மயக்கம் 1
காலை ஆறு மணிக்கு அலாரம் அடிக்க நிதானமாக எழுந்து தனது உள்ளங்கையை தேய்த்துவிட்டு கண்களில் ஒற்றிக்கொண்டே எழுந்து அமர்ந்தான் விஜயராகவன். மூடியிருந்த ஜன்னலின் வழியாக ‘மே ஐ கமின் ?’ என்று அனுமதி கேட்டு நின்று கொண்டிருந்தார் சூரிய பகவான்.நிதானமான மிதமான இள ஆரஞ்சு நிற ஒளிக்கற்றைகள் . அதன் மீது ஆசை கொண்டவனாக திரைசீலையை ஒதுக்கி ஜன்னலை திறந்தான்.அவன் வாயோ ,”அலெக்ஸா , ஸ்விச்ஆஃப் ஏ சி என்று சொல்லிக்கொண்டது.
சமீப காலமாகத்தான் அலெக்ஸ்சாவை துணைக்கு அழைத்துக் கொள்கிறான். முன்பெல்லாம் அவனே செய்த விஷயங்கள் தான். முதலில் நன்றாகத்தான் இருந்தது.இப்போது ” எனக்கு அலெக்ஸ்சா துணை எதுக்கு ?” என்கிற எண்ணம் உருவாக ஆரம்பித்திருந்தது.தனிமையை விரட்டத்தான் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன் குளியலறைக்குள் சென்று தன்னை சுத்தப்படுத்திக்கொண்டான்.
அங்கிருந்த கெட்டிலில் நீரை மிதமாக சூடாக்கி குடித்தவன் ,படுக்கையறையை ஒட்டியிருக்கும் ஜிம்முக்குள் நுழைந்து கொண்டான். ஒருமணி நேரம் பயிற்சி செய்தவன் வெளியே வந்து தனது அறையிலிருந்து இன்டெர்க்காம் வழியே சமையலறைக்கு அழைத்து,”இன்னமும் ஒரு மணி நேரத்துல வருவேன்.பிரேக் பாஸ்ட் ரெடி ஆகணும் “என்றுவிட்டு அறையிலிருக்கும் சோஃபாவில் அமர்ந்து கொண்டான். அரையடிக்கு அது அமுங்கிக்கொடுத்தது.அந்த சுகத்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டு கண்களை மூடினான். கண்களுக்குள் அவளும் அவள் கொடுத்த காயங்களும்.
படுக்கையில் இன்னமும் அவனது மூன்று வயது மகள் தயா எழுந்திருக்காமல் தூங்கிக்கொண்டிருந்தாள். மிருதுவான முடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அவளது பால் முகத்தை மறைந்தது. வாய் வழியே லேசாக எச்சில் ஒழுகிக்கொண்டிருக்க வாயில் கட்டைவிரலை போட்டுகொண்டு ஒரு ஆழ்ந்த உறக்கத்தில் குட்டிப்பெண்.
நிதானமாக மீண்டும் கண்களைத் திறந்தவன் , அறைக்கதவை திறந்தான் அறையின் வாசலில் அன்றைய நாளிதழ்கள் அடுக்கி வைக்கப் பட்டிருக்க அவற்றை எடுத்துக்கொண்டு மீண்டும் அறைக்குள் வந்து அமர்ந்து கொண்டான்.அவனது கண்கள் வேகமாக நடுநடப்புகள் பற்றிய விஷயங்களை ஆராய்ந்தது. எகோனோமிக் டைம்ஸ் பத்திரிக்கையை மட்டும் கொஞ்சம் நிதானமாக படித்தான்.
அவனது கம்பெனி கொடுத்திருக்கும் விளம்பரங்களையும் ஒரு பார்வை பார்த்தவன் விழிகள் ஒரு திருப்தியை பிரதிபலித்தது. ஏதேதோ பழைய நினைவுகள்.அவற்றை ஒதுக்கி மீண்டும் குளியலறைக்குள் புகுந்து கொண்டான். குளித்து ,போர்மல் உடையில் வெளியே வந்தவன் முகம் மகளை பார்த்துக் கனிந்தது. தயா அப்படியே அவன் சாயல். அப்பாவிடம் ஆசையும் அதிகம் தான்.
தயாவை இன்னமும் பள்ளியில் சேர்த்திருக்கவில்லை. அவளை கவனித்துக்கொள்ள வீட்டிலேயே ஒரு நடுத்தர வயது பணிப்பெண் இருக்கிறார். இரவு அப்பாவைக் கண்டுவிட்டால் அதற்குமேல் தயாவை அந்த பெண்ணால் பிடித்து வைக்க முடியாது.அப்பாவுடன் சாப்பிட்டு, இருவருமாக வாசலில் இருக்கும் தோட்டத்தில் அமர்ந்து அன்றைய கதைகளை பேசி,விளையாடி அப்பாவுடனேயே தூங்கவும் சென்றுவிடும் தயா. இவன் தனது அறையிலிருந்து வெளியே வரும் முன்னர் குழந்தையை பார்த்துக்கொள்ளும் அந்த பெண் வந்து குழந்தையை எடுத்து செல்வார்.
அலுவலகம் செல்ல தயாராகி கீழே இறங்கி வந்தவன் டைனிங் டேபிளில் அமர்ந்து இட்லிகளை எடுத்து தனது தட்டில் வைத்துக்கொண்டான். சட்னியுடன் அதை சேர்த்து சாப்பிடும் பொழுது அவனுக்கு அதில் அலாதி பிரியம். அவளுக்கு இட்லியை பிடிக்காது. அவளை பிரியும் வரை இவனும் கூட உணவு விஷயங்கள் முதற்கொண்டு அவளது விருப்பம் கண்டு தன்னை மாற்றிக்கொண்டான்.
சரி ,விஜயராகவன் சாப்பிட்டு வரட்டும்.அவனைப்பற்றி சிறு அறிமுகம். ஏற்கனவே கதையின் முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகம் செய்துவிட்டேன். இப்போது விஜயராகவன் பற்றி சொல்லிவிடுகிறேன்.
வயது முப்பத்து மூன்று. ஐந்தடி பத்து அங்குலம் உயரம்.நல்ல வெள்ளை நிறம். நிச்சயம் அழகுதான். அவனைப்பார்க்கும் பெண்களுக்கு ஹார்மோன்களின் உபயத்தில் நிச்சயம் மீண்டும் ஒரு முறையாவது பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வரும். (என்னது..எதுக்குன்னா கேக்கறீங்க?உங்களுக்கு தெரியாதா வாசகால்ஸ்?)பார்ப்பதற்கு சினிமா ஹீரோ மேக் அப் அதிகம் இல்லாமல் வந்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருக்கும் விஜயராகவன்.
படிப்பு சென்னையில் புகழ்பெற்ற கல்லூரியில் பொறியியலும்,பிறகு இந்தியாவின் புகழ்பெற்ற கல்லூரியின் அஹமதாபாத் கிளையில் மேலாண்மை படிப்பும் முடித்தாகி விட்டது. அவனது அப்பா ஆனந்த் இந்தியாவின் முன்னணி நிறுவனத்தின் பெரிய பதவியில் இருப்பவர்.அம்மா வாணி ஒரு பாடகி.பூர்வீக சொத்துக்கள் இருவழியிலும் ஏராளம். இருவருக்கும் ரொம்ப வருஷங்கள் குழந்தைகள் இல்லாமல் தவமிருந்து பெற்ற மகன் அதற்குப் பிறகு இவனுக்கு ஒரு தங்கையும் பிறந்தாள். அவள் ரோஷினி.
படிப்பில் சுட்டி. துளி கர்வம் கிடையாது. படிப்ஸ், அதோடு ரொம்ப கலகலப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் நண்பர்களுடன் அரட்டை உண்டு. பள்ளியில் படிக்கும் பொழுதிலிருந்தே செஸ் சாம்பியன்.விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் கிரிக்கெட், சுவர் ஏறி குதிப்பது, ஒரே பீர் பாட்டிலை நண்பர்கள் ஆளுக்கு ஒருவாய் என்று பகிர்ந்து களிப்பது என்று எல்லா விஷயங்களும் உண்டு.
இவனை முழுவதுமாக அறிந்தவள் இவனைவிட வெறும் இரண்டு வருஷங்கள் சிறியவளான ரோஷ்னி மட்டும் தான். அவ்வப்போது சாகேலேட்டுகள் கொடுத்து அவளையும் சரிகட்டிவிடுவான்.
டைனிங் டேபிளில் அமர்ந்து காலை உணவை மென்றவனுக்கு கூடவே தனது தங்கையின் ஞாபகங்கள் வந்தது. அவளுக்கு இப்போது அழைக்கலாமா என்று யோசித்தவன் ,’ம்ஹும்,இப்போ அங்கே ராத்ரியா இருக்கும்’ என்று நினைத்து அமைதியானான்.
அவனது பெற்றவர்கள் இருவரும் இவன் மீதான கோவத்தில் இப்போது அமெரிக்காவில் சென்று செட்டில் ஆகிவிட்டார்கள். நம் தலைவர் செய்து வைத்திருக்கும் விஷயம் அவ்வளவு பெரியது. ரோஷினிக்கு இரண்டு வருஷங்களுக்கு தான் திருமணம் முடிந்தது.அங்கேயே மணமகனைப் பார்த்து திருமணமும் முடித்து வைத்துவிட்டார்கள். விஜயராகவன் செய்து வைத்திருக்கும் வேலைக்கு பெற்றவர்களால் சென்னையில் இருக்கவும் முடியவில்லை.உறவினர் நண்பர் என்று ஒருவரோடும் முகம் கொடுத்து பேசவும் முடியவில்லை.அப்பா எப்போதுமே நேர்மை விரும்பி. கலாச்சாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அவன் பெற்றவர்கள். . இன்றைய நாட்களில் நிகழும் பல விஷயங்கள் அவருக்கு சரிவராது. அவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தும் தனக்கு கற்பிக்கப் பட்ட விஷயங்களிலிருந்து கொஞ்சமும் மாறாதவர். அப்பாவுக்கும் மகனுக்கும் நிறைய விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உண்டு.
இன்னும் நிறைய விஷயங்களை அசைபோட்டவாறே இட்லிகளை காலி செய்தான்.இன்னமும் அவனது தயா எழுந்திருக்கவில்லை. விஜயன் அலுவலகம் கிளம்பியாக வேண்டும். நேரே மகளின் அறைக்குள்ளே சென்று அவளது உச்சிமுகர்ந்தவன் அதன் லயிப்பிலேயே அலுவலகம் கிளம்பிச் சென்றான்.
ஒரு பெரிய கம்பனியின் பெரிய பொறுப்பில் இருப்பவன். அவன் முதுநிலை மேலாண்மை முடிக்கும்பொழுதே அவனுக்கு வேலை கிடைத்துவிட்டது. ஆரம்பத்திலேயே நல்ல பதவிதான்.இப்போது இன்னமும் மேல் நிலைக்கு வந்திருக்கிறான்.கம்பனியின் குறிப்பிட்ட சதவிகித பங்குகள் அவனிடம் உண்டு. வேலை கிடைத்த அன்று அவனுக்காக அவள் கொடுத்த பரிசு , இவன் வாழ்க்கையை இவ்வளவு மாற்றிவிடும் என்று தெரிந்திருந்தால் அன்றே அந்த பரிசை நிராகரித்திருக்கவும் கூடும்!இப்போது மருகி,உருகி என்ன பயன்?
அவனது டிரைவர் அவனை அலுவலக வாசலில் விட்டு, காரின் தரிப்பிடம் நோக்கி வண்டியை செலுத்தினார்.இன்று , கம்பெனி செக்ரெட்டரியுடன் ஒரு மீட்டிங்கும், போர்ட் மீட்டிங் ஒன்று மதியமும் இருக்கிறது என்று தகவலைகளை பகிர்ந்து கொண்டார் விஜயனின் பி.ஏ சுந்தரம்.அவருக்கு எப்படியும் நாற்பதுகளில் கடைநிலையில் வயது இருக்கும்.ஆனால், ஆள் படு சுறுசுறுப்பு. சுந்தரம் சொன்னவற்றை கேட்டபடிக்கே தனது மடிக்கணினியை உயிர்பித்தவன்,”சுந்தரம் சார்,ஒரு காபிக்கு சொல்லிடுங்க. தலை வலிக்குது சென்னை ட்ராபிக்ல வந்தது .”என்றான்.
தலையசைத்தபடிக்கே வெளியேறினார் சுந்தரம். விஜயன் அதிகம் காபி குடிப்பதாக அவனுக்கு தோன்றுவது உண்டு.பிறகு தனக்கு எதற்கு என்று நகர்வது தான். விஜயன் அவனுக்கு வந்த மெயில்களை வேகமாக பார்வையிட்டு சிலவற்றிற்கு அவனே பதில்களை அனுப்பினான். சிலவற்றிற்கு விளக்கங்கள் கேட்டு மெயில்களை அந்தந்த பிரிவுகளுக்கு அனுப்பினான்.
அதை செய்து முடிக்கும் பொழுதே கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார் கம்பனி செக்ரெட்டரி. அவருடனேயே ஆடிட்டரும் வந்திருக்க அவர்களது பங்குகள் மார்க்கெட்டின் ஏற்ற இறக்கங்கள் ,முதலீடுகள்,கொடுக்க வேண்டிய டிவிடென்ட்டுகள் என்று வெகு நேரம் அந்த உரையாடல் நீடித்தது.
காலையில் விஜயராகவன் கேட்ட காபியை சுந்தரம் இப்போததுதான் மூவருக்குமாக கொடுத்து அனுப்பினார். அதை முற்றிலும் மறந்து விட்டிருந்தான் விஜயராகவன்.
அந்த அளவுக்கு அவனை வேலைகள் உள்ளே இழுத்துக்கொண்டது. மாலையில் போர்டு மீட்டிங் முடித்துவிட்டு கிளம்ப இரவு ஒன்பது மணி ஆகிவிட்டிருந்தது.தலைவலி வேறு . இவன் கொடுத்திருந்த ப்ரபோசலின் மீதான விவாதம்.அதன் குறித்த கேள்விகள் அதற்குத் தேவையான முதலீடுகள் ,ஆடிட்டரின் கடந்த ஆறு மாதங்களுக்கான வரவு செலவுக்கணக்குகள் அதன்மீதான விவாதங்கள் அதை அடிப்படையாக கொண்ட புது ப்ரோபோசலுக்காக நிதி ஒதுக்கீடு என்று நீண்ட விவாதங்கள் ஏறக்குறைய நான்கு மணி நேரத்தை விழுங்கி இருந்தது.
வயிறு வேறு ‘பசி தாங்கலடா பாவி.ஏதாவது போடு ப்ளீஸ் ‘என்று தனியாக அலறியது. பொதுவாக மீட்டிங்கின் நடுவில் கொடுக்கப்படும் எந்த பானத்தையும் உணவுப்பொருளையும் அவன் சாப்பிட மாட்டான். அதாவது கண்ட நேரங்களில் சாப்பிட்டு வயிற்றையும் உடலையும் கெடுத்துக்கொள்ளும் பழக்கமெல்லாம் கிடையாது.இதுவும் அவள் சொல்லிக்கொடுத்தது தான். அவளுடன் இருந்த நேரங்களில் தினமும் உடற்பயிற்சி செய்யவும் ஆரோக்கியமான பழக்கங்களையும் ராணுவ கட்டுப்பாட்டுடன் இவனை செய்ய வைத்தாள். அவளும் தனது உடம்பை பராமரிப்பதில் எந்த தளர்வும் கொண்டதில்லை.
எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி,சுத்தம். ஒருவேளை அவளது பழக்கவழக்கங்ளில் தான் முதலில் ஈர்க்கப்பட்டானோ என்னவோ!இன்று வரை புரியாத மர்மம். அவளும் புரியாத கணக்கு பாடம் தான் இன்று வரை.
விஜயன் செய்யும் எந்த ஒரு விஷயத்திலும் அவளது தாக்கம் அதிகமாவே இருக்கிறது .இன்றுவரை தொடரவும் செய்கிறது. அவள் உடன் இல்லாத இந்த வாழ்க்கை ஏதோ உப்பு சப்பில்லாமல்தான் செல்கிறது.” எங்கிருக்கிறாய் எனது காதலே!”என்று வானத்தை தலை உயர்த்திப் பார்த்தவனுக்கு இருள் தவிர ஒன்றும் தெரியவில்லை.
டிரைவரிடம் சொல்லி ஒரு உயர்ரக ஹோட்டலுக்குள் சென்றவன் பசி தாங்க முடியாமல் சாப்பிட்டது என்னவோ மூன்று இட்லிகள் தான். அதற்க்கு மேல் உள்ளிறங்கவில்லை. ஆக்கிரமித்திருந்த அவளின் நினைவுகள் அவனை இன்று வரை உறையவைக்கும் வல்லமை கொண்டுள்ளதே! இதுதான் காதலா?
என்னை தேடி காதல் என்ற…
வார்த்தை அனுப்பு…
உன்னை தேடி வாழ்வின் மொத்த…
அர்த்தம் தருவேன்…
செல்லரிக்கும் தனிமையில்…
செத்துவிடுமுன் செய்தி அனுப்பு…
என்னிடத்தில் தேக்கி வைத்த…
காதல் முழுதும்…
உன்னிடத்தில் கொண்டு வர…
தெரியவில்லை…
காதல் அதை சொல்லுகின்ற…
வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு…
காதலிக்க நேரம் இருக்கு ., காதல் பெண்ணைக் காணவில்லை.
