மயக்கம் தயக்கம் 10

திவ்யா தனது அறையில் அமர்ந்துகொண்டு அலுவலக வேலைகளை செய்துக்கொண்டிருருந்தாள். தீபன் அவனுக்கான அறையில் அமர்ந்து கொண்டு வரைந்து கொண்டிருந்தான். இருவரும் ஒருவர் விஷயத்தில் இன்னொருவர் தலையிடுவதில்லை என்பதை வெகு தீவிரமாக கடைப்பிடித்து வந்தார்கள். தீபனுக்கு திவ்யாவைத் தவிரவும் சில பெண் நண்பிகள் உண்டு.அது திவ்யாவுக்கும் தெரியும். ஏற்கனவே அவனுடன் நட்பில் இருந்த நெருக்கமான பெண் அவனது விஷயஙங்களில் தலையிடுவது பிடிக்காததாலும் , இவனை தனது கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி செய்ததாலும் அவளை பிரிந்து விட்டான்.

இப்போது கடந்த இரண்டு வருஷங்களாக திவ்யாவும்  தீபனும் வீடு எடுத்து தங்கியிருக்கிறார்கள்.  சரியான வார்த்தையை உபயோகிக்க வேண்டும் என்றால் லிவ் இன் . முக்கியமான விஷயம் உண்டு.அது திவ்யா  தனது முன்னாள் கணவனை பிரிந்து வருவதற்கு முக்கிய காரணம் “தான் “என்ற விஷயம் அடிபட்டு போவதாக உணர்ந்தது தான்.

ஆரம்பத்தில் காதலில் திளைக்கும் நாட்களில்,”நீ நானாக வேண்டும்,நான் நீயாக வேண்டும் “என்றெல்லாம் பித்தம் தலைக்கு ஏறி பிதற்றிய நாட்கள் கானல் நீராய் எங்கோ ஓடிக்கொண்டு இருக்கிறது.

“காதலா” என்று ஆச்சர்யமாக யாரும் கேட்காதீர்கள். ஆமாம்,காதலே தான்.அவளது முன்னாள் கணவன் அவளால் திகட்ட திகட்ட காதலிக்கப் பட்டு,திருமணம் செய்து கொண்டவன் தான். எப்போது திவ்யா தனது சுதந்திரம் பற்றி சிந்திக்க ஆரம்பித்தாளோ, அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது அவளது முட்டாள் தனமான திருமணம் குறித்த முடிவு.

திருமணம் முடிந்து முதல் மூன்று வருஷங்களுக்கு குழந்தை பிறப்பை இருவருமாக முடிவு செய்து தள்ளிப்போட்டார்கள்.முக்கிய காரணம் திவ்யா முதுநிலை முதல் வருஷம் படித்துக்கொண்டிருந்தாள். அவளது காதலோ முதுநிலை இரண்டாம் வருஷம். ஏற்கனவே இளநிலை கல்லூரியில் படிக்கும் பொழுது இருவரும் அறிமுகம் ஆனவர்கள் தாம்.

அப்போது ஏற்படாத நெருக்கமும் ஈர்ப்பும் முதுநிலையில் படிக்கும் பொழுது இயல்பாய் ஏற்பட்டது. இன்னமும் சொல்லவேண்டும் என்றால் திவ்யா இளநிலை படிப்பு படிக்கும் பொழுதே அவன் பால் ஈர்க்கப் பட்டிருந்தாள்.அதை ஒரு நாளும் அவனிடம் வெளிப்படுத்த அவள் பிரியப்படவில்லை.

அது தனது உணர்வு .அவனுக்கு அவ்வாறு தோன்றாத பொழுது எதற்க்காக சொல்லி புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவளை அமைதியாக இருக்கச் செய்து விட்டது.

பிறகு இருவரும் நிருவாகம் தொடர்பான மேல் படிப்பையும் ஒரே கல்லூரியில் தொடர,”சீனியர்”என்ற திவ்யாவின் அழைப்பை நிதானமாக ரசித்து,ருசித்தவன் பிறகு அவளையும் ரசிக்க தொடங்கிவிட்டான்.

‘இது இயல்பாக நிகழும் ஆண் – பெண் இருவருக்குமான பால் ஈர்ப்பு.அவ்வளவுதான்.இதற்க்கு காதல் என்று முத்திரை குத்தியிருக்க வேண்டாம்’ – இது எனது கருத்து இல்லங்க. நம்ம திவ்யா நினைக்கிறது, நா சொல்லிட்டேன்.

பிறகு இருவருமாக அதிக நேரத்தை ஒன்றாக செலவிட்டதும், ஒரே உணவை ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொண்டு சாப்பிட்டதும், ஒரு போர்வைக்குள் இருவரும் தூங்காத இரவுகளும்,எல்லாம் ரோமியோ -ஜூலியட் காதல் ஜோடியாய் விஞ்சும் காதல் காவியம் தான். தனது தோழிகளுடன் அப்போது திவ்யா தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தாள். அவனது ரோமியோவும் ஹாஸ்டல் சரியாக வரவில்லை என்று வீட்டில் சொல்லி தனியாக தங்களது ஒற்றை படுக்கையறை வீட்டுக்கு குடிபோயிருந்தான்.

அந்த  பிளாட் அவன் இங்கே படிக்கப் போகிறேன் என்று சொன்னவுடனேயே ஹாஸ்டலில் தங்கவேண்டாம் என்று சொல்லி அவன் அப்பா வாங்கியது தான்.அப்போது வெவ்வேறு காரணங்களை அடுக்கியவன் இப்போது வார்த்தைகளை மாற்றிச் சொன்னான்.

இறுதி வருஷம் என்பதால் அவன் பெற்றவர்களும் பெரியதாக கேட்டுக்கொள்ளவில்லை. ஒரு சுபயோக சுபதினத்தில் திவ்யா இங்கே இவனை பிரிந்திருக்க முடியாது என்று சொல்லி இங்கே தங்க ஆரம்பித்தாள். இரண்டு நாட்கள்  இவனுடன் இருப்பதும் மற்ற நாட்களில் தான் தோழிகளுடன் இருக்கும் அறைக்கு சென்று விடுவதும் ,தோழிகளிடம்,”எனக்கு இங்கே நெருங்கிய சொந்த காரங்க இருக்காங்க. அவங்க வீட்டுல தாங்கலைன்னு என்னோட அப்பாகிட்டே ஒரே கரைச்சல்.அதனால் தான் இப்படி ” என்று விம் பார் போட்டு விலக்கினாள்.

இவள் ஏதோ ஏடாகூடமாக செய்கிறாள் என்று புரிந்தாலும், அவளது வாழ்க்கைக்குள் மூக்கை நுழைக்க யாருக்கும் விருப்பம் இல்லை.

பெற்றவர்களுக்கும் இவள் இப்படி இருப்பது பற்றி விவரங்கள் எதுவும் தெரியாது. எல்லாமே வழக்கம் போல் நிதானமாக  சென்று கொண்டிருக்க யாருக்குமே துளிகூட எந்த விஷயத்திலும் சந்தேகமே வரவில்லை.

பெற்றவர்களுக்கு தெரியாது என்பதை ஒருபுறம் வைத்தாலும்,திவ்யாவை பொறுத்தவரையிலும், ‘எனக்கு இருபது வயது முடிந்து விட்டது. இன்னமும் எனது வாழ்க்கையை பற்றியும்,வாழும் முறை பற்றியும் பெற்றவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் என்ன ?  எனக்கு எனது வாழ்க்கையை வாழ தெரியாதா,இல்லை வாழும் உரிமைதான் இல்லையா ?’

இதுபோன்ற கேள்விகளை இன்றைய இளம் சமுதாயம் வெகு எளிதாக நம்முன் வைப்பது தான்! மேற்கத்திய பாணியில் பிள்ளைகள் வளர்வதை பல பெற்றோர்கள் சந்தோஷமான ஒன்றாக,பெருமையானதாக கருதுவதை நான் நிறைய பார்க்கிறேன். உதாரணம் சொன்னால் இங்கே பலரும் என்னை பூமர் லேடி என்று அழைக்கவும் கூடும்.அதனால்,நான் சொல்லிக்கொண்டிருக்கும் கதைக்குள் செல்கிறேன்.

அதன் ஒரு பிரதிநிதி தான் திவ்யா. எண்ணற்ற சுதந்திரம் சம்மந்தமான கேள்விகள் அவளுக்குள் உண்டு.  அதைப் பற்றியெல்லாம் அவள்  தனது காதலனிடம் சொன்னது இல்லை. ஏன் என்றால் அவனுக்கு மிகவும் பிடித்த அமைப்பு குடும்பம். பெற்றவர்களிடம் மதிப்பும்,உடன் பிறந்தவளிடம் அளவற்ற அன்பும் கொண்டிருப்பவன்.இது போன்ற சுதந்திர விஷயங்களை ஆதரிக்கவே மாட்டான்.

ஆனால்,எனக்கு இங்கே ஒரு கேள்வி வருகிறது. அப்படி பட்டவன் காதலிப்பதை இன்னமும் வீட்டில் ஏன் சொல்லவில்லை? ஒருவேளை பெற்றவர்களிடம் வைத்திருக்கும் மரியாதை காரணமாக இருக்குமோ?

அதிலும் அந்த பெண்ணுடன் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் ஒன்றாக குடும்பம் நடத்துவது ? இதையெல்லாம் எந்த வரிசையில் சேர்ப்பது என்று நீங்கள் தான் சொல்லவேண்டும்.

படிப்பை முடித்த கையோடு அங்கேயே வேலையும் கிடைத்துவிடவே ,divya- அவள் காதலன் இருவரின் உறவும் வளர்பிறை நிலவென வளர்ந்தது. திவ்யாவின் ப்ராஜெக்ட் செய்வதற்கு தன்னால் ஆன எல்லா உதவிகளையும் செய்தான் அவன். அதனாலேயே திவ்யா அதை வெகு சிறப்பாக செய்து முடித்தாள். ஆறுமாதம் பயிற்சிக்காக ஏதேனும் ஒரு நிறுவனத்தில் சேர்ந்ததாக வேண்டும். அதற்கும் அவனே தீர்வு சொல்லிவிட்டான். இருக்கவே இருக்கிறது , அவன் வேலை செய்யும் நிறுவனம்.

இதற்கெல்லாம் முடிவும் வந்தது.  அன்று ஞாயிற்றுக்கிழமை. தோழிகளுடன் அறையில் இல்லாமல்,இங்கே காதலனின் உடன் இருக்கவேண்டும் என்று வெள்ளிக்கிழமை மாலை அலுவலகம் முடிந்தவுடன் அவுனுடனேயே  வந்துவிட்டாள் திவ்யா.

முதல்நாள் இரவு இருவரும் தூங்கவே நேரம் அதிகம் ஆனது. இருவருக்குமான இளமையின் தேடல் முடிவில்லாமல் நீள ஞாயிறு அன்று எழவே முடியாமல் காலை ஒன்பது மணி வரை இருவரும் தூங்கினார்கள்.

முதலில் விழித்தது திவ்யா தான். அவள் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்து இருவருக்கும் காபி வார்ப்பதற்கும்,வாசலில் அழைப்பு மணி அழைப்பதற்கும் சரியாக இருந்தது. நிதானமாக வந்தவள் கதவை திறந்தால், வெளியே ஒரு தம்பதியும்,வயதுப் பெண்ணும் நின்று கொண்டிருக்க ,திவ்யா அவர்கள் யார் எவர் என்று விசாரணை செய்துகொண்டிருந்தாள்.

வாசலில் நின்று கொண்டிருந்தவர்களுக்கு முதலில் குழப்பம்,பிறகு ஊகத்தால் வந்த ஒவ்வாமை என்று உணர்ச்சிக் கலவைதான். அந்த மனிதர் அசராமல்,” நாங்கதான் இந்த வீட்டோட ஓனர்ஸ் ” என்றார். திவ்யாவுக்கு உண்மையில் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றே புரியவில்லை.அவள் மனதில்.,”இது தன்னோட ஓன் பிளாட்ன்னு தானே விஜய் சொன்னது.இவங்க யாரு, வீட்டுக்கு ஓனர்ஸ் புதுசா?” என்று யோசித்துக்கொண்டே வந்து விஜயை உலுக்கி ,ஒருவழியாக எழுப்பி வாசல் நோக்கி அழைத்து சென்றாள்.

அவனோ இரவின் தாக்கத்தாலும், தூக்கத்திலுமாக நடந்து வந்தான். அவனை அந்த கோலத்தில் பார்த்த பெற்றவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? அதிலும்  வயது பெண்ணை கூட  வைத்துக்கொண்டு ?

பெற்றவர்களை பார்த்தவனுக்கு முழுவதும் உடனடியாக தெளிந்து போனது. அதோடு திகைப்பு, கொஞ்சமாய் அவமானம்,தங்கை என்ன நினைப்பாள் என்று கவலை எல்லாம் இன்ஸ்டன்ட்டாக வந்து அமர்ந்து கொள்ள,” வாங்கப்பா…வாங்கம்மா… ரோஷி உள்ள வா…”என்று தடுமாறினான்.

தடம் மாறியிருக்கும் மகனை பார்த்தவர்களுக்கு “தங்கள் வளர்ப்பு பொய்யாக போனதில் தவிப்பு,அதிலும் மகள் வேறு இதை எல்லாம் பார்க்கிறாளே என்று சங்கடம்.”அவர்கள் வந்ததே, மகன் வேலைக்கு செல்ல ஆரம்பித்து ஒரு வருஷம் ஆகிவிட்டதே.திருமணத்திற்கு பார்க்கலாம்.அது பற்றி அவனிடம் பேசலாம் என்பதற்க்காக தான். ஆனந்தின் நண்பரின் மகள் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்கிறாள்.அவர்கள் வீட்டில் திருமணத்திற்கு பார்த்துக்கொண்டும் இருக்கிறார்கள்.அது பற்றி மகனிடம் பேசலாம் என்று தான் இவ்வளவு தூரம் வந்தார்கள். தினமும் அலைபேசியில் அழைத்து பேசுகிறான். தீபாவளி, பொங்கல் என்று பண்டிகை நாட்களை தவற விடாமல் தங்களுடன் இருக்கிறான் எனும் பொழுது அவர்களுக்கு சந்தேகம் எப்படி வரும்?பெற்றவர்களுக்கே இருக்கும் பிள்ளைகள் மீதான நம்பிக்கை.

இப்போது அந்த நம்பிக்கை தகர்ந்து விட்டது. வேறே எதுவும் பேசும் நிலையில் அவனது பெற்றவர்கள் இல்லை. திவ்யா அங்கே நடப்பவற்றை ஒரு நாடகத்தை பார்ப்பது போல சுவாரஸ்யமாக பார்த்துக்கொண்டிருந்தாளே தவிர தாங்கள் இருவரும் இப்படி இருப்பது தான் பிரச்சனைக்கு காரணம் என்ற குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லை.

ஏன் என்றால் இப்படி வாழ்வது தவறு என்று அவளுக்குத் தோன்றவே இல்லை.

அவ்வளவு நாட்களாக யோசித்திராத அவமான உணர்ச்சியை அவன் தன்னை பெற்றவர்களை,உடன் பிறந்தவளைக் காணும் பொழுது உணர்ந்தான்.அதே சமயம் அவன் உணர்ந்த இன்னொரு விஷயம் என்ன ஆனாலும் பெண்ணிவளை விட முடியாது. இந்த ஜென்மத்தில் இவள் தான் என்பதையும் தாம். இதை பெற்றவர்களுக்கு எப்படி புரியவைப்பது என்று நொடிகளில் அவன் மனம் யோசிக்க தொடங்கி இருந்தது. 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page