இதுவரை…
கணவன் மனைவியாய் நம் உறவு தொடரும் என வீர் உரைக்க, உயிரே போனாலும் உன் மீது காதல் கொல்ல மாட்டேன் என உரக்கச் சொன்னாள் வைஷூ. மறுநாள் விடியற்காலையில் வைஷூ எதிர் பாராத நபராக வீட்டிற்கு வந்தது யார்..?
இனி…
வைஷூ கொடுத்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாது அதே யோசனையில் தவித்த வீர் அதிகாலை நேரத்தில் தான் உறங்கினான். அதனால் தொடர்ந்து ஒலிக்கும் வீட்டு காலிங் பெல் சப்தம் அவனின் உறக்கத்தை கலைக்கவில்லை.
அறைக்குள் உறங்கிக் கொண்டிருந்த வைஷூ, தூக்கத்தை விட்டு கண்ணை கசக்கியவாரே வெளியே வந்தாள்.
“ம்ஹூ.. கும்பகர்ணன் மாதிரி தூங்குறதை பாரு, இவ்வளவு நேரம் காலிங் பெல் அடிக்குறாங்க எந்திரிச்சு போய் திறந்தால் தான் என்ன..? ”
வாயை சுழித்து கொண்டு கதவை திறக்க, வைஷூவிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்கும் நபர் அங்கிருந்தார்.
வாயிலில் நின்றது ஆசிரமத்தில் தங்கியிருந்த இந்திராணி பாட்டி தான்.
“பாட்டி நீயா..”
“ஆமாடி களவாணி நானே தான், எங்கடி என்னுடைய மீதி பணம் கொடுப்பியா இல்ல ஏமாத்த பார்க்கிறியா..”
“அச்சோ மெதுவா பேசு பாட்டி, அவன் எந்திரிச்சிட போறான்..”
“எவன் எந்திரிச்சா எனக்கென்ன என்னுடைய பணத்தை எடுத்து வை . இல்லன்னா இங்கிருந்து போக மாட்டேன். உன் வீட்டுக்கு போய் கேட்டா உன் அப்பன் நீ வெளியூர் போயிட்டதா சொல்றான். விசாரிச்சு பார்த்தா நீ இங்க வந்து உட்கார்ந்திருக்க..”
பாட்டியின் குரல் கேட்டு எதிர்வீட்டுப் பெண்மணி கதவை திறக்க, வைஷு அதை கவனித்து விட்டாள்.
“இந்த ஆன்ட்டி ஒன்னு, எப்ப பார்த்தாலும் காதை திறந்து வச்சிருக்கு, ஏய் கிழவி முதல்ல உள்ள வா..”
அதுவரை பாட்டி என மரியாதையாக அழைத்தவள் கிழவி என்ற வார்த்தையை பயன்படுத்தி, பாட்டியை உள்ளே இழுத்து, கதவை தாழ்ப்பாள் போட்டாள்.
“என்னடி நானா கிழவி, என்னால இப்பவும் 10 மாடி ஏறி இறங்க முடியும் உன்னால என் பணத்தை திருப்பி கொடுக்க முடியுமா? ஏமாற்றுக்காரி..”
இவர்கள் போட்ட சத்தத்தில் தான் வீர் தன் கண்களை தேய்த்த வண்ணம் விழித்தான்.
“யார் நீங்க எதுக்காக சத்தம் போடுறீங்க..”
“போச்சு இவன் வேற எந்திரிச்சிட்டானா..”
“ஒன்னும் இல்ல வீர், இவங்க எனக்கு தெரிஞ்ச பாட்டி தான் கை செலவுக்கு பணம் கேட்டு வந்திருக்காங்க..”
“யார் கை செலவுக்கு யார் பணம் கொடுக்கிறது. கடன்காரி வாங்கின பணத்தை திருப்பி கொடுடி..”
“ஏய் கிழவி வயசாட்சின்னு பார்க்கிறேன் இல்ல..”
“இல்லனா என்னடி பண்ணுவ மோதி பார்த்து தான் பார்ப்போமே நீயா நானான்னு…”
பாட்டி தயாராக தன் கை முஷ்டியை மடக்கி சண்டைக்கு அழைத்தார்.
“இரண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா.. எதுக்கு இப்படி அடிச்சுக்கிறீங்க.. பாட்டி யார் நீங்க என்ன விஷயமா வந்திருக்கீங்க..”
“நீ யாருப்பா..”
“என்னோட பெயர் வீர், இவளை கல்யாணம் செஞ்சிருக்கேன்..”
“என்ன இவளை கல்யாணம் செஞ்சிருக்கியா, பாவம் உனக்கு வேற பொண்ணு கிடைக்கலையா, இந்த பித்தலாட்டக்காரி தான் கிடைச்சாளா..”
“ஊர் முழுக்க நல்ல பெயர் வாங்கி வச்சிருக்க போல…” என உரைத்தான் வீர்.
“நீங்க அனாவிஷயமா எதுவும் பேச வேண்டாம் என்ன விஷயமா வந்திருக்கீங்கன்னு மட்டும் சொல்லுங்க..” என்றான் வீர்
“இதோ நிற்கிறாளே பித்தலாட்டக்காரி என்கிட்ட 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கினாள். 50,000 தான் திருப்பிக் கொடுத்திருக்காள். இன்னும் ஒன்றரை லட்சம் இருக்கு இதோ தரேன் இதோ தரேன்னு இழுத்தடிக்கிறாள். நானே ஆசிரமத்தில் தங்கி வேலை செஞ்சு சம்பாதிக்கிறேன். இதில் பென்சன் பணத்தையும் மிச்சம் பிடிச்சு சேர்த்து வச்சா, என் நேரம் இவளுக்கு கடன் குடுத்துட்டு அழையுறேன். ..”
“அன்னைக்கு என்னமோ என்கிட்ட ஆசிரமத்தில் இருக்க தெரிஞ்ச பாட்டிக்கு பிறந்தநாள் அவங்களை பார்க்கத்தான் போறேன்னு சொன்ன, இவங்க தான் அந்த தெரிஞ்ச பாட்டியா…” என வீர் கேட்க
“ஓ அப்படி வேற சொல்லி வச்சிருக்காளா இவள்..”
“இங்க பாருங்க நீங்க இரண்டு பேரும் என்னை பற்றி வாய்க்கு வந்ததெல்லாம் பேசாதீங்க, ஒன்னரை லட்சம் தானே, இப்பவே உங்க முகத்தில் விட்டெறியுறேன் இருங்க..”
நேராக அறைக்குள் சென்றவள், மொபைலை எடுத்து வந்தாள்.
“இங்க பாருகெழவி, இப்போதைக்கு பாதி பணத்தை உனக்கு gpay பண்றேன் அடுத்த மாதம் மிச்ச பணத்தை தரேன்..”
ஃபோனை நோண்டியவாறு சவாலாக பேசியவள், தன்னுடைய அக்கவுண்ட் பேலன்ஸ் ஜீரோவாக இருப்பதை பார்த்து வியந்து போனாள்.
“என்ன இது என்னுடைய அக்கவுண்டில் பணமே இல்ல 10 லட்சம் இருந்ததே..!!!”
“பத்து லட்சமா உன் அக்கவுண்டில்..? யாரை ஏமாத்த பார்க்கற ஒழுங்கா என் பணத்தை கொடு இல்ல போலீசை கூட்டிட்டு வருவேன்..”
“அந்த சித்து எனக்கு 10 லட்சம் கொடுத்தான். அது அக்கவுண்டில் தான் இருந்தது. இப்போ ஜீரோ காட்டுது..” என வீர் -ஐ பார்த்து கூறினாள்.
“என்னை கேட்டா..? உன்னோட பார்ட்னர் தானே அவன், கொடுக்கிற மாதிரி கொடுத்துட்டு எடுத்துக்கிட்டானோ என்னமோ…”
இப்போது இந்தக் கிழவிக்கு என்ன சமாதானம் கூறுவது என்று தவித்து நின்றாள்.
“இங்க பாரு கிழவி, இப்போதைக்கு பணம் கையில் இல்லை ஒரு மாசம் டைம் கொடு, சம்பளம் போட்டதும் கொடுத்துடுறேன்..”
“இதைத்தான் நீ பல மாசமா சொல்ற என்னால இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாது நான் இப்பவே போலீஸ் ஸ்டேஷன் போறேன்..”
கிழவியின் அதிரடி முடிவில் வைஷ்ணவி திடுக்கிட்டு போனாள்.
“பாட்டி நில்லுங்க, அவள் தர வேண்டிய பணத்தை நான் உங்களுக்கு தரேன்..” என வீர் கூறினான்.
“நீ எனக்கு தறியா…”
“பாட்டி கேள்விக் கொட்டிக் கொண்டிருந்த சமயமே தன்னுடைய அறை கப்போர்டில் இருந்து ஒரு லட்சம் பணத்தை கொண்டு வந்து பாட்டிக்கு கொடுத்தான்..”
“இதில் ஒரு லட்சம் இருக்கு மீதி 50,000 அடுத்த மாசம் தரேன் உங்களுடைய ஆசிரமம் எங்கே இருக்குனு எனக்கு தெரியும் நானே வந்து கொடுத்துடுவேன்..”
இவளிடமிருந்து ஒற்றை பைசாவை வாங்குவதற்குள் பாட்டிக்கு நாக்கு தள்ளிவிடும். இதில் ஒரு லட்சம் முழுமையாக கிடைத்ததும் அவ்வளவு நிம்மதி வந்தது.
“சரி தம்பி உன் பேச்சை நம்புறேன். அடுத்த மாசம் இப்படி வீடு தேடி வர மாதிரி வச்சுக்காதீங்க..”
பாட்டி அங்கிருந்து கிளம்ப, அப்போது தான் வைஷ்ணவிக்கு நிம்மதி மூச்சே வந்தது.
சல்லை ஒழிந்தது என்ற நிம்மதியோடு அவள் அறைக்கு திரும்ப, வீர் அவளை அழைத்தான்..
“எங்க போற..”
“என்ன கேள்வி இது, ரூமுக்கு போறேன்..”
“முதல்ல எனக்கு காஃபி போட்டு கொண்டு வா..” என்றான் வீர்.
“நானும் பார்த்துட்டு இருக்கேன். ஏசி ஆன் பண்ண சொல்ற, காஃபி போட சொல்ற உன் வீட்டு வேலைக்காரியா நான்…”
“அந்த பாட்டிக்கு கொடுத்த ஒரு லட்சம் உனக்காக சும்மா கொடுக்கலை. இந்த வீட்டில் நீ செய்ய வேண்டிய வேலைக்கு சம்பளம் அது…”
அவனின் பேச்சில் வியந்து போனாள்.
“இனி இந்த வீட்டில் இருக்க எல்லா வேலையும் நீ தான் செய்யணும். அதுக்கு மாதம் 20 ஆயிரம் உனக்கு சம்பளம் . பாட்டிக்கு கொடுக்கிற பணத்தில் இருந்து அதை கழிச்சுக்குவேன்..”
“நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்..”
“அப்படின்னா இப்பவே என்னுடைய ஒரு லட்சம் பணத்தை எடுத்து வை. அது போக அடுத்த மாசம் பாட்டிக்கு கொடுக்க வேண்டிய 50,000 நீயே கொடுத்துடு..”
அந்த பணத்திற்கு வழி இருந்தால் இவள் ஏன் தவித்து நிற்கப் போகிறாள்.
வீர் ஐ பார்த்து முறைத்தவள் வேறு வழியின்றி கிச்சனுக்கு சென்று காஃபியை போட துவங்கினாள்.
முகம் கழுவி பிரஷ் ஆகி ஹாலிற்கு வந்தவனுக்கு இவள் போடும் காஃபியின் மணம் மூக்கை தொலைத்தது. உண்மையில் இவள் தான் போடுகிறாளா இல்லை அதற்குள் ஆன்லைன் ஆர்டர் கொடுத்து விட்டாளா..? என சந்தேகமே வந்தது.
“காஃபி..”
எங்கோ பார்த்தவாறு முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு அவன் கண்ணெதிரே சூடான மணமணக்கும் காஃபியை நீட்டினாள்.
“என்ன இது, என்னமோ ஆடு மாடுக்கு தண்ணி காட்டுற மாதிரி எங்கோ பார்த்துட்டு கொடுக்குற, என் முகத்தை பார்த்து சாந்தமா கொடு..”
“என்ன சொன்ன..? ”
“காஃபியை கொடுக்க சொன்னேன். நீயா எதுவும் கற்பனை செஞ்சிக்காத…”
“இந்தாங்க சார்…😁”
அவனைக் கிண்டல் செய்யும் நோக்கத்தில் பணிவோடு புன்னகைத்துக் கொண்டே பாசாங்காய் குனிந்து கொடுத்தாள்.
அதை வாங்கி பருகியவனுக்கு சுவை நாக்கிலேயே நின்றது. இதே தூளை பயன்படுத்தி தானே இத்தனை நாட்களாக நாமும் காஃபி போட்டோம்.
“சரி மார்னிங் பிரேக்ஃபாஸ்ட் ரெடி பண்ணிடு, நான் போய் குளிச்சிட்டு வரேன்..”
அவன் கூறும் வேலையை கேட்டு பற்களை கடித்தவள், நக்கலாக கேள்வியும் கேட்டாள்.
“அப்படியே என்ன ப்ரேக்பாஸ்ட் செய்றதுன்னு சொல்லிட்டு போலாமே சார், உங்க விருப்பப்படியே செஞ்சு வைப்பேனே…”
“சிம்பிளா போதும், இட்லியும் தக்காளி சட்னியும்..”
தான் கிண்டல் செய்வதை கூட புரிந்து கொள்ளாது மெனுவை கூறிவிட்டு செல்கிறானே.. ! என விழித்துப் பார்த்தாள். ஆனால் வேறு என்ன செய்ய முடியும் அந்த வேலையையும் துவங்க தான் செய்தாள்.
குளித்துவிட்டு, சில ஆபீஸ் சம்பந்தமான கால்களை பேசி விட்டு வெளியே வந்தான். காபியை போல காலை உணவும் மணக்கும் என நினைத்தான். ஒரு துளி வாசமும் எழவில்லை.
‘ என்ன இவள் சமைச்சாளா இல்லையா..”
யோசித்த வண்ணமே டைனிங் டேபிளில் மூடி வைத்திருந்த இரண்டு பாத்திரங்களின் மூடியை திறந்து பார்க்க இட்லியும் சட்னியும் தயாராக இருந்தது.
உணவை உண்ணாமல் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான்.
“சோத்து மூட்டை காலையிலிருந்து ஒரு வேலையும் செய்யாமல் சாப்பிட சரியா வந்து உட்கார்ந்திருக்கிறதை பாரு..”
தயாராகி வெளியே வந்தவள் அவனைக் கண்டதும் முனவிக் கொண்டே வந்தாள்.
“ஏய் களவாணி, நீ என்னை சோத்து மூட்டைனு திட்டினது எனக்கு நல்லா கேட்டுச்சு… ” என்றான்
“பரவால்ல கேட்டுட்டு போகட்டும் உண்மையை தானே சொன்னேன். அவ்வளவு ரோஷம் இருந்தா சாப்பிடாம போ…”
“ ம்… ஏன் பேச மாட்ட எனக்கு இருக்க ரோஷத்துக்கு நீ பண்ண வேலைக்கெல்லாம் பலார்னு பதிலடி கொடுத்திருக்கணும் .தாலி கட்டி வீட்டில் உட்கார வச்சிருக்கேன்ல நீ பேச தான் செய்வ..”
அவளைத் திட்டிக்கொண்டே அவள் உண்பதற்காக தட்டில் உணவை பரிமாறினான்.
‘என்ன இவன் உணவெல்லாம் பரிமாறுகிறான்..! ‘ என வியப்போடு பார்த்தாள்.
அவனுக்கும் தட்டில் இட்லியை பரிமாறி உணவை ருசித்து உண்டான்.
“ பரவாயில்லையே ரொம்ப நல்லா சமைக்கிற, ஏதோ அரைகுறையா தான் ஓட்டுவேன்னு நினைச்சேன். உன் கையால சாப்பிட்டால் ஒரே வாரத்தில் என்னுடைய டயட் எல்லாம் போயிடும் போலையே..”
“நீ பேசுறதை பார்த்தால் தொடர்ந்து நானே தான் சமைக்கணும் போல இதெல்லாம் அநியாயம்..”
“சம்பளம் வாங்கினால் வேலை செஞ்சுதான் ஆகணும்.. ” என்றான்.
உதட்டை சுழித்துக் கொண்டு மறு வார்த்தை பேச முடியாமல் அமைதியாக உண்டாள்.
“நேற்றிலிருந்து நீ போட்ட கண்டிஷன் எல்லாத்துக்கும் நான் சம்மதம் சொல்லிட்டு தான் இருக்கேன். இப்போ நான் சொல்ற ஒரு கண்டிஷனுக்கு மட்டும் நீ சம்மதம் சொல்லணும்..” என்றாள்.
“என்ன கண்டிசன்..?”
😉
