Epi – 32 – காதல் சிறையோ

இதுவரை… 

     திருமணத்தின் மறுநாள் காலை வைஷ்ணவி கண் விழித்த சமயம், அதிர்ச்சி தரும் காட்சியாக ஆசிரமத்தில் இருந்து இந்திராணி பாட்டி வந்திருந்தார். அவரிடம் வைஷூ பெற்ற கடன் தொகை மொத்தத்தையும் கொடுப்பதாக வீர் ஒப்புக்கொண்டான். 

இனி…

     பாட்டிக்கு செலுத்தும் கடன் தொகையை திருப்பி வசூலிக்கும் வகையில் வைஷ்ணவியை வீட்டு வேலைகள் செய்ய வைத்தான் வீர்.

     அன்றைய காலை காஃபி போடுவதில் இருந்து காலை உணவு வரை அவள் முடித்திருக்க, டைனிங் டேபிளில் இருவரும் உணவுடன் நேரம் செலவழித்தனர். 

   “இங்க பாரு வீர், நேற்றிலிருந்து நீ போட்ட கண்டிஷன் எல்லாத்துக்கும் நான் சரின்னு சொல்லிட்டு தான் இருக்கேன்.  இப்போ என்னுடைய இந்த ஒரு கண்டிஷனுக்கு நீ ஓகே சொல்லணும்..” என அவள் உரைக்க 

   “என்ன கண்டிஷன்..” என ஆளுமையோடு கேட்டான்.

  “ உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆன விஷயத்தை ஆபீஸ்ல யார்கிட்டயும் சொல்ல கூடாது..”

    அவள் கூறிய விஷயம் கேட்டு புன்னகைத்தான்.

  “ அப்போ நான் உன் கழுத்தில் தாலி கட்டினப்ப சித்து உடைய வீட்டில் அத்தனை பேர் இருந்தாங்களே அவங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்குமே..”

  “ அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை சித்து ஆபீஸ் ஃப்ரெண்ட்ஸ் யாரையுமே கல்யாணத்துக்கு கூப்பிடலை வந்திருந்த எல்லாருமே உறவுக்காரங்க தான் . ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மூலையில் தங்கி இருக்கிறாங்க..”

   ‘ எல்லாம் விவரமாக தான் தெரிந்து வைத்திருக்கிறாள்..’ என பார்வை நோக்கினான்.

  “ இப்ப எதுக்காக கல்யாண விஷயம் வெளியே தெரியக்கூடாதுனு சொல்ற..”

  “ பின்ன எதிர்காலத்தில் எனக்கு கல்யாணம் நடக்கும் போது உன் கூட கல்யாணம் ஆன விஷயம் வெளியே தெரிய வந்தால், அது என் வாழ்க்கைக்கு பிரச்சனையாகும்ல..”

   “அப்போ வேற ஒரு வாழ்க்கை தேடுறதில் உறுதியா இருக்க..”  என அவன் கேட்க 

  “ஆமா, பின்ன காலம் முழுக்க உன் கூடவே வா இருக்க முடியும். இன்னும் கொஞ்ச மாதம் தானே, நீ அந்த சித்துவை ஜெயிச்சதும் எனக்கு விடுதலை கொடுத்திடு, அத்தோடு விவாகரத்து பத்திரத்திலும் கையெழுத்து போடனும்..”

   “ காலங்காத்தால ஆபீஸ் கிளம்பும் போது அபசகுனமா பேசிட்டு இருக்க..”

   “இதில் அபசகுனம் என்ன இருக்கு எதிர்காலத்தை தான் சொல்றேன்.  எனக்கு நீ செட் ஆக மாட்ட, உனக்கு நான் செட் ஆக மாட்டேன்..”  என்றாள் 

   “ஆமா ஆமா, உன் அளவுக்கு எனக்கு பித்தலாட்டம் பேச வராது. என் அளவுக்கு உண்மையை பேச உனக்கும் வராது கொஞ்சம் கஷ்டம் தான்..”

  தன்னைப் பற்றி அவன் கூறுவது உண்மையாக இருந்தாலும் வெளிப்படையாக பேசுவது பிடிக்கவில்லை அவளுக்கு. 

  “சித்துவை ஜெயிக்கிறதுக்காக மட்டும் நான் உன்னை கல்யாணம் பண்ணலை.  நான் அப்போ சொன்னது தான் இப்பவும் சொல்றேன்.  நான் கட்டுன தாலி உன் கழுத்தில் எதுவரைக்கும் இருக்கணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன்.  அமைதியா சாப்பிட்டு வா..”

  பேசி கொண்டே உணவை வயிறார உண்டவன் கை கழுவ எழுந்து சென்றான்.  அவனின் பேச்சை கேட்ட வைஷ்ணவி யோசனையில் இருந்தாள்.

   ‘அவனுடைய சொத்து கையை விட்டு போயிடக் கூடாதுன்னு தானே என்னை கல்யாணம் பண்ணான். இப்போ என்ன விவாகரத்து தரத்துக்கு இவ்வளவு யோசிக்கிறான்..’

  வீட்டை லாக் செய்து விட்டு இருவரும் லிப்டை நோக்கி நடந்தனர். 

   “என்ன வீர் நேத்து தான் கல்யாணம் ஆச்சு அதுக்குள்ள இரண்டு பேரும் ஆபீஸ்க்கு கிளம்பிட்டீங்களா..”

  “ஆமா ஆன்ட்டி வேலை அதிகமா இருக்கு..”

  ” இந்த பொம்பளைக்கு ஆன்டின்னு கூப்பிட்டா பிடிக்காதே இவன் கூப்பிட்டா மட்டும் அமைதியா இருக்காள்…” என லுக்கு விட்டாள் வைஷு. 

  லிஃப்டு தரைத்தளத்திற்கு வந்தடைந்ததும் வீர் காரை நோக்கி நகர வைஷ்ணவி தனியாய் நடந்து சென்றாள். 

  “ஏய் வைஷு வந்து காரில் ஏறு..”

   “நான் தான் சாப்பிடும் போதே சொன்னேன்ல கல்யாணம் நடந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாதுன்னு..”

   “ஆபீஸ் இருக்க பில்டிங்ல, பல மாடிகள் இருக்கு,  எத்தனையோ கம்பெனிகள் உண்டு. அதில் வீர் உடைய பொண்டாட்டி இவள் தானான்னு எவனும் தனியா வந்து கண்டுபிடிக்க போறது கிடையாது வந்து ஏறு…”

   இவன் பேச்சை இப்போது மீறவும் முடியாது என காரில் ஏறினாள். காரில் ஏறி அமர்ந்தவன் அப்போது தான் தன் அருகில் இருந்தவளின் கழுத்தில் மாங்கல்யம் காணாததை கண்டறிந்தான். 

  “அடிப்பாவி…!  கழுத்துல தாலி கட்டியே முழுசா இரண்டு நாள் கூட ஆகலை அதுக்குள்ள கழட்டி வச்சிட்டியா நீ..”

  “கழட்டி எல்லாம் ஒன்னும் வைக்கலை.  வெளியே தெரியாத மாதிரி அட்ஜஸ்ட் செஞ்சு பின் குத்திருக்கேன்..”

  “உண்மையாவா..! பார்த்தா கழுத்தில் சுத்தமா இல்லாத மாதிரி தான் தெரியுது..” 

  அவனின் சந்தேகப்பார்வையை பார்த்தவள் தன் தோள்பட்டை ஆடைக்குள் இருந்து மேலோட்டமாக கையை விட்டு கயிற்றை வெளியே காண்பித்தாள். 

  நல்ல வேளை இவள் மாங்கல்யத்தை கழட்டவில்லை என நிம்மதி கொண்டான் வீர்.  பிறகு கார் நேராக அலுவலகம் இருந்த கட்டிடத்திற்கு சென்றது. கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தியதும் வீர்- இடம் ஒரு வார்த்தை கூட சொல்லிக் கொள்ளாது அமைதியாக இறங்கி விரைந்து அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றாள். 

  அவளின் அவசரத்திற்கான காரணம் புரிந்தது.  எவரேனும் தன்னுடன் சேர்த்து வைத்து பார்த்தால் கேள்வி கேட்பார்கள் என அவள் விலகிச் செல்கிறாள். 

  அலுவலகம் இருந்த தளத்திற்கு வந்தவள் சற்று தவிப்புடனே உள்ளே வந்தாள். இதுவரை தன் குணத்தை மட்டுமே மாற்றி நடித்தவள் தற்போது தன் திருமண ரகசியத்தையும் மறைத்து நடிக்க வேண்டும் என்று சூழல் உள்ளது. 

  “என்ன வைஷ்ணவி..”

  யோசனையோடு உள்ளே வந்தவளுக்கு விஷ்ணுவின் திடீர் குரல் அச்சத்தை கொடுத்தது. திடிக்கிட்டு திரும்பி பார்த்தாள். 

  “அட நீயா, மெதுவா கூப்பிட மாட்டியா இப்படி கத்துற..” 

  “நான் எதார்த்தமா தான் கூப்பிட்டேன். நீ தான் பயந்து திரும்பி பார்த்த, வீர் சாரும் நீயும் ரொம்ப குளோஸ் ஆகிட்டீங்க போல ஒன்னா கார்ல வந்து இறங்குகிறீங்க..”

  “அதுக்குள்ள பார்த்துட்டானா…!”

    “அது, நான் பஸ் ஸ்டாப்பில் இருந்து நடந்து வந்தேன். அப்போ அவர் லிப்ட் கொடுத்தார்..”

  “சரி அதுக்கு ஏன் உன் முகம் இப்படி தடுமாறுது..”  

 “ நான் நல்லா தான் இருக்கேன். நீ போய் உன் வேலையை கவனி… ”

   அவள் முகத்தில் அடித்தார் போல் பேசுவதையெல்லாம் அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நட்பாக கடந்து செல்கிறான்.

  வைஷூ அவளின் கேபினில் வேலையில் இருக்க, வீர் – இடம் இருந்து வந்த அழைப்பில் அவளின் இன்டர்காம் ☎️ ஒலித்தது. 

“ஹலோ சொல்லு… “என்றாள் 

  “சொல்லு..? வெளிய வந்து வாயை உடைச்சிடுவேன். இது ஆபிஸ். இங்க மரியாதையா சார்னு அழைக்கனும்.” . என மிரட்டினான் வீர்.

  அவன் திட்டியதில் உப்பிய அவளின் உதடுகள் கோவத்தோடு சரி என்றது.

  “ஓகே சார்… ”

  “அது…. என் கேபினுக்கு வா…”

  கட்டளையிட்டவன் அழைப்பை துண்டிக்க , இவளோ உதட்டை சுழித்துக் கொண்டு போனை வைத்தாள். 

  கையெழுத்து வாங்க வேண்டிய பைல் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு அவனின் கேபினுக்குள் நுழைந்தாள். அங்கே வீர் – ன் மரியாதைக்குரிய நபரான ஜான் அங்கிள் அமர்ந்திருந்தார். 

  ‘அச்சச்சோ இந்த ஆளும் இங்க தான் இருக்கானா..’

  உள்ளுக்குள் திக்கென்று இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாது சகஜமாக வந்தாள்.

  வைஷூவை கண்ட ஜான் சாதாரணமாக பேசினார்.

  “ஹாய் வைஷூ, என்ன மீட்டிங்க்கு நீ வரவே இல்லை. இரண்டு நாளா ஆளையும் காணலை..”

  “ஹாய் சார், பர்சனல் லீவில் இருந்தேன்..”

  ‘ம்…. இந்த ஆள் கிட்ட இன்னும் உண்மையை சொல்லல போலையே… ’

  அவள் பார்வை போன போக்கை வீர் கவனிக்க, மேற்கொண்டு பேசினான்.

  “என்ன அங்கிள் இப்போவாது நான் சொல்றதை நம்புறீங்களா… ”

    “நீ சொல்லி நான் நம்பாமா இருப்பேனா.. இருந்தும் வைஷ்ணவியா இப்படினு மலைச்சுப் போயிட்டேன். ஆள் ஏமாறுற வரை ஆட்டத்தை கன்டின்யூ பண்ணுவாள் போல… ”

  ஜான் செய்த கிண்டலில் தான் வைஷ்ணவி உண்மையை புரிந்து கொண்டாள். அனைத்தையும் வீர் கூறி விட்டான் என…. 

  “ஏன் வைஷூ, அந்த சித்து சொன்னா உனக்கு எங்க போச்சு புத்தி இப்படி ஆழம் தெரியாமல் வந்து மாட்டிகிட்டியே… ”

  ஜான் சிரித்துக் கொண்டே எழுந்தார். 

  “சரி வீர், எதாவதுனா என்கிட்ட சொல்லு, கல்யாணத்தை சத்தமில்லாம முடிச்ச மாதிரி குடும்பத்தையும் அமைதியா மெயின்டைன் பண்ணாத, பெரியவன்னு நான் ஒருத்தன் இருக்கேன்.  நல்ல செய்தி வந்தா சொல்லு…”

  “அங்கிள்…? ”

  “ஓகே கிளம்புறேன்… என்னை விரட்டுறதிலேயே குறியா இரு… ”

  அங்கிருந்து கிளம்பிய ஜான் -ன் வித்தியாசமான பேச்சில் வியந்து நின்றாள் வைஷூ.

  “என்ன பார்க்கற, நீ பண்ண காரியத்துக்கு உன்னை திட்டாம பார்த்து பாவம்னு சொல்லிட்டு போறார்னா…? அவருக்கு உன்னுடைய நிலையை பற்றி நல்லா தெரிஞ்சிருக்கு. சரி போய் வேலையை பாரு… ”

  ‘ம் ஹூ… ஆளாளுக்கு வீர் வீர்-னு சீன் காட்டுறாங்க, பயப்படுற ஆளா நான் பார்த்துக்கறேன்..’ 

  மனதில் நினைத்ததை வாய் திறந்து பேசாமல் அமைதியாக வெளியேறினாள். அன்றைய நாள் வேலை அமைதியாக செல்ல,  இரவு வீடு திரும்பும் நேரமும் வந்தது.

  வேலையை முடித்த வீர் வீட்டிற்கு கிளம்ப தயாரா இருந்தான். வைஷூவை பிக்கப் செய்ய கார் பார்க்கிங் ல் காத்துக் கொண்டிருந்தான்.

   அவள் அவனின் காரை கடந்து நடக்க, ஹாரன் அடித்து அழைத்தான்.

   சத்தம் கேட்டு பார்த்தவள், தனக்காக தான் ஹாரன் அடிக்கிறான் என புரிந்து கொண்டவள் யாரேனும் கவனிக்கிறார்களா என பார்த்துக் கொண்டே காரில் அமர்ந்தாள்.

  ” நீ என்ன கள்ளக்காதலனோட  தொடர்பில் இருக்கற மாதிரி பரபரப்பா வந்து உட்காருற. நார்மல் ஆ வர மாட்டியா..” 

  பதிலுக்கு அவள் முறைத்தாள்.

  “நீ சரியான சைக்கோவா இருப்ப போல என்னை எங்கேயும் நகர விடாம உன் கைப்பிடிக்குள் வச்சிக்க பார்க்கற, கண்டிப்பா உன் கூட வாழப் போற பொண்ணு  ரொம்ப பாவம்..”  என்றாள்.

  ” ம்… அப்படியா அதையும் பார்ப்போம்..” 

  அவளிடம் பேசிக்கொண்டே காரை செலுத்தினான் வீர். அதுவரை காம்பௌண்டை ஒட்டி ஓரமாக காத்துக் கொண்டிருந்த ஒரு கருப்பு நிற கார் , வீர்-ன் காரை கண்டதும் ஃபாலோவ் செய்தது. 

   வீர் நேராக ஒரு டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரின் வாசலில் காரை நிறுத்தினான்.  

  “வீட்டுக்கு தேவையான சில பொருள் வாங்க வேண்டியது இருக்கு, அப்படியே உனக்கும் எதாவது தேவைனா வாங்கிக்கோ..” 

   “எனக்கு வேண்டியதை என் காசுலேயே வாங்கிப்பேன்…” 

  வாயை சுழித்துக் கொண்டு இறங்கினாள்.  

    இருவரும் உள்ளே சென்று வாங்க வேண்டிய பொருட்களை தனித்தனியாய் இடம் தேடிக் கொண்டிருந்தனர். இவர்களின் காரை பின் தொடர்ந்து வந்த கருப்பு காரின் கதவு திறக்கப்பட நன்கு உயரம் கொண்ட ஆண்மகன் ஒருவன் இறங்கினான். அவனும் உள்ளே நுழைய நேராக வீர் இருந்த இடத்திற்கு சென்றான். 

  வீர் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்தியிருப்பதை கவனித்தவன், அடுத்ததாய் வைஷ்ணவியை தேடிச் சென்றான்.  அவளும் தனக்கு வேண்டிய பொருளை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருக்க…

  “வைஷூ…” என அழைத்தான் அவன்.

  எதார்த்தமாய் நிமிர்ந்து பார்த்தவளுக்கு பெரும் அதிர்ச்சியாய் போனது. 

  ” நீயா..!!!” 

                                    😉

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page