இதுவரை…
சித்து மற்றும் வைஷூவின் நிச்சயதார்த்தம் முடிந்திருக்க , அவர்களின் நிச்சய புகைப்படம் எதிர்பார்த்ததை விட வேகமாய் பரவியது. மறுபுறம் வைஷூ காலையில் இருந்து ஆபிஸிற்கு வரவில்லையே என காத்துக் கொண்டிருந்தான் வீர்.
இனி….
தன் அலுவலக அறைக் கதவு திறக்கப்படும் ஒவ்வொரு நேரமும் உள் நுழைவது வைஷ்ணவியாக இருக்காதா என ஏக்கத்தோடு தலை நிமிர்ந்தான் வீர்.
ஆனால் இம்முறையும் அவன் ஏமாந்து போனான் உள்ளே வந்திருந்தது ஜானவி.
“சார், மீட்டிங்க்கு டைம் ஆச்சு நீங்க மட்டும் தான் வர வேண்டியது இருக்கு ..”
மீட்டிங் ஹாலில் ப்ராஜெக்ட் விசயமாக பேசுவதற்காக அவனின் ஆபீசில் வேலை செய்யும் சில நபர்கள் கூடியிருந்தனர் . அதில் விஷ்ணுவும் ஒருவன் .
இந்த மீட்டிங்கில் வைஷ்ணவியும் இருக்க வேண்டியது அவசியம் . ஆனால் அவளை காலையில் இருந்து காணவில்லை.
ஈடுபாடு இல்லாது மீட்டிங் அறைக்கு சென்றான் வீர்.
அந்த ப்ராஜெக்டுக்கு தலைமை பொறுப்பு ஏற்றிருந்த நபர் பேச துவங்கினார் . விஷயத்தை எடுத்துரைத்து முடித்த பிறகு அனைவரும் கைத்தட்டினர் .சிறப்பாக இருந்தது எனவும் கூறினர். ஆனால் வீர் – ன் யோசனை மட்டும் வைஷ்ணவியின் ஞாபகத்தில் மூழ்கி இருந்தது.
“சார் உங்களுக்கு என்னுடைய ப்ராஜெக்ட் விளக்கம் பிடிக்கலையா , வேற ஐடியா யோசிக்கட்டுமா..” என அந்த தலைமை ஆள் கேட்க
அப்போதுதான் நினைவு திரும்பினான் வீர்.
“Iam sorry… நீ கொடுத்த விவரத்தை நான் கவனிக்கலை. அதான் டீம் மெம்பர்ஸ் எல்லாரும் ஏத்துக்கிட்டாங்களே ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்ணுங்க…”
எந்த தகவலும் உரைக்காது வைஷ்ணவி அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து இருப்பதும், வீர்-ன் நினைவில்லாத நடவடிக்கைகளும் உறுத்தலாக தெரிந்தது விஷ்ணுவிற்கு.
வீர்-ன் மனநிலை வித்தியாசமாக தெரிய, விஷ்ணு உடனே ஜான் அங்கிளுக்கு அழைப்பை விடுத்து விஷயத்தை கூறினான்.
அவர் வந்து சேரும் நேரம் மதிய வேலை தாண்டியிருக்க அறைக்குள் நுழைந்ததை கூட கவனிக்காது யோசனையில் இருந்தான் வீர்.
“வீர் உனக்கு என்ன ஆச்சு ,நான் உள்ள வந்ததை கூட நீ கவனிக்கலை. இவ்வளவு ஆழ்ந்த யோசனையில் இருக்க ..”
“அங்கிள் எனக்கே தெரியலை. என்னால எதுலையும் கான்சன்ட்ரேட் பண்ண முடியலை… ”
“ஏன், உடம்பு சரியில்லையா …”
“உடம்புக்கு என்ன குறைச்சல் ,மனசும் மூளையும் தான் என்னை ஆட்டிப்படைக்குது. காலையிலிருந்து வைஷ்ணவியை காணலை கால் பண்ணாலும் எடுக்கலை..”
“வீட்டுக்கு போய் பார்க்க வேண்டியதுதானே..”
“அவள் ஹாஸ்டலில் தங்கி இருக்காள். போகலாம்னு தான் தோனுது, ஆனால் அவளா முடிவை சொல்ற வரைக்கும் தொந்தரவு கொடுக்க வேண்டாம்னு விலகி இருக்கேன். இப்போ போய் பேசினா நான் அதிகம் உரிமை எடுக்கிறதா நினைப்பாளோனு குழப்பமா இருக்கு..”
இவன் சொத்தில் பாதியை அவளுக்கு எழுதி வைத்த விஷயத்தை இன்னும் அங்கிள் இடம் பகிரவில்லை.
“இது என்னடா.. காதலி மேல பாசம் வந்துச்சுன்னா, உடனே காட்டிடனும் அதை விட்டுட்டு காட்டலாமா வேண்டாமானு யோசனையில் இருந்தா, எந்த வேலையும் செய்ய முடியாது. முதல்ல கிளம்பு அவளை நேரில் போய் பார்த்தால் தான் நீ மனுசனாவே இருப்ப …”
குழப்பத்தில் இருந்த வீர் அங்கிளின் தெளிவான பேச்சில் கிளம்பலாம் என எழுந்தான்.
“ஓகே அங்கிள், நான் போய் வைஷ்ணவியை சந்திக்கிறேன். அப்புறம் உங்களுக்கு கால் பண்றேன்…”
வீர் அங்கிருந்து நேராக வைஷ்ணவியின் ஹாஸ்டலுக்கு சென்றான். கேட்டில் இருந்த வாட்ச்மேன் அவனை தடுத்தார்.
“ சார் நில்லுங்க.. லேடிஸ் ஹாஸ்டல்ல நீங்க பாட்டுக்கு உள்ள போறீங்க..”
” இந்த ஹாஸ்டலில் தங்கியிருக்க வைஷ்ணவியை பார்க்கணும்..” என்றான்.
“இந்த ஹாஸ்டலில் வைஷ்ணவி என்கிற பெயரில் யாரும் இல்லை. எங்க ஓனரோட பெயர் தான் வைஷ்ணவி..”
“இல்லை நிறைய பெண்கள் தங்கி இருக்கிறதால உங்களுக்கு பெயர் ஞாபகம் இல்லாமல் கூட போகலாம். இதோ இவங்க தான் வைஷ்ணவி..”
வீர் தன்னுடைய மொபைலில் இருந்த வைஷூவின் புகைப்படத்தை காண்பித்தான்.
“ஆமா இவங்க பெயர் வைஷ்ணவி தான். ஆனால் இந்த ஹாஸ்டலில் தங்கலை. இந்த ஹாஸ்டலுடைய ஓனரே இவங்க தான். அன்னைக்கு நீங்க இவங்க கூட காரில் வந்து இறங்கினதை பார்த்தேன். கல்யாணத்துக்கு போகலையா நீங்க..” என வாட்ச்மேன் கேட்க
“என்ன சொல்றீங்க.. யாருக்கு கல்யாணம் ..”
“வைஷ்ணவி மேடம்க்கு தான்… இன்னைக்கு நிச்சயதார்த்தம், நாளைக்கு கல்யாணம்…”
” அவங்க உங்க கிட்ட சொல்லலையா.. ” என வாட்ச்மேன் கேட்க
“என்ன திடீர்னு கல்யாணம், நீங்க சொல்றது உண்மைதானா..!”
“நான் எதுக்கு சார் பொய் சொல்ல போறேன். பத்து வருஷமா இங்கதான் வாட்ச்மேனா வேலை செய்றேன். அந்த பெண்ணுடைய அப்பனும் குடிகாரனா இருக்கான், பொண்ணை கரை சேர்த்துவானா இல்லையானு சந்தேகமா இருந்தது. ஏதோ புண்ணியத்தில் நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைச்சிருக்கு.. ”
இவர்கள் பேசிக் கொண்டிருந்த சமயம் ஹாஸ்டலில் இருந்து இரண்டு பெண்கள் வெளியே வந்தனர்.
“ஹேய் இங்க பாருடி, இது அவர் தானே அன்னைக்கு காரில் வந்து இறங்கினாரே..”
“ சார் ,ஒரு நிமிஷம் உங்க கூட தனியா பேசணும் வெளியே வரீங்களா..”
வாட்ச்மேனிடம் பேசிக் கொண்டிருந்த வீர்-ஐ தனியாக அழைத்துச் சென்றனர் அந்த பெண்கள்.
“ நீங்க பேசிட்டு இருந்ததை நாங்க கேட்டோம். வைஷ்ணவியை தேடி வந்திருக்கீங்களா..”
“ஆமா..”
பதில் உரைத்தவனின் முகத்தில் ஏராளம் கேள்விகளும் குழப்பங்களும் இருந்தது.
” உங்க முகத்தை பார்த்தாலே தெரியுது அந்த வைஷ்ணவி உங்களையும் ஏமாத்திட்டாளா..”
அந்தப் பெண்களின் பேச்சில் வீர் உடனே அதிர்ந்து போய் பார்த்தான்.
” நாங்க இந்த ஹாஸ்டலில் இரண்டு வருஷமா தங்கியிருக்கோம். கொடுத்த பணத்துக்கு சரியான பராமரிப்பே இல்லை . வேற வழி இல்லாம இங்க இருக்கோம். போய் கம்ப்ளைன்ட் பண்ணாலும் எக்குத் தப்பா ஏதாவது பேசி எங்க வாயை அடைகிறாங்க, முக்கியமா அந்த வைஷ்ணவி தான் இதுல பெரிய ஃபிராடு..
இன்னைக்கு காலையில் தான் எங்களுக்கே தெரிய வந்தது. யாரோ பிசினஸ்மேன் சித்தார்த் என்பவர் கூட அவங்களுக்கு கல்யாணம் முடிவாகி இருக்காம். இந்நேரம் நிச்சயதார்த்தம் முடிஞ்சிருக்கும். நாளைக்கு கல்யாணமாம்.. உங்க முகத்தை பார்த்தா நெருங்கி பழகுன உணர்வு தெரியுது. அந்த ஏமாற்றுக்காரியை நம்பாதீங்க இந்த விஷயத்தை நான் சொன்னேனு அவள் கிட்ட சொல்லிடாதீங்க சார் அப்புறம் எனக்கு தான் பிரச்சனை நாங்க வரோம்…”
அந்தப் பெண்கள் முழு விவரத்தையும் கூறிவிட்டு செல்ல, வீர் ஒரே சமயத்தில் எத்தனை விஷயத்தை ஏற்றுக் கொள்வான். எதை நம்பலாம், வேண்டாம் என்ற குழப்பத்தில் பிரம்மித்து நின்றிருந்தான்.
அந்நேரம் அவனின் முன்னே ஒரு கார் வந்து நின்றது . அதிலிருந்து இறங்கியது வீர்-ன் நெருங்கிய பள்ளி நண்பன் டாக்டர் சரண்.
“வீர் , நினைச்சேன் நீ இங்க தான் இருப்பேன்னு. உன்னை எங்கெல்லாம் தேடுறது . முதல்ல உன் காரில் ஏறு, என் வீட்டுக்கு உடனே போகணும்..”
“ சரண் எனக்கு ஒரே குழப்பமா இருக்குடா, வைஷ்ணவியை காணலை இங்க வந்து விசாரிச்சா என்னென்னமோ சொல்றாங்க..”
“உன் குழப்பத்துக்கு எல்லாம் பதில் என் வீட்டில் இருக்கு, நீ கார் ஓட்டுவியா இல்ல என்னுடைய காரிலேயே போகலாமா..”
“என்னுடைய குழப்பத்துக்கு பதில் கிடைத்தால் போதும், நான் எங்க வேணா வருவேன் நீ முன்னாடி போ நான் வரேன்..”
சரணின் வீட்டு காம்பௌண்டினுள் கார் நுழைந்த சத்தம் கேட்டு அழுது கொண்டிருந்த சந்திரிகா வியந்து நிமிர்ந்தாள்.
“உள்ள வா வீர், இந்த குழப்பத்துக்கு எல்லாம் காரணமான ஒருத்தி என் வீட்டில் இருக்காள்..”
சரண் வீர்-ன் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல, உள்ளே அழுது சோர்ந்த நிலையில் இன்னுமும் கண்ணீர் வடித்தவாரே நின்றிருந்தாள் சந்திரிகா.
“சந்திரிகா உனக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி அழுகிற..”
அவளின் கண்ணீரைக் கண்ட வீர் பதற்றத்தோடு விசாரித்தான். ஆனால் குற்ற உணர்ச்சியில் தலைகுனிந்து நின்றாள் சந்திரிகா.
“கேக்குறாங்கல்ல சொல்லு..”
சரண் சந்திரிகாவிடம் கத்தி பேசினான்
“டேய் என்னடா பழக்கம் இது, சத்தம் போட்டு பேசுற அப்படி என்ன தப்பு பண்ணினாள்…”
“இவளை உன்னுடைய தங்கச்சி மாதிரி நினைச்சு கல்யாண வேலை எல்லாத்தையும் தலையில் தூக்கி போட்டு செஞ்சல்ல, உன் தங்கச்சி உனக்கு செஞ்ச துரோகம் என்ன தெரியுமா..? அந்த நாடகக்காரி வைஷ்ணவி கூட சேர்ந்து இவளும் ஒத்துழைச்சி இருக்காள்..”
“கடவுளே எல்லாரும் என்ன தான் சொல்ல வரீங்க, வைஷ்ணவியை பற்றி நீங்க என்னென்னமோ சொல்றது என் மனசுக்குள்ள ரொம்ப பாரமா நிக்குது.
சந்திரிகா நீயாவது கொஞ்சம் தெளிவா சொல்லு, இவன் என்ன சொல்ல வரான். வைஷ்ணவியை உனக்கு முன்னாடியே தெரியுமா ..?”
“வீர் அண்ணா, வைஷ்ணவி என்னுடைய கல்லூரி காலத்தில் இருந்தே நெருங்கிய தோழி. நல்ல பொண்ணு தான் ஆனால் பணத்துக்காக சின்ன சின்ன ஃபிராடு வேலை எல்லாம் செய்வாள். கடைசியா அவள் கிட்ட பேசும்போது தான் வீர் என்கிற ஒரு பிசினஸ்மேனை காதலித்து ஏமாற்றினால் சித்தார்த் என்கிறவர் 20 லட்சம் பணம் தரதா பேரம் பேசி இருக்கிறதா சொன்னாள்..”
சந்திரிகா கூறிய விஷயம் கேட்டு அதிர்ந்து போனான் வீர். இது உண்மையாக இருக்கக் கூடாது.
“இல்ல நீங்க சொல்றது உண்மை இல்லை. இதில் ஏதோ குழப்பம் நடந்திருக்கு. வைஷ்ணவி அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது..”
“இன்னுமாடா நீ அவளை நம்புற , இங்க பாரு நம்மளுடைய நண்பர்கள் வட்டாரத்தில் சித்தார்த் உடைய நிச்சயதார்த்த போட்டோ தான் பெரிய டாப்பிக்கா போயிட்டு இருக்கு..”
சரண் அவனின் மொபைலில் இருந்த நிச்சயதார்த்த புகைப்படத்தை காட்ட அதை கையில் வாங்கிய வீர் ஜூம் செய்து பார்த்தான் . உண்மையில் வைஷ்ணவி தான், புன்னகையோடு நிற்கிறாளே … !!
“நீ நினைக்கிற மாதிரி அந்த பொண்ணை நீ எதார்த்தமா சந்திக்கலை அந்த நாளில் அதே ஏடிஎம்க்கு நீ வருவேன்னு தெரிஞ்சு தான் உனக்காக உள்ளே காத்துட்டு இருந்திருக்காள். நீ வரும் சமயம் சரியா அவளும் வெளியே வர மாதிரி நடிச்சு எதார்த்தமான ஒரு சந்திப்பை ஏற்படுத்தி இருக்காள்.
இதுநாள் வரை தன்னுடன் பேசி பழகியது எல்லாம் நாடகமா, வைஷ்ணவி இப்படி நடந்து கொண்டது நம்ப முடியவில்லை என அவனின் உள்ளம் தாங்காத அதிர்ச்சியை சுமந்து கொண்டிருந்தது.
சித்துவும் வைஷ்ணவியும் புன்னகையோடு நின்ற புகைப்படத்தை பார்த்த வீர்-ன் கண்கள் கலங்க உடனே அங்கிருந்து கிளம்பினான்.
வீர் நிச்சயம் சித்துவை சந்திக்க தான் செல்கிறான் என தெரிந்த சரண் உடன் சென்றான்.
😉
