இதுவரை…
தன் தந்தையை சந்திக்க செல்வதாக கூறிவிட்டு வைஷ்ணவி அந்த மர்ம நபரை சந்திக்க சென்றிருக்க, இரவு நேரம் நெருங்கியும் அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான் வீர்.
இனி…
இரவு எட்டு மணி அளவில் வீர்-ன் வீட்டு கதவு திறக்கப்பட வைஷ்ணவி தான் உள்ளே வந்தாள்.
அவன் அமர்ந்திருப்பதை கண்டும் காணாதது போல் அறைக்குள் அவள் நுழைய, கையைப் பிடித்து தடுத்தான்.
“என்ன ராத்திரி சாப்பாடு செய்ய நேரம் ஆகிருச்சா, கடையில் இருந்து சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன் போய் கொட்டிக்கோ..”
அவள் கூறிய வார்த்தை கேட்டு, கோவத்தோடு பிடித்திருந்த அவளின் கை மணிக்கட்டை இறுக்கினான்.
“ஆ.. வலிக்குது, என் கையை விடு..”
“என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது. காலையில் வீட்டை விட்டு வெளியே போனவள், இப்ப தான் வர இதுவரைக்கும் பண்ண எந்த அழைப்புக்கும் பதில் இல்லை. லேட்டா வந்திருக்க, கேள்வி கேட்டா போய் கொட்டிக்கோன்னு சொல்ற, என்ன அர்த்தம் இதுக்கெல்லாம்..”
“ம்… என்கிட்ட உன்னுடைய லிமிட் இவ்வளவு தான்னு அர்த்தம். நான் எங்க போறேன் வரேன்னெல்லாம் நீ தலையிடாத..”
“அப்படிலாம் உன்னை விட முடியாது. காலையில் நீ வீட்டில் இருந்து கிளம்பின கொஞ்ச நேரத்தில் உன் அப்பா வந்திருந்தார். உன்னை பார்க்க தான் வந்தார். இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட நான் ஆபீஸ்ல இருந்து உன் அப்பாவை பார்த்துட்டு தான் வரேன் நீ இப்ப வரைக்கும் அவரை சந்திக்கவே இல்லை. காலையிலிருந்து எங்க போயிருந்த..”
“என்ன வேவு பாக்குறியா மனுசனா நீ எல்லாம் .சைக்கோ மாதிரி நடந்துக்கற என் கைய விடு..”
அவனிடமிருந்து கையை உதறிக் கொண்டு உள்ளே சென்றாள்.
ஆனால் வீர் விடுவதாக இல்லை தொடர்ந்து வினா எழுப்பினான்.
“நீ பொய் பேசிட்டு அதை மறைக்கிறதுக்காக என்னுடைய குணத்தை தப்பா சொல்லாத எங்க போயிட்டு வந்த..”
“அதைப் பத்தி தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் உனக்கு கிடையாது. நான் இந்த வீட்டில் தங்கனும், இந்த தாலி என் கழுத்தில் இருக்கணும்னு தானே நீ சொன்ன, மத்தபடி நான் போறது வர்றதெல்லாம் நீ கண்டுக்க கூடாது..”
“நான் ஒன்னும் உன் கழுத்தில் பொம்மையான மஞ்சள் கயிற்றை கட்டலை. நேரம் பார்த்து குறிச்சி வச்ச முகூர்த்தத்தில் தாலி கட்டிருக்கேன் உன்னுடைய புருஷன் நான்..”
“ஒரு பொண்ணு ஏத்துக்கிட்டா தான் எதிரில் இருக்கிறவன் புருஷன் இல்லாட்டி வெறும் மண்ணு தான்..”
“உன் வார்த்தை ரொம்ப நீளுது, இதுவரை உன் அப்பாவுடைய பொறுப்பில் நீ பொறுப்பில்லாம தான் இருந்த, இனிமேலாவது ஒழுக்கமா இரு யாரை போய் பார்த்துட்டு வர..”
நேரடியாக அவன் விஷயத்திற்கு வந்ததும், வைஷுவிற்கு சற்று திக்கென தான் இருந்தது. ஆனால் இதெல்லாம் இவனுக்கு எப்படி தெரியும்..!
“அப்போ நீ என்னை வேவு பார்த்துட்டு தான் இருக்க, நான் யாரை போய் பார்த்துட்டு வந்தேனும் உனக்கு நல்லா தெரிஞ்சிருக்குமே அப்புறம் ஏன் கேட்கற…”
தன்னுடைய ஹேண்ட் பேக்கை படுக்கையின் மீது வைத்து விட்டு எதார்த்தமாய் திரும்பி நடந்தாள். அவளின் கையை இறுக்கி பிடித்து தன்னை பார்க்க வைத்தான் வீர்.
“என் கோபத்தை அதிகம் கிளறுற நீ, கொஞ்சமாவது அக்கறை இருக்கா உனக்கு. இந்த காலத்தில் ஒரு ஆண்மகன் வெளியே நடமாடுறதே அச்சமான விஷயம். ஒரு பொண்ணு நீ காலையிலிருந்து எங்க போன, என்ன பண்றனு வீட்ல யாருக்கும் சொல்லாம அப்படி என்ன ரகசியமா உனக்கு வேலை இருக்கு..”
“ஒரு ஆம்பளைக்கு பாதுகாப்பு இல்லைனு இன்னொரு ஆம்பளை சொல்றது வெட்கமான விஷயம்…” என்றாள்.
“ஆமாடி வெக்கப்பட வேண்டிய விஷயம் தான்.. எங்க தலையெழுத்து தெருவுல போற பொண்ணுங்களை நம்ம குடும்பத்தில் ஒருத்தியா பார்க்கிற ஆண்களும் இருக்காங்க, குடும்பத்தில் இருக்கிற பெண்களை படுக்கையறைக்குள் வலுக்கட்டாயமா இழுக்குற ஆண்களும் இருக்காங்க, அவங்களை திருத்த யாரும் வர முடியாது. அவனுங்களா திருந்தினால் தான் உண்டு. அதை பற்றி இப்ப பேசி பிரயோஜனம் இல்லை. நீ என்கிட்ட என்னமோ மறைக்கிற நேத்து நைட் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் உன்னை சந்திக்க வந்தது யாரு..”
அந்த நபரைப் பற்றி விசாரித்ததும் வைஷு அவனிடமிருந்து தன் கையை விடுவித்து கொண்டாள். வீர்-ன் முகத்தை நேராக பார்க்க முடியாமல் மறு புறமாக திரும்பினாள்.
“உன்னைத் தான் கேட்டேன். பதில் சொல்லு ..நேத்து நைட்டு நாம சாப்பிட்டு இருக்கும் போது உனக்கு போன் பண்ணது அவன் தானே, இன்னைக்கு காலையில் கூட அவனை பார்க்கத்தான் போனியா.. ”
“இங்க பாரு, நான் யார் கூட பேசுறேன், யாரை பார்க்கிறேன்னு நீ தெரிஞ்சிக்கனும்னு அவசியம் இல்லை நான் எந்த தப்பும் செய்யலை..”
வைஷூ பொறுமை இழந்து கத்தினாள்.
“நீ தப்பு செஞ்சிருக்கேன்னு நான் சொல்லலை, எதுக்காக இப்படி மூடி மறைக்கற…”
“அதை உன்கிட்ட எதுக்கு சொல்லணும். நீ யார் எனக்கு..? என்னோட பிரச்சனையை நானே பார்த்துக்கிறேன் நீ தலையிடனும்னு அவசியம் இல்லை..”
“இன்னொரு முறை இப்படி எடுத்தெறிஞ்சு பேசின அரை தான் விழுகும். ஒழுங்கா விஷயம் என்னன்னு சொல்லு, எதுக்காக அவனை பார்க்க போன இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்த..”
“நீ கேக்குறதை பார்த்தா நான் அவன் கூட தவறான உறவில் இருந்த மாதிரி பேசுற, நானே அவன் கிட்ட மாட்டிகிட்டு எப்படி தப்பிக்கலாம்னு யோசிக்கிறேன் போயும் போயும் உன்னுடைய உதவி எல்லாம் எனக்கு தேவையில்லை என் பிரச்சினையை நானே பார்த்துக்கறேன்..”
“அவன் உனக்கு தொந்தரவு கொடுக்கிறானா அப்படி என்ன விஷயம் என்கிட்ட சொல்லு..”
அவன் மீண்டும் துருவி துருவி கேட்டுக் கொண்டே இருப்பதில் எரிச்சல் அடைந்தாள்.
“ம்ஹூ… உனக்கெல்லாம் ஒரு தடவை சொன்னா புத்தி வராதா, இப்படி இருக்க.. உன்னை மாதிரி தான் உன் அப்பாவும் உங்க அம்மாவை தொந்தரவு பண்ணிருப்பாரு. அதனால தான் அவங்க பாதியில் விட்டுட்டு போயிட்டாங்க..”
அவள் உரைத்த வார்த்தைகளில் கோபம் கொண்டவன் கட்டுக்குள் வைத்திருந்த நிதானத்தை இழந்து அரைந்து விட்டான்.
அவன் அடித்த வேகத்தில், அரையை வாங்கியவள் படுக்கையின் மூலையில் இடித்து தரையில் தவறி விழுந்தாள்.
அவசரப்பட்டு கை ஓங்கியதை நினைத்து தன் நெற்றியில் அடித்துக் கொண்டவன், எதார்த்தமாய் அவளை தட்டி எழுப்பினான்.
“வைஷு எந்திரி, sorry தெரியாம அடிச்சுட்டேன். நீ ஏன் அப்படி எல்லாம் பேசின..”
அவளின் தலை மறுபுறமாக திரும்பி இருந்தது மயக்கத்தில் இருக்கிறாளோ என நினைத்து அவளின் தலையை கையில் ஏந்த நெற்றியில் பட்ட காயத்தில் ரத்தம் சிந்துவதை கண்டான்.
“வைஷு, வைஷூ எந்திரி..”
உடனே அறையில் இருந்த வாட்டர் பாட்டில் எடுத்து தண்ணீரை முகத்தில் தெளித்தான். அப்போதும் எந்த அசைவும் இல்லை.
“வைஷு எந்திரி என்ன ஆச்சு உனக்கு..”
இதற்கு மேல் தாமதிக்க கூடாது என உடனே அவளை அள்ளி தூக்கி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.
கார் பார்க்கிங் அடைவதற்குள்ளேயே அவனின் மனம் அடித்துக் கொண்டது . பதற்றத்தோடு அவளை காரில் படுக்க வைத்த பிறகு வேகமாக வாகனத்தை ஓட்டினான். குறிப்பிட்ட சில நிமிடங்களில் மருத்துவமனை அடைந்திருக்க உடனே அவளை மருத்துவமனைக்குள் தூக்கிச் சென்றான்.
அட்மிஷன் போட்டு சிகிச்சை துவங்கியிருக்க, அப்போது தான் அவனின் அத்தை நீலாவதியிடம் இருந்து அழைப்பு வந்தது.
போனை கையில் ஏந்தியிருந்தவனுக்கு கைகள் நடுங்கியது. அவளை அடித்த விசயம் அத்தைக்கு தெரிந்திருக்குமோ என்ற பயமும் எழுந்தது. அதான் எதிர்வீட்டு பெண் ஒருவர் வீர் -ன் வீட்டு வாசலை கண்காணிப்பதையே குறியாக வைத்திருக்கிறாரே..
யோசனையிலேயே அவன் முதல் அழைப்பை தவற விட மீண்டும் அழைத்தார். இம்முறை அழைப்பை ஏற்றான்.
“ஹலோ… சொல்லுங்க அத்தை..”
“என்ன வீர் வேலையில் இருந்து வீட்டுக்கு வந்துட்டிங்களா..? ”
“வந்துட்டோம் அத்தை… ”
“சரி வைஷூ கிட்ட போனை கொடு…”
“வைஷூ கிட்டயா, அவள்…..”
“என்ன இழுக்கற, இரண்டு பேரும் வீட்ல தானே இருக்கிங்க..”
“ஆமா அத்தை, வீட்ல தான் இருக்கோம். வைஷூ வேலையில் இருந்து வந்த அதே டயர்டில் இப்போ தான் டின்னர் முடிச்சாள். சாப்பிட்டதும் அசதியில் தூங்க போயிட்டாள்..”
“பாவம்டா அந்த பொண்ணு, தனியா எல்லா வேலையும் அவளையே செய்ய வைக்காத, நீயும் ஒத்தாசையா இரு… ”
“ம் சரிங்க அத்தை, நான் பார்த்துக்கறேன்..”
“சரி நீயும் போய் தூங்கு, நான் காலையில் கால் பண்றேன்..”
மீண்டும் காலையில் வேறு அழைப்பார்களா..? என்ற கேள்வியோடு அழைப்பை துண்டித்தான் வீர். காலை கட் செய்த வேலை மருத்துவரும் வெளியே வந்தார்.
அந்த மருத்துவர் வேறு யாரும் இல்லை. வீர் -ன் நண்பன் சரண் தான்.
“டேய் வீர், என்ன நடந்துச்சு…”
எதிரில் இருப்பவன் நண்பனாக இருந்தாலும் ஒரு பெண்ணை கை நீட்டி அரைந்ததை ஒப்புக் கொள்ள தைரியம் வரவில்லை.
“உன்கிட்ட இருந்து இப்படியொரு டொமஸ்டிக் வைலன்ஸை (குடும்ப வன்முறை) நான் எதிர்பார்க்கலை. இதே வேற யாராவதா இருந்தா முதலில் போலிஷ்க்கு தான் சொல்லிருப்பேன். உன் கை ரேகை அப்படியே வைஷ்ணவியோட கன்னத்தில் இருக்கு..”
“இல்லடா இன்னைக்கு காலையில் வெளியே போனவள் லேட்டா தான் வீட்டுக்கு வந்தாள். எங்க இருக்காள் என்ன பண்றாள்னு தெரியாம தவிச்சு போயிருந்தேன். ஆனால் வீட்டுக்கு வந்தவள் சரியா பதில் சொல்லாம என் அப்பாவை பற்றி தப்பா வேற பேசுனாள், கொஞ்சம் எமோஸ்னல் ஆகிட்டேன்..”
“இங்க பாரு வீர், எவ்வளவு கோவம் வந்தாலும் அந்த சமயத்தில் உடனே முடிவு எடுக்க கூடாது. அது கண்டிப்பா தப்பா தான் போய் முடியும்..”
“Sorry டா….”
“உள்ள இருக்க உன் பொண்டாட்டி கிட்ட போய் sorry கேளு, எதுக்கும் கொஞ்சம் பணிவா பேசு, அவள் போலிஷ்ல கம்ளைண்ட் கொடுத்தா என்னால தடுக்க முடியாது..”
வீர் மருத்துவ அறைக் கதவை திறந்து உள்ளே சென்ற சமயம், இடது நெற்றியில் பட்ட காயத்திற்கு மருத்துவம் பார்த்து லேசாக போட்ட கட்டுடன் டயர்டாக அமர்ந்திருந்தாள். அவளை கவனித்துக் கொண்ட செவிலியர் அறையில் இருந்து வெளியேறும் வரை காத்திருந்தான் வீர்.
பிறகு பேசினான்.
“Sorry வைஷூ…”
அவன் கூறிய வார்த்தைக்கு முகத்தை திருப்பாமல் கண்களால் மட்டுமே அவனை கூர்மையாக முறைத்தாள்.
“நீங்க தான் எனக்கு ஓனர், நான் உங்களுக்கு அடிமை, எவ்வளவு அடிச்சாலும் வாங்கிக்கனும், சொல்ற வேலையெல்லாம் செய்யனும், எதிர்த்து பேசினது என் தப்பு தான். நீங்க தான் என்னை மன்னிக்கனும்..”
“அப்டிலாம் பேசாத வைஷூ…”
அவன் சமாதானமாக பேச துவங்கிய பாவனையிலேயே அழ ஆரம்பித்து விட்டாள்.
“வைஷூ, வைஷூ இப்ப ஏன் அழுகற, நான் இனி இந்த மாதிரி நடந்துக்க மாட்டேன்..”
அவன் தவிப்போடு அவளை நெருங்க, தன்னுடைய பொய்யான கண்ணீர் கன்னம் வழிவது போலும் அதை துடைப்பது போலும் தேம்பி நாடகம் ஆடினாள்.
‘மவனே என்னையே அடிக்கறியே உன்னை என்ன பண்றேன் பாரு..’
😉
