Epi – 25 – உண்மை காதலே

இதுவரை… 

    சரணின் மனைவி சந்திரிகா நடந்த அனைத்தையும் சரணிடம் கூற, உடனே வீர் – ஐ அழைத்து விசயத்தை உரைத்தான். தன் செவிகளுக்கு வந்த விஷயம் கேட்ட வீர் உடனே சித்துவின் இல்லத்திற்கு சென்றான். 

இனி…

  உண்மை அறிந்து கொண்ட வீர் சித்துவை சந்திக்க செல்கிறான் என தெரிந்து சரண் உடன் சென்றான்.

     தன் வீட்டை விட்டு வெளியேறடா என அன்று சித்து உரைத்த பிறகு வைஷ்ணவிக்காக மீண்டும் அதே வீட்டின் வாயிலை மிதித்தான் வீர். 

  வீட்டின் கேட்டை தாண்டி உள்ளே நுழைகையில் ஆங்காங்கே சில சொந்தங்கள் நின்று பேசிக் கொண்டிருந்தனர். 

  காலையில் நடந்த நிச்சயதார்த்தத்தை பற்றியும் விருந்தை பற்றியும் சிலர் பேசிக் கொண்டிருக்க அது வீர்-ன் காதுகளுக்குள் நுழைந்தது. 

  அந்தப் பொண்ணுக்கு பெருசா சொத்து  இல்லைன்னாலும் ஆள் பார்க்க தேவதை மாதிரி அழகா இருக்காள். அதனால் தான் நம்ம சித்து விழுந்துட்டான் போல…

  தன் காதில் கேட்ட விஷயங்கள் பொய்யாக இருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டே ஹாலினுள் நுழைந்தான் வீர்.

  அதே ஹாலை ஒட்டியிருந்த ஒரு அறையில் தான் சித்து, வைஷூ மற்றும் அவளின் தந்தை மூவருமே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். 

   “மாப்ளே கல்யாணத்துக்கு ஒரு நாள் கேப் இருந்ததுக்கே இவ்வளவு வேலை தலைக்கு மேலே இருக்கு, இதில் இன்னைக்கே கல்யாணம்னா எல்லாரும் மொத்தமா மயக்கம் போட்டிருப்பாங்க..” என்றார் ஐயாசாமி. 

   “என்னமோ காலையிலிருந்து எல்லா வேலையும் நீங்களே செஞ்ச மாதிரி பேசுறீங்க, நான் தான் அது எல்லாத்துக்கும் ஆள் போட்டுட்டேனே..”

   “நீங்க ஆள் போட்டுட்டீங்க மாப்ளே ,வேலை சரியா நடக்குதான்னு ஒவ்வொரு மூலைக்கும் நடந்து கால் வலி வந்தது தான் மிச்சம்..”

  “அதுக்கு என்ன,  இப்போ உங்களுக்கு எந்த வேலையும் இல்லை நேரா காலையில் முகூர்த்தத்துக்கு எந்திரிச்சா போதும் போய் தூங்குங்க.. ”

  சித்துவும் ஐயாசாமியும் பேசிக் கொண்டிருக்க அதை கவனித்துக் கொண்டிருந்த வைஷ்ணவிக்கு திடீரென செவிகளுக்குள் வீர்-ன் குரல் கேட்டது. 

  “ இது அவனோட குரல் தான்..!  அவன் வந்துட்டானா..?”

  “நீ யாரை சொல்ற வைஷ்ணவி ..” 

  “சித்து , அந்த வீர் வந்துட்டான் இது அவனோட குரல் தான்..”

  “நாளைக்கு கல்யாணத்துக்காக வீட்டில் நிறைய சொந்தக்காரங்க வந்திருக்காங்க, யாரோ யாரையோ கூப்பிடுறாங்க அது உனக்கு அவன் குரலா கேக்குது…”

 “ வைஷ்ணவி எங்க இருக்க..?”

  அப்போது தான் சித்துவிற்கும் வீர்-ன் குரல் செவிகளை எட்டியது. 

  வீர் தானோ .. என்ற சந்தேகத்தோடு வைஷ்ணவியை நோக்கிய சித்து உறுதி செய்வதற்காக அறையை விட்டு வெளியே வந்தான்.  அவனைத் தொடர்ந்து வைஷ்ணவியும் ஐயாசாமியும் வந்தனர். 

  வைஷ்ணவியை கண்டதுமே வீர் முன்னால் ஓடினான். விட்டால் அணைத்துக் கொள்வான் போல…

  ஆனால் எல்லையை கடைப்பிடித்து அவளின் கைகளை தான் இறுக்கப்பற்றினான்.

   “ வைஷு நீ எங்க போயிருந்த காலையில் இருந்து உனக்கு கால் செஞ்சிட்டே இருக்கேன். ஏன் என்னுடைய போன் காலை எடுக்கலை..”

  “என் கையை விடு.. நான் சித்துவுக்கும் மனைவியாக போறேன் தொடாமல் பேசு..”

  அவள் கூறிய வார்த்தை கேட்டு கரங்களைப் பிடித்திருந்த வீர்-ன் கைகள் விலகியது. 

  சொந்தங்கள் நிரம்பி இருப்பதை கவனித்த வைஷ்ணவி, உடனே அந்த இடத்திலிருந்து வீட்டின் பின்பக்கம் சென்றாள் . அங்கே தாராளமாக அமர்ந்து பேசும் அளவிற்கு நிழற் கூடமும் சோஃபாவும் அமைத்திருந்தனர். 

  வைஷ்ணவியை பின்தொடர்ந்து வந்தான் வீர் . அவனின் கெஞ்சல்களையும் கண்ணீரையும் பார்ப்பதற்காகவே சித்து எதிர்பார்ப்போடு பின் தொடர்ந்தான். 

 “ வைஷ்ணவி நில்லு…”

  தனக்கு முன்னால் சென்ற வைஷ்ணவியின் கையைப் பிடித்தான் வீர். 

   “ சித்து உன்னை மிரட்டினானா அதனால தான் இப்படி எல்லாம் பேசுறியா..”

  “நான் சொன்னது உன் காதில் விழுகலையா, நாளைக்கு எனக்கும் சித்துவுக்கும் கல்யாணம்.  என்னை தொட உனக்கு எந்த உரிமையும் கிடையாது.  கையை எடு…”  

     ஒரே அடியாய் உதறிக் கொண்டு வீர்-ன் கைகள் பட்ட தடத்தை தட்டி விட்டாள்.

  அவளின் செய்கையை கவனித்தவன் ஏன் இந்த மாற்றம் என அவளின் கண்களை நோக்கினான். 

 “ ப்ளீஸ் வைஷ்ணவி , காலையிலிருந்து உன்னை பற்றி கேள்விப்பட்டதெல்லாம் உண்மைனு நிரூபிக்கிற மாதிரியே நடந்துக்கிற நீ,  என்னால் அதை ஏத்துக்க முடியாது…”

   “அப்படி நீ என்ன கேள்விப்பட்ட..”

திமிரோடு கேட்டாள். 

   “சித்துவோட பேச்சைக் கேட்டு தான் நீ என்னை காதலிக்கிற மாதிரி நடிக்கிறதா…”

  “இதுல பாதி பொய், பாதி உண்மை…  நான் உன்னிடம் நடிக்க ஆரம்பிச்சேன் ஆனா காதலிக்கலை.  நீதான் என்னை காதலிக்கிறதா சொன்ன,  அப்போ கூட உன் தகுதிக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணை தேர்ந்தெடுன்னு உன்னை விட்டு விலகி தான் போனேன்..”

  “அப்போ…!  சித்து சொன்னான்னு தான் என் கம்பெனிக்கு வேலைக்கு வந்தியா..”

  “ஆமாம்…”

  கூலாக பதிலுரைத்தாள் வைஷ்ணவி அதைக்கேட்ட சரணுக்கு கோபம் உச்சத்தில் ஏறியது. 

  “மனுஷியா டி நீ எல்லாம் பணத்துக்காக என்ன வேணா செய்வியா,  அவன் தான் புத்தி இல்லாம சொல்றான்,  இன்னொருத்தனுடைய உணர்வுகளோட விளையாட கூடாதுனு உனக்கு தோணலையா… ”

  “இங்க பாருங்க சரண் எனக்கு தேவை பணம். நான் ஒன்னும் உங்க ஃப்ரண்டை காதலிக்கிறதா சொல்லி ஏமாத்தலை நான் அவனுடைய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். என் வேலையை மட்டும் தான் செஞ்சேன். அவனா தான் என் அழகில் மயங்கி காதல் வயப்பட்டான். எந்த இடத்திலாவது என் மேல காதல் வர மாதிரி அவனை தவறா நான் தொட்டிருக்கேனானு கேளுங்க..”

   “உன் வாய்ப்பேச்சு போதாதா அவனை மயக்குறதுக்கு,  உன் தொடுகை வேற அவசியமா ..? இப்படி அடுத்தவனோட உணர்ச்சிகளை சாகடித்து சம்பாதிக்கிறதுக்கு நீ எல்லாம் வேற தொழில் செய்யலாம்..”

  சரண் வார்த்தைகளை உதிர்க்க, வீர் அதைக் கேட்டு மனம் வருந்தி கண் இறுக்கினான்.  அதில் தேங்கி இருந்த அவனின் கண்ணீர் கன்னம் வழிய பெரும் மூச்சொன்றை விட்டு கண் திறந்தான். 

  “வார்த்தையை அடக்கிப் பேசுங்க சரண் சந்திரிகாவோட புருஷன் என்கிற ஒரே காரணத்துக்காக தான் உங்களை சும்மா விடுறேன்.  யாரை பார்த்து என்ன சொல்றீங்க ..? உங்க முன்னாடி நிக்கிறானே இந்த வீர், இவன் ரொம்ப ஒழுக்கமானவனா..

       பாவம் காய்ச்சலில் தனியா வாடுரான்னு உதவி செய்ய கிட்ட போனா என் கையைப் பிடித்து இழுத்து என்கிட்ட தப்பா நடந்துகிட்டான் . அன்னைக்கு இவனுடைய அத்தை மட்டும் வீட்டுக்கு வரலைனா என் கதி என்ன ஆகி இருக்கும் தெரியுமா? யோக்கியம் இல்லாத இவனுக்காக நீங்க என்கிட்ட வக்காலத்து வாங்குறீங்க…”

   வைஷ்ணவியின் குணம் வெளியே வர,  இதில்  வைஷ்ணவியே தன் குணத்தை இப்படி அசிங்கப்படுத்தி பேசுவதை மேலும் வலியோடு பார்த்தான் வீர்.

    அனைவரின் வார்த்தைகளும் செயல்களும் சித்துவின் கண்களுக்கு புலப்படவில்லை.  மாறாக வீர்-ன் நிலையை மட்டும் தான் கவனித்தான். 

  “என்ன வீர்…. ?  பெண்களை வற்புறுத்துறது தப்புன்னு எனக்கு பாடம் எடுத்த இப்ப நீயே ஒரு அயோக்கியனா நிக்குற… ”

    

  சித்துவின் நக்கல் வார்த்தை கேட்டு வீர் உடைந்த மனதுடன் நிமிர்ந்து பார்த்தான். 

  “என்னடா பாக்குற , மனசு நோகுதா எனக்கும் அப்படித்தானே இருந்திருக்கும்.  என்னோட காதலி உன்னை காதலிக்கிறேன்னு என்கிட்ட சொன்னப்ப…  இதில் உன்னை ஹீரோவா காட்டிகிறதுக்காக என்னை வில்லனா அவள் முன்னாடி நிக்க வச்சுட்ட… ”

  “ஏன்டா இப்படி எல்லாம் பண்ண…”

  வீர் சிவந்த தன் கண்களுடன் வருத்தமான குரலில் கேட்டான்.

  “சரியா கேட்கல , என்ன கேட்ட..?  மறுபடியும் கேளு.. ஏன் இப்படி பண்ணினேனு தானே கேட்ட…”

  “என்னை விட நீ அழகென நினைச்சு தானே ஸ்வேதா என்னை விட்டுப் போனாள் . ஏன் என்னை பெத்த அப்பாவே கூட உன் கூட கம்பேர் செஞ்சு தான் எனக்கு அறிவுரை சொன்னாரு , உன்னை விட நான் மேலே இருக்கேன்னு நிரூபித்து காட்ட வேண்டாமா..

         அதோட முதல் படி தான் இது. நீ ஒரு முட்டாள்…. போயும் போயும் ஒரு பொண்ணோட அடையாளம் எதுவுமே தெரியாம சொத்தில் பாதியை அவளுக்கு எழுதி வச்சிருக்க.. நாளைக்கு எங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்ச மறுநாளே ரிஜிஸ்டர் ஆபீஸ்ல அந்த பாதி சொத்தை இவள் என்னுடைய பெயருக்கு எழுதி வச்சிடுவாள். அதோட உனக்கும் எனக்கும் இருக்கும் மன சவாலில் மூன்று மாதம் வரைக்கும் காத்திருக்க வேண்டும்னு அவசியம் இல்லை.

             உன்னுடைய பிசினஸ் பார்ட்னர்சிப் என் கைக்கு வந்துடும் உன்னை விட நான் டாப்புக்கு போயிடுவேன்.. ” 

  சித்துவின் செயல் அறிந்த வீர்-க்கு கோவம் வரவில்லை வருத்தம் தான் வந்தது. 

  ஆனால் சரண் பொறுமை காக்கவில்லை.  சித்துவின் சட்டையைப் பிடித்து அடிக்க துணிந்தான். அதற்குள் வீர் கையைப் பிடித்து தடுத்து விட்டான். 

  “என் கையை விடு வீர், என் ஆத்திரம் தீரும் வரை இவனை அடித்தால் தான் மனசு ஆறும் ரொம்ப கேவலமான குணம். இவனுக்கு..”

  “வேண்டாம் சரண், என்னை அழ வச்சு பார்க்கணும்னு ஆசைப்பட்டான்.  இப்போ அது நடந்துருச்சு,  அவனாவது சந்தோசமாவது இருக்கட்டும் விட்டுடு..”

   “டேய் இவனை சும்மா விட்டா இன்னும் அதிகமாய் தொந்தரவு கொடுப்பான்..”

  “சரண் வேண்டாம்னு சொல்றேன்ல இங்கிருந்து போலாம் வா..”

  ‘செல்லும் முன் வைஷ்ணவியை திரும்பிப் பார்த்தான் வீர், இந்த முகத்தை கண்டு தனக்கு துளி சந்தேகம் கூட எழவில்லையே அந்த உண்மை இப்போது எங்கே சென்றது…’ என நோக்கினான். 

  அவளோ இவன் பார்வையை அலட்சியமாய் பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டாள். 

   வீர்-ம் , சரண்-ம் அங்கிருந்து வெளியேறினர். வீட்டிற்கு செல்லும் வழியில் ஆளில்லா கடற்கரை சாலையில் மது பாட்டிலுடன் தன் கார் உடைய முகப்பு விளக்கு வெளிச்சத்தில் நின்று மது அருந்தினான் வீர். 

  “ டேய் வீர் வேணாம் டா , உன்னை இந்த மாதிரி பாக்கணும்னு தான் அந்த சித்து ப்ளான் போட்டு வைஷ்ணவியை அனுப்பி இருக்கான்.  நீயும் அதே மாதிரி ஆகிடாதடா…”

  “போகட்டும் டா நான் ஒரு குடிகாரனவே இருந்துட்டு போறேன். என்னை பார்த்தாவது சித்து நிம்மதியாய் வாழட்டும்..” 

  கையில் மது பாட்டிலுடன் போதையில் ஆடிக் கொண்டே நடந்த வீர் எதிரே வந்த காரில் மோதி தரையில் விழுந்தான். 

   நல்வேளையாக எதிரில் வந்த கார் ஓட்டுனர் சுதாரித்து உடனே பிரேக்கை அழுத்த, மேலோட்டமாய் மட்டுமே வீர்-ன் மீது இடித்தது. 

  வீர் பின்னோக்கி தரையில் விழுக அவன் கையில் இருந்த மது பாட்டில் கண்ணாடி உடைந்தது. 

 “ வீர்… !! ”

  சரண் உடனே ஓடி வர, காரில் இருந்த தம்பதியினர் யார் மீது மோதினோம் என அறியாது பதறிப் போய் வெளியே வந்தனர். 

  அந்தக் காரை ஓட்டி வந்தது ஹரிஹரன் மற்றும் அருகில் அமர்ந்திருந்தது வீர்-ன் தாய் ரத்னா. 

  தன் மகனை கண்டதும் துடித்து போனார் ரத்னா.

  “வீர்… ”

  சரண் என்ன ஆச்சு, வீர் ஏன் இப்படி குடிச்சிருக்கான்..?

  “இங்க பாருங்க நீங்க அவனைத் தொடாதீங்க ஏற்கனவே வருத்தத்தில் இருக்கான். இதில் நீங்க தனியா டென்ஷன் வேற செய்ய வேண்டாம் விலகிக்கோங்க நானே அவனை அழைச்சிட்டு போறேன்..”

  “விடு ரத்னா இவனுங்களுக்கு திமிரு அதிகம் நாம போலாம் வா…”

  “என் கையை விடுங்க ஹரி, கீழே விழுந்திருக்கிறது என் பையன் அப்படியே விட்டுட்டு வர முடியாது..”

  வீர் மெல்ல தடுமாறி எழுந்து அமர, தன் கையை பிடித்திருந்த ரத்னாவின் கைகளை தட்டி விட்டான். 

 ” நம்பிக்கை துரோகி..” என அழுத்த உரைத்தான்.

                                      😉

  

❤️ Loading reactions...
3 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page