Epi 34 – தவிக்க வைத்தவளே

இதுவரை… 

  டிபார்ட்மெண்ட்டில்  ஸ்டோரில் வைஷூ தன்னை  சந்திக்க வந்த நபரை கண்டு தயங்கினாள். நாளை உன்னை நேரில் சந்திக்க வேண்டும் என வைஷூவிடம் அவன் கூற, என்ன செய்வதென புரியாது தவித்து நின்றாள்.

இனி…. 

         மறுமுனையில் வைஷூவிடம் பேசிய அந்த நபர் விஷயத்தை கண்டிப்புடன் உரைத்து விட்டு அழைப்பை துண்டிக்க, அவனை சமாதானம் செய்யும் நோக்கில் வைஷ்ணவி மீண்டும் அழைப்பு விடுக்க, எந்த அழைப்பும் ஏற்கப்படவில்லை.

          மாறாக நாளை சந்திக்க வேண்டிய இடத்தின் பெயர் மட்டும் மெசேஜில் வந்தது.

   ” கடவுளே இப்ப என்ன பண்றது…”  நெற்றியை பிடித்தவாறு தலைவலியுடன் அவள் பெட்டில் அமர, அறைக்கதவை தட்டும் சத்தம் கேட்டது.

    உள்ளுக்குள் கவலையும் பதற்றமும் நிறைந்த மனநிலையோடு அவள் தலையை பிடித்தவாறு அமர்ந்திருக்க, திடீரென கேட்ட சத்தத்தில் சட்டென்று நிமிர்ந்தாள்.  அது வீர் தான் என அவளுக்கு நன்கு தெரியும். வெறுப்புடனே கதவை திறந்தாள்.

   “ இப்போ உனக்கு என்ன வேணும் ..”

  “என்னுடைய போர்வையை எடுத்துக்க வந்தேன் நகரு…” 

     உள்ளே சென்றவன் அவனின் போர்வையை கையில் எடுத்தான்.  உடன் ஒரு தலையணையையும் எடுத்துக் கொண்டான்.

  “ அதான் பக்கத்துல இன்னொரு ரூம் இருக்குல்ல நீ அதுல போய் தூங்க வேண்டியது தானே எதுக்காக வெளியே சோஃபாவில் படுக்கற..”

  “எனக்கு அந்த ரூம்ல படுத்தா தூக்கம் வராது. ஒன்னு என்னுடைய ரூம்ல தூங்கனும்,  இல்லைன்னா ஹாலில் தூங்குவேன்..”

  ஏன் அந்த அறையில் படுத்தால் உறக்கம் வராது என்ற கேள்வி உள்ளுக்குள் இருந்தாலும், அதையெல்லாம் அவனிடம் கேட்டு தெரிந்து கொள்ள விருப்பமில்லை . அவன் வெளியே சென்றதும் கதவை சட்டென சாத்தினாள்.  அவளின் முகத்தில் தெரிந்த பதற்றமும் கையில் இருந்த மொபைலும் அவனுக்குள் கேள்விகளை அதிகரித்தது. 

  மறுநாள் காலை விடியலுக்குப் பிறகு பால்கனி வழியாக வந்த சூர்ய வெளிச்சம் ஹால் சோஃபாவில் படுத்துக் கொண்டிருந்த வீர்-ன் முகத்தில் பட்டு கண்விழித்தான்.

     விடியலின் ஆரம்பமே வைஷ்ணவியின் முகத்தில் தான் விடிந்தது.  நேராய் இருந்த கிச்சனில் அவள் வேலை செய்து கொண்டிருப்பது தெளிவாக தெரிந்தது. 

  தன்னுடைய அறைக்குள் சென்றவன் முகம் கழுவி பல்துலக்கிய பிறகு வெளியே வந்தான். அவன் மீண்டும் வந்து சோஃபாவில் அமர்ந்ததுமே காஃபியை கொடுத்தாள்.

  “என்ன கேட்காமலே காஃபியை கொடுக்கற..”

  “அடுத்து நீ இதைத்தான் கேட்பேன்னு எனக்கு தெரியும்.. ” என்றாள். 

  காஃபியை பெற்றுக் கொண்டவன் அதை ருசிக்கவும் செய்தான் . இன்று அவளின் அன்றாட வேலைகளில் வேகம் சற்று கூடுதலாகவே தெரிந்தது. 

  விரைவில் காலை உணவை சமைத்து முடித்தவள், குளிப்பதற்கு சென்றாள்.

  சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தில் அவன் நேரத்தை கவனிக்க காலை 7:45 காட்டியது. விரைவில் வேலைகளை முடித்துவிட்டு வேகமாக கிளம்புவது போல் தெரிந்தது.  சற்று நேரத்தில் குளித்து தயாராகி வெளியே வந்தவள். தன் கை கடிகாரத்தை கட்டியவாறு ஹேண்ட் பேக்கை மாட்டிக் கொண்டாள். 

  ஹாலில் அமர்ந்திருந்த வீர்-இடம் ஒரு வார்த்தை கூட கூறாது வீட்டை விட்டு கிளம்பினாள்.

  “ஏய் நில்லு மணி எட்டு முப்பது தான் ஆகுது. அதுக்குள்ள எங்க கிளம்பி போற..”

  “நான் வெளியே போறதா இருந்தா கூட உன் கிட்ட சொல்லிட்டு தான் போகணுமா..?”

  “பின்ன வீட்ல இருக்கிறது இரண்டே பேர் தான், வெளிய போகும் போது சொல்லிட்டு கூட போக முடியாதா..?”

  அவனின் வார்த்தை கேட்டு சலித்துக் கொண்டவள், விஷயத்தை உரைத்தாள்.

  “என் அப்பாவை பார்க்க போறேன் ஆபீஸ்க்கு வர டைம் ஆகும். ஹாஸ்டல் விஷயமா கொஞ்சம் வெளியே போக வேண்டியது இருக்கு. இன்னைக்கு ஆபீஸ்க்கு வர முடியாமல் கூட போகலாம்..” 

  “சரி, ஒருவேளை லீவ்வா இருந்தா உன்னுடைய சம்பளத்தில் பிடிச்சுக்கிறேன் போயிட்டு வா..”

  “கல்நெஞ்சக்காரா … ” என முனகி விட்டு முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள்.

  அவளின் பொய்யான காரணத்தை இவனும் நம்பினான்.  ஆஃபீஸிற்கு செல்வதற்காக குளித்து தயாராகி காலை உணவு எடுத்துக் கொண்டவன், அவள் உண்ணாமல் சென்றதை அப்போது தான் நினைவு கூர்ந்தான். 

  “இவ்வளவு நல்லா சமைச்சுட்டு சாப்பிடாமல் வெறும் வயிற்றில் போயிட்டாளே, நானும் கவனிக்கவே இல்லை…”

  மனதிற்குள் அவளுக்காக வருந்திக் கொண்டிருக்க வீட்டு காலிங் பெல் ஒலித்தது.

  அவளாக இருக்குமோ என்ற எண்ணத்தில் தான் விரைந்து சென்று கதவை திறந்தான். ஆனால் வாசலில் நின்றிருந்தது அவளின் தந்தை ஐயாசாமி. 

  “என்ன மாப்ளே, வந்தவங்களை வீட்டுக்குள்ள வாங்கன்னு கூப்பிட மாட்டீங்களா..?”

  தன் மகளின் செலவுகளுக்காக பணம் கொடுக்கிறான் என தெரிந்த பிறகு உறவுமுறை வைத்தே அழைத்தார் ஐயாசாமி. 

  “உள்ள வாங்க…”

  ஐயாசாமி வீட்டினுள் நுழைந்ததுமே தன் மகளைத் தான் தேடினார். ஆனால் அவள் இவரை பார்ப்பதாக தான் கூறிவிட்டு சென்றிருந்தாள்.

  “சாப்பிடுறீங்களா…? ”

  “இல்ல மாப்ளே ,ஒரு முக்கியமான விஷயமா வைஷ்ணவியை பார்க்க வந்தேன். அவளை கூப்பிடுங்களேன்..”

  “வாட்..!  வைஷூ காலையில் சீக்கிரமாவே ரெடி ஆகி உங்களை பார்க்கிறதுக்காக ஹாஸ்டல் கிளம்பினாளே…”

  “என்னை பார்க்கவா, ஆனா இதுவரைக்கும் வரவே இல்லையே நான் கூட கால் பண்ணேன் எடுக்கவே இல்லை அதனால தான் நேரிலேயே வந்தேன்..”

  தன்னிடம் பொய் கூறிவிட்டு எங்கு சென்றிருப்பாள் என வீர்-க்கு ஒரே யோசனையாக இருந்தது. 

   அப்போது தான் ஐயாசாமிக்கும் மனதிற்குள் ஏதோ விசயம் இடித்தது . வைஷ்ணவி, வேறு ஏதோ வேலையாக வெளியே கிளம்பி இருக்கிறாள். நான் வேறு இங்கு வந்து விஷயத்தை உடைத்து விட்டேனே என தயக்கம் கொண்டார். 

  “அது… எனக்கு இப்போ தான் ஞாபகம் வருது மாப்ளே, வைஷ்ணவி காலையிலேயே என்னை பார்க்க வரேன்னு சொன்னாள். நான் தான் ஞாபகம் இல்லாமல் வீட்டை பூட்டிட்டு கிளம்பி வந்துட்டேன். நான் இப்பவே வீட்டுக்கு போறேன். வைஷ்ணவி எனக்காக அங்க காத்துட்டு இருப்பாள்..”

  ஐயாசாமியின் நடவடிக்கையில் பொய் தெரிந்தாலும் தடுத்து விசாரிக்கும் அளவிற்கு அவரிடமிருந்து உண்மையை எதிர்பார்க்க முடியாது என வீர்-க்கு நன்கு தெரியும். 

  ஏதேதோ பேசி சமாளித்துவிட்டு ஐயாசாமி அங்கிருந்து வெளியேறினார். அதற்கு மேல் தனது காலை உணவை முடிக்க மனம் வரவில்லை அரைகுறை சாப்பாட்டுடன் கையை கழுவிக்கொண்டு வேலைக்கு கிளம்பினான் வீர். அவள் எங்கு சென்றிருப்பாள் என உள்ளம் நச்சரித்துக் கொண்டே இருந்தது.  அவ்வப்போது அழைப்புகளை விடுத்திருக்க அதையும் அவள் ஏற்கவில்லை. 

       இந்த மாற்றம் எல்லாம் நேற்று இரவு அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் இருந்து கிளம்பும் போது ஆரம்பித்தது என அவனுக்கு நன்கு புரிந்தது. மதியம் தாண்டிய பிறகும் அவள் ஒரு பதிலும் கூறாமல் அழைப்பை தவிர்ப்பது சரியாக படவில்லை .உடனே அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு தான் கிளம்பினான். 

  “என்னப்பா வீர், இந்த நேரத்தில் வந்திருக்க எப்போதும் ராத்திரி தானே வருவ..”

  “அங்கிள் நேத்து நைட்டு உங்களுடைய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வரும் போது என்னுடைய வாட்ச் ஒன்னு மிஸ் ஆகிடுச்சு அது கொஞ்சம் லூசா இருக்கும். இங்க எங்கேயாவது தான் விழுந்திருக்கும் நீங்க தப்பா நினைச்சுக்கலைன்னா நேத்து நான் நின்னுட்டு இருந்த இடத்தை கேமராவில் பார்த்துக்கலாமா..”

  “அட இதுல தப்பா நினைக்க என்னப்பா இருக்கு, எனக்கு தெரிஞ்சு அந்த மாதிரி வாட்ச் எதுவும் இங்க கிடைக்கலை. கிடைச்சிருந்தா வேலை செய்ற பசங்களே எடுத்து கொடுத்திருப்பாங்க, எதுக்கும் ஒரு தெளிவுக்காக பார்த்துக்கலாம் வா…”

  நேற்றைய தினத்தின் சிசிடிவி கேமராவை அவர் காண்பிக்க, வீர் உள்ளே வந்த சுமயம் வைஷ்ணவியும் வந்திருக்க பின் தொடர்ந்து முகத்தை மறைத்தவாறு இன்னொரு நபர் உள்ளே வந்தது மர்மமாகவே இருந்தது. 

  “சரிப்பா நீ வீடியோவை கவனி, நான் போய் வேலையை பார்க்கிறேன்..”

  “ஓகே அங்கிள், நான் பார்த்துக்கிறேன்..”

  வீர் தொடர்ந்து அந்த மர்மமான நபரின் செயலை தான் கண்காணித்தான். அவன் நேராக வைஷ்ணவி இருந்த இடத்திற்கு தான் சென்றான். வீடியோவில் அவர்கள் பேசிக் கொள்வது கேட்கவில்லை. ஆனால் அவள் தலை நிமிர்ந்து அதிர்ச்சியாக பார்த்த சமயமே அந்த மர்ம நபர் வைஷ்ணவியை அணைத்ததை வீடியோவில் பார்த்தான் வீர். 

  கோபத்தில் தன்னுடைய கைவிரல்களை உள்ளங்கைக்குள் அடக்கி கட்டுப்படுத்தியவன் தொடர்ந்து நடப்பதை கவனித்தான். 

  அவன் கட்டியணைத்த சமயம் வைஷ்ணவி விலக்கி விட்டாள். மேற்கொண்டு அவனிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்க அப்போது தான் வீர் அங்கு வந்தான். அச்சமயம் அந்த மர்ம நபர் அங்கிருந்து நகர்ந்து வேறு புறமாக சென்று விட்டான். 

  அப்போது தான் வீர்க்கு தோன்றியது நேற்று இரவு உணவின் சமயத்தில் அழைப்பு விடுத்தது இவனாக இருக்கலாம். இவனை சந்திப்பதற்காக சென்றிருப்பாளோ என சந்தேகமும் எழுந்தது. 

  “என்னப்பா வீர் பார்த்தியா? வாட்ச் எங்க விழுந்துச்சுன்னு ஏதாவது தெரிஞ்சதா..”

  “இல்ல அங்கிள், வாட்ச் இங்க மிஸ் ஆகலை, ஆபீஸ்ல தான் இருக்கும் போல நான் போய் பார்க்கிறேன் தேங்க்யூ..”

  “பரவாலப்பா பார்த்து போயிட்டு வா..”

  அலுவலகம் சென்ற வீர்-க்கு வேலையே ஓடவில்லை. காலையிலிருந்து இத்தனை முறை அழைத்தும் அழைப்பை அவள் ஏற்க்காது இருப்பது மேலும் அச்சுறுத்தியது. மாலை நேரமும் நெருங்கியது. பிறகு நேராக அவர்களின் ஹாஸ்டலுக்கு தான் சென்றான். 

  வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு ஐயாசாமி கதவை திறக்க வீர் நின்றிருந்தான். 

  “என்ன மாப்ளே, திடீர்னு இங்க வந்திருக்கீங்க…”

  “ஏன் நான் இங்க வர கூடாதா..?”

  “அப்படி இல்ல, உள்ள வாங்க…”

  வந்தவருக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் ஏன் வந்தீர்கள் என விசாரித்தார் ஐயாசாமி. 

  “என்ன விஷயமா வந்திருக்கீங்க ..” 

  “வைஷ்ணவி இன்னும் வீட்டுக்கு வரலை காலையிலிருந்து நான் பண்ண எந்த அழைப்புக்கும் பதில் இல்லை.  அதான் உங்ககிட்ட கேட்க வந்தேன்..”

    “அது… காலையிலேயே வைஷ்ணவி என்னை வந்து பார்த்தாள். அப்புறம் கொஞ்ச நேரத்திலேயே கிளம்பிட்டாள்.  ஏதாவது வேலையா பக்கத்துல போய் இருப்பாள்..”

  “அப்போ , வைஷ்ணவி காலையில் நிஜமா உங்களை பார்க்க வந்தாளா…” 

  “ஆமா மாப்ளே, நான் என்னமோ பொய் சொல்ற மாதிரி மறுபடியும் அழுத்தி கேக்குறீங்க…”

  “இங்க பாருங்க வீட்ல யாராவது இருக்கீங்களா இல்லையா.. ? முதல்ல வெளிய வாங்க… எங்களை எல்லாம் பார்த்தா எப்படி தெரியுது நாங்களும் மனுஷங்க தான்…”

  வீட்டு வாயிலில் சில பெண்கள் வந்து சத்தமிட்டனர். குரல் கேட்டு வீர் வெளியே வர உடன் ஐயாசாமியும் வந்தார். 

  “அட இந்த சமயத்திலா இந்த பொண்ணுங்களாம் வரணும்..”

  “இங்க பாருங்கம்மா, எதுவா இருந்தாலும் காலையில் பேசிக்கலாம் போய் எல்லாரும் ரூம்ல தூங்குங்க..”

  “எப்படிங்க தூங்குறது..? இரண்டு நாளா பவர் கட்டில் இருக்கு.. நாங்க எல்லாம் வேலைக்கு போயிட்டு வரவங்க, ஹாஸ்டலில் சாப்பிட்டு நிம்மதியா தூங்கலாம்னு பார்த்தா அந்த தூக்கம் கூட இங்கே கிடைக்க மாட்டேங்குது. போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்னு பார்த்தா, அதை இதைனு சொல்லி எங்க வாயை அடைக்கிறீங்க..”

  “கொஞ்சம் பொறுமையா இருங்க, என்ன ஆச்சு ஏன் இப்படி சத்தம் போடுறீங்க.. ” என வீர் விசாரிக்க 

  “சார், நாங்க எல்லாரும் இந்த ஹாஸ்டலில் தான் தங்கிருக்கோம்.  இவங்க கரண்ட் பில் கட்டாம விட்டுட்டாங்க, கவர்மெண்ட்ல இருந்து வந்து பியூஸை பிடிங்கிட்டாங்க, இரண்டு நாளா சரியா தூக்கம் இல்லாமல் இருக்கோம்..” 

  “போய் உங்க கரண்ட் பில் கார்டை எடுத்துட்டு வாங்க..”

  வீர் கூறியதால் ஐயாசாமி உடனே எடுத்து வந்தார். அதன் பிறகு இரண்டே நிமிடத்தில் ஆன்லைன் மூலம் தன் மொபைலில் இருந்து அந்த பணத்தை கட்டினான்.  

 “ கரண்ட் பில் கட்டியாச்சு, கொஞ்ச நேரத்தில் பவர் வந்துடும் நீங்க எல்லாரும் இங்கிருந்து போங்க… ”

  வீர்-ன் வார்த்தைகளுக்குப் பிறகு பெண்கள் அங்கிருந்து கிளம்பினர். 

  “எதுக்கு உங்களுக்கு இந்த ஏமாத்து வேலை. நீங்க கெட்டுப்போனது இல்லாம உங்க பொண்ணையும் கெடுத்து வச்சிருக்கீங்க, அவள் சொல்ற பொய்க்கு நீங்களும் உடைந்தை. காலையிலிருந்து நீங்க அவளை பார்க்கவும் இல்லை. அவள் எங்க இருக்காள்னு உங்களுக்கும் தெரியாது..”

  “அப்படி இல்ல மாப்ளே ,அவள் ஏதாவது வேலையா வெளிய போயிருப்பாள் வந்துருவா..”

  “இப்படியே தான் இத்தனை வருஷமா காலத்தை ஓட்டிட்டு இருக்கீங்க, காலம் ரொம்ப கெட்டு கிடக்கு… இந்த காலத்துல ஆண்களுக்கு கூட நடுவீதியில் பாதுகாப்பு கிடையாது. உங்க பொண்ணு திரும்ப வரட்டும் அப்புறம் இருக்கு அவளுக்கு…”

  வீர் கண்டிப்புடன் கூறிவிட்டு கிளம்பினான். சரியான ஆளிடம் தான் தன் மகள் சிக்கியிருக்கிறாள் என நினைத்துக் கொண்டார் ஐயாசாமி. 

இனி வைஷூ வந்தால் அவளுக்கு என்ன காத்திருக்கிறதோ…

                                😉

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page