“காதல் நீதிமன்றமா?…”
“ஆம், மானிடா காதல் நீதிமன்றத்தில்தான் நீர் செய்த தவறுக்கான தண்டனை உமக்கு வழங்கப்படும்!. ”
அவர்கள் இவ்வாறு சொன்ன பிறகு, அவனுக்குத் தான் என்ன தவறு செய்தோம் என்றெல்லாம் கேள்வி எழவே இல்லை.
ஏனெனில், அவன் செய்த தவறுக்கான வீரியத்தை முற்றும் முழுதாய் அவன் உணர்ந்திருக்க, அப்பொழுது அவன் மனதில் தோன்றி இரு கேள்விகளை மட்டுமே அவர்களிடம் கேட்டான்.
“நான் உங்களோடு வர, ஆனா எனக்கு இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. இது என்ன இடம், நான் எப்படி இங்கே வந்தேன்?.”என்றவன் அவர்களின் முகத்தைக் கேள்வியோடு நோக்க,
“சொல்கிறோம், மானிடா சொல்கிறோம். இங்கு வரும் அனைவருக்கும் இந்த வினாவுக்கான விடையைத் தெரிந்து கொள்ளும் முழு உரிமை இருக்கிறது.”
“முதலில், ஒரு விடயத்தை நீர் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் மானிடா. நீர் இறந்துவிட்டீர், இப்போது உங்களுடைய ஆத்மா மட்டுமே இங்கே எங்களின் முன்பு இருக்கிறது.
அதுமட்டுமல்ல, சிறிது நேரத்திற்கு முன்பு இந்த நுழைவாயிலில் உமக்கு இரண்டு காட்சிகள் தெரிந்திருக்கும்.
ஒன்று நீர் எப்படி இறந்தீர் என்பதற்கான காட்சிகள், மற்றொன்று நீர் செய்த தவறு.
இரண்டாவது, இது காதல் உலகம்.
காதலின் ஒட்டு மொத்த உணர்வையும் ஒருங்கே பிரதிபலித்து நிற்கும் அழகிய உலகம். நாங்கள் இருவரும் காதல் உலகத்தைப் பாதுகாக்கும் காவலர்கள்.
மானிடர்கள் அனைவரும் இறந்தவுடன் நேரடியாகச் சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ செல்வார்கள் என்று தான் நினைக்கிறார்கள்.
ஆனால், அது உண்மை இல்லை.
இறப்பவர்கள் அனைவருமே முதலில் இந்தக் காதல் உலகத்திற்குத் தான் வருவார்கள்.
உண்மை காதலை அடைந்தவர்கள், உண்மை காதலை உணர்ந்தவர்கள், உண்மை காதலை தங்களின் இணைக்கு உணர்த்தியவர்கள், அனைவருமே இந்தக் காதல் நுழைவாயிலை கடந்து அவர்கள் செய்த பாவ புண்ணியக் கணக்குகளின் படி சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ செல்வார்கள்.
ஆனால், உண்மை காதலை உணராதவர்கள், உண்மை காதலை அவமதித்தவர்கள், உண்மை காதலை சிதைத்தவர்கள், அனைவருமே காதல் நீதிமன்றத்தில் அவர்கள் செய்த தவறுக்கான தண்டனையை அனுபவித்த பிறகு சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
அந்த விதத்தில் இப்பொழுது நாங்கள் உம்மைக் காதல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறோம்.”என்றவர்களைப் பார்த்தவன் என்ன மனநிலையில் இருக்கிறான் என்று அவனுக்கே புரியவில்லை.
“கடைசியாக, காதல் நீதிமன்றத்திற்கு நாம் செல்வதற்கு முன்பு உமக்கு ஏதேனும் கடைசி ஆசை இருந்தால் அதை நீர் எங்களிடம் சொல்லலாம் மானிடா. ஆனால், அது காதலை தழுவி மட்டுமே இருக்க வேண்டும்.”என்றவர்கள் அவ்வளவுதான் என்பது போல இவனைப் பார்க்க,
“என்…னோட மகி…ழினிய என்…னால பாக்க முடி…யுமா?. அவ…கிட்ட நான் மன்…னிப்பு கேக்கணும்.”
“நிச்சயமாக மானிடா. நீர் இன்னும் இறந்த விடயம் அந்த மங்கைக்குத் தெரியாது. அந்த மங்கையைப் பொறுத்தவரை நீர் இன்னும் இறக்கவில்லை. அதனால், இப்போது நீர் அங்கே செல்லலாம்.
அதேநேரம், எப்பொழுது அந்த மங்கைக்கு நீர் இறந்த செய்தி அவள் செவிகளை எட்டுகிறதோ, அப்பொழுது நீர் அங்கிருந்து காற்றோடு காற்றாகக் கரைந்து நேராக இங்கே இந்த இடத்திற்கு வந்து விடுவீர்கள்.
ஆனால், ஒரு விடயத்தை நீர் மறந்து விடக்கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் நீர் இறந்த விடயத்தை நீங்களே அந்த மங்கையிடம் சொல்லக்கூடாது.
புரிந்ததா மானிடா?.”என்றவர்கள் கண்களை மூடி ஏதோ ஒன்றை உச்சரிக்க, அவன் அங்கிருந்து மறைந்து நேராக அவளின் வீட்டின் முன்பு தோன்றினான்.
இதுவரை நடந்ததை நினைத்து பார்த்தவாறு அந்த மொட்டைமாடியில் அமர்ந்திருந்தவன், கீழே தொலைபேசி எடுக்கப் போனவளின் காதுகளுக்கு அவன் இறந்து போன செய்தி எட்ட, அதிர்ச்சியில் செல்போன் கையிலிருந்து நழுவி கீழே விழுந்த அதே நேரம் அவன் அப்படியே காற்றோடு காற்றாகக் கரைந்து மறைந்து போனான்.
_ _ _ _ _ _ _ _ _ _ _
“ஹலோ!, சொல்லுடி நிலா என்ன இந்த நேரத்தில் கூப்பிட்டிருக்க?!” என்றவளின் கேள்விக்கு எதிர் திசையில் சொல்லப்பட்ட பதிலில், அதிர்ச்சியில் உறைந்தவளின் செல்போன் கீழே விழுந்து நொறுங்கியது…
பூமி தனது இயக்கத்தை நிறுத்தி உலகமே ஸ்தம்பித்தது போன்ற பாவனையோடு அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தாள் அவள். அதன் பிறகு எப்படி அவள் அவன் வீட்டிற்குச் சென்றாள் என்று அவளுக்கே விளங்கவில்லை.
ஆனால், கடந்த ஆறு மணி நேரமாக அவள் கதறிய கதறல் அங்கிருந்த அனைவரின் நெஞ்சையும் பிசைந்தது. இவ்வளவு நேரம் நினைவலைகளில் சிக்கியிருந்தவள் தோழியின் உழுக்களில் சுயநினைவு பெற்றாள்,”அண்ணனை எடுத்துட்டுப் போகப் போறாங்க மகிழ். கடைசியா பாக்குறவங்கள பாத்துக்கச் சொல்றாங்க.”
கண்களில் கண்ணீர் வழிய சொன்னவளை பார்த்தவள், விரக்தி புன்னகையோடு எதுவும் பேசாமல் எழுந்து சென்று அவனின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவள், அங்கிருந்து பொடிநடையாகத் தனது வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
உன் குறும்பினில்
என்னைச் சிலிர்க்க வைத்தாய்…
மனம் உருகிட என்னுள்
நுழைந்து விட்டாய்.…
குழந்தையாய் மடிமேல்
சாய்ந்து கொண்டாய் இன்று
குழந்தை ஆகினேன் உன்
நினைவால்…
அன்பிலே உன்னை
எண்ணி தவிப்பது தெரியாதா…
ஒருமுறை ஒரேமுறை
என்னிடம் வருவாயா…
ஏங்குகிறேன் நீ
என் பக்கம் இல்லையே…
உருகுகிறேன் உந்தன்
ஏக்கம் தொல்லையே…
ஒரு நாள் உன்னை
நான் நினைத்தேன் சிரித்தேன்…
மறு நாள் உன்னை நான்
நினைத்தேன் அழுதேன்…
கால் போன போக்கில் நடந்து சென்றவளை, அருவமாய்ப் பின் தொடர்ந்து வந்தவன் உயிரை உலுக்கும் வேதனையில் அங்கேயே அப்படியே மண்டியிட்டு அமர்ந்தான்.
ஆம், காற்றோடு காற்றாகக் கரைந்து நேராகக் காதல் உலகத்திற்குச் சென்றவனுக்குக் காதல் நீதிமன்றத்தில் இரண்டு விதமான தண்டனை வழங்கப்பட்டது.
ஒன்று அவன் இல்லாமல் அவள் படும் வேதனையை அவன் நேரில் இருந்து பார்க்க வேண்டும் என்றும், அது முடிந்த பிறகு இரண்டாவது தண்டனை என்னவென்று தெரியவரும் என்றும் மீண்டும் அவளிடமே இவன் அனுப்பி வைக்கப்பட்டான்.
அவன் இறந்து ஆறு மணி நேரமாக அவள் கதறிய கதறலை பார்த்தவனுக்குச் சத்தியமாக முடியவில்லை. இன்று தான் காதல் என்றால் என்ன என்பதையும், அது தரும் வலியின் ஆழத்தையும், அவன் அவனின் ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்து கொண்டிருந்தான்.
மண்டியிட்டு அமர்ந்திருந்தவன் கண்களை இருக்க மூடி அவளிடம் மனம் உருகி மன்னிப்பு கேட்க, கண்களைத் திறந்த நொடி மீண்டும் அவன் காதல் உலகத்தின் காவலர்கள் முன் நின்று கொண்டிருந்தான்.
இவனைப் பார்த்தவர்கள் விலகி வழி விட, அவன் கண்களுக்கு மீண்டும் அந்தக் காதல் உலகத்தின் நுழைவு வாயில் தெரிந்தது.
ஆனால், இம்முறை அந்த நுழைவு வாயிலில் மாபெரும் இதய வடிவ சிம்மாசனம் ஒன்று இருக்க அதில் கம்பீரமாக வீற்றிருந்தார் ஒருவர்.
“மானிடா இவர்தான் காதல் கடவுள். உமக்கான இரண்டாவது தண்டனையை இவர்தான் தரப் போகிறார். “என்றவர்கள் அவரை வணங்கிவிட்டு ஒதுங்கி நிற்க,
“எனக்கு என்ன தண்டனை வேணா குடுங்க. ஆனா, என் மகிழினிய தயவு செஞ்சி இதுல இருந்த காப்பாத்துங்க. அவளுக்கு என்னோட நினைவுகள் எதுவுமே இல்லாம அழிச்சிருங்க ப்ளீஸ்!. “கண்கள் கலங்க அவரைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டவன் பேச, முகத்தில் மெல்லிய புன்னகையைச் சிந்தியவர் பேசத் தொடங்கினார்.
“உமக்கான தண்டனையை யாம் ஏற்கனவே முடிவு செய்தோம். ஆனால், அம்மங்கைக்கு மறதி வழங்கச் சொல்லி நீர் தான் கேட்டுக் கொண்டீர். எனவே, உமக்கான இரண்டாவது தண்டனை இதோ.
நீர் நிச்சயம் மறுபிறவி எடுப்பாய், காதலின் வலியை உன் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் உணர்வதற்காகவே நீர் நிச்சயம் மறுபிறவி எடுப்பாய்.
அதுவும், இப்பிறவியின் நினைவுகளையும், இப்பிறவியில் அம்மங்கை காதலினால் அனுபவித்த வலிகளையும் சுமந்து கொண்டே, நீர் மறுபிறவி எடுப்பாய். நீர் பிறந்த அடுத்த நொடியில் இருந்து இப்பிறவியின் நினைவுகளையும் வலிகளையும் சுமக்க தொடங்குவாய் .
அதேநேரம், பிறவிபயன் காரணமாக அம்மங்கையும் மறுபிறவி எடுக்க, ஆனால் நீர் கேட்டுக் கொண்டதன்படி அவருக்கு எந்த நினைவுகளும் இருக்காது.
ஆனாலும், உம் காதலை அடைவதற்கு உமக்கு இறுதியாக ஒரு வாய்ப்பும் உண்டு.
நீர் பிறந்து சரியாக முப்பது ஆண்டுக் காலத்துக்குள், அம்மங்கையின் காதலை உன் வசப்படுத்தினால், அப்பிறவி உனக்கு நிலைக்கும். இல்லையேல், உன்னுடைய முப்பதாவது தசாப்தத்தில் உன்னுடைய அந்தப் பிறவியும் முடிவு பெறும்.
அதே நேரம், எந்தச் சூழ்நிலையிலும் நீர் மறுபிறவி எடுத்ததை யாரிடமும் சொல்லக்கூடாது. அப்படி, நீர் சொன்னால் அந்த நொடியே உன்னுடைய அந்தப் பிறவியும் முழுமை பெறும். இதுவே உமக்கான இரண்டாவது தண்டனை.”கண்களில் கண்ணீர் திரையிட, தன்னை நோக்கி வந்த சாபத்தை வரம் போல ஏற்றுக்கொண்டான் அவன்.
ஆம், உண்மையில் அவனைப் பொறுத்தவரை அது அவனுக்குக் கிடைத்த வரம்தான்.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், அது வரம் மட்டுமல்ல. அவன் செய்த தவறுக்கு அவனுக்குக் கிடைத்த தண்டனை. அவன் செய்த தவறை அவனே திருத்திக்கொள்வதற்கு, அவனுக்குக் கிடைத்த மறுவாய்ப்பு அல்ல இறுதி வாய்ப்பு.
சொன்னவர் ஒளி வடிவமாக அங்கிருந்து மறைந்து போக, இவனோ ஒரு சுழலுக்குள் சிக்கி மறுபிறவி அடைந்தான்.
தொடரும்..…
இதோடு யாழ் இனியன் மகிழினியோட கதை இங்கேயே முடிவு பெறுது. இனிமே தேவைப்பட்டால் அவங்க இரண்டு பேரும் இந்தக் கதை குள்ளே வருவாங்க. மறக்காம லைக் பண்ணுங்க பிரண்ட்ஸ். நன்றி.
