இதுவரை…
இன்டர்வியூவில் வைஷ்ணவி மற்றும் விஷ்ணு இருவரையும் தன் கம்பெனி வேலைக்கு தேர்ந்தெடுத்தான் வீர். பெற்ற தாய் என கூறி வீர் – க்கு அழைப்பு விடுத்தது யார்..?
இனி..,
வீர் தொடர்ந்து ஆஃபீஸ் வேலையில் இருந்த சமயம் அவனின் தாய் அழைப்பு விடுத்தார்.
“நீ என்னை வெறுத்தாலும் ஒரு தாயா என்னால உன்னை வெறுக்க முடியாது வீர்”
“யாருக்கு யார் தாய்..? நீங்க ஒரு கொலைகாரி. எத்தனை முறை சொல்றது உங்க குரலை கேட்க கூட எனக்கு விருப்பம் இல்லை. என்கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கிறீங்க, என்னுடைய உயிரா, அதனால உங்களுக்கு எந்த லாபமும் இல்லையே. நான் செத்தா தான் உங்களுக்கு நிம்மதினா சொல்லுங்க உங்க வீட்டு வாசலுக்கே வந்து உயிரை விட்டுக் கொடுக்கிறேன்..”
தாயை பார்த்து மகன் கூறும் வார்த்தைகளா இது . அவன் கூறிய வார்த்தைகள் கேட்டு ரத்னாவிற்கு இறுக்கிய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
நடந்த பேச்சு வார்த்தையை ஸ்பீக்கரில் கேட்டுக்கொண்டிருந்த ரத்னாவின் இரண்டாவது கணவர் ஹரிஹரன், வீர்-ன் மீது கோபம் கொண்டார்.
“ போனை குடும்மா..”
ஹரிஹரன் ரத்னாவின் கையில் இருந்த போனை வாங்கினார்.
“மனுஷனாடா நீ எல்லாம். உன் அப்பனை மாதிரி தான் நீயும். உண்மையான பாசத்துக்கும் வேஷத்துக்கும் வித்தியாசம் தெரியாதவங்க… உன்னை சொல்லி தப்பில்லை இதயம் இல்லாத உன்னை இவள் தேடி வந்துகிட்டே இருக்கா பார்த்தியா இவளை சொல்லணும்..”
ஹரியின் குரலை கேட்டதும் வீர்-க்கு கோபம் அதிகரித்தது. உடனே காலை கட் செய்து விட்டான்.
“திமிரு புடிச்சவன் காலை கட் பண்ணிட்டான். உனக்கு என்னைக்கு தான் புத்தி வரும் ரத்னா. நீ தான் அவனை மகன் மகன்னு பின்னாடி சுத்துற.. ஒரு நாயை விட கேவலமா நடத்துறான். என்னால பார்த்திட்டு இருக்க முடியலை..”
“நீங்க ஏன் குறுக்க வந்து பேசுனீங்க.. கோபத்தில் திட்டுறதுக்காக என்கிட்ட இரண்டு நிமிஷம் பேசுவான். அதையும் கெடுத்துட்டீங்க…”
“ம்க்ஹூ, இப்ப மட்டும் என்ன கெட்டு போச்சு திருப்பி கால் பண்ணு அரை மணி நேரத்துக்கு திட்டுவான் கேட்டுட்டு சொல்லு அப்றம் வீட்டுக்கு போலாம்… ”
ரத்னா தன் கண்ணீரை துடைத்து விட்டு வீர்-ன் அறையை கவனிக்க, அதில் தற்போதும் மின் வெளிச்சம் ஒளிர்ந்து கொண்டு தான் இருந்தது .
வேலையை தொடர்ந்து கொண்டிருந்த வீர், வந்த அழைப்பினால் மனம் தடுமாறினான். ஒரே கோபமாக வந்தது. எதையும் கவனிக்க முடியவில்லை. எரிச்சலில் லேப்டாப்பை ஆப் செய்து விட்டு அறையின் மின் விளக்கையும் அணைத்தான் வீட்டிற்கு திரும்பினான்.
ரத்னாவும் ஹரியும் வீர்-ன் ஆபிஸிற்கு எதிர்புறம் இருந்த அவர்களின் வீட்டிற்கு திரும்பினர்.
மனம் முழுக்க கடந்த கால வாழ்க்கைகளை நினைவு கூர்ந்து கொண்டே காரை ஓட்டினான் வீர். வீர் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது தான் அவனின் தாயும் தந்தையும் விவாகரத்து செய்து கொண்டார்கள்.
அன்று நடந்தது :
வீட்டில் பிரச்சனை பெரிதாக வெடித்துக் கொண்டிருந்தது. வீட்டில் தாயும் தந்தையும் ஹாலில் போடும் சத்தம் வீட்டின் கேட்டை தாண்டி வெளியே கேட்டது வீர்-க்கு.
அப்போது தான் டிரைவர் பத்தாம் வகுப்பு படிக்கும் வீர்-ஐ பள்ளியில் இருந்து மாலை 5 மணியளவில் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.
காரிலிருந்து இறங்கிய வீர் ஹாலில் கேட்கும் சத்தம் கேட்டு சோகத்தோடு தலை குனிந்தான்.
‘மீண்டும் சண்டை இடுகிறார்களா..’
வீர் வீட்டினுள் நுழைந்த சமயம் தங்களுடைய மகன் வருவதைக் கண்டதும் இருவரும் சத்தம் போடுவதை நிறுத்திவிட்டனர்.
” வீர் இப்போ தான் ஸ்கூலில் இருந்து வரியா போ ரூமுக்கு போய் படிக்கிற வேலையை பாரு..” என்றார் செல்வன்.
தன்னை அறைக்குள் அனுப்பி விட்டு மீண்டும் இவர்கள் சண்டையிடுவார்கள் என தெரிந்த வீர் ,வருத்தத்தோடு சென்றான். மீண்டும் அவர்கள் வார்த்தைகளால் சண்டையிட்டுக் கொண்டனர்.
தன் பள்ளி சீருடையை மாற்ற மனம் இல்லாமல் சோகத்தோடு அமர்ந்திருந்த வீர்- க்கு பாலை காய்ச்சி கொண்டு வந்தார் அவனின் பாட்டி வேதாம்பாள்.
” வீர் இந்தாப்பா பால்..”
“நீங்க எப்போ பாட்டி ஊரில் இருந்து வந்தீங்க..”
“இன்னைக்கு தான்டா வந்தேன். எல்லாம் உன் அம்மா பண்ற வேலை, இந்த மாதிரி நடந்துக்கிட்டா எந்த புருஷன் தான் பொறுத்துக்கிட்டு போவான். உன்னை கவனிக்க ஆள் இல்லாததுனால உன் அப்பா தான் வர சொன்னான்..”
“இவங்களுக்குள்ள அப்படி என்ன தான் சண்டை பாட்டி..”
வீர் கேட்டதும் அறைக்கதவை எட்டிப் பார்த்தார் பாட்டி . எவரும் வரவில்லை என்பதை உறுதி செய்த பிறகு தன் பேரனிடம் பேசினார்.
“உன் அம்மாவுக்கு வேற ஒருத்தன் கூட கள்ளத்தொடர்பு இருக்கு.. உன் அப்பாவுக்கு அது தெரிஞ்சு போச்சு, வேண்டாம் விட்டுடுனு உன் அப்பா எச்சரிக்கிறான். முடியாதுன்னு சொல்லி அடமா பேசுறாள் உன் அம்மா..”
பாட்டி கூறுவது கேட்டு வீர்-க்கு ஆச்சரியமாக இருந்தது . தன் தாயும் தந்தையும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் . இப்படியா சண்டையிட வேண்டும் என மனம் வருந்தியது.
“போதும் ரத்னா, முடிவா என்ன தான் சொல்ற..?”
செல்வன் தன் மனைவி ரத்னாவிடம் கடைசி எச்சரிக்கையோடு கேட்டார்.
“என்னால உங்க கூட இனிமே வாழ முடியாது எனக்கு விவாகரத்து வேணும்..”
“தாராளமா தரேன். இந்த வீட்டை விட்டு கிளம்பி போ..” என்றார் செல்வன்.
செல்வனை வெறுப்போடு பார்த்த ரத்னா வீர்-ன் அறையை நோக்கி கிளம்பினாள்.
“ எங்க போற..”
“என் பையனை என் கூட அழைச்சிட்டு போக போறேன்..”
“கூட்டிட்டு போய் அவனையும் கஷ்டப்படுத்த போறியா. அவன் என்னை விட்டு வரமாட்டான்..”
“அதை நீங்க சொல்லாதீங்க, அவன் சொல்லட்டும்..”
“நான் சொல்றதை தான் என் பையன் கேட்பான். உன்கிட்ட தனியா சொல்லணும்னு அவசியம் இல்லை போடி வெளிய..”
செல்வனின் பேச்சையும் மீறி அறைக் கதவில் கை வைத்தார் ரத்னா.
“நில்லுடி..”
பின்னந்தலை கூந்தலை இறுக்கி பிடித்த செல்வம், ரத்னாவை வாசல் நோக்கி இழுத்துச் சென்றார்.
கூந்தல் மயிர்கால்கள் வலி எடுக்க வேறு வழியின்றி செல்வனின் இழுப்பிற்கு வெளியேறினாள் ரத்னா.
தாயின் குரல் கேட்டு அறைக்கதவை திறந்து வெளியே வந்தான் வீர்.
“அப்பா, அம்மாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பாதீங்கப்பா..”
வீர் ஓடிவந்து செல்வனின் கரங்களைப் பற்றினான்.
“வேண்டாம் வீர் நீ இப்படி கெஞ்சுற அளவுக்கு உன் அம்மா உத்தமி கிடையாது. இத்தனை வருசமா நான் கொடுத்த காதலுக்கு தகுதி இல்லாதவள்..”
“இந்த சிரிக்கியை அன்னைக்கே கல்யாணம் பண்ண வேண்டாம்னு தலைப்பாட அடிச்சுக்கிட்டேன். என் பேச்சை கேட்டியா.. தோள் உயரத்துக்கு வளர்ந்த பையனை வச்சுக்கிட்டு இவள் செஞ்சிருக்க அசிங்கத்தை பாரு இப்பதான் உனக்கு புத்தி வருது. வெட்டி விடுடா அவளை..”
வேதாம்பாள் தன் மகனை திட்டிக் கொண்டிருந்தார்.
அதன் பிறகு விவாகரத்து கேஸ் கோர்ட்டிற்கு வர, இருதரப்பு சம்மதத்துடன் விவாகரத்து வழங்கப்பட்டது. நீதிபதி யாருடன் தங்க விருப்பம் கொள்கிறாய் என வீர்-ரிடம் விசாரித்த சமயம் தன் தந்தையுடனே தங்குகிறேன் என பதில் உரைத்தான்.
விவாகரத்து நடக்கும் இந்த காலக்கெடுவில் வேதாம்பாள் அவன் தாயைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் வீர்-க்கு தெரியப்படுத்தி சரியான முடிவை எடுக்க வைத்தார்.
அதன் பிறகு செல்வன், வீர், பாட்டி வேதாம்பாள் மூவரும் அதே வீட்டில் வாழத் துவங்கினர். நிம்மதியான அவர்களின் வாழ்க்கையில் மீண்டும் வந்தார் ரத்னா.
அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் உடன் ரத்னா வீட்டு வாயிலில் வந்து நின்றிருந்தார்.
” மிஸ்டர் செல்வன், இந்த வீடு இவங்க பேரில் இருக்கு, சட்டப்படி நீங்க இங்க இருக்குறதுக்கான அனுமதி இல்லை. வீட்டினுடைய ஓனருக்கும் உங்களை இங்க தங்க வைக்கிறதில் விருப்பமில்லை. அதனால நீங்க இங்க இருந்து உடனே வெளியே போயாகணும்..”
இன்ஸ்பெக்டர் சட்டப்படி விஷயத்தை கூறியதும் வேறு வழியின்றி செல்வமும் வேதாம்பாளும் தங்களுடைய உடைமைகளை பேக் செய்தனர்.
“மனுசியா இவள் எல்லாம், புருஷன் மேலே பாசம் இல்லாமல் போகட்டும் சரி பெத்து வளர்த்த பிள்ளை, இவனும் இதே வீட்டில் தானே இருக்கான், இப்படி நடுத்தெருவில் விட்டால் எங்கே போவான்னு யோசிச்சாளா…”
“பாட்டி நமக்கு எதுக்கு அவங்களுடைய வீடு நம்ம வீட்டை நாமலே கட்டிக்குவோம். இந்த வீடு நமக்கு வேண்டாம் பாட்டி போலாம் வாங்க… ”
அன்று அந்த இல்லத்தில் இருந்து கிளம்பிய செல்வன் தன் தங்கை நீலாவதியின் வீட்டில் தான் தங்கினார்.
அப்போது தன் குடும்பத்தாரின் கையை பற்றியவன் தான் இந்த வீர். தற்சமயம் வரை தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறான். இவன் தற்போது தங்கி இருக்கும் இந்த பெரிய பிளாட் கூட இவனின் சொந்த உழைப்பில் வாங்கியது.
தன்னுடைய பிளாட்டிற்க்கு சென்ற வீர், மெயின் டோரை சாத்தி விட்டு தன் தந்தையின் அறைக்குள் நுழைந்தான்.
அங்கே செல்வன் மற்றும் வேதாம்பாளுக்கு மாலை இட்டு பொட்டு வைத்த புகைப்படம் இருந்தது. வீர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது செல்வனுக்கு புற்றுநோய் வந்து மரணித்து விட்டார். பாட்டிக்கும் ஏற்கனவே வயதாகி விட்டது. காலம் கடக்க முடியாமல் அவரும் போய் சேர்ந்தார் . அதன் பிறகு நீலாவதி தான் வீர்-ஐ கவனித்துக் கொண்டார்.
தன் மருமகன் மேலே இருக்கும் பாசத்தினால் மகள் ரம்யாவை கட்டிக் கொடுக்க விரும்புகிறார் நீலாவதி. ஆனால் வீர்-ம் மனம் என்ன முடிவு எடுக்குமோ..?
😉
