மௌனத்தால் உடைந்த காதல் -8

தன் தாயைப் பார்த்த ஆதிக்கு வருத்தமாக இருந்தாலும், எதுவும் செய்ய முடியாதக் காரணத்தினால் “வீக் எண்ட்  நான் அவங்களை கூட்டிட்டு வருவேன் ம்மா ” என்றான்.
 

 

” என்னமோ போடா” என்றவருக்கு வருத்தம் தான் ..
 

 

“எல்லாம் சீக்கிரம் சரியாகும் சித்ரா. அதுக்கு முக்கியமா இதை சரி பண்ண வேண்டியது உன் மகனும், நீயும் தான்.. உங்க ரெண்டு பேரோட கையில தான் இருக்கு..” என்று தன் மகனின் கண்ணை ஆழமாகத்தான் பார்த்தார் .
 

 

சீக்கிரம் சரி பண்ணுறேன்னு மருமகளை தனியாக அழைத்துச் சென்றால் மட்டும் போதாது, அதற்காக ஒவ்வொரு அடியையும் அவன் எடுத்து வைக்க வேண்டும். தனக்கு ஒன்றென்றால் எப்பொழுதும் தன் கணவன் வந்து நிற்பான், குரல் கொடுப்பான் என்பதை அவள் மனதில் பதிய வைக்க வேண்டும்.
 

 

ஒரு ஆண்மகனாக, கணவனாக அவனது கடமையும் அதுதானே! என்பதை தன் மகனுக்கும் புரியவைத்தவராக அவனை பார்க்க.
 

 

அவனும் கண் மூடி திறந்தான். வேறு எதுவும் பேசவில்லை வாய் வார்த்தையாக. 
 

 

மறுநாள் காலையில் எழுந்து சென்று கறி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். அவளும் சமையலில் இறங்கி இருக்க, குழந்தைகள் லீவ் என்பதால் அசந்து உறங்கிக் கொண்டு இருந்தனர்.
 

 

எட்டு மணி அளவில் குழந்தைகளை எழுப்பி குளிக்க கூறியவன். “பாட்டி,தாத்தாவை பார்க்க போலாமா ?” என்றான்..
 

 

இருவரும் “சரி” என்று குளித்து முடித்து வர..
 

 

மணக்க மணக்க மட்டன் குழம்பும், சிக்கன் வறுவலும் ரெடி ஆகி இருந்தது.
 

 

அனைவரும் சாப்பிட உட்கார. “இங்க எதுக்கு உட்காரிங்க? அங்க தானே போறீங்க, அங்கே போய் சாப்பிட்டுக்கோங்க..” என்றாள் சுதா.
 

 

தன் மனைவியை பார்த்து லேசாக புன்னகைத்தான் ஆதி. குழந்தைகள் தான் முழித்துக் கொண்டிருந்தனர்.
 

 

அவர்கள் கையில் ஒரு பையை கொடுத்தவள்,” தாத்தாவுக்கு கொடுத்துடுங்க!” என்க.
 

 

தன்னவளை தான் காதலாக பார்த்தான். இப்பொழுது கூட தன் தாய், தந்தைக்காக தானே குழந்தைகளை அங்கு சாப்பிட சொல்கிறாள் என்பதை அறியாதவனா ?அவன்..
 

 

குழந்தைகள் அப்பொழுதும் முழித்தபடி இருக்க. அவர்கள் அருகில் கீழே குனிந்து தலையை கலைத்தவள்..” அங்க உங்களுக்காக தாத்தா சாப்பாடு ரெடி பண்ணி வச்சிருப்பாங்க இல்ல, போய் சாப்பிடுங்க” என்றாள்.
 

 

அதன் பிறகு, குழந்தைகள் சிரிக்க. “சரி போய் விட்டுட்டு வாங்க நேரமாகுது “என்றாள்.
 

 

” சரிடி நான் வந்த பிறகு  சாப்பிடலாம் “என்று அவர்கள் வெளியே சென்ற பிறகு அவள் கன்னத்தில் இதழ் பதித்து கூறிவிட்டு சென்றான் .
 

 

கன்னத்தை தேய்த்தவள் முறைக்க முயன்று  சிரித்துவிட்டாள். அவளது சிரிப்பை பார்த்தவன், தானும் தலையை கோதியப்படி புன்னகைத்துக் கொண்டே குழந்தைகளை தன் தாய் தந்தை இருக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றான் .
 

 

இவர்களின் வருகைக்காக வெளியேவே காத்திருந்தார் சித்ரா. காலையிலே எழுந்து அசைவம் எடுத்து சமைத்து வைத்து ,குழந்தைகள் எப்பொழுது வருவார்கள் என்று கிட்டத்தட்ட ஏழு மணியிலிருந்து காத்துக் கொண்டிருக்கிறார்.
 

 

குழந்தைகள் இருவரும் இறங்கி வேகமாக” பாட்டி !”என ஓடி வர.. இருவரையும் தூக்கி கொஞ்சியவர். “வந்துட்டீங்களா ?”என்றபடி வீட்டிற்குள் அழைத்து சென்றார் .
 

 

“பாட்டியை மன்னிச்சிருடா குட்டிமா!” என்று அன்றைய நினைவில் மன்னிப்பு வேண்ட.
 

 

அவளோ, எதுவும் பேசாமல்” பாட்டி பசிக்குது!” என்றாள்.
 

 

” வாங்க சாப்பிடலாம். உங்களுக்காக தான் காத்துட்டு இருக்கேன்” என்றவரும் வேகமாக தன் கணவனையும் அழைத்து மகனையும் உட்கார வைத்து அனைவருக்கும் பரிமாற..
 

 

” இல்லமா எனக்கு வேணாம்” என்றான்.
 

 

குழந்தைகள் இருவரும் தன் தந்தையைத்தான் பார்த்தனர். ‘அம்மா எல்லாரையும் சாப்பிட சொன்னாங்க ?’என்ற கேள்வி மனதிற்குள் உதிர்த்தாலும், வெளியே கேட்கவில்லை.
 

 

” இரண்டு இட்லி சாப்பிட்டா குறைஞ்சிட மாட்டடா” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே, அவனது போன் ஒலி எழுப்பியது.
 

 

எடுத்து காதில் வைத்தவன். “சொல்லு சுதா!” என்க.
 

 

” நான் சாப்பிட்டேன். எனக்கு பசிச்சு, நீங்களும் அங்கேயே சாப்பிடுங்க” என்று கூறியவள் வேறு எதுவும் பேசாமல் வைத்து விட்டாள்.
 

 

தனக்காகத்தான் இப்பொழுதும் யோசிக்கிறாள் என்பதை உணர்ந்தவன்.” இரண்டு இட்லி மட்டும் வை மா!” என்றான்.
 

 

மகனைப் பார்த்து மெச்சிக்கொண்டார் நேசன். சித்ரா  முறைத்து விட்டு, எதுவும் பேசாமல் மகனுக்கு மூன்று இட்லியை வைத்தவர்.
 

 

குழந்தைகளுக்கு குழம்பு ஊற்ற போக..” தாத்தா இந்தாங்க அம்மா உங்களுக்கு கொடுத்தாங்க!” என்று மகி தாத்தாவின் அருகில் அந்த பையை நகர்த்தி வைக்க .
 

 

“என்னடா?”
 

 

“அம்மா உங்களுக்கு குழம்பு கொடுத்து அனுப்பிச்சாங்க,” என்றவுடன், திறந்து பார்த்தவர். முகர்ந்து பார்த்ததும் வாசனை மூக்கைத் துளைக்க, நாக்கில் எச்சில் ஊற  உச்சி கொட்டினார்.
 

 

“இங்க நான் எம்புட்டு வச்சிருந்தாலும் உங்களுக்கு அப்படியே ஆகாதே… இப்போ மருமகள் கொடுத்து அனுப்பியதை பார்த்த உடனே வானத்தில் பறப்பீங்களே!” என்று முகத்தை வெட்டித் திரும்பினார் சித்ரா.
 

 

நேசன் சத்தமாக சிரித்துக் கொண்டவர். எதுவும் பேசவில்லை. ஆனால், சித்ரா தன் கணவனுக்கு மருமகள் கொடுத்து அனுப்பிய குழம்பை தான் ஊற்றினார்.

 

ஒரு வாய் வைத்து ரசித்து ருசித்தவர், “உனக்கும் சேர்த்து தாண்டி இருக்கு… வேணும்னா சாப்பிடு, வேணாம்னா போ. யாரு வேணாம்னு சொன்னா?” என்றவர் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தார்.
 

 

சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் இருந்தவன்.” சரிப்பா பசங்க இங்க  இருக்கட்டும். ஈவினிங் வந்து நான் கூட்டிட்டு போறேன். எனக்கு கொஞ்சம் வெளிய வேலை இருக்கு “என்றான்.
 

 

தாய் ,தந்தை இருவரும் எதுவும் கூறவில்லை. குழந்தைகளிடமும் “பார்த்து பத்திரமா இருக்கணும். தாத்தா, பாட்டியை டிஸ்டர்ப் பண்ண கூடாது ஓகேவா!” என்க..
 

 

இருவரும் புன் சிரிப்புடன்” சரி “என்று தலையசைக்க.
 

 

” புள்ளைங்க என்னடா எங்களை தொந்தரவு பண்ணிட போகுது. நீ போடா !”என்று மகனின் தோளில் லேசாக ஒன்று போட்டவர். குழந்தைகளுடன் ஐக்கியமாகிவிட்டார். 
 

 

அவனும் எதுவும் பேசாமல் வீட்டிற்கு செல்ல, அவள்  சாப்பிடாமல் தான் இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் .அவள் ரூமில் துவைத்த துணிகளை மடித்து வைத்துக்கொண்டு, வேலையாக இருக்க .
 

 

அவளை அழைத்துக்கொண்டு வந்து உட்கார வைத்தவன்.” முதல்ல சாப்பிடு அப்புறமா துணி மடிக்கலாம் “என்று கூறி அவளுக்கு இட்லி எடுத்து வைத்தவன்.. ஊட்டி விட போக..
 

 

” இல்ல எனக்கு வேணாம்.”
 

 

” ப்ளீஸ் டி அம்மு !” என்றவன்  கண்களாலே கெஞ்ச.
 

 

எதுவும் பேசாமல் வாய் திறந்தாள். அவளுக்கு ஊட்டி விட்டபடியே இருக்க .
 

 

“நீங்க சாப்டீங்களா ?இல்லையா?” என்றாள், யோசித்து தான் கேட்க செய்தாள்.
 

 

” சாப்பிட்டேன். இருந்தாலும் ,பசிக்குது “என்று அவன் கூற.
 

 

அவன் ஊட்டி முடியும் வரை அமைதியாக இருந்தவள். அதன் பிறகு, அவனுக்கு இரண்டு இட்லி போட்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். 
 

 

” ஊட்டி விடலாம். நான் எதுவும் சொல்ல மாட்டேன்” என்றான் குறும்புடன்.
 

 

அவனை முறைப்புடன் பார்த்தவள். எதுவும் பேசாமல் நகர போக ..
 

 

வேகமாக அவளைப் பிடித்து இழுத்தவன்.”ஊட்டி விட வேணாம். பக்கத்துல உட்காருடி .எனக்கு நீ பக்கத்துல இருந்தாலே போதும்!” என்றவன் அவளை பார்த்துக் கொண்டே சாப்பிட செய்தான்.
 

 

“பசங்க ஈவினிங் தான் வருவாங்க அம்மு. வெளியே போகணுமா ?ஏதாவது வாங்கணுமா ?இல்ல ரெஸ்ட் எடுக்குறியா?”  என்றான் கேள்வியாக,
 

அவளோ,

கண்களை சுழல விட்டபடி இருக்க.
 

திருதிருனு முழிக்காதடி என்னமோ பண்ணுது உள்ளுக்குள்ள ..”என்றான் காதலாக.
 

 

வேறு புறம்  திரும்பி தன் உள்ளத்தை மறைக்க முயன்றவள். “எதும் தேவையில்லை. எல்லாம் இருக்கு ,நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்தடுத்த வேலையை பார்க்கிறேன்”
 

 

” சரி அப்போ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் வெளியே போயிட்டு வரட்டா, கதவை லாக் பண்ணிக்கோ”
 

 

” சரி “என்று தலையசைக்க 
 

 

அவனும் வெளியே சென்று விட்டான்.
 

 

குழந்தைகள் இருவரும் சிறிது நேரம் ஹாலில் விளையாடியவர்கள்.” பாட்டி எங்க ரூமுக்கு போக முடியாதா?” என்று கேட்க.
 

 

” அந்த சாவிய தான் உங்க அப்பா பூட்டி கையோட எடுத்துட்டு போயிட்டானே! அங்க எப்படி போவீங்க ?”என்றார் நேசன்.
 

 

அப்போது,” இருங்கடா!” என்று வேகமாக தங்களது அறைக்கு  சென்ற சித்ரா அங்கிருந்து ஒரு சாவி எடுத்துக்கொண்டு வந்து கதவைத் திறக்க.
 

 

“உன்கிட்ட ஏதுடி சாவி. உன்கிட்ட கொடுத்துட்டு போனானா?” என்று கேள்வியாக பார்க்க.
 

 

” என்கிட்டயும் ஒரு சாவி இருக்குன்றத மறந்துறாதீங்க அப்பப்போ. எனக்கு அந்த ரூம்ல எந்த வேலையும் கிடையாது. இப்ப பசங்க கேட்டாங்கன்னு தொறந்துவிடுறேன். இதுக்கு முன்னாடி நீங்களும் வேலைக்கு போனதுக்கப்புறம் அதை திறந்து அங்குள்ள  எதையும் தூக்கிட்டு போக மாட்டேன் “என்று வெடுக்கென கூறியவர்.
 

 

பிள்ளைகளுக்கு கதவைத் திறந்து விடவும். குழந்தைகள் இருவரும் ,”கொஞ்ச நேரம் அங்க விளையாடிட்டு இருக்கோம் பாட்டி!” என்று ஓடினர்.
 

 

” சரிடா உங்களுக்கு பிடிக்கும்னு மீன் வாங்கி வச்சிருக்கேன். வறுவல் போட்டு தரேன்” என்று கூறியபடி கிச்சனுக்குள் நுழைந்தார்.
 

 

குழந்தைகளை பார்த்துக் கொண்டே, டிவி பார்த்தபடி ஹாலில் உட்கார்ந்து விட்டார் நேசன். 
 

 

மதிய நேரத்தை தொட்டு இருக்க. அப்பொழுதுதான் உதயா வீட்டிற்குள் வந்தாள்.
 

 

தாய் கிச்சனில் இருப்பதை பார்த்துவிட்டு, தந்தை  டிவி பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்தபடி , வீட்டுக்குள் நுழைந்தவள் கண்ணில் முதலில் பட்டது என்னவோ தனது அண்ணனின் அறை கதவு திறந்திருப்பது தான்.
 

 

” அண்ணன் வந்திருக்கானா? ரூம் கதவு திறந்து இருக்கு !”என்ற குரலைக் கேட்டு, கிச்சனிலிருந்து எட்டிப் பார்த்தவர் .
 

 

“ஆமாண்டி அண்ணா பிள்ளைகளை விட்டுட்டு போயிட்டான். பசங்க மட்டும் இருக்காங்க, உள்ள விளையாடிட்டு இருக்காங்க, போய் பாரு!” என்று கூற.
 

 

தன் அண்ணன் பிள்ளைகளின் மீது பாசம் பெரிதாக இல்லாமல், “என்ன பசங்க வந்திருக்காங்களா?” என்றவள் “ரூம் கதவு அண்ணன் தொறந்து விட்டுச்சா?” என்றாள் அடுத்த கேள்வியாக, 
 

 

“இல்லடி, என்கிட்ட ஒரு சாவி இருந்துச்சு, அத வச்சு திறந்தேன்” என்று கூற, 
 

 

“இந்த சாவி இவ்வளவு நாள் உன்கிட்ட இருந்துச்சுனு நீ என்கிட்ட மூச்சே விடல”
 

 

அவரும் ,” உன்கிட்ட எதுக்குடி நான் மூச்சு விடனும் . அந்த ரூம் கதவை திறக்க கூடாதுன்னு தானே அவன் பூட்டிட்டு போனான்.”
 

 

“இப்ப மட்டும் திறந்துவிட்டு இருக்க?”
 

 

“என் பேர புள்ளைங்க கேட்டுச்சு.

 

அந்த புள்ளைங்களுக்கு அந்த ரூம்ல உரிமை இருக்கு. அதனால திறந்து விட்டேன். உனக்கும், எனக்கும் அந்த ரூம்ல எந்த வேலையும் இல்ல “என்றார்  தன் மகளின் பேச்சு பிடிக்காமல், புடவை முந்தியை இடுப்பில் சொருகிக் கொண்டு பசங்களை சாப்பிட அழைக்க ரூமுக்கு செல்ல. 
 

 

” தோ வரோம் பாட்டி!” என்றபடி வந்தனர் .
 

 

வெளியில் வந்த இருவரும்,அங்கு உதயா இருப்பதை பார்த்து விட்டு, பேந்த பேந்த விழித்தபடி

 

இருக்க .
 

 

“நீங்க வாங்கடா” என்று கூறியபடி டைனிங் டேபிள்  அருகே அழைத்துச் சென்று உட்கார வைத்தார்.
 

 

“பார்ரா! இவங்க வந்து இருக்காங்கன்னு சிக்கன், மட்டன் மீன் வறுவல். ஆனா, நான் வந்தா ஒன்னும் பெருசா இருக்காது.. பழைய கஞ்சியை ஊத்துற கனக்கா தான் இருக்கும் “
 

 

“ஏன் நீ வரும்போது உன் அம்மா உனக்கு எதுவும் செஞ்சு போட்டதே இல்லையோ ?வர போக இருந்தா பரவால்ல ,பொழுதுக்கும் இங்கவே குத்த வச்சு உட்கார்ந்திருந்தா என்ன இருக்கோ ?அதுதான் போடுவாங்க” என்ற நேசன் சுருக்கென்று வார்த்தையால் தைக்க.
 

 

” என்னப்பா நான் இங்க தினமும் வருது பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லுங்க  இப்படி முகத்துல் அடிச்ச மாதிரி பேசாதீங்க?”
 

 

” முகத்தில் அடிச்ச மாதிரி எல்லாம் பேசல. நேரா தான் சொல்றேன். பொண்ண கட்டிக் கொடுத்த பிறகு, புருஷன் வீட்டில் வாழ்றதுதான் அழகு, வரலாம் போலாம் தப்பு கிடையாது, இப்போ கூட அண்ணன் பிள்ளைங்க இத்தனை நாள் கழிச்சு வந்திருக்காங்க. பாசமா பிள்ளைகளை நீ தேடிப் போய் எப்படி இருக்கீங்க ?என்ன பண்றீங்க ?எப்படி படிக்கிறீங்கன்னு ?கேட்கல .ஆனா, அந்த ரூம் ஏன் திறந்து இருக்குன்னு கேட்டுட்டு உன் அம்மா கிட்ட போற? நீ பேசின பேச்சு ,உன் அம்மாவுக்கே பிடிக்காம உள்ள போய்ட்டா “என்று கூற.
 

 

தன் தாயை முறைத்தாள்.
 

 

அவர் எதுவும் பேசாமல் பேரப்பிள்ளைகளுக்கு ஊட்டி விடுவதில் மும்மரமாக இருக்க.
 

 

” தனியாக தான் போயிட்டான் இல்ல? அப்புறம் என்ன ?புள்ளைங்களை மட்டும் வந்து இங்க விட்டுட்டு அவன் அங்க சந்தோஷமா இருக்கணுமோ? இல்ல, அங்க ஒன்னும் வாங்கி போட துப்பில்லாம பிள்ளைகளை கொண்டு வந்து விட்டுட்டானா ?”என்றவுடன் வாய் அருகே கொண்டு போன சாப்பாட்டை இருவருமே கீழே வைத்து விட்டனர் .
 

 

கையை ஓங்கிக் கொண்டு வந்தார் சித்ரா.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page