Epi – 27 – சவாலில் துவங்கும் காதல்

இதுவரை…. 

  வீர்-ன் தாய் ரத்னா நேரடியாய் மகனுக்கு அறிவுரை கூற முடியாததால் மறைமுகமாய் அவனைத் தூண்டி விட்டு தோல்வியை ஒப்புக்கொள்ள கூடாது என்ற எண்ணத்தை உள்ளுக்குள் விதைத்தார். அதன் விளைவாக வைஷ்ணவியை திருமணம் செய்து கொண்டான் வீர். 

இனி.…

   யாரோ சித்துவின் கையில் இருந்து தாலியை பிடுங்குவதை உணர்ந்து வைஷு வியப்போடு திரும்பி பார்க்க, அந்த இடைவெளியில் அவளின் கழுத்தில் மூன்று முடிச்சுகளையும் போட்டு முடித்தான் வீர். ஏற்பட்ட அதிர்ச்சியில் வீர்-ஐ தாக்குவதற்கோ இல்லை தடுத்து நிறுத்துவதற்கோ எண்ணம் எழவில்லை வைஷ்ணவிக்கு. 

   சித்து, இவை எல்லாம் நான் எதிர்பார்த்தது தான் என்ற  முகபாவனையோடு மணமேடையில் இருந்து எழுந்து நின்றான்.  

  “சபாஷ் வீர், எனக்கு நல்லாவே தெரியும் நீ இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன்னு…”

  சித்து கூறிய வார்த்தை கேட்டு வைஷ்ணவி அதிர்ந்து போனாள். வீர் வருவான் என தெரிந்தே தான் காத்துக்கொண்டிருந்தானா சித்து..! 

   “ என்ன சொல்ற சித்து, இவன் வருவான்னு உனக்கு முன்னாடியே தெரியுமா..?  அப்புறம் ஏன் பாதுகாப்பை பலப்படுத்தலை..”

  “நான் ஏன் இந்த கல்யாணத்தை நடத்த விடனும்..? என்னுடைய மனசில் என் காதலி ஸ்வேதாவை தவிர வேற யாருக்கும் இடம் கிடையாது..”

  “அப்புறம் ஏன் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன..”

  “நான் சம்மதம் சொன்னதால தானே இவனுடைய சுயரூபம் வெளியே வந்துச்சு..” 

  சித்து நடப்பது புரியாமல் அதிர்ச்சியில் நின்றிருந்த தன் தந்தையை கண்டான் 

  “பார்த்தீங்களா அப்பா, எப்ப பார்த்தாலும் இந்த வீர்-ஐ என் கூட பொருத்திப் பேசி எனக்கு புத்திமதி சொல்லுவீங்க, இவன் செஞ்சிருக்க காரியத்தை பார்த்தீங்களா..” 

  “வீர் என்னப்பா இதெல்லாம், எதுக்காக கல்யாணத்தை தடுத்த நீ..” 

     புரியாத பல புதிர்களுடன் வினா எழுப்பினார் சித்துவின் தந்தை 

  “அங்கிள் இந்த விஷயத்தைப் பற்றி இப்போ என்னால் உங்ககிட்ட விவரிக்க முடியாது..”

  “அவன் எப்படி சொல்லுவான், இந்த பொண்ணு என்னை விரும்பி இருக்காள் நானும் அவளுடைய விருப்பத்துக்கு சம்மதம் சொன்னேன். ஆனால் வீர்-க்கு இந்த பொண்ணு மேல ஆசை. அதனால தான் இந்த கல்யாணத்தை நிறுத்தி அவன் கல்யாணத்தை செஞ்சுக்கிட்டான்..” 

   இப்போதும் தன் தவறை உணராது புது கதையை உருவாக்கும் சித்துவை வெறுப்போடு பார்த்தான் வீர்.

   “இங்க பாரு சித்து, நீ என்ன வேணா கதை கட்டிக்கோ, நேத்து வரைக்கும் நீங்க இரண்டு பேர் எனக்கு கொடுத்த ஏமாற்றத்தை நினைத்து வருத்தம் மட்டும் தான் இருந்தது. நீங்களாவது என்னை பார்த்து சந்தோசமா இருங்கன்னு விலகி தான் போனேன். ஆனால் தோல்வியை உடனே ஏற்று ஒரு ஜோக்கரா வாழ்றதுல எனக்கு விருப்பமில்லை . 

         நான் வைஷ்ணவிக்கு எழுதி வச்ச ஒவ்வொரு பைசாவும் என்னுடைய சொந்த உழைப்பில் வந்தது.  இது வரைக்கும் நான் உன்னை என் போட்டியாளனா ஏத்துக்கிட்டது கிடையாது. இப்ப சொல்றேன் இன்னும் 2 1/2 மாசம் நேரம் இருக்கு , நம்மளுடைய அசோசியேசன்ல சிறந்த தொழிலதிபருக்கான விருதை நான் வாங்கி காட்டுறேன்.

           என்னைத் தவிர அந்த விருதை யார் வாங்கினாலும் தோற்றதா ஏத்துக்கிறேன். அப்படி ஒரு வேலை நான் தோத்துட்டா இந்த வீர் காலம் முழுக்க உனக்கு அடிமையா இருப்பேன். நான் ஜெயிச்சுட்டா நீ என் பேச்சை கேட்கணும் நீ மட்டுமல்ல இவளும் சேர்ந்து தான்..”

   “நான் எதுக்கு உன் பேச்சை கேட்கணும்..?  போட்டி உங்க இரண்டு பேருக்குள்ள தான்.  ஆளுக்கு ஒரு பக்கமா சேர்ந்து என்னை ஏமாத்திட்டு இப்போ அடிமையா வேற ஆக்க பார்க்கிறீர்களா? ..” 

      வைஷ்ணவி சித்துவையும் சேர்த்தே குறை கூறினாள்.

  “அடியேய் நாடகக்காரி, நீ என்னோட வீர்-ஐ ஏமாத்துன அதனால தான் அந்த சித்து உன்னை பகடை காயா பயன்படுத்திகிட்டான். அவனோட சுயரூபம் தெரியாமல் நீ தான் போய் மாட்டிக்கிட்ட..” என்றான் சரண். 

  “சரண் இவளுக்கு எதுக்கு இதெல்லாம் எடுத்து சொல்லிட்டு இருக்க,  மேடம் ரொம்ப புத்திசாலி எல்லாத்தையும் ஈஸியா புரிஞ்சிப்பாங்க…” என உரைத்த வீர் அவளை தன்னுடன் வருமாறு அழைத்தான்.

  “போலாமா பொண்டாட்டி … ”

   கண்ணில் காதல் இல்லாமல் கோவத்தோடு அவளை அழைத்தான் வீர் 

  “நான் உன் கூட எங்கேயும் வர மாட்டேன் ..”

   “கல்யாணத்துக்கு பிறகு புருஷன் இருக்க இடம் தான் மனைவிக்கு உலகம்.  நீ மறுத்தாலும் நான் உன்னை எங்கேயும் அனுப்ப மாட்டேன்..”

    அவளுக்கு பதில் உரைத்த வீர் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்.

     தன் கழுத்தில் இருந்த மாலையை அவள் கழட்டி எறிய, யாரிடம் உதவி கேட்க என தெரியாது தடுமாறினாள்.

      சித்து அவன் விருப்பப்படியே அனைத்தும் நடந்தது என்ற புன்னகையோடு நின்றிருந்தான்.  அவளின் தந்தையோ ஒரு கையாலாகாதவர் . உதவி கேட்டு என்ன பிரயோஜனம் என வீர்-ன் இழுப்பிற்கு பதில் வலுவை கொடுத்தாள் வைஷூ. பின்னர் அவனின் சக்திக்கு ஈடு கொடுக்க முடியாமல் வெறுப்போடு காரில் அமர்ந்தாள்.

      வீர்-ன் கார் நேரடியாக அவனின் பிளாட்டிற்கு செல்ல பின் தொடர்ந்து வந்தான் சரண். 

  வீர் ஒரு பெண்ணை மணம் செய்து அழைத்து வந்திருப்பதை பிளாட்டில் தங்கியிருந்த அனைவரும் கண்டனர்.  தீயை போல விஷயம் வேகமாய் பரவியது.  லிப்ட்டின் கதவு திறக்கப்பட, சரியாக எதிர் வீட்டு பெண்மணி வீட்டின் கதவை திறந்தார்.  கண்ட காட்சியில் அப்படியே வியந்து நின்றார். 

   “அடப்பாவி இந்த பொண்ணை கல்யாணம் செஞ்சுட்டானா ..! உடனே இந்த விஷயத்தை நீலாவதி கிட்ட சொல்லனுமே…”

   நெஞ்சை பிடித்தவாறு அந்த எதிர்வீட்டு பெண்மணி உடனே நீலாவதிக்கு அழைப்பு விடுத்தார்.

   வீட்டினுள் சென்றதும் வைஷ்ணவியின் கையை விடுவித்தான் வீர்.  அவளோ இதற்கெல்லாம் காரணமான அவன் கட்டிய மாங்கல்யத்தை கழட்டினாள்.

  பதிலுக்கு அவளின் கையை இறுக்க பிடித்து மாங்கல்யத்தை கழட்ட விடாது தடை செய்தான் வீர் 

    “உன் கழுத்துல இருக்க மாங்கல்யம் இறங்கனும்னா ஒன்னு உன்னுடைய புருஷன் காலமாகி இருக்கணும் . இல்லைன்னா நீ காலமாகி இருக்கணும்.  எனக்கு இப்போதைக்கு சாக விருப்பம் இல்லை. கம்முனு நீயே செத்துப் போயிரு..  உன்னை அடக்கம் பண்றதுக்கு முன்னாடி அந்த மாங்கல்யத்தை நானே கழட்டிடுறேன்…”

  அவன் உரைத்த வார்த்தை கேட்டு வைஷ்ணவியின் விழிகள் விரிந்தது.  விஷயத்தை அத்தோடு அவன் நிறுத்தவில்லை.  கிச்சனுக்கு சென்று நன்கு கூரான கத்தியை எடுத்து வந்தான். 

  “இந்தா இதுல உன் கழுத்தை அறுத்துக்கோ, அப்படி இல்லைனா உன் கை நரம்பை கட் பண்ணு, ரத்தம் வெளியே போச்சுனா உயிர் தானா போயிடும்..” 

  கையில் கத்தியோடு தன் எதிரே வந்த வீர்-ஐ கண்டு எச்சில் விழுங்கி அச்சம் கொண்டு இரண்டடி பின்னோக்கி நகர்ந்தாள் வைஷூ.

   “நீ என்ன சைக்கோவா நான் எதுக்கு சாகணும்..”

   “நான் மனுஷனா இருக்கிறதும் சைக்கோவா இருக்கிறதும் உன்னுடைய செய்கையில் தான் இருக்கு. நான் கட்டுன மாங்கல்யம் உன் கழுத்தில் இருந்து எப்ப இறங்கனும்னு நான் தான் முடிவு செய்வேன் . என் பேச்சை மீறினா உன்னுடைய மரணம் நிச்சயம்..” 

  அவனின் கண்களில் இருந்த வெறி அவளை நேரடியாய் தாக்கியது.  இதற்கு மேலும் மாங்கல்யத்தை கழட்ட தைரியம் வருமா என்ன..? 

  நிச்சயம் வீட்டை விட்டு வெளியேறினால் கத்தியை சொருகினாலும் ஆச்சரியம் இல்லை என புரிந்து கொண்டவள் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள். 

  இப்போது சரண் பேச துவங்கினான். 

   “டேய்  வீர், நீ அவசரப்பட்டுடடா போயும் போயும் இவளை நீ கல்யாணம் பண்ணனுமா.. நான் தான் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் செஞ்சு சொத்தை திரும்ப வாங்கலாம்னு சொன்னேன்ல..”

     “ஸ்டேஷன்ல போய் என்னனு கம்ப்ளைன்ட் கொடுப்ப, இவள் என்னை ஏமாற்றி சொத்தை எழுதி வாங்கிட்டான்னா, ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கேமரா இருக்கு நானா விருப்பப்பட்டு தான் அவளுக்கு எழுதி கொடுத்தேன்னு அந்த ஒரு ஆதாரம் போதும் .

         இவள் என்னை ஏமாற்றினாள்னு நிரூபிக்க எந்த ஆதாரமும் என்கிட்ட இல்லை..”

   “சரிடா அந்த சொத்தை திரும்ப வாங்கறதுக்காக இவளை கல்யாணம் செஞ்சுக்கணுமா, போனா போகட்டும்னு  விட்டு தள்ள வேண்டியது தானே கல்யாண வாழ்க்கை சும்மா இல்லடா, நம்ம வாழ்க்கையோட அடுத்த கட்ட நிம்மதியே அதுல தான் அமைஞ்சிருக்கு.. 

      சந்திரிகா அவளுடைய ஃப்ரண்டு வாழ்க்கையை பற்றி யோசிச்சு என்கிட்ட சொன்ன பொய்யே என்னை இவ்வளவு சோர்வாக்குது. இதில் நீ  முழுசா ஒரு பொய்யான ஆள் கூட தான் வாழப் போற அதில் என்னடா நிம்மதி கிடைக்கும் உனக்கு..” 

  இவர்கள் பேசிக்கொள்ளும் விஷயம் அறைக்கதவை மேலோட்டமாக சாத்தியிருந்த வைஷ்ணவிக்கும் உள்ளே கேட்க, சரணை தான் திட்டிக் கொண்டிருந்தாள். 

  “ஆமா இவங்க பெரிய உத்தமர்கள் இவங்க வாழ்க்கையை நாங்க தான் கெடுத்துட்டோம். பாக்குற பொண்ணுங்க கிட்டலாம் ஜொல்லுவிட்டு வழிஞ்சா, எல்லாம் கைவிட்டு போகத்தான் செய்யும் ம்ஹூ…” 

   “நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்திருக்கேன். என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்..” என்றான் வீர்.

  “உன்னோட அத்தை வருவாங்களே அவங்களுக்கு நீ கல்யாணம் செஞ்ச விஷயம் தெரிஞ்சா ரொம்ப கோபம் கொள்வாங்க … ”

    “இந்நேரம் அவங்களுக்கு விஷயம் தெரிஞ்சிருக்கும் எதிர் வீட்டு ஆன்ட்டி அதெல்லாம் கரெக்டா போட்டு கொடுத்துடுவாங்க….”

 . சரியாக இவர்கள் பேசிக் கொண்டிருந்த சமயமே வீட்டு காலிங் பெல் அடிக்க அத்தை தான் வந்துவிட்டார் என்று புரிந்து கொண்டனர் வீர்-ம்  & சரண்-ம். 

  வீர் எதுவாகினும் சந்தித்து தான் ஆக வேண்டும் என்ற மன நோக்கத்தோடு கதவை திறக்க, வெளியே நின்றிருந்தது காவல் துறையினர். அவர்களை அங்கே அழைத்து வந்திருந்தது வைஷ்ணவியின் தந்தை ஐயாசாமி. 

    “சார் இவன் தான், இவன் தான் என் பொண்ணை கட்டாய கல்யாணம் செஞ்சு இழுத்துட்டு வந்துட்டான். பாவம் என் பொண்ணுக்கு என்ன ஆச்சுனே தெரியலை.  அவள் பச்ச மண்ணு…. எப்படியாவது என் பொண்ணை காப்பாற்றி என் கூட அனுப்பி வைங்க..”

   ‘அடப்பாவி எப்படி எல்லாம் பொய் பேசுறான் மனசாட்சி இல்லாதவன்..’ 

     ஐயா சாமியின் நீலிக்கண்ணீர் நோக்கி பார்வையை விடுத்தான் வீர்.

  விஷயம் புரிந்து கொண்ட வீர், காவல் துறையினர் வந்த விஷயம் வெளியே யாருக்கும் தெரிய கூடாது என அவர்களை வீட்டினுள் அழைத்தான். 

  “உள்ள வாங்க சார்..”

 ” என்ன மிஸ்டர் ஐயாசாமி, உங்க பொண்ணை கடத்திட்டு வந்துட்டதா சொன்னீங்க, இவர் என்னடான்னா என்னை பார்த்ததும் பயந்து ஒழியாம உள்ள வாங்கன்னு கூப்பிடுறார். எனக்கு என்னமோ இப்ப உங்க மேல தான் சந்தேகமா இருக்கு…” என்றார் இன்ஸ்பெக்டர். 

  “சார் இவன் சரியான நாடகக்காரன் ஏதாவது சொல்லி உங்க மனசை கலைச்சிடுவான். முதலில் என் பொண்ணை கூப்பிட சொல்லுங்க அவள் வந்து உண்மையை சொல்லுவாள்..”

  “மிஸ்டர் வீர் இவருடைய பொண்ணு வைஷ்ணவி இந்த வீட்டில் இருக்காங்களா..”

  “ஆமா சார், வைஷ்ணவியும் நானும் காதலித்தோம். இவர் தான் கட்டாய கல்யாணம் செஞ்சு வைக்க பார்த்தாரு அதனால தான் வைஷ்ணவியை கல்யாணம் செய்து என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கேன்..”

  “சார், இவன் பொய் சொல்றான் என் பொண்ணு இவனை காதலிக்கவே இல்லை…”

 ” சரி வைஷ்ணவியை வர சொல்லுங்க..” என்றார் இன்ஸ்பெக்டர்.

   “சார் நான் தான் உண்மையை சொல்றேன்ல இந்த ஆள் தான் எங்களை பிரிக்க பார்த்தான்..”

   “இருக்கட்டும் மிஸ்டர் வீர், நீங்க சொல்றது உண்மைனா வைஷ்ணவியும் அதே தானே சொல்ல போறாங்க எங்களுக்கும் ஆதாரம் கிடைச்ச மாதிரி இருக்கும் அவங்களை வர சொல்லுங்க..”

  இன்ஸ்பெக்டர் கண்ணால் பார்க்கும் சாட்சியை தெளிவாக கேட்டார். வீர்-ம் அறைக்குள் சென்று சில வினாடிகளில் வைஷ்ணவியை அழைத்து வந்தான். 

   “வைஷ்ணவி எப்படிமா இருக்க, இவன் உன்னை அடிக்கிறானா, நீ ஒன்னும் கவலைப்படாத நான் போலீசை கூட்டிட்டு வந்திருக்கேன். இவன் உன்னை கட்டாய கல்யாணம் செஞ்சு கடத்திட்டு வந்தான்னு பளிச்சுன்னு சொல்லிடு..”

  “நீங்க அமைதியா இருங்க நாங்க விசாரிக்கிறோம். 

  நீ சொல்லுமா இவர் உன்னை கட்டாய கல்யாணம் செஞ்சு கடத்திட்டு வந்திருக்காரா..”

   வீர்-ஐ விட்டு விலகிச் செல்ல வாய்ப்பு எதிர்பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு சரியான சந்தர்ப்பம் கிடைக்க நழுவ விடுவாளா, உடனே பதில் உரைத்தாள்.

  “இல்ல சார், என் அப்பா தான் பொய் சொல்றார். நாங்க விருப்பப்பட்டு தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டோம். இவர் ஒன்னும் என்னை கடத்திட்டு வரலை..”

  வைஷ்ணவி கூறிய பதிலில் சரண் மற்றும் ஐயாசாமி இருவருமே அதிர்ந்து போயினர். வீர் கெத்தாக அந்த இடத்தில் நின்றான். 

                                   😉

  

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page