வீட்டின் முன் கூடத்தில் இருந்த சோபாவில் அமர்ந்தவாறே உறங்கிக் கொண்டிருந்தாள் அவள்.
அன்னையின் அழைப்பினால் வீட்டிற்கு வந்தவன், அப்படியே அமர்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்த தனது மனைவியை பார்த்தான்.
திருமணக் கோலத்திலேயே இன்னும் இருந்தவளின் முகம், உறக்கத்திலும் சோகத்தில் கசங்கியிருந்தது.
அதைப் பார்த்தவனின் மனம்தான்… இன்னும் இன்னும் நொறுங்கிக் கொண்டே இருந்தது…
காலையில் விரைப்பாய் அங்கே போய் நின்றவன்…உள்ளுக்குள் சிதறி உடைந்தது… அவன் மட்டுமே அறிந்த உண்மை…
அதுவும், உடைந்து கலங்கி நின்றவளை பார்த்த அந்த தருணத்தில், அவனின் மனம் அங்கேயே மரணித்தது போல இருந்தது…
சிறுவயதிலிருந்து அவளின் நெருங்கிய தோழி அவள். கடைசி வரைக்கும் தோழியாகத்தான் இருப்பாள் என்று நினைத்தான்.
ஆனால் இன்று, அவள் அவனின் மனைவியாகி இருப்பது… அவனுக்கே கனவுபோல இருந்தது.
ஆம்… இன்னும் அவனால் நம்ப முடியவில்லை…இன்று நடந்த அவர்களின் திருமணத்தை.
அதுவும், அவளே அவனைத் திருமணம் செய்யக் கேட்டதை, எப்படி எடுத்துக் கொள்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.
நடந்ததை நினைத்தபடியே அவளின் அருகில் சென்று அமர்ந்தவன்,
“நீ ஏன் திடீர்னு காலையில என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்ட கண்ணம்மா…?” என்று மனதில் நினைத்தான்.
அவள் தலையை தனது இடது கையால் மெதுவாக தடவி கொடுக்க, நல்ல உறக்கத்தில் இருந்தவள் மெல்ல கண்களைத் திறந்தாள்.
கண் திறந்தவளை புன்னகை முகமாக பார்த்தவன், “சாப்பிடலாமா…?” என்று மெதுவாகக் கேட்டான்.
தலையசைத்தவள் எழுந்து சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.
ஆனால்… அவள் முகத்தில் மருந்துக்குக் கூட புன்னகை இல்லாமல், இறுகிப் போயிருந்தது.
“எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்… நான் சரி பண்ணுவேன்…” என்று மனதில் நினைத்தவன், பெருமூச்சை இழுத்துவிட்டு அவளின் அருகில் சென்று அமர்ந்தான்.
ஹாட் பாக்ஸில் இருந்த இட்லிகளை தட்டில் நான்கு எடுத்து வைத்தவன், சட்னி ஊற்றி அவளிடம் கொண்டு சென்றான்.
அதை மெதுவாக பிய்த்து ஊட்ட, அவளும் அமைதியாக வாய்திறந்து வாங்கிக் கொண்டாள்.
இரண்டு வாய்கள் வாங்கியவள், மூன்றாவது வாய்க்கு முன் அவனை நோக்கி பார்த்தாள்…
அதன் அர்த்தம் புரிந்தவனாக, அந்த இட்லியை தன் வாய்க்குள் போட்டுக் கொண்டவன்,
மீண்டும் அவளுக்கும் ஊட்டி, தானும் அமைதியாக உண்டான்.
இருவரும் உணவு முடித்தவுடன், அவர்களின் அறைக்குச் சென்றனர்.
“இசை… உன்னோட டிரஸ் எல்லாம் அந்த பேக்ல இருக்குனு அம்மா சொன்னாங்க.
நீ ரெஸ்ட் ரூம்ல போய் ஃப்ரெஷ் ஆகிட்டு, டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா…” என்று சொன்னவன்,
அவள் உள்ளே செல்லவும், தானும் அறையிலேயே இரவு உடையை மாற்றிக் கொண்டான்.
அவள் வெளியே வந்ததும்,
“இசை… நீ மேல பெட்ல படுத்துக்கோ… நான் இங்க சோபால படுத்துக்குறேன்…” என்றவன்,
அப்படியே சோபாவில் படுத்துக் கொண்டான். சில நொடிகளில் அவன் உறங்கியும் போனான்.
அவளும் மெதுவாக கட்டிலில் சென்று படுத்தவளையும், நித்ராதேவி மெல்ல வந்து தழுவிக் கொண்டாள்.
_ _ _ _ _ __ __ _ _
அதே நேரம், அங்கே இன்னொரு அறையில் ஒருத்தி தொலைபேசியில் ஒருவனுடன் போராடிக் கொண்டிருந்தாள்.
“ஐயோ, சொன்னா புரிஞ்சிக்கோ அகிலா. இன்னைக்கு ஒரு நைட் தான, நாளைக்கு நாம ரெண்டு பேரும் பார்க்கப் போறோம். இதுல ஏன் இன்னிக்கே இப்பவே பாக்கணும்ன அடம் பிடிக்கிற?” என்றவள் அலைபேசியில் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருக்க…
“மதிமா ப்ளீஸ்டி, ஒரு பத்து நிமிஷம்டி… பத்து நிமிஷம் மட்டும் கீழே வந்துட்டு போ. முடியலன்னா நான் மேல வரேன்…” என்றவனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அவள் தவித்துக் கொண்டிருந்தாள்.
அந்த நேரத்தில் அவளின் கதவு தட்டும் சத்தம் கேட்டது.
‘இந்த நேரத்துல யாரு?’ என்று மனதில் நினைத்தவள், அலைபேசியில் இருந்தவனிடம்…
“டேய், ஒரு நிமிஷம்டா… யாரோ கதவை தட்டுறாங்க. நான் யாருன்னு பாத்துட்டு வந்து பேசுறேன். அப்படியே அமைதியா லைன்ல இரு…” என்றவள்,
போய் கதவைத் திறந்தாள். அங்கே அவளின் முன்பு அவன்தான் நின்றிருந்தான்.
கண்கள் அகல விரிய, “அகிலா!” என்றவள், அவனை வேகமாக உள்ளே இழுத்துவிட்டு…
வெளியில் யாரும் இருக்கிறார்களா என்று ஒரு முறை நோட்டமிட்டவள், வேகமாக உள் நுழைந்து கதவை அடைத்தாள்.
“அகிலா, நீ இங்க என்ன பண்ற? நான்தான் சொன்னேன்ல நாளைக்கு பாத்துக்கலாம்னு. அதுக்குள்ள உனக்கு என்னடா அவசரம்?
இப்போ யாராச்சும் உன்னை இங்க பாத்துட்டா எவ்வளவு பெரிய பிரச்சனை நடக்கும்னு தெரியுமா?” என்றவள் பேசிக்கொண்டே போக, அவனோ முதுகு காட்டி நின்றவனாய் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தான்.
“நாம் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன், நீ என்னன்னா அமைதியா அந்த பக்கம் திரும்பி நின்னுட்டு இருக்க?” என்றவள் அவனின் கையைப் பிடித்து அவளை நோக்கி திருப்பினாள்.
திரும்பியவனின் முகத்தைப் பார்க்க இவள் முயற்சிக்க, அடுத்த வினாடி அவளை இழுத்து அணைத்தவன், அவள் தோளில் முகம் புதைத்தான்.
“அகி…லா!” அவனின் இந்த திடீர் செயலில் தடுமாறி நின்றவள், அவளின் தோள்பட்டையில் ஈரத்தை உணர்ந்து பதறி விலக முயன்றாள்.
ஆனால்… அவனோ அவளை விலக விடாமல், மேலும் மேலும் அவளை தன்னுடன் சேர்த்து இறுக்கிக் கொள்ள, செய்வதறியாமல் தவித்தவள் அவனிடம் பேச முயன்றாள்.
“அகிலா! என்னடா, என்ன ஆச்சு? ஏண்டா அழுகுற?” என்றவளின் கண்களும் கலங்கத் தொடங்க, அவனை அணைத்துக் கொண்டிருந்தவள் ஒரு கையை மட்டும் மேலே உயர்த்தி அவனின் தலையைத் தடவி கொடுத்தாள்.…
சிறிது நேரத்திற்குப் பிறகு அவனே அவளிடம் இருந்து விலக, அவனை அழைத்துக் கொண்டு போய் கட்டிலின் மீது அமர வைத்தவள், அருகே மேசையின் மீது இருந்த பாட்டிலைத் திறந்து அவனுக்கு தண்ணீரை குடிக்கக் கொடுத்தாள்.
திரும்பி பாட்டிலை மூடி அதே இடத்தில் வைத்தவள், ஒரு காலை மடித்து அவனைப் பார்த்தவாறு அவனின் அருகில் அமர்ந்து, அவன் முகத்தை கையில் ஏந்தி இரு கன்னங்களையும் அழுத்தித் துடைத்தாள்.
“என்னாச்சு அகிலா, ஏதாவது பிரச்சனையா?” என்றவள் பரிதவிப்போடு கேட்க,
அவன் கண்களில் மீண்டும் கண்ணீர் வழியத் தொடங்க, “நா…ன் நான் உன் மடியில படுத்துக்கட்டுமா?” என்றவனின் கேள்வியில், அவன் படுப்பதற்கு ஏதுவாக தள்ளி அமர்ந்தவள் அவனை நோக்கி கைநீட்டி ‘வா’ என்றழைத்தாள்…
அடுத்த நொடி அவள் மடியில் படுத்தவன், அவள் வயிற்றில் முகம் புதைத்து இடுப்போடு சேர்த்து அவளைக் கட்டிக் கொண்டான்.
அவள் கைவிரல்கள் அவன் தலையை மெதுவாக கோதிவிட, “என்னாச்சும்மா?” மெதுவாகவும் பரிவாகவும் அவனிடம் கேட்டாள்.
எதுவும் இல்லை என்றோ, இல்லையெனில் என்னால் சொல்ல முடியவில்லை என்றோ… எந்த காரணத்தினாலோ தெரியாது… அவனோ தலையை இடவலமாக ஆட்டினான்.
அதன் பிறகு, அவளுக்கும் அவனை வற்புறுத்திக் கேட்க விருப்பம் இல்லாததால், அமைதியாக அவன் தலையை மெதுவாகத் வருடிக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு, “இன்னைக்குதான் அம்மா என்னவிட்டு போன .” என்றான்.
திடீரென சொன்னதாலும், அவன் வயிற்றில் முகம் புதைத்திருந்ததாலும் அவளுக்கு தெளிவாகப் புரியாமல், “என்ன?” என்றாள்.
“இன்னைக்குதான் அம்மா என்ன விட்டுட்டு போன.” என்றவனின் குரல் கரகரப்பாக வந்தது.
“அப்படின்னா?”
“இன்னைக்கு தான் அம்மாவோட இறந்த நாள்.” என்றவனின் கைகள் இன்னும் அவள் இடுப்பை இருக்கிக் கொண்டன…
“உனக்கு தெரியுமா மதி, எனக்கு என் அம்மாவ எவ்வளவு பிடிக்கும்னு. சின்ன வயசுல அவங்க மட்டும் தான் என்னோட உலகம். அவங்களுக்கும் நான் மட்டும் தான் உலகம்.
எங்களோட அந்த உலகத்தில் வேற யாருமே கிடையாது. நாங்க மட்டும்தான். ஏன், எங்க அப்பா கூட அந்த உலகத்தில் கிடையாது தெரியுமா.
எனக்கு எங்க அம்மா… எங்க அம்மாவுக்கு நான். அவ்வளவு சந்தோஷமா இருந்தோம்.
ஆனா எல்லாம் ஒரே நாள்ல மாறிப் போச்சு.
நான் எப்பவும் ஸ்கூல் போயிட்டு வரும்போது அம்மா எனக்காக வாசல்ல வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.
என்னைப் பாத்ததும் ஓடி வந்து தூக்கிப்பாங்க, முகமெல்லாம் முத்தம் வச்சு என்னைக் கொஞ்சிக்கிட்டே தூக்கிட்டு போய் சாப்பாடு ஊட்டி விடுவாங்க, என்கூட விளையாடுவாங்க, நான் ஹோம்வொர்க் பண்ண ஹெல்ப் பண்ணுவாங்க, அப்புறம் என்ன தூங்க வைப்பாங்க.
இப்படி எனக்காக ஒவ்வொன்னையும் பாத்து பாத்து பண்ணுவாங்க. ஆனா ஒரே நாள்ல எல்லாமே தலைகீழா மாறிப் போச்சு.
எப்பவும் மாதிரிதான் அன்னைக்கும் நான் ஸ்கூல்க்கு போயிட்டு திரும்பி வந்தேன்.
ஆனா, அன்னைக்கு வாசல்ல அம்மா இல்ல. அதற்கு பதிலா அங்கு ஒரு பெரிய கூட்டம்தான் இருந்துச்சு.
நான் என்னன்னு உள்ளே போய் பார்த்தப்போ, அம்மா நடு ஹால்ல படுத்திருந்தாங்க. எவ்வளவு எழுப்பியும் எழுந்திருக்கவே இல்லை தெரியுமா?…
கொஞ்ச நேரத்துல நாலஞ்சு பேர் சேர்ந்து அம்மாவை தூக்கிட்டு போனாங்க. அப்போ, போனவங்க அதுக்கு அப்புறம் திரும்ப வரவே இல்ல.
நானும் எவ்வளவு நாள் அவங்க திரும்ப வந்துடுவாங்கன்னு எதிர்பார்த்தேன் தெரியுமா…
ஆனா, எனக்கு கொஞ்ச நாள் கழிச்சுதான் புரிஞ்சுது… அம்மா இறந்து போயிட்டாங்க… அவங்க எப்பவுமே திரும்ப வரமாட்டாங்கன்னு.
அதிலிருந்து எனக்கு எங்க அம்மா மேல செம கோபம். ஏன் அவங்க என்ன மட்டும் தனியா விட்டுட்டு போனாங்க? என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம் இல்ல…” என்றவன் பேசி கொண்டிருந்தவாறே உறங்கிவிட,
கண்கள் குலமாக அமர்ந்திருந்தவள், அவன் தலையைத் தடவி கொண்டே, உச்சந்தலையில் மெதுவாகவும் அதே நேரம் அழுத்தமாகவும் ஒரு முத்தமிட்டாள்.
தொடரும்…
