மொழி – 18

“ஆபீஸ்க்கு இன்னைக்கு வர தான?” என்று சுதாகர் வினவவும்.

யஷ்வந்தின் பார்வை பவித்ராவை தழுவியது.

“வீட்ல நான் பாத்துப்பேன் நீங்க போயிட்டு வாங்க”.

“ஆமா டா, லீவு எடுக்க முடியாது வந்து தான் ஆகணும்”.

“இது கூட தங்கச்சி கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு தான் சொல்லுவியா நீ” என்று ஆச்சரியமாக தன் நண்பனை பார்த்தான் சுதாகர்.

அவனின் வார்த்தையில் தன் நெற்றியை தேய்த்துக் கொண்டவன், “அப்படி இல்லடா புது இடம் புது வீடு அவளுக்கு எல்லாம் செட் ஆகணும்ல. தனியா விட்டுட்டு போயிட்டா அப்புறம் அவ என்ன பண்ணுவா.. ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு கொஞ்சம் வெளியில போகணும் நான் சாப்பிட்டு வந்துடறேன்”. 

“சரிடா நீ பொறுமையா சாப்பிட்டு வா நான் வெயிட் பண்றேன்”. 

வேகமாக உண்டு முடித்தவன் சுதாகருடன் வெளியே சென்று விட்டான்.

சாப்பிட்ட பாத்திரங்களை எல்லாம் கழுவி அடுப்படியை ஒதுக்கிய பவித்ரா மதியத்திற்கு சாம்பாரும் உருளைக்கிழங்கு வறுவலும் செய்ய துவங்கினாள்.

சற்று நேரத்தில் இருவரும் வந்துவிட. 

“சரிடா, அப்போ நான் கிளம்புறேன். ஆபீஸ்ல மீட் பண்ணுவோம்” என்று விட்டு பவித்ராவிற்கும் சிறு தலையசைப்பை கொடுத்துவிட்டு கிளம்பி விட்டான் சுதாகர்‌.

“பவி இந்தா இது உனக்கு தான் பிடிச்சிருக்கா பாரு”. 

“ஃபோனா?”. 

“ம்ம்.. உன்கிட்ட தான் போன் இல்லல்ல.. ஏதாவது எமர்ஜென்சினா எப்படி என்னை காண்டாக்ட் பண்ணுவ அதான் உனக்கு புது போன் வாங்கிட்டு வந்தேன்” என்றவனோ தன் செல்பேசியில் இருந்து அவளுக்கு ஒரு அழைப்பு விடுத்திருந்தான் 

“இதான் என்னுடைய நம்பர் சேவ் பண்ணிக்கோ”. 

“ம்ம்” என்றவள். 

அவன் கூறியது போலவே ‘பாவா’ என்று ஏற்றிக் கொண்டாள் 

அதன் பிறகு வேகமாக குளித்து கிளம்பியவன் அலுவலகம் கிளம்பவும்.

“உங்களுக்கு சாப்பாடு?”.

“எடுத்துட்டு போக டிபன் பாக்ஸ் இல்லையே.. ஆபீஸ்லருந்து வரும்போது வாங்கிட்டு வரேன். நாளையிலிருந்து உன்னுடைய சமையல் தான் ஆபீஸ்க்கு. இன்னைக்கு நீ செஞ்சதை நீயே சாப்பிடு நான் நைட் வந்து சாப்பிட்டுக்கிறேன் டைம் ஆயிடுச்சு” என்று விட்டு அவளின் நெற்றியில் அழுத்தமாக தன் இதழை பதித்து விட்டு கிளம்பிவிட்டான்.

அவன் சென்ற பிறகு வீட்டை பெருக்கி ஒதுக்கியவளிற்கு இன்னமும் நம்ப முடியவில்லை. 

எத்தனை எளிமையான வாழ்க்கை.. 

இப்படி எல்லாம் ஒரு இல்லத்தரசியாய் தன் வாழ்க்கையை நாம் வாழ்வோம் என்று அவள் நினைத்தும் பார்த்தது கிடையாது. எண்ணி எண்ணி அகம் மகிழ்ந்து போனாள்.

இப்படியே அடுத்த ஒரு மாத காலம் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்திருந்தது.

அன்புக்கும், பாசத்திற்கும் கொஞ்சமும் பஞ்சமின்றி இருவரும் அத்தனை விட்டுக் கொடுத்து அந்நியோன்னியமாய் தங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர்‌.

என்ன தான் இருவருக்குள்ளும் ஒருவர் மேல் மற்றொருவருக்கு அளப்பெரிய அன்பும் பிணைப்பும் ஏற்பட்டிருந்தாலும், யஷ்வந்தின் குடும்பத்தாரை பற்றி எண்ணும் பொழுது மனம் சுணங்கிப் போவதும் உண்மை தான்.

ஆனாலும், அதையும் மீறி தங்களுக்கே தங்களுக்கான இந்த வாழ்க்கையை அனுபவித்து உணர்ந்து வாழ தொடங்கியிருந்தனர். ஆத்மார்த்த தம்பதிகளாய்..

*****

இந்த ஒரு மாத காலத்தில் யஷ்வந்தின் வீட்டில் தான் கலை இழந்து போய் காணப்பட்டது. அவர்கள் அனைவரையும் உயிர்ப்புடன் வைத்திருக்க மிகப்பெரிய உதவி புரிந்தது என்னவோ சேரனின் மகள் யாஷிகா தான்‌.

அந்த சின்னஞ்சிறு பிஞ்சின் பற்கள் இல்லா பொக்கை வாயின் சிரிப்பு தான் அவர்களை சற்று உயிர்ப்போடு வைத்திருந்தது‌.

“மா என்னமா வர வர இப்படி மெலிஞ்சுட்டே போறீங்க. உங்கள இப்படி பார்க்கவே மனசுக்கு கஷ்டமா இருக்கு. பழைய படி இருங்கம்மா” என்றான் சேரன். 

“ஆசை மகன் தலையில மண்ணள்ளி போட்டுட்டு போனத உங்க அம்மாவால தாங்க முடியல. அதான் அவனையே நினைச்சு உருகிக்கிட்டு இருக்கா” என்று கடுகடுத்த முகத்தோடு கூறினார் திருமூர்த்தி. 

தன் தாயின் தோளை தொட்ட நித்யா, “அம்மா யாருக்கு தான் வருத்தம் இல்ல. எங்களுக்கு இல்லயா.. அண்ணா போனதிலிருந்து எங்களுக்கும் கஷ்டமா தான் இருக்கு. அதுக்காக என்ன பண்ண முடியும்?” என்றவளோ ஒரு நொடி தயங்கி, “அம்மா நாம வேணும்னா அண்ணாவை திரும்ப இங்க வர சொல்லுவோமா?” என்றது தான் தாமதம்.

தான் அமர்ந்திருந்த நாற்காலியை தள்ளிவிட்டுக்கொண்டு எழுந்து நின்ற திருமூர்த்தி, “இனி யாராவது அவன பத்தி இந்த வீட்ல ஒரு வார்த்தை பேசுனீங்க.. அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் சொல்லிட்டேன். நம்ம யாரையும் வேணாம்னு தூக்கி எறிஞ்சிட்டு போனவன திரும்பி இந்த குடும்பத்தோட ஒட்ட வைக்கலாம்னு பாக்குறீங்களா? 

வருவானா.. உன் அண்ணன் அந்த பொண்ண விட்டுட்டு வருவானா.. வர சொல்லு பாப்போம்.. அவன் வந்தா அவளும் வரணும்னு சொல்லுவான். அவளையும் வீட்டுக்குள்ள விட்டுப்போமா.. நம்ம குடும்ப மானம், மரியாதை, கௌரவம் எல்லாம் என்ன ஆகிறது. 

அவன் இந்த வீட்டுக்குள்ள வரணும்னா எனக்கு மகனா மட்டும் வரர்தா இருந்தா வரட்டும். அவளுக்கு புருஷனா வரர்தா இருந்தா இந்த வீட்டுக்குள்ள அவன் நிழல் கூட படக்கூடாது. இனி அவன வீட்டுக்குள்ள சேர்க்குறத பத்தி யாராவது ஒரு வார்த்தை பேசுனீங்க நல்லா இருக்காது சொல்லிட்டேன்” என்றவர் கோபமாக அறைக்கு எழுந்து சென்று விட்டார்.

ஏற்கனவே, சோர்ந்து போய் இருந்த பரமேஸ்வரிக்கு தன் கணவரின் வார்த்தை மேலும் அவரை துவண்டு போக செய்தது.

“நித்யாவுக்கு சீக்கிரம் மாப்ள பாக்கணும் சேரா”. 

“ஏன் மா என்ன ஆச்சு?”.

“உன் தம்பி பண்ண காரியம் வெளியில தெரிஞ்சா நம்ம சொந்தத்துல யாரும் பொண்ணு எடுக்கவே யோசிப்பாங்க. சீக்கிரம் அவளுக்கும் ஒரு கல்யாணத்தை செஞ்சு முடிச்சிட்டா மனசுக்கு நிறைவாயிடும். எங்க கடமையும் முடிஞ்சிடும்”.

“சரிமா பார்க்கலாம்” என்ற சேரனை முந்தி கொண்ட நித்யா, “அம்மா இப்போ என்ன அவசரம் என் கல்யாணத்துக்கு?”. 

“ஏற்கனவே உன் அண்ணன் நம்ம எல்லார் மனசையும் நோகடிச்சுட்டு போயிட்டான். உனக்காவது ஒரு நல்லது நடந்தா எங்க மனசுக்கு எல்லாம் கொஞ்சம் ஆறுதலா இருக்கும். நீ சும்மா இரு நித்யா நீ சின்ன பொண்ணு உனக்கு இதை பத்தி எல்லாம் தெரியாது” என்றவர்.

தன் மகனை பார்த்து, “சேரா நீ மாப்ள பாக்க ஏற்பாடு பண்ணு”. 

இவர்களின் பேச்சுவார்த்தை நித்யாவிற்குள் திக்கென்ற உணர்வை ஏற்படுத்தியது‌.

அமைதியாக அறைக்கு சென்றவளுக்குள் ஒரு பிரளயமே நடந்து கொண்டிருந்தது. வேகமாக தன் செல்பேசியை எடுத்தவள் அழைத்தது என்னவோ கமலேஷிற்கு தான்.

“ஹலோ நித்யா”. 

“கமல் வீட்ல அம்மா எனக்கு மாப்ள பார்க்கணும்னு பேசிட்டு இருக்காங்க” என்றாள் எடுத்த எடுப்பிலேயே. 

“ஏன் என்ன ஆச்சு?” என்றவனுக்கும் சற்று பதட்டம் தொற்றிக் கொண்டது‌.

“யாஷ் அண்ணா செஞ்சதுல வீடே தலை கீழா இருக்கு. அதான் எனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணா திரும்ப எல்லாம் பழையபடி மாறும்னு அம்மா நினைக்கிறாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு கமல்” என்றவளின் குரலே நடுக்கத்துடன் வெளியேறியது.

“நீ ஒன்னும் கவலைப்படாத நித்யா, அம்மா அப்பா கிட்ட சொல்லி நம்ம கல்யாணத்தை நடத்த நான் ஏற்பாடு செய்றேன். நீ தைரியமா இரு”. 

“சரி” என்று சுரத்தே இல்லாமல் கூறியவளுக்கு நல்ல முறையில் தங்கள் காதல் திருமணத்தில் முடிய வேண்டுமே என்ற பதட்டம் தொற்றிக் கொண்டது.

தன் தாயை சமாதானம் செய்துவிட்டு அறைக்குள் நுழைந்த சேரன், இந்துவிடம் தன் தாய் கூறியதை அப்படியே கூறவும்‌.

“நான் ஒன்னு சொல்றேன் அது சரி வருமானு பாக்குறீங்களா”  

“என்ன இந்து?”. 

“நாம ஏன் நம்ம நித்யாவ என் தம்பி கமலுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க கூடாது”.

அவளின் வார்த்தையில் அவனின் முகமும் பளிச்சிட, “நல்ல ஐடியா தான். அம்மா அப்பா கிட்ட பேசுவோம். சரி வந்தா மேற்கொண்டு பேசுவோம்” என்றவன்.

உடனே, தன் தாய் தகப்பனிடமும் இந்த விஷயத்தை பற்றி கலந்து கொள்ள. அவர்களுக்கும் இதில் முழு சம்மதம் தான். 

வெளியே பார்ப்பதை விட கமலேஷ் தெரிந்த பையன், உறவு முறை, இவர்கள் குடும்பத்தில் நடந்த அனைத்து விஷயங்களும் அவர்களுக்கும் தெரியும்.

சொந்தத்திற்குள்ளேயே திருமணம் முடித்தால் நாளை பின் எந்த பிரச்சனையும் தங்கள் மகளுக்கு வராது என்ற நம்பிக்கையோடு ஒப்புக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அந்த வார இறுதியிலேயே நித்யாவிற்கு பூ வைக்க தன் குடும்பத்தாருடன் வந்திருந்தான் கமலேஷ்.

இவர்களின் காதல் விவகாரத்தை பற்றி இவர்கள் இன்னும் வீட்டில் பேசி இருக்கவில்லை. அதற்குள் வீட்டினரே சேர்ந்து இவர்களுக்கு திருமணம் பேசி முடித்து விடவும் இருவருக்குள்ளும் அத்தனை மகிழ்ச்சி.

அவளின் அகமகிழ்ச்சி முகத்திலேயே மின்ன. பொலிவோடு அனைவரின் முன்னிலையிலும் அமர வைக்கப்பட்டிருந்தாள்.

கமலேஷீம், நித்யாவும் யாரும் அறியாமல் விழிகளாலேயே பல பாஷை பேசிக்கொண்டிருந்தனர்.

“இந்த வருஷத்தோட படிப்பு முடிஞ்சிடும். அப்புறம் டிரெய்னிங் இருக்கு.. அடுத்த வருஷம் கல்யாணத்தை வச்சுக்கலாம்” என்றிருந்தார் திருமூர்த்தி.

“சரிங்க சம்பந்தி. இவங்க தான் பொண்ணு மாப்பிள்ளைனு ஆன பிறகு வெயிட் பண்ணி பண்றதுல ஒன்னும் தப்பில்ல. எங்களுக்கு முழு சம்மதம்” என்றார் இந்துவின் தந்தை.

அதன் படி நித்யாவின் டிரெய்னிங் முடிந்ததும் திருமணம் என முடிவு செய்யப்பட்டது. அவர்களின் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

தன் அண்ணன் உடன் இல்லையே என்ற குறையை தவிர நித்யாவிற்கும், அவளின் குடும்பத்தாருக்கும் அத்தனை மன நிறைவு.

யாருமே அங்கே யஷ்வந்தை பற்றி பேசிக்கொள்ளவில்லை. எப்படியும் அவனின் பேச்சு எழுந்தால் திருமூர்த்திக்கு பிடிக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

நல்ல விஷயம் நடக்கும் நேரத்தில் எதற்கு தேவையில்லாத பேச்சை பேசி மன சங்கடம் என்ற எண்ணத்தினாலேயே யாரும் யஷ்வந்தை பற்றி பேசிக்கொள்ளவில்லை.

ஆனாலும், அனைவரின் மனதிலும் ஒரு நொடியேனும் அவன் தோன்றி மறைந்தது என்னவோ உண்மை தான்.

அதிலும், பெரும் வருத்தம் பரமேஸ்வரிக்கு தான். தங்கள் வீட்டின் விசேஷம் தன் மகன் கலந்து கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் அவரை வெகுவாய் பாதித்திருந்தது.

தன் கணவருக்காக இயல்பாய் இருப்பது போல் அவர் காண்பித்துக் கொண்டாலும், அவரின் கலை இழந்த முகமும், வாடிய தோற்றமுமே அவரின் மகனுக்கான ஏக்கத்தை அப்பட்டமாய் பிரதிபலித்திருந்தது.

அவன் மட்டும் இங்கே இருந்திருந்தால் எத்தனை கலகலப்பாக இந்த நிகழ்வு சென்றிருக்கும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் தோன்றி மறைந்தது.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page