இதுவரை…
திருமணத்திற்கு பிறகு வைஷ்ணவியை தன் இல்லத்திற்கு அழைத்து வந்த வீர், கழுத்தில் இருந்த மாங்கல்யத்தை அவள் கழட்ட முயற்சித்த சமயம், உன் உயிர் பிரிந்தால் மட்டுமே அது நிகழும் என அச்சுறுத்தி அடங்க வைத்தான். வைஷ்ணவியின் தந்தை ஐயாசாமி புகார் அளித்து காவல் துறையினரை வீர்-ன் இல்லத்திற்கு அழைத்து வந்தார்.
இனி..
“நீ சொல்லுமா, இவர் உன்னை கட்டாய கல்யாணம் செஞ்சு கடத்திட்டு வந்திருக்காரா..”
இன்ஸ்பெக்டர் வீர்- ஐ கைகாட்டி வைஷ்ணவியிடம் விசாரித்தார்.
“இல்ல சார் நாங்க விருப்பப்பட்டு தான் கல்யாணம் செஞ்சுகிட்டோம். இவர் ஒன்னும் என்னை கடத்திட்டு வரலை நான் விருப்பப்பட்டு தான் உடன் வந்தேன்..”
“வைஷூமா ஏன் மாத்தி பேசுற, இவன் உன்னை ஏதாவது மிரட்டினானா எதுவா இருந்தாலும் சொல்லு அப்பா நான் பார்த்துக்கிறேன்..”
பெரிய இவன் போல் நெஞ்சை நிமிர்த்து பேசிய தன் தந்தையை முறைத்தாள் வைஷ்ணவி.
“சார் கம்ப்ளைன்ட் கொடுக்கறதா இருந்தா என் அப்பா மேல நான் கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ரொம்ப தொந்தரவு கொடுக்கிறார்..”
“அம்மாடி என்ன இப்படி எல்லாம் சொல்ற..”
“என்ன மிஸ்டர் ஐயாசாமி, நீங்க ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தீங்க இங்க வந்தா வழக்கே வேற மாதிரி இருக்கு உங்களைத்தான் பிடித்து உள்ள போடணும் போல..”
“இல்ல சார் இவன் கட்டாய கல்யாணம் செஞ்சு கடத்திட்டு வந்தான். என் பொண்ணு இப்போ ஏன் மாத்தி பேசுறாள்னு தெரியலை..”
இன்ஸ்பெக்டர் ஏதேனும் சதி இருக்குமோ என்ற சந்தேகத்தோடு வைஷ்ணவியை திரும்பி பார்த்தார்.
“என் அப்பா தான் தேவை இல்லாம பேசுறார். நான் இங்க சந்தோசமா தான் இருக்கேன். இதுக்கும் மேல நான் ஸ்டேஷன் வந்து எழுதிக் கொடுக்கிறதா இருந்தாலும் கைப்பட எழுதி தரேன். இந்த கல்யாணம் என் விருப்பத்தோடு தான் நடந்தது..”
“ஓகே உங்க வார்த்தையை நம்புறேன். மிஸ்டர் ஐயாசாமி இனிமே இந்த மாதிரி பொய் வழக்கு கொடுக்காதீங்க, அப்புறம் உங்களை தான் நான் பதிலுக்கு அரெஸ்ட் பண்ண வேண்டியதா இருக்கும்..”
இன்ஸ்பெக்டரும் உடன் வந்த லேடி கான்ஸ்டபிளும் ஐயாசாமியை மிரட்டி விட்டு சென்றனர்.
அவர்கள் சென்ற பிறகு வீர் கதவை மூட, என்னிடம் இருந்து நீ அவ்வளவு எளிதில் தப்ப முடியுமா என்ற பார்வையோடு வைஷ்ணவியை பார்த்தான்.
“வைஷூமா எதுக்காக போலீஸ் கிட்ட பொய் சொன்ன, உண்மையை சொல்லியிருந்தா இவனை ஜெயில்ல போட்டிருப்பாங்கல்ல..”
“யோவ், லூசு மாதிரி பேசாத யாரை கேட்டு போலிஷை கூட்டிட்டு வந்த..”
“என்னம்மா அப்பாவை இப்படி மரியாதை இல்லாம பேசுற, அதுவும் மூன்றாவது மனுசங்க முன்னாடி..”
“ஆமா இந்த ரோஷத்துக்கு மட்டும் குறைச்சல் இல்லை. என்னை பற்றின விஷயம் எல்லாமே இவனுக்கு தெரிஞ்சிருக்கு…” என்றாள் வைஷு.
“ஆமா மிஸ்டர் ஐயாசாமி, நீங்க போலீசை கூட்டிட்டு வந்து என்னை மாட்ட வைக்கலாமுன்னு நினைச்சீங்க, அதையே சாக்கா வச்சு உங்க பொண்ணை சரணடைய வச்சுட்டேன்..”
சற்று முன் :
வீர்-ன் இல்லத்திற்கு வந்த காவல் துறையினர் வைஷ்ணவியை வெளியே அழைத்து வருமாறும், அவளின் வாக்குமூலமும் தேவை எனக் கூறிய சமயம் வீர் அறையினுள் நுழைந்தான்.
“நான் உன்னை கடத்திட்டு வந்துட்டதா உன் அப்பா கம்ப்ளைன்ட் கொடுத்து போலீசை இங்க கூட்டிட்டு வந்திருக்கார் . இப்போ நீ வெளியே வந்து அவங்க கிட்ட நாம இரண்டு பேரும் விருப்பப்பட்டு தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டோம்னு சொல்லணும்..”
“நான் ஏன் அப்படி சொல்லணும் நீ கட்டாய கல்யாணம் தான் செஞ்ச, நான் அந்த உண்மையை தான் சொல்லுவேன் அவங்க உன்னை அரெஸ்ட் பண்ணட்டும்…”
அவள் விஷயத்தை உரைத்த வண்ணம் அறை கதவில் கை வைக்க அப்போது தான் அவளைப் பற்றிய ஒரு ரகசியத்தை உடைத்தான் வீர்.
“தாராளமா சொல்லு, நானும் உன்னை பற்றின உண்மையை அவங்க கிட்ட சொல்லுவேன்..”
“ம்ஹூ என்ன ..? நான் உன்னை லவ் செஞ்சு ஏமாத்தினேன்னு சொல்ல போறியா, அதுக்கு உன்கிட்ட என்ன ஆதாரம் இருக்கு..”
“நான் ஒன்னும் சின்ன பையன் கிடையாது. உன்னை மாதிரி யோசிக்காமல் உள்ள இறங்க… பெங்களூரில் இதுக்கு முன்னாடி நீ வேலை செஞ்ச கம்பெனியோட ஓனர் உன் மேல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கார். ஏமாத்தி வேலை செஞ்சு உன் கூட்டாளி மூலமா அவங்க கம்பெனி பணத்தை நீ திருடியிருக்க, அந்த கேஸ் இன்னும் ரன்னிங்ல தான் இருக்கு.. இப்போ மட்டும் நான் சொல்லிக் கொடுத்த மாதிரி நீ வெளியே வந்து பேசலை. என்னை அரெஸ்ட் பண்ண கொஞ்ச நேரத்திலேயே பெங்களூர் போலீஸ் உன்னை தேடி வருவாங்க எப்படி வசதி…? ”
இந்த காரணத்திற்காக தான் வேறு வழியின்றி வைஷ்ணவி தன் தந்தை அழைத்து வந்த காவல் துறையிடம் மாற்றி பேசி அனுப்பினாள்.
வீர் இந்த விஷயத்தை சரணிடம் பகிர்ந்து கொள்ள..
அச்சச்சோ இதை மறந்து விட்டோமே என்று ஐயாசாமி அப்போதுதான் நினைவுக்கு கொண்டு வந்தார்.
வைஷ்ணவி ஐயாசாமியை முறைத்து பார்க்க , உடனே அடுத்த காரியத்தில் இறங்கினார் அவர்.
“இங்க பாருங்க சார், என் பொண்ணு மேல எந்த தப்பும் கிடையாது அந்த சித்து தான் இப்படி எல்லாம் ஏமாற்ற சொல்லி என் பொண்ணு மனசை மாத்தினான். மத்தபடி அவள் ரொம்ப அப்பாவி என் பொண்ணை விட்டுடுங்க..”
“நீங்களும் உங்க பொண்ணும் எவ்வளவு பெரிய கேடினு நான் நல்லா தெரிஞ்சுகிட்டேன். இந்த ஒன்னும் தெரியாத அப்பாவி, இனிமே என்கூட இந்த வீட்டில் தான் இருக்க போறாள். நீங்க கிளம்பலாம்..”
ஐயாசாமி வைஷ்ணவியை திரும்பி நோக்க அவளோ வேறு வழியில்லை என அடங்கி நின்றிருந்தாள்.
“ம்… வெளிய போங்கன்னு சொன்னேன்..”
கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக சத்தமிட்டு அனுப்பினான் வீர். ஐயாசாமியும் புலம்பிக்கொண்டே அங்கிருந்து வெளியேறினார்.
“சரண், சந்திரிகா உன்னை ரொம்ப எதிர்பார்த்துட்டு இருப்பாள். நீ வீட்டுக்கு போ நான் அப்புறமா கால் பண்றேன்..”
வீர் ஒரு முடிவை எடுத்து விட்டான். இதற்கு மேல் அறிவுரை கூறி பயனில்லை. இனி அவனுக்கு பக்க பலமாக நிற்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.. என அமைதியாக அங்கிருந்து கிளம்பினான் சரண்.
வீர் இப்போது அமர்ந்து கைகள் இரண்டையும் சோஃபாவில் விரித்து வைத்தவாறு கண்மூடி தலை சாய்த்தான்.
அவனின் ஒய்யாரத்தை கண்டவள் முகத்தை திருப்பிக் கொண்டு அறைக்குள் நடந்தாள்.
“ஏய் நில்லுடி..”
அவனின் திமிரான குரல் கேட்டு நடை நிறுத்தி திரும்பி பார்க்க, கண்களை மூடியவாரே சாய்ந்த வண்ணம் அப்படியே தான் அமர்ந்திருந்தான்.
“அந்த ஏசியை ஆன் பண்ணிட்டு போ..”
“நான் என்ன உனக்கு வேலைக்காரியா நீயே போய் ஆன் பண்ணிக்கோ ..”
“இனிமே நீ இந்த வீட்டில் வேலைக்காரி தான். வீட்டில் மட்டுமல்ல ஆபீஸ்ஸிலும் நான் என்ன சொன்னாலும் செய்யணும். அப்படி மறுத்த உடனே பெங்களூர் போலீஷூக்கு கால் பண்ணிடுவேன்..”
“ஐயோ இதையே சொல்லி சாவடிக்கிறானே ..”
கையை இறுக்கி கோபத்தை கட்டுக்குள் வைத்தவள், வேறு வழியின்றி ரிமோட்டை எடுத்து ஏசியை ஆன் செய்தாள்.
பிறகு அவள் அறைக்குள் அடைந்து கதவை படார் என சாத்திக் கொள்ள சத்தம் கேட்டவன் கண் விழித்தான்.
நேற்றில் இருந்து நடந்த நிகழ்வுகளை எல்லாம் கனவு போல் மறக்கவும் முடியாது . இப்படி தன்னுடைய காதலும் அதன் நினைவுகளும் வெறும் ஒரு வாரத்திலேயே முடிந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் பெருமூச்சு விட்டான்.
தற்போது மீண்டும் காலிங் பெல் சத்தம் கேட்க, அவளின் தந்தையாக இருக்குமோ என்ற வெறுப்போடு கதவை திறந்தான். வெளியே நீலாவதியும் ரம்யாவும் நின்றிருந்தனர்.
“அத்தை உள்ள வாங்க..”
வீர்-ன் குரல் தயக்கத்தோடு மெல்ல ஒலித்தது.
“என்ன வீர், நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா அந்த பொண்ணை நீ கல்யாணம் செஞ்சுக்கிட்டியாம்..”
“ஆமா அத்தை இன்னைக்கு காலையில் தான் கல்யாணம் நடந்தது..”
“என்னால இதை நம்ப முடியலை .நீ எங்களுடைய வீர் தனா உன் வாழ்க்கையில் நடக்குற ஒரு முக்கியமான விசேஷத்துக்கு எங்களை கூப்பிடனும்னு தோணலையா, இத்தனைக்கும் அந்த பொண்ணை நீ கல்யாணம் செஞ்சிக்க எனக்கு சம்மதம்னு நான் சொல்லியிருந்தேனே..”
நீலாவதி கண்கலங்க ஆரம்பித்துவிட்டார்.
“அத்தை, நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. இந்த கல்யாணம் திடீர்னு நடக்க வேண்டிய சந்தர்ப்பம் வேறு வழி இல்லாம தான்.. நீங்க கண் கலங்காதீங்க எனக்கு கஷ்டமா இருக்கு ..”
“நீ பேசாத எல்லாம் நாடகம். நடிச்சே ஏமாத்துற, இந்த அத்தை மேலேயும் அத்தை மகள் மேலேயும் கொஞ்சம் கூட பாசம் இல்லை. இருந்திருந்தால் இப்படி ஒரு காரியத்தை சொல்லாமல் செஞ்சிருப்பியா நீ..”
“ஆமா மாமா, இந்த விசயத்தில் எனக்கும் உங்க மேல கோவம். ரொம்ப கஷ்டமா இருக்கு…” என ரம்யாவும் வருந்தினாள்.
“Sorry ரம்யா, சூழ்நிலை அப்படி..”
“எங்க உன் பொண்டாட்டி , வெளியே வர சொல்லு எதுவா இருந்தாலும் நான் அவள் கிட்டயே கேட்டுக்குறேன்..”
“சரி நீங்க அழுகாதீங்க உட்காருங்க, நான் அவளை அழைச்சிட்டு வரேன்..”
அவன் மீண்டும் கதவை திறந்து உள்ளே வந்ததும் வைஷ்ணவி கேள்வியோடு பார்த்தாள்.
“இப்போ என்ன உனக்கு கை கால் அழுத்தி விடணுமா.. ”
“அந்த சேவை எல்லாம் நான் கேட்கும் போது நீ செஞ்சா போதும். இப்போ என் அத்தை வந்திருக்காங்க அவங்க கிட்ட வந்து பேசு ,நடந்த எதையும் உளறி வைக்காத..”
“எனக்கும் ,உன் அத்தைக்கும் என்ன சம்பந்தம் அவங்க கிட்ட நான் எதுக்கு பேசணும். நீயே போய் என்னமோ கதை சொல்லிக்கோ ..”
“நான் இதுக்கு என்னமோ ஒரு கதையை சொல்லணும் நடந்த உண்மையையே அவங்க கிட்ட சொல்றேன். தன்னுடைய மருமகனை ஒருத்தி ஏமாத்திட்டாள்னு தெரிஞ்சா அவங்க சும்மா இருப்பாங்களா என்ன..? ஏற்கனவே அவங்க கிட்ட நீ நிறைய அரை வாங்கியிருக்க ஞாபகம் இருக்குல..”
இதே அறைக்குள் தான் அன்று தொடர்ச்சியான அரைகளை கன்னத்தில் வாங்கினாள். அந்த ஞாபகத்தில் சட்டென தன் கன்னத்தையும் பிடித்துக் கொண்டாள்.
“இப்ப எப்படி சௌகரியம் மேடம்க்கு, நீங்க போய் பேசுறீங்களா இல்ல நானே போய் பேசட்டா..”
“நானே வந்து பேசி தொலைக்கிறேன்..”
முகத்தை சிடுசிடுவென வைத்துக் கொண்டு கதவை திறக்க, நீலாவதியை கண்டதும் பாவமான முகபாவனையை வைத்துக் கொண்டாள்.
மனதில் கோபமும் வருத்தமும் இருந்தாலும் வைஷ்ணவியின் அழகை கண்டு ஒரு நொடி அமைதியாகினார் நீலாவதி. பிறகு தான் அவளிடம் பேசினார்.
“கட்டியிருக்க புடவை நகையெல்லாம் பார்த்தால் திட்டம் போட்டு தான் கல்யாணம் செஞ்சிருக்கீங்க, ஆனால் எங்களை அழைக்கணும்னு தோணலை உனக்கு தான் உறவுக்காரங்கன்னு யாரும் இல்லை. அவனுக்கு நாங்க இரண்டு பேர் இருக்கோம்னு உனக்கு நல்லா தெரியும்ல, எங்களை கூப்பிடனும்னு நீயாவது அவன் கிட்ட சொல்ல மாட்டியா..”
“அவங்க கேட்கிறது உன் காதில் விழுகலையா, பதில் சொல்லு…”
வீர்-ன் செவிகளுக்கு மட்டும் கேட்குமாறு பற்களை கடித்து ரகசியமாய் பேசினாள் வைஷ்ணவி.
“நான் வாயை திறந்தால் என் அத்தை கிட்ட உண்மையை சொல்லுவேன். உனக்கு சௌகரியம்னா பேசுறேன் இல்லைனா நீயே சமாளிச்சுக்கோ..”
‘இவன் வேறு சொன்னதையே சொல்லி அச்சுறுத்துகிறான் இப்போது இவர்களிடம் என்ன கூறி சமாளிக்க..’
வைஷ்ணவி தவித்தாள்.
😉
