Epi – 3 – மீண்டும் வந்தாள் அவள்

இதுவரை… 

    எதார்த்தமாய்  ATM – ல் சந்தித்துக் கொண்ட வீர்-ம், வைஷ்ணவியும் ஒரே நாளில் இரண்டாம் முறையாய்  மீண்டும் சந்தித்தனர். இன்டர்வியூவில் அவள் கொடுத்த பதிலில் நிமிர்ந்து பார்த்தவன் வியந்து போனான். 

இனி… 

    தன்னை அறியாமல் வெகு நேரம் இவளை பார்த்தவாறு நின்றதை இவன் மறக்கவில்லை. மீண்டும் சந்திப்போம் என எதிர்பாக்கவும் இல்லை. 

    “நீங்க … இன்னைக்கு காலையில் ATM-ல் மீட் பண்ணோமே அவங்க தானே..”

   “ஆமா சார்..‌ ஐ அம் வைஷ்ணவி ..”

  அவளை கண்டதில் மகிழ்ச்சி இருப்பினும் இன்டர்வியூக்கு பிறகு பேசிக் கொள்ளலாம் என கேள்வியை தொடர்ந்தான்.  

  “ஓகே, நான் கேட்ட கேள்வி உங்களுக்கு புரிஞ்சதா.. ”

  “புரிஞ்சுது சார் ,நம்மளோட போட்டி நிறுவனத்தோட விளம்பரத்தை அப்படியே நியாபகம் வச்சு, வேற மாதிரி மாற்றி எடுக்குறது தான் நம்மளோட மார்க்கெட்டிங்க்கு நல்லது. 

  உதாரணத்துக்கு ஒரு கூல்டிரிங்ஸ் விளம்பரம் எடுத்தாலும், டாப் ஹீரோ அண்ட் ஹீரோயின் வச்சு தான் விளம்பரம் கொடுக்கிறாங்க.. அதுக்கு காரணம் அப்போது தான் மக்களோட மூளையில் அந்த கூல்ட்ரிங்ஸ்ஸோட உருவப்படம் நல்லா பதியும். அதுக்கு பதிலா மனசுல பதிய வைக்கிற மாதிரி ஒரு விளம்பரத்தை நாம எடுத்தால் கண்டிப்பா சக்சஸ் ஆகும்..”

  “அது எப்படி மூளையும் மனசும் வேற வேற பாதையிலா இருக்கும்..”

   “கண்டிப்பா சார், நான் உள்ள வரும் போது நீங்க பேப்பரை பார்த்து  தலை குனிஞ்சு இருந்தீங்க, உள்ள வர்றது யாரு.. ஆண்ணா இல்லை பெண்ணானு நீங்க தெரிஞ்சுக்க நினைக்கலை. இன்டர்வியூக்கு வர எத்தனையோ பேரில் என்னையும் சாதாரண ஒருத்தியா தான் நினைச்சது உங்க மூளை.  நான் கொடுத்த பதிலில் என் முகத்தை பார்க்கணும்னு உங்க மனசுல பட்டதால தானே தலை நிமிர்ந்தீங்க.. ”

   ‘ இன்ட்ரஸ்டிங்..’ என அவள் மீது பார்வையை வைத்தான். 

   “சரி உங்களுக்கு விளம்பர படங்களில் வேலை செஞ்ச அனுபவம் இருக்கா.. இதுக்கு முன்னாடி எங்க வேலை செஞ்சீங்க ..” 

    “இதுக்கு முன்னாடி பெங்களூரில் ஒரு விளம்பர தயாரிப்பு கம்பெனியில் அசிஸ்டன்ட் டைரக்டரா இருந்தேன்..”

  அந்த கம்பெனியின் பெயரையும் இடத்தையும் விவரித்தாள்.

   “நல்ல கம்பெனி தானே ஏன் அங்கிருந்து விலகுனீங்க..”

   “எவ்வளவு திறமை இருந்தாலும் பெண்ணுங்கற ஒரே காரணத்துக்காக ஒரு ஆணை தாண்டி முன்னேற கூடாதுனு நினைக்குறாங்க… துணை இயக்குனர்ல இருந்து இயக்குனரா முன்னேற இருந்த என்னோட வாய்ப்பை சரியான காரணம் இல்லாம வேற ஒருத்தவங்களுக்கு கொடுத்தாங்க, கேள்வி கேட்டப்ப நேரடியாவே சொன்னாங்க.

       நீ ஒரு பொண்ணு உனக்கு இதுவே போதும்னு அதுக்கு மேல அங்க வேலை செய்ய விருப்பம் இல்லாம தான் வந்துட்டேன்..” 

   “இந்த காலத்தில் கூடவா இப்படி எல்லாம் நினைக்கிறாங்க… 

ஓகே நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க..”

  அவன் கூறிய பின்பும் அவள் எழுந்து செல்லாமல் அவனைப் பார்த்தவாரே இருந்தாள். 

   “அதான் வெளியே வெயிட் பண்ணுங்கன்னு சொன்னேனே..”

   தன் மனதில் இருந்தவை தயக்கத்தோடு அவனிடம் உரைத்தாள்.

   “ சார் உங்க  மீசையில் குங்குமம் ஒட்டியிருக்கு…”

   அவள் கூறியது கேட்டு தன்னுடைய மொபைலை எடுத்து முன்பக்க கேமரா மூலம் தன் முகத்தை சரி பார்த்தான். 

  ‘கடவுளே இப்படியே உட்கார்ந்து தான் இவ்வளவு நேரம் இன்டர்வியூ செஞ்சேனா… ’

  தன் மீசையில் ஒட்டியிருந்த குங்குமத்தை தட்டி விட்டான். அவள் நெற்றியில் இருந்த விபூதி குங்குமம் மேலோட்டமாய் அழிந்திருந்ததை அப்போது தான் கவனித்தான். 

  மெல்லிய புன்னகையுடன் அங்கிருந்து எழுந்து சென்றாள். இந்த காலத்தில் இன்டர்வியூ வரும் போது புடவை கட்டி, தலை பின்னலுடன் லட்சணமாய் வரும் முதல் பெண்ணை இப்போதுதான் காண்கிறான். அவளின் கூந்தல் இடைத் தாண்டி நீண்டிருந்தது. 

       அவன் ஒன்றும் தவறான எண்ணத்தோடு அவளின் பின் பகுதியை நோக்கவில்லை.  அந்த கூந்தல் நீளத்தை கண்டால் ஒரு பெண்ணுக்கு கூட பார்வை அங்கு தான் செல்லும்.  

    மீதமிருந்த ஆட்களையும் இன்டர்வியூ செய்தான் வீர். முடிவுக்காக அனைவரும் காத்திருக்க, அவர்களின் முன்னே வந்தான் வீர். பின் தொடர்ந்து ஜானவி கையில் இரண்டு பேப்பருடன் வெளியே வந்தாள். 

   “உங்க எல்லாரையும் என் கம்பெனிக்கு வரவேற்கிறேன். என் பெயர் வீர் விஜயன் இந்த கம்பெனியோட ஓனர்.. முதல்ல உங்க பொறுமைக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்.  ஒரு வேலையில் சேரும் போதும் சரி, சேர்ந்த பின்னும் சரி அடக்கம் ரொம்ப முக்கியம்.  இன்டர்வியூ ஆரம்பிக்க ஒரு மணி நேரம் லேட் ஆகும்னு சும்மாதான் சொன்னேன்.  உடனே எட்டு பேர் கிளம்பி போயிட்டாங்க.. 

     மீதம் இருந்த உங்களில் யாரோ ஒருத்தர் தான் என் கம்பெனிக்கு சரியான ஆளா இருப்பீங்கன்னு இன்டர்வியூ பண்ணேன். அப்படி நான் செலக்ட் பண்ணது..”

  “மிஸ்டர் விஷ்ணு..”

     இவ்வளவு நேரம் வீர்-ன் பண்பான வார்த்தைகளை கவனித்த மற்ற நபர்கள் தேர்வான விஷ்ணுவிற்கு கைத்தட்டல்களை பாராட்டாக கொடுத்தனர். தான் தேர்ந்தெடுக்கப்படாத வருத்தம் இருந்தாலும் வைஷ்ணவியும் நாகரிகமாய் கை தட்டினாள்.  

   “மிஸ்டர் விஷ்ணு உங்களை என் கம்பெனியோட விளம்பர செயல்பாட்டாளரா தேர்ந்தெடுக்கிறேன். நாளையில் இருந்து நீங்க ஜாயின் பண்ணலாம்..”

  இந்த வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என தன் குடும்ப கஷ்டத்தை மனதில் வைத்து வேண்டுதலோடு இருந்த விஷ்ணுவிற்கு இறைவனின் கரிசனம் கிடைத்துவிட்டது. 

  “ அப்புறம் ஒரு வாரத்துக்கு பிறகு என் கம்பெனியில் இன்னொரு இன்டர்வியூ நடக்கிறதா இருந்தது . எனக்கு ஒரு பர்சனல் அசிஸ்டன்ட் தேவைப்பட்டாங்க இப்போ சந்தோஷமான விஷயம் என்னன்னா என்னோட நேரம் மிச்சமாச்சு எனக்கு தேவையான இரண்டு பேரும் இந்த ஒரே இன்டர்வியூவில் கிடைச்சிட்டாங்க,  மிஸ் வைஷ்ணவி உங்களை என்னோட பர்சனல் அசிஸ்டன்ட்- ஆ தேர்வு செஞ்சிருக்கேன்..”

  அவன் இதமான பார்வையோடு விஷயத்தை உரைக்க சற்றும் எதிர்பாராதவள் அதிர்ச்சியோடு புன்னகையை வீசினாள். 

    “மற்ற எல்லாருக்கும் உங்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு என் நல்வாழ்த்துக்கள்..”

  விசயத்தை உரைத்து விட்டு வீர் அவனின் கேபினுக்கு சென்று விட்டான் . விஷ்ணுவும் வைஷ்ணவியும்  ஜானவியுடன் சென்றனர். 

  ஜானவி அவர்களுக்கு ஆபீசை பற்றி சில விஷயங்களை எடுத்துரைத்தாள். 

  “நீங்க இரண்டு பேருமே ரொம்ப கொடுத்து வச்சவங்க இன்னைக்கு இன்டர்வியூல் உங்களில் யாராவது ஒருத்தரை தான் செலக்ட் செய்யறதா இருந்தாரு..”

  ஜானவி கூறிய விஷயம் கேட்டு விஷ்ணுவும் வைஷ்ணவியும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர். 

   “எக்ஸிக்யூட்டிவ் ஆபிசர் (செயல்பாட்டு அலுவலர்) மட்டும் தான் தேவைப்பட்டாங்க, இப்போ பர்சனல் அசிஸ்டன்டை அவர் தேர்வு பண்ணது பெரிய விஷயம். நீங்க எந்த அளவுக்கு நேர்மையா கடமையை செய்றீங்களோ, அந்த அளவுக்கு மேல வருவீங்க..

     சரி உங்க இரண்டு பேரையும் சார் மீட் பண்ணனும்னு சொன்னாரு அவருடைய கேபினுக்கு போங்க..”

  இருவரும் யோசனையுடனே வீர்-ன் கேபினுக்குள் சென்றனர். 

  அவர்களை அமர வைத்து பேசினான் வீர். 

  “உங்க இரண்டு பேருக்குமே ஆபீசை பற்றி ஜானவி சொல்லிருப்பாங்க.. ”

  “ஆமா சார் சொன்னாங்க..”

  விஷ்ணு முந்திக்கொண்டு பதில் அளித்தான். 

  “ஓகே இங்க நீங்க வாங்குற சம்பளத்துக்கு நேர்மையா வேலை செய்யணும்.  அதை தவிர உங்க கிட்ட நான் எதுவும் எதிர்பார்க்கலை . உங்களோட நேர்மைக்கு கிடைக்கிற பரிசு என்ன தெரியுமா உங்களுடைய இன்கிரிமென்ட் (சம்பள உயர்வு), ஒரு வேலை உங்களில் யாராவது எனக்கு துரோகம் செஞ்சீங்கன்னா இந்த உலகத்திலேயே என்னை விட சிறந்த எதிரி உங்களுக்கு யாரும் இருக்க மாட்டாங்க.. ”

   ‘என்ன இப்படி எல்லாம் கூறுகிறார்…’ என தன் விழிகளை இமைத்து சற்று அச்சத்துடனே பார்த்தாள் வைஷ்ணவி. 

   “என்ன விஷ்ணு இப்ப பதிலே காணலை..”

  “ஓகே சார் கண்டிப்பா நேர்மையாய் இருப்பேன்..”

   “குட் நீங்க இரண்டு பேரும் நாளையில் இருந்து வேலையில் ஜாய்ன் பண்ணலாம் ஆல் த பெஸ்ட்..”

  வீர் – ஐ சந்தித்த பிறகு இருவரும் வெளியே வந்தனர்.  

   “என்ன வைஷ்ணவி இவர் பேசுறதே வித்தியாசமா இருக்குல்ல,  நேர்மையா இல்லைனா எதிரியா மாறுவேன்னு சொல்றாரு..”

   “பயப்படத் தேவையில்லை நாம சம்பளத்துக்கு வேலை செய்றோம்.  வேலையை சரியா செஞ்சா எந்த முதராளியும் குறை சொல்ல மாட்டாங்க..”என்றாள்.

    “சரி நீங்க எங்க தங்கிருக்கீங்க… “என விஷ்ணு கேட்க 

    “நான் ஒரு women’s hostel (பெண்கள் விடுதி ) ல் தங்கிருக்கேன்..”

    இதற்கு மேல் முதல் அறிமுகத்திலேயே விஷயங்களை அவனிடம் பகிர்ந்து கொள்ள அவளுக்கு விருப்பமில்லை. 

     “சரி நாளைக்கு பார்க்கலாம்..”  என கிளம்பினாள் வைஷ்ணவி.

  அவள் விடை பெறுவதாக கூற இவனும் புன்னகையுடன் கிளம்பிச் சென்றான். 

   இன்றைய நாளின் வேலைகளை முடித்த பிறகு மாலை வீர்-ன் கம்பெனியிலிருந்து ஊழியர்கள் வீட்டிற்கு திரும்பினர். 

  இரவு 7 மணி நெருங்கி இருக்க அப்போது ஜானவி உள்ளே வந்தாள்.

  “சார், நீங்க நாளைக்கு பார்க்க வேண்டிய பைல் எல்லாம் இங்கே வைக்கிறேன்..”

  “தேங்க்ஸ் ஜானவி,  கொஞ்ச நாளா உங்களுக்கு தான் ஒர்க் அதிகமா போயிடுச்சு … டோன்ட் வொரி நாளைலிருந்து என் பி ஏ வருவாங்க இதையெல்லாம் அவங்க கவனிச்சுக்குவாங்க..”

    “இட்ஸ் ஓகே சார் நான் போயிட்டு வரேன்..”

   அதன் பிறகும் வீர் தொடர்ந்து வேலை செய்தான் .இரவு எட்டு மணி தாண்டி ஒன்பதை நெருங்கியது. 

  அப்போது அவனின் மொபைல் எண்ணிற்கு அழைப்பு ஒன்று வந்தது. 

  பதிவு செய்யப்படாத அந்த எண்ணை கண்டதும் அவனுக்கு குரோதம் அதிகரித்தது. காலை கட் செய்து விட்டான். 

  மீண்டும் அழைப்பு தொடர்ந்து வர வெறுப்போடு அட்டென்ட் செய்தான். 

  “ஹலோ வீர் என்னப்பா பண்ற..?”

  மறுமுனையில் பாசத்துடன் ஒரு தாயின் குரல் கேட்டது.

   “ முதல்ல என்கிட்ட இந்த மாதிரி கொஞ்சி பேசுற வேலை வச்சிக்காதீங்க எதுக்கு கால் பண்ணிங்க ..”

    “ நீ இன்னும் வீட்டுக்கு போகலையா உன்னோட கேபினில் லைட் எரியுது..”

  வீர்-ன் ஆஃபீஸ் கட்டிடத்தை வெளியில் இருந்து பார்த்தால் அவனின் கேபினில் லைட் எரிவது தெளிவாக தெரியும். 

     “இங்க பாருங்க நான் வீட்டுக்கு போறேன் போகலை உங்களுக்கு அது தேவையில்லாத விஷயம். இன்னும் நான் எத்தனை நம்பர் தான் மாற்றுவது. ஏன் எனக்கு அழைச்சிட்டே இருக்கீங்க ..”

    “நீ என்னை வெறுத்தாலும் ஒரு அம்மாவா என்னால உன்னை வெறுக்க முடியாது..”

  “அம்மாவா யாருக்கு யார் அம்மா, நீங்க ஒரு கொலைகாரி.. ”

                                     😉

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page