Epi – 26 – மாங்கல்யம் தந்துனானே

இதுவரை… 

  சித்துவின் இல்லத்திற்கு சென்று வைஷ்ணவியை சந்தித்த வீர் அவளின் நாடகத்தை அறிந்து கொள்ள, என் அழுகையாவது உங்களை திருப்தி செய்யட்டும் என அங்கிருந்து விலகி வெளியே வந்தான். 

இனி… 

  சித்துவின் இல்லத்தில் இருந்து வெளியே வந்த வீர், கையில் மது பாட்டிலுடன் கடற்கரை சாலையில் தள்ளாடி நடந்தான்.  அவ்வேளையில் அவனின் தாய் ரத்னா வந்த கார் அவன் மீது மோத அதில் தடுமாறி தரையில் விழுந்தான். 

   “வீர் உனக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி குடிச்சிருக்க..” என ரத்னா கேட்க 

  ” அவன் ஏற்கனவே வருத்தத்தில் இருக்கான். நீங்க வேற கிட்ட போகாதீங்க நானே பார்த்துக்கறேன்..” என்றான் சரண். 

  தன்னைத் தொட்டிருந்த தாயின் கையை விலக்கிவிட்டு மது போதையில் தடுமாறியவாரே எழுந்து அமர்ந்தான் வீர். ரத்னாவை பார்த்து நம்பிக்கை துரோகி என அழுத்தமான வார்த்தையை உரைத்தான். 

  போதையில் கூட தன்னை வாய்த்தவறியும் அம்மா என அழைக்க மாட்டான் போல என்று வேதனையோடு கண்டார் ரத்னா. 

   “நீங்க என் வாழ்க்கையில் வந்த வரம் நான் யார் மேல் எல்லாம் நம்பிக்கை வைக்கிறேனோ அவங்க எல்லாருமே என்னை ஏமாத்துறாங்க,  என்னோட ஃப்ரண்டு சித்து, ஆபீஸ்ல நான் அதிகமாக நம்புன என்னுடைய பழைய மேனேஜர், இப்போ நான் காதலிச்ச பொண்ணு…

        என்னை பார்த்தால் இழிச்சவாயன்னு எழுதி ஒட்டிருக்கா உங்களுக்கெல்லாம்..?” 

   வீர் உரைப்பதன் அர்த்தம் பாதி புரிய, மனம் வேதனைப்படும் அளவிற்கு யார் தன் மகனை துன்புறுத்தியது என அறிந்து கொள்ள நினைத்தார் ரத்னா.  

      “சரண் என்ன நடந்துச்சு, வீர் என்ன சொல்றான்..” 

    “ உங்களுக்கு எதுக்கு அதெல்லாம் விடுங்க, நாங்க கிளம்புறோம்..”

   “ ப்ளீஸ் கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் பதில் சொல்லு,  என் பையன் இப்படி கஷ்டப்படுறதை என்னால் பார்க்க முடியலை…”

    போதை தெளிந்தால் வீர், இவரிடம் பேசியதற்காக திட்டுவான். அந்த காரணத்திற்காக தான் சரண் ரத்னாவை ஒதுக்கி வைக்கிறானே தவிர, ரத்னா மீது வயதுக்கு உண்டான மரியாதை உள்ளது.

  ” ஆபீஸ்ல பர்சனல் அசிஸ்டன்ட்டா வைஷ்ணவின்னு ஒரு பொண்ணு வேலைக்கு சேர்ந்தாள். வீர்க்கு அந்த பொண்ணு மேல காதல் வந்துச்சு…  காதலை சொல்லும் போது அந்த பொண்ணு, தான் ஒரு அனாதை தனக்கு எந்த சொத்தும் இல்லைனு சொல்லி வேற ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சுக்க சொன்னாள்.

      உடனே இவன் தன்னுடைய சொத்தில் பாதியை அந்த பொண்ணுக்கு எழுதி வச்சிட்டான்.  ஆனால் அதுக்கு அப்புறம் தான் தெரிய வந்துச்சு இவனுடைய காலேஜ் ஃப்ரண்டு சித்து அனுப்பின நாடகக்காரி தான் அந்த பொண்ணு.  காதல் தோல்வி,  நம்பிக்கை துரோகம்னு எல்லா ஏமாற்றத்தையும் ஒரே நாளில் அனுபவிச்சுட்டான்.  அந்த விரக்தியில் தான் இருக்கான்…” என சரண் விசயத்தை உரைக்க 

  “டேய் சரண் , இதெல்லாம் அவங்க கிட்ட ஏன் சொல்ற, நான் கஷ்டப்படுறதை பார்த்து இன்னும் சந்தோஷம் தான் கொள்வாங்க…”

  பேசியவாரே தடுமாறி எழுந்து நின்று, அவர்களின் கார் மீதே கையை ஊன்றி போதையோடு அவர்கள் இருவரையும் பார்த்தான் வீர்.

    “சிரிங்க சந்தோசமா சிரிங்க… அங்க சித்துவும் வைஷ்ணவியும் சந்தோஷமா இருக்காங்க, நீங்களும் அதே மாதிரி என்னை பார்த்து சந்தோசப்படுங்க… ”

  “வீர் அந்த பொண்ணு உன்னை ஏமாத்திட்டான்னு இந்த அளவுக்கு குடிக்கணுமா ..”

   “அவள் என்னை ஏமாத்தலை, அதான் தெளிவா சொல்லிட்டாளே, நான் தான் அவள் கிட்ட போய் காதல்னு நின்னேன்.  எனக்கு தான் புத்தி இல்லை. போகட்டும் என்னோடு போட்டி போட்டு ஜெயிக்கணும்னு சித்துவுக்கு ஆசை அவனே ஜெயிக்கட்டும். வசதியான வாழ்க்கை வாழனும்னு வைஷ்ணவிக்கு ஆசை அதுவும் கிடைக்கட்டும்…”

   “எல்லாத்தையும் அவங்களுக்கு விட்டுக் கொடுத்துட்டு நீ ஜோக்கர் மாதிரி நிக்க போறியா..”

  வீர-ன் மனதை தூண்டிவிடும் வகையில் பேசினார் ரத்னா. 

   “நான் கூட உன்னை என்னமோ நினைச்சேன்.  ஒவ்வொரு முறை என்னை எதிர்த்து பேசும் போதும் தனியா வாழ்ந்து காட்டுற தில்லானா ஆளா தான் பார்த்தேன்.  ஆனா இப்போ தான் தெரியுது. நீ ஒரு கோழை தோல்வியை உடனே ஏத்துக்கற ஒரு ஜோக்கர்..”

   ஹரிஹரனுக்கு ஒன்றும் புரியவில்லை.  ஒருபோதும் வீர்- ன் மனதை காயப்படுத்தும் வகையில் ரத்னா பேசமாட்டார், ஏன் இவ்வாறு பேசுகிறாள் என பார்த்தார். 

  மனதிற்குள் தாயின் மீது ஏக்கம் இருந்தாலும், ரத்னாவின் முகத்தை பார்த்ததுமே கோவம் தான் முதலில் வருகிறது.  அதனால் அந்த வெறுப்பை தான் ரத்னாவாக அவன் காண்கிறான்.

        தான் வெறுக்கும் ஒரு நபர், தன்னை ஜோக்கர் என பட்டமளித்து அழைப்பதை வெறுத்தான் வீர். 

   “என்னை ஜோக்கர்னு சொல்லாதீங்க மத்தவங்களை மாதிரி மனசை காயப்படுத்துற புத்தி எனக்கு கிடையாது…” 

   “பதிலுக்கு பதில் பேச வேண்டிய இடத்தில் பேசணும். இப்படி எல்லா இடத்திலும் விட்டுக் கொடுத்துப் போனா அதுக்கு பேரு ஜோக்கர்.…

        வாங்க ஹரி நாம கிளம்பலாம். இனி இந்த ஜோக்கரை நான் என் வாழ்க்கையில் சந்திக்கவே விரும்பலை. என்னை பொறுத்த வரைக்கும் இவன் ஒரு  LOSER …”

    ரத்னா காரின் முன் சீட்டில் அமர, காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்து ஸ்டார்ட் செய்தார் ஹரி

     சரண் உடனே வீர்-ஐ இழுத்து ஓரமாக அழைத்துச் சென்றான். 

   கார் ஒட்டுகையில் ரத்னாவிடம் தன் சந்தேகத்தை கேட்டார் ஹரி. 

   “ரத்னா உண்மையில் பேசுனது நீதானா, இல்ல உனக்குள்ள ஏதாவது ஆத்மா வந்துடுச்சா..”

   “என்ன சொல்றீங்க ஹரி ..”

    “நானோ, இல்லை நம்ப பொண்ணு சைந்தவியோ அந்த வீர்-ஐ  பற்றி ஒரு வார்த்தை தப்பா சொன்னாலும் எங்ககிட்ட கோச்சிப்ப, இப்ப நீயே அவனை இவ்வளவு மோசமா பேசிட்டு வர ..” 

   “ஒரு அம்மாவா அவனுக்கு தைரியத்தை தான் நான் கொடுத்திருக்கணும்.  ஆனால் நான் அன்பா சொல்ற எந்த வார்த்தையும் அவனோட புத்திக்குள் ஏறாது.  அதனால் தான் அவனுடைய ஈகோவை தூண்டி விட்டேன்.

      எப்பவுமே அவன் மனசுக்குள் என்னை வெறுப்பான இடத்தில் தான் வச்சு பார்க்கிறான் . அப்படிப்பட்ட நானே அவனை கிண்டல் பண்ணா,  அவன் அதுக்கு மாறா தானே யோசிப்பான்.  நீங்க வேணா பாருங்க,  கண்டிப்பா அவன் இந்த பிரச்சனையை சரியா ஹேண்டில் பண்ணுவான்..” 

  “அதானே பார்த்தேன். ரத்னா அவளுடைய பையனை விட்டுக் கொடுக்குறதா பூமியே இரண்டா பிளக்கலாம், அது மட்டும் நடக்காது..”

  “ஏன் உங்களுக்கு நடக்கணும்னு ஆசையா இருக்கா..”

   “அம்மாவையும் பையனையும் பிரிச்ச பாவம் எனக்கு எதுக்கு..? உன்னோட அன்பை புரிஞ்சுகிட்டு உன் கூட அவன் சேர்ந்து வாழ்ந்தா எனக்கும் சந்தோசம் தான்..” என்றார் ஹரி.

  புரிந்து கொண்ட தன் கணவரின் மனதை அன்போடு பார்த்தார் ரத்னா.  வீர்-ன் மனம் தைரியம் கொள்ள வேண்டும் என இறைவனை வேண்டிக் கொண்டே இல்லம் திரும்பினர். 

  போதையில் இருந்த வீர்-ஐ அவனுடைய பிளாட்டிற்கு அழைத்துச் சென்றான் சரண். 

  தன்னுடைய இல்லத்திற்கே அழைத்து சென்றிருப்பான்.  ஆனால் சந்திரிகாவின் முகத்தில் விழிக்க விருப்பம் கொள்ளாது தான் சரண்-ம் வீர்-ன் இல்லத்திற்கே வந்து சேர்ந்தான். 

  உள்ளே நுழைந்த பிறகு சரண் கதவை தாழ்ப்பாள் போட வீர் அமர்ந்து புலம்பிக் கொண்டே இருந்தான். 

     “அவங்க யாருடா என்னை ஜோக்கர்னு சொல்றதுக்கு.. நான் யாருன்னு நாளைக்கு காட்டுறேன்.  நான் தோத்துப்போனவனா ..? அவளுக்கு எழுதி வச்ச ஒவ்வொரு பைசாவும் நானே உழைச்சு சம்பாதிச்சது. அதை எப்படி திரும்ப வாங்கணும்னு எனக்கு தெரியும்..” 

   “டேய் அந்த அம்மா ஏதேதோ பேசி உன்னை தூண்டி விடுறாங்க, நீ குழப்பம் ஆகாத…

       அவங்களுக்கு கல்யாணம் நடக்குதோ நடக்கலையோ அது நமக்கு தேவையில்லை. நாளைக்கு காலையில் விடிஞ்சதுமே போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளைன்ட் கொடுக்கிறோம்.  அந்த பொண்ணு உன்னை ஏமாத்தி சொத்தை எழுதி வாங்குனதா கேஸ் போடுறோம். முடிஞ்ச வரைக்கும் சொத்து சித்து உடைய கைக்கு போகாமல் பார்த்துக்கனும்… ” என்றான் சரண்.  

  சரண் கூறியதெல்லாம் வீர்-ன் செவிகளுக்குள் எட்டவில்லை . தான் யார் என்று காட்டுகிறேன் என்ற வார்த்தை தான் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே போதையோடு அந்த இரவை கழித்தான். 

  நண்பர்கள் இருவரும் ஹாலில் இருந்த சோஃபாவிலேயே ஆளுக்கொரு புறப்புறமாக தலை சாய்த்துக் கொள்ள, காலை விடியலில் சரணின் மொபைல் எண்ணிற்கு சந்திரிகா விடுத்த அழைப்பில் கண் விழித்தான் சரண். 

  கண்ணை திறந்து போனை கையில் எடுத்தவன் அழைப்பை மறுக்கத்தான் நினைத்தான். ஆனால் மனம் கேளாது அட்டென்ட் செய்தான். 

  “என்னங்க, எங்க இருக்கீங்க ராத்திரியில் இருந்து நீங்க வீட்டுக்கு வரவே இல்லை ..”

  “நான் வீட்டுக்கு வரலைன்னு உனக்கு இப்போ தான் தெரியுதா ..”

   “உங்களுக்காக ரொம்ப நேரமா காத்திருந்தேன். ஹால் சோஃபாவிலேயே தூங்கிட்டேன்.  இப்போ தான் எழுந்தேன் வீடு முழுக்க தேடி பார்த்துட்டு நீங்க இல்லைன்னு தான் கால் பண்ணேன்..”

  அவள் தன்னை நினைத்து கவலை கொண்டிருக்கிறாள் என புரிந்தது.  ஆனால் அந்த அன்பை வெளிப்படுத்துவதற்கு முழு மனம் வரவில்லை சரணுக்கு 

  “நான் இப்போ வீர் கூட அவனுடைய வீட்டில் தான் இருக்கேன். வர டைம்   ஆகும்..”

  “அவர் எப்படி இருக்கா….”

  சந்திரிகா பேசிக் கொண்டிருந்த சமயமே சரண் அழைப்பை துண்டித்தான்.  சகஜமாக பேசும் அளவிற்கு மனம் இன்னும் சமாதானம் கொள்ளவில்லை.  பேசிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்பட்டதில் வருத்தம் கொண்டாள் சந்திரிகா. 

  அழைப்பை துண்டித்த சரண், வீர் படுத்திருந்த சோஃபாவை பார்த்தான்.  அவனைக் காணவில்லை.  உடனே அறைக்குள் சென்று தேட அங்கும் அவன் இல்லை. கழிவறை, கிச்சன்,  மீதமிருந்த மற்றொரு படுக்கையறை என அனைத்து இடங்களிலும் தேடியாயிற்று அவன் எங்கும் இல்லை. 

  அப்போது தான் நேற்று இரவு அவளிடம் இருந்து சொத்தை திரும்ப வாங்குவேன் என வீர் உரைத்த விஷயம் நினைவிற்கு வந்தது. உடனே சித்துவின் இல்லத்திற்கு சென்றான் சரண். 

  சித்துவின் வீட்டில் ஏதேனும் ரகளையாக இருக்கும் என்ற எண்ணத்தோடு சரண் அங்கு சென்றடைய ,மாறாக வீட்டின் அலங்காரம் ,மேள சத்தம் , உறவினர்களின் புன்னகையான முகம் என அந்த இடமே செழிப்போடு காணப்பட்டது. 

  வீட்டிலேயே சர்வ அலங்காரங்களுடன் திருமண மேடையை  ஏற்பாடு செய்திருந்தான் சித்து. 

  மணமேடையில் சித்துவும் வைஷ்ணவியும் மணக்கோலத்தில் அமர்ந்திருக்க , சந்தோஷமான அந்த சூழலுக்கு இடையே வீர்-ஐ தேடிக் கொண்டிருந்தான் சரண். 

   ஐயர் மங்கள வாக்கியத்தை முழங்க, மாங்கல்யம் சித்துவின் கைக்கு மாற்றப்பட்டது. 

  ‘வீர்  இங்க வந்திருப்பான்னு நினைச்சா, கல்யாணம் அமைதியா நடக்குது. அப்போ வீர் எங்க போனான்..?’

  சரணின் குழப்பமான பார்வை ஒரு நொடியில் கலைந்து போக, எங்கிருந்து தோன்றினான் என தெரியாது வீர் சித்துவின் கையில் இருந்த மாங்கல்யத்தை பிடுங்கி வைஷ்ணவியின் கழுத்தில் கட்டினான். 

  யாரோ சித்துவிடம் இருந்து மாங்காயத்தை பிடுங்குவதை மட்டுமே உணர்ந்த வைஷ்ணவி, தன் கழுத்தில் கட்டிக் கொண்டிருப்பது யார் என்பதை அமர்ந்தவாரே பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவளின் கண்களுக்கு தெரிந்தது வீர்-ன் முகம் தான். 

  அதிர்ச்சியில் அவளின் வாய் பிளக்க தன் நெஞ்சோடு உராசி இருந்த மாங்கல்யத்தை கண்டாள்.  மூன்று முடிச்சுகளும் முழுதாய் வீர்-ன் கரங்களால் போடப்பட்டது.  மங்கள வாக்கியம் யாருக்காக இசைக்கப்படுகிறது என தெரியாமலேயே முழுதாய் இசைத்து முடிக்கப்பட்டது. 

                                     😉

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page