இதுவரை..
தன்னுடைய நீண்ட கால தோழி சந்திரிகாவை சந்தித்த வைஷ்ணவி, வீர் உடன் தொடரும் நடிப்பை பற்றி விவரித்தாள். இறுதியில் வீர் மற்றும் சந்திரிகாவின் கணவன் சரண் இருவரும் நெருங்கிய நண்பர்களாக போயினர். நாளை வீர் வைஷ்ணவிக்கு தரவிருக்கும் அதிர்ச்சி பற்றி அவள் இன்னும் அறியவில்லை.
இனி…
வீடு சென்று சேர்ந்த சந்திரிகா விஷயத்தை தன் தோழி வைஷ்ணவியிடம் உரைக்கலாமா வேண்டாமா என குழப்பத்தில் இருந்தாள்.
“என்ன சந்திரி , பலத்த யோசனையில் இருக்க போல..”
இரவு படுக்கைக்கு வந்த சரண், தன் மனைவியின் முகத்தை கவனித்து கேள்வி கேட்டான்.
“இல்ல, வீர் எந்த தைரியத்துல இப்படி ஒரு முடிவு எடுத்திருக்காரு, அவருக்கு வைஷ்ணவியை பற்றி என்ன தெரியும்..?”
“அந்த பொண்ணோட பெயர் வைஷ்ணவினு நான் உன்கிட்ட சொல்லவே இல்லையே…”
“ அது நீங்க சொல்லலை, கார்ல வரும் போது போன் பேசும் சமயம் உங்க ஃப்ரெண்ட் வீர் சொன்னாரே…”
மாட்டிக்கொள்ளக்கூடாது என்ற பயத்தில் உடனே அடுத்த பொய்யை கூறினாள் சந்திரி.
“வீர் சொன்னானா..?”
“சொன்னருங்க நீங்க சரியா கவனிச்சிக்க மாட்டீங்க..”
” ஆமா சொன்ன மாதிரி தான் எனக்கும் இருக்கு, சரி அது போகட்டும். அந்த பொண்ணை பற்றி தெரிஞ்சுக்கிற அளவுக்கு பெருசா எதுவும் இல்லை. குடும்பம்னு யாரும் கிடையாது. ஹாஸ்டலில் தங்கி இருக்காள். அதனால அந்த பொண்ணை தவிர வேற யார்கிட்டயும் அனுமதி கேட்கிற அவசியமும் இல்லை. அப்படி வந்தாலும் எல்லாம் வீர் பார்த்துப்பான்.
சரி நீ எதுக்கு அந்த விஷயத்தை பற்றி இவ்வளவு யோசிக்கற… “
“இல்லையே நான் அந்த அளவுக்கு ஒன்னும் யோசிக்கலை சும்மா சந்தேகம் வந்துச்சு அவ்வளவுதான்..”
“ சரி நேரம் ஆச்சு வந்து தூங்கு..”
யோசனையோடு தன் கணவனுடன் சேர்ந்து உறங்கினாள் சந்திரி.
அப்போது தான் பப்பில் இருந்த வைஷ்ணவி கிளம்பலாம் என முடிவெடுத்தாள் . அச்சமயம் இசைத்துக் கொண்டிருந்த பாடல் உடனே நிறுத்தப்பட அனைவரும் என்ன ஆனது என சுற்றிப் பார்த்தனர்.
அங்கே அழகான பையன் ஒருவன் தன் காதலிக்கு மோதிரம் கொடுத்து ப்ரபோஸ் செய்தான்.
பதிலுக்கு அந்தப் பெண்ணும் புன்னகையோடு காதலை ஏற்றுக் கொள்ள, சுற்றியிருந்த நண்பர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் காட்டினர். சந்தோஷமான அந்த ஜோடிகளை பார்த்த வைஷ்ணவி ஏங்கிப் போனாள்.
‘தனக்கென ஒரு காதல் இருந்தால் நன்றாகத் தான் இருக்கும். அதுக்கெல்லாம் ரொம்ப கொடுத்து வெச்சிருக்கணும்..’
அவளைப் பொறுத்தவரை வீர் இவளின் அழகில் மயங்கி காதலிப்பதாக கூறுகிறான், மாறாக அவனுக்குள் இருக்கும் உண்மையான அன்பை இவள் உணரவில்லை.
எதிர்கால வாழ்க்கையை பற்றிய கனவுகளோடு வீடு திரும்பினாள் வைஷ்ணவி. அறைக்குள் நுழைந்தவள் தன் கைப்பேசியை சரிபார்க்க அவளின் அக்கவுண்டிற்கு பத்து லட்சம் ரூபாய் வந்து சேர்ந்திருந்தது. மனதிற்குள் சித்துவிற்கு நன்றி உரைத்துக் கொண்டாள்.
வேலையை முடித்துவிட்டு, மீதம் அந்தப் பத்து லட்சத்தையும் வாங்க வேண்டும் என கருத்தோடு இருந்தாள். ஆனால் மறுநாள் காலை அவள் சற்றும் எதிர்பாராத ஒன்றாக இருக்கும். அதை அவள் அனுபவிக்கும் நேரமும் வர உறக்கத்திற்கு பிறகு காலை விடியலில் கண் திறந்தாள்.
தயாராகியவள் வீர்-க்கு பிடித்தவாறு தன்னை அலங்கரித்துக் கொண்டு புடவையும் பின்னிய கூந்தலுமாய் வெளியேறினாள். அதை கவனித்த ஹாஸ்டல் வாசிகள் குழப்பத்தோடு நின்றனர்.
“இவள் என்னடி ,அவ்வை சண்முகி மாதிரி காலையில் ஒரு வேஷம் மாலையில் ஒரு வேஷம்னு சுத்துறாள். கண்டிப்பா ஏதோ பிராடு வேலை தான் போல..”
ஆட்டோவில் ஏறினால் பணம் அதிகமாக செலவாகும் என தினமும் பேருந்தில் தான் சென்று வருகிறாள் வைஷூ. அவள் அலுவலகத்தை அடைந்த சமயம் பத்து நிமிடம் தாமதம் ஆகி இருந்தது.
ஏற்கனவே அந்த ஆபீஸில் வேலை செய்யும் சீனியர் ஜானவி, வைஷ்ணவியை கண்டித்தாள்
“வைஷ்ணவி இவ்வளவு லேட்டா வர்றது எல்லாம் சாருக்கு பிடிக்காது. நீ வேலையை சீக்கிரமா முடிச்சா, உடனே கிளம்பிடலாம் ஆனால் காலையில் டேட்டா வர்றதை மட்டும் வச்சுக்காத…”
“ஓகே மேம்..”
மரியாதை உடன் ஜானவியை கடந்து சென்றாள் வைஷ்ணவி. அவளின் கேபினுக்குள் நுழைந்த சமயமே இன்டர்காம் ஒலிக்க வீர் தான் அழைத்திருந்தான்.
“வைஷு என் கேபினுக்கு வா ..”
“ ஓகே சார்..”
அழைப்பை துண்டித்தவள் உடனே யோசிக்க ஆரம்பித்தாள்
‘ மீண்டும் காதலை உரைத்து காலில் விழுகப்போகிறானா, முடிந்தால் அதை அப்படியே வீடியோ எடுத்து சித்துவிற்கு அனுப்ப வேண்டும், பேமெண்ட் அதிகமாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது…’ என யோசித்தாள்
மொபைலில் கேமராவை ஆன் செய்தவாரே கையில் பிடித்துக் கொண்டு அவனின் அறைக் கதவை திறந்து உள்ளே நுழைந்தாள்.
“குட் மார்னிங் சார் …”
அவளைக் கண்டதும் எழுந்து முன்னே வந்தான். இரண்டு அடிக்கு முன்னேறி நடையை நிறுத்தி விடுவான் என அவள் எதிர்பார்க்க, தொடர்ந்து நெருங்கினான். அவனின் கைகள் அவளின் கன்னத்தை ஏந்த
“சார் நாம ஆபீஸில் இருக்கோம் கொஞ்சம் விலகி நில்லுங்க .. ”
அவனை விலகி நிற்கக் கூறிய பிறகு இவளே பின்னோக்கி ஒரு அடி நகர்ந்தாள்.
“உன்னுடைய கன்னம் ரொம்ப சாஃப்டா இருக்கு , நேத்து என்னுடைய அத்தை கொடுத்த அடியில் இன்னும் சிவந்து தெரியுது. வலி இருக்கா ..”
“பரவால்ல சார், சின்ன வயசுல இருந்து எத்தனையோ கஷ்டங்களை சந்திச்சாச்சு இது அந்த அளவுக்கு ஒன்னும் வலிக்கலை..”
அவளின் வார்த்தையில் மெல்ல புன்னகைத்தான். தன் அத்தையின் அடியை தாங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இவளுக்கு என்ன இருக்கிறது இத்தகு பண்பை கொண்ட பெண்ணை முதன்முறையாக சந்திக்கிறோம் என நினைத்தான்.
“இன்னும் கொஞ்ச நேரத்தில் நமக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நீயும் நானும் வெளியே போகணும்..”
“பதினோரு மணிக்கு கிளைண்ட் உங்களை சந்திக்க ஆஃபீஸ்க்கு வரதா இருக்காங்க ,அந்த சமயத்தில் நீங்க இங்க இருக்கணுமே ..”
“நான் வந்ததுமே அவங்களுக்கு கால் செஞ்சி பேசிட்டேன் மீட்டிங்கை 12 மணிக்கு முடிவு செஞ்சாச்சு, சோ நீ தயாராய் இரு …”
அவனின் வார்த்தையை கேட்டு, ஒன்றும் அறியாத பிள்ளையாய் தலையசைத்தவள் , தன் மொபைல் கேமராவை ஆஃப் செய்து வெளியேறினாள்.
‘ மீட்டிங்கை தள்ளி வைக்கிற அளவுக்கு அப்படி என்ன முக்கியமான வேலை நானும் கூட வரணும்னு ஏன் சொல்றான்..’
அவளுக்குள் யோசனை அதிகரிக்க காத்திருந்து பார்ப்போம் என எதார்த்தமாக கடந்தாள். நேரமும் வந்து சேர அவளை அழைத்துக்கொண்டு காரில் கிளம்பினான் வீர்.
எங்கே செல்கிறோம் என்ற கேள்வி உள்ளுக்குள் இருந்தாலும் கேட்காது அமைதியாக வந்தாள். சென்றடைய வேண்டிய இடத்தில் கார் நிற்க, இறங்கியவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அது ரிஜிஸ்டர் ஆபீஸ்.
என்ன ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு கூட்டிட்டு வந்திருக்கான் . எதுக்காக..? நேரடியா கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டானா… உள்ளுக்குள் இருந்த பீதி அவளின் கண்களில் தெளிவாக பிரதிபலித்தது.
“உள்ள போலாம் வா வைஷூ..”
“சார் இங்க எதுக்காக வந்திருக்கோம்..”
“எந்த கேள்வியும் கேட்காமல் உள்ள வா ..நான் சொல்றதை மட்டும் செய்யணும் சரியா.. ”
திமிரான மிரட்டலாய் இல்லாமல் எதார்த்தமாக கூறினான்
இவளும் வெகுளியான பார்வையை கொடுத்து பின் தொடர்ந்தாள்.
அந்த ரிஜிஸ்டர் ஆபீசை நோட்டம் விட்டவாரே வைஷ்ணவி உள்ளே நுழைய ஏற்கனவே அங்கே சரண் மற்றும் சந்திரிகா இருவரும் காத்திருந்தனர்.
அவர்களை கண்ட வைஷ்ணவி அப்படியே நின்று விட்டாள். சந்திரிகா உண்மையை சரணிடம் கூறி விட்டாளா?? அப்படி நடக்க வாய்ப்பில்லையே ,தன் தோழி அவ்வாறு செய்ய மாட்டாளே என யோசித்தவளுக்கு கால்கள் அதற்கு மேல் முன்னேறவில்லை.
“ என்ன அங்கேயே நின்னுட்ட முன்னாடி வா..”
வீர் அவளின் கைபிடித்து அழைத்துச் செல்ல , அலுவலக அதிகாரியின் முன் நிற்க வைத்தான்.
“நீங்க இரண்டு பேர் தானா..”
என அந்த ஆபீஸர் கேட்க
” ஆமா சார் …” என்றான் வீர்.
“எல்லா ஃபார்மாலிட்டிசும் முடிஞ்சது நீங்க இரண்டு பேரும் கையெழுத்து மட்டும் போட்டா போதும்..”
‘அடப்பாவி ஒரு வார்த்தை கூட சொல்லாம கல்யாணத்தை முடிக்கிறானே..’
வைஷ்ணவி யின் கண்கள் வீர்-ஐ கோபத்தோடு பார்க்க , ஆனால் முழுமையாய் வெளிப்படுத்த முடியவில்லை உடனுக்குடனே பாவனையை மாற்றினாள்.
வீர் கையெழுத்திட அதன் பிறகு பேனாவை வைஷ்ணவியிடம் கொடுத்தான்.
“சார் என்ன விஷயத்துக்காக கையெழுத்து போடுறோம்..”
“உள்ள வரும் போது சொல்லி தானே கூட்டிட்டு வந்தேன். கேள்வி கேட்காம நான் சொல்றதை செய் கையெழுத்து போடு..”
மறுத்தால் இவனுடன் செயல்படும் திட்டமே பாழாகிவிடும் என்பதால் வேறு வழியின்றி பேனாவை கையில் வாங்கினாள். வைஷ்ணவி என்ற தன் பெயரை மாற்றி கையெழுத்திட்டாவது தப்பிக்கலாமா என யோசித்தாள். ஆனால் வீர் அருகிலேயே நின்றிருந்தான்.
அடுத்ததாய் சாட்சி கையெழுத்திற்கு சரண் மற்றும் சந்திரிகா இருவரும் கையெழுத்திட்டனர்.
அலுவலகத்தில் இருந்து பத்திரத்தின் அசலை கையில் பெற்றுக் கொண்ட வீர் வெளியே வந்தான்.
“வைஷு உனக்கு இவனை அடையாளம் தெரியும்ல , என்னுடைய ஃப்ரண்ட் சரண் அன்னைக்கு கூட வீட்டுக்கு வந்திருந்தானே..”
“ஹலோ ..”
வேறொரு உலகத்தில் இருந்து கொண்டே புன்னகை கொடுத்தாள்.
“அப்புறம் இது சரண் உடைய மனைவி சந்திரிகா… ”
“இங்க பாருங்க வைஷ்ணவி நான் கூட வீர் கிட்ட கொஞ்சம் யோசிக்கலாம்னு சொன்னேன். ஆனால் உங்க மேல இருக்க காதலால் என் பேச்சை அவன் காதில் கூட கேக்கலை. அவனுடைய நம்பிக்கையை காப்பாத்துங்க உங்களுடைய எதிர்காலத்துக்கு நல்வாழ்த்துக்கள்.. ” என்றான் சரண்.
சந்திரிகாவும் ஒரு பேச்சிற்காக வாழ்த்தை கூறி வைஷ்ணவியை முதன்முறையாக சந்திப்பது போல் அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
ஆபீஸ் திரும்புவதற்காக வீர் வைஷ்ணவி இருவரும் காரில் அமர அப்போது தான் கையெழுத்திட்ட பத்திரத்தை அவளிடம் ஒப்படைத்தான் வீர்.
அதை படித்துப் பார்த்தவள் வியந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்…!!! மனதிற்குள் ஆனந்தம் குதூகளித்தாலும் வெளிக்காட்ட கூடாது என்ற சூழ்நிலை இருந்தது.
“என்ன சார் ? இப்படி செஞ்சிருக்கீங்க எதுக்காக உங்க சொத்தில் பாதியை என் பெயருக்கு எழுதினீங்க..”
“நீதானே சொன்ன என் தகுதிக்கு சமமான பெண்ணை கல்யாணம் செஞ்சுக்கிறது எனக்கு நல்லதுன்னு .உன்னை நீயே பிச்சைக்காரின்னு சொன்னதை என்னால ஏத்துக்க முடியாது . அதே சமயம் சொத்தில் பாதியை உனக்கு நான் எழுதிக் கொடுத்ததால் நீ என்னை கல்யாணம் செஞ்சே ஆகணும்னு கட்டாயம் இல்லை. என் காதலை நீ ஏத்துக்கற வரைக்கும் நான் காத்திருப்பேன் மற்றபடி உன்னுடைய விருப்பம்..”
“ரொம்ப தப்பு பண்றீங்க சார், என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம் எனக்கு எதுக்கு இந்த சொத்து எல்லாம் இது நீங்க உழைச்சு சம்பாதித்தது ..”
“ தெரியும் சொன்னால் நீ இப்படித்தான் பேசுவ, அதனால தான் சொல்லாமல் செஞ்சேன். இனிமே என்னுடைய பிளாட், பிசினஸ் எல்லாத்துலேயும் நீயும் நானும் பார்ட்னர்ஸ்..”
இருந்த பதற்றத்தில் இதை யோசிக்க மறந்து விட்டாள் .திருமண கையெழுத்தை யாரேனும் பத்திரத்தில் போடுவார்களா, அதற்கு ரிஜிஸ்டர் புத்தகம் தானே வைத்திருப்பார்கள் .
“இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆபீஸில நமக்கு மீட்டிங் இருக்கு, நாம அங்க போலாம். எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்..”
பத்திரத்தை மடித்து தன் கையோடு பத்திரமாக வைத்துக் கொண்டாள் வைஷ்ணவி . அப்படியே ஒரு குத்தாட்டம் போட வேண்டும் என்பது போல் கால்கள் துடித்தது .ஆனால் ஆடினால் வேஷம் கலைந்து விடுமே..
வீர் செய்த தவறு எதிர்காலத்தில் அவன் சித்துவிடம் தோற்பதற்கான முதல் படி என்பது அவன் அறியாதது.
அலுவலகம் சென்றதும் உடனே மீட்டிங்கை அட்டென்ட் செய்து வேலையை முடித்தனர் . அதன் பிறகு தன்னுடைய கேபினில் தனிமையில் இருக்கும் போது உடனே சித்துவிற்கு அழைத்தாள் வைஷ்ணவி.
“ஹாய் சித்து, மூணு மாசம் கழிச்சு ஜெயிக்கிறதுக்கு பதிலா நீ இப்பவே ஜெயிச்சுட்டேன்னு நான் சொன்னா நம்புவியா..”
“வைஷ்ணவி உன் திறமைக்கு எதுவுமே சாத்தியம்னு ஒரே வாரத்தில் நீ நிரூபிச்சிட்ட, இப்போ அடுத்த இன்ப அதிர்ச்சியை கொண்டு வந்திருக்க போல.. என்ன விஷயம்…”
சித்து ஆர்வமாக கேட்டான் . இந்த செயலால் வைஷ்ணவி நினைத்துக் கூட பார்க்க முடியாத வாழ்க்கை அவளுக்கு அமையப்போகிறது.
😉
