Epi – 18 – ஷாக் to ரீடர்ஸ்

இதுவரை… 

   வீர் அவனின் காய்ச்சல் வீரியத்தில் மயங்கி கை வளைவில் சிக்கிய வைஷ்ணவியை கட்டிக் கொண்டான். வீர்-ன் கை வளைவுக்குள் மாட்டிய வைஷ்ணவி தன்னை மறந்து அவனோடு இணைய முனைந்தாள். அதைக் கண்ட நீலாவதி கோவத்தோடு வைஷ்ணவியை அடித்தார். 

இனி… 

  “அத்தை ப்ளீஸ், இப்போ நான் உங்களுக்கு என்ன விலக்கினாலும் புரியாது.  இப்போ இங்கே இருந்து கிளம்புங்க  நாம அப்புறமா சந்திக்கலாம்..” 

  “புரியுது வீர், இந்த அத்தைக்கு நீ கொடுக்கிற மரியாதையும் எங்க மேல வச்சிருந்த பாசமும் தெளிவா புரியுது நான் கிளம்புறேன்… ”

  நீலாவதி கையெடுத்து கும்பிட்டு கண்ணீரோடு வீட்டில் இருந்து வெளியேறினார். 

  வைஷ்ணவி அரைகுறை ஆடையை இழுத்து மூடியவாரே தரையில் மண்டியிட்டு தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.

  “அய்யோ…  எல்லாம் என்னால தான்..”

  “வைஷு ப்ளீஸ் இப்படி அடிச்சுகாத”.. 

    பதட்டத்தோடு அவளின் கைகளை தடுத்து பிடித்தான். 

  “தப்பு என் மேல தான்,  என்னை மன்னிச்சிடு என் அத்தை பேசினதை மனதில் வச்சுக்காத..”

  வீர்-ன் கண்களை பார்க்காது கண்ணீர் வடிந்த தன் விழிகளை தாழ்த்தியிருந்தாள் வைஷு. 

  

    “உங்க அத்தை சொன்னதில் தப்பு இல்லை. காய்ச்சலும் மருந்து போதையும் உங்களுக்கு தானே,  நான் நல்ல தானே இருந்தேன்.  நானும் இடம் கொடுத்துட்டேனே…”

  “இல்ல வைஷு,  நீ சுத்த தங்கம் … என்னோட பலத்தை சமாளிக்க முடியாம தான் நீ தவிச்சு போன, எனக்கு இப்போ எல்லாமே ஞாபகத்துக்கு வருது. தப்பு பண்ணது நான் தான்..”

  அவளின் கைகளை ஒன்றாய் சேர்த்து பிடித்தான்.

   “நீங்க என்ன சொன்னாலும் என் மனசு சமாதானம் ஆகாது.  நடந்தது தப்பு தானே, கட்டிய கணவனுக்கு மட்டும் தான் கற்பு-னு பத்திரமா வச்சிக்கிறது தான் ஒரு பெண்ணோட முதல் காதல் பரிசு, நான் என் எதிர்காலத்தோட புனிதத்தையே கெடுத்துட்டேன்… ” என்றாள். 

  உள்ளுக்குள் அவளைப் பற்றி அவளே இவ்வளவு கீழ்த்தனமாக யோசிப்பதை வீர் விரும்பவில்லை. 

   “நான் அத்தை கிட்ட சொன்ன எதுவுமே பொய்யில்லை வைஷூ, நான் உன்னை விரும்புறது உண்மை, உன்னை கல்யாணம் செய்யவும் காத்திருக்கேன்.”. 

  அதுவரை வீர்-ன் கண்களை நிமிர்ந்து காணாதவள், அவன் கூறிய வார்த்தைகள் கேட்டு பார்த்தாள். 

   “ஆமா வைஷூ,  உன்னை எப்போ காதலிக்க ஆரம்பிச்சேன்னு எனக்கு தெரியலை. லட்சணமான உன் முகத்தை பார்க்கும் போது எனக்குள்ள சாந்தமான ஒரு உணர்வு வந்துச்சு.. வழக்கத்துக்கு மாறா என்னுடைய நாட்கள் புன்னகையோட நகர்ந்து போச்சு, அதுக்கு காரணம் நீ தான்னு எனக்கு புரிய வந்துச்சு, நான் உன்னை நேசிக்கிறேன். உன் விருப்பம் இல்லாம உன்னை தொட்டதுக்கு தான் மன்னிப்பு கேட்டேனே தவிர, நான் எந்த தப்பும் செய்யலை நீ எனக்கானவள் நான் அதை முழுசா நம்புறேன்..”

   அழுது கொண்டிருந்தவளுக்கு இந்த திடீர் காதல் வசனம் அதிர்ச்சியாக இருந்தது . அவன் பிடித்திருந்த தன் கையை மெல்ல விலகிக் கொண்டாள். 

   “இந்த சமயத்தில் என் காதலை சொல்றது சரியானு யோசிக்கிற நிலைமையில் நான் இல்லை. உனக்கும் எனக்கும் இடையில் நடந்த முதல் தொடுதலை நீ அசிங்கமா நினைக்கிறதை என்னால ஏத்துக்க முடியலை..”

   அவளின் பதில் என்னவாக இருக்கும் என அமைதியோடு காத்திருந்தான். 

  “நான் என் புடவையை கட்டிக்கணும்..” என்றாள் 

  அவள் கூறிய பதில் கேட்டு அமைதியாய் அவளை விட்டு விலகி நின்றான். 

   புடவையை தாங்கியவாறு அறைக்குள் நுழைந்தவள் 10 நிமிடத்தில் வெளியே வந்தாள். 

    வெளியே காத்திருந்தவனுக்கு இதயம் திக்கென அடித்துக் கொண்டது . இன்னும் காணவில்லையே ஏதேனும் கண்ணீர் வடிக்கிறாளா, இல்லை அசம்பவிதம் ஏதேனும்..?

  கதவு திறக்கப்பட, அவள் வெளியே வந்த சமயம் அழகாய் புடவை கட்டியிருந்தாள். கண்ணீர் வடித்த தன் முகத்தை தண்ணீரால் கழிவியிருந்தாள்.  

 “ நான் கிளம்புறேன் சார்..”

  வெளியே வந்தவள் என்ன உரைப்பாளோ என அவன் எதிர்பார்க்க போய் வருகிறேன் என்றாள்.

  அவள் கதவை நோக்கி நடக்க, இவனோ அமைதியாக காத்திருந்தான். ஒரு முறை பார்ப்பாயா என அவன் ஏக்கம் காத்திருக்க பதில் உரைப்பதற்காக நடையை நிறுத்தியவள் திரும்பிப் பார்த்தாள். 

  “ நீங்க சொன்னதெல்லாம் எனக்கு புரியுது. ஆனால் நான் அதுக்கு தகுதி இல்லாதவள். உறவென சொல்லிக்க உங்களுக்கு ஒரு அத்தையாவது இருக்காங்க, எனக்கு அப்படி கூட யாரும் இல்லை..”

  “கல்யாணத்துக்கு பிறகு உனக்கு நான் எனக்கு நீ-னு நாம உறவால் இணைய தானே போறோம்..” என்றான். 

  அவனின் பதிலைக் கேட்டு கசந்த புன்னகை கொடுத்தாள் 

    “நான் ஒரு ஆளுன்னு என் மேல எப்படி உங்களுக்கு ஈர்ப்பு வந்துச்சு,  என்னை உங்க படுக்கையறைக்குள் அனுமதிச்சதுக்கே உங்களுக்குனு இருந்த ஒரே உறவும் கோவிச்சுக்கிட்டு வெளியே போயிட்டாங்க, இதில் என்னை கல்யாணம் செஞ்சா திருமணம் ஆகியும் நீங்க அனாதையா தான் வாழ வேண்டி  இருக்கும்..” என்றாள் 

   

   “அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். எனக்கு பதில் சொல்லு,  உனக்கு என்னை பிடிக்கும்ல..”

   “நான் சொல்றதை நீங்க தான் புரிஞ்சுக்கணும்.  உங்க அத்தை பெண்ணையோ, இல்லை அவங்க பார்க்கிற பொண்ணையோ நீங்க கல்யாணம் பண்ணா உங்களுக்கு புதுசா ஒரு குடும்பமே கிடைக்கும்…” என்றாள்.

  “என்னை பிடிக்குமா இல்லையா..”

  அவன் பிடிவாதமாய் தன் பதிலை கேட்டான். 

    “நான் உங்ககிட்ட வேலை செய்ற ஒரு ஸ்டாப்.  இந்த மாசம் சம்பளம் இல்லைன்னா, செலவுக்கு கூட கையில் காசு இல்லாமல் பட்டினியா வாழும் ஜென்மம் நான். இந்த பிச்சைக்காரியை ஏன் விரும்புறீங்க…? உங்களுடைய கௌரவத்துக்கு சமமான ஒரு துணையை தேர்ந்தெடுங்க .. நான் வரேன்..”

  இறுதிவரை அவனின் கேள்விக்கு பதில் உரைக்காமல் அங்கிருந்து வெளியேறினாள்.

  மனம் நொந்தவன். சோபாவில் அமர்ந்து தன்னுடைய நெற்றியை  பிடித்துக் கொண்டான். 

  காய்ச்சலும் காதலும் அவனை மாறி மாறி வாட்டியது.

    வீர்-ன் பிளாட்டில் இருந்து வெளியேறிய வைஷு, லிப்ட்டினுள் நுழைய தன்னுடைய புடவை பின்னை கழட்டி புடவையை  ஒருபுறமாக தொங்க விட்டாள். கலைந்திருந்த கூந்தல் பின்னலையும் கலைத்து கூந்தலையும் ஸ்டைலாக விரித்து விட்டாள். 

   லிப்டின் கதவு தரைத்தளம் அடைந்ததும் திறக்கப்பட, வெளியே வந்தவள் மொத்தமாக தோற்றம் மாறி புது பாவனையோடு தெரிந்தாள். கண்களில் ஒரு திமிரும், நடையில் இருந்த வேகமும் வைஷ்ணவி தானா என கேள்வி கேட்டது. 

    அறைக்குள் புடவை கட்டும் போது அவள் அழைத்திருந்த வாடகை கார் வந்து சேர்ந்திருக்க, அதனுள் ஏறி அமர்ந்தவள் நேர் பார்வையோடு விலாசத்தை உரைக்க, அதை காதில் கேட்டுக் கொண்ட டிரைவர் காரை செலுத்தினான். 

வாடகை கார் அவள் கூறிய விலாசத்தில் நிற்க பணத்தை கொடுத்து விட்டு இறங்கி நடந்தாள்.

   அவளின் தலைநிமிர்ந்த தோற்றமும் நேர்கொண்ட பார்வையும் புது வைஷ்ணவியாய் தோற்றம் கொடுத்தது.

  “எக்ஸ்கியூஸ் மீ உங்க பாஸ்ஸை பார்க்கணும் ..” என்றாள் ரிசப்னிஷ்டிடம் 

  “உங்ககிட்ட அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா..”

    “அவரைப் பார்க்க எனக்கு அப்பாயிண்ட்மெண்ட் தேவையில்லை, வைஷ்ணவி வந்திருக்கேன்னு சொல்லுங்க அவரே கூப்பிடுவார்…”

    ‘என்ன இவ்வளவு திமிருடன் பதில் உரைக்கிறாள்…’ என அந்த ரிஷபினிஸ்ட் பார்வை பார்த்தாள்

   “சரி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார் கிட்ட பேசிட்டு சொல்றேன்..”

   ரிஷப்ட்னிஸ்ட் இன்டர்காம் மூலம் தன்னுடைய பாஸ்க்கு அழைப்பு விடுத்து விஷயத்தை கூறினாள்.

   “உடனே அந்த பொண்ணை என்னுடைய கேபினுக்கு அனுப்பு ,கொஞ்ச நேரத்துக்கு எந்த அப்பாயின்மென்ட் வந்தாலும் உள்ள விடாதீங்க..” என்றார் பாஸ் 

    ‘இந்த திமிர் பிடித்தவள் அவ்வளவு முக்கியமான ஆளா..’  

  வியந்து போனாள் ரிசப்ஷனிஸ்ட்

  “மேம் உங்களை சார் உள்ள வர சொன்னாரு..”

    பதிலுக்கு எந்த வார்த்தையும் உரைக்காமல் எழுந்து சென்றாள் வைஷு. 

  அவளின் அழகும், நீண்ட கூந்தலும் புடவை லட்சணமும் பார்ப்போரை ஜொள்ளு விட வைத்தது. 

   அந்த கம்பெனியின் பாஸ்ஸூடைய கேபினில் அவள் நுழைந்த சமயம் முதராளியாய் அங்கே அமர்ந்திருந்தது வீர்-ன் கல்லூரி நண்பன் சித்தார்த் ஆவான். 

    “என்ன வைஷு வேலையை முடிக்காமல் என்னை நேரில் வந்து பார்க்க மாட்டேன்னு சொன்ன, இப்போ திடீர்னு வந்திருக்க..”  என சித்து கேட்க

   உள்ளே நுழைந்தவள் இவளாய் அவன் முன்னே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கால் மேல் கால் போட்டாள் .

   “என்னமோ அந்த வீர் விஜயன் அவ்வளவு ஈஸியா மயங்குற ஆள் இல்லை, மூணு மாசம் டைம் எனக்கு ரொம்ப கம்மினு சொன்ன, ஒரே வாரத்தில் வேலையை முடிச்சிட்டேன்..” என்றாள்.

   “நிஜமாவா சொல்ற, அவன் உன் பக்கம் சாய்ந்துட்டானா..!!”

   “ம்ஹூ… என் பக்கம் சாயிறது என்ன..?  என்னை காதலிக்கிறேன். கல்யாணம் பண்ண காத்திருக்கேன்னு இப்போ தான் சொன்னான். இப்பவாவது என்னோட திறமையை நம்புறியா..”

   “சூப்பர் வைஷ்ணவி , உன்னை என்னமோனு நினைச்சேன் கடைசியில் ஒரே வாரத்தில் வேலையை முடிச்சிட்ட.. இப்படியே மெயின்டைன் பண்ணு பிசினஸ் பக்கம் அவன் தலை வைக்க  கூடாது. உன் மேல இருக்க காதலில் அவன் பித்து பிடித்து சுத்தணும். என்னோட காதலை கலைச்சு விட்டான்ல ,இப்போ அவனுடைய காதல் ஆட்டத்தை நான் விளையாடுறேன். 

சரி அவன் கிட்ட நீ என்ன பதில் சொல்லிட்டு வந்த ..”

   “உடனே ஒத்துக்கிட்டா அதுல ஒரு ஃபீலிங்ஸ் இருக்காது. அதனால நான் அனாதை, எனக்கென எந்த சொத்தும் இல்லை நீங்க வேற ஒரு நல்ல பொண்ணா பார்த்துக்கோங்கன்னு சென்டிமென்ட்டா டயலாக் விட்டுட்டு வந்திருக்கேன்.

      அவன் இந்நேரம் என்னை மறக்க முடியாமல் தவிச்சிட்டு இருப்பான்..”

  

     “சார், மேடமை பற்றி குறைத்து எடை போட்டுட்டீங்க எவ்வளவு ஈசியா முடிச்சுட்டாங்க பார்த்தீங்களா ..”

    வைஷூ – வைப் புகழ்ந்தவாரே சித்துவின் அருகே நின்றிருந்தான் அவனின் வேலையாள் ஒருவன். அவன் பெயர் தீபன். இவன் வேறு யாருமில்லை நீலாவதியின் ஸ்கூட்டியை ஆக்சிடென்ட் செய்தது மற்றும் ரம்யாவை கடத்தி ஆல்கஹாலை அருந்த வைத்ததில் முக்கிய ஆள் இவன். 

  “எல்லாத்தையும் தப்பு தப்பா செஞ்சுட்டு, என்னை புகழ்ந்து பேசி தப்பிக்கலாம்னு நினைக்கிறாயா..”

  “மேடம் நீங்க சொன்ன மாதிரி தானே எல்லாமே செஞ்சேன்..” 

    “அந்த ரம்யாவை கடத்திட்டு கொஞ்ச நேரம் கழிச்சு எனக்கு தகவல் சொல்லுன்னு தானே சொன்னேன்.  ஆனால் நீ என்ன பண்ண, அவளுக்கு ஆல்கஹால் கொடுத்து ரோட்டில் நடக்க வச்சுட்ட, என் கண்ணில் படுறதுக்கு பதிலா அந்த வீர் ஓட கண்ணில் பட்டிருந்தா என்னுடைய திட்டமே வீணா போயிருக்கும்..”

  தீபன் தவறை ஒப்புக்கொண்டு தலை குனிந்தான். 

  “இனிமேலாவது அதிக பிரசங்கித்தனமா செய்யாம சொல்ற பேச்சை மட்டும் கேளு..” என்றாள்.

  “அப்புறம் சித்து நீ சொன்ன வேலையில் பாதியை முடிச்சிட்டேன். என்னுடைய பாதி பேமெண்ட் இன்னைக்கு ஈவினிங் குள்ள அக்கவுண்டுக்கு வரணும் ஞாபகம் வச்சுக்கோ..”

  “கண்டிப்பா வைஷ்ணவி, இவ்வளவு சந்தோசமான செய்தியை சொல்லிருக்க, பதிலுக்கு உன்னை சந்தோஷப்படுத்த மாட்டேனா.. ” என்றான் சித்து. 

  பேச வேண்டியவைகளை முடித்துவிட்டு போய் வருவதாக கூறி எழுந்து சென்றாள் வைஷூ.

  “சார் இந்த பொண்ணை வச்சு அந்த வீர்-ஐ தோற்கடிக்க நினைக்கிறீங்க உண்மை தெரிஞ்சிட்டா அந்த ஆள் என்ன ஆவான்..”

  “அதைப் பார்க்கத்தான் நானும் காத்திருக்கேன்.  வைஷ்ணவியோட உண்மை சொரூபம் தெரிஞ்சா அவன் நொந்து போவான். கூடிய சீக்கிரம் அதுவும் நடக்கும்..”  

    நடக்காத ஒன்றை தன் நினைவிற்கு கொண்டு வந்து நடத்திப் பார்த்து ஆனந்தம் கொண்டான் சித்து.

      இவர்களின் சதியாட்டம் தெரியாமல் வைஷ்ணவியை நினைத்து உருகிக் கொண்டிருந்தான் வீர். 

                                  😉

  

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page