காலை விடியலில் தனக்கான நேரத்திற்குள் குளித்து தன் ஈர கேசத்தை டிரையர் மூலம் காய வைத்தான் வீர் விஜயன்.
தலையில் இருந்து உருண்டோடி வரும் நீர் சொட்டுக்கள் படிக்கட்டுகளாய் மாறிய அவனின் உடற்தசையில் மேலும் கீழுமாய் ஏறி இறங்கியது. இடுப்பில் டவலுடன் ட்ரையரை பயன்படுத்திக் கொண்டிருக்க காலிங் பெல் சத்தம் கேட்டது.
“இந்நேரத்துக்கு யார் வந்திருக்கா..”
தனக்குள் எழுந்த கேள்வியை வினவியவாரே, உடலை மறைக்க ஒரு T சர்ட்டையும், ஃபுல் பேண்ட்டையும் அணிந்து கொண்டு தலை முடியை ஆட்டியவாறு தன் பிளாட்டின் கதவை திறந்தான். திறக்கப்பட்ட கதவின் உயரத்தில் முக்கால்வாசி இருப்பான் வீர்.
வெளியே ரெட் கலர் மாடர்ன் உடையில், முட்டி வரை மட்டுமே நீண்டிருந்த ஆடையை இழுத்து விட்டவாறு சங்கடத்தில் நின்றிருந்தாள் ரம்யா.
“ரம்யா..! என்ன டிரஸ் இது, யார் வாங்கி கொடுத்தா இதை ..”
தன் அத்தை மகள் அணிந்திருந்த ஆடையை கண்டு கோபம் கொண்டு விசாரித்தான் வீர்.
கதவை ஒட்டியிருந்த சுவரோடு மறைந்து நின்ற வீர்-ன் அத்தை தன் மகளுக்கு சைகையில் கட்டளையிட்டுக் கொண்டிருந்தார்.
” நான் இங்க இருக்கேன்னு சொல்லாத..”
ஹஸ்கி வாய்ஸில் அத்தை நீலாவதி மகளை சமாளிக்க, ரம்யா விரல் உயர்த்தி காட்டி கொடுத்து விட்டாள்.
வீர் புரிந்து கொண்டான். தன் அத்தை இங்கு தான் நின்றுள்ளார்.
“அத்தை வெளிய வாங்க..”
“அடட மருமகனே என்னை கண்டுபிடிச்சிட்டியா… ”
நீலாவதி பார்ப்பதற்கு அழகான சிவந்த கொலு பொம்மை போல் இருப்பார். அவர் பெற்ற மகளைக் காட்டிலும், நீலாவதி உயரம் குறைவு தான்.
“முதல்ல இரண்டு பேரும் உள்ள வாங்க..”
“உள்ள வாடி மாமா தான் கூப்பிடுறான்ல…”
முட்டி வரை மட்டுமே இருந்த தன் ஆடையை இழுத்து விட்டுக் கொண்டே சங்கடத்தோடு உள்ளே நுழைந்தாள் ரம்யா.
“என்ன இதெல்லாம் , எதுக்கு ரம்யாவுக்கு இந்த டிரஸ் வாங்கி கொடுத்தீங்க, அவள் வெறும் 12 ஆவது படிக்கிற பொண்ணு, ஸ்கூல் படிக்கிற பொண்ணுக்கு இந்த டிரஸ் தேவையா…”
“அட என்ன வீர், இந்த காலத்தில் இதெல்லாம் சகஜம் . இந்த ட்ரெஸ்ஸில் எவ்வளவு அழகா இருக்காள்ல..”
தன் அத்தையின் புன்னகையான முகத்தை பார்த்தவன் கோபம் கொள்ள கூட மனம் வராது சகித்துக் கொண்டான்.
“அவளோட கண்ணை பாரேன். மை போட்டு அழகா இருக்குல்ல..”
“அத்தை யார் இப்போ இல்லைன்னு சொன்னா.. ரம்யா பேரழகி தான், அவளோட மொத்த அழகும் உங்க கிட்ட இருந்து வந்தது. என் அத்தை அழகுக்கு யாரும் ஈடு கிடையாது. முதல்ல போய் உட்காருங்க..
ரம்யா அந்த ரூம் கப்போர்டில் உன்னுடைய ஸ்கூல் யூனிபார்ம் இருக்கும் போய் மாத்திக்கோ..”
“ஏன் வீர் இந்த துணியே நல்லா தானே இருக்கு..”
“உஷ்…. நீங்க எதுவும் பேசக்கூடாது அமைதியா உட்காருங்க, நீ போய் மாத்திக்கோ ரம்யா..”
தன் தாய் இழுக்கும் இழுப்பிற்கு எல்லாம் வளைந்து கொடுக்கும் ரம்யா விருப்பம் இல்லாமல் தான் இந்த ஆடையை அணிந்தாள்.
தன் அத்தைக்காக காஃபி போட்டு எடுத்து வந்தான் வீர்.
“ஏன் வீர், இந்த வேலையெல்லாம் நீ தான் செய்யணுமா காலகாலத்தில் ஒரு கல்யாணம் செஞ்சா அந்த பொண்ணே உன்னை பார்த்துப்பாள்..”
“வீட்டு வேலை செய்ய ஆள் போட்டுக்கலாம். கல்யாணம் பண்ணனும்னு அவசியம் இல்லை..”
“அதுக்கு இல்ல வீர், உன்னுடைய பிளாட் ரொம்ப பெருசு. இவ்வளவு பெரிய இடத்தில் நீ தனி ஆளா வாழுற அதுவே உனக்கு மன கஷ்டமா இல்லையா..”
“யார் சொன்னா நான் தனியா வாழுறேன்னு, என் கனவுகளோடு வாழுறேன். கண்டிப்பா ஒரு நாள் இந்த வீடு சொந்தத்தால் நிரம்பி வழியும்..”
“நீ உன்னோட கல்யாணத்தை பத்தி தானே பேசுற… நானும் உன் கல்யாணத்தைப் பற்றி தான் பேச வந்தேன். ரம்யாவுக்கு இந்த வருஷத்தோட படிப்பு முடியும்..”
“அத்தை அவள் 12-வது படிக்கிறாள். இதுக்கு அப்புறமா அவளுக்கு காலேஜ் படிப்பு இருக்கு. பலமுறை சொல்லிட்டேன் எப்படி உங்களால இப்படி யோசிக்க முடியுது..”
“அட என்ன வீர், பொட்ட புள்ள படிச்சு என்ன பண்ண போறாள். அதுவும் நம்ம ரம்யா வாய்க்கு ருசியா நல்ல சமைப்பாள். அவளை கல்யாணம் செஞ்சுக்கிட்டா நீ இப்ப இருக்கிறதை விட ஒரு சுத்து ஏறிடுவ. என்னைப் பார்த்தல்ல எப்படி ஜம்முனு இருக்கேன்..”
‘எத்தனை முறை உரைத்தாலும் இந்த அத்தைக்கு புரிய வைக்க முடியாது..’ சலித்தவாறு அறைக்குள் புகுந்தான் வீர். தன்னுடைய கம்பெனிக்கு கிளம்புவதற்காக தயாராகி வெளியே வந்தான். அச்சமயம் ரம்யாவும் தன் பள்ளி சீருடையில் தயாராக வெளியே வந்தாள்.
“ரம்யாவை நானே ஸ்கூல்ல டிராப் செஞ்சிடறேன். நீங்க பத்திரமா வீட்டுக்கு போங்க..
ரம்யா உன் ஸ்கூல் பேக் எங்க..”
“கீழ ஸ்கூட்டியில் இருக்கு மாமா.. ”
“ஓகே போலாம் வா…”
“வீர், நீ சொல்ற மாதிரி அவள் காலேஜ் முடிச்ச பிறகு கல்யாணம் பண்ணிக்கலாம். அதுவரைக்கும் நானும் ரம்யாவுமாவது உன் கூட தங்கிக்கிறோம் இவ்வளவு பெரிய பிளாட்டில் நீ தனியா இருக்க…”
“தனியா இருக்கிறதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. எனக்கு கல்யாணம் ஆகி பொண்டாட்டின்னு ஒருத்தி வர வரைக்கும் இந்த பிளாட்டில் யாரும் தங்க வராதீங்க.. ”
தன் அத்தைக்கு பதில் உரைத்த பிறகு வீர் வெளியே வர, தன் வாய் விட்டே முனவிக் கொண்டார் நீலாவதி.
“என் பொண்ணு ஒருத்தி இருக்கும்போது பொண்டாட்டின்னு எவள் வருவாள், வர விற்றுவேனா நான்..?”
வீர்-ன் பிளாட் ஐந்தாவது மாடியில் இருக்கிறது லிப்ட் மூலம் கார் பார்க்கிங்கிற்கு வந்தனர்.
ஸ்கூல் பேக்கை எடுத்துக்கொண்டு காரில் ஏறச் சென்றாள் ரம்யா.
“ஏய் நில்லுடி மாமா கூட காரில் போகும்போது சிலை மாதிரி உட்கார்ந்து போகாத மாமா கிட்ட அன்பா நாலு வார்த்தை பேசு சரியா..”
“ஏன்மா உன் புத்தி இப்படி போகுது, மாமா தான் தெளிவா சொல்லிட்டாருல்ல..”
“என்ன பண்ணனும்னு நீ எனக்கு சொல்லித் தராத, நான் என்ன சொல்றேனோ அதை செய் போய் உட்காரு போ..”
தன் தாயை திருத்த முடியாது என்ற சலிப்போடு காரில் ஏறிக் கொண்டாள் ரம்யா.
வீர்-ன் ஆபீஸ் செல்லும் வழியில் தான் ரம்யாவின் ஸ்கூல் உள்ளது. ஸ்கூல் வாசலில் காரை நிறுத்தியவன் அவளுக்கு அறிவுரை கூறினான்.
“ரம்யா உனக்கு பைனல் எக்ஸாம் எப்போ வருது..”
“இன்னும் இரண்டு வாரம் இருக்கு மாமா..”
“எக்ஸாமில் கவனம் செலுத்தி நல்லபடியா படிச்சு எழுது உன் ஃப்யூச்சரை நான் பார்த்துக்கிறேன். அம்மா பேச்சை கேட்காத சரியா..”
“நான் என்னைக்கு மாமா அம்மா பேச்சை கேட்டிருக்கேன். அவங்களாவே வற்புறுத்தி அந்த துணியை போட வச்சாங்க எனக்கு அதை போட்டுக்கிறதில் இஷ்டமே இல்லை..”
“குட் கேர்ள் .. உன் படிப்பில் மட்டும் கவனம் செலுத்து, போயிட்டு வா..”
தன் மாமாவிடம் பேசி விட்டு ரம்யா ஸ்கூலுக்குள் அடி எடுத்து செல்ல, உடனே அவளின் தோழிகள் சூழ்ந்து கொண்டனர்.
அவளை பார்ப்பதற்காக இல்லை அவளின் மாமா ‘வீர் விஜயனை’ சைட் அடிப்பதற்காக..
“வாவ் உன் மாமா செம்மையா இருக்காரு.. எத்தனை முறை கேட்டிருக்கோம் ஒரு முறை அவரை ஸ்கூலுக்குள் அழைச்சிட்டு வான்னு.. எங்களை எல்லாம் அறிமுகப்படுத்தி வைக்கலாம்ல..”
“ரொம்ப அலையாதிங்கடி என் மாமா ரொம்ப கண்டிப்பான ஆளு, நீங்க சைட் அடிக்கிற விஷயம் தெரிஞ்சா அதுக்கு கூட திட்டு விழுகும். என் மாமா ஒரு கொள்கையோடு இருக்காரு..”
“சைட் அடிக்கிறது எல்லாம் தனிமனித சுதந்திரம், அதை யாரும் குறை சொல்ல முடியாது…”
தன் தோழிகள் மாமாவை நினைத்து உருகுவதை பார்த்து எதார்த்தமாய் கடந்து சென்றாள் ரம்யா.
“அது என்னடி கொள்கை…”
ரம்யாவின் தோழி ஒருவள் விசாரிக்க..
“அவர் சொந்தமா ஒரு பிசினஸ் செஞ்சிட்டு இருக்காரு, அதே துறையில் அவர் கூட படிச்ச இன்னொரு ஃப்ரண்டும் பிசினஸ் பண்றாரு, கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா இவங்களுக்குள்ள போட்டி நடக்குது. இன்னும் மூணு மாசம் தான் இருக்கு அதுக்குள்ள அவங்களுடைய துறையில் யார் மேல் இடத்துக்கு வராங்கன்னு பார்க்க போறாங்க..”
“சரி இதுல ஜெயிக்கிறவங்களுக்கு என்ன கிடைக்கும்..”
“அதெல்லாம் எனக்கு தெரியாது அதை பற்றி என் மாமா கிட்ட நான் கேட்டதில்லை..”
வீர் எப்போதும் யாரிடமும் மோதும் குணம் கொண்டவன் இல்லை. விட்டுக் கொடுத்துப் போபவன். ஆனால் தன்னைத் தேடி வரும் சவாலை விட்டுக் கொடுப்பவன் இல்லை.
அப்படி வீர் உடன் சவால் விட்டது யார். இந்த போட்டியில் வெல்வோருக்கு என்ன கிடைக்கப் போகிறது.
தன் அலுவலகம் நோக்கி காரை செழுத்திக் கொண்டிருந்த வீர் ATM-ல் பணம் எடுப்பதற்காக காரை ஓரம் கட்டினான்.
எப்போதும் தனது ஜிம் நெஞ்சை நிமிர்த்தி நேர் பார்வையோடு தான் நடப்பான் வீர். அதே பார்வையோடு ATM -னுள் நுழைய சரியாக அந்நேரம் கைபேசி ஒலித்தது.
ஏற்கனவே உள்ளே ஒரு ஆள் இருப்பதை கவனிக்காது அவன் கதவைத் திறக்க, சரியாக வெளியே வந்தாள் வைஷ்ணவி.
கைபேசியை பார்த்துக் கொண்டே அடியெடுத்து வைத்தவன் வைஷ்ணவியின் மீது மோதினான். இருவருமே தன் மீது இடித்தது யார் என பார்வை உயர்த்தி நோக்கினர்.
இனி தினம் தினம் இரவில் உரக்கமல்லோ கெடும்..😉
தொடரும்…😉
