அசுரன்-12

நிலவினை தொலைத்துவிட்டு ஏங்கித் தவித்த வானம், தன் சோகத்தைப் பிறருக்கு உணர்த்த மேனியெங்கிலும் இருள் வண்ணம் பூசிக் கொண்ட நள்ளிரவுப் பொழுது அது.

 

என்றேனும் ஒரு நாள் என் தேவதைக்கு எனது காதலின் வீரியம் விளங்கும் எனும் நம்பிக்கையோடு நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருந்தான் ஜோ.

 

அங்கிதா அமர்ந்திருந்த இடத்திற்கு நேர் மேலே சுவற்றில் கீறல் இருக்க, அதன் வழியே மழைத் தண்ணீர் கசிய  ஆரம்பித்தது.

 

வெளியில் மழை அதிகமாகப் பெய்த  காரணத்தினால், தண்ணீர் சொட்டு சொட்டாக அங்கிதாவின் உச்சந்தலை மீது விழ, அவள் தூக்கம் கலைந்து போனது. 

 

நிமிடத்திற்கு நிமிடம் நீர்த்துளி விழும் வேகம் அதிகரிக்க, இதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியாது எனும் நிலைக்கு வந்தாள் அவள். 

 

தன்மானம் விடுத்து ஜோவை எழுப்பும் முடிவுக்கு வந்தவள், “ஜோ.. ஜோ.. இங்க பாரு.. எம்மேல மழைத் தண்ணி விழுது பாரு” என்றாள்.

 

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும், அவள் குரல் கேட்டதும் வேகமாய் எழுந்தான் ஜோ. 

 

“என்னாச்சு?..” என்றபடி அவளருகில் வந்து பார்த்தால், உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நனைந்திருந்தாள்…

 

காதலி ஈரம் சொட்டும் ஆடையோடு இருக்கையில், காதலனின் மனம் தடம் புரளாதிருக்குமா? ஜோ தடம் புரள விரும்பவில்லை..

 

அங்கிதாவின் மனமோ அச்சத்தில், ஆட்டுகுட்டியைக் காப்பாற்றுவதற்கு ஓநாயைக் கூப்பிட்டது போல் மனபிராந்திகளைத் தோற்றுவித்தது…

 

நடுங்கும் குரலில், “ஜோ, எனக்கு ரொம்ப குளுருது. இன்னும் அஞ்சு நிமிஷம் நான் இதே இடத்துல இருந்தா எனக்கு கண்டிப்பாக ஜன்னி வந்திடும். ப்ளீஸ் கைய கழட்டி விடு, நான் வேற டிரஸ் மாத்திக்கிறேன்…” என்றாள்.

 

ஜோ அவளைக் கட்டியிருந்த கயிறுகளை அவிழ்த்து விட்டு, அங்கிதாவிற்கு மாற்று சட்டையை எடுத்துக் கொடுத்தான்..

 

‘ஹப்பாடா, தப்பிச்சுட்டேன்..’ எனும் சந்தோஷத்தோடு விரைந்து உடை மாற்றச் சென்றாள் அவள்.

 

உலர்ந்த சட்டையையும்‌, புது லுங்கியையும் மாட்டிக்கொண்டு வெளியே வந்தவளை, ஜோ ஒரே கையால் அள்ளி அணைத்தான். 

 

“ஆத்தி…” என்று அவள் கத்தி கதற, அவன் நேராக அவளைப் படுக்கைக்குத் தூக்கிச் சென்றான். 

 

“ஜோ.. வேணாம் ப்ளீஸ்…” என்று அலறுவதைக் காதில் வாங்காமல், அவள் கைகளை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி விட்டான். 

 

அவள் கண்களை மூடியபடி அழுதிடத் தயாராக, அவனோ அன்னையின் முந்தானையில் சுருளும் பிள்ளை போல அவளருகில் அமைதியாய் படுத்துக்கொண்டான். 

 

நொடிகள் நகர, அவன் அதற்கு மேல் முன்னேறாது போனதைக் கண்டு, மெதுவாய் தன் இமையைப் பிரித்துப் பார்த்தாள்‌. ஜோ அவளின் இடையைக் கட்டி அணைத்தபடியே தூங்க ஆரம்பித்திருந்தான்..

 

இத்தனை நாட்கள் இருவரும் ஒரே அறைக்குள் ஒரே கட்டிலில் உறங்கி இருந்தாலும், அவன் இவ்வளவு தூரம் எந்த அதிகப்பிரசங்கித்தனமும் செய்தது கிடையாது.

 

மிஞ்சி மிஞ்சிப் போனால் திடீர் திடீரென அவள் இருக்கும் அறைக்கு வருவான், கட்டிப்பிடிப்பான்.. அதுவும் இல்லை என்றால் உப்பு பெறாத விஷயத்திற்குச் சண்டை பிடிப்பான். 

 

அப்படி இருந்தவன்‌ இன்று ஏதோ தொட்டு தாலி கட்டிய புருஷனைப் போல அணைத்துக் கொண்டு அருகில் படுத்திருக்கிறான்…

 

‘விடியிர வரைக்கும் இந்த சைக்கோ இப்படியே உறங்கனும், முழிக்கவே கூடாது. என்ன எப்படியாவது இங்கிருந்து காப்பாத்தி கரை சேர்த்து விடு கடவுளே…’ என்று வேண்டியபடியே கண்ணைத் திறந்து படுத்திருந்தாள் அங்கிதா.

 

ஆனால் ஜோ வழக்கம் போல எந்தக் கவலையும் இன்றி, தான் உண்டு தன் வேலை உண்டு என்று நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கினான்..

 

அங்கிதாவுக்கு அசதி இருந்தாலும், அவளால் சேர்ந்தார் போல் ஐந்து நிமிடம் கூட இமைகளை மூடி உறங்க முடியவில்லை. 

 

‘எப்போது இந்த வேதாளம் மலையேறுமோ?!..’ எனும் அச்சத்தோடு அன்று இரவு முழுவதும் தூங்க முடியாமல் பரிதவித்துப் போனாள்…

 

நேரம் நள்ளிரவைக் கடந்து கிட்டத்தட்ட மூன்று மணியை நெருங்கிய பின்பே, அவளுக்கு அசதியின் காரணமாய் சிறிது கண் அசந்திற்று.

 

அது அந்த ஆண்டவனுக்கும் அவள் அருகில் இருந்த அசுரனுக்கும் பொறுக்கவில்லை போலும். மணி ஐந்தாகி விட்டது என்று அலறிய அலாரச் சத்தம் அவள் காது ஜவ்வுகளைக் கிழித்துச் சென்றது…

 

கடுப்பாகியவள், “மடப்பய மவன். நாம இப்ப இருக்குற நிலைமைக்கு இந்த அலாரம் ஒண்ணுதான் கேடு.. அஞ்சு மணிக்கு அலாரம் வச்சு எந்த ப்ளைட்ட பிடிக்க போறான்?..” என்று தூக்கக் கலக்கத்தில் சற்று சத்தமாகவே புலம்பி விட்டாள்.

 

அதன் பிறகே அவளுக்கு தான் இருக்கும் நிலை புத்திக்கு உரைக்க, ஓரக்கண்ணால் ஜோவின் பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவன் மாமிச மலையை முழுங்கிய மலைப் பாம்பு போல அரைகுறைத் தூக்கத்தில் புரண்டு கொண்டிருந்தான்.

 

“ஷப்பாடா, எதுவும் கேக்கல போல. இல்ல இதுக்கும் வேற தனியா பழி வாங்கும் இந்த லூசு” என்றிட, ஜோ  தூக்கத்திலேயே அவளை அணைத்துப் பிடித்தான்.

 

உறக்கத்திலும் கட்டிப்பிடிக்கும் குணம் வந்துவிட்டது அவனிடம்.. 

 

வெட்டு படப்போகும் ஆடு போல, விலுக்கென உடலை உதறினாள் அவள்‌. அவன் விலகாதிருக்க, அதுவரையில் தன் மனதில் போட்டு வைத்திருந்த அத்தனை கோடுகளையும் துடைத்து எறிந்த அங்கிதா, கோபத்துடன் சண்டையிட ஆரம்பித்தாள்..

 

“ஏன்டா அறிவு கெட்டவனே? உனக்கு கொஞ்சமாவது விவஸ்தை இருக்கா? ஜெயில் கைதி மாதிரி ரெண்டு பேரும் இங்க அடைஞ்சு கிடக்குறோம், இங்க எதுக்குடா அஞ்சு மணிக்கு அலாரம் தேவைப்படுது? 

 

ராத்திரி முழுக்க தூக்கம் இல்லாம என் கண்ணெல்லாம் எரியுது, அதான் கோபத்தில கொஞ்சம் சத்தமா புலம்பிட்டேன். அதுக்குப் போய் என்ன இப்படி கட்டிப் புடிச்சு டார்ச்சர் பண்ணுறியேடா?..” என்றிட, அவனோ மெல்லச் சிரித்தபடி பாதி இமை திறந்து அவள் முகம் பார்த்தாள்.

 

“தயவு செஞ்சு சிரிக்காத, எனக்கு இப்ப தலையை பிச்சுகிட்டு தெருவுல ஓடுற அளவு மண்டை சூடாகிக் கிடக்கு. இதே மாதிரி இன்னும் நாலு நாள் போச்சுனா, நான் நிஜமாவே தலைய பிச்சுகிட்டு தெருவுல ஓடிட்டு இருப்பேன்” என்றாள்‌. 

 

அவள் சீரியஸாக தன் நிலையைப்பற்றி புலம்பிக் கொண்டிருக்க, ஜோ சத்தமாய் சிரிக்க ஆரம்பித்தான்..

 

அங்கிதா, “சிரிக்காத, எனக்கு நீ கெக்க புக்கனு சிரிக்கிறத பார்த்தா வெறுப்பா இருக்கு. நான் உன்னை கேவலமா திட்டிட்டு இருக்கிறேன்டா… நீயும் பதிலுக்கு திட்டு, இல்ல அட்லீஸ்ட் உன் ஸ்டைல்ல முறைச்சு பாரு. சிரிச்சு தொலைக்காத, கொல காண்டாகுது” என்றாள்.

 

தன்னால் முடிந்தவரை சிரிப்பை அடக்கிக் கொண்ட ஜோ, “இல்ல, நீ தலையைப் பிச்சுக்கிட்டு 

தெருவுல ஓடினா எப்படி இருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன், என்னால கன்ட்ரோல் பண்ண முடியல”

என்று சொல்லிவிட்டுத் திரும்பவும் சிரிக்க ஆரம்பித்தான்.

 

அங்கிதா கோபமாய், “ஒருத்தி உயிர் போற மாதிரி கத்தி சண்டை போடும் போது காமெடி பண்ணுறியே, சத்தியமா நீயெல்லாம் மனுஷனே கிடையாது தெரியுமா?…

 

ரெண்டு கால் மிருகம்.. இல்ல இல்ல மிருகமெல்லாம் பாவம், அது கூட உன்னை கம்பேர் பண்ணக்கூடாது.

 

நீ.. அரக்கன்.. இல்ல, இல்ல.. நீ ஒரு ஏலியன்.. இல்ல உன்னோட வச்சு பார்த்தா ஏலியனுமே பாவம்.. நீ.. நீ என்னமோ ஒண்ணு போ…” என்றிட அவன் தன் வாழ்வில் முதல்முறை கண்ணில் நீர் வரும் அளவுக்குச் சிரித்தான்.

 

“சிரிக்கிறத நிறுத்திட்டு தயவுசெஞ்சு எனக்கு ஒரே ஒரு பெட்ஷீட் மட்டும் போர்த்தி விடு. நான் இன்னும் கொஞ்ச நேரம் கண் அசர தூங்கிக்கிறேன் ப்ளீஸ்…” என்றவள் கஷ்டப்பட்டுத் திரும்பிப் படுத்தாள்…

 

அவன் கட்டி அணைத்திருந்த கோணத்தில் தன் உடலைப் பாதுகாக்க எக்ஸ் போல உடலை மாற்றி உறங்கி இருந்திருக்கிறாள் பேதை. அதன் பலனாய் இப்போது லேசாக உடலைத் திருப்புவதற்கே கஷ்டப்பட்ட அவளைப் பார்த்து, அவனுக்கும் கொஞ்சம் பாவமாகத்தான் இருந்தது.

 

அவள் கையில் ஒன்றை மட்டும் கட்டில் காலோடு சேர்த்துக் கட்டிவிட்டு, மற்றொன்றை விடுதலை செய்தான் ஜோ. அவளால் இப்பொழுது சுலபமாக இட வலமாய் உருள முடிந்தது. 

 

அசந்து கிடந்த கைகால்களை நீட்டி நெளிப்பெடுத்துவிட்டு, தனக்கு விருப்பமானதொரு திசையில் படுத்தாள் அவள். ஜோ, ஒரு கனமான போர்வையைக் கொண்டு வந்து, அங்கிதாவிற்கு உச்சி முதல் பாதம் வரை போர்த்தி விட்டான்.

 

அந்தக் கதகதப்பில் கண்கள் சொருகியவள், எந்தச் சத்தமும் இல்லாமல் போர்வைக்குள் நன்றாகச் சுருண்டு படுத்துக் கொண்டாள். 

 

மறுபடியும் கும்பகர்ணி போல் உறங்கியவள் அடுத்து கண் விழிக்கும் பொழுது, அவள் கண்களுக்கு அருகில் ஒரு கருநிற உருவம் தரையிலிருந்து எழுவதும் உட்காருவதுமாய் தெரிந்தது..

 

‘என்னடா இது? நம்ம பக்கத்துல ஏதோ ஒரு பேய் வந்து ஆடிட்டு இருக்கு?..’ என தன்னுடைய கண்களை நன்றாகத் தேய்த்துவிட்டு பார்த்தாள். 

 

அந்த அரக்கன் இருக்கும் இடத்திற்கு வர பேய்க்கு என்ன வேண்டுதலா? 

 

சட்டை, பேண்ட் எதுவும் அணியாமல், வெறும் ஷார்ட்ஸுடன் காலை நேரத்து உடற்பயிற்சியினை உத்வேகத்தோடு செய்து கொண்டிருந்தான் ஜோ.

 

அங்கிதாவின் மூளைதான், டாக்டர் மூளையாயிற்றே… அவள் அனுமதி இன்றியே அது தன் போக்கில் வேகமாய் செயல்பட்டது. 

 

பதறியடித்துக் கொண்டு எழுந்தவள் அவனிடம், “டேய் லூசு, என்னடா பண்ணிட்டு இருக்குற…?” என்று கேட்டாள்.

 

‘ஓ! எழுந்துட்டயா?..’ என்பது போல் அவளை ஒருமுறை பார்த்துவிட்டு, திரும்ப தன் வேலையில் கவனம் செலுத்தினான் ஜோ.

 

தன் ஒற்றைக் கையால் அவனை அசைய முடியாத படி பிடித்துக் கொண்ட அங்கிதா, “ஐயோ, மொதல்ல ஒரு இடத்தில நில்லு. என்ன பண்ற நீ?” எனக் கத்தினாள்.

 

“பார்த்தா தெரியலயா பேபி? எக்சர்சைஸ் செய்யிறேன்..” என்று கேஷுவலாக பதில் சொன்னான் ஜோ.

 

“அறிவு கெட்ட முண்டம்… ஆள் வளர்ந்த அளவுல பாதிகூட அறிவு வளரவே இல்லையா?.. கையில எவ்வளவு பெரிய காயம் இருக்கு?.. அது சரியாக முன்னாலயா யாராவது எக்சர்சைஸ் பண்ணுவாங்க…?

 

உள்ள இருக்குற உறுப்புகளுக்கு ஓய்வு கிடைச்சா மட்டுந்தான் அது நல்லா ஆறி, வெளியே இருக்குற புண்ணையும் குணமாக்கும். இப்படி எக்ஸர்சைஸ் செஞ்சா, இந்த ஜென்மத்துல உனக்கு காயம் ஆறவே ஆறாது” என்றாள்.

 

“அதெல்லாம் எனக்கு ஒன்னும் ஆகாது. என்னோட உடம்பு என் பேச்சை மட்டும்தான் கேட்கும்..” என்றான் ஜோ.

 

“உன் உடம்பு என்ன நீ வளக்குற நாய் குட்டியா, நீ சொல்றத அப்படியே கேட்க.. எல்லாருக்குமே உடம்பும் மனசும் வேற வேறயாத்தான் செயல்படும்டா முட்டாள்… 

 

நாம சொல்லுற பேச்சை நம்ம உடம்பு எப்பவும் கேட்காது. நம்ம உடம்புக்கு சொல்றபடி நாம தான் நடந்துக்கணும்..” என்று அவனுக்கு மருத்துவ அறிவுரைகளைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் அங்கிதா.

 

ஜோவிற்கு அவள் இதே டாபிக்கை பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது சுத்தமாகப் பிடிக்கவில்லை. கூடவே அவனை உடற்பயிற்சி செய்ய விடாமல் இடைஞ்சல் வேறு செய்திருந்தாள்.

 

பொறுத்துப் பொறுத்து பார்த்த ஜோ கடைசியில் கோபம் தலைக்கேற, “ஏய், நான் தான் சொல்றேன்ல? என்னோட உடம்பு என் பேச்சை மட்டுந்தான் கேட்கும்னு. நீ பாட்டுக்கு தொண தொணனு லெக்சர் எடுக்காம வாயை மூடிக்கிட்டு தூங்கு..” என்று கத்தினான்.

 

அவன் அவ்வளவு பேசிய பிறகும் அங்கிதா அவனை  விடுவதாய் இல்லை.. 

 

“நான் ஒரு டாக்டர்டா.. ஹியூமன் ஆர்கன் எப்போ எப்படி செயல்படும்னு படிச்சுட்டு வந்திருக்கேன். என் பேச்ச நம்பாம நீ பாட்டுக்கு எதிர்த்து எதிர்த்து பேசிட்டு இருக்க? நீ சொல்றபடி மாதிரி எந்த உடம்பும் ஓனர் பேச்ச கேட்காது…” 

 

“ஏன் கேட்காது? என் உடம்பு எப்பவும் நான் சொல்றத மட்டும்தான் கேட்கும்..”

 

“உன்னால நிரூபிக்க முடியுமா?”

 

“முடியும்‌..”

 

“எங்க நிரூபி பார்ப்போம்..”

 

“எனக்கு உன்னை முதல் தடவை பார்த்ததுமே ரொம்ப பிடிச்சு போச்சு. அதனாலதான் வலுக்கட்டாயமா என் இடத்துக்கு உன்ன தூக்கிட்டு வந்தேன்…

 

நீ இங்க வந்து இன்னியோட கிட்டத்தட்ட ஒன்றரை மாசம் ஆகப்போகுது… இந்த நிமிஷம் வரை நாம ரெண்டு பேரும் ஒரே ரூம்ல தான் தூங்குறோம்.

 

நான் எந்த அளவுக்கு உன் மேல ஆசை வச்சிருக்கேன்னு உனக்கே நல்லா தெரியும். என்ன கட்டுப்படுத்த என் கூட்டத்தால முடியாதுனும் உனக்கு தெரியும். இருந்தும் இப்ப வரை நீ கன்னிப் பொண்ணா இருக்குற.

 

இதுல இருந்தே தெரிய வேண்டாமா உனக்கு? நான் சொல்றதத்தான் என் உடம்பு கேட்கும்னு?” என்று கூறிய அடுத்த நொடியே அங்கிதாவின் நாடி நரம்புகள் அத்தனையிலும் அதிர்ச்சியில் மின்னல் பாய்ந்தது…

 

அவள் மனதினைப் போலவே, வெளியே நிலவும் காலச் சூழ்நிலையும் நேற்றை விட இன்று உக்கிரமாய் இருந்தது. 

 

இடியும் மழையும் இரைச்சல் போட, எதுவும் பேச முடியாமல் மௌனமாகத் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பவளைக் கண்டு அவனுள் என்ன தோன்றியதோ?

 

அவளது கையைக் கட்டியிருக்கும் கயிற்றை அவிழ்த்து, நேற்றைப் போலவே அவளை மூலையில் இருக்கும் ஒரு சேரில் அமர வைத்தான். 

 

“சமத்தா இங்கேயே உட்கார்ந்து இரு.. நான் உனக்கு போய் சாப்பாடு சமைச்சு எடுத்துட்டு வர்றேன்” என்றவன், அவளுக்காகச் சமைக்கச் சென்றான்…

 

பத்தே நிமிடத்தில் சாப்பாடு ரெடியானது..‌.

 

சாப்பிட்டு முடித்தவுடன், அடுத்து செய்வதற்கு எந்த வேலையும் இல்லாததால் இருவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை… 

 

அன்றைய பொழுது அவர்களுக்கு ஸ்லோ மோஷனில் கழிய, மறுநாள் வழக்கம்போல ஜோ அவனது நண்பன் மோகனிடம் ரேடியோ டிரான்ஸ்மிட்டர் கருவி மூலம் பேசினான்..

 

“நேத்த விட இன்னிக்கி இங்க மழையோட அளவு குறைஞ்சிருக்கு. ஆனாலும் உச்சி மலையில இன்னும் மழை பெய்யிது. வர்ற வழியில மண்சரிவு வந்துட்டா கஷ்டமாயிடும், இங்க சாப்பாடும் தண்ணியும் வேற காலி..

 

போதாக்குறைக்கு போலீஸ்காரங்க  இந்தப்பக்கம்தா அதிகமா சுத்திகிட்டு இருக்காங்க. நாங்க இப்போதைக்கு இந்த இடத்துக்கு பக்கத்துலயே வேற ஒரு பாதுகாப்பான இடம் பார்த்து ஷிப்ட் ஆகப் போறோம். எங்க போறேன்னு ரீச் ஆனது உனக்கு இன்பார்ம் பன்றேன்” என்றான். 

 

மோகன், “சரி, இங்கேயும் மருந்து தட்டுப்பாடு அதிகமா இருக்கு ஜோ. நாங்களும் இந்த இடத்தை காலி பண்ணிட்டு வேற இடத்துக்கு போகலாம்னு யோசிக்கிறோம்..” என்று அங்கிருந்து பதில் வந்தது.

 

ஜோ, “சரி பாதுகாப்பா எல்லாரையும் கூட்டிட்டுப் போ. நானும் இங்க போலிஸ் நடமாட்டம் குறைஞ்சதும் அங்கிதாவோட அங்க வந்து சேருறேன். அதுவரை நீயே அங்க எல்லா பொறுப்பையும் பாத்துக்கோடா” 

 

ஜோ பேசுவதை எல்லாம் மேலே இருந்தபடியே ஒட்டு கேட்டுக்கொண்டு இருந்த அங்கிதா, ‘அய்யய்ய.. இவன் உலகமே அழிஞ்சாலும் நம்மள விடமாட்டான் போலயே?!.. 

 

இவ்வளவு தூரம் ஆன பிறகும் என்னை ஏன் இவன் குரங்கு மாதிரி தோள்ல தூக்கிட்டு சுத்த நினைக்கிறான்?

 

என்ன விட்டுட்டு காலா காலத்துல அவனோட கூட்டம் இருக்குற இடத்துக்குப் போய் சேர வேண்டியது தான? ஏன் அறிவில்லாம இப்படி பண்றான்?

 

மறுபடியும் அவங்க இடத்துக்கு கூட்டிட்டு போயிட்டான்னா என்னால இந்த ஜென்மத்துல அங்க இருந்து தப்பிக்கவே முடியாது. வவ்வால் போல கையையும் காலையும் கட்டி, அவன் ரூம்ல தலைகீழ தொங்கவிட்டு அழகு பார்ப்பான். இம்மிகூட நகர முடியாது என்னால… 

 

இப்ப இவன் அடிபட்டு இருக்குறான், அதுவும் போக இங்க சாப்பாடும் காலி‌. தண்ணியும் இல்லாம போயிட்டா கண்டிப்பா சீக்கிரமே களைப்பாயிடுவான்…

 

இந்த சூழ்நிலை தான் எனக்கான சரியான வாய்ப்பு.. இந்த கடைசி வாய்ப்ப நான் சரியா பயன்படுத்திக்கனும். எப்படியாவது இவன்ட்ட இருந்து தப்பிச்சு கொஞ்ச தூரம் காட்டுக்குள்ள போயிட்டாலும் போதும். 

 

இன்ஸ்பெக்டர் பரத்வாஜ் என்ன காப்பாத்தி கூட்டிட்டு போயிடுவாரு. இந்த தடவ வாய்ப்ப மிஸ் பண்ணிட்டா, என் வாழ்க்கை முழுக்க இவனுக்கும் இவனுடைய கூட்டத்துக்கும் நான் அடிமையாவே கிடக்க வேண்டியிருக்கும்..’ என்று மனதிற்குள் தாறுமாறாகத் திட்டம் தீட்டத் துவங்கினாள்..

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!