அசுரன்-10

பறவைகளின் கீச்சொலியாலும், பனிப் போர்வை கொண்ட புல் வெளியாலும் அந்த அதிகாலைப் பொழுது அழகாய் புலர்ந்து கொண்டிருந்தது.

 

அதன் அழகினை ரசிக்க விரும்பாத ஜோ, அங்கிதாவைத் தோளில் தூக்கியபடியே, ஒளிந்தும் மறைந்தும் நகர்ந்து சென்று கொண்டிருந்தான். ஒரு மரத்தடியைக் கண்டதும், அவன் கண்கள் சந்தோஷத்தில் மின்ன, பரவசத்தோடு அதனருகில் சென்று ஒளிந்தான்.

 

காவலர்கள் கூட்டம் மும்மரமாய் ஏதோ அளவளாவிட, அந்த அவகாசத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனைந்தான் ஜோ.

 

அவளை மரத்தடியில் சாய்ந்த வாக்கில் அமர்த்தியவன் திடீரென்று வேகமாய் மரத்தடியிலிருந்த மண்ணைத் தோண்ட ஆரம்பித்தான்.

 

‘அங்க போலீஸ் எங்கள சல்லடை போட்டு தேடுறாங்க, இங்க இவன் என்ன மண்ணைத் தோண்டி விளையாடுறான்?‌’ என்று அங்கிதா பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்…

 

இரண்டு இஞ்ச் ஆழம் போனதும், ஜோ உள்ளே இருந்த ஒரு சிறிய மரக் கதவைத் திறந்தான்‌. அந்த மரக்கதவு ஒரு ஆள் உள்ளே நுழையும் அளவுக்கு மிகவும் சிறியதாக இருந்தது.

 

முதலில் அங்கிதாவைத் தூக்கி உள்ளே போட்டுவிட்டு, பின்பு தானும் உள்ளே நுழைந்தான். மரக்கதவை மூடுவதற்கு முன்பாக தோண்டிய மண்ணை எல்லாம் திரும்பவும் மூடி வைத்துவிட்டு உள்ளே சென்றான்..

 

கதவினை நன்றாக மூடிவிட்டு உள்ளே வந்து லைட் சுவிட்ச்சைப் போட்டான். பார்த்தால் அங்கு ஒரு சிறிய சொகுசு அறை அவர்களுக்காகக் காத்திருந்தது… 

 

அறையின் மூலையில் உட்காருவதற்கு ஒரு நாற்காலி, நட்ட நடு வீட்டில் ஒரு படுக்கை, சமைப்பதற்கு சில பாத்திரங்கள், பல மாதங்களுக்குத் தாக்கு பிடிக்கும் பிஸ்கெட் போன்ற உடனடி உணவுப் பதார்த்தங்கள் வரை அத்தியாவசியமான அனைத்தும் இருந்தன..

 

இதுவும் போதாது என்பதற்கு ஏற்ப சின்ன சைஸ் ப்ரிட்ஜ், இவை அத்தனைக்கும் கரண்ட் கொடுப்பதற்கு சின்ன சைஸ் ஜெனரேட்டர், இது எல்லாத்துக்கும் அப்பாற்ப்பட்டதாக ஒரு மினி சைஸ் பாத்ரூம் வேறு அங்கே இருந்தது… 

 

கிட்டத்தட்ட ஒரு ஆள் வசதியாய் வாழ்வதற்குத் தேவையான அத்தனை வசதிகளோடும் அந்த வீடு அமைக்கப்பட்டிருந்தது.

 

அதனைப் பார்த்து வாயடைத்துப் போன அங்கிதா, ‘அடப்பாவிங்களா!.. என்னவெல்லாம் செஞ்சு வச்சிருக்கீங்க?… எங்கெல்லாம் வீடு கட்டி வச்சிருக்கீங்க…?

 

இப்படி மண்ணைத் தோண்டி, அண்டர் கிரவுண்டுல வீடு கட்டினா, போலீசால எப்படிடா உங்களை பிடிக்க முடியும்?…

 

ச்சே… சே… நான் ஒரு லூசு. இவங்களுக்குத்தான் போலீஸே சலாம் போட்டு அனுப்பி வச்சதே. அவங்க எங்க இவனுங்கள காட்டிக் கொடுக்க போறாங்க? பார்த்தாலும் பார்க்காத மாதிரியே விலகிப் போயிடுவாங்க.

 

நியாயம் தர்மம்னு நான் பொலம்புறதெல்லாம் வேஸ்ட்…

 

நான் இப்போதைக்கு இவன்கிட்ட இருந்து தப்பிக்க முயற்சி செய்றத விட, ஒத்துழைக்கிறது போல இருந்துக்கணும். அதுதான் புத்திசாலித்தனம்..’ என்று நினைத்துக் கொண்டே ஒரு ஓரத்தில் சென்று அமர்ந்தாள்.

 

ஜோ அவளுடைய வாயை மட்டும் அவிழ்த்து விட்டான். 

 

“கை..” என்று கேட்டதற்கு அவனிடமிருந்து ஒரு முறைக்கும் பார்வை மட்டுமே பதிலாய் வந்தது.

 

அங்கிதா அதன்பிறகு எந்த வார்த்தையும் பேசாமல் அமைதியாய் தன் இடத்திலேயே நல்ல பிள்ளையாய் அமர்ந்து கொண்டாள்.

 

ஜோ அடுப்படியில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியை எடுத்தான்,  அதனுள் அவனுக்குத் தேவையான ஆடைகள் சிலது இருந்தது. அதில் ஒன்றை எடுத்தவன், அங்கிதாவின் முன்னாலேயே கூசாமல் ஆடை மாற்றத் தொடங்கினான்.

 

“சீ.. சீ.. ஏன் இப்படி பண்ற? அதான் அங்க பாத்ரூம் இருக்குல? அங்க போக வேண்டியது தானே?” என்று உணர்ச்சி வேகத்தில் அவனைத் திட்டினாள்.

 

“எதுக்கு? நான் அந்தப் பக்கம் போனதும் நீ இந்தப் பக்கம் தப்பிச்சு ஓட ஏற்பாடு பண்ணவா? உன் முன்னாலதான் டிரஸ் மாத்துவேன். இஷ்டம் இருந்தா கண்ண மூடிக்க, இல்லனா தாராளமா கண்ண தொறந்துக்கோ. நான் ஒண்ணும் உன்னைப் போல மூடி மறைக்கமாட்டேன்…” என்றான் திமிரோடு.

 

‘போட்டானா அடுத்த அணுகுண்டை…’ என்று அவள் மனம் அதிர்ந்து அடங்கிட, உடலோ எந்தவித உணர்ச்சியும் இல்லாமல், ‘வாழ்க்கை நாடகமா!.. என் பொறப்பே பொய் கணக்கா….!’ என்று பாட்டுப் பாடியபடி சுவற்றில் சாய்ந்து கிடந்தது. 

 

அவன் அவள் நிலையைக் கண்டு கொஞ்சமும் இரக்கம் கொள்ளாமல், தன்னுடைய வேலையிலேயே கண்ணாய் இருந்தான். 

 

கண்ணை மூடிக் கொண்ட பேதையோ, “முடிஞ்சதா? முடிஞ்சதா?..” என்று அந்த முரடனோடு பேச்சு வார்த்தை நடத்தினாள்.

 

“இன்னும் இல்ல..”

 

“இப்பவாவது முடிஞ்சதா?..”

 

“என் சட்டைய காணும் தேடுறேன்…”

 

“ஷப்பா.. இப்பவாச்சும் முடிஞ்சதா?”

 

ஜோ சிறிதும் லஜ்ஜை இன்றி, “வேணும்னா கண்ண தொறந்து பாத்துக்க, சும்ம நைய்யி நைய்யினு கேள்வி கேட்டு என் உசுர வாங்காத…” என்றிட,

 

“அட போடா, எனக்கு தூக்கமே வந்திடுச்சு” என்ற அங்கிதா சாய்ந்த வாக்கிலேயே உறங்க ஆயத்தமானாள்‌. 

 

ஜோ தன் அழுக்குத் துணியைப் பிழிந்து, அறையின் ஓரத்தில் இருந்த கொடியில் காய வைத்து விட்டு, அங்கிதாவையும் ஆடைகளை மாற்றச் சொன்னான்.

 

“உன் முன்னால டிரஸ் மாத்துறதுக்கு பதிலா, எனக்கு ஒரு முழம் கயிறு குடு, சந்தோஷமா உத்தரத்தில தொங்கிடுவேன்..” என்று வீம்பு செய்தாள்.

 

அவள் வார்த்தைகளைக் கொஞ்சமும் செவிமடுக்காத ஜோ, அவளுடைய கை கட்டினை அவிழ்த்து விட்டு, “பாத்ரூம்லதான் உன்ன டிரஸ் மாத்த சொன்னேன், இந்தா இந்த டிரஸ்ஸ போட்டுட்டு வா. 

 

ஈரத்துணியோட இருக்காத, உனக்கு சேராது. உத்தரத்துல தொங்குறதப் பத்தி சாவகாசம உக்காந்து பேசுவோம்..” என்று கூறி அவள் கையில் ஒரு சட்டையையும் லுங்கியையும் கொடுத்தான் ஜோ.

 

‘அவன் அமைதியாய் சொல்லும்போதே நாமும் நல்ல பிள்ளையாய் கேட்டுக் கொள்ள வேண்டும்.. இல்லையெனில் இந்த வேதாளம் எப்பொழுது வேண்டுமானாலும் முருங்கை மரம் ஏறும்..’ என்றெண்ணியவள், வேகமாய் அவனிடம் இருந்து துணியை வாங்கிக் கொண்டு பாத்ரூம் பக்கம் சென்றாள்…

 

அவன் தந்திருந்த சட்டை ஆண்களுக்கானது, அது அவளுக்கு அளவில் மிகவும் பெரியதாய் இருந்தது.‌ அப்பாவின் சட்டை போட்ட பாப்பாவைப் போல அங்கிதாவின் உடலைவிட்டு தனியே தொள தொளவென்று தொங்கிக் கொண்டிருந்தது…

 

இருந்தாலும் தன்னுடைய உடம்பை முழுவதுமாக மூடி மறைத்தால் அதை விருப்பப்பட்டு அணிந்து கொண்டாள் அவள்.

 

ஆனால் அந்த லுங்கி…. அதுதான் அவளோடு சேரவே மாட்டேன் என்பது போல மல்லுக்கட்டியது. அங்கிதா இழுத்துப் பிடித்து தன் இஞ்சி இடுப்பில் சொருகி வைத்தாள்.

 

‘இருக்க மாட்டேனே நீ என்ன பண்ணுவ?..’ என்பது போல அது இட வலமாய் கழன்று நாட்டியமாடிக் கொண்டே இருந்தது. 

 

அவள் எத்தனை முறை இடுப்பில் இழுத்துச் சொருகினாலும் அந்த லுங்கிக்கு அவள் மேல் இரக்கம் தோன்றவே இல்லை.

 

எப்பொழுது வேண்டுமானாலும் கீழே விழுந்து உன் மானத்தை வாங்கி விடுவேன் என்பது போல் பல்லைக் காட்டிக் கொண்டிருந்தது…

 

‘ஈஸ்வரா, ஒரு மனுஷிக்கு எத்தன சோதனைய தருவ? இதுங்க கூட நான் இன்னும் எவ்வளோ நேரம் குடும்பம் நடத்தணுமோ!..’ என்று புலம்பிக் கொண்டே வெளியே வந்தாள்…

 

லுங்கியோடு தட்டுத்தடுமாறி நடந்தவளை ஜோ ஓரக்கண்ணால் கீழிருந்து மேலாக ஒரு பார்வை பார்த்தான்…

 

‘அய்யயயோ!… இவன் வேறு ஒரு மார்க்கமா குறு குறுனு பார்க்குறானே!… இதுவரைக்கும் எதுவும் செய்யாதவன் இப்பவும்  எதுவும் செய்ய மாட்டான்னு நம்புவோம்..’

 

என தனக்குத்தானே தைரியம் கூறிக்கொண்டு, முன்பு எங்கு அமர்ந்திருந்தாளோ அதே மூலையில் அதே பொசிஷனில் அமர்ந்து கொண்டாள்…

 

ஜோவுக்கு அவள் மினி சைஸ் சோளக் கொல்லை பொம்மையாய் தெரிய, சிரிப்பை அடக்குவதற்காக அவள் புறம் திரும்பாமல் இருந்து கொண்டான்.

 

அவன் எந்த வம்பும் தும்பும் செய்யாமல் நல்ல பிள்ளையாக இருக்க அங்கிதாவும் சற்றே ஆசுவாசம் கொண்டாள். ஜோ அடுப்பு மேடையிலிருந்த பொருட்களையெல்லாம் கணக்குப் பார்த்து விட்டுச் சமையல் செய்யத் தொடங்கினான்.

 

பத்தே நிமிடத்தில் சோறு, ரசம், பருப்பு என கைக்குக் கிடைத்த பொருட்களை வைத்து தடபுடலாகச் சமைத்து முடித்து விட்டான் ஜோ.

 

ஏற்கனவே நேற்று முழுவதும் இடம் மாறுகிறோம் என்ற பெயரில் அளவுக்கு அதிகமான அலைச்சல்.. இரவில் இருவரும் ஓடிப் பிடித்து விளையாடியதால் உறக்கமும் இல்லை‌.. 

 

உடலிலிருந்த கடைசி சொட்டு எனர்ஜி வரை காலியாகிவிட்ட காரணத்தினால் கொலைப் பசியில் இருந்தாள் அங்கிதா. அவன் சாப்பாடு போட்டுக் கொண்டு வரும் முன்பே கைகளை நீட்டிக் கேட்டுச் சாப்பிடத் தயாராகிவிட்டாள். 

 

“அவ்வளவு பசியா பேபி?..”

 

“பின்ன? உன்னையும் உன் கூட்டத்தையும் மேய்க்கிறேன்ல?..” என்றிட, ஜோ செல்லமாய் அவளை முறைத்தான்.

 

‘சோறா சொரணையா..’ மூடில் இருந்த அங்கிதா, அவன் முறைப்பைப் பொருட்படுத்தாமல், சுடச்சுட கையில் கிடைத்த உணவைச் சாப்பிடுவதிலேயே கவனமானாள்.

 

ஜோவும் அவளோடு சண்டை பிடிப்பதை விட்டு விட்டு சமத்தாகச் சாப்பிட்டு முடித்தான். சாப்பிட்டு முடித்த கையோடு ஜோ, நடு வீட்டிலிருந்த படுக்கையை ஓரத்தில் நகர்த்திப் போட்டான்…

 

தரையில் ஒரு சதுர வடிவிலான இரும்பு மூடி போன்ற ஒன்று இருந்தது. அதனைத் திறந்த ஜோ, அதற்கும் கீழே ஏணி வழியே ஒரு பாதை போக, உள்ளே சென்று மறைந்தான்.

 

தூரமாய் இருந்த அங்கிதாவிற்கு அதனுள் என்ன இருக்கின்றது என தெரிந்து கொள்ளும் ஆசை துளிர்விட்டது. அவன் அந்த ஓட்டைக்குள் இறங்கிப் போனதும், மெதுவாய் ஊர்ந்து வந்தவள் உள்ளே எட்டிப் பார்த்தாள்…

 

உள்ளே ஒரு சிறிய அறை இருப்பது போலத் தெரிந்தது. 

 

ஜோ உள்ளே ஏதோ ஒரு சுவிட்ச்சைத் தட்டியதும் லைட் வெளிச்சம் அதனுள் பரவிட, அங்கே ஆயுதங்கள் இருப்பதைக் கண்டு கொண்டாள் அங்கிதா. ஜோ அந்த அறையின் மூலையில் பாதுகாப்பாய் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேடியா டிரான்ஸ்மிட்டர் கருவியைக் கையில் எடுத்தான்.

 

அதற்கு பக்கத்திலிருந்த வயர்களை கருவியின் ஓட்டைகளில் மாட்டிவிட்டு, கையில் வைத்திருந்த மைக் மூலம், “ஹலோ ஹலோ..” என்று கத்த தொடங்கினான்…

 

அங்கிதா அப்படியே அவனை உள்ளே வைத்து அடைக்க யோசிக்க, அந்த மூடியில் ஏற்கனவே தாழ்ப்பாள் போடும் இடம் உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தாள். 

 

ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் அங்கிதா, “இப்பதான்டா புரியுது, உன்னை ஏன் இந்தக் கூட்டம் தலைவனாக்குச்சுனு. ச்ச்சே!… எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க?..” என்று ஓசையின்றி முணுமுணுத்துக் கொண்டாள்.

 

கீழே ஜோ மோகனுக்குத் தொடர்பு கொண்டு, இருவரும் தற்போது இருக்கும் இடத்தை பற்றிய தகவலைச் சொன்னான்.

 

நேற்று அவள் ஆற்றில் குதித்துவிட்டாள் என்பதையும், அவளைப் பிடிப்பதற்காக நான் அவள் பின்னாலேயே வந்தேன் என்பதையும் அவன் மோகனுக்குச் சொல்லவில்லை.

 

“இங்க போலீஸ் கெடுபிடி கொஞ்சம் அதிகமா இருக்கு மோகன். என்னால இப்ப வெளியில் வரமுடியாது, குகைக்குள்ள நீங்க எல்லாரும் பத்திரமாக இருக்கணும். நம்ம ஆளுங்கள பாத்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு.

 

இப்போதைக்கு இருக்கிற காய்கறிய வச்சு நான் வர்ற வரை சமைச்சு சாப்பிட்டுட்டு இருங்க. நான் திரும்பி வந்ததுக்கு அப்புறம் அடுத்த ஸ்டெப் போகலாம்.

 

அங்க வரைக்கும் போலீஸால வர முடியாது, அதனால நீங்க யாரும் அவங்கள நினைச்சு பயப்பட வேண்டாம்” என்று கள நிலவரங்களைப் பற்றி எடுத்துச் சொன்னான்…

 

மோகன், “சரி ஜோ, நீ எப்போ இங்க வருவ?”

 

“அது எனக்கு சரியா தெரியல. மழை நின்னதும் கிளம்பிடுவேன். நான் இங்கிருந்து கிளம்பும்போது உனக்கு தகவல் கொடுக்குறேன். அப்பப்ப நம்ம மந்திரிட்ட நலம் விசாரி, அங்கிதா பத்தி சொல்லாத. 

 

அவரு பேச்சு வாக்குல தப்பா வார்த்தை விட்டார்னா உடனே எனக்கு இன்ஃபார்ம் பண்ணு” என்று எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் கூலாக அவன் கூட்டாளியிடம் பழக்கம் பேசிக்கொண்டிருந்தான்…

 

ஜோவின் குரல் நின்றது தெரிந்ததும், அங்கிதா மீண்டும் தனது இடத்திற்கே சென்று பசு போல அமர்ந்து கொண்டாள்…

 

ஜோ பேசி முடித்து விட்டு மேலே ஏறி வந்தவுடன், “ஒரு டாக்டரா இருந்துகிட்டு வெட்கமில்லாம மத்தவங்க பேசுறத ஒட்டுக்கேக்குறியே..” என்று அவளிடம் வம்பிழுத்தான்.

 

ஸ்.. என்று அவசரப்பட்டு உணர்ச்சிவசப்பட்ட அங்கிதா, பிறகு சமயோஜிதமாய் யோசித்து நிதானம் கொண்ட குரலில், “அங்க என்ன சர்ப்ரைஸ் இருக்குனு தெரிஞ்சுக்க எட்டிப் பார்த்தேன், மத்தபடி நான் எதையும் ஒட்டு கேட்கல. வேணும்னா ப்ராமிஸ் பண்ணவா?..” என்றாள்.

 

ஜோ பதில் மொழி சொல்லாமல் பொய்க் கோபத்தோடு அவளை முறைத்துப் பார்த்தான். 

 

“இல்ல தெரியாமத்தான் கேக்குறேன், இதெல்லாம் எப்படி உன்னால செய்ய முடிஞ்சது? இப்ப நான் போய் போலீஸ்ல இப்படி மண்ணுக்குள்ள வீடு கட்டி வாழ்றாங்க. அது மூலமாத்தான் அவங்க இவ்வளவு வருஷமா உங்க கண்ணுக்கு தெரியாம ஒளிஞ்சு வாழ முடிஞ்சது… 

 

அவங்களோட கிரமாம் நிலையானது இல்ல. அப்பப்போ ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு போறாங்க. சேட்டிலைட், டிராக்கிங்னு எல்லா வசதியும் அவங்களுக்கு அத்துப்படி. நீங்க போய் கண்டுபிடிங்கனு சொன்னா எல்லாரும் என்ன பார்த்து சிரிப்பாங்க. அப்படி ஒரு ஐடியா இது..

 

நீ முதன் முதல்ல இந்த ஐடியாவ மத்தவங்ககிட்ட சொல்லும் போது எல்லாரும் உடனே சரினு சொல்லி ஏத்துக்கிட்டாங்களா? இல்ல உன்ன கேலி பண்ணி சிரிச்சாங்களா?” என்று ஆர்வமாய் அவனிடம் கேட்டாள் அங்கிதா.

 

அவன் பதில் சொல்லாதிருக்க, அங்கிதா அவனை நெருங்கி வந்து, “உன்னால எப்படி இதை செய்ய முடிஞ்சது? நீ படிச்சிருக்கிறயா? என்ன படிச்ச? ப்ளீஸ் சொல்லுடா ஜோ..” என்று உசுப்பேற்றினாள்.

 

ஜோ சாதாரணப் புன்னகையோடு, “படிச்சேன்… எனக்கு என்ன தேவையோ அதை நானே படிச்சேன், இன்டர்நெட்ல..” என்றதும் அங்கிதாவின் புருவங்கள் முடிச்சுட்டு கொண்டது.

 

“நான் எப்பவுமே மத்தவங்க பேசுறத கன்சிடர் பண்றது இல்ல பேபி. எனக்கு என்ன தோணுதோ அதை நான் செஞ்சிட்டு போய்கிட்டே இருப்பேன். என் வேலை முடிஞ்ச அப்புறம்தான் மத்தவங்களுக்கு தகவலே சொல்லுவேன். அதனால தான் என்னால எப்பவும் என் வேலைகளை சரியா செய்ய முடியுது” என்று கூறிவிட்டு பெட்டில் படுத்துக் கொண்டான்.

 

“ஓ.. நான் எனக்கு மட்டுந்தான் இந்த ரூல்ஸ் செயல்படுத்தப்பட்டு இருக்குனு நினைச்சேன், கழுத எல்லாத்துக்கும் இதே மெத்தடுதான் ஃபாலோ பண்ணுதா?” என்றிட,

 

ஜோ, “உன் மைண்ட் வாய்ஸ ஆஃப் பண்ணு, எனக்கு இங்க காது கிழியிது” என்று கிண்டலடித்தான்.

 

ஆனால் அங்கிதா அதையெல்லாம் இப்பொழுது கண்டு கொள்வதாய் இல்லை.. 

 

“எனக்கு ரொம்ப குழப்பமா இருக்குதே?.. இப்போ மண்சரிவு எல்லாம் வந்ததே, அதுமாதிரி ஏதாவது ஒன்னு நடந்து, உங்களோட வீடு எல்லாம் வெளிய தெரிஞ்சுட்டா நீங்க என்ன செய்வீங்க..? மாட்டிக்குவீங்கதானே?” என்று கேட்டாள்.

 

அதைக் கேட்ட ஜோ சிரித்துக் கொண்டே, “நான் என்ன அவ்வளவு முட்டாளா, ஆழம் பார்க்காம காலை விட? இந்த காட்டோட தன்மை தெரியாம கால் வைப்பேனா? இங்க எந்த இடத்துல மண் சரிவு வரும், எங்க வராது, எப்போ மழை வரும், எங்க மிருகம் இறங்கும்னு எல்லாமே எனக்குத் தெரியும்..

 

வீடு கட்டுறதுக்கு தகுந்த மாதிரியான மரங்கள தேர்ந்தெடுத்து, அதோட வேரை ஒட்டித்தான் நாங்க வீடு கட்டி இருக்கிறோம். ஆயிரம் வருஷத்துக்கும் மேல இந்த மண்ணோட சேர்ந்து நிக்கிற மரம், எங்களோட இந்த சின்ன வீட்டை தாக்கு பிடிக்காதா?

 

தொண தொணனு கேள்வி கேட்டுக்கிட்டே இருக்காம பேசாம படுத்து உறங்கு. எனக்கு ரொம்ப தூக்கமா வருது…

 

மறுபடியும் தப்பிக்கிறேன்ற பேர்ல கரடி முன்னால டான்ஸ் ஆடிட்டு இருக்காத!.. நான் கண்ணு முழிக்கிற வரைக்கும் கம்முனு இங்கேயே இருக்கனும்…” என்றவன் அவன் போக்கில் குப்புறப் படுத்துத் தூங்க ஆரம்பித்தான்…

 

அப்பொழுதுதான் அங்கிதாவிற்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.. 

 

‘தப்பிக்கனுங்கிற ஆசையில அவன நான் துப்பாக்கியால சுட்டேனே.. இவன் அப்படி எந்த ஒரு விஷயமும் நடக்கலன்ற மாதிரி உணர்ச்சியே இல்லாம இருக்குறான். நான் ஒழுங்கா சுட்டேனா இல்லையா?

 

சுட்டேன், ரத்தம் வந்தது… அதைப் பார்த்தேனே? அப்படினா குண்டடி வலிக்கலையா இவனுக்கு? இல்ல தோட்டாவ வெளிய எடுத்துட்டானா? 

 

அதெப்படி எந்த மெடிக்கல் எக்யூப்மென்ட்டும் இல்லாம இவனால புல்லட்ட வெளிய எடுக்க முடியும்?…’ என்று யோசித்துக் கொண்டிருந்தவள், மெதுவாக அவன் பக்கம் சென்று அவனது சட்டையின் கைப்பக்கமிருந்த துணியைத் தூக்கிப் பார்த்தாள்..

 

வேகமாய் திரும்பியவன், வெடுக்கென அங்கிதாவின் கையை பிடித்து இழுத்தான். இழுத்த இழுப்புக்கு அவன் மேல் பொத்தென்று விழுந்தாள் அங்கிதா.

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!