தொண்டை கட்டும்படி கத்தி கத்தி ஓய்ந்து போன அங்கிதா மீண்டும் படுக்கையில் விழுந்து தூங்கிப் போனாள்..
அவள் மீண்டும் கண் விழிக்கும் பொழுது ஜோ அவளுக்கு எதிரே அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டு இருந்தான்..
பதறியடித்துக் கொண்டு வேகமாய் எழுந்தாள் அங்கிதா..
ஜோ மிகவும் சர்வ சாதாரணமாக, “எதுக்கு இப்படி பதறுற?.. நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன். உன்னால எனக்கு ஆக வேண்டிய வேலை நிறைய இருக்கு…” என்றான்.
அங்கிதாவுக்கு அவன் வார்த்தைகளைக் கேட்ட பிறகு உள்ளுக்குள் ஓரளவு நிம்மதி பிறந்தது. ஆன போதும் அவன் மீது இருந்த பயம் முழுதாய் போகவில்லை.
“இங்க பாருங்க ஜோ.. நான் ஒரு அப்பாவி, நீங்க ஒரு தேடப்படும் குற்றவாளி.. அதனால உங்கள பார்த்ததும் ஒரு பொறுப்பான பொண்ணா போலீஸ்ல தகவல் சொல்லிட்டேன்.
நீங்க யாரு, உங்களுடைய பலம் என்னனு முழுசா தெரியாம அப்படி செஞ்சிட்டேன். தப்புதான்.. அதுக்காக வேணும்னா உங்ககிட்டவும் உங்க ஆளுங்க கிட்டவும் தார்மீக மன்னிப்பு கேட்குறேன்.
அதான் ரொம்ப சுலபமா நீங்க போலீஸ் கஸ்டடியில இருந்து வெளியில் வந்துட்டீங்களே. அப்புறம் ஏன் என்னை கடத்திட்டு வந்து டார்ச்சர் பண்றீங்க? தயவு செய்து என்னை விட்டுடுங்க…
நான் என் அம்மா அப்பாட்ட போகணும்.. ப்ளீஸ் என்னை இந்த இடத்துல அடைச்சு வச்சு என் வாழ்க்கைய வீணாக்கிடாதீங்க. நான் ஒரு டாக்டர், கஷ்டப்பட்டு மெடிக்கல் படிச்சிருக்கிறேன்… இந்த காலத்தில டாக்டருக்கு படிக்கிறதே எவ்வளவு பெரிய சாதனை தெரியுமா?
நான் என்னால் முடிஞ்ச அளவுக்கு ஏழை மக்களுக்கு உதவி செய்ய விரும்புறேன்.. என் கையால நிறைய உயிர்களை நான் காப்பாத்தனும்னு ஏகப்பட்ட கனவுகள் இருக்கு எனக்கு.
உங்களப்பத்தி இனிமே என்னோட அப்பா அம்மாகிட்ட கூட நான் வாயத்திறந்து எதுவும் சொல்ல மாட்டேன், என்ன விட்ருங்களேன்…” என்று அவன் காலில் விழாத குறையாகக் கெஞ்சினாள்…
ஆனால் ஜோ அவள் கூறியதைக் கேட்டு சிரித்துக் கொண்டே, “உனக்கு மத்த உயிரைக் காப்பாத்துறதுனா அவ்வளவு இஷ்டமா?” எனக் கேட்டான்.
“ஆமா… சின்ன வயசுல இருந்தே டாக்டர் ஆகணும்னு ஆசை இருந்துச்சு. நீட் எக்ஸாம்க்கு வெறியோட ராத்திரி பகலா படிச்சேன். அமெரிக்காவுல மாசம் அஞ்சு லட்சம் தர்ற வேலை கிடைச்சும், லோக்கல்ல ஒரு சின்ன க்ளினிக் வச்சு எல்லாருக்கும் குறைஞ்ச செலவுல ட்ரீட்மென்ட் பார்க்கிறேன்.
வேணும்னா என்னைப் பத்தி என் ஏரியால இருக்கிற மக்கள்கிட்ட விசாரிச்சுப் பாருங்க. பணம் வாங்காமலேயே ட்ரீட்மென்ட் பார்த்தேன்னு பல பேர் என்னை பாராட்டி பேசுவாங்க. ப்ளீஸ் என்னை விட்ருங்க, உங்க வழிக்கு இனிமே வரவே மாட்டேன்…” என்றாள்.
“ஒண்ணு சொல்லட்டா? உன்ன பத்தி உன்னைவிட எனக்கு நிறைய தெரியும், ஒரே நாள்ல உன் ஜாதகம் வரைக்கும் என் கைக்கு வந்திடுச்சு பேபி. சொல்லப்போனா நான் உன்னை இங்கே கடத்திட்டு வந்ததுக்கு காரணமே நீ ஒரு டாக்டர் அப்படின்றதாலதான்..
நானும் பல கனவுகளோட உன்ன காடு மலை தாண்டி கஷ்டப்பட்டு தூக்கிட்டு வந்திருக்கேன். நீ என்னடான்னா வார்த்தைக்கு வார்த்தை விட்ருங்கனு சொல்லுற?” என்றதும் அங்கிதா அதிர்ச்சியாய் அவன் முகத்தைப் பார்த்தாள்.
அவளை நெருங்கி வந்து அமர்ந்த ஜோ, “கடவுளே வந்தா கூட இந்த இடத்துல இருந்து உன்ன கூட்டிட்டுப் போக முடியாது. அதனால நீ எத பத்தியும் கவலைப்படாம நல்லா சாப்பிட்டு தூங்கி ரெஸ்ட் எடு, சீ யூ ஸ்வீட் ஹார்ட்..” என்று கூறிவிட்டு போக, அங்கிதா அசைய மறந்து சிலையாய் சமைந்திருந்தாள்.
அவன் வெளியேறிச் சென்ற அடுத்த நிமிடமே, ஒரு சின்னக் குழந்தை அங்கிதாவிற்கு சாப்பாடு கொண்டு வந்து தந்தது. அந்தக் குழந்தைக்கு மிஞ்சிப்போனால் ஒரு ஏழெட்டு வயதுதான் இருக்கும்…
பயங்கரமான பசி இருந்தும் அங்கிதாவிற்கு அந்த சாப்பாட்டினை தொடுவதற்கு மனம் வரவில்லை.
‘சாப்பிடவில்லை என்றால் அவன் என்ன செய்வானோ?…’ எனும் பயமும் அவள் மனதின் மூலையில் இடம் பிடித்திருந்தது.
‘விருப்பமில்லை என்றாலும் விழுங்கத்தான் வேண்டுமா?..’ என்று அங்கிதா யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அவள் மூளையில் ஒரு சிறு பொறி தட்டியது…
தன் முன்னே நிற்கும் அந்த சின்ன குழந்தையிடம் பேச்சுக் கொடுத்து இந்த இடத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தாள்.
தனக்காக அந்தப் பிள்ளை கொண்டு வந்திருந்த தட்டிலிருந்து ஒரு முட்டையை எடுத்து பாப்பாவின் கையிலேயே கொடுத்தாள். அந்தக் குழந்தையும் சிரித்துக்கொண்டே முட்டையை வாங்கிக் கொண்டது..
அங்கிதாவும் பாப்பாவைப் பார்த்துச் சிரித்தபடி, “உன்னோட பெயர் என்ன பாப்பா?” என்று கேட்டாள்..
“என் பேர் மோனிகா…” என்று கூறியது அந்த குழந்தை…
“அச்சோ பாப்பா ரொம்பவும் அழகா பதில் சொல்றியே. ஐ லைக் யு டா செல்லக் குட்டி… உன்னோட அம்மா அப்பா எல்லாரும் இங்கதான் இருக்காங்களா?” என்று போட்டு வாங்க முயற்சி செய்தாள் அங்கிதா.
அந்த குழந்தையும் சிரித்துக் கொண்டே, “ஆமா அக்கா, எல்லாரும் வெளியில வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க” என்று கூறியது..
“ஓ… அதனாலதான் பாப்பா எனக்கு சாப்பாடு கொண்டு வந்தீங்களா?” என்றதும்,
அந்தப் பிள்ளை, “ஆமா அக்கா, ஜோ அண்ணா உங்களுக்கு சாப்பாடு போட்டு கொடுக்க சொல்லி என்கிட்ட சொன்னாங்க..” என்றது.
அவன் பெயரை இப்போது நடக்கும் பேச்சு வார்த்தையிலிருந்து நீக்க நினைத்த அங்கிதா, “மோனிகா பாப்பாவுக்காக நான் கண்டிப்பா சாப்பாடு சாப்பிடறேன். ஆமா என் செல்ல பாப்பாக்கு சாக்லேட் ஐஸ்கிரீம் எல்லாமே பிடிக்குமா?” என்று கேட்டாள்.
குழந்தை சிரிப்பு மாறாமல் ஆமா என்று தலையை ஆட்டியது..
“என்னோட வீட்டுல நிறைய சாக்லேட் ஐஸ்கிரீமெல்லாம் இருக்கு. நான் என்னோட வீட்டுக்கு போக நீ ஹெல்ப் பண்றயா?
நான் உனக்கு எங்க வீட்டில இருக்கிற எல்லா சாக்லேட் ஐஸ்கிரீமையும் தருவேன். நாம ரகசியமா போய் சாப்பிடுவோம், டீல் ஓகேவா?” என்று கேட்டாள்..
ஆனால் அந்த குழந்தை சிரித்துக் கொண்டே, “அது உங்களால முடியாதுக்கா. ஒரு தடவ எங்களோட இடத்துக்கு வந்துட்டா திரும்பிப் போகவே முடியாது…
எங்கிட்ட கேட்டது போல வேற யார்கிட்டவும் கேட்டுடாதீங்க.. இந்த விஷயம் ஜோ அண்ணனோட காதுக்கு போச்சுனா அவ்வளோதான்..
உங்கள உண்டு இல்லனு செஞ்சிடுவார். அவர் சில விஷயத்தில் ரொம்ப கோபக்காரர், என்னோட அப்பாவே அவர் கிட்ட பேச பயப்படுவாருனா பாத்துக்கோங்க…
எனக்கு முட்டை கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் அக்கா. நான் கிளம்புறேன், நீங்க நல்ல பிள்ளையா சாப்பிட்டு தட்டை ஓரத்துல வச்சிடுங்க.
கொஞ்ச நேரம் கழிச்சு நானே வந்து தட்டை எடுத்துட்டு போறேன். தப்பிக்க முயற்சி பண்றத விட்டுட்டு பேசாம படுத்து தூங்குங்க அக்கா, அதுதான் உங்களுக்கு நல்லது” என்றவள், டான்ஸ் ஆடிக் கொண்டே வெளியே சென்றாள்..
அந்தக் குழந்தை கூறியதைக் கேட்டு வாயடைத்துப் போன அங்கிதா, ‘அடப்பாவிங்களா, ஒரு சின்ன குழந்தைக்கு கூட எவ்வளவு அழகாக ட்ரெயினிங் கொடுத்து கெடுத்து வச்சிருக்கீங்க?!..’ என்று அதிசயித்துப் போனாள்.
இனி செய்வதற்கு அவளுக்கு வேறு எதுவும் இல்லாததால், மோனிகா சொன்னதைப் போலவே சாப்பிட்டு விட்டு படுக்கையில் படுத்துக்கொண்டாள்.
திடீரென்று அவள் இருந்த அறைக்குப் பின்னால் ஏதோ சத்தம் கேட்டது. விரைந்து எழுந்தவள் மர சுவரினை ஒட்டி நின்று, தன்னால் முடிந்த அளவுக்கு தன் காதுகளைப் பட்டை தீட்டி அந்த சத்தத்தைக் கேட்டாள்.
அவள் எதிர்பார்த்தபடியே, அது மனிதர்களின் உரையாடல் சத்தம் தான்.. செவிகளைக் கூர்மைப்படுத்தி அவர்கள் என்னதான் பேசுகிறார்கள் என்று கேட்க முயன்றாள்.
‘அதிலிருந்து தனக்கு சாதகமாக ஏதேனும் ஒரு வார்த்தை வந்துவிடாதா?!..’ எனும் ஆசையில்தான் சிஐடியாய் செயல்பட்டது அவள் மூளை.
கீச்கீசென்று எலி கத்துவதைப் போல அவர்கள் பேசும் சப்தம் மட்டும் அவளுக்கு கேட்டதே தவிர, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று எதுவும் தெளிவாகக் கேட்கவில்லை…
எவ்வளவு முயற்சித்தாலும் எந்த பலனும் இல்லாமல் போக, என்ன செய்வது என்று தெரியாமல் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள்..
நேரமும் அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தது…
தப்பிப்பதற்காக வழி யோசித்து யோசித்து அவளுக்கு மண்டை காய்ந்தது தான் மிச்சம். நெடுநேரம் கழித்து திரும்பவும் ஜோ அவளது அறைக்கு வந்தான்.
அவள் அவனிடம் அழுது பார்த்தாள்… கெஞ்சிப் பார்த்தாள்… சண்டை போட்டுப் பார்த்தாள்… சத்தம் போட்டுப் பார்த்தாள்… ம்ஹூம், எதுவுமே பலனளிக்கவில்லை.
கூடுதல் இம்சையாய் கோணச் சிரிப்பு சிரித்தே அவளைக் கொல்லாமல் கொன்றான். அசுரன், அவனோடு போராட முடியாமல் தோல்வியோடு துவண்டு விழுந்து விட்டாள் அங்கிதா.
அவளின் உடலும் மனமும் சோர்ந்து விட்டதென தெரிந்து கொண்டவன், அவளை ஒரு ஓரப்பார்வை பார்த்துவிட்டு அறையிலிருந்து வெளியேறினான். இரவு வரைக்கும் அவள் அறை பக்கம் ஜோ வரவே இல்லை..
இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மோனிகா மட்டும் தவறாமல் சாப்பாடு, ஜூஸ், காபி, டீ என்று ஏதாவது ஒரு உணவுப் பொருளைக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே இருந்தாள்…
இரவானதும் அங்கிதாவைப் பார்ப்பதற்காக ஜோ வந்தான். அங்கிதா இப்போது எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் …
ஜோ அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் மறுபடியும் அவனது அலமாரியிலிருந்து டிரஸ் எடுத்துக் கொண்டு வேகமாகக் குளிக்கச் சென்றான். அங்கிதாவோ இரவுப் பொழுது தந்த அச்சத்தில் உறங்குவது போல நடித்துக் கொண்டிருந்தாள்.
அவள் கூந்தலை மெதுவாக வருடிக் கொடுத்த ஜோ, “நடிச்சது போதும் பேபி, நான் ஒரு முக்கியமான வேலையா வெளியில போறேன். காலையிலதான் திரும்பி வருவேன், அதுவரைக்கும் நிம்மதியாக உறங்கு” என்றான்.
படக்கென தன் பட்டாம்பூச்சி விழிகளைத் திறந்தாள் அங்கிதா. அவன் டிப்டாப்பாக கோட் சூட் அணிந்தபடி அவள் முன் நின்றிருந்தான்.
அவனின் சந்தன நிறத்திற்கு அந்த கருப்பு வண்ண கோட் படு பாந்தமாக அவனோடு ஒத்துப் போனது.
‘அழகன்டா நீ..’ என அவள் மனமே அவளுக்கு எதிராய் அவனுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்தது.
அவளின் விழியசைவில் அகம் அறிந்த ஜோ பெருமிதப் புன்னகையோடு, “குட் நைட் பேபி” என்று சொல்லிவிட்டு வெளியேறிச் சென்றான்.
போனவன் போனதுதான்… திரும்பி வரவே இல்லை…
‘குறைந்தபட்சம் ராத்திரிப் பொழுதை நிம்மதியாகத் தூங்க விட்டானே..’ என நினைத்த அங்கிதா மேற்கொண்டு எதைப்பற்றியும் யோசிக்காமல் படுத்து உறங்கி விட்டாள்.
அடுத்த நாள் காலையில் அங்கிதா கண் விழிக்கும் பொழுது அவளது அறையின் மூலையில் ஒரு சிறிய டிவி இருந்தது.
அவளது தலைக்குப் பக்கத்திலேயே அந்த டிவிக்கான ரிமோட் இருந்தது. ரிமோட் எடுத்து டிவியை ஆன் செய்து பார்த்தாள். நல்லவேளையாக உடனே வேலை செய்தது..
எவ்வளவு நேரம் தான் சும்மா உட்கார்ந்து அழுது கொண்டே இருக்க முடியும்?… ஆளில்லாத தனி அறையில் பொழுதைக் கடத்தும் வழி தெரியாத அங்கிதா, டிவி பார்க்கத் தொடங்கினாள்.
சொன்னதைப் போலவே அதிகாலை நேரம் ஜோ அவளுடைய அறைக்கு வந்துவிட்டான். கோட் சூட் இல்லாமல் வழக்கமான டீஷர்ட் ஷார்ட்ஸ் அணிந்திருந்தான்.
அங்கிதாவுக்கு அவனோடு சண்டையிட உடலில் தெம்பு இல்லை. அமைதியாக அவன் செய்கைகளை வேடிக்கை பார்த்தாள்.
ஜோ வழக்கம்போல தன் கபோர்டிலிருந்து ஆடைகளை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றான். பிடித்த கொழுக்கட்டை போல நட்ட நடு அறையில் உட்கார்ந்து இருக்கும் அவளைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
குளித்துவிட்டு வேறு ஒரு டி ஷர்ட் ஷார்ட்ஸ் அணிந்து வந்த ஜோ, “டைம்க்கு சாப்பிடு, நல்லா ரெஸ்ட் எடு” என்று சொல்லி விட்டு அவன் பாட்டுக்குக் கிளம்பிப் போய்விட்டான்…
அவனைப் போலவே மோனிகாவும் சரியாக நேரா நேரத்திற்கு வந்து, சாப்பாடு கொடுத்தாள். அங்கிதா சாப்பிட்டு முடித்தவுடன் பாத்திரங்களை எடுத்துப் போனாள்…
இப்படியே இரண்டு மூன்று நாட்கள் நகர, நான்காவது நாள் ஜோ அங்கிதாவை அந்த அறையிலிருந்து வெளியே போக விட்டான்..
பல வருடங்களுக்குப் பிறகு வெளி உலகைக் காணும் ஆயுள் தண்டனை கைதியின் மன நிலையில் அந்த அறையிலிருந்து வெளியே வந்தாள் அங்கிதா.
அவளெதிரில் ஒரு அழகிய மலைக் கிராமம் இருந்தது…
அதுவும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான வீடுகள் மட்டுமே அங்கே இருந்தது. அந்த வீடுகள் அத்தனையும் அவளுடைய அறையைப் போலவே மிகச்சிறிய அறைகளால் ஆன வீடுகள்.
அவை சாதாரண மர வீடுகளைப் போலன்றி மிகவும் வித்தியாசமாக இருப்பது போல அவளுக்கு தோன்றியது..
அங்கிதா ஒவ்வொரு வீட்டையும் உற்றுப் பார்த்தாள். அப்போதுதான் அவளுக்கு ஒரு விஷயம் புரிந்தது. அவை அனைத்துமே டென்ட் போல பிரிக்கும் வசதியுடைய மரச்சுவர்களால் கட்டப்பட்ட வீடுகள்…
அதாவது அவர்களுக்கு எப்பொழுது தேவைப்பட்டாலும் அந்த வீட்டினை பிரித்துவிடலாம். அதே போல ஐந்தே நிமிடத்தில் ஒரு வீட்டினை உருவாக்கவும் முடியும்.
அவசரத் தேவையெனில் இரண்டு சிறிய வீடுகளை இணைத்து ஒரு பெரிய வீட்டினை உருவாக்கக் கூடிய அளவிற்கு அவை நெகிழ்ந்து கொடுக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது.
சுருக்கமாகச் சொல்லப்போனால் அது ஒரு தற்காலிகக் கிராமம்…
