இந்த வீட்ல? இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு. உன் பொண்டாட்டியை பத்தி எங்களுக்குத் தெரியக்கூடாதுன்னு மறைக்க பார்க்குறியா? எங்க கெட்டு போய் வந்தவளோ இந்த வீட்டு மருமகளா? என்ன கொடுமை இது? அவளை அவங்க குடும்பத்தில ஒழுக்கமா கூட வளர்க்கலையா?” ராதா இஷ்டத்திற்கு பேசிக் கொண்டே போக,
“நிறுத்துங்கம்மா..” என்று கோபமாக கத்தியது மிதுன் அல்ல வைஷாலி.
“என்னம்மா சொன்னீங்க. கெட்டுப் போய் வந்தாங்களா? உங்களுக்கு இப்படிப் பேசுறது தப்பா தெரியல” வைஷுவின் குழந்தை போன்ற குரலில் கோபம் ஏறியிருந்தது.
“அப்போ ஒரு குடும்ப பொண்ணு எதுக்கு ஹோட்டல் ரூமுக்குப் போறா?” ராதா வார்த்தைகளை வீச, “நானும் தான் ஹோட்டல் ரூமுக்குப் போனேன். நான் குடும்ப பொண்ணு இல்லையா?” வைஷாலி பேசியதில் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் வாயடைத்தது.
“வைஷு கொஞ்சம் சும்மா இருடா..” நதியா மெல்லிய குரலில் சொல்லிட, “பேசாம இருங்க அண்ணி..” என்றவள், “எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு. அன்னைக்கு எனக்குப் பதிலா அண்ணி மாட்டிக்கிட்டாங்க” என அன்று நடந்த கதைகளைச் சொன்னாள்..…
கல்லூரியில் வைஷாலியின் பின்னாலே காதல் என்ற பெயரில் சுற்றித் திரிந்தான் சீனியர் ஒருவன். அவனது தொல்லையைத் தாங்காமல், அவள் பேராசிரியர்களிடம் சென்று புகாரளிக்க, அவனை காலேஜ் மேனேஜ்மென்ட் டிஸ்மிஸ் செய்தது.
படிப்பு முடியும் தருணத்தில் டிஸ்மிஸ் செய்துவிட, தன்னுடைய கேரியர் போன கோபத்தில் அவளை பழிவாங்க நினைத்தவனுக்கு, எப்போதும் காரில் பாடிகார்ட்டுடன் கல்லூரிக்கு செல்பவள் அன்று செமினாருக்கு தனியாகச் சென்றிட, வசதியாகிப் போனது.
கல்லூரியில் இருந்து செமினார் முடித்து வெளியே வந்தவளை மயக்க மருந்து கொடுத்து, ஹோட்டல் அறைக்கு கடத்திச் சென்றான். அவனுக்கு அவளது அண்ணன்களைப் பற்றித் தெரியும் என்பதால் அவர்களுக்கும் தான் அவளைக் கடத்திய தகவலைச் சொன்னான். அவர்கள் வருவதற்குள் அவளை அடைந்து விட்டால், ஒன்று அவனுக்கே திருமணம் செய்து தருவர், இல்லையென்றால் குறைந்தபட்சம் அவள் அசிங்கப்படுவாள் என்ற நோக்கில் இதைச் செய்தான்.
ஆனால் நதியாவிற்கு இந்த விஷயம் விஷ்ணு மூலமாகத் தெரிய வர, வேகமாக கிளம்பிச் சென்றவள் அவளைக் காப்பாற்றப் போராடினாள். முழு போதையில் இருந்தவன், நதியாவை வைஷாலி என நினைத்து அவளிடம் தவறாக நடக்க முயற்சித்தான்.
ஹோட்டல் ரூமில் படுக்கை அறைக்குள் இருந்த வைஷாலியை யாரும் பார்க்கவில்லை. அவளை காப்பாற்றச் சென்று நதியா தானும் மாட்டிக் கொள்வாள் என எதிர்பார்க்கவில்லை.
உள்ளே வைஷாலி இருப்பதால் நதியாவால் வெளியே சென்று உதவிக்கு யாரையும் அழைக்க முடியவில்லை. பலம் கொண்ட மட்டும் அவனை விலக்கிப் பார்த்தவள், அவன் அங்கிருந்த ஏதோ கனமான பொருளால் அவள் பின்னந்தலையில் அடித்ததும் மயங்கினாள். அவனோ அவளிடம் அத்துமீறிட, பலமிழந்து அவள் போராடிக் கொண்டிருந்த சமயத்தில், கதவு தட்டும் சத்தம் கேட்டு விஷ்ணு தான் வந்திருக்கிறான் என எழுந்து ஓடினாள். அதற்குள் மிதுன் அறைக் கதவை உடைத்துத் திறக்க அவனிடம் தஞ்சமடைந்தாள்.
மிதுன் அங்கிருந்து சென்ற பின், பணம் கொடுத்து அன்றைய நாளில் ஹோட்டலின் மொத்த சிசிடிவி ஃபுட்டேஜ்களை அழித்து, அதன்பின் டாக்டரை அழைத்துச் சென்று வைஷாலிக்கு ஊசி போட்டு, அவள் தெளிந்ததும், அங்கு நடந்த எல்லாக் கதைகளையும் சொல்லி, பாதுகாப்பாக அவளை வீடு வரை அழைத்து சென்றவன் விஷ்ணு.
விஷ்ணு நதியாவை அங்கு அனுப்பியதற்கான காரணம் கடத்தியவனை ஏமாற்றி, வைஷாலியைக் காப்பாற்றி, அவர்கள் அங்கு செல்வதற்குள் அங்கிருந்து வெளியேற்றி வீட்டிற்கு அழைத்துச் செல்லத்தான். அவனுக்கு நதியாவைத் தவிர யாரிடமும் நம்பி உதவி கேட்க முடியவில்லை. அவனும் மிதுனை விட்டுச் செல்ல முடியவில்லை.
ஏற்கெனவே மிதுன் காரில் செல்லும்போதே தங்கையை நினைத்துக் கலங்கியவாறு இருந்தான். நதியா இருந்த நிலையைப் பார்த்து பதறிப் போன விஷ்ணு, மேலும் அவர்களை சங்கடப்படுத்த விரும்பாமல் வைஷாலி உள்ளே இருப்பதை சொல்லாமல் மறைத்து விட்டான். அவளிடமும், “மற்ற யாரிடமும் இதைப்பற்றி சொல்ல வேண்டாம், உன் அண்ணன்களுக்குத் தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவார்கள்” எனச் சொல்லியிருந்தான்.
மிதுன் குடும்பத்தின் மேல் இருக்கும் விசுவாசத்தின் காரணமாக, விஷ்ணுவும் நதியாவும் வைஷாலியை இதில் இருந்து காப்பாற்றி, அவர்கள் குடும்பத்திற்கு இந்த விஷயத்தை தெரியாமல் மறைத்து விட்டனர்.
ஏனென்றால் மிதுன் குடும்பத்தில் இருப்பவர்களின் அன்பும், ஒற்றுமையும் அவர்களுக்குத் தெரியும். செல்லத் தங்கைக்கு இப்படி ஆகிவிட்டதே என அவர்கள் மனம் வருத்தப்படக்கூடாது, இது காலத்திற்கும் அவர்கள் மனதில் வடுவாக இருந்திடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இத்தனையும் செய்தனர்.
ஆனால் நதியா ஹோட்டல் அறைக்கு உள்ளே சென்ற ஃபுட்டேஜ் மட்டும் எப்படி மிதுன் கைக்கு கிடைத்தது எனத் தெரியவில்லை. அதே போல் அந்த பொறுக்கி சீனியர் போதையில் வைஷாலி என நினைத்து, ‘நான் அவளோட பாய்ஃப்ரெண்ட்’ என்க, மொத்த பழியும் நதியாவின் மீது விழுந்தது.
ஆக, தவறே செய்யாமல் அங்கு பிரச்சனையில் சிக்கி, காயங்களுடன் தப்பித்து, பழியை ஏற்று, மிதுனிடம் உண்மையை மறைத்து அடியும் வாங்கி, இப்போது அவர்கள் குடும்பத்தின் முன்னால் குற்றவாளியாகி நிற்கிறாள் நதியா.
❤️🔥 மோகம் தீர்ப்பாள் ❤️🔥
