Epi – 5 – காம்பௌண்ட் ரோமியோ

இதுவரை… 

  தனக்கு அழைப்பு விடுத்த அவனின் தாய் ரத்னாவை வழக்கம் போல திட்டி முடித்தான் வீர். தனது தாய் தந்தையின் விவாகரத்திற்கு பிறகு மனம் நொந்தவன் ரத்னாவை முழுவதும் வெறுத்தான். 

இனி…

  ஆபீஸில் முடிக்க வேண்டிய வேலைகள் இன்னும் கணக்கில் இருக்க ரத்னாவின் அழைப்பில் எரிச்சல் அடைந்த வீர் வீடு திரும்பினான். 

   வீர்- இடம் வழக்கம் போல திட்டுகளை வாங்கிக் கொண்ட ரத்னா தன் கணவர் ஹரியுடன் இல்லம் திரும்பினார். 

  தங்களுடைய வீட்டுக் காலிங் பெல்லை அடிக்க அவரின் மகள் சைந்தவி கதவை திறந்தாள். 

   “காதல் பறவைகள் இரண்டு பேரும் வரவர பொறுப்பில்லாம இருக்கீங்களே.. சின்ன பொண்ணை வீட்ல வச்சுக்கிட்டு உங்களுடைய லவ்ஸ்ஸூ தாங்க முடியலையே.. ”

  “அடியே வாலு உன் வாயை கொஞ்சம் அடக்கு நாங்க உன்னை பெத்தவங்க.. ”

  ஹரி தன் மகளின் காதை திருகியவாறு உள்ளே வந்தார். 

  சைந்தவி எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளிப் பருவ பெண். சுட்டித்தனம் அதிகம். 

  “அச்சோ வலிக்குது காதை விடுங்க அப்பா..”

   தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தவள் தாயின் முகவாட்டத்தை கவனித்தாள்.

  “அம்மா ஏன் நீங்க பார்க்க டல்லா தெரியுறீங்க, ஹாஸ்பிட்டலில் வேலை அதிகமா..? ”

  ரத்னா ஒரு பல் மருத்துவர் ஆவார்.

  “வேற என்ன வழக்கம் போல அவனுக்கு கால் செஞ்சி பேசினாள். அவன் திட்டி விட்டுட்டான்..” என்றார் ஹரி.

 “ ஏன் அம்மா, நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க அவன் தான் உங்களை மதிக்கவே மாட்டேங்கிறானே..”

  “பல்லை உடைச்சிடுவேன் சைந்தவி. வீர் உன்னை விட வயசில் மூத்தவன், உனக்கு அண்ணன், அதை ஞாபகம் வச்சுக்கோ..”

  “ஆமா பெரிய அண்ணன், இது வரைக்கும் நேரில் ஒருமுறை கூட சந்திக்காத பாசக்கார அண்ணன். உன்னை கொஞ்சம் கூட மதிக்காத ஒரு ஆள் கிட்ட எதுக்குமா நீங்க போய் பேசுறீங்க..”

   “மதிக்கலைன்னு சும்மா ஒரு வார்த்தையில் சொல்லி முடிக்கற, அவன் என்னை வெறுக்கிறதுக்கு காரணம் நான் தானே…. விவாகரத்துக்கு பிறகு அவனை நான் சந்திக்கவே இல்லை. பத்தாததுக்கு குடியிருந்த வீட்டையும் வாங்கி அவனை தவிக்க வச்சிட்டேன். இதற்கெல்லாம் கோவம் இருக்கத்தானே செய்யும். 

  ஆனால் என்னவோ நீ பிறந்ததிலிருந்து உன்னை வளர்க்க வளர்க்க எனக்கு வீர்-ருடைய ஞாபகம் தான் வந்தது. அம்மா அம்மான்னு பின்னாடியே வருவான் அவனை அந்த ஆள் கிட்ட விட்டுட்டு வர எனக்கு மனசே இல்லை. வேற வழியில்லாமல் தான் விட்டுட்டு வந்தேன்..”

  “அப்போ உனக்கு என்னை விட அவனைத்தான் பிடிக்குமா..”

    “இத்தனை வருஷமா வீர் என்னை திட்டினாலும் வாங்க போங்கணு மரியாதையா தான் கூப்பிடுவான். ஆனா நீதான் அண்ணனை மதிக்காமல் வாடா போடான்னு சொல்ற…. ”

  “இப்படிப்பட்ட அண்ணனுக்கு இந்த மரியாதையே அதிகம்..”

  “சரி சரி அம்மாவும் பொண்ணும் சண்டை போடுறதை நிறுத்திட்டு சாப்பிட வாங்க..”

    சைந்தவிக்கு வீர்-ஐ பற்றி சப்போர்ட் செய்து பேசினால் சுத்தமாக பிடிக்காது. தாய்க்கும் மகளுக்கும் இதனாலையே சண்டை வரும். 

  மறுநாள் காலை : 

  சைந்தவி படிக்கும் அதே பள்ளியில் தான் வீர்-ன் அத்தை மகள் ரம்யாவும் படிக்கிறாள். 

  இன்றும் தன் அத்தை மகள் ரம்யாவை டிராப் செய்வதற்காக வீர் பள்ளிக்கு வந்திருந்தான். 

   “மாமா ஒரு முறை உள்ள வந்துட்டு போறீங்களா.. ?” 

  “இல்ல ரம்யா எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு..”

   வீர் பதில் உரைத்தும், தலை நிமிராது அமர்ந்திருந்தாள் ரம்யா. 

  “ரம்யா என்ன ஆச்சு, ஸ்கூல்ல ஏதாவது பிரச்சனையா..?”

  “ஆமா மாமா, என் கிளாஸ்ல படிக்கிற பையன் ஒருத்தன் நேத்து எனக்கு லவ் லெட்டர் கொடுத்தான். எனக்கே தெரியாம என்னுடைய நோட்புக்கினுள் வச்சிட்டான். சரியா அந்த பாடம் வரும் போது நான் நோட் புக்கை திறந்தேன் . அப்போ உள்ள இருந்த லெட்டரை படிச்சிட்டு இருந்தேன்.  கிளாஸ் மிஸ் என்னை பார்த்துட்டு இந்த லெட்டரை யார் எழுதினாங்கனு கேட்டாங்க, அதை யார் எழுதியிருப்பாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.

      ஆனால் அந்த பையனோட பெயரை சொன்னால் ஸ்கூலை விட்டு அனுப்பிடுவாங்க… அவனுடைய அப்பா அம்மாவும் பாவம் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாங்க, நான் பதில் சொல்லாம அமைதியா இருந்ததினால் பேரன்ட்ஸை அழைச்சிட்டு வர சொல்லி ஸ்கூல்ல சொல்லிருக்காங்க..”

   ரம்யா விஷயத்தை கூறி முடிக்க வீர் யோசனையில் இருந்தான். 

  “இந்த விஷயத்தை பத்தி உன் அம்மாகிட்ட சொன்னியா..”

  “ம்ஹூ… இல்லை மாமா அம்மாக்கு மட்டும் தெரிஞ்சது என்னை அடி பிடிச்சுருவாங்க..”

  “சரி நான் வரேன் வா, உங்க மேம்கிட்ட நான் பேசுறேன்..”

    வீர் காரை பார்க் செய்து விட்டு ரம்யா உடன் இணைந்து நடந்தான்.  அவளின் தோழியர்கள் ஓரமாய் நின்றவாரே வீர்-ஐ  ரசித்துக் கொண்டிருந்தனர். பள்ளிப் பருவப் பிள்ளைகள் தானே, ஒரு ஆணழகனை கண்டால் ரசிக்க மனம் ஏங்குவது சாதாரணம். வீர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்தான். 

   “வாவ், இவர் ரொம்ப அழகா இருக்கார்ல, இது அவர் தானே அந்த ரம்யா அக்காவோட மாமா விஜயன்..”

  சைந்தவியின் உடன் படிக்கும் தோழி ஒருவள் வீர்-ஐ பார்த்து வியந்து பேசினாள். 

  “ஹேய் அவரைப் பார்த்தால் எப்படியும் 25 வயசுக்கு மேல இருக்கும் உனக்கு அண்ணன் ஆகும் . அவரை போய் சைட் அடிக்கிற..”

   “சைந்து உனக்கு எப்படி இப்படி சொல்ல மனசு வருது. உன் வாயை கழுவு, நீ வேணும்னா அவரை அண்ணாவா நினைச்சுக்கோ, நான் உனக்கு அண்ணியா இருந்துட்டு போறேன்..”

   சைந்தவி, ரம்யா உடன் சென்ற வீர்-ஐ கவனித்தாள். இன்று தான் அவனை முதல் முறையாக பார்க்கிறாள். அதுவும் அவனின் தோழி அவன் பெயரின் கடைசி வார்த்தையை மற்றும் உச்சரித்ததில் இவன் பெயர் விஜயன் என அவள் நினைவு கொண்டாள். 

  தலைமை ஆசிரியையின் அறைக்கு வெளியே வீர்- ம் ரம்யாவும் காத்துக்கொண்டிருந்தனர். 

  “சார், மேடம் உங்க இரண்டு பேரையும் உள்ள கூப்பிடுறாங்க வாங்க..”

  பியூன் வந்து அழைத்த பிறகு வீர்-ம் ரம்யாவும் உள்ளே சென்றனர். 

  “வாங்க உட்காருங்க.. நீங்க ரம்யாவுக்கு என்ன வேணும்…?”

 “ நான் ரம்யாவுடைய மாமா, வீர்…”

  “என்ன ரம்யா, உன் அம்மாவை தானே அழைச்சிட்டு வர சொன்னோம்..”

  “மேம் ஒரு நிமிஷம், தப்பு பண்ணது ரம்யா இல்லை . அது மட்டும் இல்லாம அந்த லெட்டரை, யார் நோட்புக்ல வச்சாங்கனும் அவளுக்கு தெரியலை. அப்படி இருக்கும் போது ரம்யாவை விசாரிக்கிறதில் என்ன நியாயம் இருக்கு..”

  வீர் உள்ளே பேசிக் கொண்டிருந்த சமயம் சைந்தவி, சில நோட்டுப் புத்தகங்களை கையில் ஏந்தியவாரே தலைமை ஆசிரியையின் அறையை நோக்கி வந்தாள். உள்ளே பேசிக்கொண்டிருந்ததால் அறைக்கு வெளியே காத்திருந்தாள்.

    “நீங்க தான் இவள் சொல்றதை நம்புறீங்க, கண்டிப்பா அந்த லெட்டரை எழுதின பையன் யாருன்னு இவளுக்கு தெரிஞ்சிருக்கும். உங்க நல்லதுக்காக தான் விசாரிக்கிறோம். இப்படியே விட்டா ஒரு நாள் இரண்டு பேரும் காதலிக்கிறோம்னு ஆரம்பிச்சு  வாழ்க்கையை வீணாக்கிக்குவாங்க அதனால தான் கூப்பிட்டு விசாரிக்கிறோம்…”

   தலைமை ஆசிரியையின் பேச்சைக் கேட்ட பிறகு வீர் அருகே நின்றிருந்த ரம்யாவை கண்ணால் பார்த்தான். அவன் ஏதோ அனுமதி கொடுக்க இவளும் பதில் உரைக்க ஆரம்பித்தாள்.

   “நான் உண்மையை சொல்றேன் மேம்.  அந்த லெட்டரை என்னுடைய நோட்புக்கினுள் வச்சது எம்எல்ஏ தர்ம துரையுடைய பையன் கிஷோர் தான்..”

  “கிஷோரா..?”

   “ஆமாம் மேம், கொஞ்ச நாளா நான் எங்க போனாலும் என் பின்னாடியே வரான். நிஜமா இந்த லெட்டரை அவன் தான் வச்சிருப்பான். அவனை கூப்பிட்டு விசாரிக்கலாம்..”

   எம் எல் ஏவின் மகன் என தெரிந்ததும் தலைமை ஆசிரியை சற்று தயங்கினார்.  அந்த அளவிற்கு பெரிய ஆட்களின் பிள்ளைகள் படிப்பதால் தான் இந்த பள்ளிக்கு பெயரே வந்துள்ளது. இதில் அவர்களையே அழைத்து விசாரித்தால் நஷ்டம் தான் ஏற்படும். 

  ‘எப்படி இந்த விஷயத்தில் கிஷோரை அழைத்து விசாரிக்க முடியும்..’ என தடுமாறினார் தலைமை ஆசிரியை. 

   “என்ன மேம் இவ்வளவு நேரம் யார்னு  விசாரிச்சீங்க, ரம்யாவும் பதில் சொல்லிட்டாள். இப்போ அந்த கிஷோரை வர சொல்லுங்க, யாருன்னு நானும் பார்க்கணும்..” என்றான் வீர். 

  “அதைத் தான் யோசிச்சு பார்த்தேன். பசங்க ஏதோ தெரியாம விளையாட்டுத்தனமா செஞ்சிருப்பாங்க இதை கூப்பிட்டு விசாரிக்கும் போது தான் விஷயம் பெருசாகும். அவங்க மனசுக்குள்ளேயும் தப்பா பதியும். அதனால இத்தோட நிறுத்திக்கலாம்.. “என்றார் தலைமை ஆசிரியை. 

   “தெரியும் மேம், நீங்க இந்த பதிலை தான் சொல்லுவீங்கன்னு… நீங்க விசாரிக்க வேண்டிய ஆள் பெரிய இடத்தை சேர்ந்த மாணவன்னு தெரிந்ததும் உடனே பின்வாங்குறீங்க உண்மையை சொல்லணும்னா லெட்டரை எழுதினது கிஷோர் கிடையாது. 

   எங்க ரம்யா பெயரை சொல்லிட்டா தன்னுடைய படிப்பு கெட்டுப் போயிடுமேனு இந்நேரம் அந்த பையன் உயிரை கையில் பிடிச்சு எங்கேயோ ஒரு ஓரமா நின்னுட்டு இருப்பான். நீங்க நியாயமான ஆளா இருந்திருந்தால் இந்நேரம் கிஷோரை அழைச்சு விசாரிச்சு இருக்கணும்…”

  வீர்-ன் வார்த்தைகளை வெளியே நின்றிருந்த சைந்தவியும் கவனித்தாள்.

   “இங்க பாருங்க சார் பெரிய இடத்து பசங்க எப்பவும் தப்பு செய்ய மாட்டாங்க.. அந்த நம்பிக்கையில் தான் அழைச்சு விசாரிக்க வேண்டாம்னு சொன்னேன். மத்தபடி ரம்யா நல்லா படிக்கிற பொண்ணு இதுக்கு மேல அவள் பெயரில் ஏதாவது கம்பளைண்ட் வந்துச்சுன்னா நான் ஆக்சன் எடுப்பேன் பார்த்துக்கோங்க..” 

  இவர்களை எல்லாம் திருத்த முடியாது என்ற சலிப்பு வந்தது வீர்-க்கு..

   “நீங்களும் என்னைப் பற்றி தெரிஞ்சிக்கனும், செய்யாத தப்புக்கு ரம்யாவுக்கு தண்டனை கொடுத்தா சும்மா இருக்க மாட்டேன்..”

  வீர் ரம்யாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். அப்போது கையில் நோட்டு புத்தகங்களுடன் நின்றிருந்த சைந்தவியை கண்டான். 

  அவளின் முகத்தை முதல் முறையாக நேரில் காண்கிறான்.  பார்ப்பதற்கு  அவனின் தாயின் முகம் போலவே இருந்தது. ஆனால் அவனுக்குள் எங்கோ பார்த்த நினைவு இருந்ததே தவிர அது தன் தாயின் முக ஜாடை என உணரவில்லை. 

  சைந்தவி வீர்-ஐ ஒரு புத்திசாலியாக பார்த்தாள்.

” என்னமா அப்படி பாக்குற..? ”  என வீர் கேட்க 

   “நீங்க புத்திசாலி தான் , நாங்கலாம் எங்க தலைமை ஆசிரியை முன்னாடி பதில் பேசவே பயப்படுவோம்.  நீங்க என்னடான்னா அவங்க வாயையே அடைச்சிட்டு வரீங்க சரியான ஆளுதான்..”

  

  “மாமா இவள் பெயர் சைந்தவி என்னுடைய ஜூனியர், எட்டாம் வகுப்பு படிக்கிறாள்..”

  ரம்யா சைந்தவியை அறிமுகம் செய்து வைத்தாள்.

  “ஹாய் சைந்தவி..”

  “ஹலோ மிஸ்டர் விஜயன்..”

“ பரவாயில்லையே உனக்கு என் பெயர் கூட தெரிஞ்சிருக்கு..”

“ ஏன் தெரியாது நீங்க தான் இந்த ஸ்கூல் உடைய காம்பவுண்ட் ரோமியோ..”

  சைந்தவி உரைத்தது கேட்டு வித்தியாசமாக பார்த்தான் வீர்.

  “அது என்ன காம்பவுண்ட் ரோமியோ..”

   “ரம்யா அக்காவை கரெக்டா காம்பௌண்ட் வாசலில் இறக்கி விட்டு கிளம்பிடுவீங்க, உங்களைப் பார்க்க எல்லா பொண்ணுங்களும் அங்கேயே நிப்பாங்க..” 

   சைந்தவியின் பேச்சைக் கேட்க இனிமையாக இருந்தது. அவளின் முக ஜாடை மீண்டும் பார்க்க வேண்டும் என உள்ளுக்குள் ஏக்கத்தை உண்டு செய்தது. அண்ணனுக்கும் தங்கைக்கும் அவரவர்களின் உண்மை அடையாளம் தெரியாமலே முதல் அறிமுகம் நடந்தது. 

                                   😉

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page