Epi – 23 – திருமண முடிவு

இதுவரை..

  வீர்- அவனுடைய சொத்தில் பாதியை வைஷ்ணவிக்கு எழுதி வைக்க, அதை தன் பெயருக்கு மாற்றி கொடுக்குமாறு கேட்டான் சித்து. வைஷ்ணவி சித்து என இருவருமே எதிர்பார்க்காத யோசனையாக தன் மகளின் வாழ்க்கையை உச்சத்தில் நிறுத்தினார் ஐயாசாமி. சித்துவிற்கும் வைஷ்ணவிக்கும் திருமணம் பேசினார் ஐயாசாமி.

இனி… 

   “என்ன வைஷு உன் அப்பா என்னன்னமோ பேசுறார் நீ எதுவும் சொல்லாம அமைதியா இருக்க ..”

  “அவர் சரியா தான் சொல்றார் சித்து, என் வாழ்க்கையும் செட்டில் ஆகணும் கல்யாணத்துக்கு பிறகு சொத்து தானா உன் கைக்கு வந்திடும். நீயும் வீர்-ஐ ஜெயிக்கலாம் யோசிக்க வேண்டியது நீதான்…” என்றாள் 

   சித்து பொறுமையாக யோசித்தான்.  பின்பு அவனுடைய நினைவிற்கு  முதல் காதலான ஸ்வேதா வர,  அதற்கு முன் வீர்-ஐ ஜெயிப்பது தான் முக்கியம் என திருமணத்திற்கு சம்மதித்தான். 

   “சரி எனக்கு சம்மதம். ஆனா கல்யாணம் முடிஞ்ச மறு நாளே வீர் எழுதிக் கொடுத்த சொத்துக்களை என் பெயருக்கு மாற்றனும். நமக்கு நாளைக்கே கல்யாணம் நடக்கட்டும்..” என்றான் சித்து

   “நாளைக்கேவா..!!  என்ன மாப்ளே எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்கலைன்னாலும் அக்கம் பக்கத்து சொந்தக்காரங்களை ஆவது கூப்பிடனும்ல, சின்னதா வீட்டிலேயே ஒரு நிச்சயதார்த்தம், அடுத்த நாள் கல்யாணம் இப்படி வச்சுக்கிட்டா பரவாயில்லை..”

   “இங்க பாருங்க நாங்க ஒன்னும் விருப்பப்பட்டு கல்யாணம் செஞ்சிக்கலை இது ஒரு அக்ரீமெண்ட் மாதிரி இதுல எதுக்கு விளம்பரம்..”

   “சித்து, அப்பா சரியா தான் சொல்றாரு நினைச்சு பாரு யாருக்குமே சொல்லாம நீயும் நானும் கல்யாணம் செஞ்சுக்கிட்டா அந்த விஷயம் வீர்- க்கு எப்படி தெரிய வரும்.  அவன் மனசு நொந்து போகணும்னு தானே நீ எதிர்பார்த்தது.  நாளைக்கு நிச்சயதார்த்தம் நடந்தா பெரிய பிசினஸ்மேன் சித்துவுக்கு கல்யாண ஏற்பாடு நடக்குதுன்னு நியூஸ் தீயாய் பரவும் . இந்த விஷயம் தானாய் வீர் உடைய கண் பார்வைக்கு போகும் அப்போ அவனுக்கு தெரிய வரும் நான் தான் கல்யாண பொண்ணுனு..”

  ஐயாசாமியும் வைஷூவும் மாறி மாறி விஷயத்தை உரைக்க , சித்துவிற்கு சரி என தோன்றியது.

  எல்லாம் பேசி முடித்தவன் எழுந்து நின்றான். 

   “நீங்க இரண்டு பேரும் இங்க இருக்க வேண்டிய ஆட்களே கிடையாது.  நல்ல வேளை நீங்க அரசியலில் குதிக்கலை பிறகு தமிழ்நாடு என்ன கதி ஆகிறது.. 

     வைஷு, இந்தா இது என்னுடைய கிரெடிட் கார்ட் வச்சுக்கோ, கல்யாணத்துக்காக உனக்கு என்ன செலவு இருக்கோ அது எல்லாத்தையும் இதில் பண்ணு.. “

    வைஷூவிற்கு அப்படியே கண்கள் மின்னியது. இப்போதிலிருந்தே அந்த வசதியான வாழ்க்கை கிடைக்கப் போகிறது. 

   “மாப்ளே, அப்படியே எனக்கும் இரண்டு வேஷ்டி சட்டை எடுத்துக்கலாம்ல..”

  கிரெடிட் கார்டை கைநீட்டி வாங்கிய வைஷ்ணவி அல்பமாய் பேசும் தன் தந்தையை முறைத்துப் பார்த்தாள்.

  பிறகு சித்து அங்கிருந்து கிளம்ப தன் தந்தையை திட்டவா பாராட்டவா என குழப்பம் தான் வந்தது அவளுக்கு. 

  “யோவ் உன்னை திட்டவா, பாராட்டவான்னு குழப்பமா இருக்கு..”

  “என்னம்மா பொறுப்பான அப்பனா உன் வாழ்க்கையை மனசில் வச்சு சூப்பர் ஐடியா சொல்லிருக்கேன். அதுக்கு நீ என்னை பாராட்ட தான் செய்யணும்..”

  “அது என்னமோ உண்மை தான் . உனக்கு இப்படி ஒரு யோசனை வரும்னு நான் கொஞ்சம் கூட யோசிக்கலை.  சித்து சம்மதம் சொன்னது ரொம்ப பெரிய விஷயம். அப்படின்னா நான் ஒரு பெரிய பணக்கார வீட்டுக்கு மருமகளா போகப் போறேன்..”

  “வைஷூ கண்ணா இந்த அப்பாவை மறந்துட மாட்டியே..”

   “சே சேச்ச நான் எதிர்பாக்காத அளவுக்கு சீக்கிரமா என்னுடைய வாழ்க்கை செட்டில் ஆகப்போகுது.  அதுக்கு காரணமான உன்னை மறப்பேனா,  நான் அங்க போன பிறகு நைசா பேசி உன்னையும் அங்கேயே கூட்டிட்டு போறேன்..”

  “தெரியும்டா நீ அப்பாவை விட்டுக் கொடுக்க மாட்டேன்னு, சரி சரி வா நிச்சயதார்த்தத்துக்கு தேவையான  துணி எல்லாம் வாங்க போலாம்..”

  இரவோடு இரவாக நாளைக்கு வேண்டிய துணியை வாங்கி செலவை முடித்துக் கொண்டனர். 

   வீடு சென்று சேர்ந்த வீர் தன் பிளாட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்ததும் அமைதியாக சோஃபாவில் அமர்ந்தான். 

  போனை கையில் எடுத்தவன் தன் அத்தை நீலாவதிக்கு அழைப்பு விடுத்தான் 

  மறுமுனையில் முழு அழைப்பும் தொடர்ந்திருக்க அத்தை ஏற்கவில்லை. 

இன்னும் அவருக்கு கோபம் தீரவில்லை என புரிந்தது. 

  “அம்மா நீ ரொம்ப பண்ற, மாமா இத்தனை தடவை அழைக்கிறார் எடுத்து பேசினால் தான் என்ன..”

  “இவள் ஒருத்தி வாழ்க்கை பறிபோனது கூட தெரியாம லூசு மாதிரி பேசுறா..”

  “முதல்ல நான் ஸ்கூல் வாழ்க்கையே முடிக்கலை. இதுல எனக்கு வாழ்க்கை வேற பறிபோகுதா… நீதானம்மா தேவையில்லாத கற்பனையில் மிதக்கிற, நீ காதல் கல்யாணம் தானே செஞ்சுக்கிட்ட, உன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கிற உரிமை உன்னை பெத்தவங்க உனக்கு கொடுக்கலைனதும் நீ வீட்டை விட்டு வெளியே வந்துட்ட.. 

       குடும்பத்தை எதிர்த்து தானே அப்பாவை கல்யாணம் செஞ்சுக்கிட்ட, வீர் மாமா மட்டும் உன் பேச்சைக் கேட்கணுமா அவருக்கு பிடிச்ச பெண்ணை அவர் கல்யாணம் செய்ய கூடாதா, என் மேல இருக்க பாசத்தை ஒதுக்கி வச்சுட்டு வீர் மாமாவை பற்றி யோசி . நமக்கு அவரை விட்டா வேற யார் இருக்கா..?  அவர் சந்தோஷமும் நமக்கு முக்கியம் தானே.. ” என்றாள் ரம்யா. 

     ரம்யா உரைத்த பிறகு தான் நீலாவதிக்கு உண்மை உரைத்தது.  இதுவும் சரி தானே மனதிற்கு பிடித்த தன் கணவர் உடன் வாழ வேண்டும் என்பதற்காக குடும்பத்தை விடுத்து வந்தவள் நா

ன் . வீர் அதுபோல அவன் மனதிற்கு பிடித்த பெண்ணுடன் வாழ நினைப்பதில் தவறு என்ன இருக்கிறது. 

   “சரி சரி இப்போ ரொம்ப நேரம் ஆகிடுச்சு நாளைக்கு வேணா அவனை நேரில் போய் பார்க்கிறேன்.. ” 

   “அடேங்கப்பா ரொம்ப வேண்டாம் வெறுப்பா போற மாதிரி நடிக்கிறீங்க,  மாமாவை பார்க்காமல் உங்களாலும் ரொம்ப நாள் இருக்க முடியாது..”

  உண்மை அது தான்.  நல்ல மனநிலையில் இருக்கும் சமயம் சில காலங்களில் ஒரு வாரத்திற்கு ஒரு முறை தான் வீர்-ஐ சந்திப்பார். ஆனால் இது போன்ற மன கஷ்டங்கள் இருந்து விட்டால் உடனுக்குடன் பார்க்க வேண்டும் என உள்ளம் துள்ளும். 

  மறுநாள் காலை : 

    வீர் வழக்கம் போல தன்னுடைய அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தான் . கிளம்பும் சமயம் காலிங் பெல் அடித்ததும் யதார்த்தமாய் வந்து கதவை திறந்தான். 

  “அத்தை நீங்களா..?”

  “ஏன் இன்னைக்கும் அவள் வீட்டில் இருக்காளா நான் உள்ள வரலாமா வேண்டாமா..”

  “அப்படிலாம் ஒன்னும் இல்ல அத்தை வாங்க..”

  “சாப்பிட்டியா..”

  “இல்லை ஆஃபீஸ்க்கு போன பிறகு ஆர்டர் போட்டுக்கலாம்னு இருந்தேன்..”

  “உனக்காக இட்லி சுட்டு கொண்டு வந்திருக்கேன் சாப்பிட்டு போ..” என்றார்.

பேசும் வார்த்தைகளில் ஒரு வித கண்டிப்பு இருந்து கொண்டே இருந்தது.

  தன்னைப் பிரிந்து இருக்க முடியாத தன் அத்தையின் பாசத்தை புன்னகையோடு ஏற்றுக் கொண்டான். 

  அவன் அமர்ந்ததும் இவரே பரிமாறினார்.  உணவை ருசித்து அவன் உண்டு கொண்டிருக்க, வைஷ்ணவியை பற்றி விசாரித்தார் நீலாவதி. 

  “சரி அந்த பொண்ணோட பெயர் என்ன ..”

  “வைஷ்ணவி.. ”  என தயக்கத்தோடு கூறினான். 

  “ஆமா, அப்படியே அத்தை மேல பயம் இருக்கிற மாதிரி தான். பயப்படுறவன் அப்படி ஒரு காரியத்தை செய்வியா..”

  “அத்தை அன்னைக்கு எனக்கு நிறைய காய்ச்சல் இருந்தது.  அந்த மாதிரி நடந்தது எனக்கே உறுத்தலா தான் இருக்கு..” 

    “புரியுது நீ என்னோட வளர்ப்பு ஒரு பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்கிற அளவுக்கு நீ இறங்கி போயிருக்க மாட்ட என்ன அந்த பொண்ணு கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம்,  பெத்தவங்களாம் எங்க இருக்காங்களாம்..?” 

   “அந்தப் பொண்ணுக்கு யாரும் கிடையாது . கல்யாணத்துக்கு பிறகு நாம தான் அவளுக்கு சொந்தம்..”

  “ஓ இது வேறயா, அப்போ கல்யாண விஷயத்தைப் பற்றி பெரியவங்க கிட்ட பேசுறதுக்கு எதுவும் இல்லை.  எல்லாம் அந்த பொண்ணு கிட்ட தான் பேசிக்கணும்..”

  “கல்யாணமா..!  அப்போ நீங்க சம்மதிக்கிறீங்களா..”

   “பின்ன இவ்வளவு தூரம் ஆன பிறகு வேற என்ன செய்றது. கல்யாணம் முடியற வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு அடிக்கடி அந்த பொண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வராத..”

  “சரிங்க அத்தை பொறுப்பான பையனா இருப்பேன்..”

  “நேரம் இருக்கும் போது அந்த பொண்ணை அங்க நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா , அன்னைக்கு கோவத்தில் ரொம்ப அறைஞ்சிட்டேன் பேசினா தான் சரி வரும்..”

  “சரிங்க அத்தை அழைச்சிட்டு வரேன்.  ஆனால் அந்தப் பொண்ணு இன்னும் என் காதலுக்கு சம்மதம் சொல்லலை..”

  “ஏன் உன் காதலுக்கு சம்மதம் சொல்ல நோகுதா அவளுக்கு ..”

  “அந்த பொண்ணுக்கு யாரும் கிடையாது.  கல்யாணம் நடந்தா சீதனம் கொடுக்குறதுக்கு கூட கையில் எதுவும் இல்லை.  என்னை ஏன் காதலிக்கிறீங்க உங்க தகுதிக்கு ஏற்ற மாதிரி ஒரு பெண்ணை தேர்ந்தெடுங்கனு சொல்லிட்டு போயிட்டாள்..” 

   அவள் தன்னை தானே பிச்சைக்காரி என கூறிக் கொண்டதை நாசுக்காக மாற்றி உரைத்தான் அத்தையிடம்.

   “நிஜமாவா அப்படியா சொன்னாள்..!  உன்னை மாதிரி ஒருத்தன் காதலை சொல்லியும் ஏத்துக்காமல் உன் நல்லதைப் பற்றி யோசித்திருக்காள், அப்படி பார்த்தா இவள் நல்ல பொண்ணு தான் ஒன்னும் கவலைப்படாத, அவளை என்கிட்ட கூட்டிட்டு வா நான் பார்த்துக்கிறேன்..”

    தன் அத்தை கொடுத்த வாக்குறுதியில் அனைத்தும் நன்மையாக முடியும் என்ற நம்பிக்கையின் ஆனந்தத்தோடு உணவை உண்டான்.  வழக்கத்திற்கு மாறாக அவன் அதிகம் உண்டான்.  இது தான் அவன் இறுதியாக வயிறார உண்பது அதன் பிறகு இந்த பாக்கியம் அவனுக்கு எப்போது கிடைக்குமோ …

  அத்தையை வீட்டில் ட்ராப் செய்துவிட்டு கம்பெனிக்கு கிளம்பிய வீர் வைஷ்ணவியை இன்னும் காணவில்லையே என எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். 

  ஆனால் அவளுக்கும் சித்துவிற்கும்மான நிச்சயதார்த்த ஏற்பாடு சித்துவின் வீட்டில் நடந்து கொண்டிருந்தது. 

  சித்துவின் தந்தைக்கும் மகிழ்ச்சி தான் இத்தனை நாட்களாக திருமணத்திற்கு சம்மதம் சொல்லாத தன் மகன் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் எனக் கூறியதும் உடனே ஒப்புக்கொண்டார்.  ஆனால் இன்றைக்கே நிச்சயதார்த்தம்,  நாளையே திருமணம் என்பது தான் குழப்பமாக இருந்தது. 

  “அடடே என்ன சம்பந்தி பையனுக்கு நிச்சயதார்த்தம் நடக்குது உங்க முகத்தில் சந்தோசமே பத்தலையே..” 

  ஐயாசாமி தன் தகுதிக்கு மீறிய  விலையில் பட்டு வேஷ்டி சட்டையை அணிந்தவாறு சித்துவின் தந்தையிடம் நெஞ்சை நிமிர்த்து பேசினார் 

  “ஒன்னும் இல்லைங்க, ஒரே பையன் நிச்சயதார்த்தம் திடீர்னு நடக்குது. கல்யாணமும் நாளைக்கே வைக்கணும்னு சொல்லிட்டான். எல்லா சொந்தத்துக்கும் சொல்ல முடியலை அந்த வருத்தம் தான் ..”

  “அட இதுக்கா வருத்தப்படுறீங்க,  இதில் என்ன இருக்கு கல்யாணம் முடிஞ்சு கையோட ஒரே வாரத்தில் எல்லா சொந்தத்துக்கும் ரிசப்ஷனுக்கு அழைப்பு விடுங்க,  ஒருத்தர் விடாம எல்லாரும் ரிசப்ஷனுக்கு வரட்டும் இப்போ அது தானே ட்ரெண்டு…” 

  இவர்கள் பேசிக் கொண்டிருந்த சமயமே நேரம் நெருங்கி இருக்க, சித்துவும் வைஷ்ணவியும் அலங்காரத்தோடு அவரவர்களின் அறையில் இருந்து வெளியே வந்தனர். 

  சித்துவின் முகத்திலும் புன்னகை இருந்தது. ஆனால் அது வீர்-ஐ ஜெயிக்கப் போகிறோம் என்ற ஆனந்தம், வைஷ்ணவி முகத்தில் இருந்த புன்னகை நோகாமல் சுகமான வாழ்வை வாழ போகிறோம் என்ற ஆனந்தம். 

  நிச்சயதார்த்த பத்திரிக்கை வாசித்து முடித்திருக்க சித்துவும் வைஷ்ணவியும் மோதிரம் மாற்றிக் கொள்வதற்காக எழுந்து வந்தனர்.

   சித்து அவளின் விரலில் மோதிரத்தை அணிவிக்க அது எத்தனை பவுன் இருக்கும் என யோசித்தாள் வைஷூ.. 

அடுத்ததாய் வைஷூ மோதிரத்தை அணிவிக்க அது வீர் – ன் கண்ணீராக தான் தெரிந்தது அவனுக்கு. 

இருவரும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள, அந்த புகைப்படம் பிஸ்னஸ் சுற்று வட்டாரத்தில்  முக்கிய செய்தியாய் பரவியது.

                                     😉

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page