எண் திசைதனில் எத்திசை கண்டாலும் ஒரே வண்ணமே ஒழுகிடும் இரவு நேரமது..
அழகு தேவதைப் பெண்ணான நிலவு மகள், தனது நட்சத்திர தோழிகளுடன் வானத்து வீதிதனில் இன்பமயமாய் உலா போய்க் கொண்டிருந்தாள்….
தொடர்ந்து இரண்டு நாட்கள் மழை கொட்டித்தீர்த்த காரணத்தினால், மும்பை மாநகரின் வீதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கிய படி காணப்பட்டது…
இதோ இப்பொழுதும், விடாது பொழியும் மழையின் துவக்கச் சாரல் அடிக்க ஆரம்பித்துவிட்டது…
குளிருக்கு இதமாக தன்னுடைய கனத்த போர்வையை இழுத்து மூடியபடி தூங்க ஆரம்பித்தாள் அங்கிதா…
அங்கிதாவின் அழகைப் பற்றிச் சுருங்கக் கூற வேண்டுமென்றால், அந்த நிலவு மகளுக்கும் பொறாமை வரக்கூடும். அப்படிப்பட்ட தேக வனப்போடு பூமி மீதினில் பாதம் பதித்திட்ட தென்றல் தாரகை அவள்..
ஐந்தரையடி உயரத்தில் தூய பாலின் நிறத்தோடு, உயிருடன் உலவக்கூடிய கோவில் சிலையைக் காணும் அத்தனை பேரும் அவள் மேல் கண் வைக்காது நகர்ந்திட முடியாது..
இவளின் அழகுக்காகவே, அவளின் உறவினர்கள் அனைவரும் தங்களின் மருமகளாக அங்கிதா வர வேண்டும் என விரும்பி போட்டி போட்டனர்..
ஆனால் அங்கிதாவிற்கு எல்லா பெண்களையும் போல திருமணம் செய்து, குடும்பம் குழந்தை என்று வாழ்வை நகர்த்துவதில் துளி அளவு கூட விருப்பம் கிடையாது. அவளுக்கென்று ஒரு வாழ்க்கை லட்சியம் இருக்கின்றது..
அனைவருக்கும் மருத்துவம்…
விரும்பி டாக்டர் படிப்பினைப் படித்தவள், தனக்குச் சொந்தமாக சிறிய மருத்துவமனை ஒன்றினை நிறுவி, தற்போது அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டும் இருக்கிறாள்.
அனைத்து மக்களுக்கும் சரியான மருத்துவமும், குறைவான விலையில் மருந்துகளும் கிடைக்க வேண்டும் என்பதே அந்தப் பேதையின் பெரும் கனவு…
கண்ட கனவினை கடந்த ஒரு வருடமாக தன் துணிச்சலான சேவையால் நிறைவேற்றிக் காட்டிய அங்கிதாவை, அவளின் பெற்றோரும் இப்பொழுதுதான் புரிந்து கொண்டனர்.
ஆதலால் கல்யாணம் என்றொரு கால்கட்டினை காலம் தாழ்த்தி கவனித்துக் கொள்ளலாம் எனும் முடிவுக்கு வந்துவிட்டனர்.
அப்பாவும் அம்மாவும் ஒரு பெண்ணுக்கு உறுதுணையாக அமைந்து விட்டால், உலகைப் பற்றிய கவலை அவளுக்கெதற்கு?
விருப்பப்படி தன் சேவையைத் தொடர்ந்தாள் அங்கிதா.
கனிவான குடும்பம், நிறைவான வேலை என அனைத்தும் அவள் ஆசைப் படி நடந்து கொண்டிருக்க, அத்தனையையும் புரட்டிப்போடும் ஒரு நாள் வந்தது..
நிம்மதியாகத் தூங்கிடும் அல்லி மலர் மேனியாளின், தூக்கத்தைக் கெடுப்பதற்காகவே அவளுடைய போன் வெறி கொண்டு அலறியது.
கண்களைத் திறக்கவும் திராணியின்றி தூக்கக் கலக்கத்திலேயே, போனை எடுத்து யார் என்று பார்த்தாள்..
போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கால் வந்திருந்தது…
காவல் நிலையத்தின் எண் தொடு திரையில் தெரிந்ததும், கொஞ்சம் சுதாரித்தவள் செல் போனை அட்டன் செய்து தன் காதில் வைத்தாள்…
“ஹலோ…”
ஆழ்ந்த தூக்கத்தின் பலனாய், அவளது குரலே அவளின் செவிகளுக்கு ஆழ் கிணற்றிலிருந்து ஒலிப்பது போல மெலிதாய் கேட்டது..
மறுமுனையில் அவள் குரலுக்கெனவே காத்திருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத்வாஜ், “ஹலோ அங்கிதா மேடம்… இப்போ நீங்க எங்க இருக்கீங்க?” என்று கேட்டான் சற்று பதட்டத்துடன்.
ஒரு பெரிய கொட்டாவியை வெளியிட்ட அங்கிதா, “என்ன சார்? என்ன ஆச்சு? ஏன் நட்ட நடு ராத்திரியில போன் பண்ணி இப்படி ஒரு கேள்விய கேக்குறீங்க?” என்றாள்.
“கேட்ட கேள்விக்கு சீக்கிரமா பதில் சொல்லுங்க மேடம்..” என்று பரபரத்தான் பரத்வாஜ்.
தூக்கம் கலைந்த கோபத்தில், “நடு ராத்திரி சார், என் ஹாஸ்பிடலோட சேர்ந்து இருக்குற ப்ரைவேட் ரூம்ல இருக்கேன்” என்று கூறினாள்…
“நான் சீக்கிரமா ரெண்டு கான்ஸ்டபிள அங்க அனுப்பி வைக்கிறேன். நீங்க உடனே அவங்களோட கிளம்பி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துடுங்க…” என்று தெறித்து வந்து விழுந்தது அவன் வார்த்தைகள்.
அங்கிதாவிற்கு தூக்கம் முற்றிலுமாய் தொலைந்து போக, பயத்தால் உருவான நடுக்கத்தோடு எதிர்க் கேள்வி கேட்காமல் அமைதியாக இருந்தாள்..
அவளின் பயத்தை வார்த்தை இல்லாமலேயே புரிந்து கொண்ட இன்ஸ்பெக்டர் பரத்வாஜ் தனது வார்த்தைகளைத் தொடர்ந்தான்..
“நீங்க பிடிச்சுக் கொடுத்த ஆள், ஒரு மணி நேரத்துக்கு முன்னால ஜெயில்ல இருந்து தப்பிச்சு ஓடிட்டான் மேடம். உங்கள உடனே பாதுகாப்பான இடத்துக்கு மாத்தனும்னு கமிஷனர் ஆர்டர் போட்டிருக்காரு…
நீங்க ரெண்டு நாளைக்கு மட்டும் நாங்க சொல்ற இடத்தில் தங்கினா போதும். அதுக்குப் பிறகு உங்கள உங்களோட அம்மா அப்பா வீட்டுக்கே கொண்டுபோய் விட்டுடுவோம்.
கொஞ்சநாள் வரைக்கும் உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் முறையான பாதுகாப்பு தரணும்னு கமிஷனர் சொன்னார். நீங்க முடிஞ்ச அளவுக்கு வேகமா அங்கிருந்து கிளம்ப தயாராகுங்க..” என்றான்.
அங்கிதாவிற்கு அவன் சொன்னதைக் கேட்டு, அந்த நள்ளிரவிலும் பயத்தில் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது..
“மேடம்.. லைன்ல இருக்கீங்களா?” என்று அவளின் ஒரு நொடி தாமதத்திற்கும் பதறினான் இன்ஸ்பெக்டர்.
“ஹான் இருக்கேன் சார்.. நான் இப்பவே என்னோட திங்க்ஸ பேக் பண்ண ஆரம்பிக்கிறேன். நீங்க கான்ஸ்டபிள் நம்பர எனக்கு வாட்ஸ்அப் பண்ணி விடுங்க…”
“ஓகே மேடம்..” என்று கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்தார் பரத்வாஜ்.
அங்கிதா வேக வேகமாக தன்னுடைய ஆடைகளையும் அத்தியாவசிய பொருட்களையும் மூட்டை கட்ட ஆரம்பித்தாள்..
அப்பொழுதுதான் அங்கிதாவிற்குத் தன் அறையின் மூலையில், நிழல் போல ஏதோ ஒரு உருவம் இருப்பது தெரிந்தது…
இருளின் தாக்கத்தால் தெளிவாகத் தெரியாத அவ்வுருவத்தை, அங்கிதா பயந்துகொண்டே திரும்பிப் பார்த்தாள்…
‘இப்பொழுதாவது நான் இருக்கும் இடம் தெரிந்ததே…’ என்றெண்ணினான் அவன்..
அவன் இருப்பு உறுதியான அடுத்த கணம், அங்கிதாவின் சப்த நாடிகளும் அடங்கிப் போனது.
“என்ன டாக்டர் மேடம்? எங்கேயாவது கிளம்புறீங்களா? ரொம்ப வேகமாக ரெடியாகுறீங்க?..” என்று அவன் வஞ்சப் புகழ் பாட, அங்கிதாவிற்குக் கையும் காலும் தன்னிச்சையாக நடுக்கம் கொடுக்க ஆரம்பித்தது…
அவன் இவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கும் முன்பே, அங்கிதா துரிதமாய் தன் செல்போனை எடுத்து பரத்வாஜ் நம்பருக்கு அழைப்பு விடுத்தாள்.
அந்தோ பரிதாபம், அழைப்பு இங்கிருந்து போகும் முன்பே, அவளுடைய செல்போன் தரையில் விழுந்து சுக்குநூறாய் சிதறி உயிரை மாய்த்துக் கொண்டது.
அங்கிதாவுக்கு இது அவனால் உடைக்கப்பட்ட, இரண்டாவது செல்போன்..
சிறிதும் வருத்தமின்றி ஜோ அழகாய் அவளைப் பார்த்து புன்னகை பூக்க, “ஐயோ! அம்மா! யாராவது இங்கே வாங்களேன்.. போலீஸ்! போலீஸ்! சீக்கிரம் என்னை காப்பாத்துங்க” என்று பயத்தில் பைத்தியக்காரி போல் கத்தத் தொடங்கினாள் அங்கிதா..
அவளின் கதறலைக் கேட்டு ரசித்தவன், மிகவும் சுலபமாக தன் ஒற்றைக் கையால் அங்கிதாவின் வாயை அடைத்துவிட்டான்..
மற்றொரு கையால் அவளின் இரு கரங்களையும் பின்னால் வளைத்துப் பிடித்து, அசைய முடியாதபடி அவற்றைத் தன் பொறுப்பில் வைத்துக் கொண்டான்..
ஒற்றை நொடியில் தன் உடலின் ஒட்டுமொத்த செயலையும் நிறுத்திவிட்ட அவனை, விழி விரியப் பார்த்து நின்றாள் அங்கிதா. அடுத்து என்ன செய்வதென்றே தெரியாது ஊமையாய் அழுதது பேதையின் விழிகள் இரண்டும்.
“நான் எவ்ளோ டீசண்ட்டா பேசுறேன், நீ ஏன் கத்தி கூப்பாடு போடுற? எங்கிட்ட இருந்து உன்ன காப்பாத்த அந்தக் கடவுளால கூட முடியாது. தப்பிக்க ட்ரை பண்றத விட்டுட்டு பேசாம எங்கூட வர்ற வழியப் பாருங்க டாக்டர் மேடம்…” என்றவனது கை அவளது வாயிலிருந்து அகன்று, அவளின் கைகளைக் கட்டும் வேலையைச் செய்தது.
வாய்க்கட்டு நீங்கியதும், “உங்கூட வரணுமா? எதுக்கு?” என்று பயந்து பம்மியபடியே கேட்டாள் அங்கிதா.
“நான் பாட்டுக்கு நான் உண்டு, என்னோட வேலை உண்டுனு தானே இருந்தேன்?!… நீயும் அப்படியே இருந்திருக்கலாம்ல?…
எதுக்காக தேவையில்லாம என்னை போலீஸ்ல மாட்டி விட்ட? பாரு… இப்ப எனக்கு உன்னை பழி வாங்கணும் போல தோணுது… வா வா, காலா காலத்துல நாம நம்மளோட இடத்துக்குப் போகலாம்” என்றான் அவன்.
ஆரம்பத்தில் அவன் தன்னைக் கொல்ல வந்திருப்பான் என்று நினைத்தவள், அவன் தன்னைக் கடத்திச் செல்ல முயல்கிறான் என்று தெரிந்ததும் தப்பிக்கும் முயற்சியாய் தண்ணீர் துறந்த மீன் போலத் துள்ளினாள்.
அதற்கெல்லாம் அஞ்சுபவனா அவன்? ஏற்கனவே தயாராகக் கொண்டு வந்திருந்த கயிற்றைக் கொண்டு அவளது கால்களைக் கட்டி, வாயையும் துணியால் அடைத்து விட்டான்.
அங்கிதா அவன் முன்னால் இப்பொழுது ஒரு சின்னஞ்சிறு கூட்டுப் புழு போல அசைவற்றுக் கிடந்தாள். கொடூர புன்னகையோடு அவளைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்ட அந்த அரக்கன், ஆசுவாசமாய் அவ்விடம் விட்டுப் புறப்பட்டான்..
அங்கிதாவின் அறைக்குத் தாமதமாக வந்து சேர்ந்தனர் இன்ஸ்பெக்டர் பரத்வாஜ் அனுப்பிய கான்ஸ்டபிள்கள் இருவரும்.
அறை முழுவதும் அலசி ஆராய்ந்து பார்த்ததில் நள்ளிரவில் திறந்து கிடந்த கதவு, தரையில் உடைந்து கிடந்த செல்போன், கலைந்து விழுந்திருந்த பொருட்கள் என அனைத்தும் அவன் இங்கே வந்து சென்ற தகவலைத் தந்தது..
இன்ஸ்பெக்டருக்கு போன் செய்த கான்ஸ்டபிள், “சார் நாங்க இங்க வர்றதுக்கு முன்னாலேயே ஜோ அந்தப் பொண்ண கடத்திட்டு போயிட்டான்” என்றனர்.
ஏற்கனவே பதற்றத்தின் உச்சத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் இப்போது பயங்கர வருத்தத்திற்கு ஆளானார்…
கான்ஸ்டபிள் இருவரும், “இப்போ என்ன பண்றது சார்?” என்று பாவமாகக் கேட்டனர்.
இன்ஸ்பெக்டர் வருத்தம் மேவிய குரலில், “இனிமே நாம செய்யிறதுக்கு எதுவும் இல்ல.. அந்தப் பொண்ண கடவுள் தான் காப்பாத்தனும். நீங்க கிளம்பி வாங்க, நான் இப்பவே கமிஷனருக்கு தகவலை சொல்லுறேன். அவனோட பேச்சு வார்த்தை நடத்த ஏதாவது வாய்ப்பு கிடைக்குதானு பார்ப்போம்..” என்றான்.
ஒரு கைதி.. ஜெயிலில் இருந்து தப்பித்த கையுடன், தன்னைக் காட்டிக்கொடுத்த பெண்ணையும் கடத்திச் சென்றிருக்கிறான்.
ஆனாலும் காவல்துறையில் இருக்கும் கனவான்கள், ‘அவனுக்கு எதிராக எந்த ஒரு செயலும் செய்ய மாட்டோம்.. முடிந்தால் பேச்சு வார்த்தை நடக்கலாம்’ என்ற ரீதியில் பயத்தில் பின் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்..
அப்படியென்றால் அவன் யார்?…
ஜோ.. முழு பெயர் ஜோசித்.. அவன் பிறந்து வளர்ந்ததெல்லாம், கூகுள் மேப்பில் கிடைக்காத மும்பை மாநகரத்தின் சேரிப்பகுதியில். ஆனால் இன்று அவன் இருக்கும் இடம், இந்தியாவை அச்சுறுத்தக் கூடிய நிழலுக தாதாக்கள் வரிசையில் முதலாவதாய்.
வெறும் இருபத்தெட்டு வயதிலான ஜோ, வயதில் பழுத்த நபர்களே எட்டாத அந்தப் பதவியினை அடையக் காரணம் அவனின் அசாத்தியத் துணிச்சலும், எதையும் ஆராய்ந்து செய்யும் அறிவும்.
மற்ற தாதாக்களைப் போல அவன் தனக்கு அறிவுறை வழங்க எந்த ஒரு மந்திரி சபையும் அமைத்துக் கொள்ளவில்லை. இட்ட வேலையைச் செய்யும் பணியாளர்களை மட்டுமே உடன் வைத்திருந்தான்.
அப்படி இருந்தும் தனக்குத் தேவையான முக்கிய வேலைகளை, பிறரை நம்பாமல் அவனே முன் நின்று செய்வான். பிறந்ததிலிருந்து அவன் கூடவே நிழல் போல சுற்றிக் கொண்டிருக்கும், உயிர் நண்பனான மோகனைக் கூட ஜோ பல நேரங்களில் நம்புவதில்லை.
அதனாலேயே அவன் எதிரிகள் அவனுக்கு விரித்த நம்பிக்கை துரோகம் எனும் வலையில் ஜோ இதுவரை சிக்காது தப்பிக் கொண்டிருக்கிறான்.
தங்கக் கடத்தலில்தான் அவன் வாழ்க்கை ஓட்டம் ஆரம்பமானது. ஆயுதங்கள் கடத்துவோரும் போதை மருந்தினைக் கடத்துவோரும் வாயைப் பிளக்கும் படியான அளவு செல்வம் கொட்டியது தங்கக் கடத்தலில்.
அவனிடம் தொழில் சுத்தமும், சொன்ன நேரத்தில் சொன்ன இடத்தில் பொருளைக் கொண்டு வந்து தரும் கெட்டிக்காரத்தனமும் இருந்ததால் இந்தியாவின் பெரும் பணக்கார முதலைகளும், அரசியல்வாதிகளும் தங்களின் தேவைக்கு ஜோவைத் தேடி வந்தனர்.
நாளடைவில் ஆளுங்கட்சியின் முக்கிய மந்திரிக்கு அவன் இஷ்டமானவனாய் மாறினான். வெறும் தங்க கடத்தல் மட்டுமின்றி, அரசியல்வாதிகளுக்குத் தேவையான அத்தனை அடிமட்ட வேலைகளையும் செய்து, அவர்களிடம் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொண்டான்.
அன்று தன் ஆட்டத்தை ஆரம்பித்த ஜோ இன்று ஒற்றை ஆளாய் இந்தியாவின் மூலை முடுக்குவரை, தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறான்.
அவனைப் பகைத்துக் கொண்டால் நமது தொழில் பலத்த அடிவாங்கும் என்றெண்ணி, மற்ற நிழலுலக தாதாக்கள் அவன் வழியில் குறுக்கிடுவதைக் குறைத்துக் கொண்டனர்.
அப்படிப்பட்டவனை போலீஸ் நெருங்குவது என்பதே மிகப்பெரிய அதிசயம்…. பிறகெங்கிருந்து அவனைத் தேடிப்பிடித்து கைது செய்வது?
‘காவல்துறை கையாலாகாதத் துறையாகியது..’ என்று பத்திரிக்கைகள் நாளை தரப்போகும் அவப்பெயரைத் தாங்கிடத் தயாராகினர்.
